You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Meendum Uyirthezhu - 25 & 26

Quote

25

மீண்டும் விழிகள் சங்கமித்தன

அந்த வீட்டின் பின்புறம் இருந்த விசாலமான அந்த அழகிய தண்ணீர் குளத்தில் சூரியன் ஒளிப்பட்டு மின்னிக் கொண்டிருந்தது. அந்தக் குளிர்ந்த நீரில் நீராட அபிமன்யு கால் வைத்த போது ஒரு வித சிலிர்ப்பை அவன் தேகம் உணர ஏற்கனவே அந்த இடம் குளிர் பிரதேசமாய் இருக்க அந்தச் சில்லென்ற உணர்வை ரசித்தபடி அந்த நீரில் முழுவதுமாய் மூழ்கித் திளைத்தான்.

அவன் அத்தனை தூரம் பயணித்து வந்த களைப்பையும் சோர்வையும் அந்த நீரில் மூழ்கி நீக்கி விட்ட பின், மனமும் உடலும் லேசாகிட குளத்தை விட்டு வெளியேறியவன் துண்டால் துவட்டிவிட்டு வெண்மையான வேட்டியை அணிந்து கொண்டு தன் பரந்த மார்பை மறைத்தபடி துண்டை எடுத்து மேலே போர்த்திக் கொண்டான்.

அந்த உடையில் அவனின் தோற்றம் முற்றிலும் மாறியிருக்க அவனின் கம்பீரமும் மிடுக்கும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதபடி கூடியிருந்தது. அவன் அந்தக் குளத்திற்கு அருகிலேயே செடிகளும் கொடிகளும் சூழ்ந்திருந்த சிறு கோயிலில் சிலையென அமைக்கப்பட்டிருந்த அரங்கநாதனை வழிப்பட்டு தீபம் ஏற்றி கண்களை மூடி தியானிக்க அந்த இடத்தில் குடிகொண்டிருந்த அமைதியினைக் குலைத்தபடி,

"இப்ப உனக்கு என்ன வேணும்? எதுக்கு என்னையே இப்படி முறைச்சு பாத்திட்டிருக்க" என்று ஒரு பெண்ணின் குரல் அவன் செவியில் புகுந்து மனதைத் துளைத்திட அவன் சட்டென்று கண்கள் திறந்து சுற்றும் முற்றும் பார்த்தான்.

ஆனால் அவன் விழிகளின் தேடலில் யாரும் தென்படாமல் போக அந்த எண்ணத்தைத் தவிர்த்து அங்கே வைத்திருந்த குங்குமத்தை எடுத்து அவனின் அடர்ந்த புருவத்திற்கு இடையில் உள்ள இடைவெளியில் பாலமென வைத்து கொண்ட போது மீண்டும் அந்த ரம்மியமான குரல் கொஞ்சம் உயர்த்தலாய்,

"ஒழுங்கா போயிடு... இன்னும் கொஞ்சம் நேரம் இங்க நின்ன... என்ன பண்ணுவேன்னே தெரியாது" என்று மீண்டும் அந்தக் குரல் மென்மையாக இருந்த போதும் வன்மையான தொனியில் காற்றில் கலந்து வந்து அவன் செவியைத் தீண்டி மனதைப் பிசைந்தது.

அவன் அந்தக் குரலுக்கு உரியவளைக் காண வேண்டுமென ஏங்க மீண்டும் தன் பார்வையை அலைப்பாய விட்டுவிட்டு ஏமாற்றத்தோடு குழப்பத்தில் ஆழ்ந்தான்.

அவள் இன்னும் நிறுத்தியபாடில்லை. "அந்தக் கோட்டைத் தாண்டி நானும் வர மாட்டேன்... நீயும் வரக் கூடாது... பேச்சு பேச்சாதான் இருக்கணும்" என்று மீண்டும் அந்த குரல் கேட்க, அவன் இதழ்களில் புன்னகை மலர்ந்தது. இப்போது சரியாய் அந்தக் குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான்.

