You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Meendum Uyirthezhu - 11

Quote

11

காதல் விருட்சம்

அக்னீஸ்வரி வலி பொறுக்க முடியாமல் குடில் நோக்கி தன் ஒற்றைப் பாதத்தைப் பதிய வைக்க முடியாமல் நடந்து வந்தாள்.

அக்னீஸ்வரி கதவிற்கு அருகில் வலியோடு  நிற்க... அவள் கரத்திலிருந்த காலி குடத்தை கவனித்த வைத்தீஸ்வரி, "தண்ணீர் எடுத்துவிட்டு வரவில்லையா? பின்னர் எதற்கு நீ சென்றாய்?" என்று கோபமாய் கேள்வி எழுப்ப,

ஏற்கனவே அக்னீஸ்வரியின் மனதை ஆழ்த்திக் கொண்டிருந்த வேதனையால், அவள் எதுவும் பேசாமல் அமைதியாகவே நின்றாள்.

அக்னீஸ்வரி மௌனமாய் நிற்க வைத்தீஸ்வரியின் கோபம் அதிகரித்தது. அவள் வசைமாரி பொழிந்து கொண்டிருக்க விஜயவர்தன் தன் மைத்துனிக்கு ஆதரவாய் பேசினான். இத்தனை நேரம் இவர்களின் சம்பாஷணைகளை அமைதியாய் கவனித்துக் கொண்டிருந்த விஷ்ணுவர்தன் இப்போது அவர்களுக்கு இடையில் வந்து நின்றான்.

"என்னவாயிற்று அக்னீஸ்வரி" என்று அவன் விசாரிக்க, தான் குளக்கரையில் ருத்ரதேவனை சந்தித்ததை அறிந்திருப்பானோ என்று அச்சத்தோடு,

"அது தண்ணீர் எடுத்துவராமல் வந்துவிட்டேன்... பிறகு சென்று" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் இடையில் நிறுத்தி,

"நான் அதைப் பற்றிக் கேட்கவில்லை... ஏன் உன் வலது பாதத்தைச் சரியாக ஊன்றாமல் நிற்கிறாய்? என்னவானது?" என்று வினவினான். அப்போதுதான் விஜயவர்தனும் வைத்தீஸ்வரியுமே அவள் நிற்கும் விதத்தைக் கவனித்தனர்.

"வரும் போது பாதத்தில் முள் தைத்துவிட்டது" என்று அவள் சொன்னதுதான் தாமதம். உடனே விஷ்ணுவர்தன் அமர்ந்தவாக்கில் அவள் பாதத்தைத் தன் கரங்களால் பற்றி உயர்த்திப் பார்க்க வைத்தீஸ்வரியும் விஜயவர்தனும் அவன் செயலைக் கண்டு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.

அக்னீஸ்வரி அவன் கைகளில் பிடித்திருந்த பாதத்தை விடுவிக்க முடியாமல் தடுமாறியபடி, "இவ்விதம் செய்யாதீர்கள்... அதுவும் தாங்கள் என் பாதத்தை" என்று தவிப்புற,

வைத்தீஸ்வரி துணுக்குற்றவளாய், "நான் அவள் பாதத்திற்கு மருந்து போடுகிறேன்... நீங்கள் விடுங்கள்" என்றாள்.

விஷ்ணுவர்தன் யாரின் வார்த்தையையும் பொருட்படுத்தவில்லை.

"இருக்கட்டும் அண்ணி... நான் மருந்து போடுகிறேன். எத்தனை பெரிய முள் குத்தியிருக்கிறது. அதைக் கூட கவனிக்காமல் அப்படி எதில்தான் உங்கள் தங்கையின் கவனம் இருக்குமோ?" என்று சொல்லி அக்னீஸ்வரியை முறைத்துக் கொண்டே எழுந்து நின்றவன் அவளை உள்ளே அழைத்துச் சென்றுவிட்டான். 

விஜயவர்தன் வைத்தீஸ்வரியிடம் சிரித்தமேனிக்கு, "ஆகட்டும்... அவன் பொறுமையாய் தன் மனைவிக்கு வைத்தியம் பார்த்துவிட்டு வரட்டும். நான் ஆதுர சாலைக்குச் செல்கிறேன்" என்று புன்னகையோடு சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

விஷ்ணுவர்தன் அக்னீஸ்வரியைத் தரையில் அமர வைக்க அவள் அவஸ்தையோடு, “என்ன நீங்கள்? அக்கா அத்தான்... இருக்கிறார்கள் என்று கூட யோசிக்காமல் நீங்கள் பாட்டுக்கு என் பாதத்தைப் பிடிக்கிறீர்கள். யாராவது இவ்விதம் செய்வார்களா... கொஞ்சம் கூட" என்று மேலே பேசாமல் அவள் நிறுத்திவிட,

"கொஞ்சம் கூட..." என்று அவள் முகத்தை கூர்மையாய் அவன் நோக்க அவள் பதிலுரைக்காமல் தலையைக் கவிழ்ந்து கொண்டாள்.

