You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

KPN's Poovum Naanum Veru - 32

Quote

இதழ்-32

நொடிக்கும் குறைவான நேரத்திற்குள் சந்தோஷ் தன்னை சமாளித்துக்கொண்டு, "தீபன்! நான் இப்ப சந்தோஷ் இல்ல; தீபனோட ஃப்ரெண்ட் இல்ல! சரிகாவோட ஹஸ்பண்டும் இல்ல; ஜஸ்ட் இந்த வீடியோவை எடிட் பண்ணப்போற ஒரு டெக்கீ அவ்ளோதான்;

இந்த வீடியோவை பார்க்கறதால சரிகா மேல எனக்கு இருக்கற அன்பு மாறிடப்போறதில்ல!

ஏன்னா இதோட பாதிப்பை பக்கத்துல இருந்து பார்த்தவன் நான்!" என்று சொல்லிவிட்டு, "ஹால் பிரிட்ஜ்ல கூலா எதாவது இருந்தா எடுத்துட்டு வா!" எனச் சொல்ல அங்கிருந்து சென்றான் தீபன்.

அவன் ஏதோ குளிர் பானத்துடன் திரும்ப வர, அதற்குள் வேலையை முடித்திருந்தான் சந்தோஷ்.

அந்த பாட்டிலைத் திறந்து அவனிடம் நீட்டியவாறு, "சாரி சந்தோஷ்; என்னோட பிடிவாதத்தால உங்க எல்லாரையும் ரொம்ப கஷ்டப்படுத்தறேன் இல்ல?" என தீபன் வருந்த, "லூசு மாதிரி பேசுற! நானும் ஒரு பெண் குழந்தைக்கு தகப்பன் டீப்ஸ்! நாளைக்கு நம்ம சாதுக்குட்டி இந்த சொசைட்டில பயமில்லாம  நடமாட வேண்டாமா!

இதை சமூக அக்கறைனு மழுப்பினாலும் ஓகே! சுயநலம்னு ஓப்பனா சொன்னாலும் ஓகே! இந்த நேரத்துல இது ரொம்ப அவசியம் மச்சான்!

ஸோ.. நோ ஹர்ட் பீலிங்ஸ்!" என முடித்தான் சந்தோஷ்.

பெருமையுடன் நண்பனை அணைத்துக்கொண்டான் தீபன், "லவ் யூ டா மாமா!" என்றவாறு.

***

மிரட்டி பாலியல் ரீதியாக பெண்கள் துன்புறுத்தப்படும் சில காணொளிகளுடன்,  கடவுச்சீட்டு எண் ஆதார் எண் உட்பட அந்த காணொளியில் இடம்பெற்றிருக்கும் ஆண்கள், மற்றும் ஜவஹர், திவாகர்  மேலும் சில பெண்கள் உட்பட அதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்பந்தப்பட்டிருக்கும் குற்றவாளிகளின் ஒவ்வொருவரையும் பற்றிய அனைத்து தகவல்கள்;

அந்த காணொளிகள் யார் யாருக்கெல்லாம் பகிரப்பட்டிருக்கிறது என்கிற தகவல்கள்;

அந்த பிரச்சினையில் சிக்கி பல பெண்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனதற்கான ஆதாரங்கள் என அனைத்தையும் எல்லா சமூக வலைத்தளங்களிலும் 'அதிகார வர்க்கத்தின் அராஜகம்!' என்ற தலைப்பில். 'டீ.பீ. லீக்ஸ்' பெயரில் அன்றைய நள்ளிரவே பதிவேற்றம் செய்தான் தீபன்.

அடுத்த நாள் பொழுது புலர்வதற்குள்ளாகவே, அந்த குற்ற சம்பவம் ஒரு செய்தியாக அனைத்து ஊடகங்களிலும் குறிப்பாகத் தொலைக்காட்சிகளில், 'பிரேக்கிங் நியூஸ்!' என்ற பெயரில் ஒவ்வொருவருடைய வீட்டுக்குள்ளும் சென்று அன்றைய நாளை பரபரப்பாக்கிக்கொண்டிருந்தது.

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் அந்த காணொளிகளை பார்த்துவிட்டு, சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் என பலர் தாமாகவே முன்வந்து வெவ்வேறு பகுதிகளில், அந்த குற்ற செயலில் ஈடுபட்டவர்கள்  மீது வழக்கு தொடுத்தனர்.

அன்றே சகோதரன் மற்றும் கணவனுடன் நேரில் சென்று, அந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியிடம் அவளுக்கு ஏற்பட்ட வன்கொடுமை பற்றி, நேரடியாகப் பாதிக்கப்பட்டவள் என்கிற முறையில் புகார் அளித்தாள் சரிகா.

