You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

KPN's Poove Un Punnagayil - 13

Quote

அத்தியாயம்-13

 

ஒரு சுப நிகழ்ச்சி நடந்து முடிந்ததற்கு அடையாளமாக மலர்களும் அட்சதையும் கூடம் முழுதும் இரைந்திருக்க, மூலைக்கு ஒரு பக்கமாக நாற்காலிகள் அங்கும் இங்கும் சிதறிக்கிடந்தன. பாயசம், காஃபி என ஆங்காங்கே கொட்டி வழிந்திருக்க, உணவுப்  பண்டங்களும் சிந்தியிருந்தன. ஆட்களைக் கொண்டு அனைத்தையும் சுத்தம் செய்து, வாடகைக்கு எடுத்திருந்த நாற்காலிகளை அடுக்கி மூலையில் வைத்து, மீதமிருந்த உணவு பொருட்களை முறையாக பத்திரப்படுத்தி அருகிலிருக்கும் ஒரு தொண்டு இல்லத்திற்கு அனுப்பிவிட்டு என அனைத்தையும் முடித்து நிமிர இரவு பத்தை கடந்துவிட்டது தாமரைக்கு.

போட்டிருந்த ஒரு சில நகைகளைக் கழற்றி, பட்டுப்புடவையைக் களைந்து சில்லென்ற நீரில் குளித்து நைட்டிக்குள் புகுந்தபிறகுதான் 'அப்பாடா' என்றிருந்தது அவருக்கு. திருமணத்தை நினைத்து வேறு மலைப்பாக இருந்தது.

ஒரு மூன்று மாத அவகாசம் இருந்தால் கூட கொஞ்சம் ஆற அமர வேலை பார்க்கலாம். ஒரே மாதத்தில் அல்லவா நாளை குறித்துவிட்டார் இந்த மனிதர். 'தான் பிடித்த முயலுக்கு மூணே கால்' என்றிருக்கும் கணவரை நினைத்து கோபம்தான் வந்தது. இன்னும் மகள் வேறு எப்படியெல்லாம் ஆட்டி வைக்கப் போகிறாளோ? ஒரு பெருமூச்சோடு அவர் குளியல் அறையிலிருந்து வெளியில் வர, வாகன ஒலிப்பானின் சத்தம் கேட்டது. உடனே காவலாளி கேட்டை திறக்க, தொடர்ந்து அந்த ஒலியும் கேட்டது. ஊரிலிருந்து வந்திருந்த கௌசிக்கின் பெரிய மாமா குடும்பத்தை பேருந்தில் ஏற்றிவிடச் சென்றிருந்த சத்யாவும் சந்தோஷும் திரும்ப வந்திருக்கக் கூடும் என்பதால் உடனே வெளியில் வந்தார் தாமரை.

வாகனத்தை நிறுத்திவிட்டு இருவரும் வந்துசேர, அவர்களுக்குச் சாப்பாடு போட்டு, எல்லோரும் அறைக்குள் சென்று முடங்கியதும் மகளைச் சென்று பார்க்க, நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தாள் அவள்.

ஒரு ஆசுவாச பெருமூச்சு எழ, தங்கள் அறைக்கு வந்தார் தாமரை. நெற்றியின் குறுக்கே கையை போட்டுக்கொண்டு சலனமின்றி படுத்திருந்தார் கருணாகரன்.

விளக்கை அணைத்துவிட்டு அவருடைய இடத்தில் வந்து தாமரை படுக்கவும் அரவம் உணர்ந்து தலையைத் திருப்பி பார்த்தவர், என்ன  நினைத்தாரோ தாமரையின் வலது கையை பற்றி தன் நெஞ்சின் மீது வைத்து அழுத்திக்கொண்டார்.

அவருடைய வேகமான இதயத்துடிப்பை உணர்ந்தவர், "ஏங்க, தூக்கம் வரலியா? கல்யாணத்தை நினைச்சு டென்ஷனா இருக்கா?" எனக் கரிசனத்துடன் கேட்க, இல்லை எனத் தலை அசைத்தவரின் கண்கள் கண்ணீரில் பளபளப்பது விடிவிளக்கின் வெளிச்சத்தில் நன்றாகவே தெரிந்தது. மனதில் எதையோ எண்ணி அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருப்பது புரிந்தது.

அதிர்ந்தவராக, என்ன சொல்வது எனப் புரியாமல் தாமரை அசைவற்று அவரைப் பார்த்திருக்க, கருணா உச்சரித்த "சாரி தாமரை" என்கிற வார்த்தைகள் அவரது செவிகளைத் தீண்டியது கிசுகிசுப்பாக. அடுத்த நொடி ஏதோ அதிசயம் நிகழ்ந்துவிட்டதைப் போல அவருடைய உடல் சிலிர்த்தது.

