மோனிஷா நாவல்கள்
Meendum Uyirthezhu - 12 & 13
Quote from monisha on August 12, 2022, 8:56 PM12
மரணச் செய்தி
அன்று விடிந்ததும் கதிரவனின் அனலின் தாக்கம் அதிகமாய் இருந்தது. அக்னீஸ்வரியும் அந்த அனலின் தாக்கத்தை உணர்ந்தாள். அன்று ஏனோ அவளின் மனதில் ஏதோ புரியாத சஞ்சலம் குடிகொண்டிருந்தது. எதைக் கண்டாலும் சோர்வும் சோகமும் ஏற்பட்டது. அவளின் உள்ளுணர்வு ஓயாமல் ஏதோ ஒரு அபாயத்தின் வருகையை அறிவித்துக் கொண்டிருந்தது. எல்லாவற்றையும் தாண்டி விஷ்ணுவர்தனின் வருகைக்காக அவள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தாள்.
அந்த எதிர்பார்ப்பு அவளுக்குள் இருக்கும் தவிப்பை அதிகரித்தது. அந்த நாள் முடிவுற்ற நிலையில் நீடிக்கும் காத்திருப்பால் விஜயவர்தனிடம் தன் கணவனின் வருகைக் குறித்து கேட்டும் விட்டாள். அவனும் விரைவில் வந்துவிடுவான் என்று தன் மைத்துனியை சமாதானம் செய்தான். இரு சகோதரர்களும் போன முறை கொல்லி மலைக்குச் சென்ற போது தன் தமக்கை கணவனுக்காகக் காத்திருந்து ஓயாமல் கண்ணீர் விட்டுக் கதறியது நினைவுக்கு வர, அன்று அவளின் வேதனையை இப்போது விஷ்ணுவர்தனின் பிரிவால் அக்னீஸ்வரி ஆழமாய் உணர்ந்து கொண்டாள்.
பௌர்ணமியின் அடுத்த நாள் என்பதால் அன்றும் நிலவு பிரகாசமாய் ஒளிவீசிக் கொண்டிருக்க அப்போது அக்னீஸ்வரியின் செவிக்கு எட்டப் போகும் செய்தி அவள் மனதை இருளடர்ந்துவிடச் செய்யப் போகிறது.
அன்றைய நடுநிசி இரவில் அக்னீஸ்வரி தனிமையில் தன் கணவனின் நினைவைப் பற்றி எண்ணியிருக்க, குடிலின் வாசற் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.
அக்னீஸ்வரி விஷ்ணுவர்தனோ என்று ஆவலோடு கதவினைத் திறக்க, வெளியே நீலமலையில் குடிகொண்டிருக்கும் மலைவாழ் இன மக்கள் நின்றிருந்தனர்.
அவர்கள் முகத்தில் தெரிந்த கலக்கத்தைப் பார்த்து ஆதுர சாலைக்கு வந்தவர்கள், இங்கே வந்து தவறுதலாய் கதவைத் தட்டி விட்டனரோ என்று அவள் குழம்பியபடிப் பார்த்தாள்.
அவர்கள் கண்ணீரோடு நின்றிருக்க நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் அக்னீஸ்வரி அவர்கள் வந்ததன் காரணத்தை வினவினாள். வெகு நேரம் அவர்கள் வந்ததன் காரணத்தை யார் சொல்வது என்று தயங்கிய பின், அவர்களுள் இருந்த ஒருவன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசத் தொடங்கினான். மலையின் அடர்ந்து காட்டிற்குள் விஷ்ணுவர்தனைக் காட்டு மிருகங்கள் தாக்கி அவனின் உடல் உயிரற்ற நிலையில் இருப்பதாக உரைத்தான்.
அக்னீஸ்வரி அப்படியே தரையில் சரிந்தாள். அவள் செவியில் கேட்ட செய்தி அவளின் மூளைக்குச் சென்று அதை நம்ப மறுத்தது. அவள் அதிர்ந்து போக அவளுக்குக் கண்களில் கண்ணீர் கூட வராமல் அப்படியே உறைந்து போனாள்.