அந்தச் சிறு கோயிலின் சற்று அருகாமையில் மரங்கள் சூழ்ந்த அந்தப் பகுதியில் ஒரு பெண் திரும்பி நின்று கொண்டு எதிரே இருந்த மரத்தின் மீது அமர்ந்து அவளையே வெறித்து பார்த்து கொண்டிருந்த குரங்கிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தாள்.

இதை பார்த்த அபிமன்யு தலையசைத்து சத்தம் வராமல் தனக்குத் தானே சிரித்து கொண்டான். அந்த குரங்கு அவளையே வெறித்து பார்த்து கொண்டிருக்க, அந்தப் பெண்ணின் முகம் மட்டும் அவனுக்குப் புலப்படவில்லை.

மீண்டும் அந்தப் பெண், "என் கேமிரா வேணுமோ? நோ வே... நீ என்னதான் குட்டிகரணம் அடிச்சாலும்... உனக்கு அது கிடைக்காது... நெவர்" என்று அவள் விரல்களை அசைத்து மிரட்டிக் கொண்டிருக்க, இப்போது வானரன் கொஞ்சம் சினம் கொண்டு முறைத்து தன் பற்களைக் கோரமாய் காட்ட

அபிமன்யு ஆர்வமாய் இப்போதாவது அவள் பயப்பட்டு திரும்புவாளா என்று எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றம்தான்.

அந்தப் பெண் அவளின் இடையின் மீது கை வைத்த தோரணையில்,

"ஓய்! என்ன முறைக்கிற? என்னை உன்னால ஒன்னும் செய்ய முடியாது... பார்க்கலாமா?!" என்று சவாலாக உரைத்தாள்.

அபியால் தன் சிரிப்பை அடக்க முடியவில்லை.

‘குரங்குகிட்ட சவால் விட்டிட்டிருக்கா... மூளை கீளை கலங்கிப் போய் வைத்தியம் பார்க்க அழைச்சிட்டு வந்திருப்பாங்களோ? ஆனா டிரஸ்ஸை பாத்தா அப்படி தெரியிலயே... எதுவாயிருந்தாலும்... முகத்தைப் பார்த்தாதானே தெரியும்... இப்போதைக்கு இவ பேச்சு வார்த்தையை முடிக்க மாட்டா போலயே!" என்று அபி தனக்குள்ளேயே சொல்ல,

அவளோ மஞ்சள் வண்ணப் புடவையை நேர்த்தியாய உடுத்திக் கொண்டு அவளின் கூந்தல் மேலே மட்டும் லேசாய் கோர்க்கப்பட்டு கீழே அவள் முதுகை மறைத்த வண்ணம் பரந்திருந்தது. அவளின் பின்புறமோ சிலை போன்ற வடிவமைப்பில் இருக்க முதல் முறையாய் ஒரு பெண்ணைப் பார்க்காமலே அவளின் குரலும் துடுக்கான செயலும் உள்ளுக்குள் ஒரு வித ஈர்ப்பை உண்டாக்க அது எப்படி என்று காரணம் புரியாமல் அவள் முகத்தை எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற தவிப்போடு நின்று கொண்டிருந்தான்.

அந்தப் பெண் அந்த வானரனை லேசில் விடுவதாகத் தெரியவில்லை. இப்போது அவள் தன் வீரப்பராகிரமத்தைக் காட்டும் விதமாய்,

"என்னையே முறைக்கிறல... இப்போ நான் உன்னை என்ன பண்றேன் மட்டும் பாரு" என்று சொல்லியபடி அருகிலிருந்த மரத்தில் நீட்டிக் கொண்டிருந்த கிளையை உடைக்க முயற்சி செய்தாள்.

அபிக்கு அவளின் செயலைப் பார்த்து கோபம் ஏற்பட்டது. எல்லா தாவரங்கள் மரங்களுக்கும் உயிரும் உணர்வும் இருக்கிறது என்ற எண்ணம் கொண்டவன் அவன். தேவையில்லாமல் யாரும் மரக்கிளைகளை உடைக்கவோ தாவரங்களை அவசியமின்றி பறிக்கவோ அனுமதிக்க மாட்டான்.

