You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

KPN's Poovum Naanum Veru - 17

Quote

இதழ்-17

கேள்வியாக வஸந்தை நோக்கிய சரிகாவை, "நீ வீட்டுக்கு போ! நான் மித்ரா கிட்ட பேசிக்கறேன்!" எனச் சொல்லி சில நொடிகள் கூட அவள் அங்கே இருக்க இடம் கொடுக்காமல் அவளை அனுப்பிவிட்டு, "வசும்மா! நீ இந்த விஷயத்தைப் பத்தி யார் கிட்டயும் சொல்லிடாத என்ன? என்னோட படிப்பு முடிஞ்சு நான் வேலையில ஜாயின் பண்ணனும்; சரிகாவுக்கும் இன்னும் ஒரு வருஷ படிப்பு இருக்கு இல்ல; நேரம் பார்த்து பெரியவங்க கிட்ட சொல்லிக்கலாம்; இப்பவே எல்லாருக்கும் தெரிஞ்சுதுன்னா அவளை அவங்க சென்னை கூட்டிட்டு போயிடுவாங்க; புரியுதா" எனச் சிறு குழந்தைக்குச் சொல்வதுபோல மித்ராவிடம் சொன்னான் வசந்த்.

அவளிடம் அன்பாகவும் நட்பாகவும் இருக்கும் சரிகா அவளுடைய அண்ணியாக வரவேண்டும் என்கிற ஆசை ஒருபுறம் இருந்தாலும், 'அவளைச் சென்னைக்கு கூட்டிட்டு போயிடுவாங்க' என்ற வசந்த்துடைய வார்த்தை, எங்கே சரிகாவை பிரியவேண்டி வருமோ என்ற அச்சத்தை அவளுக்குள் விதைக்க, வசந்த் சொன்னது போல் அதை யாரிடமும் சொல்லாமல் மறைத்தாள் மித்ரா.

அதன் பிறகு சரிகாவை அக்கா என விளிப்பதையே முற்றிலுமாக தவிர்த்தவள், யாரும் இல்லாத சமயங்களில் 'அண்ணி' என அவளை அழைத்து அவளுடைய மனதில் அந்த நம்பிக்கையை முற்றிலுமாக வளர்த்தாள் அவள்.

***

ஒரு நாள் பேச்சு வாக்கில்,  "முக்கியமா கொஞ்சம் பர்ச்சேஸ் பண்ணனும்! குவாலிட்டி சென்டர் வரைக்கும் போகலாம்னு இருக்கேன்" என 'எப்படியும் தானும் கூட வரவேண்டும் எனக் கெஞ்சுவாள்' என்ற எண்ணத்துடன், மித்ராவின் ஆசையை தூண்டும் வண்ணம் சரிகா சொல்ல, "என்ன வாங்க போறீங்க அண்ணி" என்று கேட்டாள் மித்ரா அவளுடைய தூண்டிலில் சிக்கியவாறு.

"நெஸ்ட் வீக் அண்ணாவுக்கு பர்த்டே! அவங்களுக்கு பர்த்டே கார்ட் வாங்கலாம்னு இருக்கேன்!" என சரிகா சொல்ல, "அண்ணின்ணீ! ப்ளீஸ் அண்ணி! நானும் வறேன்! உங்க கூட சேர்ந்து நானும் உங்க அண்ணாவுக்கு கார்டு செலக்ட் பண்றேன்!" எனக் கெஞ்சலாகக் கேட்டாள் மித்ரா.

அவளும் உடன் வந்து எதாவது வாங்குவாள் என்றுதான் சரிகா நினைத்தாள். அவள் வாழ்த்து அட்டையை தேர்ந்தெடுக்கிறேன் என அவள் சொன்னதும் வியப்புடன் தோழியைப் பார்த்தவள், "ஓகே! சீக்கிரம் ரெடி ஆகி வா! இருட்டறதுக்குள்ள போய்ட்டு வரணும்; இல்லனா அம்மா திட்டுவாங்க! " என்றாள் சரிகா சம்மதமாக.