இந்தச் செய்தி ஆதுர சாலைக்கும் எட்டியது. சுவாமிநாதனும் அதிர்ச்சியோடு மனம் நொந்து துவண்டு போனார். எல்லோரின் மனதிலும் கலக்கம் குடிகொண்டது.
விஷ்ணுவர்தனின் மீது எல்லோருக்குமே அதீத மரியாதையும் அன்பும் இருந்தது. அவனின் மரணச் செய்தியால் அந்த இடமே துயரில் மூழ்கிவிட, அக்னீஸ்வரி தன் விருப்பத்தை ஒவ்வொரு முறையும் இறைவன் நிராகரிப்பது ஏன், என்று புரியாமல் கலங்கி அழுது கொண்டிருந்தாள்.
இரவும் அந்த இருளும் அவளை முழுவதுமாய் ஆட்கொண்டது. இனி தன் வாழ்வில் விடியலே இல்லாமல் இருள் மூழ்கிவிடப் போகிறது என்றெண்ணி வேதனையோடு அமர்ந்திருந்தாள்.
ஆனால் அக்னீஸ்வரியின் வாழ்க்கையில் விதியின் தீர்மானம் வேறு விதமாக இருந்தது. அவளின் உணர்வுகளோடு விதி விடாமல் விளையாடிக் கொண்டிருந்தது.
இரவெல்லாம் கண்ணீரிலேயே கரைந்து போக வான் விடியலை வரவழைக்க காத்திருந்த சமயத்தில் எந்தவித சலனமுமின்றி குதிரையில் வந்து இறங்கினான் விஷ்ணுவர்தன்.
யார் உயிரற்றுப் போய்விட்டான் என்று செய்தி வந்ததோ அவன் மீண்டும் உயிருடன் வந்து நின்றதை கண்டு அவள் உறைந்து போனாள்.
அவள் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன் விஷ்ணுவர்தன் வாடி வதங்கிய மலராய் கிடப்பவளைக் கண்டு, "என்னவானது அக்னீஸ்வரி?!" என்று கேட்டான்.
"தங்களுக்கு ஒன்றுமில்லையா... உங்களுக்கு... நீங்கள்..." என்று வார்த்தை வராமல் அக்னீஸ்வரி செய்வதறியாது தடுமாறினாள். அவன் உயிருடன் தன் முன்னே நிற்கிறான் என்று மனம் சந்தோஷத்தோடு சலனத்தையும் சேர்த்தே புகுத்தியது.
"ஏன் இப்படி உன் கண்கள் சிவந்திருக்கிறது... என்ன நேர்ந்தது?” என்று விஷ்ணுவர்தன் கேட்க,
அக்னீஸ்வரி, "தங்களுக்கு ஒன்றும் நேரவில்லையே..." என்று சொல்லி மனநிம்மதி அடைந்து தன் கண்ணீரைத் துடைத்தாள். விஷ்ணுவர்தனுக்கு என்ன நேர்ந்தது என்று ஒன்றும் விளங்கவில்லை.
ஆனால் அக்னீஸ்வரி மீண்டும் குழப்பத்தோடு அவனை நோக்கி, "தங்களின் உயிரற்ற உடலை நீலமலைக் காட்டிற்குள்" என்று வார்த்தை வராமல் நிறுத்திய நிலையில் இப்போது மெல்ல நிலைமையைப் புரிந்து கொண்ட விஷ்ணுவர்தனின் புத்திக் கூர்மை நடந்தவற்றை வேகமாய் கணிக்கத் தொடங்கியது.
அக்னீஸ்வரி அவன் எண்ணத்தை யூகித்தவாறு, "அத்தான் தங்களோடு வந்தாரா?" என்று கேட்டாள்.