'இப்பொழுது எதற்கு இந்த சாரி?' எனக் கேட்க முடியாவண்ணம் நெஞ்சுக்கூட்டுக்குள்ளிருந்து ஏதோ ஒன்று பந்தாக உருண்டுவந்து தொண்டைக்குழிக்குள் அடைந்துகொள்ள, தாமரையின் கண்களும் கலங்கிப்போனது.

தன் சுயத்தை அவரது கட்டுப்பாட்டுக்குள் வைத்து அவர் தன்னை வதைத்ததை எண்ணியே காலம் கடந்துபோய் இந்த மனிதர் வருந்துகிறார் என்பதை மிக நன்றாகவே உணர்ந்தார் தாமரை.

எந்த வித ரத்த சம்பந்தம் இல்லாமல் ஒரு பந்தத்தில் இணைந்த இருவர், ஒருவரை ஒருவர் உணருவது என்பது அவ்வளவு சுலபத்தில் நிகழ்ந்திடாது. பெண்களுக்கு அந்த நுண்ணுணர்வு இயல்பிலேயே வெகு விரைவாகக் கைகூடிவிடும். ஆனால் ஆண்களுக்கோ தன் பெண்ணை உணர அதிக கால அவகாசம் தேவைப்படும். அப்படியே உணர்ந்தாலும் பெண்ணின் உள்ளம் இரங்கும் வேகத்துக்கு ஆண்களின் உள்ளம் அவ்வளவு சீக்கிரம் மற்றவருக்காக இரங்கிவிடுவதில்லை. பரிணாம வளர்ச்சியில் அவர்களுடைய அடிப்படை வடிவமைப்பே அப்படித்தான். இயல்பிலேயே பெண்ணுக்குள் பொருந்தியிருக்கும் அப்படிப்பட்ட உணர்தலும் இரக்கமும் ஒன்றுசேர்ந்துதான் தாய்மை என வழங்கப்படுகிறது. இதில் சில விதிவிலக்குகள் இருந்தாலும் விதிகள் என்றுமே விலகுவதில்லை.

இப்பொழுதும் கணவருக்காக இரங்கினார் தாமரை.

அனிச்சையாக அவருடைய கரம் கணவரின் நெஞ்சை இதமாக நீவிவிட்டது அவரை ஆசுவாசப் படுத்துவதுபோல். கூடவே தாமரையின் மென்மையான அணைப்பிற்குள் வந்திருந்தவரின் இதயத்துடிப்பு சில நிமிடங்களில் சீராகி, அவரிடமிருந்து கிளம்பிய குறட்டை ஒலி அவர் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டார் என்பதை சொல்லாமல் சொல்ல, கருணாகரன் அவரை பெண் பார்க்க வந்த தினத்தை நோக்கி தாமரையின் நினைவலைகள் பயணப்பட்டன.

கோதையின் ஒன்றுவிட்ட அண்ணன் லோகு மூலம் வந்த சம்பந்தம் அது.

விழுப்புரம் அருகிலிருக்கும் முந்திரித்தோப்பு என்கிற கிராமம் தாமரையுடையது. விவசாயக்குடி என்று சொல்லிக்கொண்டாலும் அவர்களுக்கு சொத்து என்று சொல்லிக்கொள்ள அப்பொழுது இருந்தது ஒரே ஒரு ஓட்டு வீடு மட்டுமே.

தாமரையின் அப்பா மயிலம் ஒரு லாரி கிளீனர். வருடத்தின் பெரும்பகுதியான நாட்கள் வேலை நிமித்தம் அவர் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருப்பார். கோதையின் சாமர்த்தியத்திலும் பிள்ளைகளின் சமர்த்திலும்தான் குடும்பம் நேர்கோட்டில் சென்றுகொண்டிருந்தது..

‘ஏழை குடும்பமாக இருந்தால் கூட பாரவையில்லை, பெண்ணை எங்கள் மகனுக்கு பிடித்துவிட்டால் போதும். ஏதாவது தெரிந்த இடம் இருந்தால் சொல்லுங்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மூத்தவனுக்கு திருமணம் முடிக்கப்பார்க்கிறோம்’ என லோகுவுடைய நண்பரும் தூரத்து உறவினருமான பாபு அவரிடம் சொல்லியிருக்க, அவருக்கு தாமரையின் நியாபகம்தான் வந்ததாம். அவர் கோதையிடம் வந்து சொல்ல, பெரிய படிப்பெல்லாம் படித்த மணமகன் என்பதால் கனவில் மிதக்கத் தொடங்கிவிட்டார் கோதை.

