You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

KPN's TIK - 24

Quote

இதயம்-24

அவளது வியந்த முகத்தைப் பார்த்து ஆதியின் புன்னகை மேலும் விரிய, “என்ன எம்.டி மேடம்! நான் சொல்வது சரிதானே?” என்று அவன் கேட்க,

“ஐயோ! எம்...டி...யா… நானா! சான்ஸே இல்ல! என்ன விளையாடறீங்களா?” என மல்லி கொளுத்திப் போட்ட சரவெடி போல் படபடக்கவும்,

“நிஜமாகத்தான் சொன்னேன் மல்லி; விளையாடணும்னா இப்படியா விளையாடுவேன்?” என கிறக்கமாக அவன் சொன்ன விதத்தில் எகிறிய இதயத்துடிப்பை மறைத்து.

“மாம்ஸ்!” என்று அவனை முறைத்தவள், “சீரியஸா பேசும்போது கிண்டல் பண்ணாதீங்க!” என்று கூற,

கொஞ்சம் கடுமை ஏறிய குரலில், “நானும் சீரியஸாதான் சொன்னேன், அதிகபட்சம் இன்னும் ஒரு வாரத்தில் எல்லாவற்றிற்கும் ஒரு முடிவுகட்டி விடுவேன் அதுவரை தான் உனக்கு டைம்.

அதன் பிறகு நீ ஆபீஸ் வந்துதான் ஆகணும் அதுவும் எம்...டி... யாக.

அதற்கான எல்லா பேப்பர்சையும் தயார் பண்ணிட்டேன்” என்றவன்,

“அத்துடன் இனிமேல் நம்ம கம்பெனில டிசைன் செய்யற எல்லாப் பட்டுப்புடவைகளின் காப்புரிமை உன் பெயரில்தான் இருக்கும்.

புடவைகளை டிசைன் செய்யறதோட, நம்ம பட்டு கைத்தறி, மெஷின் தறி எல்லாமே உன் பொறுப்பில்தான் வரும்.

முதலில் கொஞ்சம் நானும் சசியும் உனக்கு ஹெல்ப் பண்ணுவோம். போகப்போக நீ தனியாகத்தான் மேனேஜ் பண்ணனும்” எனச் சொல்லி முடித்தான் ஆதி.

அவன் அவ்வளவு எடுத்துச் சொன்ன பிறகும், என்னதான் அவன் சொன்ன விஷயங்கள் சரியாக இருந்த பொழுதும், அனைத்துமே அவளது அறிவிற்கு எட்டியிருந்தாலும், மனம் அதை ஏற்க முரண்டு பிடித்தது.

அதற்குமேல் எதுவும் பேசாமல் கதவைத் திறந்துகொண்டு வெளியில் சென்று பால்கனி கூடை ஊஞ்சலில் கண்களை மூடி, இரண்டு கால்களையும் குறுக்காகக் கட்டியபடி சாய்ந்து கொண்டு உட்கார்ந்தாள் மல்லி.

திருமணம் முடிந்து வெறும் எட்டு நாட்கள் மட்டுமே ஆகியிருந்தது. அவளுக்கு என்னவோ எட்டு யுகங்களைக் கடந்த பிரமிப்பு தோன்றியது.

 ‘எப்பொழுது இவையெல்லாம் சரியாகி ஒரு நிம்மதியான சூழ்நிலை ஏற்படுமோ?!’ என்றிருந்தது மல்லிக்கு.

இரவு நேரக் கடல் காற்று சிலுசிலுவென்று முகத்தில் மோத சற்று நேரத்திலேயே அது தந்த புத்துணர்வில், ‘எது நடந்தாலும் கட்டாயம் ஆதி பார்த்துக் கொள்வான்!’ என்ற எண்ணம் தோன்றவே, மனம் கொஞ்சம் தெளிவடையவும், அவள் கண்களைத் திறக்க,

அருகே போடப்பட்டிருந்த சோபாவில் கால்களை மடக்கி படுத்தவாறு கைப்பேசியைக் குடைந்து கொண்டிருந்த ஆதி அவளது பார்வையில் படவும், மனம் கரைந்து போனது மல்லிக்கு.

“மாம்ஸ்! ஏன் இங்கே வந்து படுத்திருக்கீங்க! கொசு வேறு பிடுங்கி எடுக்கிறது!” என அவள் சொல்ல,

“இந்த கொசுவெல்லாம் என்னை அவ்வளவாகக் கடிக்காது?” என்றான் ஆதி.

“ஆமாம்! இந்த கொசுவிற்கெல்லாம் நீங்கதான் 'தி கிரேட் தேவாதிராஜன்னு' தெரிஞ்சு பயந்து உங்களைக் கடிக்காமல் பறந்திடும்!” என அவள் கேலி போலச் சொல்லவும்,

“நிஜம் மல்லி! நான் நெகடிவ் பிளட் க்ரூப். அதுவும் ரொம்ப ஸ்பெஷல் பிளட் க்ரூப். அதனால, என்னை அவ்வளவாக கொசு கடிக்காது” என்றான் ஆதி தீவிரமான குரலில்.

அதில் எதோ நினைவு வந்தவளாக வியக்கும் குரலில், “மாம்ஸ்! அம்மு கூட ஒரு முறை இதுபோல் சொல்லியிருக்கா! அவளும் நீங்களும் ஒரே பிளட் க்ரூப்பா?” என மல்லி கேட்க,

“ஐயோ!” என்றவாறு தலையில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டான் ஆதி.

“ஏன் மல்லி! எங்கே போனாலும் திரும்பத் திரும்ப இங்கேயே வந்து நிக்கற” என அவன் ஆயாசமாகக் கூறவும்,

“சாரி மாம்ஸ்! ஏனோ என்னால இதிலிருந்து சட்டுனு வெளியில் வர முடியல!