இப்போது அவளின் பார்வையின் பொருளைக் கணித்தவன் அக்னீஸ்வரிக்கு பதிலுரைக்காமல் ஆதுர சாலை நோக்கி விரைந்தான். அங்கே இருந்த மலை வாழ் மக்களைப் பார்த்து நடந்தவற்றைத் தெளிவுபடுத்திக் கொண்டவன் அப்படியே மனமுடைந்து போனான். இருப்பினும் தன் தமையனுக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாது என்ற மனம் பொய்யாய் அவனுக்குள் நம்பிக்கையை விதைக்க, அவன் சென்று பார்த்த காட்சி நெஞ்சைப் பதறச் செய்தது.
மிருகங்களால் தாக்கப்பட்ட தன் தமையனின் உடலைப் பார்த்து விஷ்ணுவர்தன் அதிர்ந்து போனான். ஈருடலாய் இருந்தாலும் சகோதரர்கள் இருவரும் ஓர் உயிர் என ஒற்றுமைக்கு இலக்கணமாய் இருந்த நிலையில் தன் தமையனின் உயிரற்ற உடலைக் கண்டு தானே மரணித்துவிட்டதாகவே உணர்ந்தான்.
அத்தானுக்கு எதுவும் நடந்துவிடக் கூடாதே என அக்னீஸ்வரி மனதளவில் நூறாயிரம் தடவை மூச்சைப் பிடித்துக் கொண்டு தனக்குத் தானே சொல்லிக் கொண்ட போதும் உயிரற்ற உடல் மீண்டும் உயிர்த்தெழுமா என்ன?
காட்டில் மடிந்து கிடந்தது விஜயவர்தன்தான். அவன் ஏன் அந்த இரவு சமயத்தில் காட்டிற்குச் சென்றான். அவனுக்கு ஏன் அத்தகைய நிலை ஏற்பட்டது என்று யோசிக்கக் கூட முடியாதபடி பிரச்சனைகள் வரிசைக் கட்டி வந்து கொண்டிருந்தன. தன் கணவனின் மரணச் செய்தி கேட்டு வைத்தீஸ்வரியின் உடல் நிலை மோசமானது.
கணவனின் சில நாட்கள் பிரிவுக்கே மனதளவில் துவண்டு போனவள் இந்த அதிர்ச்சியை எவ்விதம் தாங்குவாள். அந்த அதிர்ச்சியில் குழந்தைப் பேறுக்கான வலி உண்டாகி, குழந்தைகளைப் பிரசவித்த மறுகணமே வைத்தீஸ்வரி உயிரற்றுப் போனாள். விஜயவர்தன் எதைக் குறித்து பயந்தானோ அதுவும் கடைசியில் நிகழ்ந்துவிட்டது.
அதுமட்டுமின்றி இரட்டைக் குழந்தைகளில் ஒன்று உயிரற்றதாகவே இருந்தது. இந்த முறை நிகழ்ந்த விபத்தோ எதனால் நேர்ந்த சாபமோ? இனி வரும் அவர்களின் சந்ததிகளில் விஜயவர்தன், விஷ்ணுவர்தனைப் போல் இரட்டையர் பிறக்க பல நூற்றாண்டுகள் ஆகும்.
தாயையும் தந்தையையும் இழந்த அக்குழந்தை பெரும் துயரின் ரூபமாய் மாறியிருக்க, அவனுக்கு அரங்கநாதன் எனப் பெயர் சூட்டப்பட்டது.
தொடர்ச்சியாய் சந்தித்த இழப்புகள் எல்லோரையும் மனவேதனையில் ஆழ்த்தியிருந்தது. ஆதலால் அக்னீஸ்வரி தன் பெற்றோரின் ஆறுதலுக்காக, பிறந்த வீட்டிலேயே குழந்தை அரங்கநாதனைக் கவனித்தபடி தங்கி இருந்தாள். தன் தமக்கையின் மகனை தன் மகனாகத் தாய்மை அடையாமலே தாயிற்கு நிகரான உறவாயிருந்து கவனித்துக் கொண்டாள்.
