You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Meendum Uyirthezhu - 21

Quote

21

ஈஷ்வர் தேவ்

பிரான்ஸில் அமைந்திருக்கும் ரா மெடிக்கல் ரிசர்ச் சென்டரின் வெளிப்புற தோற்றம் முற்றிலும் மாறுப்பட்ட பாணியில் வடிவமைக்கப்பட்டுப் பார்ப்பவர்களைப் பிரமிப்பூட்டிக் கொண்டிருந்தது.

சுற்றிலும் பசுமையாய் மரங்கள் சூழ்ந்திருக்க அங்கே புதிதாக யாரும் உள்ளே நுழையாதபடி பலமான காவல் போடப்பட்டிருந்தது. எல்லோரும் வெளிப்புற வாசலிலேயே தங்கள் அடையாள அட்டையைக் காண்பித்து விரல் ரேகையைப் பதிய வைத்தப் பின்னே உள்ளே நுழைந்தனர்.

அவர்கள் வெகு நாட்கள் அங்கே வேலை புரிபவர்களாயினும் அந்த அடுக்கடுக்கான பாதுகாப்புகளுக்கு உட்பட்டுத்தப்பட்ட பின்னரே அவர்கள் உள்ளே செல்லவோ அல்லது வெளியே வரவோ அனுமதிக்கப்பட்டனர்.

அந்தக் கட்டிடத்தின் ஒவ்வொரு தளத்திலும் வெவ்வாறான ஆராய்ச்சி கூடமிருக்க, அங்கே அமைந்த பல கண்ணாடி அறைகளில் ஆராய்ச்சிக்கான எல்லா ரசாயனப் பொருட்களும் அறிவியல் இயந்திரங்களும் கருவிகளும் வைக்கப்பட்டிருந்ததை காண முடிந்தது.

அதே நேரத்தில் ஆராய்ச்சிகளில் ஏற்படும் விளைவுகளால் எந்த வித பாதிப்போ அல்லது ஆபத்தோ நிகழாமல் தடுக்க பாதுகாப்புகளும் சீராக மேற்கொள்ளப்பட்டிருந்தன. அங்கே வேலை புரியும் எல்லோரும் மருத்துவத் துறையின் ஆராய்ச்சியில் பெரும் அறிவியல் வல்லுநர்களாய் இருந்தனர். நோய்களைப் பற்றிய ஆராய்ச்சிகளும் அதற்கான தீர்வைக் குறித்த விளக்க உரைகளும் சிலர் கைகளில் வைத்து புரியாத கெமிக்கல் ஃபார்முலாவாக எழுதிக் கொண்டிருந்தனர்.

ஆனால் இன்று யாரும் அத்தனை மும்முரமாய் ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை, மாறாய் எல்லோருக்குள்ளும் பதட்டம் தொற்றிக் கொண்டிருந்தது.

ஈஷ்வரின் வருகையைக் குறித்து பெரிய எதிர்பார்ப்பு எல்லோர்க்குள்ளேயும் இருந்தது. அவன் எப்போதாவது ஒரு முறைதான் வருவான். ஆதலால் அவனை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. 'ரா' மெடிக்கல் ரிசர்ச் சென்டரின் தலைமையாளர் அருண்வர்மாவும் அவனின் வருகைக்காக ஆர்வத்தோடும் பதட்டத்தோடும் காத்திருந்தார்.

ஈஷ்வர்தேவ் அந்த அடுக்கடுக்கான பாதுகாப்புகளைக் கடந்து வராமல், பின்புறம் இருந்த விசாலமான இடத்தில் அமைந்த ஹெலிப்பேட்டில் கம்பீரமாய் வந்து இறங்கினான். குதிரையில் காற்றென வேகமாய் பறந்து வருபவன் இன்று வானிலிருந்து உண்மையிலேயே பறந்து வந்து இறங்கினான் என்றே சொல்ல வேண்டும்.

முன்பிருந்ததை விட பன்மடங்கு வேகமும் பலமும் கொண்டவனாய் ஈஷ்வர்தேவ் இருக்க, அந்த ஆராய்ச்சி மையத்தில் அவனை முதல் முறை பார்த்தவர்கள் எல்லோரும் அவனின் உயரமும் கட்டுடலான தேகமும் இளமையான தோற்றமும் நிமிர்ந்து நடந்து வரும் தோரணையையும் பார்த்து திகைப்புற்று புருவங்கள் நெறிந்தபடி வியப்பில் ஆழ்ந்தனர்.