நானும் இதுபற்றியெல்லாம் பேசக்கூடாதுன்னுதான் நினைக்கிறேன். ஆனால் என்னையும் மீறிப் பேசி உங்களை டென்ஷன் பண்ணிடறேன்” என மல்லி வருந்தவும்,

“சரி வா! உள்ளே போகலாம்!” என்று அவன் அவளை அழைத்தான்.

“இல்ல எனக்கு தூக்கம் வரல நீங்க போய் தூங்குங்க” என மல்லி சொல்லவும்,

“என்னைத்தான் மல்லி கொசு கடிக்காது. ஆனால் உன்னை பிய்த்துத் தின்றுவிடும்” என அவன் கிண்டல் குரலில் சொல்ல,

“பரவாயில்லை நான் கொசுவிடம் சொல்லிடறேன் நான் ஆதியின் பாதின்னு. பிறகு என்னையும் கடிக்காது” என்று அவள் பதிலுக்கு பதில் பேசவும்,

அதில் கொஞ்சம் கடுப்பானவன்.

“கொசுவின் பாஷை உனக்குத் தெரிந்திருக்கலாம், ஆனால் அன்றைக்கு நடந்ததுபோல் பெரியதாகக் கத்தியை தூக்கிட்டு யாரவது வந்தால் என்ன செய்வ மல்லி? இங்கே தேரைகள் வேறு அதிகம்” என்று சொல்லி அவளை மிரளவைத்து உள்ளே சென்றுவிட்டான் ஆதி.

பயத்தில் அவனைப் பின் தொடர்ந்து ஓடி வந்த மல்லியின் பதட்டம் கண்டு வாய் விட்டுச் சிரித்தான் ஆதி.

அவனது கேலியில் ஒரு நொடி மௌனித்தவள், ‘எப்படியும் வீட்டைச் சுற்றி பக்காவாக பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறான். அதை மீறி கொசுவையும், தேரையையும் தவிர வேறு ஒருவரும் உள்ளே நுழைய முடியாது!’ என்பது அவள் மனத்திற்குப் புரிய சுறுசுறுவென்ற கோபத்துடன் பேசாமல் போய் படுத்துக்கொண்டாள் மல்லி தலை வரை போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு!

சில நிமிடங்களில் அவனது இடத்தில் ஆதி வந்து படுப்பதை உணர்ந்த மல்லியை தூக்கம் சுகமாகத் தழுவிக்கொண்டது.

ஆனால் அது சில நிமிடங்கள் கூடத் தொடரவில்லை. அம்மு தொடரவிடவில்லை.

க்ளக்… க்ளக்… சளக்… சளக்… என்ற வினோத ஒலிகள் கேட்டுக்கொண்டிருக்க,

அம்மு ஸ்ட்ரெக்சரில் மயக்க நிலையில் படுக்கவைக்கப் பட்டிருந்தாள். அவளது வலது கரம் கழுத்தில் அணிந்திருந்த அவளது செயினை இறுக்கப் பற்றியிருந்தது.

அவளது கையை பிடித்து, வலியப் பிய்த்து அந்த செயினை விடுவித்த ஒருவன், அதையும் அவளது கைகளில் போட்டிருந்த வளையல், மோதிரம், பின்பு சிறிய ஜிமிக்கி என ஒவொன்றாக கழற்றிக்கொண்டிருக்க,

“சீக்கிரம் உள்ளே கொண்டு வா குணா!” என்ற அழைப்பில் அவசரமாக கடைசியாக அவளது கால்களில் போட்டிருந்த கனத்த கொலுசைக் கழற்ற, அது கீறி அவளது காலில் ரத்தம் வருவதையும் பொருட்படுத்தாமல் அந்த ஸ்ட்ரெக்ச்சரை தள்ளிக்கொண்டு, அந்த ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்தான் குணா.

முந்தைய நாளது கனவில் அவள் கண்ட அந்த இடத்தையே மறுபடி பார்க்கவும் பயத்தில் பதறிப்போய் எழுந்து உட்கார்ந்தாள் மல்லி.

ஆனாலும், அந்த க்ளக் க்ளக் சளக் சளக் ஓசைகள் தொடரவும் குழம்பியவள், கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு அருகில் பார்க்க, ஆதிதான் தன் கைப்பேசியில் எதோ விளையாடிக்கொண்டிருந்தான். அதிலிருந்து வந்த ஒலிதான் அது என்பது புரிந்தது. மணியைப் பார்க்க அது ஒன்று எனக் காட்ட,

ஆழ்ந்த மூச்சு ஒன்றை எடுத்துக்கொண்டு, “நீங்க இன்னும் தூங்கலையா?” என தூக்கக் குரலில் கேட்டாள் மல்லி.

ஏனோ அன்று அம்முவின் நினைவு அவனை அதிகம் ஆட்கொள்ள, அதைச் சொல்லாமல், “ஏனோ தூக்கம் வரல மல்லி நீ ஏன் முழிச்சிட்ட” என எதிர்க் கேள்வி கேட்டான் ஆதி.

அங்கே பாட்டிலில் இருந்த தண்ணீரை பருகியவாறே “ப்சு!” என்று அலுத்துக்கொண்டாள் மல்லி.

“ஏன் என்ன ஆச்சு” என்று அவன் கேட்கவும்,

அவள் கண்ட கனவை விவரித்தவள், “அம்முவைப் பற்றி பேசினால் உங்களுக்கு பிடிக்கலைனு தெரிஞ்சாலும், என்னால இந்த கனவைப் பற்றி உங்களிடம் சொல்லாமல் இருக்க முடியல சாரி!” என முடித்தாள் மல்லி.

