You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

KPN's Poovum Nanum Veru - 1

Quote

பூவும் நானும் வேறு!

இதழ்-1

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்

ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய

உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே

இருப்பளிங்கு வாராது இடர்.

படிக நிறமும் பவளச் செவ்வாயும்

கடிகமழ்பூந் தாமரை போற் கையும் - துடி இடையும்

அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்

கல்லும் சொல்லாதோ கவி. 

அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த காரக்குழம்பின் மணத்துடன் இணைந்து,  சமையற்கட்டிலிருந்து கசிந்து இனிமையைப் பரப்பிக்கொண்டிருந்த மகள் வசுந்தராவின், வசந்தகால குயிலினை ஒத்த குரலில் லயித்தவராக, செய்தித்தாளைக் கையில் வைத்துக்கொண்டே மெய்மறந்துபோய் உட்கார்ந்திருந்தார் செல்வராகவன்.

மிகச்சிறிய வரவேற்பறையுடன் கூடிய ஒற்றை படுக்கை அறை கொண்ட சிறிய வீடு அது. சமையற்கட்டிலிருந்து பார்த்தால் அந்த வரவேற்பறை முழுவதுமாக தெரியும் என்பதினால், கம்பரின் கலைமகள் துதியை பாடிக்கொண்டே சமையலில் ஈடுபட்டிருந்த வசுந்தரா, தந்தையைக் கவனித்தவளாக, வெளியில் வந்தாள்.

"என்னப்பா! நியூஸ் பேப்பரை கையில் வெச்சிட்டே, அப்படி என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க!" என அவள் கேட்கவும், அதில் சிந்தனை கலைந்தவராக, "கம்பர் சொன்னது போல் அந்த கலைமகளை துதித்தால், கல்லும் கூட கவி சொல்லுமோ என்னவோ தெரியாது. ஆனா... நீ பாடின இந்த பாட்டை கேட்டால், அந்த கல்லும் கரைஞ்சு போகும் வசும்மா! நானெல்லாம் எம்மாத்திரம்!" என்றார் அவர் நெகிழ்ச்சியுடன்.

"அப்பா இதெல்லாம் கொஞ்சம் ஓவர்! “காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு” சொல்லுவாங்க இல்ல? இதுவும் அது போலத்தான். மகள்கள் என்ன செய்தாலும் அப்பாக்கள் கரைஞ்சுதான் போவாங்க! நீங்க மட்டும் விதி விலக்கா என்ன?" என அவள் கேட்க,

"உண்மையிலேயே நீ பொன் குஞ்சுதான் வசும்மா! அதில் சந்தேகமே இல்ல!" என்றார் அவர் வாஞ்சையுடன்.

அதற்குள் அடுப்பில் வைத்திருந்த குக்கர் ஒலியை எழுப்பி, 'என்னைக் கொஞ்சம் கவனி' என்று சொல்ல, "ஐயோ விட்டா நீங்க இந்த பாட்டை இன்னைக்கு முழுக்க பாடிட்டே இருப்பீங்க!" எனச் சொல்லிக்கொண்டே போய் அடுப்பை அணைத்தாள் வசுந்தரா.

பின்பு அங்கே இருந்த குளிர்சாதனப் பெட்டியிருந்து காய்கறிகளை எடுத்தவள், அங்கே போடப்பட்டிருந்த ஒற்றை கட்டிலில்அமர்ந்திருந்த அவளுடைய தந்தைக்கு அருகில், தரையில் உட்கார்ந்து அவற்றை நறுக்கியவாறே, "இன்னைக்கு நியூஸ் பேப்பர்ல என்ன முக்கிய செய்தி!" எனக் கேட்க,

"ஒரு கட்சி மேலே இன்னொரு கட்சி, சேற்றை வாரி இறைப்பதைத் தவிர, வேற என்ன முக்கிய செய்தி வாழுது!" என அலுத்துக்கொண்டவர், ஒரு பெட்டிச் செய்தியைப் படித்துவிட்டு, "பாறேம்மா! டீ.பின்னு ஒருத்தன், 'டார்க் வெப்' ஆமே... அதை யூஸ் பண்ணி, பொண்ணுங்களுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்கானாம். ஆனா அவன் யாரு என்னனு இதுவரைக்கும் யாராலயும் கண்டுபிடிக்க முடியலையாம்!" என்று வியந்தார் மகளிடம்.

