மோனிஷா நாவல்கள்
Meendum Uyirthezhu - 1
Quote from monisha on July 25, 2022, 4:13 PMமுன்னுரை
பழங்கால நூற்றாண்டுகளில் தொடங்கப் போகும் இந்தக் கதை பின்னர் இன்றைய காலகட்டத்தில் நடைபெறுவதாக அமையப் போகிறது. அறிவியல் ரீதியாகச் சொன்னால் Genetic memory, ஆன்மீக ரீதியாய் சொன்னால் மறுபிறவி என்றும் சொல்லலாம்.
இயற்கையில் இயைந்திருந்த நம் வாழ்க்கை இயந்திரத்தனமான வாழ்க்கையை நோக்கிப் பயணிப்பதை சொல்லவும், நம் எண்ணங்கள் நூற்றாண்டுகள் பல கடந்தும் சில மரபியல் ஞாபகங்களைச் சேகரித்து வைத்திருக்கும் என்ற சில மைய கருத்தைக் கொண்டும் இந்தக் கதை பயணிக்கப் போகிறது.
இவ்வாறு செல்லப் போகும் நம் கதையின் போக்கில் காதல், கோபம், துவேஷம், ஏக்கம், பழியுணர்வு மற்றும் நிறைவேறாத ஆசைகளோடு பல காலங்கள் முன்பு உயிரற்று தொலைந்து போகும் மூவர் மீண்டும் உயிர்த்தெழுந்து சந்தித்துக் கொண்டால்... இப்படி அமையப் போகிறது நம் கதைக்களம்...
இக்கதையில் இடம்பெறும் பெயர்களும் கதாப்பாத்திரங்களும் கற்பனையே.
1
ருத்ரதேவன்
"கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்
கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்"
என்ற வாக்கியத்திற்கு ஏற்ப கொங்கு நாடு பழம் பெரும் தமிழனின் வாழ்வியல் வரலாற்றில் முக்கிய இடம் பெற்றிருந்தது.
பண்டைய தமிழகம் சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு மற்றும் கொங்கு நாடென பிரிந்திருந்தது. இதில் கொங்கு நாடு... மலை தொடர்ச்சிகள், காடு சார்ந்த இடங்கள் மற்றும் வயல் வெளிகளாகவே அமைந்திருந்தன. ஆதலால் குறிஞ்சி, முல்லை, மருதமே கொங்கு நாட்டு நிலங்களுக்கு உட்பட்டவையாக இருந்தன எனலாம்.
அன்று பொன்னி என்றழைக்கப்பட்ட காவிரி… குடகு மலையில் தோன்றி, கொங்குநாட்டில் தவழ்ந்து, பின் சோழ நாட்டில் தாயாகிச் சிறக்கின்றாள்.
பார்வைகள் திரும்பும் பக்கமெல்லாம் பசுமையுடன் காட்சியளித்தது.
நீலம், அல்லி, அனிச்சம், முல்லை, நறவு எனப் பல வகையான மலர்கள் வண்ணமயமாகப் பூத்து குலுங்கிக் கொண்டிருக்க, தேனீக்கள் தேடலின்றி தம் தேவையைத் தீர்த்து கொண்டன. பல இடங்களில் தேனீக்கள் தம் கூட்டுக்களில் தேனைத் தேவைக்கேற்ப சேகரித்து வைக்க, கொங்கு நாட்டின் பெரும் சிறப்பாகத் தேனும் குறிப்பிடத்தக்கதாய் அமைந்தது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கொங்கு நாடு சிறு சிறு பிரிவுகளாய் பல சிற்றரசர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அம்மன்னர்கள் நட்பு பாராட்டிக் கொண்டாலும் அவ்வப்போது போர் மேற்கொண்டு தங்கள் எல்லையை விஸ்தரிக்கவும் முயன்றனர்.
கொங்கு நாட்டைச் சுற்றிலும் மலைகள், காடுகள் என இயற்கை அரணாய் நிற்பதால் பேரரசர்களின் பிரவேசம் எதுவும் நிகழாத சமயம் அது. வைணவ, சைவ சமயங்களுக்கு இடையில் பூசல் இருந்து வந்தாலும் அன்று வாழ்ந்த மக்கள் எல்லோரும் இரு ஸ்தலங்களுக்கும் பாகுபாடின்றி பக்தியோடு சென்று வழிப்பட்டனர்.
