You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

KPN's Poove Un Punnagayil - 26

Quote

அத்தியாயம்-26

தாமரை இப்படி வெளிப்படையாக முறைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்க அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியவராக, "என் தாமரை எவ்வளவு அழகுன்னு ரசிச்சு ரசிச்சு வர்ணிச்சிட்டு இருக்கேன், நீ என்னடான்னா என்னைப் பார்த்து இப்படி சொர்ணாக்கா லுக்கு விடறியே!" எனக் கொஞ்சும் பாவனையில் கருணா சொல்லவும் பக்கென்று சிரித்தவர், "ஆமாம் ஆமாம், உங்கள பார்த்து அப்படியே ரொமான்டிக் லுக்கு விடுவாங்களாக்கும்" என நொடித்தவாறு, "இருப்பதினாலு வயசு வரைக்கும் ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணிக்காம இருக்கான்னா அவளுக்கு ஏதோ குறை இருக்கணும்னு எந்த அளவுக்கு மோசமா உங்க மனசுலயெல்லாம் பதிஞ்சுபோயிருக்கு, ச்ச...? இதுல எங்க அப்பாவை வேற இழுக்கறீங்க" என்றார் சீற்றமாகவே.

"என்ன பண்ண சொல்ற தாமர, ஊர் வழக்கமும் என்னோட பிட்டர் எக்ஸ்பீரியன்ஸும் என்ன அப்படி யோசிக்க வெச்சுது. இதுக்கு போய் கோவிச்சிக்கறியே செல்லக்குட்டி" என அவர் குழையவும், "ஐயோ போதுமே!" என நெளிந்தார் தாமரை.

'ஆங்' என வாய் பிளந்து அம்மா அப்பாவின் இந்த நெருக்கத்தைப் பார்த்திருந்தாள் ஹாசினி. முன்பு இதெல்லாம் அடிக்கடி நடக்கும்தான். தப்பித்தவறி அவளுக்கு எதிரில் மட்டும் அவர் இப்படி மனைவியை கொஞ்சிவிட்டார் என்றால் அப்படியே பாய்ந்து தந்தைமேல் விழுபவள், "நான்தான் செல்ல குட்டி... நான்தான் உங்க குட்டிமா... அம்மாவை ஏன் கொஞ்சரீங்க" எனப் போர் கோடி தூக்குவாள் அவள்.

கொஞ்சம்கொஞ்சமாக இவர்களுக்குள் இதெல்லாம் மறைந்து மறந்தேபோய்விட்டதே! இல்லை பிள்ளைகளில் வயது கூடக்கூட அதை மனதில் வைத்துதான் அவர்கள் இருவரும் இப்படிப்பட சின்னசின்ன மகிழ்ச்சிகளை கூட தொலைத்துவிட்டிருந்தார்களோ!? அதனால்தான் கடமையான பேச்சுக்களும் வாக்குவாதங்களும் சலிப்புமே இவர்களுக்குள் மேலோங்கிப்போய்விட்டதோ?

இருவரையும் பார்க்கும்போது கண்களைக் கரித்துக் கொண்டு வந்தது ஹாசினிக்கு.

அவள் தாமரையின் முகத்தையே பார்த்திருக்கத் தொடர்ந்தார் அவர். "தாத்தாவோட வேலை ஊர் ஊரா சுத்துறதா இருந்ததால வீட்டுலயே தங்கமாட்டாரா? அப்ப மாமாவும் சின்ன பையனா? வீட்டுல சரியான ஆண் துணை கிடையாது. அதுவும் உள்ளூர் பள்ளிக்கூடத்துல எட்டாவதுக்கு மேல கிடையாதா? பக்கத்துலன்னா கூட திண்டிவனம் டவுன் வரைக்கும் போய்தான் படிக்கணும். அந்த பயத்துல, நான் வயசுக்கு வந்த உடனேயே படிப்பை நிறுத்திட்டு கல்யாணம் செஞ்சு கொடுத்துடனும்னு துடிச்சாங்க பாட்டி. அழுது அடம்பிடிச்சுதான் டவுன் பள்ளிக்கூடத்துல சேர்ந்து படிப்பை முடிச்சேன். அதுக்கு தாத்தாதான் எனக்கு ஃபுல் சப்போர்ட்.  ப்ளஸ் டூ முடிச்சதும் மறுபடியும் இதே பேச்சு ஆரம்பிக்கவும் மேற்கொண்டு படிக்கணும்னு சொன்னதுக்கு 'பொம்பள புள்ளைய இவ்வளவு படிக்க வச்சதே அதிகப்படி. அப்பறம் உன் படிப்புக்கு தகுந்த மாப்பிளைய வேற தேடி அலையணும். அதுக்கு தகுந்த சீர்செனத்தி செஞ்சு கட்டி கொடுக்கணும். உன்னை காலேஜுக்கு அனுப்பி படிக்க வெச்சு, அடுத்தது கட்டிக்கொடுத்து இப்படி உன்னையே பார்த்துட்டு இருந்தா தம்பிய படிக்கவைக்க முடியாம போயிடும். ஆம்பள பிள்ளைய படிக்க வெச்சாதான் குடும்பம் தலைநிமிரும்' அப்படின்னு பாட்டி மறுபடியும் எனக்கு அகைன்ஸ்ட்டா நின்னாங்க.