அவர்கள் மரபில் மாப்பிள்ளை வீட்டார்தான் பெண் கேட்டு வந்து முதலில் தொடங்கிவைக்கவேண்டும். அதனால் உடனே பெண் பார்க்க ஏற்பாடு செய்யும்படியும் சொல்லிவிட்டார் அவர்.

'தாமரையோட அப்பாவை பத்தி இப்ப எதுவும் சொல்லாதீங்க அண்ணா, நேர்ல பார்த்தா அவங்களாவே புரிஞ்சுப்பாங்க" என அவரிடம் கெஞ்சி கேட்டுக்கொண்டார் அவர். 'சரியான குடிகாரன்' என்பதே அவர்கள் உறவினர் மத்தியில் மயிலத்தைப் பற்றிய ஒரே பிம்பம். அதனாலேயே சுற்றத்தினரிடம் ஒரு மதிப்பில்லாமல் போனது அவருக்கு. அவர் பார்க்கும் வேலை வேறு அப்படி.

அவர் ஒரு குடிகாரர் என்பதை தள்ளிவைத்து பார்க்க, உண்மையில் மிக நல்ல மனிதர் அவர். மனைவியிடமும் பிள்ளைகளிடமும் அன்பும் அக்கறையும் கொண்டவர். வீட்டில் இருக்கும் சொற்ப நேரத்தில் கூட சிரிப்பும் கேலியுமாக அவர்கள் வீட்டையே ரம்மியமாக வைத்திருப்பவர். அதனால்தான் பிள்ளைகளுக்கும் அப்படி ஒரு பிரியம் அப்பாவிடம். அதுவும் அவருடைய வருகைக்காக தவம் கிடப்பான் சத்யா. இதையெல்லாம் எப்படி ஒவ்வொருவருக்கும் சொல்லி புரியவைப்பது? அதனாலேயே கோதை அப்படிச் சொன்னது.

வக்கிரகாளி அம்மனிடம் வேண்டிக்கொண்டு, அண்ணனிடம் தாமரையின் ஜாதகத்தை அன்றே கொடுத்தனுப்பினார் கோதை.

என்ன அவசரமோ அவர்களுக்கு, வேக வேகமாக ஜாதக பொருத்தம் பார்த்து, அது திருப்திகரமாக இருக்கவே அந்த வாரத்திலேயே பெண் பார்க்க வருவதாக லோகுவிடம் சொல்லி அனுப்பிவிட்டார் பாபு. கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை கோதைக்கு.

லாரியில் லோடேற்றி சென்றால் மாதத்திற்கு ஒரு நாளோ இரண்டு நாட்களோ ஊருக்கு வருபவர் குடும்ப செலவுக்கு பணத்தை கொடுத்துவிட்டு பிள்ளையுடன் ஆட்டம்போட்டுவிட்டு உடனே கிளம்பிவிடுவார் மயிலம். மற்ற நாட்களிலெல்லாம் எந்த மாநிலத்தில் எந்த ஊரில் இருக்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம். இப்பொழுது இருக்கும் அளவுக்கு தொலைத்தொடர்பு வசதிகளற்ற அந்த காலகட்டத்தில் அவரை தொடர்புகொள்வதென்பது அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை.

எனவே தாமரையை கருணாகரன் வீட்டினர் பெண் பார்க்க வந்த சமயத்தில் அவர் அங்கே இல்லை. லோகுவுடன் இணைந்து வீட்டின் ஆண் மகனாக பள்ளிப்படிப்பில் இறுதி ஆண்டிலிருந்த சத்யநாராயணன்தான் அவரைகளை வரவேற்றதே. நடுவிலிருந்துகொண்டு எதையெதையோ சொல்லி லோகுதான் அவர்களை சமாளித்தார். அவசரத்தில் மயிலத்தின் வேலையைப் பற்றி வேறு உளறிவிட்டார் மனிதர்.

அதுவே, வீட்டின் உள்ளே நுழைந்ததுமே அவர்களை முகம் சுளிக்க வைத்துவிட்டது.

அதன்பிறகு அங்கே ஒரு காஃபி அருந்த கூட அவர்கள் யாரும் தயாராக இல்லை. "அதெல்லாம் சம்மதம் முடிவானா பார்த்துக்கலாம். பெண்ணை கூப்பிடுங்க பார்த்துட்டு கிளம்பறோம்" என அவர்கள் அவசரப்படுத்த, கருணாகரன் வேறு விட்டால் ஓடிவிடலாம் என்பதுபோல வேண்டாவெறுப்பாக உட்கார்ந்திருக்க, கோதைக்கு சப்பென்று ஆகிப்போனது.