கலைவாணியின் அனுமதியுடன் அவரிடம் கொஞ்சம் பணமும் வாங்கிக்கொண்டு, அந்த வயதிற்கே உரிய உற்சாகத்துடன் மித்ரா தயராகி வெளியே வர, எங்கோ சென்றுவந்து அவனது பைக்கை நிறுத்திக்கொண்டிருந்த வசந்த் தங்கையை பார்த்து, "எங்க கிளம்பற வசு" என கேட்க, "சரிகா கூட ஷாப்பிங் சென்டர் போறேன்னா" என அவள் எதார்த்தமாகச் சொல்லவும்,"டூ வீலர்லயா?" எனக் கேட்டான் வசந்த்.

அதற்கு அவள் 'ஆமாம்' என தலையசைக்க, "உன் கிட்ட எத்தனை தடவ சொல்லியிருக்கேன்! வெளியில எங்க போனாலும் முகத்தை துப்பட்டவால கவர் பண்ணிட்டு போன்னு:

அறிவில்ல! ஒரு தடவ சொன்னா புரியாது!" என அவன் கோபமாக உறும, அவள் முகம் தொங்கிப்போனது.

அதைப் பார்த்துக்கொண்டே அங்கே வந்த சரிகா, "வசந்த்! உனக்கு கோவம் கூட வருமா?" என வியந்தவள், "அவளை எதுக்கு இப்படி திட்டின வசந்த்! இப்ப வெயிலா கூட இல்லியே" என அவள் தோழிக்கு பரிந்துவர" பதட்டத்துடன் தன் தலையை கோதிக்கொண்டவன், "இல்ல பொல்யூஷனுக்காக சொன்னேன்" என்றான் தணிந்த குரலில்.

பின் 'உன்ன அப்பறம் கவனிச்சுக்கறேன்' என மெல்லிய குரலில் சொல்லிவிட்டு, மித்ராவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு தன் வாகனத்தை நோக்கிப் போனாள் சரிகா.

***

கடைக்குச் சென்ற பிறகும் கூட, சரிகா தேர்ந்தெடுத்த எந்த ஒரு வாழ்த்து அட்டையிலும் திருப்தி  அடையாமல், எதாவது காரணம் சொல்லி நிராகரித்த மித்ரா,  இறுதியாகத் தானே ஒன்றைத் தேர்ந்தெடுக்க, அதில் 'ஹாப்பி பர்த்டே' என்று மட்டும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. சரிகாவிற்கும் அது பிடித்திருந்தாலும், "மித்து; இந்த கார்டு; டெட்டி பியர் போட்டு அழகாத்தான் இருக்கு; ஆனா ஹார்ட் போட்டிருக்கேடி; இதை அண்ணாவுக்கு கொடுக்கலாமா?" என்று கேட்க, "எல்லாம் கொடுக்கலாம் தப்பில்ல; உங்களுக்கும் பிடிச்சிருந்தா இதை வாங்குங்க அண்ணி!" என மித்ரா சொல்ல, அவளுடைய அண்ணி என்ற வார்த்தையில் மந்திரத்திற்கு கட்டுண்டதுபோல அதையே வாங்கினாள் சரிகா.

ஏனோ வேறு எந்த பொருளும் வாங்கத் தோன்றாமல், சரிகாவுடனேயே அவளுடைய வீட்டிற்கு வந்தவள், ஒரு அந்நிய ஆண்மகனுக்கு கொடுக்கப்போவது என்ற எண்ணமெல்லாம் தோன்றாமல், வெகு சாதாரணமான ஒரு நட்பின் அடிப்படையில் மட்டும், பிடிவாதமாகத் தானே அந்த அட்டையில் பிறந்தநாள் வாழ்த்தை எழுதி அவளிடம் கொடுக்க,

"ஏய் மித்து! எனக்கு என்னவோ இந்த டெட்டி பியரை பார்க்கும்போது உன்னை பாக்கற மாதிரியே இருக்குடி" என அவளைக் கலாய்த்தவாறே அதை எடுத்து பத்திரமாக வைத்தாள் சரிகா!