“அம்முவை பற்றி பேசினால் எனக்குப் பிடிக்காதுன்னு நான் எப்ப சொன்னேன் மல்லி?” என்று அவளிடம் கேட்ட ஆதி,

“நானே மறக்க நினைக்கும் கசப்பான நாட்களை நினைவு படுத்தியதால்தான், அவளைப் பற்றி பேசுவதைத் தவிர்த்து வந்தேன்!

முதலிலாவது அவள் மேல் எனக்கு கோவம் இருந்தது. அதுகூட இப்ப இல்லை மல்லி!

நீ எல்லா நேரமும் இந்தப் பிரச்சினைகளிலேயே மூழ்கி இருப்பதுதான் காரணம்” என ஆதி சொல்லவும்,

“சரி விடுங்க” என்றவள் எதோ நினைவு வந்தவளாக, “ம்! கேட்கணும்னு நினைச்சேன்!”.

“அந்த குணாவைப் பற்றிச் சொன்னேன் இல்ல?

அவர் அந்த வனிதாவின் அப்பாதானே?” என மல்லி கேட்க,

“ஆமாம்! அந்த நா” என்று வார்த்தையைப் பாதியிலேயே நிறுத்தியவனின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.

“ப்சு மாம்ஸ்! கோவப்படாதீங்க!” என்ற மல்லி, “அவன் கையில் அம்முவின் நகைகள் எப்படிப் போச்சுன்னு புரிஞ்சுதா?” எனக் கேட்கவும்,

முகம் இறுக, “ஹ்ம்ம்! இப்படி இருக்கும்னு நான் கனவிலும் நினைக்கல!” என்றவன் தொடர்ந்து,  

“அவன்தான் மல்லி அம்மு இறந்ததும் முதல் முதலாகப் பார்த்ததாகவும், அவள் தற்கொலைதான் பண்ணிக்கிட்டாள்னும்,  போலீசில் வாக்குமூலம் கொடுத்தது!

நான் அப்பதான் அவளுடைய நகைகளைத் திருடினான்னு நினைச்சேன்” என்ற ஆதி,

கரகரப்பான குரலில், “உன்னை சொல்லிட்டு ஏனோ எனக்குமே இன்று அம்முவைப் பற்றிய நினைவு கொஞ்சம் அதிகமாகவே வருது மல்லி.

தூக்கம் கூட வரல” எனச் சொல்லிக்கொண்டிருக்க அவனுடைய கண்கள் பனித்திருந்தன.

அந்த கோபாலை சென்று சந்தித்தது முதலே, அவன் வினோத்திற்கு உடந்தையாக கீழ்த்தனமான செயல்களில் ஈடுபட்டிருப்பது புரியவும், அம்முவை நினைத்து ஆதி குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்தான்.

ஏனோ எல்லாவற்றையும் மல்லியிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றவும், அதே எண்ணத்தில் அவளை நாடி வந்தவனுக்கு அவளது நிலை மனதை உறுத்த சொல்லாமலே விட்டுவிட்டான்.

ஆனால் மறுபடியும் அம்முவின் மரணத்தைப் பற்றிய பேச்சு எழவும்,

“மல்லி உன்னிடம் கொஞ்சம் பேசணும் உணர்ச்சி வசப்படாமல் உன்னால் கேட்கமுடியுமானால் நடந்த விஷயங்களை உன்னிடம் சொல்லுவோன்...

என்னுடைய செயல்பாடுகள் எதையுமே யாரிடமும் இதுவரை சொன்னதில்லை.

எனது எந்தச் செயலுக்கும் விளக்கங்கள் கொடுத்ததில்லை மல்லி! ஏன் என் அம்மா அப்பாவிடம் கூட சொன்னதில்லை” என்றவன்

“நான் எனது பதினாறாவது வயதிலிருந்தே அப்பாவுடன் சேர்ந்து தொழிலில் ஈடுபட ஆரம்பிச்சேன் மல்லி!

அதுவும் தனியாகத் தொழில் தொடங்கிய பிறகு எனக்குக் கிடைத்த வெற்றிகளில் கொஞ்சம் அதிகமாகவே கர்வத்துடன் இருந்துட்டேன்.

அம்முவின் மரணம் எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி!

எந்த இடத்தில் என் கவனம் சிதறிப் போச்சுன்னுதான் புரியல.

மனசு ரொம்ப வலிக்குது மல்லி! உன்னிடம் சொல்லலாம்தானே?” என ஆதி கேட்கவும்,

“மாம்ஸ்! உங்க மனசுக்கு ஆறுதல் கிடைக்கும்னா எதுவாக இருந்தாலும் சொல்லுங்க.

எனக்கும் தூக்கம் வரல. அத்துடன் நிறையக் கேள்விகளும் மனதில் இருக்கு” என்றாள் மல்லி.

“அருளாளன் என்ற எங்க தாத்தாவின் பெயரையும், பரமேஸ்வரி என்ற பாட்டியின் பெயரையும் சேர்த்து 'அருள் பரமேஸ்வரி ஸ்டோர்ஸ்' என்ற பெயரில், தாத்தா ஆரம்பித்த கடையை அவருடன் சேர்ந்து அப்பா கவனிக்கத் தொடங்கினார்” என அவர்களது குடும்பத்தைப் பற்றி சொல்லத்தொடங்கினான் ஆதி.

