அத்தியாயம்-4
சத்யாவின் காலில் ஏற்பட்டிருந்த எலும்பு முறிவுக்குப் போடப்பட்டிருந்த கட்டு பிரிக்கப்பட்டு, அவன் இயல்பாக நடமாடத் தொடங்கியபின் ஒரு நாள்...
தொழிற்முறை ஒப்பந்தங்கள் சிலவற்றில் கையெழுத்திட பெங்களூரிலிருந்து வந்திருந்த சப்ளையர் ஒருவரை நேரில் சந்திக்க ஒரு நட்சத்திர விடுதியில் ஏற்பாடாகியிருந்தது கருணாகரனுக்கு. அந்த சந்திப்பு முடிந்ததும் மரியாதை நிமித்தம் அந்த நபருடன் மதிய உணவு உண்ண அங்கே இருக்கும் உணவகத்திற்கு வந்திருந்தார்.
மெல்லிய மேற்கத்திய இசை கசிய, இதமான நறுமணம் அவர்களை ஆட்கொள்ள, அதிக கூட்டமில்லாமல் இருந்தது அந்த உணவகம். உணவை ஆர்டர் செய்துவிட்டு அவர்களுக்குப் பரிமாறப்பட்ட வெல்கம் ட்ரிங்க்கை பருகியவாறு, பொதுவாக அவர்கள் பேசிக்கொண்டிருக்க, அங்கே ஓரமாகத் தனித்துப் போடப்பட்டிருந்த இருக்கையை நோக்கி கருணாகரனின் பார்வை சென்றதென்னவோ எதார்த்தமாகத்தான்.
சுற்றி உள்ள சூழ்நிலை கண்களை மறைக்க, பெயருக்கு எதையோ கொறித்தவாறே, சீண்டல்களும் கொஞ்சல்களுமாக அவர்களுக்கே உரித்தான ஏதோ ஒரு தனித்தீவில் லயித்திருந்தது இளம் ஜோடி ஒன்று.
இதெல்லாம் இங்கே சகஜமாகக் கண்களில் படும் காட்சிதான் என்பதால் அதிகம் ஆராயவில்லை அவர்.
முக்கால்வாசி தோற்றத்தை நாற்காலி மறைத்திருக்க, அவருக்கு முதுகு காட்டி உட்கார்ந்திருந்த பெண் அவரது பார்வையில் படவில்லை. ஆனால், பக்கவாட்டு தோற்றத்தில் தெரிந்த அந்த இளைஞனின் முகம் ஏற்கனவே அவருக்குப் பரிச்சயமானதாக தோன்றவும், அவனை நினைவு அடுக்குகளில் தேட தொடங்கினார். 'நினைவில் வந்தேனா பார்' என்று அவருக்கு சவால் விட்டான் அவன்.
அந்த நேரம் பார்த்து எல்லை தாண்டி அவன் செய்த சேட்டையில் அந்த பெண் கொஞ்சம் சுதாரித்திருக்க, அனிச்சையாக திரும்பி சுற்றுமுற்றும் பார்த்தாள் அவள் நாணத்துடன். அதில் பதறி அவர் சட்டென தன் கையிலிருந்த மெனு கார்ட்டால் முகத்தை மறைத்துக்கொள்ள, நொடி நேரத்திற்குள் அந்த பெண்ணின் முகத்தைப் பார்க்க நேர்ந்துவிட்டது அவருக்கு.
அடுத்த நொடி மின்சாரம் தாக்கியது மனிதரை. 'ஹாசினியா அது? உண்மையில் தான் காண்பது நிஜமா? இல்லை வேறு யாரையோ பார்த்து தவறாகப் புரிந்துகொண்டோமா?'என ஒரு கையால் தன் கண்களை அழுந்த துடைத்துக்கொண்டு, கையில் பிடித்திருந்த மெனு கார்டை லேசாக கீழே இறக்கி மறுபடியும் பார்க்க, சந்தேகமே இல்லை, ஹாசினியேதான் அது.