'ஐயோ அந்த டெட்டி நான்..னா அது கைல இருக்கற ஹார்ட்?!' என்ற கேள்வி அவள் மனதில் எழ, "ம்கூம்! நான் கரடின்னா நீங்க என்ன டைனோசரா! குர்ர்ர்ர்!" என சீறுவதுபோல் பாவனை செய்துவிட்டு அங்கிருந்து ஓடிப்போனாள் மித்ரா.

***

இரண்டு தினங்களுக்குப் பிறகு, சரிகா சென்னை செல்ல தயாராகிக் கொண்டிருக்க,

"என்னாதூ; நீங்க திரும்பி வர டென் டேஸ்க்கு மேல ஆகுமா?" என அதிர்ந்தாள் அவர்கள் வீட்டுக்கு வந்திருந்த மித்ரா.

"உங்க அண்ணணை விட அதிகமா ஜெர்க் ஆகற?" என்ற சரிகா, "என்ன செய்யறது மித்து பேபி! பொங்கல் பண்டிகை; அது முடிஞ்சதும் அண்ணாவோட பர்த்டே; இதெல்லாம் இருக்கே; எனக்கும் காலேஜ் ஹாலிடேவா இருக்கறதாலதான் இந்த ப்ளான்!" என சரிகா சொல்ல,

"ப்ச்! எனக்கும் ஹாலிடேதான் அண்..." அண்ணி எனச் சொல்ல வந்து, அருணா வந்து விடுவாரோ என்ற பயத்தில் அதைப் பாதியிலேயே நிறுத்தியவள், "எங்க சித்தப்பா, அத்தை அம்மாகூட பிறந்தவங்க எல்லாருமே இதே ஊரிலேயே இருக்காங்களா; அதனால நான் லீவுக்கு எங்கேயும் போக முடியாது; செமையா போர் அடிக்கும்;

சம்மர் ஹாலிடேஸா இருந்தாலும் எங்கேயாவது டூர் போகலாம். இப்ப அதுவும் இல்லை! என மித்ரா அலுத்துக் கொள்ள,

"டோண்ட் ஒர்ரி பேபி!" என்றவள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, கிசுகிசுப்பான குரலில், "கொஞ்ச நாள் வெயிட் பண்ணு!

எங்க மேரேஜ் முடிஞ்ச பிறகு; நான் எப்ப சென்னை போனாலும் உன்னையும் கூடவே கூட்டிட்டு போயிடறேன்" என்றாள் சரிகா உண்மையான அன்புடன்.

அதில் நெகிழ்ந்தவள், "லவ்யூ சரிகாண்ணி" என்றவாறு அவளை அணைத்துக் கொண்டாள் மித்ரா.

***

சரிகா அவளுடைய பெற்றோருடன் சென்னை சென்றுவிட பொழுதே போகவில்லை மித்ராவுக்கு.

பள்ளி திறந்த பிறகு தொடர்ந்து  திருப்புதல் தேர்வுகள் இருப்பதால், அறைக்குள்  மித்ரா படித்துக் கொண்டிருக்க, பொங்கலுக்காக வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார் கலைவாணி.

மாரியும் மகளுடைய வீட்டிலிருந்து திரும்பியிருக்க, அவருக்கு உதவிசெய்ய அங்கே வந்திருந்தார்.

ஒட்டடையை சுத்தம்செய்துகொண்டே, "ஏன் வாணிம்மா! வசந்து தம்பிக்குத்தான் படிப்பு முடியப் போகுதே;

வேலையும் கிடைச்சிடுச்சுன்னு சொன்னிங்களே;

பேசாம ஒரு பொண்ண பார்த்து கல்யாணம் முடிச்சிடுங்க; அதுதான் நல்லது" என்றார் மாரி.