மலைப்பிரதேசங்கள் முழுவதும் தமிழ் கடவுள் முருகன் அருள்பாலித்துக் கொண்டிருக்க, மலைவாழ் இனங்கள் ஒற்றுமையாய் அவ்விடங்களில் வசித்திருந்தனர்.
அந்த அழகிய பிரதேசத்தில் அடர்ந்து விரிந்து வளர்ந்திருந்த மரங்களின் கிளைகளில் பறவைகள் கூடு கட்டி க்ரீச் க்ரீச்சென சத்தமிட்டபடி இருக்க, வயல்களின் வரப்புகளில் தண்ணீர் சலசலவென ஓசை எழுப்பியபடி பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தது.
வேங்கை மரம், அரசமரம், புன்னை மரம், புளிய மரம், வேப்ப மரம் என எல்லா வகையான மரங்களும் அவற்றின் உயரத்தாலும் பிரம்மாண்டமான தூண்களைப் போன்ற அடித்தளங்களாலும் தங்களின் நீண்ட ஆயுட் காலத்தைப் பறைசாற்றிக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது.
அங்கிருந்து பார்க்கும் தொலைவிலேயே தென்னை மரங்கள் தென்றலின் தீண்டலால் தலையசைத்து ஆடிக்கொண்டிருக்க, வயல்வெளிகள் விவசாயிகளின் கடும் உழைப்பால் செழிப்புற காட்சியளித்தன.
அந்த ரம்மியமான சூழலை மேலும் மேலும் அழகுறச் செய்து கொண்டிருந்தது அரங்கநாதன் திருக்கோயிலின் நிமிர்ந்த கோபுரம். அந்தத் திருத்தலத்தைச் சுற்றிலும் சுவாமியின் அலங்காரத்திற்கு வேண்டிய மலர்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்க, செழிப்பான காரைப் பசுக்கள் கோயிலுக்கு வெளியே கட்டி வைக்கப்பட்டிருந்தது.
குளங்களில் தாமரைப் பூக்கள் புன்னகை செய்ய அங்கே இறைவனின் அருளோடு இயற்கையின் அருளும் இயைந்திருந்ததை உணர முடிந்தது.
இத்தகைய அழகிற்கு இலக்கணமாய் விளங்கிய ஆரை நாடும் (இன்று கோவை, அவினாசி எனப் பெயர் பெற்றிருக்கிறது) அதன் சுற்றுவட்டார கிராமங்களை எல்லாம் தம் ஆட்சியின் கீழ் சிற்றரசராய் இருந்த மகாதேவன் சௌந்தர கொங்கணன் ஆண்டு வந்தார்.
மலைகளும் காடுகளும் இயற்கை அரணாய் அவரின் ஆட்சிக்குட்பட்ட நிலங்களைக் காத்து நின்றது. அங்கு வாழும் மக்களின் முக்கிய தொழிலாய் கருதப்படுவது ஆநிரைகளை வளர்ப்பதும் தினை, வரகு, சாமை போன்றவற்றை விளைவிப்பதுமே.
மன்னர் சௌந்தர கொங்கணன் என்ற அவரின் பெயருக்கு ஏற்றார் போல் அவர் ஆளுமைக்குக் கீழ் இருந்த நிலங்கள் சௌந்தரியத்துடன் திகழ்ந்தன.
அவற்றை செவ்வனே பேணிக் காத்த மன்னர் சௌந்தர கொங்கணனுக்கும் பட்டத்து ராணி ருத்ரதேவிக்கும் வரிசையாய் மூன்று பெண் வாரிசுகளே ஜனித்தது. பல வருடகாத்திருப்புக்குப் பின் கிடைத்த அரியப் பொக்கிஷமாய் ஓர் ஆண் வாரிசை ஈன்றெடுத்தார் ருத்ரதேவி. அவனே ஆரைக்கோ ருத்ரதேவன்.
அறிவுக்கூர்மை, கம்பீரம், வீரம் என அரசனுக்கு உரிய அனைத்துப் பண்புகளும் ஒருங்கே பெற்றுச் சிறப்புடன் திகழ்ந்தவன்.
சாதாரண பெண்கள் முதற்கொண்டு இளவரசிகள் பலரும் ருத்ரதேவனைக் கண்ட மாத்திரத்தில் காதல் வயப்படும் கம்பீர தோற்றம் உடையவன் அவன்.