அவங்கள சொல்லியும் குறையில்லை. அவங்களால அதுக்கு மேல யோசிக்க முடியாது. ஏன்னா எங்க லைஃப்-ஸ்டயில பொறுத்த மட்டும் பெண்களோட படிப்பும் கூட ஒரு லக்சுரி மாதிரிதான். பணம் இருக்கறவங்க வீட்டு பொண்ணுங்க மட்டும்தான் ஒரு பேசிக் டிக்ரீக்குக்கூட ஆசை பட முடியும்.

ஆனா, என் கூட படிச்ச பொண்ணுங்க ரொம்ப சின்ன வயசுல கல்யாணம் கட்டிட்டு கையில ஒண்ணும் இடுப்புல ஒண்ணுமா படரப்பாட்ட பார்த்துட்டு, அதுவும் ஒருத்தி குடும்ப வன்முறைல நெருப்பு வெச்சிட்டு செத்தே போயிருக்க, கல்யாணம்னாலே ஒருவித பயம்தான் எனக்கு.

அதனாலயோ என்னவோ மேற்கொண்டு படிக்கணும், வேலைக்கு போய் சம்பாதிக்கணும் இப்படியெலாம் வேற மாதிரி திங்க் பண்ண ஆரம்பிச்சுட்டேன். ஆனா என்ன படிக்கணும், எந்த வேலைக்கு போகணும் ஒண்ணும் தெரியாது. சரியான கைடன்சும் கிடையாது.

அப்பல்லாம் ஊர் பக்கம், சாப்பாட்டுக்கே கஷ்டப்படற நிலைமையில இருக்கற பொண்ணுங்க, குடும்பத்த காப்பாத்த, மெட்ராஸ் வந்து இங்க டி.நகர்ல இருக்கில்ல அந்த '$$$$$' ஜவுளி கடைல வேலை பார்ப்பாங்க.

அங்கேயே தங்க இடம் கொடுத்து, மூணு வேளையும் சாப்பாடும் போட்ருவாங்க. அதனால தங்க, சாப்பிட இந்த பிரச்சனையெல்லாம் இருக்காது. என்ன, ஒரு நாள்ல பன்னெண்டு மணிநேரம் நின்னுட்டே வேலை பார்க்கணும். ரொம்பவே கஷ்டம்னு தெரியும். இருந்தாலும் எப்படியாவது கல்யாணத்துல இருந்து தப்பிச்சா போதும்னு கெஞ்சி கூத்தாடி அந்த வேலைக்கு போயிட்டேன்.

என்ன ஒரு விஷயம்னா, தாத்தா எனக்கு சப்போர்ட்டா நின்னதால என் பிடிவாதத்தை இந்த தடவையும் உங்க பாட்டியால உடைக்க முடியல.

அங்க வேலைக்கு போய் ஒரு கணிசமான சம்பளமும் வர ஆரம்பிக்க, கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் நகை நட்டு சேர்க்கற ஆசைல பாட்டி கொஞ்சம் சைலன்ட் ஆனாங்க.

ஒரு வருஷம் இப்படி போக, அப்பறம்தான் தபால் மூலமா படிக்கலாம்னே எனக்கு தோணிச்சு. வேற கோர்ஸ் எடுத்தா அதுக்கு க்ளாஸ் அது இதுன்னு போகணும். அது எங்கன்னு வேற தேடிட்டு அலையணுமே! அதுக்கு நேரமும் வேணும் இல்ல? அதனாலதான் பீ.ஏ தமிழ் லிட்டரேச்சர் சேர்ந்தேன்.

