You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Meendum Uyirthezhu - 17

Quote

17

குற்றவுணர்வு

அக்னீஸ்வரி அரண்மனையை விட்டு புறப்பட்ட பின் தன் பெற்றோர் வீட்டுக்கு செல்ல விருப்பமில்லாமல் நீலமலையில் உள்ள குடிலுக்குச் சென்றாள். அங்கே உடலாலும் மனதாலும் சோர்ந்து காணப்பட்ட சுவாமிநாதரைப் பார்த்ததும் அவளுக்கு கண்ணீர் ஆறாய் பெருகியது.

சுவாமிநாதன் தன் இரு பிள்ளைகளையும் இழந்து இத்தகைய துயருக்கு ஆளாகியதற்கு தானே காரணம் என வேதனையும் கொண்டாள். அவளுக்குள் குற்றவுணர்வு மலையென வளர்ந்து நிற்க, அவரைப் பார்த்து கொள்ள வேண்டிய பொறுப்பு தன்னுடையது என எண்ணிப் பொய்யான வார்த்தைகளைக் கூறி அவருக்கு சமாதானம் கூறினாள்.

"நீங்கள் ஒன்றும் வருத்தம் கொள்ள வேண்டாம் மாமா... என் தந்தை... அரசர் வந்ததும் இது குறித்து பேசி அவரை விரைவில் விடுவித்து விடுவார்" என்று அக்னீஸ்வரி உண்மையே இல்லாத வார்த்தைகளைக் கூறி அவருக்கு நம்பிக்கை தந்தாள். உண்மையை விட ஒரு பொய் நலம் பயக்குமெனில் அதை சொல்வதில் தவறொன்றுமில்லை என்று எண்ணிக் கொண்டாள்.

சுவாமிநாதருக்கு தன் மருமகளின் வார்த்தைகள் நம்பிக்கையைக் கொடுக்க அவர் கொஞ்சம் தெளிவுப் பெற்றபடி,

"நீ சொல்வது சரிதான்... எனக்கும் அரசரின் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. அதே சமயத்தில் இளவரசர் மீதும் நான் அபார நம்பிக்கை கொண்டுள்ளேன். இளவரசர் எப்போதும் தவறிழைக்கவே மாட்டார்" என்று உரைக்க அக்னீஸ்வரி அந்த வார்த்தைகளைக் கேட்டு மனம் நொந்து வாடினாள்.

நடக்கும் எல்லா பாதகச் செயலுக்கும் அந்த ருத்ரதேவன்தான் காரணம் என்று எவ்வாறு உரைப்பது? அதை யாராவது நம்புவார்களா? என்று எண்ணி அவளுக்குள்ளேயே தவிப்புற்றாள்.

இவர்கள் இருவரின் பொய்யான நம்பிக்கை பரிமாறுதல் ரொம்பவும் சில நாழிகைகளில் பொய்யாய் போனது. விஷ்ணுவர்தனின் மரணச் செய்தியை குதிரை மீது வந்த வீரன் உரைத்துவிட்டுச் சென்றான். ருத்ரதேவன் கட்டிய பொய்யான கதைகளையும் சேர்த்து உரைக்க, அதை அவர்கள் நம்பவில்லை.

சுவாமிநாதர் தன் மகனுக்கு நேர்ந்த அநியாயத்தை எண்ணிக் கண்ணீர்விட்டு கதறினார். அக்னீஸ்வரி ஒருவாறு நடக்கப் போவதை யூகித்திருந்தாள். ஏற்கனவே இதேப் போன்ற மரணச் செய்தியை எதிர்கொண்டு வேதனையுற விஷ்ணு வர்தன் தன் கண்முன்னே வந்து நின்ற காட்சி இப்போதும் அதே எதிர்பார்ப்பை அவளுக்குள் தோற்றுவித்தது.

மீண்டும் அவன் உயிர்த்தெழுந்து வரப் போவதில்லை. அவளின் விழிகள் அவனை இனிக் காணப் போவதில்லை. இந்த உண்மையை ஏற்றுக் கொள்வது கடினமாயினும் அதுவே நிதர்சனம். அந்த ருத்ரதேவன் தன் மீது கொண்ட சினத்தைத் தன் கணவனின் மீது காண்பித்துவிட்டான் என்பதை உணர்ந்து கொண்டாள். அவளின் ஆசைகளும் ஏக்கமும் கண்ணீராய் கரைய, அவள் தேகம் உணர்வுகளைத் தொலைத்து வெறும் கடமைக்கென உயிரைச் சுமந்தது.