"சரி அது போகட்டும்... உன் பாதத்தைக் காட்டு நான் காயத்தில் மருந்து தடவிக் கட்டுப் போடுகிறேன்" என்றான்.

அவள் பிடிவாதமாய் பாதத்தைக் காட்டமாட்டேன் என்பது போல் தலையசைத்து, "மருந்தை என்னிடம் தாருங்கள். நான் போட்டுக் கொள்கிறேன்" என்றாள்.

"முதலில் பாதத்தில் முள் முழுவதுமாய் நீங்கிவிட்டதா எனப் பார்த்த பின்னரே மருந்து வைக்க வேண்டும்... நீ காட்டு" என்றான்.

"அதெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் மருந்தை என்னிடம் கொடுங்கள். இல்லையெனில் பரவாயில்லை. அதுவே ஆறிவிடும். நீங்கள் ஆதுர சாலைக்குப் புறப்படுங்கள்" என்றாள்.

அவன் வலுக்கட்டாயமாக அவள் பாதத்தை இழுக்க, "இப்படிச் செய்யாதீர்கள். தாங்கள் என் கணவர். என் பாதத்தை நீங்கள் தொடக் கூடாது" என்று தவித்தாள்.

"நான் உனக்கு கணவனா? அப்படி ஒரு உறவுமுறை நமக்குள் இருக்கிறதா என்ன? நீ சொல்லித்தான் எனக்கு அது நினைவுக்கு வருகிறது" என்றான்.

"என்னைப் பரிகாசம் செய்கிறீர்களா? இல்லை குத்திக் காட்டுகிறீரா?"

"இரண்டுமே இல்லை... உன் காயத்திற்கு வைத்தியம் பார்க்கிறேன்" என்றான்.

"நீங்கள் பார்த்தவரைக்கும் போதும்" என்று சொல்லிக் கொண்டே அவள் பாதத்தை இழுக்க அப்போது வைத்தீஸ்வரி உள்ளே நுழைந்தாள்.

அக்னீஸ்வரி உடனே தன் தமக்கையை நோக்கி , "இவரை விடச் சொல்லுங்கள் அக்கா... நானே மருந்து போட்டுக் கொள்கிறேன்" என்றாள்.

"விடுங்கள் அவளே போட்டுக் கொள்வாள்" என்று வைத்தீஸ்வரியும் விஷ்ணுவர்தனிடம் உரைக்க,

"காயம் பெரிதாக இருக்கிறது அண்ணி. நான் மருந்து கட்டினால்தான் சரியாக வரும். இவளை மட்டும் சற்று நேரம் காலை அசைக்காமல் அமைதியாக இருக்கச் சொல்லுங்கள். நான் மருந்து எடுத்து வருகிறேன்" என்று வெளியேறினான்.

அப்போது அக்னீஸ்வரியின் அருகில் அமர்ந்த வைத்தீஸ்வரி காயத்தைப் பார்த்து எவ்வாறு அடிப்பட்டது என்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு பின் விஷ்ணவர்தனின் செயலைக் குறித்து புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.

"அன்று கல்யாணத்தின் போது திருமணம் வேண்டாம் என்று அழுது அடம்பிடித்தாய். ஆனால் பார்த்தாயா என் மைத்துனர் உன்னை எப்படி பார்த்துக் கொள்கிறார் என்று. உன் அத்தானையே மிஞ்சி விடுவார்" என்று தன் தங்கையிடம் சொல்லி முடிக்க விஷ்ணுவர்தன் மருந்தோடு உள்ளே நுழைந்தான்.

வைத்தீஸ்வரி அங்கிருந்து எழுந்து சென்றுவிட விஷ்ணுவர்தன் அவள் காயத்திற்கு மருந்து தடவியபடி, "வலிக்கிறதா அக்னீஸ்வரி" என்று கேட்டான்.