அந்த மூணு நாலு வருஷத்துக்குள்ள எனக்கு படிப்பும் இன்னும் கொஞ்சம் உலக அனுபவமும் சேர்ந்து போச்சா, கூட புக்ஸ் படிக்கற பழக்கமும் வந்துடுச்சா, பெண் கல்வி, லட்சியம், சுய சம்பாத்தியம், தன்மானம் அது இதுன்னு புத்தி கொஞ்சம் பகுத்தறிவு பாதைல போக ஆரம்பிச்சுது.

மேற்கொண்டு பீ.ஜீ படிக்கணும் இல்ல டீச்சர்ஸ் ட்ரைனிக் போகணும், கை நிறைய சம்பாதிச்சு சொந்தக்கால்ல நிற்கணும் இப்படியெல்லாம் பகல்கனவு காண ஆரம்பிச்சேன்.

அப்படி இப்படி டபாய்ச்சு, நான் படிப்பை முடிக்கவும், உங்க அப்பாவோட ஜாதகம் வரவும் சரியா இருந்துது. அதுவும் எப்படி, எங்க நிலைமைக்கு மீறி, இன்சினியர் மாப்பிளை. அப்படியே ஒரு மஹாராஜா ரேஞ்சுக்கு பில்ட் அப். எங்க அப்பாவே கவுந்துட்டார்னா பாரேன்.

தாத்தா பாட்டியோட பக்கம் போயிட, நான் நிராயுதபாணியா ஆக்கப்பட்டேன். அதுக்கு மேல உங்க பாட்டி கூட என்னால போராட முடியல, இந்த இன்சினியர் மூஞ்சிக்கெல்லாம் நம்ம எங்க பிடிக்கப்போகுதுன்னு, வேண்டாம்னு சொல்லிட்டு ஓடிரும்னு நினைச்சா, நேர்ல பார்த்ததும் நானே பிளாட். அதுவும் அமெரிக்கால இருந்து ரிட்டர்ன் ஆன அரவிந்த்சாமி ரேஞ்சுக்கு, 'என்னை பிடிச்சிருக்கா?'ன்னு நேருக்கு நேர் கேட்கறார் உங்க அப்பா. 'இல்ல'ன்னு எப்படி பொய் சொல்ல முடியும்? நல்லா தலையை தலையை ஆட்டி வெச்சேன்"

முகம் சிவக்கச் சொல்லிக்கொண்டிருந்தார் தாமரை.

தாமரை சொல்லச்சொல்ல அதிர்ச்சியில் அப்படியே உறைந்துபோய் உட்கார்ந்திருந்தாள் ஹாசினி.

அவர் சொன்ன மற்றதெல்லாம் அவளுடைய மனதில் பதியவே இல்லை, அவர் துணிக்கடையில் வேலை செய்தார் என்பதைத் தவிர.

நடுத்தட்டு மக்கள் அதிகம் புழங்கும் அவர் சொன்ன அந்த கடையில் கூட்டம் நெருக்கி அடிக்கும் என்பதால் பொருட்களை வாங்கக்கூட அங்கே எட்டிப்பார்க்கமாட்டாள் அவள்.

மேற்தட்டு மக்களால் மட்டுமே உள்ளே காலை கூட எடுத்துவைக்கமுடியும்  என்பதான ஹைஃபை 'பொட்டிக்'களும் ஷாப்பிங் மால்களுமே அவளுடைய பிரதான தேர்வாக இருக்கும்.

'அம்மா மாத சம்பளத்திற்காக அங்கே போய் வேலை செய்திருக்கிறாளா!? அதுவும் அங்கேயே தங்கி சாப்பிட்டு?!’ அங்கே வேலை செய்பவர்களின் சூழ்நிலை எப்படி இருக்கும் என்பதைக் கூட ஏதோ இரு சினிமாவில் பார்த்திருக்கிறாளே! அதை கற்பனை செய்துபார்க்கக்கூட இயலவில்லை ஹாசினியால்.