அவனின் தேகத்தின் கம்பீரத்தைக் காண்பிக்கும் பிளாக் ஷர்ட்டும் அவனின் கூர்மையான கண்களை மறைத்த கருப்பு நிற கண்ணாடியும் பார்ப்பவர்களை வசீகரிக்கும் அதே நேரத்தில், அவனின் இறுக்கமான முகம் மிரட்சிக் கொள்ள வைத்தது.

தற்போதைய நாகரிகமான உடை மாறுதலை தவிர அவன் அதே கொங்கு நாட்டு அரசனுக்கு உண்டான ஆளுமையும் கம்பீரமும் குன்றாமல் இருந்தான் என்று சொல்வதை விட பன்மடங்கு பெருகியபடி காட்சியளித்தான் என்றே சொல்ல வேண்டும்.

ஈஷ்வர்தேவ் அந்த உயராமான கட்டிடத்தின் மேல் தளத்தில் விசாலமாய் இருந்த கான்ப்ஃபிரன்ஸ் ஹாலில் அமைந்த பெரிய வட்ட நிற மேஜையின் எல்லோரின் பார்வையும் பதியும்படியான இடத்தில் கால் மீது கால் போட்டு அமர்ந்திருக்க, அந்த இடம் முழுவதுமாய் அப்போது இருளடர்ந்து இருந்தது.

அங்கே அமர்ந்திருந்த ஆராய்ச்சி மையத்தின் உறுப்பினர்களில் பலரும் வெவ்வேறான தோற்றமும் நிறமும் கொண்டவர்களாயிருக்க அவர்கள் அனைவரும் வெவ்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் என்பதைத் தெளிவாய் உணர்த்தியது.

ஈஷ்வர்தேவ்விற்கு நேரே இருந்த ராட்சத திரையில் புரொஜக்டரின் மூலம் காட்சிகள் திரையிடப்பட, அதன் அருகே நின்றிருந்த ஒரு ஃபிரான்ஸ் இளைஞன் அவற்றைப் பற்றி விளக்கமாய் விரிவுரைக் கொடுக்க ஆரம்பித்தான்.

எல்லோருடைய சொற்பொழிவையும் ஈஷ்வர்தேவ் கூர்மையாய் கவனித்து கொண்டிருந்தான். பின் அவன் தன் இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்தபடி பிரெஞ்சு மொழியில் அவன் சொல்ல நினைத்ததை உரைக்க ஆரம்பித்தான். அவன் பல மொழிகளைக் கற்று தேர்ந்தவன் ஆதலால் அவன் அந்தந்த இடத்திற்கு ஏற்றவாறு தான் எண்ணியதை அந்தந்த மொழியில் உரைக்கும் வல்லமை கொண்டவன்.

அவன் சுருக்கமாகச் சொன்ன விஷயம் இதுதான்.

"பையோ மெடிக்கல் மற்றும் மெடிக்கல் ஆராய்ச்சி சார்ந்த பல துறைகளில் உள்ள வெவ்வேறு நாட்டில் உள்ள அத்தனை திறமைசாலிகளையும் இங்கே ஒரு இடத்தில இணைச்சிருக்கேன்னா... நம்ம ரிசர்ச் சென்டர்தான் எல்லா கண்டுபிடிப்புகளிலும் முதலிடத்தில் இருக்கணும். தட்ஸ் மை எய்ம்

யாருமே நம்மை முந்திக்க கூடாது. நம்ம ரீவீல் பண்ற மருந்து பத்தின ஃபார்முலாஸ் யாருக்குமே தெரியக் கூடாது. எந்த மருந்தை எப்போ ரீவீல் பண்ணனுமோ அப்ப ரீவீல் பண்ணிக்கலாம். மக்கள் அந்த நோயோட சீரியஸ்னஸ்ஸை உணர்ந்து பாதிப்பு அதிகரிக்கும் போது நம்ம மருந்தோட மதிப்பும் கூடும். உங்களோட கண்டுபிடிப்புகளுக்கான பலனும் புகழும் உங்களுக்கு கிடைக்கும். டிமேன்ட்தான் நம்மோட மார்க்கெட்... நம்மோட வளர்ச்சி…

லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட்... ரா ரிசர்ச் சென்டரை தாண்டி என் அனுமதியில்லாமல் எந்தவொரு சீக்ரெட்ஸுமே வெளியேப் போக கூடாது ரைட். அப்படி ஒரு மிஸ்டேக் நடந்தா மன்னிப்புங்கிற பேச்சுக்கே இடமில்லை. இந்த ஈஷ்வருக்கு இன்னொரு கண்ணு இருக்கு... நினைவிருக்கட்டும்... இட்ஸ் வெரி டேஞ்சிரஸ்... நான் எந்த நாட்டில இருந்தாலும், மை ஐஸ் வில் பி வாட்ச்சிங் யூ ஆல்" என்று தன் உரையை முடித்து கடைசி வாக்கியத்திற்கு மட்டும் அழுத்தம் கொடுத்தான்.

பிறகு அங்கே இருந்த உயரமான கருப்பு நிற இளைஞன் எழுந்து, "நம்ம தயாரிக்கின்ற நீயூட்டிரீஷ்ஷியஸ் டிரிங்க்தான் இன்னைக்கு உலகம் பூராவும் மார்க்கெட்ல மக்களால் பெரும்பாலும் நம்பி வாங்கப்படற ஒரே பிராடக்ட்... ஸ்டில் நமக்கு நிகரா யாருமே இல்லை" என்று பெருமிதமாகச் சொல்லி அதனைப் பற்றி விளக்கங்களை அவன் திரையிட... எல்லோரும் கைத்தட்டி அந்த வெற்றியைப் பெருமிதமாய் கொண்டாடினர்.

அத்தனை நேரத்தில் அப்போதுதான் ஈஷ்வரின் முகத்தில் லேசாக புன்னகை தவழ அவன் எழுந்து நின்றபடி,

"இட்ஸ் அ கிரேட் நீயூஸ்... மக்களோட நம்பிக்கையே நம்மோட வெற்றி... இப்போ மட்டும் இல்ல... எப்பவுமே நாமதான் முதலிடத்தில் இருக்கணும்... அன் வீ கோன்னா ரூல்த வார்ல்ட் ஃப்ரண்ட்ஸ்" என்று ஆராவாரிக்க அவனின் கம்பீரமும் திமிரும் அங்கே இருந்த பெண்களை வசீகரிக்க செய்த அதே சமயத்தில் ஆண்களைப் பொறாமைக் கொள்ளச் செய்ததென்றே சொல்ல வேண்டும்.

அந்தக் கூட்டம் கலைந்த சில நொடிகளில் வெறும் நால்வர் மட்டுமே அங்கே அமர்ந்திருக்க, ஈஷ்வரின் முகத்தில் இருந்த புன்னகை மாறி எள்ளும் கொள்ளும் வெடித்தது.

அந்த ஆராய்ச்சி மையத்தின் தலைமையாளர் அருண்வர்மா கிட்டதட்ட ஐம்பது வயது நெருங்கியவர் எனினும் அவன் முன் நடுக்கத்தோடு அமர்ந்திருக்க, "எப்படி அருண்... எப்படி இது பாஸிப்பிள்... எவ்வளவு பெரிய பிராஜக்ட்... தோல்விங்கிறது கூட ஒகே... பட் டோட்டிலி ஜீரோ... எப்படி... ஐ நீட் டு நோ?" என்று மேஜை மீது தட்டி ருத்ர தாண்டவம் ஆடினான்.

அந்தப் பெரிய திரையில் கொங்ககிரி என்கிற தமிழகத்தில் பலரால் அறியப்படாத அதிக வசதியோ எந்த வித இணைய தொடர்புகளோ இல்லாத ஒரு குக் கிராமத்தின் படம் இருந்தது.

அருண்வர்மா அவன் கோபத்தைப் பார்த்து பதட்டத்தோடு, "கொங்ககிரி மக்கள் மேல நாம டெஸ்ட் பண்ண டீ7 இன்பஃக்ஷன் எந்த வித விளைவையும் ஏற்படுத்தலங்கிறது எங்களுக்குமே புரியாத புதிர்தான் ஈஷ்வர்" என்றார்.