அவன் அந்தப் பெண்ணை நோக்கி, "ஏ... நிறுத்து" என்று முன்னேறி வர, அந்த வானரனும் அவளின் செயலால் சினம் கொண்டு அவளை நெருங்கி வர நினைக்க, அந்தப் பெண்ணோ இப்போது கொஞ்சம் அச்சம் கொண்டு பின்னோடு காலெடுத்து வைத்தாள்.

அப்போது அபி பின்புறம் இருந்த கல்லைப் பார்த்து," ஏய் கீழே… பாத்து" என்று உரைக்கும் போதே அந்தக் கல் தடுக்கி விழப் போனவளை அவனின் கரங்களில் தாங்கிக் கொண்டன.

அப்போதுதான் அபிமன்யு அவளின் முகத்தைப் பார்த்தான். அந்தப் பெண்ணின் முகத்தை இத்தனை அருகாமையில் பார்க்க அபியின் விழிகள் ஸ்தம்பித்து போனது.

அந்தப் பெண்ணின் வானவில் போன்று நேர்த்தியாக வளைந்த புருவங்களும் மான் போன்ற விழிகளும் நீட்டமான மெல்லிய மூக்கும் அதன் கீழே பூவின் இதழ்களைப் போலவே சிவந்த இதழ்களும் அவள் வண்ணந்தீட்டப்பட்ட ஓவியமா இல்லை நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட சிற்பமா என்ற சந்தேகம் அபிக்கு எழுந்தது.

காந்தமென தன்னை இழுப்பது அவளின் அழகு மட்டும்தானா?! எல்லா பெண்களையும் சகோதுரத்துவத்தோடு பாவிக்கும் நானா இப்படி இந்தப் பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் மதி மயங்கி தன்னிலை மறந்து நிற்கிறேன்?

இயற்கை வனப்பை மட்டுமே அழகென்று ரசித்த தன் விழிகள் அவள் முகத்தின் அழகில் மெய்மறந்து போனதை அவனாலேயே நம்ப முடியவில்லை.

அவளைப் பார்த்த மாத்திரத்தில் மோகமும் காதலும் ஒரு சேர ஊற்றெடுக்க செய்யும் அவளின் வதனத்திற்குள் அபி கட்டுண்டான். அவளை விட்டு அகல்வேனா என அவன் விழி அடம்பிடிக்க, அவளுமே அவன் மீது பதித்த பார்வையை எடுக்க தயாராக இல்லை.

ஏன் அவன் கரத்திலிருந்து மீளும் முயற்சியையும் அவள் செய்யவில்லை. அவனின் கூரிய விழிகளும் ஆண்மையின் அத்தனை அம்சமும் பொருந்திய அவனின் உடலமைப்பும் தன்னைத் தாங்கி ஸ்பரிசிக்கும் அவனின் கரங்களின் அணைப்பும் மீள்வதற்கு வழியில்லாமல் அவளின் பெண்மையையும் நாணத்தையும் மறக்கடித்தது.

இருவரின் கருவிழிகளும் மீண்டுமே பல நூற்றாண்டுகளை கடந்து வந்து ஒன்றாய் சங்கமிக்க அவர்கள் இருவரின் மனமும் ஒரு சேர, "இந்த முகத்தை எங்கே எப்போது பார்த்தோம்? " என்ற கேள்விக்கான தேடலில் ஆழ்ந்துவிட்ட காரணத்தால் அவர்களைச் சுதாரிக்க சொல்ல மறந்து போனது.

அழகின் பால் ஈர்க்கப்பட்டுப் பார்த்த நொடியில் பிறந்த காதல் இல்லை அவர்களுடையது. பல காலங்கள் காத்திருப்பின் தேடலின் முடிவாய் இன்று இருவரும் சந்தித்து கொண்டனர்.

மீட்க முடியாமல் கட்டுண்ட இருவரையும் அபியின் ஈரமான கேசத்தில் வழிந்த நீர் அவன் நெற்றி குங்குமத்தில் வழிந்து, அவனின் கரத்தில் லயித்து உலகையே மறந்திருக்கும் அந்தப் பெண்ணின் புருவங்களுக்கு மத்தியில் சொட்ட, அப்போது அவனிடம் முழுமையாய் தொலைந்த அவளின் உணர்வுகள் துரதிஷ்டவசமாய் விழித்து கொண்டன.