அது புரியவும், "அம்மாவோட படிப்பை எப்பவும் எகத்தாளமா பேசுவியே, இப்படியெல்லாம் ஒரு சூழ்நிலை அமைஞ்சிருந்தா எப்படி இருந்திருப்ப ஹசி நீ? உங்க பாட்டி மாதிரி மனநிலைல எட்டாங்கிளாஸ் முடிச்சதும் எவனையாவது கல்யாணம் பண்ணிக்க சொல்லியிருந்தா, சரின்னு தலை ஆட்டியிருப்ப இல்ல. அதுக்கு மேல உன்னாலயெல்லாம் யோசிக்கவே முடியாது இல்ல? மிஞ்சி போனா, பர்ச்சேஸ், சினிமா, ஹோட்டல், பார்ட்டி, மேக்கப், என்ஜாய்மென்ட்... இதெல்லாம்தான் வாழ்க்கை இல்ல? லட்சியம்னு ஏதாவது ஒண்ணு இருக்கா உனக்கு?" என மகளைப் பார்த்து ஆற்றாமையுடன் கேட்டார் கருணாகரன்.

கருணாகரனுக்கு இந்த தகவல்களெல்லாம் தெரியும் என்றாலும் கூட இப்படி ஒரு பரிமாணத்தில் அவர் என்றுமே எண்ணிப்பார்த்ததில்லை. இன்றுவரையிலும் கூட மனைவியைத் தான் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதைச் சற்று தாமதமாகவாவது உணர்ந்தார் கருணாகரன். இன்னும் சொல்லப்போனால் அவர் மட்டும் நினைத்திருந்தார் என்றால் அவரை மேற்கொண்டு படிக்கவைத்து அவருடைய லட்சியங்களுக்கு ஒரு பாதை வகுத்திருக்கலாம்.

மனைவி சொன்ன 'பகல் கனவு' என்கிற வார்த்தை அவரை மிகவும் பாதித்திருக்க, 'நாம்தான் சம்பாதிக்கிறோம்! எப்படியென்றாலும் வாழும்காலம் முழுமைக்கும் மனைவியுடைய தேவைகளையெல்லாம் பூர்த்திசெய்யதான் போகிறோம்! பிள்ளைகுட்டிகளை பெற்றுக்கொண்டு நம் தேவையை மட்டும் பார்ப்பவளாக இருப்பதால் பெரியதாக அவளுக்கு என்ன குறை வந்துவிடப்போகிறது? அவளுக்கு தனிப்பட்ட வளர்ச்சி என்ற ஒன்று தேவையா?’ என்பதாக தன்னுடைய ஆணாதிக்க புத்தியும் மிகவும் பிற்போக்கான மனோபாவமும்தானே அந்த செயலை செய்யவிடாமல் தடுத்தது என அவருடைய மனசாட்சியே அவரைப்பார்த்து சிரிப்பாய் சிரித்தது.

அவருடைய நினைவுகள் தற்செயலாக மீண்டுமொருமுறை தாமரையை சந்தித்த தினத்தை நோக்கிப் பயணப்பட்டது.

ஒரு சனிக்கிழமையின் இருள் விலகாத அதிகாலை அது. நண்பன் ஒருவன் தன் இருசக்கர வாகனத்தில், பிராட்வே பேருந்து நிலையத்தின் வாயிலில் கருணாகரனை இறக்கிவிட்டுப் போயிருக்க, உள்ளே நுழைந்தவன் காலியாக இருந்த திண்டிவனம் செல்லும் பேருந்து ஒன்றில் ஏறி ஆண்கள் அமரும் பகுதியில் ஜன்னலோரமாகப் போய் அமர்ந்தான்.

பெரும்பாலான சமயங்களில் இந்த பேருந்து சைதாப்பேட்டையைக் கடப்பதற்குள்ளாகவே  நிரம்பி வழியத்தொடங்கிவிடும். பின்பு நின்றுகொண்டேதான் பயணம் செய்யவேண்டியதாகிப்போகும். அதனாலேயே இங்கே வந்தது.

ஏற்கனவே மூச்சும் முட்டும் அளவுக்குப் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து கிளம்பத் தயாராக இருக்க, எப்படியும் இந்த வாகனம் கிளம்பக் கொஞ்சம் தாமதம் ஆகும். அதுவரை நேரத்தைத் தள்ளவேண்டும்.

மறுதினம், குலதெய்வ கோயில் ஆடிமாத திருவிழாவில் கூழ் ஊற்றவிருப்பதால் அவனைக் கிளம்பி வரச்சொல்லி கட்டளை வந்திருந்தது அவனுடைய அப்பாவிடமிருந்து.