ஏற்கனவே விவசாய நிலங்கள், மூன்று வீடுகள், அத்துடன் சின்ன காஞ்சிபுரத்தில் அவர்களுடைய கடை, அது இருக்கும் அவரகளுக்கு சொந்தமான இடம் என வசதி வாய்ப்பிற்குக் குறை ஒன்றும் இல்லை அவர்களுக்கு.

மேலும் கடையிலும் வியாபாரம் கொழிக்க, ஊரில் நல்ல மரியாதையை இருந்தது அவர்களுடைய குடும்பத்திற்கு.

வரதன், செல்வம் மற்றும் கயல் என மூன்று பிள்ளைகள் அருளாளனுக்கு.

செல்வம் நன்றாகப் படிக்கவும் அவரைக் கல்லூரியில் சேர்த்துப் படிக்கவைத்தனர். படிப்பு முடிந்ததும் அவருக்கு அரசாங்க வேலையும் கிடைத்துவிட்டது.

வரதனுக்கும் செல்வேந்திரனுக்கும் இரண்டு வயதுதான் வித்தியாசம். செல்வத்தை விட ஐந்து வருடம் சிறியவள் கயல்விழி.

அருளுடைய சொந்த தங்கையின் மகள்தான் சுலோச்சனா.

பட்டுத் தறிகள், ரைஸ் மில், சா மில், என வசதி படைத்த குடும்பம் அவர்களுடையது. மூன்று மகன்களுக்குப் பிறகு சுலோச்சனா என்பதால் அவர்கள் வீட்டின் இளவரசி அவள்.

அவளைத் தனது மூத்த மகனுக்குத்தான் முதலில் கேட்டார் அருளாளன்.

ஆனால் படித்து அரசாங்க வேலையில் இருக்கும் இளைய மகனுக்குத்தான் தன் மகளைக் கொடுப்பேன் என்று சொல்லிவிட்டார் அவரது தங்கை தனது மகளின் மனம் அறிந்து.

செல்வ நிலையில் கொஞ்சம் குறைந்திருந்தாலும் தனது ஒன்று விட்ட சகோதரனின் மகளான ஆதிலட்சுமியை வரதனுக்குப் பேச விரும்பினார் பரமேஸ்வரி, அவளது குண இயல்புகளை அறிந்தவராக.

அருளாளனுக்கும் மனைவியின் எண்ணம் சரி எனப் படவே, பேசி முடித்து இரண்டு திருமணங்களையும் அடுத்தடுத்த முகூர்த்தத்திலேயே நடத்தி முடித்தனர்.

கயல்விழியும் சுலோச்சனாவும் சிறு வயது முதலே ஒரே பள்ளியில் படித்து, ஒன்றாக வளரவே கயலுக்கு சுலோச்சனாவை மிகவும் பிடிக்கும்.

தங்களது நிலையிலிருந்து குறைவான இடத்திலிந்து வந்தவள் என்ற எண்ணம் மட்டுமே லட்சுமியின் மீது இருந்தது அவளுக்கு. அது அவளது வார்த்தைகளிலும் வெளிப்படத் தொடங்கியது.

பரமேஸ்வரிக்கு மட்டும், தாய் வீடே கதி என்று இருக்கும் நாத்தனாரின் மகளை விட, கைக்கு உதவியாக இருக்கும் தனது தம்பியின் மகளைத்தான் மிகவும் பிடிக்கும்.

வீட்டிற்குள்ளேயே உட்கட்சி பூசல்கள் ஆரம்பமானது.

திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே ஆதி பிறந்துவிட, இரண்டு வருடம் கழித்தே சுலோச்சனா அவர்களது மகன் கமலக்கண்ணனை பெற்றெடுத்தாள்.

அதற்குள்ளாகவே அவள் கொண்ட புகைச்சல் கொஞ்சம் நஞ்சமல்ல.

அடுத்த வருடமே அவர்களது இரண்டாவது மகன் விமல் பிறந்தான்.

கயல்விழிக்கு அதே ஊரிலேயே அவர்களுக்கு இணையான குடும்பத்தில், ராமலிங்கம் என்பவருடன் திருமணம் முடித்தனர்.

மூன்று வருடங்கள் கழித்துத்தான் அவர்களது ஒரே மகளான வேல்விழி பிறந்தாள்.

அதற்குள் அருள், பரமேஸ்வரி இருவரின் முதுமைக் காரணமாக கடையின் பொறுப்பு முழுதும் வரதனுக்கே வந்தது என்றால், வீட்டின் பொறுப்பு மொத்தமுமே லட்சுமிக்கு வந்து சேர்ந்தது.

செல்வத்திற்குக் கடையை கவனிக்க ஆர்வம் இல்லை. அது அவரது வேலைக்கும் பிரச்சினை ஏற்படுத்தும் என்றும் பயந்தார் அவர்.

சுலோச்சனா மறந்தும் வீட்டு வேலைகளில் ஈடுபாடு காட்டவில்லை.

எனவே வரதன் லட்சுமி இருவருமே ஓயாமல் உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள்.

ஆதி வளர வளர சுலோச்சனா தன் அன்னையிடம் காட்டும் அலட்சியமும், அதற்குக் கயல் அத்தை துணைபோவதும் இலைமறைக் காயாக புரியத் தொடங்கியது.

அப்பொழுதுதான் ஆதி பிறந்து மிக நீண்ட பத்து வருடத்திற்குப் பிறகு அம்மு பிறந்தாள்.

மருத்துவமனையில் பாட்டிகள் இருவர், வரதன், லட்சுமியின் தம்பி என அனைவரும் காத்துக்கொண்டிருக்க, பிறந்த குழந்தையான அமிர்தவல்லியை முதன்முதலாகத் தனது கைகளில்தான் ஏந்தினான் தேவாதிராஜன்.