உடனடியாக அவள் தன்னை அவனின் கரத்திலிருந்து மீட்டு கொண்டு தன் நெற்றியில் வீழ்ந்த குங்குமத்தைத் தொட்டுப் பார்த்து... தான் ஏன் இப்படி செய்தோம் என்றெண்ணித் தலையிலடித்து அவளை அவளே கடிந்து கொண்டாள். அவனின் உடலின் ஈரம் அவளின் மீதும் ஒட்டிக் கொள்ள நாணம் ஏற்பட நிமிர்ந்து பார்க்க முடியாமல் தவிக்க, அவனோ அவளைப் பிரிந்த நொடியில் பிறந்த ஏக்கத்தைப் பெருமூச்சோடு வெளியே விட்டு தன் மேற்த்துண்டை சரி செய்து கொண்டான்.

அவள் பார்த்தவுடன் கவர்ந்திழுக்கும் பேரழகி என்பதில் ஐயமில்லை. இருந்தும் ஏதோ ஒரு உறவும் உணர்வும் அவளிடம் தனக்கு இருக்கிறதோ என்ற எண்ணத்தில் அபிமன்யு குழம்பி நிற்க அவளோ இப்போது அனல் தெறிக்கும் பார்வையோடு அவனை முறைத்தபடி நின்றாள்.

26

முதல் அறிமுகம்

 

அபிமன்யு அந்தப் பெண்ணின் கோபமான பார்வையைக் கவனிக்காமல் அவளின் முழுமையான வடிவத்தைப் ரசிக்க, அருகாமையில் இருந்த போது தெரியாத அவளின் சராசரிக்கு அதிகமான உயரமும் உடலமைப்பும், அவள் புடவை உடுத்தியிருந்த விதத்தில் கச்சிதமாய் புலப்பட்டது.

ஏற்கனவே அவள் கோபத்தின் உச்சியில் நின்று அவனை முறைத்து பார்த்து கொண்டிருக்க, அவன் இப்படி அங்கம் அங்கமாய் தன்னை ரசித்து கொண்டிருப்பதை உணர்ந்து அவள் தன் விழிகளை அகல விரித்தபடி,

"ஹெலோ மிஸ்டர்!" என்று அவள் விரல்களை அவன் முகத்திற்கு நேராக சொடுக்கினாள்.

அவளின் விழிகளில் கனலாய் கோபம் தெறித்து கொண்டிருப்பதை உணர்ந்தவன் தன் தவறை உணர்ந்து கொண்டபடி பார்வையை அவள் மீதிருந்து அகற்ற முயற்சி செய்ய, அது அவனால் இயலாத காரியமாயிற்றே!

அவளோ, "ஏன் அப்படி பார்க்கிறீங்க?!" என்று கைகளைக் கட்டியபடி தலையை அசைத்து கேட்க,

"என்னையா?!" என்று அபிமன்யு குழப்பமாய் வினவினான்.

"பின்ன... வேற யாரை மிஸ்டர்?!"

"இல்ல... இங்க ஒரு குரங்கு இருந்ததே... அது கிட்ட கேட்டிங்களோன்னு" என்று அவன் பார்வை அந்த மரக்கிளையின் புறம் திரும்ப, அங்கே அந்த குரங்கு இல்லை.

ராமனும் சீதையும் இணைய அனுமன் உதவியது போல அந்த வானரரும் அவர்களைப் பிணைத்து வைத்து விட்டு காணாமல் மறைந்திருந்தார்.

மீண்டும் அந்தப் பெண்... அபிமன்யுவை நோக்கி, "பார்க்க ரொம்ப மரியாதையானவரா தெரியிரீங்க பட்... என்ன சீப் மெண்டாலிட்டி உங்களுக்கு" என்றாள்.

இந்த வார்த்தை அபிமன்யு மனதைக் காயப்படுத்த சட்டென்று அவள் மீதான ஈர்ப்பு கோபமாய் மாறியது.