"அது என்னவோப்பா! டீப் வெப்ங்கறாங்க, டார்க் வெப்ங்கறாங்க, ஆனியன் ரூட்டிங் அப்படீங்கறாங்க... எனக்கு ஒண்ணும் புரியல.

ஆனா அதை யூஸ் பண்ணி எவ்வளவோ கெடுதல்களை செய்யறாங்கன்னு மட்டும் தெரியும். அதுல நல்லதுன்னா நம்ப முடியலையே!" என்றாள் மகள் சந்தேகத்துடன்.

"இல்லம்மா! பொண்ணுங்களை தவறா போட்டோ எடுத்து ப்ளாக்மைல் பண்றது, அனானிமஸ் நம்பர்ல இருந்து கால் பண்ணி பொண்ணுங்க கிட்ட அசிங்கமா பேசறது, இந்த மாதிரி செய்யறவங்கள, ஐ.பி அட்ரஸ் வெச்சு... அவங்க போன், லேப்டாப் இதுல இருக்கற டீடெயில்ஸ் எல்லாத்தையும், அவங்களுக்கே தெரியாம எடுத்து, அத்தனையும் டெலீட் பண்ணி, அந்த பொண்ணுங்களுக்கு பிரச்சினை வராம, போலீஸ்ல சிக்க வெச்சிட்டு இருக்கானாம் அந்த டீ.பி. இதை மட்டும்தான் பேப்பர்ல போட்டிருக்காங்க" என்றார் வசுந்தராவின் அப்பா.

"அப்படியா! செம்ம இல்லப்பா!" என வியந்தவளின் கண்கள் ஏதோ நினைவின் தாக்கத்தில் கலங்கியது.

அதை சாதுரியமாக மறைத்தவளாக, "பாதிக்கப்பட்டவங்க அவனை!" என்றவள் அதை மாற்றி, "அவரை எப்படி காண்டாக்ட் பண்ணுவாங்க!" எனக் கேட்க, "அதைப் பற்றி தெரியலையேம்மா!" என முடித்தார் பெரியவர்.

நறுக்கிய காய்களுடன் அடுக்களைக்குள் சென்றவள்,  தன்னையும்  அறியாமல்,

மாதர் தம்மைக் கேலி பேசும்

மூடர் வாயை மூடுவோம்!

மானம் காக்கும் மாந்தர் யார்க்கும்

மாலை வாங்கி போடுவோம்!

வீடு காக்கும் பெண்ணை வாழ்த்தி

நாடும்... ஏடும் பேச வேண்டும்!

மனதில் உறுதி வேண்டும்!

என முணுமுணுத்தவாறே சமையலில் கவனம் செலுத்த, 'அந்த டீ.பி யாரா இருக்கும்? எங்க இருப்பார்?' என்ற கேள்விகள் எழுந்தது அவளுடைய மனதிற்குள்.

பின்பு நேரம் செல்வதை உணர்ந்தவள், சமையல் முடித்து, தந்தையுடன் சேர்ந்து காலை உணவை உண்டுவிட்டு, தந்தைக்குத் தேவையானவற்றை எடுத்து வைத்தாள்.

பின்பு தனது தேவைகளையும் சரிபார்த்தவாறே, "நான் போய்ட்டு வரேன். காய் வாங்கறேன், பழம் வாங்கறேன்னு நீங்கத் தனியா கடைக்கெல்லாம் போகாதீங்க.

ஈவினிங் நாம சேர்ந்தே போகலாம். நீங்க பத்திரமா இருங்கப்பா!" என்று அவரிடம் சொல்லிவிட்டு, போர்டிகோவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டியை கிளப்பிக்கொண்டே,  வீட்டின் சுற்றுச்சுவரைத் தாண்டி பக்கத்துக்கு வீட்டைப் பார்த்தாள் வசுந்தரா.