இப்பொழுது அவன் செய்த சேட்டைக்குப் பதிலாக எழுந்து அவனருகில் நின்றவாறு அவனை அடித்துக்கொண்டிருந்தாள் அவள், செல்லமாக.
தனக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத யாரோவாக அவர்களைப் பார்த்தபொழுது இருந்த அலட்சியம் முற்றிலும் மறைந்துபோய் மகளின் எதிர்காலத்தைப் பற்றிய பயம் மொத்தமாக அவரை ஆட்கொள்ள, தொண்டையை அடைத்தது அவருக்கு. உள்ளுக்குள்ளே பொங்கிய உணர்வு பிரவாகத்தில், வயிற்றுக்குள் ஒரு பந்து வேகமாக உருள, வியர்வை பெருகத்தொடங்கியது உடலில்.
நேராகப் போய் அவர்களை ஒரு உலுக்கு உலுக்கிவிடலாமா என்று தோன்றிய எண்ணத்திற்கு அவருடைய தன்மானம் தடைபோட, செயலற்று போய் உட்கார்ந்திருந்தார் கருணாகரன்.
எதிரிலிருந்த மனிதரும் தன் கைப்பேசியில் ஐக்கியமாகியிருக்க, மெனு கார்ட்டின் பின்னால் பதுங்கியிருந்தவரின் நிலையை அவரும் உணரவில்லை.
அதற்குள் அங்கிருந்து வெளியேறிச் சென்றுகொண்டிருந்தனர் அவர்கள் இருவரும். அவளுடைய இடை அவனது கரத்தினுள் அடங்கியிருக்க அவனுடைய இடையை வளைத்திருந்தது கருணாகரனின் உயிரை தன் கூட்டுக்குள் வைத்திருக்கும், அவர் பாலூட்டி வளர்த்து, பழம் கொடுத்துக் காத்த கிளியின் கரம்.
ஒரு தகப்பனாக முதன்முதலாக தன் தோல்வியை நேரில் தரிசித்துக்கொண்டிருந்தார் கருணாகரன்.
தன்னையும் அறியாமல் தாமரையின் முகம்தான் அவர் மனக்கண்ணுக்குள் வந்து போனது. உடலோடு சேர்ந்து மனமும் நடுங்கித்தான் போனது அவருக்கு.
***
மகளை அழைத்து, 'ஏன் இப்படி செஞ்ச, யார் அவன்?' என நேரடியாக கேட்டு, அவள் முகத்திற்கு நேராக சொல்லப்போகும் பதிலைக் கேட்கும் துணிவு அவருக்குக் கொஞ்சமும் இல்லை.
அவள் சொல்லும் பதில் அவருக்கு சாதகமாக இருந்தால் அவரே முன்னே நின்று அந்த திருமணத்தை நடத்திவைத்து விடுவார். ஆனால் மகள் காதலிக்கும் அந்த ஆடவனைப் பற்றிய தகவல்கள் அவருக்குத் திருப்தியளிக்கவில்லை என்றால், மகளின் முதல் எதிரி அவராகத்தான் மாறிப்போவார்.
எந்தவித பின்புலமும் இல்லாமல், அவரது இருபத்தி இரண்டாவது வயதில் சுயமாக ஒரு தொழிலைத் தொடங்கி, அதைத் திறம் பட நடத்தி, இந்த அளவிற்கு வளர்த்துவிட்டிருக்கிறார் என்றால் அது ஒன்றும் சுலபத்தில் நடந்துவிடவில்லை.
இந்த நிலைக்கு வரும்வரை எத்தனையோ சறுக்கல்களையும் பிரச்சினைகளையும் கடந்துவந்திருக்கிறார் கருணாகரன்.