ஈஷ்வர்தேவ் அலட்சியமாய் சிரித்தபடி, "விளைவுகளை ஏற்படுத்தலன்னா நீங்க இன்ஜெக்ட் பண்ண டிஸீஸோட எஃப்ட் அவ்வளவுதானா? இல்ல உங்க டெஸ்ட்டிங்ல பிராப்ளமா? ஐ டோன்ட் அன்டர்ஸ்டன்ட்" என்றான்

அப்போது அந்த பிரொஜக்ட்டின் முக்கிய பொறுப்பில் இருந்த தமிழ் இளைஞன் பதட்டத்தோடு, "நோ பாஸ்... நம்ம சைட்ல இருந்து எல்லாமே கரெக்டாதான் நடந்தது... அதே நேரத்தில டீ7 செல்லோட அட்வான்ஸ் ஸ்டேஜ் இன்ப்ஃக்க்ஷனை அங்கே சிலர் மேல இன்ஜெக்ட் பண்ணி இருந்தோம்... அது மட்டும் கரெக்டா வொர்க் அவுட் ஆகியிருந்தா ஜஸ்ட் டென் டேஸ்தான்... அவங்க ஆர்கன்ஸ் எல்லாமே ஒன் பை ஒன் செயலிழந்திடும்... அட்லாஸ்ட் டெத்தான்... நம்ம மருந்தைக் கொடுத்திருந்தா மட்டுமே அவங்கள காப்பாத்தி இருக்க முடியும்" என்றான்.

"யூ மே பி ரைட் சலீம்... பட் நீங்க இன்ஜெக்ட் பண்ணி... த்ரீ மன்த்ஸ் ஆகப் போகுது...வேர் இஸ் தி ரிசல்ட்? அவங்க யாருக்கும் ஒன்னும் ஆகலயே... டீ7 டிஸீஸ் அதுவா க்யூராயிடுச்சா என்ன?" என்று அந்த இளைஞனை நோக்கி கேள்வி எழுப்பினான்.

மேலும் வேறொருவன் சற்று யோசித்தபடி, "இப்படி இருக்கலாம் பாஸ்... அந்த மக்களோட வாழ்க்கை முறை... உணவு பழக்கம்... அங்கே விளையற மூலிகைகளோட எஃபெக்டா" என்று உரைக்க

ஈஷ்வர் கலகலவெனச் சிரித்துவிட்டு, "ரைட்... நீங்க மாஞ்சி மாஞ்சி கண்டிப்பிடிச்ச மருந்து அப்போ வேஸ்ட்... பேசாம டீ7 டிஸீஸால பாதிக்கப்பட்டவங்களுக்கு டிக்கெட் எடுத்து கொடுத்து கொங்ககிரிக்கு அனுப்பி விட்டுட்டா என்ன? எப்படி என் ஐடியா?" என்று கேலி செய்தவன் மீண்டும் மொத்தமாய் கோபத்தின் உச்சிக்குப் போய் நின்றபடி,

"வெல்... நீங்க ஸீரியஸ்னு சொல்லி பூச்சாண்டிக் காட்டின டீ7 செல் டிஸ்ஸீஸ் இஸ் நத்திங்... உங்க டிகிரி... பி.எச்.டி... எக்ஸ்ட்டிரா... எக்ஸட்டிரா... எல்லாமே யூஸ்லஸ்... படிக்காத அந்த கொங்கரி மலை வாழ் மக்களோட மூலையில பாதி கூட உங்க யார்கிட்டயும் இல்ல... அப்படிதானே?!" என்றான்.

அங்கே இருந்த ஒரு நடுத்தர வயதினன் அவன் அப்படி குறைவாய் பேசுவதைத் தாங்காமல்,

"நிச்சயமா அதுவா க்யூர் ஆகல பாஸ்... அதுக்கு வாய்ப்பும் இல்ல... இதுக்கு பின்னாடி ஏதோ பெரிய ரீஸன் இருக்கு... வீ நீட் டு ஃபைன்ட் இட் அவுட்" என்று தீர்க்கமாக உரைத்தான்.

"ஓகே... ஒன் வீக் டைம் தர்றேன்... ஃபைன்ட் அவுட்... கொங்ககிரி பிராஜக்ட் பத்தின டீடைல் ரிப்போர்ட் எனக்கு வந்தாகணும்" என்று சொல்லிவிட்டு போகும்படி கையசைத்தான். எல்லோருமே அவனிடம் இருந்து தப்பித்தால் போதும் என வேகமாய் அந்த அறையிலிருந்து வெளியேறினர்.

அப்போது அவன் பின்னோடு நின்றிருந்த அவனின் பி.ஏ மதிவாணன் அருகில் வந்து தயக்கத்தோடு நின்றான்.