மேலும் அந்த வழக்கை எடுத்துக்கொள்ளாமல், குற்றவாளிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, அலட்சியமாக நடந்துகொண்டதுடன், தீபனை அவர்களிடம் சிக்க வைத்து வன்முறை தாக்குதலுக்கு உட்படுத்தவும் காரணமான அதிகாரியின் பெயரிலும் அவருக்குத் துணை போனவர்கள் பெயரிலும் தீபன் ஒரு புகார் கொடுத்தான்.

அவனைக் கடத்தி சென்று அடைத்துவைத்துத் துன்புறுத்திய ஜவஹரின் அடியாட்கள் ஒவ்வொருவர் பெயரிலும் அவர்களுடைய அடையாளத்துடன் அவன் புகார் கொடுக்கவும், அதனை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லாமல் போனது அங்கே.

'இவ்வளவு நாட்களாக இல்லாமல், இப்பொழுது ஏன் இந்த புகாரை அளிக்கிறீர்கள்?' என்ற கேள்வி எழவும், "அந்த சமயத்துல நான் கொடுத்த கம்பளைண்ட்டை வாபஸ் வாங்கற சூழ்நிலைக்கு என்னை தள்ளிட்டாங்க!

என் கிட்ட இருந்த வீடியோ ஆதாரங்களையும் அழிச்சிட்டாங்க!

இப்ப டீ.பீ லீக்ஸ் வெளியிட்டிருக்கும் வீடியோஸ் பார்த்த உடனே, இதே ஸ்க்காம்ல என் தங்கையும் சிக்கியிருந்ததாலதான் இந்த கம்பளைண்ட்டை கொடுக்கறேன்!" எனத் தெளிவாகப் பதில் சொன்னான் தீபன்.

மேலும் எங்கெங்கெல்லாம் அழுத்தம் கொடுக்க முடியுமோ அங்கெல்லாம் அழுத்தம் கொடுத்து, அந்த வழக்கைத் திசை திருப்ப விடாமல் பார்த்துக்கொண்டான் அவன்.

இறந்தவர்கள் தவிர, மீதம் இருக்கும் ஜவஹர், அவனுக்கு துணை நின்ற காரணத்திற்காக திவாகர் ஆகியோரை நீதி மன்ற காவலில் எடுத்து விசாரணையை தொடங்கியது காவல் துறை.

புஷ்பநாதன் அதில் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்ற காரணத்தால், அவர் மட்டும் அதிலிருந்து தப்பித்துக்கொண்டார்.

இந்த பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் பெண்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களில் ஒருவரது பெயர் கூட வெளியில் வராதவாறு இந்த பாலியல் குற்ற வழக்கு புலன் விசாரணை செய்யப்பட்டது.

***

வெகு நாட்களாகச் சரியான ஆதாரம் இல்லாமல், ஜவஹர் அவனது நண்பர்களுடன் சேர்ந்து செய்துவந்த அந்த பாலியல் குற்றங்களை வெளி உலகிற்குக் கொண்டுபோக முடியாமல் தவித்துக்கொண்டிருந்தான் தீபன்!

வசுமித்ரா கொண்டுவந்து கொடுத்த வசந்துடைய மடிக்கணினி மற்றும் சிறிய வீடியோ கேமரா ஆகியவற்றை உயிர்ப்பித்துப் பார்க்கவும், அனைத்துமே அவர்கள் செய்துவந்த கேவலமான செயல்களுக்குப் பிரத்தியேகமாக உபயோகிக்கப்பட்டவை எனத் தெளிவாகத் தெரிந்தது.

அவற்றுடன் இருந்த கைப்பேசிகள் எல்லாமே முன்பு தீபனால் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின் மாற்றப்பட்டவை. மறுபடியும் அவர்கள் கைக்கே சென்றிருக்கிறது.

அது தவிர வசந்த் உபயோகப்படுத்திய கைப்பேசியும் அதிலிருந்தது.

அதில் தீபனை அவர்கள் அடித்துத் துன்புறுத்தியதைப் பதிவு செய்த காணொளியும் இருத்தது.

அதை மட்டும் அழித்துவிட்டான் தீபன்.

அவை அனைத்துமே காலாவதியாகிப்போன பழைய தொழில்நுட்பத்துடன் இருந்ததால் அவற்றை மீட்டு எடுக்கக் கொஞ்சம் தாமதமானது தீபனுக்கு.