அதைக் கேட்டு கலகலவென சிரித்தவர், "படிப்பு முடியறதுக்குள்ள உன் பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சதையே என்னால ஏத்துக்க முடியல;

நீ என்டான்னா என் பையனுக்கு செய்ய சொல்றியே மாரி;

அதோட  அவனுக்கு இன்னும் கல்யாண வயசே வரலியே" என்றார் வாணி.

வார்த்தைகளுக்கு முலாம் பூசி, தேன் சொட்டப் பேசி அறியாதவர் ஆதலால் "புள்ளைங்களுக்கு படிப்பு முக்கியம்தான் இல்லனு சொல்லல;

ஒழுக்கம் அதைவிட முக்கியம் இல்ல;

இதையெல்லாம் ஒரளவுக்கு பார்க்க வேண்டியதுதான்; மத்தபடி கல்யாணத்துக்கும் வயசுக்கும் என்ன சம்மந்தம் வாணிம்மா! புள்ளைங்க வயசுக்கு வந்திருந்தா போறாது?

ரொம்பநாள் இப்படியே உட்டாலும் தறிகெட்டு ஊர் மேய ஆரமிச்சிடுதுங்க" என அவர் மனதுக்குச் சரி என்று பட்டதை அப்படியே பட்டென்று சொல்லிவிட்டார் மாரி.

மாரி இப்படிப் பேசக்கூடியவர்தான் என்பது தெரிந்திருந்ததால், அவர் வசந்தை பற்றி குறிப்பிடவில்லை, பொதுப்படையாகத்தான் பேசுகிறார் என்ற எண்ணத்தில், கோபம் கொள்ளாமல், "விட்டா பொம்பள புள்ளைங்க வயசுக்கு வந்தா சடங்கு செய்யற மாதிரி

ஆம்பிள  புள்ளைங்களுக்கும் செய்யணும்னு சொன்னாலும் சொல்லுவ;  ஆளை விடு ஆத்தா; எப்படி இருந்தாலும் இன்னும் மூணு வருஷத்துக்கு இந்த பேச்சை எடுக்க முடியாது; வா வேலையைப் பார்க்கலாம்" என முடித்தார் வாணி.

மேற்கொண்டு பேச இயலாமல் தன் கைவேலையைத் தொடர்ந்தார் மாரி.

அவர் எண்ணம் மட்டும் நடந்த சம்பவங்களை எண்ணியே சுழன்றுகொண்டிருந்தது.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் அவர் கட்டிட வேலை செய்யும் தளத்தில், அவர் கீழே விழுந்து சிறிதாக அடிபட்டிருக்கப் பாதியிலேயே வீட்டுக்கு வந்துவிட்டார் மாரி.

அப்பொழுது வாணியின் வீட்டிலிருந்து நிரஞ்சனா அவசர அவசரமாக வெளியில் செல்வதை மாடியிலிருந்து பார்த்தவர், அந்த நேரத்தில் வீட்டில் ஒருவரும் இருக்க வாய்ப்பில்லையே என்ற கேள்வியுடன் கீழே வந்து பார்க்க,  வரவேற்பறையில் அமர்ந்து, வசந்த் மட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"என்ன வசந்து! அந்த கடைசி வீட்டுப் புள்ள வந்துட்டு போகுது போல?" என அவர் எதார்த்தமாகக் கேட்க, சற்று தடுமாறியவன், "இல்ல மாரிம்மா! வீடு திறந்திருக்கறத பார்த்துட்டு அம்மாவ தேடி வந்தாங்க; அவங்க இல்லன்னு சொன்னேன்; போயிட்டாங்க" என்றான் கோர்வையாக.

அந்தப் பெண் அவனுடன் சில வயது மூத்தவள் என்ற காரணத்தால் அவனைச் சந்தேகிக்காமல், அதை முழுமையாக நம்பினார் மாரி.