ஒன்றும் சிந்திக்கத் தோன்றாமல் அறைக்குள் சென்றவர் தாமரையை அழைத்துவர, வயலட் நிற பாலியஸ்டர் பட்டுப்புடவை அணிந்து, செவிகளில் ஜிமிக்கி நடனமாட வந்து நின்றவளை பார்த்ததும் அதுவரை கல்லென இருகியிருத்த கருணாகரனின் முகத்தில் ஆயிரம் மலர்கள் மலர்ந்தன.

வாய் திறந்து சொல்லாவிட்டாலும் அவளை அவனுக்குப் பிடித்துவிட்டது என்பது எல்லோருக்கும் விளங்க, அங்கிருந்த யாரைப் பற்றிய அக்கறையும் இல்லாதவனாக அவளைப் பார்த்துக் கேட்டான், "என்ன படிச்சிருக்க?" என்று.

"பீ.ஏ தமிழ் லிட்டரேச்சர்" என தெளிவாக அவள் சொன்ன பதிலில் அவனது பார்வையில் ஒரு மெச்சுதல் உண்டாக, "சுடிதார் போடற பழக்கம் இருக்கா" என அவன் கேட்ட அடுத்த கேள்வியில், 'ஐயோ, இவன் ஏன் இப்ப இதை கேக்கறான். இதுக்கு ஆமாம்னு சொல்லனுமா இல்ல, இல்லன்னு சொல்லனுமா' என குழம்பியவளாக ஒரு நொடி ஸ்தம்பித்தவள், "ம்..." என்றாள் உண்மையைச் சொல்லிவிடும் நோக்கத்தில்.

அதில் அவனுடைய முகம் இன்னும் அதிகம் பிரகாசிக்க, "உனக்கு என்னை பிடிச்சிருக்கா" என நேரடியாகவே அவளிடம் கேட்கவும், லேசாகப் பூத்த புன்னகையுடன் கொஞ்சமும் கசங்காத உடையில், கம்பீரமான தோற்றத்தில் திருமணத்திற்கான அனைத்துவித தகுதியும் நிரம்பியுள்ள ஒருவன் முகத்துக்கு நேராக இப்படி கேட்கும்போது பிடிக்கவில்லை என்றா சொல்ல முடியும் அவளால்? அதற்காக  அத்தனை பேருக்கு மத்தியில் பிடித்திருக்கிறது என்றுதான் வாய் திறந்து சொல்ல முடியுமா? தயக்கம் மேலிட 'பிடித்திருக்கிறது' என்பதாக தலையை மட்டும் அசைத்தாள் தாமரை. உடனே அவனுடைய தந்தையை நோக்கித்திரும்பியவன், "எனக்கு இவங்களை பிடிச்சிருக்கு. பேசி முடிச்சிடுங்க" என்றான் சுற்றி வளைக்காமல்.

அதன் பிறகு, 'மேற்கொண்டு என்ன செய்யலாம்னு ஊருக்கு போய் லெட்டர் போடறோம்' என சொல்லிவிட்டு போனார்கள் பாபுவும் மோகனாவும்.

மாதம் ஒன்றைக் கடந்தபிறகும் அத்தகைய கடிதம் எதுவும் அவர்களிடமிருந்து வரவேயில்லை.

விட்டுவிட மனமில்லாமல் "என்ன அண்ணா ஆச்சு?" என தன் ஒன்றுவிட்ட தமயனிடம் தொணதொணவென நச்சரிக்க தொங்கவிட்டார் கோதை.

மயிலத்துக்கும் மகளுக்கு அந்த இடத்தை முடித்துவிட வேண்டும் என்கிற முனைப்பு வந்திருக்க, அடுத்த முறை ஊருக்கு வரும்பொழுது இருவரும் நேரிலேயே சென்று பார்த்துவிட்டு வந்துவிடலாம் என மனைவியிடம் சொல்லிவிட்டுப் போயிருந்தார்.

ஆனால், அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்கிற மனநிலைக்குத் தாமரை சென்றிருக்க, முகத்திற்கு நேராக 'இவளை எனக்குப் பிடித்திருக்கிறது' என்று சொல்லிவிட்டுப் போனவனின் முகம் மட்டும் மனதின் ஏதோ ஒரு மூலையில் ஒட்டிக்கொண்டு இம்சித்தது அவளை.

மின்சாரம் தடைப்பட்டு அறையின் ஏசி நின்றுபோய் அவருடைய நினைவலைகளை நிகழ்வுக்கு மீட்டுவர, எழுந்து போய் இன்வெர்ட்டருடன் இணைக்கப்பட்டிருக்கும் மின்விசிறியின் ஸ்விட்சை போட்டுவிட்டு வந்து படுத்தார் தாமரை..

அதுவரை மறந்துபோயிருந்த மகளுடைய திருமணத்தைப் பற்றிய அச்சம் பாரமாக ஏறி நெஞ்சின்மேலே உட்கார்ந்துகொண்டது.

****************

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy

You cannot copy content