என்றைக்காக இருந்தாலும் அவற்றை வெளியுலகிற்குத் தெரியப்படுத்தி அந்த குற்றவாளிகளை மட்டுமின்றி அவர்களுக்குத் துணை போன்றவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தியே தீரவேண்டும் என்பது தீபனின் வெறித்தனமான எண்ணமாக இருந்தது.

அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும்போது அவனுக்குத் துணை நிற்க வேண்டும் என சரிகா மற்றும் சந்தோஷ் இருவரும் உறுதியுடன் முடிவு செய்திருந்தனர்.

அதன்படி எல்லாமே நடந்து முடிந்திருந்தது.

***

அடுத்து வந்த நாட்களில், மகளிர் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், மாணவர் அமைப்புகள், திரைத்துறை பிரபலங்கள், அரசியல் கட்சிகள் எனக் கடுமையான போராட்டத்தில் இறங்க, புஷ்பநாதன் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் என்ற காரணத்தினால் முதலில் சற்று அவரை பாதுகாக்க முயன்ற அவர் சார்ந்திருத்த கட்சியின் தலைமையும் கூட நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து பின்வாங்கிவிட, அவர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகும் நிலைமை உருவாகிப்போனது.

அந்த சம்பவத்தில் சிக்கியிருந்த பெண்களில் பலர் திருமணம் செய்துகொண்டு நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்க, தம்மை வெளிப்படுத்திக்கொள்ள முன்வராத போதிலும், அந்த பாதிப்பிலிருந்து வெளிவரமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் சில பெண்களும், தற்கொலை செய்துகொண்ட சில பெண்களின் குடும்பத்தினரும் துணிந்து வந்து அவரவர் பங்கிற்குப் புகார் அளிக்கவோ அல்லது சாட்சி சொல்லவோ செய்ததால், குற்றவாளிகளுக்கு ஜாமீன் கூட மறுக்கப்பட்டது.

மகன்களை வெளியே கொண்டுவருவதற்கான ஜாமின் மனுவை லலிதா நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த காரணத்தால், அவரே நேரடியாக நீதிமன்றத்திற்கு வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட, அவரை சூழ்ந்து கொண்டு பத்திரிகையாளர்களும் பொதுமக்களும் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் நொந்தே போனார் லலிதா.

நாளிதழ்களில் எல்லாம் விளம்பரப்படுத்தப்பட்டுவிட்ட பிறகு ஜவஹருக்கு ஏற்பாடு செய்திருந்த திருமணம் வேறு நின்றுவிட, அரசியல் வாழ்க்கை குடும்ப வாழ்க்கை இரண்டிலும் மிக மோசமாக தோற்றுப்போய் வெளி உலகில் தலை காட்ட இயலாமல், அந்த இரண்டு மூன்று தினங்களுக்குள்ளாகவே புஷ்பநாதன் உடல் அளவிலும் மனதளவிலும் ஒடுங்கிப் போய் இருக்கவும்,  மேலும் மகன்களுக்கான ஜாமீன் வேறு கடுமையாக மறுக்கப்பட்டிருக்கும் சூழ்நிலைக்கு வந்த பிறகுதான், பணமும் படாடோப வாழ்க்கையும் கிடைத்தால் போதும் என்று குற்றச்செயலில் ஈடுபடும் கணவரையும் பிள்ளைகளையும் தட்டி கேட்காமல் அவர்களை வளர்த்துவிட்டு வேடிக்கை பார்த்ததற்காக முதன்முதலாக மனம் வருந்தினார் அவர் காலம் கடந்துபோன பிறகு.

அடுத்த நாளே நீதி மன்றத்தின் வழிகாட்டுதலின் பெயரில் முதற்கட்ட மருத்துவ பரிசோதனைக்கு ஜவஹர் உட்படுத்தப்படவும், அதில் அவன் ஆண்மை இழந்து இருப்பது தெளிவாகக் கண்டறியப்பட்டது.

குடும்பத்தினருக்குக் கூட தெரியாமல் அதுவரை அவன் காப்பாற்றிவந்த அவனது இந்த குறை வெட்டவெளிச்சமாக வெளிப்படவும், 'அது ஊடகங்களில் வெளி வந்தால் என்ன செய்வது?' என்ற பயத்தில், அதை எதிர் நோக்கும் துணிவு இல்லாமல், சிறையில் இருக்கும் குளியல் அறையிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டான் ஜவஹர்.

அந்த இக்கட்டான நேரத்திலும் கூட அவன் செய்த தவறுகளுக்காக வருந்தி அவன்  அந்த முடிவை எடுக்கவில்லை. அவனது குறையை எண்ணி மட்டுமே பயந்து போய் தற்கொலை செய்துகொண்டான் அந்த இழி பிறவி!

***

You cannot copy content