வாடிக்கையாளர்களுக்காக அவன் கட்டிக்கொண்டிருக்கும் சில வீடுகள் முடியும் தறுவாயில் இருக்க, செலவுகளுக்குக் கொஞ்சம் பணம் ஏற்பாடு செய்யவேண்டியிருந்தது.

அந்த வீட்டின் உரிமையாளர்கள் ஆவணியில் குடி வர ஏதுவாக, முதல் போட்டு வீட்டை முடித்துக் கொடுத்துவிட்டால், அவர்கள் கொடுக்க வேண்டிய கடைசி தவணைப் பணம் வந்துவிடும். பிறகு பிரச்சனை இருக்காது. இக்கட்டான இந்த நேரத்தில் இப்படி ஊருக்கு வரச் சொல்லி அவர் நிர்ப்பந்திப்பது சிறிது கடுப்பை ஏற்படுத்தினாலும் வேறு வழி இல்லை. சென்றுதான் ஆகவேண்டும். இல்லையென்றால் ஊரார் கேள்விகளுக்கெல்லாம் அவர்தான் பதில் சொல்ல வேண்டியதாக ஆகிப் போகும். அந்த காட்டத்தையும் இவனிடம்தான் காண்பிப்பார் பாபு. எண்ணங்கள் இவ்வாறு சுழன்றுகொண்டிருக்க,  தாமரையைப் பற்றிய நினைவும் கூடவே ஒட்டிக்கொண்டு வந்தது கருணாகரனுக்கு.

பெண் பார்த்துவிட்டு வந்த கையுடன் கிளம்பி சென்னை வந்தவன்தான், அதன்பிறகு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக  ஊருக்குச் செல்வதற்கு நேரமே அமையவில்லை அவனுக்கு.

அங்கேயே வைத்து பெண்ணை பிடித்திருக்கிறது என்று சொன்ன பிறகும் அப்பா ஏன் வீட்டிற்குப் போய் தகவல் சொல்கிறோம் என்று சொன்னார் என்றே புரியவில்லை அவனுக்கு. அதன் பிறகும் இதைப் பற்றி வேறு தகவலேதும் இல்லாமல் விஷயம் கிணற்றில் போட்ட கல் போன்றே இருக்கிறது. இதைப்போய் தபால் மூலமோ அல்லது நேரிலேயோ எப்படியென்றாலும் அவனால் அவரிடம் கேட்க முடியாது. நேரில் சென்றால் மட்டுமே அதுவும் பேச்சுவாக்கில் தானாகத் தெரிந்தால்தான் உண்டு. அந்த ஆவல் அடி மனதிற்குள் இருக்கவே மற்ற அனைத்து சுமைகளும் பின்னுக்குப் போய் விட்டது.

இப்படியான எண்ண ஓட்டங்கள் மனதை அலைக்கழிக்க, வெளிப்புறம் வேடிக்கை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கவும், ஒல்லியான உடல்வாகுடன் கருப்பும் மஞ்சளும் கலந்த சுடிதார் அணிந்து கையில் ஒரு கட்டை பையை ஏந்தி, நீண்ட பின்னலை எடுத்து முன்னால் போட்டவாறு அந்த பேருந்துக்குள் நுழைந்த பெண்ணை, ‘இதற்குமுன் எங்கோ பார்த்தது போல் இருக்கிறதே!’ என்கிற எண்ணத்துடன் கண்களை இடுக்கி பார்த்துக் கொண்டிருந்தான் கருணாகரன்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக வெகு சில இருக்கைகளிலேயே ஆட்கள் அமர்ந்திருக்க, எதார்த்தமாக வந்து அவனுக்கு நேராக இருந்த  மூவர் அமரும் இருக்கையில் அவளுமே ஜன்னலோரத்தில் அமர, அதுவரையிலும் கூட அவனது கண்களை அவளை விட்டு அகற்றவில்லை கருணா.

அதுவரை பேருந்தை கவனித்து ஏறி, இடம் பார்த்து அமரும் பரபரப்பிலிருந்தவள், ஒருவன் தன்னை பார்த்துக்கொண்டே இருப்பதையே அப்பொழுதுதான் உணர, அவளுடைய பார்வையும் அவனிடம் சென்றது.

பெண்பார்க்கச் சென்ற தினம் அவள் புடவையிலிருந்ததால், இப்பொழுது இந்த உடையில் சட்டென அவனுக்குத்தான் தாமரையை அடையாளம் தெரியவில்லையே தவிர, பார்த்த நொடி அவனை கண்டுகொண்டாள் அவள்.