சௌந்தர கொங்கனன் நாட்டுக்குத் திரும்பியதும் அவன் கேள்விப்பட்ட நிகழ்வுகள் எல்லாமே நம்ப முடியாத ஒன்றாய் இருக்க, ருத்ரதேவனின் வார்த்தைகள் அவரை நம்ப வைத்தது. அக்னீஸ்வரி கோபத்தில் அரசரைப் பார்க்க எண்ணிய போது அதற்கான அனுமதி கிடைக்கப்பெறவில்லை.

ருத்ரதேவன் அதற்கான எந்த வாய்ப்பையும் அவளுக்குக் கிடைக்கப்பெறாமல் செய்தான். ருத்ரதேவனைப் பற்றி அக்னீஸ்வரி கூறும் எதையும் மக்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. மாறாய் எல்லோருமே விஷ்ணுவர்தனுக்கு எதிராகவே பேசினர். அவளுடைய முயற்சிகள் அனைத்தும் தோல்வியையே தழுவியது. ஏன் அவள் குடும்பத்தாரும் இத்தகைய பெரிய அநியாயம் நிகழ்ந்த பின்னும் அரச வம்சத்தினரை எதிர்க்க தயாராக இல்லை.

நடப்பவை அனைத்தும் அக்னீஸ்வரியின் துணிவைத் தகர்த்து கொண்டே இருக்க, 'யாருக்காக இனி வாழ வேண்டும்' என்ற கேள்வி எழ தன் அறிவீனத்தால் மகன்களை இழந்து நிற்கும் சுவாமிநாதரைக் குறித்த எண்ணமும், தன்னாலேயே பெற்றோரை இழந்துவிட்ட அரங்கநாதனும் கண்முன்னே தோன்ற குற்றவுணர்வு அவளை மரணிக்கவிடாமல் தடுத்தது.

இவை எல்லாம் ஒரு புறமிருக்க ருத்ரதேவன் ஆதுரசாலையின் மீது பரப்ப சொன்ன வதந்திகள் மக்களுக்கிடையில் வேகமாய் பரவியது. மக்கள் முதலில் பொய்யா உண்மையா என்ற சந்தேகம் கொண்டு, பின் உண்மையாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்து, நாளடைவில் உண்மையாகத்தான் இருக்கும் என்று எல்லோரும் அதனை ஊர்ஜிதப்படுத்திவிட்டனர்.

அக்னீஸ்வரிக்கு அரங்கநாதனைப் பார்த்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமிருந்தாலும் தன் துரதிஷ்டமான விதி அவனைப் பீடித்துவிடுமோ என்று பயந்தாள். ஆதலால் அவனைப் பெற்றோர் வீட்டிலேயே இருக்கும்படி விட்டுவைத்தாள்.

அக்னீஸ்வரி நீலமலை குடிலில் இருந்தபடி சுவாமிநாதரைக் கவனித்து கொண்டாள். ஆதுர சாலை மீது ஏற்பட்ட அவப்பெயரால் இரவு பகல் பாராமல் மக்கள் கூட்டம் சூழ்ந்திருந்த இடம் இப்போது ஆள்அரவமின்றி காட்சியளித்தது.

சுவாமிநாதர் நடந்து கொண்டிருக்கும் பேரிழப்புகளைத் தாங்க முடியாமல் மனதளவில் மிகவும் சோர்ந்து போனார். ஆனால் அக்னீஸ்வரியின் அக்கறையும் அன்பும் அவரின் துயரை ஒரளவு குறைத்திருந்தது.

அன்று நட்சத்திரங்கள் கண்களைச் சிமிட்ட இருள் நிலமகளைத் தம் பிடியில் சிறை வைத்தது. அந்த இரவு அக்னீஸ்வரியின் வாழ்வை மொத்தமாய் இருளில் ஆழ்த்த காத்திருந்தது.

அப்போது குடிலில் சமைத்தபடி அக்னீஸ்வரி சுவாமிநாதனிடம் அவளின் கோபத்தையும் ஆற்றாமையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்.

" எல்லோருமே எப்படி இத்தனை சுயநலம் கொண்டவர்களாய் இருக்கிறார்கள்? எத்தனை பேர் உங்களால் பயனடைந்து இருக்கிறார்கள். ஆனால் இன்று ஒரு பிரச்சனை என்றதும் யாருமே துணை நிற்கவில்லை" என்றுரைத்தாள்.