இருப்பினும் அவன் அப்படி எந்தப் பெண்ணையும் கண்டு லயிக்கவோ காதல் வயப்படவோ இல்லை. தன் சகோதரிகளையும் தாயையும் தவிர்த்து வேறு பெண்களிடம் அவன் அதுவரை நெருங்கிப் பழகியதும் இல்லை.
இன்று ருத்ரதேவனுக்கு அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கப் போகிறது. அவன் வாழ்க்கையையே புரட்டிப் போடப் போகும் சந்திப்பு நிகழப் போகிறது. இந்தச் சந்திப்பினால் அப்பிறவி முழுவதும் அவன் நிம்மதியற்று போவான். ஏன் வரும் பிறவியிலும் கூட... என்ன செய்வது... விதியின் வசம் நிகழப் போகும் அந்த நிகழ்வைத் தடுக்கும் வல்லமை யாரிடமும் இல்லை.
ஆதவன் தன் காதல் பார்வையை வீசி பூமித்தேவதையை பிரகாசிக்கச் செய்திருக்க, அந்த விடியலில் ருத்ரதேவனும் சில நொடிகளில் தன் காதல் தேவதையை சந்திக்கப் போவதை உணராமல் அரங்கநாதன் ஆதுரசாலையை நோக்கி தன் கம்பீரமான வெண்புரவியின் மீது நிமிர்ந்து அமர்ந்தபடி பயணித்து கொண்டிருந்தான்.
பச்சைப் பசேலென்று இருந்த அந்தப் புல்வெளியில் அவனின் குதிரை மெதுவாகவே நடக்க, மூச்சுக் காற்று பட்டாலே துவண்டு விடும் மென்மையான செம்மஞ்சள் அனிச்சம் மலர்கள் கண்ணைக் கவரும் விதமாய் வழியெங்கும் மலர்ந்திருந்தது.
அந்த வண்ணமயமான காட்சியை இளவரசன் ருத்ரதேவன் ரசித்துப் பார்த்திருந்த சமயத்தில் அவனின் அடர்ந்த புருவங்களுக்கு கீழே உள்ள கூர்மையான விழிகள் அப்படியே ஸ்தம்பித்துப் போனது.
அவன் பார்வை நிலைக்கொண்ட குளத்தின் அருகில், தன் குதிரையின் கயிற்றைப் பிடித்து நகரவிடாமல் லாவகமாய் நிறுத்தினான். மேலே சென்றால் அந்தக் குளக்கரையில் அமர்ந்தபடி தண்ணீரில் தெரியும் தன் பிம்பத்தைத் தானே பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் அந்த அழகுச் சிலையைத் தொந்தரவு செய்ய நேரிடுமே.
விழியில் தொடங்கி அவளின் இதழ்கள் வரை செவ்வனே செதுக்கிய சிலையெனவே அவள் தோன்றினாள்.
'மனதை மயக்கும் அந்த அழகு தேவதை யாராக இருக்கக் கூடும்?! அவளின் உடையும் ஆபரணங்களும் அவள் இளவரசி அல்ல என்பதைத் தெளிவுபடுத்தியது. இருப்பினும் நொடிப் பொழுதில் வேறு பெண்களை நிமிர்ந்து நோக்கிடாத தன் கண்ணியத்தை உடைத்தெறிந்த அவள் பேரழகியின் வம்சம்' என எண்ணி வியப்புற்றான்.
அந்த அழகு பதுமையோ தன் கரத்தில் காலியான குடத்தைப் பிடித்தபடி நீரில் தெரியும் அவளின் பிம்பத்தையே கண் கொட்டாமல் ரசித்த வண்ணம் இருக்க, ருத்ரதேவன் பொறுமையிழந்து அந்தப் பெண் நிலவின் உருவத்தைத் தரிசிக்க எண்ணி தன் கம்பீரமான குரலை மென்மையாக மாற்றிக் கொண்டு,
"நீ பேரழகிதான் பெண்ணே... அதில் ஒன்றும் ஐயமில்லை" என்றான்.
இப்போது சிலையாய் இருந்தவள் அவனின் குரலைக் கேட்டு உயிர் பெற்று யாரென்று திரும்பி நோக்கினாள். அவளின் பிம்பத்தைப் பார்த்தே கிறங்கிப் போனவன் அவளின் வதனம் கண்டு தன்னிலை மறந்தான்.