மேலும் நிரஞ்சனா வேலை கிடைத்து சென்னைக்குச் சென்றுவிடவே அதை மறந்தே போனார்.

ஆனால் அவள் தற்கொலை செய்து கொள்வதற்கு சில தினங்களுக்கு முன், மாலை மறைந்து இருள் பரவத்தொடங்கும் நேரம், அவர்கள் வீட்டிலிருந்து சற்று தள்ளி அமைந்திருக்கும்  ஆள் அரவமற்ற பகுதியில் அந்த பெண் அவனிடம் ஏதோ கெஞ்சுவதையும், அவன் அவளிடம் அலட்சியமாக நடந்துகொள்வதையும் பார்த்துப் பதறிப் போனார் மாரி.

அப்பொழுதும் கூட அதைத் தவறாக எண்ணாமல் வயதுக் கோளாறில்தான் ஏதோ செய்கிறான் சரியாகிவிடும் என எண்ணியவர் 'வர வர இந்த பொண்ணுங்களுக்கு பயமே இல்லாம போச்சு; இப்படி தனியா கிளம்பி வந்துடுதுங்க! இதுங்கள்லாம் எங்க உருப்புட போகுதுங்க' என மனதிற்குள் அந்த பெண்ணைத்தான் சபித்தார் அவர்.

ஆனால் ஓரிரண்டு நாட்களிலேயே, மாரி வேலை முடிந்து பேருந்தில் வந்து கொண்டிருக்கும் போது, போக்குவரத்து நெரிசலில் அந்த பேருந்தை ஒட்டி வந்த பைக்கில் அவர் பார்வை செல்ல, அது வசந்துடைய பைக் என்பது அவருக்குத் தெளிவாகப் புரிந்து போனது.

தலைக் கவசம் அணிந்திருந்தாலும் அதை ஓட்டுவது வசந்த்-தான் என்பதையும் சந்தேகமின்றி தெரிந்து கொண்டார் அவர்.

முகத்தைத் துப்பட்டாவால் முற்றிலுமாக மூடிக்கொண்டு அவன் பின்னால் அமர்ந்திருந்த பெண்ணைத்தான் அவருக்கு அடையாளம் தெரியவில்லை.

ஆனால் பேருந்திலிருந்து இறங்கி வீடு வந்து சேர்ந்தவுடன், அவரை பின் தொடர்ந்து வந்து, அவர்கள் வீட்டு காம்பௌண்ட் கேட்டை திறந்து கொண்டு சரிகா  வீட்டுக்குள் போக, அவள் அணிந்திருந்த உடை, வசந்துக்கு பின்னால் உட்கார்ந்திருந்த பெண் அவள்தான் என்பதைச் சொல்லாமல் சொல்லியது அவருக்கு.

அயர்ந்தே போனார் மாரி.

அவ்வப்பொழுது இதையெல்லாம் வாணியிடமோ ராகவனிடமோ சொல்லலாம் என எண்ணினாலும் அதற்கு நா எழவில்லை மாரிக்கு.

அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போன்று, ஒரு வாரத்திற்குள்ளாகவே நிரஞ்சனா தற்கொலை செய்துகொள்ளவும், விபரீதத்தை முற்றிலுமாக உணர்ந்தார் மாரி.

அன்றே எதேச்சையாக மாடிக்கு வந்த வசத்திடம், "வசந்து நீ செய்யறது சரி இல்ல! அந்த புள்ள தற்கொலை பண்ணிக்க நீதான காரணம்! நீ அந்த புள்ள கூட பேசிட்டு இருந்ததை நானே கண்ணால பார்த்தேன்" என அவர் கடுமையுடன் கேட்க,

முதலில் உறுத்து விழித்தவன், "மாரிம்மா! நீங்களா எதையாவது கற்பனை செஞ்சுக்காதிங்க;

அவங்க கூட நான் சாதாரணமா ஃப்ரெண்ட்ஷிப்பாதான் பழகினேன்; அவங்க தப்பா புரிஞ்சிகிட்டு சூசைட் பண்ணிக்கிட்டா நானா பொறுப்பு" என்றான் மழுப்பலாக.