மதி பின்னோடு தயங்கி நிற்பதைப் பார்க்காமலே, "என்ன மதி... மாம் கால் பண்ணாங்களா?!" என்று ஈஷ்வர் வினவ, எந்நிலையிலும் அவன் கவனம் சுற்றிலும் படர்ந்திருப்பதை மதி வியந்தபடி,

"எஸ் பாஸ்" என்று உரைத்தான்.

"என்ன அவங்க அனுப்பிய ஃபோட்டோஸ் பத்தி கேட்டாங்களா?!" என்று மீண்டும் ஈஷ்வர் கேட்க மதி மீண்டும், "எஸ் பாஸ்" என்று ஆமோதித்தான்.

"நான் எந்த ஃபோட்டோஸையும் பார்த்து இம்பிரஸாகலன்னு சொல்லிடு மதி... திரும்பியும் இந்த மாதிரி ஃபோட்டோஸ் அனுப்ப வேணாம்னு... க்ளியரா சொல்லிடு" என்றான்.

"நான் எப்படி மேடம்கிட்ட... நீங்களே?!" என்று மதி உரைக்க ஈஷ்வரின் அமைதியான முகம் மீண்டும் கோபமாய் மாற அதற்கு மேல் மதி எதுவும் பேசாமல் மௌனமானான்.

பின்னர் மதி கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து கொண்டு, "நான் ஒரு விஷயம் கேட்டா" என்று தயங்க ஈஷ்வர் அவனை நிமிர்ந்து நோக்கி புருவத்தை உயர்த்தி என்னவென்று வினவினான்.

"அது வந்து பாஸ்!" என்று அவன் இழுக்க, "கம்மான் மதி... டென்ஷன் பண்ணாத... கேளு" என்றான்.

மதி பயந்தபடி,"பாஸ்... உங்களைத் தேடி வர பெரிய பெரிய மாடல்ஸ்... யாரையும்... கிட்ட கூட சேர்க்க மாட்டிறீங்க... சரி... அது ஒரு பக்கம்னா... மேடம் அனுப்பிற எல்லா ஃபோட்டோஸையும் ரிஜெக்ட் பண்ணிறீங்க... உங்களுக்கு மேரேஜ் பண்ணிக்கிற இன்டிரஸ்ட் இல்லயா... இல்ல பொண்ணுங்க மேலயே இன்டிரஸ்ட் இல்லயா?" என்று கேள்வி எழுப்ப ஈஷ்வர் தன் கோபத்தை மறந்து புன்னகைத்தான்.

"ஐம் நாட் இன்ட்டிரஸ்டட்னு சொல்லலையே... ஐம் நாட் இம்பிரஸ்ட்னுதானே சொன்னேன்" என்று சொல்லும் போதே ஈஷ்வரின் முகப்பாவனை இயல்பாக மாறி இருந்தது.

இந்த பதில் மதிக்கு ஆச்சர்யமாய் இருந்தது. ஈஷ்வர் பணபலம் பதவிபலம் என எல்லாம் இருந்தாலும் மது, மாது என்ற மதியை மயக்கும் இரண்டையும் விட்டு விலகியே இருந்தான். அதனாலயே அவனை வீழ்த்த நினைப்பவர்களுக்கு அது பெரும் பின்னடைவாக இருந்தது எனலாம். ஆனால் அவன் இப்போது என்ன சொன்னான் என்று மதி சிந்திக்கலானான்.

இன்டிரநேஷனல் மாடல் வரை பல பெண்களை சந்தித்தவன் யாரையும் பார்த்து இம்பிரஸ் ஆகவில்லை எனில் அப்படி எத்தகைய பெண்ணைப் பார்த்துதான் ஈர்க்கப்படுவான் என்ற கேள்வி மனதில் தோன்றியது. ஈஷ்வர் கூடவே பத்து வருட காலம் நிழலாய் இருந்தும் அவன் மனஎண்ணத்தை மதியால் இன்று வரை கணிக்க முடியவில்லை.

அவந்திகா தன்னைச் சுற்றி பாதிக்கப்பட்ட பல பெண்களுக்கு மறு வாழ்வு கொடுத்து வேலையாட்களாக வைத்திருந்தாள். அப்படி அவந்திகாவின் நம்பிக்கைக்குரிய ஒருத்தியான விஜியின் மகன்தான் மதி. அவனை ஈஷ்வர் தன் கூடவே இருக்க தேர்ந்தெடுத்ததன் காரணம் அவனுக்கு பெயர்தான் மதி என்றாலும் கூர்மையான அறிவெல்லாம் கிடையாது.