அங்கே ஒரு பெண்மணி கொடியில் துணிகளைக் காயவைத்துக்கொண்டிருக்க, அவரை நோக்கி, "கவிதாம்மா, நான் ஸ்கூலுக்கு கிளம்பறேன், அப்பாவைக் கொஞ்சம் பார்த்துக்கோங்க ப்ளீஸ்!" என்று சொல்ல,

"இதெல்லாம் நீ சொல்லனுமா கண்ணு, நான் பார்த்துக்கறேன்” என்றவர், "அந்த தங்கம் டீவீல ஏதோ ஷோவுக்காக உன்னைப் பேட்டி எடுத்தாங்களே, அது என்னைக்கு வரும்?” என்று அந்த பெண்மணி கேட்க, "வர சண்டே கவிதம்மா!" என்றாள் வசுந்தரா கைப்பேசியில் நேரத்தைப் பார்த்துக்கொண்டே.

அதை உணர்ந்தவராக, "ஐயோ! நேரமாச்சு நீ கிளம்பு. மீதியைச் சாயங்காலம் கேட்டுக்கறேன்!" என்றார் அந்த பெண்மணி புன்னகையுடனே.

"பை கவிதாம்மா!" என விடை பெற்று, வண்டியைக் கிளப்பிக்கொண்டு, மிதமான வேகத்தில் அதைச் செலுத்தியவாறு அங்கிருந்து சென்றாள் வசுந்தரா.

*** 

சில தினங்கள் கடந்த நிலையில்...

சென்னை மாநகரத்தின் முக்கிய பகுதியில் அமைந்திருந்த அந்த பாரம்பரியம் மிக்க 'ரெக்ரியேஷன் கிளப்' வார இறுதி நாள் என்பதால் களை கட்டி இருந்தது.

செல்வத்தில் கொழிப்பவர்கள் மட்டுமே அங்கே உறுப்பினராக இருக்க முடியும்.

அதில் அங்கத்தினர் எனச் சொல்லி பெருமை பறை சாற்றிக்  கொள்வதற்காகவே அதில் உறுப்பினரானவர்கள் பலர்.

அதில் ஒருவன்தான் திலீப் பராசரன்! அவனது அடையாளமான அவனுடைய தந்தையின் பெயர் நீங்கலாக திலீப்.

மூன்று தலைமுறைகளுக்கு மேலாகக் கோலோச்சிக்கொண்டிருக்கும் 'ராஜாராம் க்ரூப் ஆஃப் கம்பெனீஸ்' உடைய இளைய தலைமுறை வாரிசுகளில் ஒருவன்.

தனக்கான அடையாளத்தை பெற, 'திலீப்ஸ் ஸ்டேஷனரீஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தைத் தொடங்கித் திறம்பட நடத்தி வருபவன்.

ஆறடி உயரத்துடன், சந்தனத்தைக் குழைத்த நிறத்தில், அனைவரையும் வசீகரிக்கும் தோற்றத்துடன், 'இருந்தால் இவனை மாதிரி இருக்கணும்டா!' என மற்றவர்களுடைய பொறாமையைக் கிளப்பும் விதத்தில் அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவன்தான் திலீப்.

ஆனால் அவனே பார்த்து வியக்கவும், சமயத்தில் பொறாமை கொள்ளவும் செய்து,  அவனை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தான் ஒருவன், அவனுடைய அதிவேக செயல்பாடுகளால்.

அவன்தான் தீபப்பிரகாசன். எளிமையாக தீபன்!

'வித்யுத் க்ரூப் ஆஃப் எஜூகேஷனல் இன்ஸ்டிட்யூஷன்ஸ்' குழுமத்தின் தலைவன்.

குறுகிய கால கட்டத்திற்குள்ளாகவே கல்வி சந்தையில் பெரிய தலைகளையெல்லாம் சர்வ சாதாரணமாக பின்னுக்குத்தள்ளிவிட்டு மேலே வந்தவன்.

கூடவே பலதரப்பட்ட தொழில் நிறுவனங்களில் கணிசமாக முதலீடுகள் செய்து வைத்திருந்திருப்பதால் வியாபார சந்தையில் முக்கிய இடத்தில் இருப்பவன்.