அவளை முறைத்தபடி, "உங்களைக் கீழ விழாம காப்பாத்தினது சீப் மெண்டாலிட்டியா?!" என்று கேட்டான்.

"விழாம காப்பாத்தினீங்களா... இல்ல எப்படா விழுவன்னு... காத்திட்டிருந்தீங்களா?" என்று அவள் அவனை சந்தேகமாகப் பார்க்க,

"மைன்ட் யுவர் டங்... என்ன ஏதுன்னு தெரியாம பேசக் கூடாது... நீங்க அந்த குரங்க பாத்து பயந்து பின்னாடியே வந்து என் மேல விழுந்தது... உங்களோட மிஸ்டேக்... பின்னாடி பாத்து வந்திருக்கணும்" என்றான்.

"பின்னாடி நான் பார்க்கல சரி... நீங்க முன்னாடி பார்த்துதானே வந்தீங்க!"

"இத பாருங்க... திரும்பியும் சொல்றேன்... நல்லா கேட்டுக்கோங்க... நீங்க விழுந்திராம இருக்கதான் நான் உங்களைத் தாங்கிப் பிடிச்சிக்கிட்டேன்... தட்ஸ் இட்" என்று அவள் கண்களைப் பார்த்து கூற, அந்தப் பார்வை அவளை ஏதோ செய்தது.

அவள் லேசாக புருவம் சுருங்க, "சரி... நான் குரங்க பாத்து பயந்தது இருக்கட்டும்... நீங்க ஏன் மிஸ்டர்... பின்னாடி இருந்து கத்தினீங்க!" என்று அவனிடம் வினவ, அப்போதுதான் அபிமன்யுவிற்கு அவள் அந்தக் கிளையை முறிக்க போன போதும் தான் குரல் கொடுத்ததும் ஞாபகத்திற்கு வந்தது.

"அந்தக் கிளையை நீங்க உடைக்காம இருந்திருந்தா... நானும் கத்தி இருக்க மாட்டேன்" என்றான்.

"நான் அந்தக் கிளையை உடைச்சா... உங்களுக்கு என்ன கெட்டுப் போச்சு"

இப்போது அபிமன்யுவிற்கு எரிச்சலும் கோபமும் ஒரு சேர உண்டாக,

"மனிஷனுக்கு மட்டும்தான் உணர்வு உயிர் இருக்கா என்ன... இந்த மரங்களுக்கும் செடிகளுக்கும் கூட உயிர் உணர்வெல்லாம் இருக்கு... இத பத்தி எல்லாம் உங்கள மாதிரியானவங்களுக்கு சொன்னாலும் புரியாது" என்றான்.

"திஸ் இஸ் ரிடிக்குலஸ்... நீங்க சொல்ற காரணம் நம்பிற மாதிரியா இருக்கு... மரத்துக்கு வலிக்குமேன்னு இவரு ஃபீல் பண்றாராம்... முதல அந்த குரங்கு என்னை இரிடேட் பண்ணுச்சு... நவ் யூ" என்று சொல்லி அவள் அலட்சியமாய் திரும்பிக் கொள்ள,

அபிமன்யுவிற்கு அவளை அறைந்துவிடாலாம் போல சீற்றம் ஏற்பட அந்த எண்ணத்தை ரொம்பவும் பிராயத்தனப்பட்டு கட்டுபடுத்திக் கொண்டான்.

கொஞ்ச நேரத்திற்கு முன்பு அவன் ஆழ்ந்து ரசித்த முகத்தைப் பார்க்க விரும்பாமல் திரும்பி நடந்தபடி குரலை உயர்த்தி, "அந்த குரங்குதான்... உங்களுக்கு பெட்டர் சாய்ஸ்" என்று உரைக்க

அவளும் வெறுப்போடு, "தட்ஸ் பெட்டர் தென் யூ" என்று சொல்லிவிட்டு அவன் சென்று திசைக்கு எதிர்புறம் திரும்பி நின்று கொண்டாள்.