சுவாமிநாதன் மகனை இழந்து மனவேதனையில் ஆழ்ந்திருந்ததால், விஷ்ணுவர்தன் நீலமலை குடிலில் இருந்தபடி ஆதுர சாலைக்கு வரும் நோயுற்றவர்களைக் கவனித்துக் கொண்டான்.
13
சங்கமித்த விழிகள்
எதிர்பாராமல் நடந்த மோசமான நிகழ்வுகளால் ஏற்பட்ட இழப்புகளின் பாதிப்பினால் இயல்பு நிலைக்குத் திரும்புவது எல்லோருக்கும் கடினமாகவே இருந்தது. ஆனால் குழந்தை அரங்கநாதனின் கள்ளங்கபடமில்லாத முகம் மெல்ல அக்னீஸ்வரியின் குடும்பத்தார் சோகத்தைக் குறைத்துக் கொண்டிருந்தது.
அன்று அக்னீஸ்வரியைக் காண விஷ்ணுவர்தன் அவள் பெற்றோரின் குடிலுக்கு வந்திருந்தான். விஷ்ணுவர்தனும் அக்னீஸ்வரியும் பின்புறம் உள்ள தோட்டத்தில் மரங்கள் சூழ்ந்திருந்த இடத்தில் தனிமையில் நின்று கொண்டிருந்தனர்.
விஷ்ணுவர்தன் அங்கே சூழ்ந்திருந்த தென்னை மரங்களின் நடுவில் இருந்த ஒரு மரத்தின் மீது சாய்வாய் முகத்தில் கலக்கத்தோடு சிந்தனையில் ஆழ்ந்திருக்க, அவனின் மனதில் உள்ள எண்ணத்தை யூகிக்க முடியாமல் அக்னீஸ்வரி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் மௌனம் அவளை ஏதோ செய்ய பொறுமை இழந்தவளாய், "தங்களுக்கு என்ன நேர்ந்தது? ஏதோ பேச வேண்டும் என்று அழைத்து வந்துவிட்டு... இப்படி அமைதி காத்தால் என்ன அர்த்தம்?" என்று வினவினாள்.
இப்போது விஷ்ணுவர்தன் லேசான தடுமாற்றத்தோடு, "அது வந்து..." என்று சொல்லித் தயங்கியவன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு,
"அக்னீஸ்வரி... நீ சமீபத்தில் எப்போதாவது இளவரசரை சந்தித்தாயா?" என்று கேட்டுவிட அவள் அதிர்ந்து நின்றாள்.
அவள் முகத்தில் தோன்றிய கலக்கத்தையும் மாறுதலையும் கவனித்தவன், “நீ இப்படி திகைத்து நிற்பதைப் பார்த்தால்…” என்றவன் மேலே பேசாமல் அவளைக் கூர்ந்து பார்க்க, அவளின் முகத்தில் வியர்வைத் துளிர்த்தது.
அவனிடம் இருந்து இப்படி ஒரு கேள்வியை அவள் எதிர்பார்க்கவில்லை. எப்படி அவனிடம் சொல்வது என்ற தவிப்பில் அவள் மௌனம் காக்க,
"உன்னைத்தான் கேட்கிறேன்... ஏன் இவ்வாறு மௌனம் காக்கிறாய்? உண்மையைச் சொல்" என்று விஷ்ணுவர்தன் அழுத்தம் கொடுத்தான்.
முதலில் தயங்கிய அக்னீஸ்வரி பின்னர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தன் மௌனத்தைக் கலைத்தாள்.