சுவாமிநாதரோ மனதைத் தேற்றிக் கொண்டபடி, "நீ ஏனம்மா நடந்து முடிந்ததை எண்ணிக் கவலைக் கொள்கிறாய்... ஏற்கனவே உனக்கு காய்ச்சல் வேறு... சிறிது நேரம் அமைதியாய் இரு" என்று மருமகளை சமாதானம் செய்தார்.

அவளும் அத்துடன் அமைதியாகிவிட மீண்டும் சுவாமிநாதன், "பங்குனி உத்திர திருவிழா அரங்கநாதன் கோயிலில் நடக்கிறது... நீயும் கோயிலுக்குப் போய்விட்டு உன் பெற்றோருடன் சில நாட்கள் தங்கிவிட்டு வரலாம் இல்லையா" என்றார்.

"அந்த அரங்கநாதனும் சரி... என் பெற்றோரும் சரி... என்னைப் பற்றிக் கவலை கொள்ளாதவர்கள்... நான் எதற்கு அவர்களைச் சென்று பார்க்க வேண்டும்... அதுவும் இல்லாமல் நான் உங்களை விட்டு எங்கும் செல்ல மாட்டேன்" என்றவள் படபடவென பொறிந்து தள்ள,

"இந்தக் கிழவனுக்கு நீ காவலாக்கும்" என்று சுவாமிநாதன் கேட்கும் போதே, அக்னீஸ்வரி தலையைப் பிடித்தபடி தரையில் அமர்ந்து கொண்டாள்.

சுவாமிநாதன் அவள் கரத்தைப் பிடித்து நாடி பார்த்து,"அக்னீஸ்வரி! காய்ச்சல் அதிகரித்து கொண்டே போகிறது... நான் போய் பச்சிலை மருந்து பறித்து அறைத்து கொண்டு வருகிறேன்... நீ படுத்து ஓய்வெடு" என்று எழுந்து கொண்டார்.

"வேண்டாம் மாமா... இந்த இருளில் தாங்கள் எங்கும் செல்லாதீர்கள்... சாதாரண காய்ச்சல்தானே... விரைவில் சரியாகிவிடும்" என்று அவள் சொல்ல அவர் காதில் வாங்காமல் குடிலைவிட்டு வெளியே சென்றபடி, "நான் இதோ வந்துவிடுகிறேன்" என்று மருந்து எடுத்துவர புறப்பட்டுவிட்டார்.

"வேண்டாம் மாமா!" என்று மீண்டும் அவள் குரல் கொடுத்தாள். ஆனால் சுவாமிநாதன் வெளியேறி விட்டார். இந்த நிலையில் அக்னீஸ்வரிக்கு விஷ்ணுவர்தனின் நினைவு வந்தது.

தனக்கு என்ன நேர்ந்தாலும் துடித்து போய்... பார்த்து பார்த்து கவனித்து கொள்வான் என்ற எண்ணம் தோன்ற அவள் மனம் வேதனையில் உழன்றது.

நிறைய இழப்புகள் ஏமாற்றங்கள் வலிகள் என்று குறுகிய நாட்களில் அக்னீஸ்வரி சந்தித்த அனுபவம் அவள் மனதை இறுகிப் போகச் செய்தது. எல்லோருக்கும் நன்மையே நினைத்த சுவாமிநாதர் மற்றும் அவரின் இரு மகன்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதியைக் குறித்து மக்கள் யாரும் கவலைக் கொள்ளவில்லை என்ற எண்ணம் ஒருவிதமான வெறுப்பை ஊன்றியது.

இப்படியாக அவள் வேதனையுற்று வாடிக் கொண்டிருந்த சமயத்தில் அக்னீஸ்வரியின் செவிகளில் புரவியின் கனைப்பு சத்தம் கேட்க, அவளுக்கு ருத்ரதேவனின் நினைவு வந்தது. அந்தச் சத்தம் படபடப்பை ஏற்படுத்த அக்னீஸ்வரி எதிர்பாராமல் ருத்ரதேவன் அந்தக் குடிலின் வாயிற் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான்.

அக்னீஸ்வரிக்கு அவனைப் பார்த்ததும் கோபமும் வெறுப்பும் ஏற்பட இவன் எதற்கு இங்கே வந்திருக்கிறான் என்றெண்ணிக் குழப்பமுற்றாள்.

'வெளியே செல்' என்று குரல் எழுப்ப கூட முடியாதவாறு அவளின் உடல் வலுவிழந்து கிடந்தது.

You cannot copy content