"அப்படினா அந்த சரிகா பொண்ணு?" என அவர் கேள்விகளால் குடைய, "மாரிம்மா! எனக் கோபமாக அழைத்தவன், "அது நம்ம பக்கத்துவீட்டு பொண்ணு அவ்வளவுதான்" என்றான். தெடர்ந்து, "இந்த தேவை இல்லாத ஆராய்ச்சியெல்லாம் நீங்க செய்ய தேவை இல்ல!

நீங்க இதையெல்லாம் எங்க அம்மா கிட்ட சொன்னால் கூட நான் கவலைப் படமாட்டேன்; அவங்க எனக்குத்தான் சப்போர்ட் பண்ணுவாங்க

ஏதோஅவங்க புண்ணியத்துல இங்க வந்து ஒண்டிட்டு இருக்கீங்க; அதை காப்பாத்திக்கோங்க;

உங்களுக்கும் வயசு பொண்ணு இருக்கு; அவளைப் பத்திரமா பார்த்துக்கோங்க முதல்ல" என அவரை எச்சரிக்கும் விதமாய் சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டு, குற்ற உணர்ச்சி என்பதே சிறிதும் இன்றி அங்கிருந்து சென்றான் வசந்த்.

அதனால்தான் அவ்வளவு அவசரமாக மகளுக்குத் திருமணத்தை செய்து முடித்தார் மாரி.

இருந்தும் வாணியிடம் அன்று இதனை நேரடியாகச் சொல்லத் துணிவில்லை அவருக்கு. இயலாமையுடன் அங்கிருந்து சென்றார் அவர்.

***

அவர்கள் இந்த ஊருக்கு வந்த சிறிது நாட்களுக்குள்ளாகவே இப்படி ஒரு காதல் அவனிடம் அவளுக்கு எப்படி உண்டானது என்றே புரியவில்லை சரிகாவுக்கு!

அவன் சொன்னபடியெல்லாம்  ஆடிக்கொண்டிருக்கிறாள் அவள் என்பதும் அவளுக்கு நன்றாகவே புரிந்துதான் இருந்தது.

அவனுடன் பேசிக்கொண்டிருப்பதிலேயே ஒரு இனிமையை உணர்ந்திருந்தாள் அவள். அது கூட காரணமாக இருக்கலாமோ என்று தோன்றியது அவளுக்கு.

தீபன் மட்டும் அருகிலிருந்திருந்தால், ஒரே பார்வையில் அனைத்தையும் கண்டுபிடித்திருப்பான் என்பதை நன்றாகவே உணர்ந்திருந்தாள் சரிகா!

இந்த முறை ஊருக்குச் சென்றிருந்த சமயம் கூட, "படிப்பு முடிஞ்ச உடனே உனக்குக் கல்யாணம் செய்யணும்னு அம்மா சொல்றாங்க;

உனக்கு என்ன மாதிரி மாப்பிள்ளை வேணும்னு சொல்லு!" என அவன் கேட்க, திக்கி திணறி, "இப்ப கல்யாணத்துக்கு என்ன அவசரம் அண்ணா! எனக்கு பீ.ஜீ படிக்கணும்" என்று சொன்னாள் அவள்.

அவளுடைய முகத்திலிருந்து எதைப் படித்தானோ, "நீ யாரையாவது லவ் பண்றியா சரிகா!" என அவன் தீவிரமாகக் கேட்க, "அண்ணா!" என பதறியவள், "என்ன...ணா இப்படியெல்லாம் கேக்கறீங்க?" என கேட்க, "இல்லம்மா! அப்படி ஏதாவது இருந்தால்; ப்ளைண்டா வேண்டாம்னு சொல்லாம; ஒத்துவந்தால் பேசி முடிக்கலாம்னுதான் கேட்டேன்" என்றான் தீபன்.