அபிமன்யு பின்புறவாசலை தாண்டி உள்ளே நடந்தபடி,

‘இவ்வளவு அழகு இருந்தும் கொஞ்சங் கூட அடக்கமே இல்லை... சரியான ஈகோஸ்ட்டிக்’ என்று தனக்குத்தானே உரைத்து கொண்டான்.

அந்தப் பெண் தன் கழுத்தில் மாட்டியிருந்த கேமிராவை அதன் கவரில் வைத்துவிட்டு ஆதுரசாலையின் பின்புற வாசலை நோக்கி நடந்தவள்,

'வந்த இடத்தில நான் எதுக்கு இப்படி வம்பிழுத்துட்டு இருக்கேன்?' என்று சொல்லி அவளை அவளே ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

மீண்டும் ஏதோ எண்ணம் எழ, 'அவன் செஞ்சது சரியா... இவ்வளவு வாய் கிழிய பேசிட்டுப் போறவன்... எதுக்கு என்னை அப்படி பார்க்கணும்?!"

அதே சமயத்தில் திடீரென்று அவள் மனம், "சம் வேர் ஐ சீன் ஹிம்... பட் வேர் அன் வென்?!" என தனக்குள்ளேயே கேட்டபடி யோசித்து கொண்டிருக்க

"ஏ டார்லிங்!... கம் ஆன்" என்ற வாசல் அருகில் நின்றிருந்த ஒரு ஆடவனின் அழைப்பு அவளின் சிந்தனையைத் தடை செய்தது.

அந்த ஆடவன் நவநாகரித்தோடு டைட் ஜீன்ஸ் மற்றும் டீஷர்ட் அணிந்து கொண்டு கூலர்ஸை எடுத்து அவன் ஷர்டின் முன்புறத்தில் சொருகியிருந்தான். அவன் தலை முடி எல்லாம் விறைப்பாய் நின்று கொண்டிருக்க, அவன் முகமெல்லாம் புன்னகை மிளிர்ந்தது.

அவனை நோக்கி கோபத்தோடு நடந்து வந்தவள், "டார்லிங்னு கூப்பிடாதன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்" என்று முறைத்தாள்.

"கூல் டவுன் பேபி... மிஸ்டர் அக்னி வந்தாச்சாம்... வா போகலாம் " என்றுரைக்க இப்போது அந்தப் பெண்ணின் முகத்தில் ஆவல் பொங்க, "வாவ்!! சூப்பர்... எங்கே அவர்?" என்று கேட்டபடி அவள் முகத்தில் ஆனந்தம் நிரம்பியது.

இப்போது அவர்கள் அருகில் நின்றிருந்த சித்த வைத்தியம் செய்யும் ஒரு இளைஞனிடம் அபியைப் பற்றி விசாரிக்க, அவன் ஒரு திசை நோக்கி கைக் காண்பித்தான். அபி சந்தன நிற மேற்சட்டையை அணிந்து கம்பீரமாய் நடந்து வர, அவள் அப்படியே உறைந்துபோய் நின்றாள்.

அவள் அக்னி என்று கற்பனை செய்த முகம் ஐம்பது வயது மதிக்கதக்க ஒருவனை. அவள் கண்களும் மனமும் அதை நம்பமுடியாமல் அபிமன்யு வந்த திசையைக் கூர்மையாய் நோக்கியது.

அவள் தவிப்போடு, "இதெப்படி சாத்தியம்? சே! என்ன காரியம் செஞ்சுட்டோம்" என்று தன்னைத்தானே கடிந்து கொண்டாள்.

அப்போது அபிமன்யுவை அறிமுகம் படுத்திய இளைஞனும் அபியிடம் சென்று அவர்கள் இருவரையும் காண்பித்து, "அவங்க இரண்டு பேரும் உங்களைப் பார்க்கதான் காத்திட்டிருக்காங்க அண்ணா" என்று உரைத்துவிட்டுச் சென்றான்.

அபிமன்யுவின் மனதில் ஆர்வமும் குழப்பமும் ஒரு சேர தோன்றி மறைந்தது. அவளின் திமிரான பேச்சை நினைவுப்படுத்திக் கொண்டவன், அவளே தன்னிடம் வந்து பேசட்டும் என்று அங்கே இருந்த தூணில் சாய்ந்தபடி கர்வமான புன்னகையோடு தலைத்தூக்கி ஒரு பார்வை பார்த்தான்.