ஒரு பெண் குழந்தை இல்லையே என ஏங்கிக் கொண்டிருந்த சுலோச்சனாவிற்கு வயிற்றில் அமிலம் சுரந்தது.

இதயம்-25

மருத்துவமனையில், ரோஜாப்பூ குவியலாய் தொட்டிலில் இருந்த தங்கையைவிட்டு எங்கேயும் நகரவில்லை ஆதி.

லட்சுமியின் பிறந்த வீடு ஐயங்கார்குளத்தில் இருக்கவே பிரசவம் முடிந்து அவர் அங்கே சென்றுவிட பள்ளி செல்லவேண்டியிருந்ததால் பேரனை பரமேஸ்வரிதான் கவனித்துக்கொண்டார்.

என்னதான் பார்த்துப் பார்த்து அவர் செய்தாலும் அன்னையை நீங்கி, தங்கையையும் பிரிந்திருந்த ஆதி மிகவும் ஏங்கித்தான் போனான்.

அம்முவை தொட்டில் போடும் தினத்தன்று மகனின் உடல் மெலிவு மனதை வருத்த, சில தினங்களிலேயே சிறுவாக்கம் வந்துவிட்டார் லட்சுமி.

லட்சுமியின் அன்னை மற்றும் அண்ணன் மனைவி நந்தினியும் அவரை கவனித்துக் கொண்ட விதத்தில் நன்கு உடல் தேறி வந்த லட்சுமி, அங்கே வந்த பிறகு கைக்குழந்தையைக் கவனிப்பதுடன் வீட்டுவேலையும் சேர்ந்துகொள்ள மிகவும் சோர்ந்துதான் போனார்.

அது புரிந்ததோ என்னவோ ஆதி வீட்டில் இருக்கும் நேரங்களில் தங்கையின் பொறுப்பு மொத்தமும் எடுத்துக்கொண்டான்.

நாட்கள் செல்லச்செல்ல அன்னையை விட அண்ணனைத்தான் அதிகம் தேடினாள் அம்மு.

ஆதிக்கு பதினைந்து வயது இருக்கும் சமயம் பரமேஸ்வரி இறந்துவிட ஏற்கனவே முதுமையின் பிடியில் இருந்த அருளாளன் மேலும் தளர்ந்து போனார்.

வரதன் விவசாய வேலைகள் கடை வேலைகள் என முழுவதும் தனியாக கவனிக்கும் நிலைக்கு ஆளானார்.

தந்தையின் சுமை அறிந்து பதினோராம் வகுப்பில் அடியெடுத்து வைத்திருந்த ஆதி அவருக்கு உதவியாக கடைக்குச் செல்லத் தொடங்கினான்.

ஒரு வருடத்திற்குள்ளேயே கடை விற்பனைக்கான துணிகளை வரவழைப்பது, நிதி நிர்வாகம், கணக்குகளைக் கையாள்வது மற்றும் விவசாயத்தையும் கவனிப்பது என அனைத்தையும் பழகிக்கொண்டான் ஆதி.

கணிசமான தொகை செல்வா மற்றும் கயல் இருவருக்கும் வங்கியில் வரவு வைக்கப் பட்டிருப்பதை பார்த்து அதிர்ந்த ஆதி அதுபற்றி தந்தையிடம் கேட்க,

“இது குடும்பத்திற்கு பொதுவான வருமானம். மூன்று பேருக்குமே சமமாகப் போடப்பட்டிருக்கிறது. இது தாத்தாவின் விருப்பம்” என முடித்துக்கொண்டார் அவர்.

அதற்குமேல் எதுவும் கேட்கவில்லை ஆதி.

அவனுக்குக் கடை நிர்வாகத்தில் இருந்த ஆர்வத்தினால் அதிலேயே அவன் மூழ்கியிருக்க,

படிப்பில்தான் கவனம் சிதறிப்போனது. பன்னிரண்டாம் வகுப்பில் மிகவும் குறைவான மதிப்பெண்களே பெற்றிருந்தான் ஆதி. அதே வருடம் கமலக்கண்ணன் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேறியிருந்தான்.

சுலோச்சனா கமலக்கண்ணனுடன் ஆதியை ஒப்பிட்டு கிண்டலாகப் பேச லட்சுமிதான் மிகவும் வருந்தினார்.

கணவரிடம், “அவன் கடைக்கு வருவதால்தான் மதிப்பெண் குறைந்து போனது. அவனை பொறியியல் படிக்க வைக்க முடியாமல் போய்விட்டது. அவன் வயதிற்கு மீறிய வேலைகளைப் பார்க்க வைத்தது தவறு!” எனப் புலம்ப,

அதைக் கேட்டுக்கொண்டிருந்த எட்டு வயதே ஆகியிருந்த அம்மு, “ராஜா அண்ணாதான் எல்லா வேலையும் பார்க்கறாங்க,

கமல் அண்ணா ஸ்கூலுக்கு போயிட்டு வந்த பிறகு டியூஷனெல்லாம் போனாங்க. அதனாலதான் நிறைய மார்க் வங்கியிருக்காங்க,

அதனால ராஜா அண்ணாவை நீங்க ஒண்ணும் சொல்லாதீங்க” என நேரடியாக சுலோச்சனாவை சொல்லிவிட்டாள்.

பரமேஸ்வரி இருந்த வரை எதைப் பற்றியும் கவலை இன்றி சின்ன மருமகளைக் கண்டிப்பார். ஆனால் அவர் இறந்த பின் தங்கையின் மகளுடைய குணம் தெரிந்து அருள் அவளை எதுவும் சொல்வதில்லை.