அவனுடைய முகத்திலிருந்து எதையும் கண்டுபிடிக்க முடியாமல், "அப்படிலாம் எதுவும் இல்ல...ணா" என்று சொல்லிவிட்டாள் சரிகா.

நாமக்கல் வந்ததும் முதல் வேலையாக அனைத்தையும் வசந்த்திடம் சொல்லி, "படிப்பு முடிஞ்சதும் பெரியவங்க கிட்ட பேசி பொண்ணு கேளுங்க!" என அவள் சொல்லத் தீவிரமாய் ஏதோ யோசித்தவன், மௌனமாகத் தலை அசைத்துவிட்டுப் போனான் வசந்த்.

அன்று மாலையே அவளை மறுபடியும் சந்தித்து, "நீ சொன்ன மாதிரியே வீட்டுல சீக்கிரம் பேசறேன்;

எனக்கு இன்னும்கொஞ்ச நாளில் எக்ஸாம்ஸ் ஆரம்பிச்சிடும்.

முடிஞ்சதும் நயன் மந்த்ஸ் டிரைனிங்குக்காக பெங்களூர் போக வேண்டியதாக இருக்கும்; நமக்கு மீட் பண்ண நேரமே கிடைக்காது;

அதனால ஒரே ஒரு நாள் என்கூட டைம் ஸ்பென்ட் பண்ணு போதும்" என அவன் உருகி கேட்டுக்கொண்டதால், அவளுடைய அம்மா அருணாவிடம், "ஃப்ரெண்ட் வீட்டுல எல்லாரும் சேர்ந்து க்ரூப் ஸ்டடி பண்ண போறோம்! ஈவினிங் சிக்ஸ் குள்ள வந்திடுவேன்" என பொய்யான ஒரு காரணத்தை சொல்லிவிட்டு, காலை ஏழு மணிக்கே கிளம்பி, முகத்தைத் துப்பட்டாவால் மூடிக்கொண்டு, பெரிய கூலிங் க்ளாஸ் அணிந்து தன்னை மறைத்துக்கொண்டு, வசந்த் குறிப்பிருந்த இடத்திற்கு வந்து காத்திருந்தாள் சரிகா!

அவர்கள் காதலைப் பற்றி மித்ராவுக்கு தெரிந்திருந்தாலும், இவர்களுடைய இந்த ஒளிவு மறைவு நடவடிக்கைகள் எதுவும் அவளுக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டாள் சரிகா வசந்தின் எச்சரிக்கையால்.

ஏதேதோ யோசனைகளுடன் அவள் நின்றுகொண்டிருக்க, அவளுக்கு அருகில் விலை உயர்த்த ஒரு காரை கொண்டுவந்து நிறுத்தி, அதிலிருந்து இறங்கினான் வசந்த்.

முதலில் திகைத்தவள், அவனைப் பார்த்ததும் புன்னகைத்தவாறு, "இது பென்ஸ் இல்ல! இதுல எப்படி நீங்க?" என அவள் திகைப்புடன் கேட்க,

"இது என்  ஃப்ரெண்டோட கார்" என்றவன், "ஒரு லாங் ட்ரைவ்! உன்னை இதுல கூட்டிட்டு போகலாம்னு எடுத்துட்டு வந்தேன்" என்று சொல்லிக்கொண்டே முன் பக்க கதவைத் திறந்துவிட, அதில் ஏறி உட்கார்ந்தவள் அந்த ஆண் மகனிடம் கொண்டது பூரணமான நம்பிக்கை; நம்பிக்கை; நம்பிக்கை மட்டுமே.

அந்த வாகனம் வேகம் எடுத்ததும், அவள் ஏதேதோ கதைகள் பேசிக்கொண்டே வர, அவன் 'ம்ம்!" என்று மட்டும் சொல்லிக்கொண்டு வரவும்,அவனுடைய முகத்தை பார்த்தவள் அவனது கவனம் மொத்தமும் பாதையிலேயே இருப்பதால்தானோ என எண்ணிக்கொண்டாள் சரிகா.