நீண்டு தொங்கிக் கொண்டிருந்த கேசமோ முன்புறம் அவள் தோள்களில் ஓய்வெடுக்க, அவளின் சிவந்த இதழ்கள் பூவிதழ்களோ என்று குழப்பமுறச் செய்ய... வில்லாய் வளைந்திருந்த அவளின் புருவத்தின் கீழே இமைகளின் கிரீடத்தைச் சுமந்தபடியாய் மான் விழிகள் அழகாய் படபடக்க... நெற்றியின் மத்தியில் வேலெனக் கூர்மையாய் நீண்டிருந்த பொட்டு அவன் இதயத்தில் பாய்ந்து பதம் பார்த்தது.
அந்த நொடி ருத்ரதேவன் தான் பூமியில் ஜனித்ததிற்கான பிறவிப் பயனை அடைந்துவிட்டதாக எண்ணி மகிழ்வுற்றான். அவளோ அவனைப் பார்த்த நொடிப் பொழுதில் அவன் இளவரசர் ருத்ரதேவன் என்பதை அறிந்து கொண்டுவிட்டாள்.
ஏற்கனவே தம் தோழிகளோடு சேர்ந்து இளவரசன் ருத்ரதேவனை மறைந்திருந்து ஒரு முறை பார்த்தது நீங்காத நினைவுகளாய் அவள் மனதில் அழுத்தமாய் பதிவாகியிருந்தது. இத்தகையவனை மணந்து கொள்ளும் அதிர்ஷ்டசாலி யாரோ என்று எண்ணி ஆதங்கப்பட்டதும் அந்த நொடியில் மின்னலெனத் தோன்றி மறைந்தது.
வெகுதூரத்தில் பார்க்கும் போதே பிரமிப்புற செய்தவன் இன்று இத்தனை அருகாமையில் நிற்கிறான். தான் செய்த செயலைப் பார்த்து அவன் பரிகாசம் செய்கிறான் என்று நாணம் கொண்டவள், குடத்தில் தண்ணீரை நிரப்பாமலே தன் கொலுசு சத்தம் ரீங்காரமிட அங்கிருந்து துள்ளி ஓடினாள்.
ருத்ரதேவன் தன் குதிரையின் கயிற்றை இழுத்து வேகமாய் பாய்ந்து வந்து அவளை வழிமறித்து நிறுத்தினான்.
அவனின் செயலில் சற்று மிரண்டு போனாலும் அவள் ஒருவாறு துணிவை வரவழைத்துக் கொண்டு, "வழி விடுங்கள்... நான் செல்ல வேண்டும்" என்று உரைக்க,
தான் யாரென்று தெரிந்துதான் இவள் இவ்விதம் பேசுகிறாளா என்று தலையை சாய்த்துப் பார்த்தபடி, "குடத்தில் தண்ணீர் நிரப்ப வந்துவிட்டு இப்போது என்னைக் கண்டபின்... நீ வந்த வேலையைச் செய்ய மறந்து விட்டாயே" என்று அவனின் இதழ்களில் வேடிக்கையான புன்னகை ததும்ப உரைக்க,
அவன் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்தவளாய், "இப்போது ஒன்றும் அவசரமில்லை. நான் பிறகு வந்து தண்ணீர் எடுத்துக் கொள்கிறேன்... நான் என் குடிலுக்குச் செல்ல வேண்டும்... வழி விடுங்கள்" என்று மீண்டும் அதே துணிவுடன் உரைத்தாள். அவள் தடுமாறாமல் பேசும் விதத்தில் வெளிப்பட்ட அவளின் துணிவு அவனை மேலும் கவர்ந்திழுத்தது.
ருத்ரதேவன் ஏதும் பேசாமல் அவன் குதிரையை விலக்கிக் கொள்ள, அவள் முன்னேறி சென்றாள்.
அவன் பின்னோடு வந்தபடி, "உன் குடில் வெகு தொலைவில் உள்ளதோ?" என்று அவன் வினா எழுப்ப,
தன்னை ஏன் அவன் பின் தொடர்கிறான் என்று புரியாமல், "இல்லை பக்கம்தான்... ஆதுர சாலைக்கு அருகாமையில்" என்று அவள் உரைக்க,
அப்போதுதான் தான் ஆதுர சாலைக்கு வேலை நிமித்தமாய் வந்தோம் என்று ருத்ரதேவனுக்கு நினைவு வந்தது.
எந்த வேலைக்கு வந்து தான் மதி மயங்கி என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் தோன்றிய போதும் அவள் பின்னோடு சென்று கொண்டிருப்பதை அவனால் தடுக்க முடியவில்லை.