வேறு வழியின்றி இப்போது அவனை நோக்கி நடந்து வந்தவள், "நீங்கதான் மிஸ்டர் அக்னியா?!" என்று சந்தேகத்தோடும் தயக்கத்தோடும் கேள்வி எழுப்ப,

"ம்ம்ம்" என்று தலையை மட்டும் அசைத்து அவளைப் பார்த்த பார்வையில், அவளின் தொண்டைக் குழியில் ஏதோ உருள்வதைப் போன்ற உணர்வு!

அவள் தன்னிடம் தன் திமிரையும் கர்வத்தையும் விடுத்து இறங்கி வந்தே ஆகவேண்டும் என்று எண்ணியபடி அபிமன்யு மௌனம் காக்க,

அவள் மூச்சை இழுத்துவிட்டு கொண்டு, "நீங்கதான் மிஸ்டர் அக்னின்னு... தெரியாம" என்று தயங்கியபடி நிறுத்த

 "தெரிஞ்சிருந்தா" என்று அவன் புன்னகையுடன் புருவத்தை உயர்த்தினான்.

அவள் ரொம்பவும் சிரமப்பட்டுப் புன்னகையை வரவழைத்தபடி, "வெளிய நடந்ததெல்லாம்... இட்ஸ் ஜஸ்ட் அ மிஸ்அன்டர்ஸ்டேன்டிங்... அதை பெரிசா எடுத்துக்க வேண்டாமே" என்று மன்னிப்பு கேட்க மனமில்லாமல் சமாளித்தாள்.

அவளின் அந்தக் கர்வத்தையும் அபி ரசித்தபடி,"எனி வே... இப்பையாவது மிஸ்அன்டர்ஸ்டான்டிங்னு புரிஞ்சா சரி... ஓகே... நீங்க என்னைத் தேடி வந்த ரீஸன்?!" என்று கேட்க,

"ஐம் பூமிகா சீனியர் ரிப்போர்ட்டர் ஆஃப் பிளாஃஷ் மேகஸின்... இவர் ஃபோட்டோகிராஃப்ர் ஷரத்" என்று அறிமுகம் செய்து தன் வலது கரத்தை நீட்டியவளின் கைகளை குலுக்கியபடி, "ஐம் அபிமன்யு" என்று பாந்தமான புன்னகையோடு அவளிடம் கைக் குலுக்கிவிட்டு ஷரத்திற்கும் கைக் கொடுத்தான்.

அவனின் வலிமையான கரத்தின் கொஞ்சம் இறுக்கமான பிடி அவளுக்குப் புரியாத உணர்வுகளைத் தோற்றுவிக்க அதே உணர்வு அபிக்கும் மின்னலெனத் தோன்றி மறைந்தது.

"அபிமன்யுன்னா... அப்போ அக்னி" என்று பூமிகா சந்தேகமாய் வினவினாள்.

"அக்னி அலைஸ் அபி... அக்னிங்கிறது என்னோட புனைப் பெயர்... ஓகே... நீங்க வந்த விஷயத்தைப் பத்தி இன்னும் சொல்லவே இல்லையே" என்றான்.

" எங்க மேகஸின்ல நெக்ஸ்ட் மந்த் வெளிவரப் போற கவர் ஸ்டோரி... ஏன்ஷியன்ட் மெடிஸனல் மெத்தட்ஸ் வெஸஸ் மார்ட்ன் மெடிசன் டெக்னிக்ஸ்... ரிகாடிங் தட்... ஒரு ஸ்மால் ரிசர்ச்... நம்ம பாரம்பரியமான வைத்திய முறைகளான சித்தா, ஆயுர்வேதா பத்தியும் மாட்ரன் மெடிஸன்ஸ் பத்தியும் இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாய் இந்த கவர் ஸ்டோரி”