அபரிமிதமான அறிவுக்காரன். அவனுடைய அதிபுத்திசாலித்தனத்துக்கு இணையாகக் கர்வமும் கொண்டவன். அதைக் கொஞ்சமும் வெளிக்காட்டாமல் இனிமையாகப் பழகவும் தெரிந்தவன்.

ஆனாலும் இவனுடைய தயவு பலருக்குத் தேவைப்படுவதால் தொழில் வட்டத்தில் யாரும் இவனைப் பகைத்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள்.

சில வருடங்களுக்கு முன்பாக, ஒரு தொழில் முறை சந்திப்பில் அறிமுகமாகி, பின்பு நட்பானவர்கள் திலீப், தீபன் இருவரும்.

அவன் இந்த க்ளப்பில் அவன் உறுப்பினரானதுகூட தன்னுடன் சிறு பந்தயம்போலத்தான், 'பரம்பரை பணக்காரனான உன்னைவிட நான் எந்த விதத்திலும் குறைந்தவனில்லை' என்பதை காட்டிக்கொள்ளத்தான் என்பதை நன்றாகவே உணர்ந்திருந்தான் திலீப்.

கலை நயத்துடன் விளங்கிய அந்த மிகப்பெரிய கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த 'ஸ்னூக்கர் டேபிள்' லில் வித்தைகளைக் காட்டிக்கொண்டிருந்த தீபனையே அவனுடைய கண்கள் தொடர்ந்துகொண்டிருந்தன.

அவன் கையிலிருந்த அந்த 'க்யூ ஸ்டிக்' மூலம் வெண்மை நிற 'க்யூ' பந்தைத் தட்டி, மின்னல் வேகத்தில் மற்ற பந்துகளை 'பாக்கெட்' செய்யும் வேகமும் லாவகமும், எப்பொழுதும் போல் திலீபனை வியப்பிற்கு உள்ளாக்க, பர்ஃபெக்ட்! அமேஸிங் ஷாட்! என்ற வார்த்தைகள் அவனுடைய உதடுகளிலிருந்து மலர்ந்து, உதிர்ந்து கொண்டிருந்தன.

ஒரு வருடத்திற்கு முன் இங்கே உறுப்பினரான பிறகுதான் இந்த விளையாட்டு அவனுக்கு அறிமுகம்.

எப்பொழுதாவது நேரம் கிடைத்தால் மட்டுமே இங்கே வருவான், அதுவும் திலீப் வற்புறுத்தலில். 

முதலில் ஓரிரு முறைப் பெயருக்கென்று விளையாடியவன், அங்கே உறுப்பினராக இருந்த ஓய்வு பெற்ற கலெக்டர் ஒருவரின் மறைமுக கிண்டலுக்குப் பிறகு, வெறியுடன் விளையாடத் தொடங்கினான்.

அதன் பிறகு தீபனை அங்கே கண்டால், அவர் சொல்லிக்கொள்ளாமல் ஓட்டம் பிடித்து விடுவார், அவனுடன் விளையாடி தோற்க பயந்து!

சில நிமிடங்கள் அவனுடைய ஆட்டத்தை ரசித்துக்கொண்டிருந்த திலீப், அதில் அவனுடைய தீவிரத்தைக் கவனித்து, இப்போதைக்கு அவன் வர மாட்டான் என்பதை புரிந்துகொண்டவனாக,  அந்த க்ளப்பின் வேறு பகுதில் இருந்த பாரை நோக்கிச் சென்றான்.

அங்கே வசதியான ஒரு இருக்கையாகப் பார்த்து அமர்ந்த திலீப், அங்கே இருந்த பணியாளரிடம் எதோ சொல்லிவிட்டு, கைப்பேசியில் தீபனை அழைத்து, "பார்ல இருக்கேன்! ட்வெண்டிஒன் இயர்ஸ் ராயல் சல்யூட், உனக்காக வைட்டிங்! உடனே வா!" என்று சொல்லி, அவனுடைய பதிலையும் எதிர்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்தான்.

எதிர் முனையிலிருந்த தீபனின் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது.