ஈஷ்வரைப் பொறுத்த வரை கண்களை மூடிக் கொண்டு அவன் சொல்வதை சரியா தப்பா என்று கேட்காமல், நியாயம் தர்மம் பார்க்காமல் செய்து முடிக்க வேண்டும். தன்னுடன் இருப்பவர்களுக்கு நம்பிக்கையும் நன்றியும் விசுவாசம் இருந்தால் மட்டுமே போதமானது என்பதே ஈஷ்வரின் எண்ணம். அது மதியிடம் நிறைவாய் இருக்க, பத்து வருட காலம் மதி ஈஷ்வரின் நிழலாகவே மாறிவிட்டான். ஈஷ்வர் புத்திசாலியாக இருப்பவர்களை அவனுக்கு கீழே வைத்திருப்பானே ஒழிய அருகில் வைத்துக் கொள்ளவே மாட்டான்.

மதியால் ஈஷ்வரைப் புரிந்து கொள்வது அசாத்தியமாக இருப்பினும் மதியின் எண்ணத்தை அவன் முகத்தைப் பார்த்து நினைப்பதை ஈஷ்வர் புரிந்து கொள்வான். இப்போதும் அவ்விதமே புரிந்து கொண்டு அவன் இருக்கையில் இருந்து எழுந்து மதியின் தோள் மீது கைப்போட்டபடி, "நான் எந்த மாதிரி பெண்ணைப் பார்த்தா இம்பிரஸாவான்னு யோசிக்கிற... கரெக்டா?" என்று ஈஷ்வர் கேள்வி எழுப்ப "பாஸ்!" என்று திகைத்தான்.

ஈஷ்வர் அவனைப் பார்த்து புன்னகை செய்தபடி, "என் மைன்ட்ல ஒரு பொண்ணோட முகம் இருக்கு மதி... அந்த முகத்தின் அழகைப் பத்திச் சொல்ல வோர்ட்ஸே இல்ல... சலிக்காம நினைச்சு பார்த்துக்கிட்டே இருக்கலாம்... செதுக்கி வைச்ச சிற்பம் மாதிரி" என்று அவன் ரசித்து விவரித்து கொண்டிருக்க மதிக்கு அவன் சொல்வதும் சொல்லும் விதமும் அதிர்ச்சியாய் இருந்தது.

இவன் இத்தனை ரசனை கொண்டவனா என யோசித்தபடி, "அந்தப் பொண்ணை எனக்கு தெரியாம எப்போ பார்த்தீங்க பாஸ்... நான் உங்க கூடவேதானே இருக்கேன்" என்றான்.

ஈஷ்வர் உடனே கலகலவென சிரித்துவிட்டு, "நீ பார்த்திருக்க சேன்ஸே இல்ல... பிகாஸ் அவ என்னோட டீரீம்... உனக்கு ஞாபகம் இருக்கா மதி... லாஸ்ட் இயர் எனக்கு ஒரு ஹெட் இஞ்சுரி ஆச்சே?" என்றதும் மதி பதறியபடி,

"ஓ எஸ்... ஸ்வ்ட்ஸ்ல அந்த மவுட்டைன் டிரக்கிங் போகும் போது... நினைச்சு பார்க்க கூட முடியல... நீங்கப் பிழைக்கவே மாட்டீங்கன்னு... வெரி பேட் ஆக்ஸிடென்ட் பாஸ்" என்று மதி அந்த மோசமான நாளை நினைவுக்கூர்ந்தான்.

"எஸ் மதி ரைட்... உயிர் பிழைக்கவே மாட்டேன்னு... நானே என் நம்பிக்கையைத் தொலைச்சு கம்பிளீட் அன்கான்ஸியஸ் ஸ்டேட்டுக்குப் போயிட்டேன்... அந்த டைம்ல ஒரு முகம்... தண்ணீர்ல பிரதிபலிக்குது... என் கண்களை என்னால எடுக்கவே முடியாதபடி அவ்வளவு அழகான முகம்... என்னை இம்ப்ரஸ் பண்ண அந்த முகத்தை நேரடியா பாக்கணும்னு என் மனசு தவிச்ச போது... என் மயக்கம் தெளிஞ்சிடுச்சு...