அடுத்த நொடி, ஒருவித படபடப்பு அவளைத் தொற்றிக்கொள்ள, மனதில் குமுறிய எரிமலை கண்களில் சீறி தெறிக்க, அதற்கு மேல் ஒரு நொடியும் அவனைப் பார்க்க விரும்பாதவளாக வெளிப்பக்கமாக தன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

அதற்குள் அவள் யாரென்பது பிடிபட்டுவிட, அவளும் தன்னை அடையாளம் கண்டுகொண்டாள் என்பதும் விளங்க, அடுத்த நொடி அனிச்சை செயலாக அவளுக்கு அருகில் வந்து உட்கார்ந்திருந்தான் அவன், "ஹாய் தாமரை, எப்படி இருக்க?" என உரிமையுடன் அதுவும் ஒருமையில் கேட்டுக்கொண்டே.

அவனை உணர்ந்தவளின் படபடப்பு மேலும் கூட்டிப்போக, நன்றாக அவனை முறைத்தவள், "ஊர் காரங்க யாராவது வந்து ஏறினாங்கன்னா தேவையில்லாத தொல்லை, முதல்ல இங்க இருந்து எழுந்து போங்க" என்றாளவள் சீற்றமாகவே.

அவளுடைய மனநிலைக்கு மாறாக அதுவரை ஒருவித இறுக்கத்துடன் இருந்தவன் பட்டென்று இலகு நிலைக்கு மாறியிருக்க, ஒரு கவர்ச்சியான புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது அவனுடைய இதழ்களில்.

"கூல், ஏன் இவ்வளவு அனல் அடிக்குது" என அவன் அதே இலகுத்தன்மையுடன் கேட்க, 'லூசாப்பா நீ?' என்பதாக அவனை ஒரு பார்வை பார்த்தவள், "ஆமாம், யார் நீங்க?" என்றாள் குதர்க்கமாக.

கேள்வியாக அவளைப் பார்த்தவன், "நான் யார்னு உனக்கு தெரியவே தெரியாது... இதை நான் நம்பணும்... ம்ம்..." என்றான் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல்.

"அதுதான் நமக்குள்ள செட் ஆகல இல்ல. அப்பறம் எதுக்குங்க நான் உங்களை தெரிஞ்சதா காட்டிக்கணும்? நீங்க யாருன்னு எனக்கு தெரியாதுன்னே இருந்துட்டு போகட்டும்” என்றாளவள் பதற்றம் குறையாமல்.

அவள் அங்கிருந்து எழுந்துசெல்லவேண்டும் என்றால் கூட அவனைக் கடந்துதான் செல்லவேண்டும். அவன் நன்றாக வழியை மறித்து உட்கார்ந்திருக்க, அதற்குள் பருத்த உடலுடன் பெண்மணி ஒருவர் அவனுக்கு அருகில் வந்து உட்கார, அவன் மேலும் கொஞ்சம் அவளை நெருங்கி உட்காரும் கட்டாயம் உருவாகிப்போக, அவளுடைய நிலைமை இன்னும் மோசமானது.

அந்த அதிகாலை வேளையிலேயே வெற்றிலையும் புகையிலையுமாக நெடியடித்துக்கொண்டிருந்த அந்த பெண்மணி, "இந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்கு! உன் சம்சாரமா தம்பி? ஊர் பக்கம் போறீங்களா? எந்த ஊரு?" எனக் கேள்விகளைத்தொடுக்க, "ஆமாம்ம்மா, இது என் வைஃப். பேரு தாமரை. போன மாசம்தான் கல்யாணம் ஆச்சு. ஆடி பொறந்திடுச்சு இல்ல, அதான் பொறந்த வீட்டுல விட்டுட்டு வரலாம்னு கூட்டிட்டு போறேன்" என்றான் அவன் அடக்கப்பட்ட சிரிப்புடன். அதில் அவள் பத்திரகாளியாகவே மாறியிருக்க, என்னவோ அவன் சொன்ன அனைத்தும் அவருக்குப் புரிந்தாற்போன்று தலையைத் தலையை ஆட்டியவர், "ஐயோ தங்கச்சியா? மன்னிச்சிக்கோ தம்பி, நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்" என்றாரே பார்க்கலாம்.