எந்த மாதிரி சிக்கல் என்றாலும், ஓடி ஒளியாமல் அதை எதிர்கொண்டு அதற்கொரு தீர்வு கண்டுபிடிக்கும் வரை ஓய மாட்டார் மனிதர். ஆனால் அவரது அந்த துணிவும் தீவிரமும் மகள் விஷயத்தில் ஓடி ஒளிந்துகொண்டதுதான் விந்தையிலும் விந்தை.
எப்படியோ தன்னை சமாளித்துக்கொண்டு ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தவர்தான், அதன் பின் அவருடைய போக்கே மாறிப்போனது.
வீட்டிலிருப்பவர்களுடன் முகம் கொடுத்துப் பேசுவதையும் தவிர்த்தார். காலை சீக்கிரமாக அலுவலகம் கிளம்பிச்சென்றார் என்றால் இரவு வெகு தாமதமாகவே வீடு திரும்பினார்.
என்னதான் வேலைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டாலும், வீட்டிலிருக்கும் சிறிது நேரமும் கூட இடை விடாமல் அவர் முகத்தில் குடிகொண்டிருக்கும் இறுக்கமும் கலக்கமும், 'ஏதோ சரியில்லை' என்பதைத் தாமரைக்கு நன்றாகவே காட்டிக்கொடுத்துவிட, மனது பொறுக்காமல் 'உடம்புக்கு ஏதாவது செய்யுதா?' 'பிஸினெஸ்ல ஏதாவது பிரச்சனையா?' 'சைட்ல யாருக்காவது ஏதாவது ஆயிடுச்சா?' என அவர் விதவிதமாக கேட்ட கேள்விகளுக்கெல்லாம், 'ஒண்ணும் இல்ல' 'எந்த பிரச்னையும் இல்ல' என்று பொறுமையாய் சொல்லிப்பார்த்தவர், ஒரு கட்டத்தில் சலிப்படைந்து, "ப்ச்... ஒண்ணும் இல்லன்னு சொன்னா விட்டுடு. தொண தொணன்னு கேள்வி கேட்டு என்னை இம்ச பண்ணாத" என சுள்ளென்று எரிந்து விழுந்ததில், மௌனமாகிப்போனார் தாமரை.
***
காலை ஏற்பட்ட சிறு மனஸ்தாபத்துடன் கணவர் அலுவலகம் கிளம்பிச் சென்றிருக்க, மனம் சோர்த்துபோய் உணவு உண்ணக்கூடப் பிடிக்காமல் வரவேற்பறை சோபாவிலேயே சுருண்டு படுத்திருந்தார் தாமரை.
"என்னக்கா, இந்த நேரத்துல இங்க படுத்திருக்க" என்று கேட்டவாறே அவருக்கு அருகில் வந்து உட்கார்ந்தான் சத்யா.
"ப்ச்... ஒண்ணுமில்லடா... லேசா தலை வலி, அவ்வளவுதான்" என்றவர், "என்ன இந்த நேரத்துல வீட்டுக்கு வந்திருக்க? லஞ்ச் சாப்பிட்டியா இல்லையா” என அக்கறையாய் அவனிடம் கேள்வி கேட்க, "இன்னும் இல்லக்கா, காலைல இருந்து மறைமலை நகர் சைட்ல இருந்தேன். ஈவினிங் ஆபிஸ்ல ஒரு சப்ளையர் கூட மீட்டிங் இருக்கு. அங்க போயாகணும். அதான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு போகலாம்னு வந்தேன். சாப்பிட ஏதாவது இருக்கா?' என்றான் அவன்.
"இல்லாம என்ன? கை கால் அலம்பிட்டு வா. சாப்பாடு எடுத்து வைக்கறேன்" என்று சொல்லிவிட்டு உணவறை நோக்கிச் சென்றார் அவர்.