"எக்ஸ்க்யூஸ் மீ ஜென்டில்மென்! டைம் டு பார்ட்! யூ ப்ளீஸ் கன்டின்யூ!" என்று சொல்லிவிட்டு கையிலிருந்த 'க்யூ ஸ்டிக்' கை அருகில் நின்றுகொண்டிருந்த ஒரு பணியாளரிடம் கொடுக்க, அவனுடன் விளையாடிக்கொண்டிருந்த நடுத்தர வயதில் இருந்த ஒருவர், "யாஆஆ... மிஸ்டர் திலீப் இங்க இருந்து போன உடனே, நான் இதை எதிர்பார்த்தேன்!" என்றார்.

விளையாட்டைத் தொடராமல் தீபன் அங்கிருந்து கிளம்பியதால் உண்டான ஏமாற்றம் அதில் அப்பட்டமாகத் தெரிந்தது.

அதைப் புரிந்துகொண்டவனாக, "கவுதம் பாய்! சில்! நெக்ஸ்ட் வீக் மறுபடியும் வந்தாலும் வருவேன். வில் மெசேஜ் யூ! வி வில் ராக்!" என்றவாறு ஸ்னூக்கர் போர்டின் விளிம்பில் லேசாகத் தட்டியவன், புன்னகை முகமாய் அங்கிருந்து சென்றான்.

***

திலீபனின் எதிரில் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்த தீபன், "ஏண்டா, நீ இங்க வர்றதே இந்த ஒரே ஒரு விஷயத்துக்காகத்தானா?" என்று நக்கலாகக் கேட்க,

"எக்ஸாக்ட்லி! இதுல டவுட்டு வேறயா? என்று கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் சொன்னவன், "உன்னோட காம்பினேஷன்ல இருக்கு! நானே மிக்ஸ் பண்ணேன்" என்று சொல்லியவாறே, மது நிறைந்த கோப்பையை அவனை நோக்கி நகர்த்தினான் திலீப்.

"கிழிச்ச... என் காம்பினேஷன் என்னால மட்டும்தான் போட முடியும். அந்த ரேஷியோ உன் கைல இல்ல! என் மைண்ட்ல இருக்கு!" என்றவன்,"பட்... அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்!" என அதை எடுத்து ஒவ்வொரு மிடறாகப் பருகத் தொடங்கினான்.

அன்றாட தொழில் விவகாரங்கள், பரபரப்பு அனைத்திலிருந்தும் தப்பி சில மணி நேரங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு மட்டும்தான் அவர்கள் அங்கே வருவதே!

திலீப்பிற்கு மது தரும் போதை மட்டுமே போதுமானதாக இருக்கும்.

ஆனால் தீபனுக்கு அது மட்டுமே போதாது. அவனுக்கு அங்கே வந்தால் கட்டாயம் உடல் அலுக்க விளையாட வேண்டும். அதில் கட்டாயம் ஜெயிக்க வேண்டும். பெரும்பாலும் 'பேட் மிண்டன்' அவ்வப்பொழுது 'ஸ்னூக்கர்' அவன் வெறி கொண்டு விளையாடுபவை.  அதன் பிறகுதான் மற்றவை. அதைத் தவிரத் தொழில் சம்பந்தப்பட்ட பேச்சுக்கள் எதுவுமே இருக்காது  அங்கே.

அன்றும் அதுபோலவே அவர்களுடைய உரையாடல் பொதுவான விஷயங்களில் செல்ல, நேரம் மெல்ல மெல்ல நழுவிக்கொண்டிருந்தது.

இருபத்தி ஒரு வருடப் பழமையான ராயல் சல்யூட்டின் இரண்டு மூன்று சுற்றுக்கள்  உள்ளே சென்றிருந்தது. பார்வைக்குப் புலப்படாமல் மதுவில் நிறைந்திருந்த போதை, தீபனின் விழிகளில் இடம் பெயர்ந்திருந்தது.