எதாவது சொன்னால் பிறந்த வீட்டிற்குப் போய் உட்கார்ந்துகொண்டு பிரச்சினையை இழுக்கும் மனைவியிடம், பிள்ளைகளுக்காகவேணும் பணிந்து போகவேண்டிய நிலையில் இருந்ததால் குடும்பத்தினரிடம் பாசமும் அக்கறையும் இருந்த போதிலும் செல்வமும் அவளை ஏதும் கேட்பதில்லை.

லட்சுமி அவளிடம் அதிகம் பேசுவதையே தவிர்த்துவிடுவார். வரதன் தனது எல்லைக்குள்ளேயே இருந்துக் கொள்வார்.

மேலும், “எதாவது பேசினால் அது பிரிவினையில் கொண்டு போய் விட்டுவிடும். குடும்பம் உடைவதைத் தாத்தாவால் தாங்க முடியாது. சித்தப்பாவும் மிகவும் துன்பப் படுவான்” எனச் சொல்லி ஆதியையும் ஏதும் பேச விடாமல் தடுத்துவிடுவார் அவர்.

அனைவரிடமும் அன்பை மட்டுமே காட்டும் தாத்தாவையும், சூழ்நிலை கைதியாக இருக்கும் சித்தப்பாவையும் எண்ணி மேலும் கமல், விமல் இருவருமே குடும்பத்தில் அனைவருடனும் பற்றுதலுடன் இருக்கவும் ஆதியும் அவர் விஷயத்தில் தலையிடுவதில்லை.

மொத்தத்தில் அனைவருமே 'துஷ்டரைக் கண்டால் தூர விலகு' என்ற நிலையிலேயே இருந்தனர்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் அம்மு இவ்வாறு பேசவும் கொதி நிலைக்குப் போன சுலோச்சனா, “இந்த வயசுல உனக்கு இவ்வளவு வாய் ஆகாது” என்று தொடங்கி திட்டித் தீர்த்தாள்.

அத்துடன் நிற்காமல் கயலிடம் சொல்லிப் புலம்பவும் செய்தாள்.

“எல்லாம் உன்னைத்தான் சொல்லணும் ஆதி கடைக்கு போக ஆரம்பிக்கும் போதே உன்னிடம் சொன்னேன் நீதான் கண்டுக்கல.

கடையை அவன் பெயரில் அப்பா எழுதிவைத்து விட்டால் என்ன செய்வது?” என அவர் பங்கிற்கு எரியும் கொள்ளியில் எண்ணை வார்த்தார் கயல். அவர் ஆதங்கம் அவருக்கு.

எப்பொழுதும் பெருமைக்காகவாவது தனது தோழி என யாரையாவது அழைத்துக்கொண்டு கடைக்கு போய், தள்ளுபடி என்ற பெயரில் பெரியத் தொகையை குறைத்து வாங்க வைப்பார் கயல். இது அடிக்கடி தொடர்ந்த்து.

ஒருநாள், “அத்தை உங்களுக்கு வேண்டுமானால் என்ன தேவையோ வாங்கிக்கோங்க. வேறு யாருக்கும் அதிக டிஸ்கவுண்ட்லாம் கொடுக்க முடியாது” என ஆதி கறாராக சொல்லிவிட,

அதில் அவனிடம் கோபம் இருந்தாலும், அவனது திறமையைப் பார்த்து தனது மகளை அவனுக்குக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததால் அதைக் கண்டுகொள்ளவில்லை கயல்.

ஒரு முறை வீட்டு விசேஷத்தில் தன் எண்ணத்தை அவர் சொல்லவும்,

“எனக்கு அம்மு எப்படியோ வேலுவும் அப்படியே! இனிமேல் இதுபோல் பேசாதீங்க அத்தை” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டான் ஆதி.

வேல்விழி அவனது அத்தை போன்று இல்லாமல் மாமா ராமலிங்கத்தைப் போன்று பொறுமைசாலிதான். ஆனாலும் அத்தையின் குணத்தைப் பார்த்து அவன் அந்தப் பேச்சை விரும்பவில்லை.

அவனிடம் இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் தகர்ந்துவிட, நேரத்தை எதிர்பார்த்திருந்தார் கயல்.

சமயம் பார்த்து சுலோச்சனாவை தூண்டியும் விட்டுவிட்டார்.

அதன் பிறகு பிறந்த வீட்டில் போய் இருந்துகொண்டு சுலோச்சனா பிரச்சினையைத் தொடங்க, அவளது அண்ணன்களும் அவளுக்குத் துணை நிற்க வேறு வழியில்லாமல் செல்வம்,

“அண்ணா! ஆதியின் படிப்பு பாதிக்க வேண்டாம் நான் நேரம் கிடைக்கும்போதெல்லாம் கடைக்கு வரேன்” என வரதனிடம் சொல்லவும் அவருக்கு நிலைமை புரிந்துபோனது.

மேலும் சுலோச்சனா கடையை ஆதியின் பெயரில் மாற்றிக்கொள்ள அவர்கள் முயல்வதாய் குற்றம் சாட்டவும், வரதனும் அருளாளனும் மனம் உடைந்து போனார்கள்.

“எனக்கு இந்தக் கடையே வேண்டாம். இந்த ஜவுளி வியாபாரமும் வேண்டாம். இனி கடை நிர்வாகத்தில் நான் தலையிட மாட்டேன். நான் கேட்டரிங் படிக்கப் போகிறேன்” எனத் தந்தைக்கு பிரச்சினை வராதவாறு ஒதுங்கிக் கொண்டான் ஆதி.

மேலும் தனியார் கல்லூரி ஒன்றில் பொறியியல் படிப்பிற்கு வரதன் ஏற்பாடு செய்து வைத்திருந்த போதிலும் அதை மறுத்து, கேட்டரிங் படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கத் தொடங்கினான் ஆதி.