"அதான் பிடிக்கலன்னு சொல்றேன் இல்ல" என அவர் எரிச்சல்படவும், "கா, ரசம் சாதமாவது சாப்பிடு. இல்லன்னா தலைவலி அதிகமாயிடும்" என்றவன் எழுந்து தானே அவருக்குத் தட்டை எடுத்து வைக்கவும், அவனது அக்கரைக்கு மதிப்பளித்து மறுக்காமல் உட்கார்ந்து தம்பிக்கும் பரிமாறிவிட்டு தானும் சாப்பிட தொடங்கினார் அவர்.
பசிக்கு சில கவளங்கள் உள்ளே சென்றதும், "காலைல அம்மா கால் பண்ணாங்க. ஈவினிங் உன்ன கால் பண்ண சொன்னாங்க" என்றான் சத்யா அவனை அன்னை அழைத்தது நினைவில் வந்ததனால்.
தினமும் காலை பத்து மணி வாக்கில் மகளை அழைத்து சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருப்பார் கோதை, தாமரை மற்றும் சத்யாவின் அம்மா. முக்கிய காரணம் இருந்தாலொழிய மகனிடம் பேசமாட்டார் அவர்.
"ப்ச்... அக்கா, அவங்களுக்கு ஒண்ணும் இல்ல. உனக்குத்தான் முதல்ல கூப்பிட்டிருக்காங்க. நீ எடுக்கலன்னதும்தான் எனக்கு கால் பண்ணாங்க" என்றான் அவன்.
"ஓ... போனை சார்ஜ்ல போட்டேன். கால் வந்தது தெரியல” என்றார் தாமரை உள்ளே போன குரலில்.
"சரி அதை விடு, உனக்கு என்ன பிரச்சன" என அவன் தமக்கையின் மன உணர்வைப் புரிந்தவனாகக் கேட்க, "ப்ச்... எனக்கு என்ன பிரச்சன வரப்போகுது. உங்க மாமாவுக்குத்தான் ஏதோ பிரச்சன போலிருக்கு" என்றார் தாமரை கடுப்புடன்.
"அவருக்கு என்ன பிரச்சன... ரெண்டு நாளா ஆஃபீஸ்ல எல்லாரையும் நல்லா கடிச்சு துப்பிட்டு இருக்காரு... உளவுத்துறை தகவல்" என்றான் சத்யா கிண்டலாகவே.
"ஏய் என்னடா சொல்ற! உன்னையும் என்னையும் தவிர அவர் வேற யாரையும் அதட்டி திட்டி செய்ய மாட்டாரே. அதுவும் ஸ்டாஃப்ஸ் கிட்ட" எனக் கணவரை அறிந்தவராய் தாமரை அதிர, "ப்ச்.. அக்கா ஒண்ணும் இல்லாததுக்கெல்லாம் எதுக்கு ஓவரா டென்ஷன் ஆகற?" என்றான் அவன்.
"இல்லடா சத்யா, அவரு ரெண்டு மூணு நாளா ஆளே சரி இல்ல. ரொம்ப டல்லா, உர்ருன்னு இருக்காரு. எனக்கு பயமா இருக்குடா. பிஸினஸ்ல ஏதாவது ப்ராப்ளமா? வயசு காலத்துல இப்படியெல்லாம் பயம் வந்ததில்ல. இப்ப அவருக்கும் வயசு கூடுது இல்ல" என ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவர் வருந்த, அதில் பொதிந்திருக்கும் அவரது அக்கறையும் பயமும் மனதிற்குப் புரிய, "அதெல்லாம் ஒண்ணும் இல்ல. நான் ஆபீஸ்தான போறேன், என்னன்னு அவர் கிட்ட பேசி பார்க்கறேன். நீ ஒர்ரி பண்ணிட்டு இருக்காத?” என அவரை சமாதானப்படுத்திவிட்டு உடனே அலுவலகம் கிளம்பினான் சத்யா, தன் ஓய்வை மறந்து, கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல்.