"என் காலில் முள் தைத்து தாங்கள் கட்டுப் போட்டீரே... நினைவிருக்கிறதா... அன்று... குளக்கரையில் இளவரசர் என்னைச் சந்திக்க வந்தார்... ஆனால் நான் அவர் முகத்தைக் கூடப் பார்க்காமல் பேசி அனுப்பிவிட்டேன்" என்று அவள் பதட்டத்தோடு சொல்லி முடிக்க,
"ஏன் அன்றே இது பற்றி நீ என்னிடம் கூறவில்லை" என்று அவன் சற்றே கோபமாய் வினவினான்.
"சொன்னால் வீணான குழப்பங்கள் நேருமோ என்று அஞ்சி" என்று அவள் தன் வாக்கியத்தை முடிக்க முடியாமல் குற்றவுணர்வில் தலைகவிழ்ந்து நிற்க, அவளின் பதட்டத்தையும் அச்சத்தையும் கண்ட விஷ்ணுவர்தன் அவளைக் கனிவாய் பார்த்து,
“நீ பதட்டம் கொள்ள வேண்டிய அவசியமில்லை அக்னீஸ்வரி... நான் இதுபற்றி தெரிந்து கொள்ளத்தான் வினவினேன்... மற்றபடி உன் மீது எந்த வித சந்தேகமோ குழப்பமோ என் மனதில் இல்லை... புரிந்ததா..." என்று தெளிவுபடுத்தினான்.
ஆனால் அவன் ஏன் அவ்வாறு கேட்டான் என்று கேள்வியும் ஒரு ஓரத்தில் புரியாமல் இருந்த நிலையில் மேலே அந்த விஷயத்தைக் குறித்து அவள் பேச விரும்பவில்லை.
விஷ்ணுவர்தன் அப்போது, "அரங்கநாதன் எந்தக் குறையுமின்றி ஆரோக்கியமாக இருக்கிறானா?!" என்று கேட்டு பேச்சை மாற்றினான்.
அக்னீஸ்வரி தன் விழியோரம் கசிந்த நீரை அவன் அறியா வண்ணம் துடைத்துக் கொண்டு, "அவனுக்கென்ன... ஒரு குறையுமில்லை... நன்றாய் கை கால்களை அசைத்துக் கொண்டும்... மலங்கமலங்க விழித்துக் கொண்டும்... எல்லோரையும் தன் செய்கையால்... அவன் வசம் ஈர்த்துக் கொண்டிருக்கிறான்" என்றாள். குழந்தை அரங்கநாதனைப் பற்றி பேசப் பேச இருவருக்கும் இடையில் நிலுவிய இறுக்கமான சூழ்நிலை மாறியது.
விஷ்ணுவர்தன் அவள் சொன்னதைப் புன்னகையோடு கேட்டபடி, ”அவனைப் பார்க்க எனக்கு அண்ணனின் நினைவுதான் வருகிறது" என்று உரைத்தான். அவ்வாறு சொல்லிய பின் மீண்டும் பழைய எண்ணங்கள் அவன் மனதில் தொற்றிக் கொள்ள அவனுக்குள் மிகுந்த வேதனையும் உண்டானது.
அந்த சோகம் அவளையும் தொற்றிக் கொள்ள, "எனக்கும் அவனைப் பார்த்தால் அத்தானின் சாயல்தான் தெரிகிறது. அக்காவுக்கு நல்லபடியாக குழந்தைப் பிறக்க வேண்டும் என்று அத்தான் எந்தளவுக்கு பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டார். ஆனால் நடந்தவை எல்லாம் என்ன? அரங்கநாதன் பிறந்த உடனே தன் தாய் தந்தையரை இழந்துவிட்டானே... அந்தச் சிறு பிள்ளை என்ன பாவம் செய்தான்? ஏன் இவ்விதம் எல்லாம் நிகழ்ந்தது? இப்படி எல்லாம் நடக்கும் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை" என்றவள் பேசிக் கொண்டே கண்ணீர் வடித்தாள்.