அதுவரை இருந்த கோபம் தானாகவே மறைந்துபோய் தாமரை பக்கென்று சிரித்துவிட, ஊர் போய்ச் சேரும்வரை அவளிடம் பேசிக்கொண்டே போக இது அவனுக்கு வசதியாக அமையவும், அவருக்கு காது கேட்காது என்பதில் சிறு நிம்மதி படர்ந்தது கருணாவுக்கு.

அவளுடைய முகத்தைக் கூர்ந்து பார்த்தவன், "ஏன் தாமரை, என்ன நடந்தது?" எனக்கேட்டான் அவன் ஒரு தீவிர பாவத்தில்.

"என்ன இது, என்னவோ எதுவுமே தெரியாத மாதிரி கேட்கறீங்க?" எனத் தாமரை முணுமுணுக்க, "நிஜமாவே எனக்கு எதுவும் தெரியாது! என்னன்னு சொல்லு" என அவன் எரிச்சலை மறைத்துச் சொன்ன விதத்திலேயே அவனுக்கு நடந்தவை எதுவுமே தெரியவில்லை என்பது புரியவரக் கோபம் கனன்றது அவளுடைய மனதில்.

“உங்களுக்கு எங்க குடும்பத்தோட சம்பந்தம் வெச்சுக்க இஷ்டம் இல்லன்னா அதை முதல்லயே சொல்லியிருக்கலாம் இல்ல. ஏன் பிடிச்சிருக்குனு சொல்லிட்டு போனீங்க" என அவள் கேட்க, அவள் என்ன சொல்ல வருகிறாள் என்றே புரியவில்லை அவனுக்கு.

அவன் கேள்வியாக அவளைப் பார்த்திருக்க, “ஊருக்கு போய் தகவல் சொல்றேன்னு சொல்லிட்டு போனவங்க ஒரு மாசம் ஆகியும் உங்க வீட்டுல இருந்து எதுவுமே சொல்லி அனுப்பல நீங்க. என்ன ஏதுன்னு புரியாம தவியாய் தவிச்சு, பாவம் எங்க அம்மாவும் அப்பாவும் நேரா லோகு மாமா வீட்டுக்கே போய் அவர்கிட்டயே கேட்டுட்டாங்க. மாமாவும் உங்க ஊர்தான? எதுவா இருந்தாலும் நேர்லயே பேசிக்கலாம்னு சொல்லி உங்க வீட்டுக்கு அவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு போனாரு.

என்ன இருந்தாலும் என்ஜினியரிங் படிச்சி இருக்கறதால, நீங்க இன்னும் கொஞ்சம் பெரிய இடமா எதிர்பார்க்கறீங்கன்னு உங்க அப்பாதான் சொன்னாங்க.

அதோட இல்லாம, இருபத்தி அஞ்சு பவுன் நகை, பைக், ஐம்பதாயிரம் ரொக்கம் இதையெல்லாம் செஞ்சா வேணா கல்யாணத்தைப் பத்தி மேற்கொண்டு முடிவு செய்யலாம்னு வேற சொல்லிட்டாங்க.

நான் கடைல வேலை பார்க்கறது வேற உங்களுக்கு பிடிக்கலையாமே. உங்க அம்மா சொன்னாங்க.

முதல்ல எதுவுமே வேண்டாம்னு சொன்னவங்க திடீர்னு இப்படி பேசவும் லோகு மாமாவுக்கே அவ்வளவு கோபம். எங்க அப்பாவை பத்தி தெரிஞ்சு அதனால இந்த சம்பந்தத்தைத் தட்டிக்கழிக்க உங்க வீட்டில் அப்படி சொல்லி இருக்கவும் நியாயம் இருக்குல்ல. எது எப்படி இருந்தாலும் அந்த அளவுக்கு அப்பாவால செஞ்சு கொடுக்க முடியாதுங்கறதால வேற இடம் பார்த்துக்கலாம்ங்கற முடிவுக்கு வந்து எப்படியோ மனசை தேத்திகிட்டாங்க.