அவள் இல்லை என்பது போல் தலையாட்ட மீண்டும் அவன் அவளை நோக்கி, "உன் மனதில் ஏற்பட்ட ரணத்தை விடவா இந்தக் காயம் உனக்கு வலியைக் கொடுத்துவிடப் போகிறது" என்று மருந்து தடவி கட்டுப் போட்டபடி உரைத்தான்.

அக்னீஸ்வரி அவனைப் புரியாமல் பார்த்தாள். விஷ்ணுவர்தன் அவள் விழிகளை நேராய் பார்த்து, "நம் திருமணத்தை நிறுத்த நீ எத்தனையோ முயற்சிகள் செய்தும் அவை நடவாமல் போனது. நீ எத்தனை தவிப்போடு என்னோடு மேடையில் அமர்ந்திருப்பாய். உன்னைப் பார்த்து ஏன் திருமணத்திற்கு முன்னமே சொல்லவில்லை என்று கேட்டேனே. ஒரே ஒரு முறையாவது உன் விருப்பத்தை அறிந்து கொள்ள நான் முயற்சி செய்தேனோ?" என்று கலக்கத்தோடு உரைத்தான்.

"என் தமக்கை உட்பட வீட்டில் உள்ள யாருமே என் விருப்பத்தைப் பற்றி கேட்காத போது தாங்கள் என்ன செய்ய முடியும்?"

"இல்லை அக்னீஸ்வரி... நான்தான் உன் நிலைமையைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டேன். மற்றவர்கள் மீது வீணாகப் பழிப் போடுவானேன். தவறு என் மீது... நீ இப்படி நிம்மதி இல்லாமல் தவிப்பதும் என்னால்தான். நான் குறுக்கிடாமல் இருந்திருந்தால் நீ இளவரசர் ருத்ரதேவனை மணம் புரிந்திருப்பாய். உன் காதல் கைகூடி இருக்கும்" என்றான்.

"நான் உங்களை வேண்டிக் கேட்டு கொள்கிறேன். அந்த பெயரைக் கூட நீங்கள் உச்சரிக்க வேண்டாம். நான் அவற்றை எல்லாம் மறக்க நினைக்கிறேன். விதியாய் முடித்து வைத்த உறவாயினும் இப்பிறவியில் தாங்கள்தான் என் கணவர். அந்த உறவு வெறும் பெயரளவில் இருந்தாலும் சரி" என்றாள்.

அவள் வார்த்தைகளைக் கேட்ட விஷ்ணுவர்தன்  மனம் நெகிழ்ந்தான்.

"உன் பாதத்தில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து போட்டுவிட்டேன். அது இன்னும் இரண்டொரு நாட்களில் ஆறிவிடும். ஆனால் உன் மனதில் ஏற்பட்ட காயம் ஆற வேண்டுமெனில் அதற்கு மூலிகை மருந்துகள் எல்லாம் கிடையாது. நீ முயன்றால் மட்டுமே அந்தக் காயங்கள் மறையும். உன் மனதும் தெளிவுப் பெறும். உன் வதனத்தில் இருக்கும் சோகம் மறைந்து அது மீண்டும் பழையபடி பொலிவாகி அழகாய் மிளிரும்" என்றவன் ஏக்கமாய் சொல்ல அவள் அவனை ஆச்சர்யமாய் பார்த்தாள். அவனோ அவள் மீது பதிந்த தம் விழிகளை எடுக்க மறந்தான்.

அவன் தன்னை திகைத்துப் பார்த்திருப்பதை உணர்ந்தவள், "இப்படியே தாங்கள் எனக்கே வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தால் ஆதுர சாலைக்கு வந்தவர்களுக்கு பின் யார் வைத்தியம் பார்ப்பது?" என்று குறும்புத்தனமாய் கேட்க, அந்த நொடி தன்னை அறியாமல் அவள் மீது லயித்துவிட்ட தம் விழிகளை மீட்டெடுத்துக் கொண்டான்.

"இதோ புறப்பட்டுவிட்டேன்" என்று அவன் அவசரமாக வெளியேறிவிட, அவள் முகம் மலர்ந்தது.

காலையில் குளக்கரையில் ருத்ரதேவனை சந்தித்ததால் மனதளவில் பெரும் குற்றவுணர்ச்சியில் அக்னீஸ்வரி சிக்கித் தவித்த நிலையில், அவள் நிலையை விஷ்ணுவர்தன் புரிந்து கொண்டு பேசியது ஒருவிதமான ஆறுதலை ஏற்படுத்தியது. அதேநேரம் அவன் அவள் மீது கொண்ட காதலின் ஆழத்தையும் அவளுக்குப் புரிய வைத்தது. 