முன்னாடி டாக்டர் நின்னுட்டு... இட்ஸ் அ மிரேக்கிள் நீங்கப் பிழைச்சிட்டீங்க... செகண்ட் பர்த் ஃபார் யூன்னு சொன்னாரு... மரணம் வரை போன என்னை அந்த முகம் உயிரோட மீட்டு கொண்டு வந்துடுச்சுன்னுதான் சொல்லணும்... அந்த முகத்தைத் திரும்பியும் எங்கேயாவது பார்த்திட மாட்டோமான்னு நான் தினமும் எதிர்பார்த்து ஏங்கிட்டிருக்கேன் மதி" என்று அவன் உணர்வுபூர்வமாய் சொல்லிக் கொண்டிருக்க,

மதி அவனை நோக்கி, "உங்க டீரீம்னா... சும்மா அல்ட்ரா மார்ட்னா... செம டிரெண்டியா... எந்த கன்ட்ரி பொண்ணு மாதிரி தெரியுது பாஸ்" என்று ஆர்வமாய் மதி கேட்க,

"ப்யூர் கல்ச்சரைஸ்ட் தமிழ் கேர்ள்" என்று சொல்லும் போதே ஈஷ்வரின் முகம் பிரகாசமாக, மதி புரியாமல் விழித்தான்.

ஈஷ்வர் வளர்ந்ததோ மும்பை மற்றும் படித்தது லண்டன் என அவன் பல நாடுகளில் வாழ்ந்திருக்கிறான். ஆனால் தமிழ் நாட்டின் பக்கம் போனதே இல்லை. அப்படியே தமிழ் பெண்களைப் பார்த்திருந்தாலும் அவர்களும் மேற்கத்திய கலாச்சாரத்திலேயே இருப்பவர்களாய் இருக்க இதெப்படி சாத்தியம்?

ஒரு வேளை அவனின் பூர்வீகம் தமிழ்நாடுதானே என்றறிந்த மதி வேடிக்கையாக, "அப்போ அது உங்க பூர்வ ஜென்ம ஞாபகமா இருக்கும் பாஸ்" என்றான்.

ஈஷ்வர் அவனை முறைத்தபடி, "டோன்ட் பீ ஸில்லி... நான் அந்தப் பெண்ணைக் கூடிய சீக்கிரம் பார்ப்பேன்... அந்த முகத்தைப் பார்க்காம என் லைஃப் முடியக் கூடாதுன்னே நான் அந்த அக்ஸிடென்ட்ல இருந்து மீண்டு வந்திருக்கேன் மதி... வெரி சூன் ஐ வில் மீட் ஹெர்... ஐம் ஷூர்" என்று அவன் பெரும் எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் உரைத்தான்.

ரோபோ போல எப்போதும் இயந்திரமாய் இருக்கும் ஈஷ்வருக்குள் இப்படி ஒரு ஒருவன் இருக்கிறானா என்று மதி உண்மையிலேயே ஆச்சர்யத்தில் மூழ்கினான்.

ஈஷ்வருக்கு மலை மீது இருந்து வீழ்ந்து மரணத்தைத் தொட்டுவிட்டு வந்த அந்த மோசமான விபத்து அவனுக்குள் இருக்கும் ருத்ரதேவனை சில நொடிகள் விழித்துக் கொள்ளச் செய்தது. அவனின் ஆழ் மனதில் பதிந்திருந்த அக்னீஸ்வரியின் பிம்பம் அவனின் நினைவில் வந்து மீண்டும் அழுத்தமாய் நின்றது.

ஈஷ்வர்தேவ் நூற்றாண்டுகளுக்கு முன்பு தொலைத்த அவனின் காதலை மீண்டும் தேடிக் கண்டெடுத்தான் எனில் அவன் தவறிக் கூட அவளை மீண்டும் தவறவிட நிச்சயம் விழையமாட்டான்.

இம்முறை அக்னீஸ்வரி ருத்ரதேவனை விட பன்மடங்கு பிடிவாதம், திமிர், கர்வம், பணபலம், பதவி கொண்ட ஈஷ்வராக வேறு ரூபத்தில் வரப் போகிறவனை எப்படி எதிர்கொள்ளப் போகிறாளோ... அது கேள்விக்குறிதான்?!

You cannot copy content