இப்பதான் ஒரு வழியா இந்த பிரச்சனை எல்லாம் அடங்கி நான் மறுபடியும் வேலைக்கு போக ஆரம்பிச்சிருக்கேன். தயவு செஞ்சு மறுபடியும் குழப்பம் பண்ணாதீங்க” என தாமரை முகத்தில் அறைந்தார் போல் சொல்லவும், என்ன இருந்தாலும் தன் பெயரைப் பயன்படுத்தி வீட்டில் அவர்கள் இவ்வாறு பேசியிருக்க உண்மையில் அவ்வளவு அவமானமாக இருந்தது கருணாகரனுக்கு. அதேநேரம் பெற்றவர்களையும் விட்டுக்கொடுக்க முடியவில்லை அவனால்.

"உன்னை பொண்ணு பார்க்க வரதுக்கு முன்னால, நிறைய இடம் பார்த்து என்னை தொல்லை பண்ணிட்டே இருந்தாங்களா, அதனால சும்மா அப்படி சொல்லி வெச்சேன். அதை ஏதோ தப்பா புரிஞ்சிட்டு அப்படியே உன் அம்மா அப்பாகிட்ட சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கறேன்" என சப்பைக்கட்டு கட்டியவன், "சரி விடு! யாராவது எதையாவது சொல்லிட்டு போகட்டும். என்னைக்கு உன்னை பார்த்தேனோ அன்னைக்கே முடிவு பண்ணிட்டேன் நீதான் எனக்கு பொண்டாட்டின்னு. இனிமேல் வேற எவளை கூட்டிட்டு வந்து நிறுத்தினாலும் நான் கட்ட மாட்டேன். நீதான் எனக்குன்னு மனசுல எப்பவோ ஃபிக்ஸ் பண்ணிட்டேன். சீக்கிரமாவே உங்க வீட்டுக்கு முறைப்படி தகவல் வரும்" என்று சொன்னவன், அவள் கடையில் வேலை செய்வது உண்மையில் அவனுக்குப் பிடிக்கவில்லை என்ற உண்மையை அவளிடம் காண்பித்துக்கொள்ளாமல், "உனக்கு என்ன கட்டிக்க இஷ்டம்தான?" என்று மறுபடியும் ஒருமுறை நேரடியாக அவளுடைய கண்களைப் பார்த்துக் கேட்க, பதிலேதும் சொல்லாமல், சொல்ல முடியாமல், அல்லது சொல்லத் தோன்றாமல் அவன் மூழ்கியிருந்த அவளது விழிகள் கலங்கிப் போய், தாமரை முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொள்ள அவனை மணக்க அவளுக்கு எவ்வளவு இஷ்டம் என்பதை அந்த செயல் சொல்லாமல் சொன்னது கருணாகரனுக்கு.

நெகிழ்ச்சியில் மேற்கொண்டு ஏதும் பேசத்தோன்றாமல் மௌனமாகிப் போனான் அவன். அதற்குள் பேருந்து கிளம்பி சிறிது தூரம் பயணப்பட்டிருந்தது. அவளுடைய பதற்றம் உணர்ந்து விழிகளைச் சுழற்றியவன் கடைசி வரிசையில் இடம் இருக்கவும் அங்கே போய் அமர்ந்துகொண்டான். அவனுடைய பார்வை மட்டும் தாமரையிடமே நிலைத்திருந்தது.

அவ்வப்பொழுது திரும்பித் திரும்பி தாமரை அவனைப் பார்ப்பதும் அவனுக்குத் தெரிய நிம்மதியில் அவனுடைய மனம் ஓரளவுக்கு சமன்பட்டது. சில மணிநேர பயணம் இப்படியே கழிய ஒரு வழியாக அவளுடைய ஊரான முந்திரித்தோப்பு வந்துவிட, அவனைப் பார்த்துக் கொண்டேதான் பேருந்திலிருந்து இறங்கி ஊருக்குள் சென்றாள் தாமரை.

'இவன் சொல்வது போல் நடந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியப்படுமா? இவன் சொல்வதையெல்லாம் நம்பலாமா கூடாதா?' போன்ற  கேள்விகள் அவள் மனதிற்குள் அணிவகுக்க, நிராசை, சஞ்சலம், பயம் என அதை அப்படியே பிரதிபலித்தது அவளுடைய முகம். அவனைப் பார்க்கும்போது அவளுடைய விழிகளில் வழிந்த ஏக்கம் கொஞ்சம் கூட இலக்கு மாறாமல் அவனைத் தாக்க, உரிமையுடன் அவளைத் தழுவி தன்னுடன் கட்டிவைத்துக்கொள்ளும் பேராவல் உண்டானது கருணாகரனுக்கு.

****************

You cannot copy content