***
அவர்களுடைய அலுவலகத்திற்குள் நுழைந்தவன் நேராக கருணாகரனின் கேபினில் சென்று பார்க்க, அவர் அங்கே இல்லாமல் போகவும் அவனுக்கென்று கொடுக்கப்பட்டிருக்கும் கேபினுக்குள் வந்து உட்கார்ந்தான். பின் அவர்களுடைய மேலாளரை அழைத்தவன் "சார் எங்க போயிருக்காங்க தெரியுமா?" என்று கேட்க, "தெரியல சார். லஞ்சுக்கு முன்னாலேயே எங்கயோ கிளம்பி போயிட்டாரு. போகும்போது எதுவும் சொல்லிட்டு போகல" என்று பதில் வந்தது அவரிடமிருந்து.
"ஓஹ்... சரி" என்றவன் அதன் பின் அவர்களுடைய தொழில் சார்த்த சிலவிஷயங்களைப் பேசி முடித்து அவரை அனுப்பினான்.
அவர் சென்ற நொடி கைப்பேசியில் கருணாகரனை அழைக்க, அந்த அழைப்பை அவர் ஏற்கவில்லை. பெரும்பாலும் இப்படி நிகழாது என்பதால் உடனே அவருடைய ஓட்டுநரை அழைத்தான் அவன்.
"சொல்லுங்க சார்" என அந்த அழைப்பில் வந்தான் கோபால். "அத்தான் எங்க இருக்காரு கோபால்?" என அவன் நேரடியாகக் கேட்கவும், சில நொடி தயக்கத்திற்குப் பிறகு, "நம்ம கெஸ்ட் ஹவுஸ் வந்திருக்கோம் சார்" என தடுமாற்றத்துடன் பதில் வந்தது அவனிடமிருந்து.
'முடிக்க வேண்டிய வேலைகள் வரிசைகட்டி நிற்கும்பொழுது, இப்பொழுது ஏன் அங்கே சென்றார்?' என்ற கேள்வி எழ, ‘ஐயோ!’ என்றிருந்தது அவனுக்கு. மேற்கொண்டு எதுவும் பேசாமல் அழைப்பைத் துண்டித்தான் சத்யா.
வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் அவர்கள் கட்டி முடித்த ஒரு குடியிருப்பில், இரண்டு படுக்கையறைகளைக் கொண்ட டியூப்ளக்ஸ் வில்லா ஒன்றைத் தாமரையின் பெயரில் வாங்கி அதை அவர்களுடைய நிறுவன விருந்தினர் இல்லமாகப் பயன்படுத்திக்கொண்டிருந்தார் கருணாகரன். வெளி மாநிலங்களிலிருந்து வரும் முக்கிய நிர்வாகிகளை தங்க வைக்க அது அவர்களுக்கு தேவையாக இருந்தது.
கோபால் மூலம் அவர் அங்கே வந்திருப்பதை அறிந்தவன் உடனே கிளம்பி அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான் சத்யா.
கருணாகரன் உபயோகிக்கும் கார் அந்த வில்லாவின் போர்டிகோவில் நிறுத்தப்பட்டிருக்க, அதன் அருகிலேயே ஒரு நெகிழி-நாற்காலியில் உட்கார்ந்திருந்தான் கோபால்.
சத்யாவை பார்த்ததும் எழுந்து நின்று செய்வதறியாமல் கைகளை பிசைந்தவன், "சார்தான் இங்க கூட்டிட்டு வர சொன்னாரு சார்" என தடுமாற, "எனக்கு ஒரு மெசேஜ் அடிச்சிருக்கலாம் இல்ல. மொதராளி விஸ்வாசம்... ம்ம்" என அவனிடம் காய்ந்துவிட்டு உள்ளே நுழைந்தவன் ஆயாசத்துடன் தலையைப் பிடித்துக்கொண்டான்.
காரணம், வரவேற்பறை சோபாவிலேயே தாறுமாறாக சரிந்துகிடந்தார் கருணாகரன்.
****************