"பெண்ணே நில்" என்று கொஞ்சம் அதிகாரத் தோரணையில் அழைத்த ருத்ரதேவன் தன் குதிரையிலிருந்து தாவி இறங்கினான். அவன் கம்பீரமாய் அவளருகில் நடந்து வந்து நிற்க...
அவனின் அதீத உயரமும், கட்டுடலான தேகமும், கூர்மையான பார்வையும் கொண்ட அவனை நிமிர்ந்து பார்க்க அவள் மனம் தவித்தாலும் அந்த எண்ணத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு தலையைக் கவிழ்ந்தபடி பதிலேதும் பேசாமல் அவள் மௌனமாய் நின்றாள்.
ருத்ரதேவன் அவளை ஆழமாய் நோக்கித் தொண்டையைக் கனைத்தபடி, "நீ யாருடைய மகள்?" என்று வினவ,
"நான் கோட்டையின் தலைமை காவலாளியின் மகள்" என்றாள் அவள்.
"தலைமை காவலாளி எனில் சோம சுந்தரரா?!"என்று அவன் சந்தேகமாய் கேட்க, "ஹ்ம்ம்" என்று தலையசைத்து ஆமோதித்தாள்.
"உன் பெயர் என்ன?" என்று அவன் புருவத்தை மேலுயர்த்தி கேட்க அவளின் பொறுமை கரைந்து போனது.
"நான் ஏன் என் பெயரைச் சொல்ல வேண்டும்... என்னைப் போக விடாமல் வழிமறித்து தாங்கள் ஏன் என்னைக் கேள்வி மேல் கேள்வி கேட்கிறீர்கள்... நான் ஏதேனும் குற்றம் செய்தேனா?" என்று படபடவென பொறிந்து தள்ளினாள்.
அந்தக் கோபத்தை உள்ளூர ரசித்தபடி, "நீ செய்த குற்றம் என்னவென்று நீ அறிந்திருக்கவில்லையா பெண்ணே?" என்றான்.
இப்போது அவள் விழிகளை உயர்த்திப் புரியாமல் அவனை நோக்க, ருத்ரதேவன் அந்த விழியின் விசையால் தன் மனதில் உள்ளதைப் பளிச்சென்று உரைத்துவிட்டான்.
"உன் அழகால் என் மனதைக் களவாடிவிட்டாயே... அது குற்றம்தானே!"
அவள் அவனின் சொற்களைக் கேட்டு அதிர்ந்து போனாள். இனி தான் அங்கே நிற்பது உசிதமில்லை என்று நினைத்துக் அவனைத் தவிர்த்துவிட்டு முன்னேறிச் சென்றவளிடம்,
"நில்... இளவரசரனாகிய என் வார்த்தைக்குக் கட்டுப்படாமல் செல்வதும் குற்றமே" என்று அதிகாரத் தொனியில் உரைத்தான்.
மீண்டும் புரியாத தவிப்போடு குடத்தைக் கையில் பிடித்தபடி அவள் செல்லாமல் நிற்க அவன் தன் குதிரை மீது ஏறி அமர்ந்து அவள் அருகில் வந்து, "உன் பெயரைச் சொல்லிவிட்டு நீ உன் விருப்பம் போல் உன் குடிலுக்குச் செல்லலாம்" என்றான்.
லேசாக மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு அவள் பெயரை மெலிதாய் உரைக்க அவன் செவிகளில் அவள் வார்த்தைகள் சென்று சேரவேயில்லை.
ருத்ரதேவன் குலுங்கிக் குலுங்கி சிரித்தபடி, "உனக்கு நீயே சொல்லிக் கொண்டால் எனக்கு எவ்வாறு கேட்கும்... என் கண்ணைப் பார்த்து சத்தமாய் என் செவிகளில் விழும்படி சொல்" என்றான்.
அவனின் கண்களை நோக்கிய அவளின் கண்களில் கோபம் கனலாய் இருக்க அவளின் மென்மையான குரலில் அழுத்தம் கொடுத்து, "என் பெயர் அக்னீஸ்வரி... இப்போது தங்கள் செவிகளில் கேட்டதா... நான் செல்லலாமா?!" என்று தலையசைத்துக் கேட்டாள். அவன் மனமோ கடிவாளமின்றி தறிகெட்டுக் காதல் மயக்கத்தில் பயணித்தது.
முன்னுரை