மெல்லிய கிறக்கம் அவனது மூளையை எட்ட, எதிரில் அமர்ந்திருந்தவனின் முகத்தை ஆழமாக ஊடுருவிப் பார்த்தவன், "என்ன விஷயம் சொல்லு!" என்று தெளிவாகக் கேட்கவும்,

"கண்டு பிடிச்சுட்டடா மச்சான்! அதுதாண்டா நீ!" என்ற திலீப், "அப்பா மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்க!" என்று குளறலாகத் தொடங்கியவன், "அத்தைக்கு எப்படியாவது அவங்க பொண்ண என் தலைல கட்டணும்னு வெறி. அப்பா அதுக்கு உடந்தை. என் சித்தப்பா சன், அதுதான் அந்த சாந்தனுன்னு ஒருத்தன் இருக்கான் இல்ல வெட்டியா! அவன் தலையில கட்ட வேண்டியதுதானே!  எனக்கு என்னவோ அவளைப் பார்த்தால் மனசுல ஒரு ஃபீலே வரலடா!" எனப் புலம்பித் தீர்த்தான்.

அவன் பேசி முடிக்கும் வரை பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தவன், "உங்க அப்பா ஒரு பிராக்டிகல் பர்சன் திலீப்! பெட்டெர் நீ அவர்கிட்ட உனக்கு எப்படிப் பட்ட பொண்ணு வேணும்னு சொல்லிடு. கட்டாயம் புரிஞ்சுப்பார்!" என்றான் தீபன்.

"சொல்றது என்ன, அவருக்கு வீடியோவாகவே பிளே பண்ணிக் காண்பிக்கலாம்!" என்ற திலீப்பை வினோதமாகப் பார்த்தான் தீபன்.

"வெயிட்! வெயிட்! ஐல் ஷோ யூ!" என்ற திலீப் அவனது கைப்பேசியில் ஒரு காணொளியை ஓடவிட்டுக் காண்பித்தான். அதில் மலர்ந்த புன்னகையுடன் பேசிக்கொண்டிருந்தாள் வசுந்தரா!

வசந்தரா ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை. சென்னையிலிருந்து சற்று தள்ளி, நகரத்தின் எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல், கொஞ்சம் பின் தங்கிய நிலையில் இருக்கும், வெள்ளரிப்பாக்கம் எனும் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளியில்தான் அவளுக்கு வேலை.

சமீபத்தில் நடந்து முடிந்திருந்த நீட் மற்றும் அரசாங்கம் நடத்தும் இன்னும் சில தகுதித் தேர்வுகளில், அவள் வேலை செய்யும் பள்ளியில் பயின்ற மாணவர்கள் ஐந்து பேர் மொத்தமாகத் தேர்வு பெற்றிருந்தனர்.

அதற்குக் காரணம் வசுந்தராவின் தனிப்பட்ட முயற்சியே என்பது வெற்றி பெற்ற மாணவர்கள் மூலம் சமூக வலைத் தளங்களில் பரவி இருந்தது. அது மக்களிடையே அவளைப்பற்றி ஒரு நன்மதிப்பை ஏற்படுத்தி இருந்து.

அதற்காக அவளைக் கவுரவிக்கும் விதமாக, 'தங்கம் டீவி' என்னும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில், அவர்கள் நடத்தும் 'எங்க ஊர் சாதனை பெண்கள்' என்னும் நிகழ்ச்சிக்கு அவளையும், வெற்றி பெற்ற அந்த மாணவர்களையும் அழைத்து, ஒரு நேர்காணல் நிகழ்ச்சியை ஒளிபரப்பி இருந்தனர்.

அந்த காணொளியைத்தான் தனது கைப்பேசியில் தீபனுக்கு காண்பித்தான் திலீப்.

அந்த நிகழ்ச்சியை ஒரு சில நிமிடங்கள் கூர்ந்து கவனித்த தீபன், "இப்ப நீ என்னதான் சொல்ல வர? இந்த பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்றியா?" என்று சற்று பரிகாசத்துடன் கேட்க,

"நாட் எக்ஸாக்ட்லி! இவளை மாதிரி இருந்தால் கூட போதும்! லுக் அட் ஹர் பியூட்டி! அவளோட அந்த கோதுமை கலர்! அவளோட ஐஸ்! அவளோட வாய்ஸ்! அண்ட் அவளோட அந்த அட்டிட்யூட்... ஆல் தட் மேட் மீ கிரேஸி!