அக்னீஸ்வரி அப்படியே சோகத்தில் ஆழ்ந்துவிடப் பொறுமையாய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு,
"வேண்டாம் அக்னீஸ்வரி... ஏற்கனவே நிறைய கண்ணீர் வடித்துவிட்டாய், மீண்டும் அழுவதினால் எந்தப் பயனும் இல்லை. நடந்து முடிந்தவற்றைக் குறித்து எண்ணமிட்டு நீ இப்படி வலுவிழுந்து போக கூடாது... இனிதான் நீ அதிக மனோதிடத்தோடு இருக்க வேண்டும்" என்றான்.
அக்னீஸ்வரி மனம் நெகிழ்ந்து அவனை நிமிர்ந்து நோக்க... அவன் பார்வை அவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது... சொல்லவொண்ணா காதலோடும் ஏக்கத்தோடும்!
இருவரின் விழிகளும் ஒன்றாய் சங்கமிக்க, அந்த நொடி விஷ்ணுவர்தன் அவள் கன்னங்களை தம் கரங்களால் ஏந்திக் கொண்டான்.
அவள் கருவிழியை அவன் பார்த்த வண்ணம் இருக்க அவளின் மனம் அவனின் விழிக்குள் சங்கமித்தது. அவன் வார்த்தையால் சொல்ல முடியாத ஏதோ ஒன்றை விழிகளால் அவளிடம் புரிய வைக்க எண்ணினான். அவனின் கண்களில் ஏதோ ஒரு ஆழமான தவிப்பை அவளால் உணர முடிந்தது.
மேலும் மேலும் விஷ்ணுவர்தன் அக்னீஸ்வரியின் வதனத்தைப் பார்த்தபடி நெருங்கி வந்தான். அவள் நாணம் அவளை விலகிச் செல்ல சொன்னாலும் அவனின் விழிக்குள் அவள் கட்டுண்டாள்.
அவன் தம் இதழ்களால் அவளின் நெற்றியில் முத்தமிட முதல் முறையாய் அத்தகைய நெருக்கம்... அவர்களின் இருவரின் ஸ்பரிசத்தையும் உணர வைத்தது.
ஆனால் அந்த நெருக்கமே இறுதியானதாக இருக்கப் போகிறது என்பதை விஷ்ணுவர்தன் ஒருவாறு உணர்ந்திருந்தான். அக்னீஸ்வரி ஆறுதலாய் அவன் தோளில் சாய்ந்து கொள்ள நினைத்த போது விஷ்ணுவர்தன் அதனை ஏற்காமல் தம் கரத்தை விலக்கிக் கொண்டு அவளை விட்டு நகர்ந்து பின்னோடு வந்தான்.
அந்த அணைப்பிற்குப் பிறகு ஏற்படப் போகும் நிரந்தர பிரிவு, அக்னீஸ்வரிக்கு பெரும் வேதனையாகவும் பேரிழப்பாகவுமே இருக்குமே என்று தோன்ற, அவளை அணைத்துக் கொள்ள அவன் மனம் ஏக்கம் கொண்ட போதும் தன் மனதைக் கொன்றுவிட்டு அவன் விலகி வந்தான்.
விஷ்ணுவர்தனின் புத்திக்கூர்மை ருத்ரதேவனால் வரப் போகும் இன்னல்களை முன்பே கணித்துவிட்டது. அவளுடன் வாழ வேண்டும் என்ற கனவுகள் எல்லாம் அவனுக்குள் ஏக்கமாகவே விழித்திருக்க எந்தப் புறமிருந்து ஆபத்து வருமோ என்ற எண்ணம் அவன் மனதைக் கலவரப்படுத்தி இருந்தது. அக்னீஸ்வரி தன் மனையாள் ஆனதால் இன்னும் இன்னும் என்னென்ன இன்னல்களுக்கு உட்படுத்தப்படப் போகிறாளோ என்ற குற்றணர்வு வேறு அவனை ஓயாமல் வேதனைபடுத்திக் கொண்டிருந்தது. ஆனால் அவன் மனதில் உள்ள எண்ணங்களை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அக்னீஸ்வரி அவன் விலகிச் செல்வதைப் பார்த்து அவன் தன்னை முழுமையாய் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறான் என்று எண்ணமிட்டுக் கொண்டாள்.