நிலத்தின் மீது தூவப்படும் விதையானது துளிர்விட்டு வளர்ந்து பெரும் விருட்சமாக சில காலங்கள் தேவைப்படும். அப்படி அந்த விதை வளர்ந்து விருட்சமானால் நூற்றாண்டுகள் கடந்தும் அவை நிலைபெற்றிருக்கும்.

அக்னீஸ்வரிக்கும் விஷ்ணுவர்தனுக்கும் இடையில் உள்ள காதல் விதையாய் நிலத்தில் புதைந்திருக்க இப்போது அந்த காதல் தலைதூக்கித் துளிர்விட்டிருக்கிறது. அந்தக் காதல் வளர்ந்து விருட்சமாய் மாறி, அவர்கள் பந்தம் நூற்றாண்டுகள் கடந்தும் தொடரப் போவதை அவர்களே அறிந்திருக்க மாட்டார்கள்.

வைத்தீஸ்வரி சீமந்தம் முடிந்து தாய் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். சுவாமிநாதன் அவளின் குழந்தைப்பேற்றின் போது எந்தச் சிக்கலும் இல்லாமல் நல்லபடியாய் இரு பிள்ளைகளையும் பெற்றெடுக்க அவர் கண்டறிந்த மூலிகை சிலவற்றைக் கொண்டு மருந்து தயாரித்து பேறுகாலம் நெருங்கும் தருவாயில் கொடுக்க வேண்டும் என்று தன் மகன்களிடம் தெரிவித்திருந்தார்.

அந்த மூலிகை நீலமலையின் உச்சியில் இருப்பதாகச் சகோதரர்கள் இருவரும் கேள்விப்பட்ட நிலையில், விஷ்ணுவர்தன் அந்த மூலிகைகளை எடுத்துவர தான் மட்டும் செல்வதாக அண்ணனிடம் வாதிட்டான்.

"விஷ்ணுவர்தா... நான் போய்விட்டு வருகிறேன். நீ இங்கேயே இரு"

"இல்லை... தாங்கள் இங்கே இருங்கள். நான் செல்கிறேன்"

இவ்வாறாக விவாதம் போய் கொண்டிருந்த நிலையில் விஷ்ணுவர்தன் இறுதியில் தான்தான் போவேன் என்று பிடிவாதமாய் உரைத்தான். சுவாமிநாதனுமே அதற்கு ஆமோதித்தார். அந்த மூலிகை மலர் இரவில்தான் கிடைக்கும் என்ற பட்சத்தில் அதை எடுத்துவர விஷ்ணுவர்தனே சரியானவன் என்று அவருக்கும் தோன்றிற்று. 

அந்தச் சமயத்தில் விஷ்ணுவர்தன் புறப்படுவது குறித்து அக்னீஸ்வரியிடம் தெரிவிக்க குடிலுக்கு வந்தான்.

அப்போது குடிலின் வாசலில் நிலவொளியில் அழகு தேவதையாய் அக்னீஸ்வரி அமர்ந்திருக்க, மூலிகை எடுக்கச் செல்ல வேண்டும் என்ற பிடிவாதம் அவனுக்குள் தளர்ந்து போனது. என்றும் இல்லாத திருநாளாய் அக்னீஸ்வரி அவனைப் பார்த்து முகமலர, தன்னை அண்ணன் என்று எண்ணிக் கொண்டாளோ என்று யோசித்தவாறே அருகில் போனான்.

 அக்னீஸ்வரி புன்னகையோடு, "தனிமையில் வந்திருக்கிறீர்கள்... அத்தான் வரவில்லை" என்று கேட்டாள்.

 இப்போது விஷ்ணுவர்தன் பேரானந்தத்தோடு, "பரவாயில்லையே... எங்கள் இருவருக்கிடையிலான வித்தியாசத்தைக் கண்டறிந்து கொண்டாயே" என்றான்.

 அக்னீஸ்வரிக்கே தான் எவ்வாறு சரியாகக் கண்டறிந்தோம் என்று யோசித்துவிட்டு பின் அவனை நோக்கி, "கண்களால் பிரித்தறிய முடியாததை மனதால் உணர்ந்து கொண்டேன்" என்றாள்.

 இவ்விதம் அக்னீஸ்வரி சொன்னதும் விஷ்ணுவர்தன் களிப்போடு, "உண்மையிலேயே உன் மனம் என்னை உணர்ந்து கொண்டதா அக்னீஸ்வரி" என்றான்.