யூ நோ சம்மதிங்... இந்த வீடியோவை நான் இது வரைக்கும் நாப்பது அம்பது தடவ பார்த்துட்டேன்!" என்று சொல்லிக்கொண்டே போனான் திலீப்.

அவன் போதையில்தான் பிதற்றுகிறானோ என்று கூட தோன்றியது தீபனுக்கு. அப்படி என்ன இருக்கிறது இந்த பெண்ணிடம் என்று அந்த காணொளியை அவன் சில நிமிடங்கள் தொடர்ந்து கவனிக்க, அவனுக்குமே மின்சாரம் தாக்கிய உணர்வு எழுந்தது.

திலீபனுக்கோ அவளுடைய அழகிய தோற்றத்தில் உண்டான போதை, மதுவின் போதையை காட்டிலும் அதிகமாக மூளையைச் செயலிழக்கச் செய்து கொண்டிருந்தது.

ஆனால் தீபனுக்கோ அவளுடைய ஆற்றல், மதுவின் போதையில் சற்று மயங்கி இருந்த அவனது அறிவை அவசரமாய் தட்டி எழுப்பி, 'இவளிடம் நீ கொஞ்சம் கவனமாய் இருக்க வேண்டும்!" என அவனை எச்சரிக்கை செய்து கொண்டிருந்தது.

இது எதையும் அறியாமல், அவர்களுடைய வீட்டின் வரவேற்பறையில் உட்கார்ந்துகொண்டு அவளுடைய மாணவர்களின் விடைத் தாள்களைத் திருத்திக்கொண்டிருந்தாள் வசுந்தரா!

***

உலகில் எந்த ஒருவராலும் கட்டி வைக்க இயலாத ஆற்றல் கொண்ட கால வெள்ளம், இரண்டு நாட்களை அடித்துச் சென்றிருந்தது.

பதினொன்றாம் வகுப்பிற்குள் நுழைந்த வசுந்தரா, அங்கே குதூகலத்துடன் சத்தம் செய்துகொண்டிருந்த மாணவர்களை, அடக்கி ஒரு வழியாக அறிவியல் பாடத்தை நடத்தத் தொடங்கினாள்.

அறிவியலும், கற்பித்தலும் எப்பொழுதுமே அவளுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயங்கள். ஆனால் அன்று அந்த வகுப்பில் முதல் பத்து நிமிடங்கள் மட்டுமே அவளால் உற்சாகத்துடன் பாடம் நடத்த முடிந்தது.

அடுத்து வந்த நிமிடங்கள் எதோ ஒரு சங்கடம் அவள் மனதை உறுத்த, ஆழமாக எதோ முதுகினை துளை இடுவதை போல் உணர்ந்து, கரும் பலகையில் எழுதிக்கொண்டிருந்ததை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்க்க, அதிர்ந்தாள் வசுந்தரா.

அங்கே உட்கார்ந்திருந்த நாற்பத்து ஐந்து மாணவ மாணவிகளுக்குள், அவளை நோக்கிய ஒருவனுடைய வெறித்த ஆழமான அனர்த்தமான பார்வை அவளுடைய மனதில் கிலியை ஏற்படுத்த, அதன் பின் அவளால் எதிலும் கவனம் செலுத்த இயலவில்லை.

ஒரு வழியாக வகுப்பு முடிந்து, ஆசிரியர் ஓய்வு அறைக்குள் நுழைந்தவன், இருக்கையில் அமர்ந்து, முன்பாக இருந்த மேசையில் கைகளை மடக்கி தலை சாய்த்துப் படுத்துக்கொண்டாள். அவளுடைய கண்களில் பெருகிய கண்ணீர் மேசையை நனைக்க, 'கடவுளே! இது போன்ற ஆபத்துகளிலிருந்து என் பிள்ளைகளைக் காப்பாற்று!' என அவளுடைய மனம் அந்த எல்லாம் வல்ல ஆண்டவனை இறைஞ்சிக்கொண்டிருந்தது!

indra.karthikeyan and shiyamala.sothy have reacted to this post.
indra.karthikeyanshiyamala.sothy

You cannot copy content