பத்தாம் வகுப்புவரை ஆதி, சசிகுமார், வினோத் மூவரும் ஒன்றாகப் படித்தவர்கள்.

வினோத் மருத்துவப் படிப்பிற்கான பிரத்தியேகப் பிரிவைத் தேர்ந்தெடுத்து வேறு பள்ளியில் சேர்ந்துவிட,

பதினொன்றாம் வகுப்பை அதே பள்ளியில் தொடர்ந்தனர் மற்ற இருவரும்.

சசிகுமார் பொறியியல் சேர்ந்துவிட, அதே கல்லூரியில் இருந்த கேட்டரிங் இன்ஸ்டிடூடில்தான் ஆதி சேர்ந்திருந்தான்.

***

முதலில் தம்பியை இணைத்துக்கொண்டு கடையை நிர்வகித்த வரதன், சுலோச்சனாவின் அண்ணனின் தேவையில்லாத தலையீட்டினால் ஒரு கட்டத்தில் முழுவதுமாக செல்வத்திடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக்கொண்டு விவசாயத்தை மட்டுமே கவனிக்கத் தொடங்கினார்.

அம்முவைப் பொறுத்த மட்டும் ஆதிதான் அவளது ஹீரோ. அவனது செயல்கள் அனைத்தையும் அவளும் பின்பற்றுவாள்.

அவன் படிக்கும் புத்தகங்கள் அனைத்தையும் படிப்பாள். அனைத்தும் தன்னம்பிக்கையை வளர்க்கும் புத்தகங்கள்.

அவன் புதிது புதிதாகச் செய்து கொடுக்கும் உணவு வகைகளைப் பற்றி பள்ளித் தோழர்களிடம் பெருமையடித்துக் கொள்வாள் அம்மு.

அவன் ஓய்வாக உட்கார்ந்திருக்கும் நேரம் சத்தமில்லாமல் வந்து, இருக் கைகளாலும் அவன் கண்களை மூடி அவனது தோளில் நாடியைப் பதித்து அவனுடன் இழைவது அவளுக்கு பிடித்தமான விளையாட்டு. ஆதியுமே அதை ரசிப்பான்.

அவளது பிஞ்சுக் கைகளின் தீண்டலில் தன்னை மறந்துபோவான் ஆதி.

ஆனால் வீட்டில் மட்டுமே அவன் அப்படி. அங்கே நடக்கும் பிரச்சினைகளிருந்து தப்பிக்கவே தற்காப்புக் கலைகளை பழகத் தொடங்கினான். கோபமும் வேகமும் அவனிடம் எப்போதுமே குடியிருக்கும்.

கல்லூரியில் முதன்மையாகத் திகழ்ந்தான்.

கல்லூரிப் படிப்பின் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கவும், தனது செலவுகளுக்கு தந்தையை எதிர்பார்த்திருக்கப் பிடிக்காமல் சசிகுமாரையும் சேர்த்துக்கொண்டு சிறிய அளவில், ‘அமிர்தம் புட்ஸ்’ என்ற பெயரில் வணிக நிறுவங்களுக்கு பாக்கட் உணவுகள் செய்து கொடுக்கத் தொடங்கினான்.

மறுபடியும் படிப்பு வேலை என அவன் மூழ்கவும் வீட்டில் நடக்கும் குளறுபடிகளின் பாதிப்பினால் அம்முவின் மதிப்பெண்கள் திருப்தி அளிக்கும் விதமாக இல்லாமல் போகவே முதல் முறை பட்ட சூட்டினால் வரதன் அம்முவை விடுதியில் சேர்த்து படிக்க வைக்க முடிவு செய்தார்.

ஆதி அதை விரும்பாமல் எதிர்த்து நிற்க, “இல்ல ராஜா! அம்மு இங்கே இருந்தால் அவள் மனநிலை ரொம்பவே பாதிக்கும். சுலோவுடைய தங்கையின் பெண் ஜோதி வேறு அடிக்கடி இங்க வந்து அம்முவை வம்புக்கு இழுக்காறா.

என்னாலயும் ஒண்ணும் சொல்ல முடியல” என லட்சுமி சொல்லவும், வேறு வழியில்லாமல் அந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக்கொண்டான் ஆதி.

“உனக்கு எப்பொழுது என்ன பிரச்சினைனாலும் என்னிடம் சொல்லணும் அம்மு. எப்பொழுதுமே அண்ணா உன்னுடன் இருப்பேன் அதனால எதுக்கும் பயப்படாதே!” என அவன் கொடுத்த துணிவில் எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையுடன் முல்லையில் சேர்ந்தாள் அம்மு.

நேர்த்தியும், முழுமையான ஈடுபாடும் கடுமையான உழைப்பும் சேர்ந்து ஆதியின் தொழில் வேகமாக வளரத் தொடங்கியது.

அம்மு ஒவ்வொரு விடுமுறைக்கு அங்கே வரும்பொழுது முழுமையாகத் தனது நேரத்தை அவளுடன் செலவிடுவான் ஆதி.

மறுபடி திரும்பச் செல்லும்பொழுது அவளுக்கான பரிசுகள் இருக்கும்.

ஒரு சில சமயங்களில் மல்லியைப் பற்றி ஆதியின் காதில் ஓட்டை விழும் அளவிற்குப் பேசி அவனை ஓட வைப்பாள் அம்மு.

ஆனால் அங்கே அவள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எதையுமே அவனிடம் சொன்னதில்லை அம்மு. வீட்டை விட அந்த விடுதி ஒன்றும் அவளுக்கு துன்பத்தைக் கொடுக்கவில்லை போலும்.