சில நிமிட பயணத்திற்குப் பிறகு ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி இறங்கியவன். கையில் இரண்டு குளிர்பான டின்களுடன் திரும்ப வந்தான்.

அதில் அவளுக்குப் பிடித்த ஃப்ளேவரை அவளிடம் நீட்ட, அவனுடைய புரிதலை எண்ணி வியந்தவளாக  கடைசி சொட்டு வரைக்கும் அதனைப் பருகினாள் சரிகா.

***

கன்னங்களைத் தட்டி, "சரிகா! ஏய் சரிகா! கண்ணைத் திறந்து பாரு" என்ற வசந்தின் குரல் மூளையை எட்ட, மிக முயன்று கண்களைத் திறந்தாள் சரிகா.

உள்ளே முள்ளை வைத்தது தைத்ததுபோல் இரண்டு கண்களும் எரிய, உடலில் மொத்த சக்தியும் வடிந்தது போல இருந்தது அவளுக்கு.

எங்கே இருக்கிறோம் என்பதுகூட சில நிமிடங்கள் வரை அவளுக்குப் புரியவில்லை.

அவளுக்கு நேரே நீண்ட தண்ணீர் பாட்டிலை வாங்கி மொத்த தண்ணீரையும் பருகியவள், கொஞ்சம் உணர்வு வரப்பெற்றவளாகச் சுற்றிலும் பார்க்க, நட்சத்திர விடுதியின் அறைபோன்ற அதி ஆடம்பரமான அறையில், உடல் மொத்தமும் உள்ளே புதைந்துபோகும் படியான மெத்தையில், தான் இருப்பது புரிந்தது அவளுக்கு.

மெதுவாக எழுத்து உட்கார்ந்தவள், தான் என்ன மாதிரி ஒரு அலங்கோல நிலையில் இருக்கிறோம் என்பதை உணர்ந்தபொழுது, உடல் மொத்தமும் தீ பற்றி எறிவது போன்று துடித்துப்போன சரிகா அருகே இருந்த போர்வையை இழுத்து தன்னை மூடிக்கொண்டு, "வசந்த்!" என தன சக்தி அனைத்தையும் திரட்டி கத்தவும், "ஷ்! எதுக்கு இப்படி கத்தற! நீ எவ்வளவு சத்தம் போட்டாலும் இங்க ஒரு ஈ காக்கா கூட வராது" என்றவன் அவளது முகத்தை வன்மையாகத் திருப்பி அவனது கைப்பேசியில் ஒரு காணொளியை ஓடவிட, அது என்ன என்பதை அவள் புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது.

அதில் அவளை ஆபாசமாகப் படம் எடுத்திருந்தான் வசந்த்.

தொடர்ந்து அதைப் பார்க்கப் பிடிக்காமல், அறுவறுத்து அவள் முகத்தைத் திருப்பிக்கொள்ள, மறுபடியும் அவளது கன்னத்தை அழுத்தமாகப் பிடித்து திருப்பி, நிர்பந்தப்படுத்தி அவன் அந்த காணொளியை பார்க்க வைக்க, அதில் அவளுடன் இருப்பது வசந்த் இல்லை என்பதை உணர்ந்து கதறியவள், "உன்னை நம்பி வந்த என்னை ஏண்டா இப்படி செஞ்ச! யாருடா அவன்!" என அவள் நா குழறக் கேட்க, "ஓஹ்! அவன் யாருன்னு உனக்கு அவசியம் தெரியணுமா! சொல்றேன் கேட்டுக்கோ!" என்றவன், "அவன்தான் மினிஸ்டர் புஷ்பநாதனுடைய சன் ஜவஹர்! என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்" என்றான் வசந்த் வக்கிரமாக.

You cannot copy content