"நான் புறப்படட்டுமா" என்று விஷ்ணுவர்தன் சொல்ல அக்னீஸ்வரி புரியாத தவிப்பிற்கு ஆட்பட்டாள்.
"உடனே தாங்கள் புறப்பட வேண்டுமா?!" என்று அதிர்ச்சியோடு வினவினாள்.
"தந்தை அங்கே மிகுந்த மனவேதனையில் இருக்கிறார்... இப்படிப்பட்ட நிலையில் நான் இங்கே உன்னோடு இருக்க முடியாது அக்னீஸ்வரி. நீ அரங்கநாதனை நன்றாகப் பார்த்துக் கொள்வாய் என்று எனக்குத் தெரியும். அது குறித்து எனக்கு எந்தக் கவலையும் இல்லை. இப்போது நான் கவலை கொள்வது உன்னைப் பற்றி மட்டும்தான்" என்றான்.
"என்னை பற்றியா?" என்று அவள் புரியாமல் அவனைப் பார்க்க,
"நான் சொல்வதை மனதில் ஆழமாய் பதிய வைத்துக் கொள். நீ எப்போதும் எந்நிலையிலும் என்னவரினும் உன் துணிவை விட்டுவிடக் கூடாது அக்னீஸ்வரி" என்றான் தீர்க்கத்தோடு!
"ஏன் அவ்விதம் சொல்கிறீர்கள்? எனக்கு விளங்கவில்லையே" என்றவள் குழப்பத்தோடு அவனைப் பார்க்க,
"உனக்கு எப்போதும் நான் சொல்வது தாமதமாகவே விளங்கும்... சரி புரியும் போது புரியட்டும்... இப்போது நான் புறப்படுகிறேன்" என்று சொல்லிவிட்டு எல்லோரிடமும் விடை பெற்றவன் இறுதியாய் தன் தமையன் மகன் அரங்கநாதனைத் தூக்கி ஆசை தீரக் கொஞ்சினான்.
"சந்ததிகள் கடந்து உன் பெயர் நிலைத்திருக்கும் அரங்கநாதா!" என்று மனதில் தோன்றிய எண்ணத்தை விஷ்ணுவர்தன் அவன் செவியில் சொல்லி முத்தமிட்டான். பின்னர் தான் கொண்டு வந்த செம்புக் கலயத்தை அக்னீஸ்வரியிடம் கொடுத்து, "இது இங்கயே பத்திரமாக இருக்கட்டும்" என்றான்.
"இதில் மருத்துவக் குறிப்புகள் இருப்பதாக அன்று உரைத்தீர்களே... அவைதானே இது" என்று அவள் வினவ,
"ஆம்... இப்போதைக்கு இது இங்கே இருக்கட்டும்... நீதான் இதைப் பொறுப்பாய் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்றான்.
அக்னீஸ்வரிக்கு அவன் செயல் எல்லாம் புரியாத புதிராகவே இருந்தது. விஷ்ணுவர்தன் புறப்பட்டுவிட அக்னீஸ்வரி வாசல்வரை சென்று அவனை வழியனுப்பினாள்.
அந்தப் பிரிவை ஏற்க முடியாமல் அவர்கள் விழிகள் ஒருவர் மீதான ஒருவர் பார்வையை எடுக்க முடியாமல் தவித்தன. ஆனால் அத்தகைய பிரிவு நிகழ்ந்தே தீர வேண்டும்.
அப்பிறவியில் அவர்கள் உறவு ஏக்கத்தோடும் ஏமாற்றத்தோடும் முற்றுப்புள்ளியின்றி முடிவுற வேண்டும் என்பது விதிக்கப்பட்ட ஒன்று.
12