ஆதி படிப்பை முடித்து முழு நேரமாகத் தொழிலை நடத்தத் தொடங்கினான். அதனால் அவனது வருமானமும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது.

ஆதியின் வளர்ச்சியைப் பார்த்த கயல்விழிக்கு மகளை ஆதிக்கு மணமுடிக்க வேண்டும் என்ற ஆசையும் அதிகரிக்கவே செய்தது.

அவன் முன்பு பேசியவை அறியாத வயதில் அவன் பேசிய பேச்சு என்றே நினைத்தார் அவர். அவன் அப்பொழுதிலிருந்தே தெளிந்த சிந்தனை உடையவன் என்பதை அறியாமல் போனது அவரது தவறு!

சுலோச்சனாவோ அவனது வளர்ச்சியில் உள்ளுக்குள்ளே புகைந்து கொண்டிருந்தார், தன் மக்களை விட அவன் அதிகமாக முன்னேறுவது பொறுக்காமல்.

அவர்கள் குடும்பத்திற்கென பொதுவான உபயோகத்திற்காக ஸ்கார்பியோ ஒன்று இருந்தது அவர்களுக்கு.

அதை உபயோகிக்க விரும்பாமல் இரண்டாம் ஆண்டு படிப்பு முடித்தவுடனேயே பைக் ஒன்றை வாங்கியிருந்தான் ஆதி.

ஆனால் தனிப்பட்ட உபயோகத்திற்கென கார் ஒன்றை வாங்கும் எண்ணம் தோன்றவே, அம்மு விடுமுறையில் வரும்வரை பொறுத்திருந்து அவளது விருப்பப்படி 'ஸ்விப்ட்' ஒன்றை வாங்கினான் அவளது ராஜா அண்ணா.

அப்பொழுதுதான் அம்முவை அழைத்துச்சென்று டாலரில் ‘அ’ என்று பொறித்த அந்த செயினை பிரத்தியேகமாக செய்து அவளுக்கு வாங்கிக் கொடுத்தான் அவன்.

அடுத்த விடுமுறையில் அவள் வரும்பொழுது, அவர்கள் பள்ளியில் எடுத்த க்ரூப் போட்டோவை அவனிடம் காண்பித்த அம்மு அதில் இருந்த மல்லியை அவனுக்குச் சுட்டிக்காட்டவும் தவறவில்லை.

அம்முவிற்காக அதைப் பார்த்தானே தவிர, மல்லியின் முகம் அவன் மனதில் கொஞ்சம் கூடப் பதியவில்லை.

விடுமுறை முடிந்து விடுதிக்கு அம்மு திரும்பிய இரண்டாம் நாளே அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் வரவும், ஆதி தானே நேரில் சென்று அம்முவைப் பார்க்க, கிளினிக் ரூம் என்று வெறும் பெயரளவில் அவர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த அறையில் தனியாகப் படுக்கவைக்கப்பட்டிருந்தாள் அம்மு.

கடுமையான ஜுரத்தில் இருந்தவளின் உடல் வேறு அதிகமாக நடுங்கிக்கொண்டிருந்தது. எதுவுமே பேசும் நிலையில் அவளும் இல்லை.

பெயருக்கு எதோ மருத்துவம் செய்திருந்தார்களே தவிர, முறையான மருத்துவம் அவளுக்கு அளிக்கப்படவில்லை என்பது ஆதிக்குப் புரிந்து போனது. ஏனோ அதற்குமேல் அவளை அந்த விடுதியில் விட அவனுக்கு மனம் இடம் கொடுக்கவில்லை.

தொலைப்பேசி மூலமாக அவன் கான்டீன் நடத்திக்கொண்டிருந்த ஒரு மிகப்பெரிய பள்ளியிலேயே அவளுக்கு இடம் வாங்கியவன், பள்ளியில் டீ.சி.க்கு விண்ணப்பித்து விட்டு, விடுதி அறையை காலி செய்துகொண்டு அம்முவுடன் அங்கிருந்து கிளம்பினான் ஆதி.

தந்தையிடம் கூட அனுமதி கேட்கவில்லை அவன். அந்த அளவிற்குக் கோபத்தில் இருந்தான் அவன் தங்கையின் நிலைமையால்.

அவன் காரை கிளப்பிக்கொண்டு அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க, அவனை நோக்கி ஓடிவந்தார் அந்த முதிய பெண்மணி கங்கம்மா.

அவனது புறமாக இருந்த காரின் கண்ணாடியை அவன் இறக்க ஒரு நோட் புக்கை அவனிடம் கொடுத்து, “பாப்பாவோடது” என்று கூறி விட்டு, “தம்பி! மறுபடியும் பாப்பாவை இங்கே அழைச்சிட்டு வராதீங்க!” எனப் பயத்துடன் சொன்னவர்,

அக்கறையுடன், “அம்மு பாப்பா! பார்த்து பத்திரமா இருந்துக்கோ!” என்றார். அளவிற்கதிகமான எச்சரிக்கை இருந்தது அவரது குரலில். பதிலுக்குத் தலையை மட்டும் ஆட்டிவைத்தாள் அம்மு அவ்வளவே!

அம்முவின் உடல்நிலையை குறித்துத்தான், அந்த முதியவர் சொல்கிறார் என நினைத்தான் ஆதி.

அதில் மறைமுகப் பொருள் அடங்கியிருப்பதை அவன் புரிந்துகொண்டிருந்தால் பின்னாளில் நடக்கவிருக்கும் பயங்கரங்களை தடுத்திருக்கலாமோ அந்த தேவாதிராஜன்!.

You cannot copy content