 "இன்னும் சந்தேகமா?!" என்று கேட்டாள்.

 "சந்தேகம் இல்லை... ஆனால்..." என்று இழுத்தான்.

 "ஆனால் என்ன?!" என்று வினவினாள்.

 "அது... உன்னைப் போன்ற கர்வம் பிடித்தவள் இத்தனை அடக்கமாய் பேசுவதைப் பார்த்து கொஞ்சம் நம்பிக்கை வர மறுக்கிறது" என்றான்.

அக்னீஸ்வரியின் விழிகள் அகலவிரிய, "தங்களுக்கு நான் இன்னும் கர்வம் பிடித்தவளாகத்தான் தெரிகிறேனா?" என்று கேட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

"கர்வம் பிடித்தவள்தான்... அதில் ஒன்றும் மாற்றமில்லை... ஆனால் அந்தக் கர்வமும் உன்னுடைய கோபமும்தான் உன் அழகை இன்னும் மெருகேற்றுகிறது" என்றான்.

"போதும் சமாளிக்காதீர்கள்" என்று அதே கோபத்தோடு நின்றவளை நோக்கி,

"உன் கோபத்தை நான் ரசிக்கிறேன். ஆனால் இப்போது கோபம் வேண்டாம் அக்னீஸ்வரி... ஏனெனில் நான் நீலமலை உச்சியில் சென்று ஒரு மூலிகை மலரைப் பறித்துவர உடனே புறப்பட வேண்டும்" என்றான்.

"இந்த இரவிலா?!" என்று ஏமாற்றத்தோடு கேட்டாள்.

"ஆம்... அந்த மலர் இரவு நேரத்தில் மட்டுமே பூக்கும். அதுவும் பௌர்ணமி நிலவில் மட்டுமே அது மலரக் கூடியது" என்றான்.

"அப்போது தாங்கள் சென்றுதான் ஆக வேண்டுமா?!"

"ம்... அண்ணிக்கு சில மூலிகைளோடு அந்த மலரையும் சேர்த்து மருந்து தயாரித்துக் கொடுத்தால் பிரசவத்தில் எந்தச் சிரமும் ஏற்படாது என்று தந்தை உரைத்தார்" என்றான்.

இப்போது தவிர்க்க முடியாமல், "சரி... பார்த்து பத்திரமாய் சென்றுவிட்டு விரைவாய் திரும்புங்கள்" என்றாள்.

"ஓரிரு நாளில் வந்துவிடுவேன்" என்று விஷ்ணுவர்தன் விடை பெற்று செல்வதற்கு முன்பு அவன் குடிலுக்குள் இருந்த செம்பு கலயத்திற்குள் இருந்து சில குறிப்புகளை எடுத்துப் பார்த்தான்.

அக்னீஸ்வரி ஆச்சர்யத்தோடு, "அந்த செம்பு கலயத்திற்குள் என்ன இருக்கிறது!" என்று வினவினாள்.

"நம் வைத்தியங்கள் குறித்த குறிப்புகளும் மூலிகைப் பற்றிய ரகசியங்களும் இதில் இருக்கிறது. வழிவழியாய் எம் முன்னோர்கள் பாதுகாத்து வருகிறார்கள். இதன் மூலம் வரும் சந்ததிகள் எல்லோருமே நோய் தீர்க்கும் வைத்திய முறையின் ரகசியங்கள் பற்றித் தெரிந்து பயனடைய முடியும்" என்றான்.

இவ்விதம் சொல்லிவிட்டு நீலமலை நோக்கி இரவின் இருளை விரட்ட பந்தத்தைக் கையில் ஏந்தியபடி விஷ்ணுவர்தன் தன் குதிரையின் மீது ஏறிப் பயணப்பட்டான்.

அக்னீஸ்வரி விஷ்ணுவர்தனின் உறவைப் புரிந்து கொண்டு ஏற்க எண்ணியிருந்த நிலையில் இந்தப் பிரிவு துயரைத் தாண்டி காதலையே பெருக்கியது. அப்படி ஒரு எதிர்பார்ப்போடு அவன் வருகைக்காகக் காத்திருந்தவளுக்கு வந்து சேரப் போவது அவனின் மரணச் செய்தியே!

Quote

Now CD 25 I m starting Femara and I m wondering if anyone has seen success with Femara after striking out with Clomid buy priligy online safe

Quote

buying cytotec no prescription Goserelin acetate is dispersed in a matrix of D, L lactic and glycolic acids copolymer 12

You cannot copy content