“இங்க நடக்கிற வைத்திய முறைகளையும் பத்தியும்... அப்புறம் உங்க கிட்ட சித்தாவைப் பத்தி நிறைய விஷயங்களைக் கேட்டு தெரிஞ்சுக்கணும்... நீங்க அலோவ் பண்ணீங்கன்னா... ஜஸ்ட் டூ டேஸ்தான்" என்று அவன் என்ன சொல்லப் போகிறானோ என்று தயங்கயபடி அவள் கேட்க,

அபி ஒரு கண நேரம் கூட தன் பார்வையை அகற்றாமல் அவள் மீதே லயித்திருந்தான். அவள் பேசுவதை அவன் செவிகள் உள்வாங்கிக் கொண்டாலும் அவன் விழிகள் அபிநயமாய் பேசும் அவள் விழிகளையும் புன்னகையோடு தலையசைத்து பேசும் விதத்தையும் ரசித்தபடி இருந்தது.

பூமிகாவும் அவன் பார்வையின் தாக்கத்தை உணர்ந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் அவனின் பதிலை எதிர்பார்த்து நிற்க,

 அபி லேசாக புன்னகைத்துவிட்டு, "என்னை விட நிறைய சீனியர் மோஸ்ட் இருக்காங்க... ஏன்... இங்கயே என்னோட தாத்தா இருக்காரு... அவருக்கு சித்த மருத்துவத்தைப் பத்தின அனுபவமும் ரொம்ப அதிகம்... நீங்க அவர்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க” என்றான்.

“பட் வெரி இம்பார்ட்டன்ட் திங்... இங்க இருக்கிற செடிகளோட இலைகளைப் பறிக்கிறது... மரக்கிளையை உடைக்கிறது... ஸ்மோக் பண்றது... இந்த இடத்தைச் சுத்தி ஸ்லிப்பர்ஸ், ஷுஸ் போட்டு நடக்கிறது... இதெல்லாம் கூடவே கூடாது... அப்புறம் குரங்கை அடிக்கிறதெல்லாம்... ரொம்ப தப்பு... வேண்டும்னா குரங்குக்கிட்ட பேசலாம்... அதுக்கு ஒன்னும் ரெஸ்ட்ரிக்ஷன் இல்ல" என்று பூமிகாவைப் பார்த்து அவன் வேடிக்கையாக உரைக்க அவளோ அப்போதைக்கு அவன் மீதுள்ள கோபத்தைக் காட்ட முடியாமல் உணர்ச்சியற்ற முகத்தோடு நின்றிருந்தாள்.

அபிமன்யு அதன் பின் அங்கே மருத்துவம் பார்க்கும் ஒரு இளைஞனிடம் ஏதோ சொல்ல, அவன் உள்ளே சென்று திருமூர்த்தியை அழைத்து வந்தான். அபிமன்யு அவர்கள் இருவரைக் குறித்து திருமூர்த்தியிடம் பேசிக் கொண்டிருந்த அதே சமயத்தில்,

அருகிலிருந்த ஷரத் பூமிகாவிடம் மெலிதான குரலில், "என்ன இதெல்லாம்... இத்தனை ரூல்ஸை அடுக்கிட்டுப் போறான்... போதாக்குறைக்கு என்னவோ நம்மல குரங்ககிட்டலாம் பேச சொல்றான்... அந்த ஆளுக்கு நம்மல பாத்தா லூசாட்டும் தெரியுதா" என்றான்.

பூமிகா அவனை நோக்கி, "ம்... கொஞ்சம் மரியாதையா பேசு... நாம இருக்கிறது அவங்க இடம்” என்று அவள் கண்டித்தாள்.

"மரியாதையா வேற பேசணுமா? நீ கவனிச்சியா... மிஸ்டர். அபிமன்யு உன்னை அப்படியே வைச்ச கண்ணு வாங்காம பார்த்ததை... அப்பட்டமா சொன்னா... சார் உன்னை சைட் அடிச்சாரு" என்று ஷரத் சொல்லிக் கொண்டிருக்கும் போதே திருமூர்த்தி அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

பூமிகா ஷரத் புறம் திரும்பி, "நீ இன்னும் ஒரு வார்த்தைப் பேசின... உன்னை கொன்னுடுவேன்... நம்ம வந்த வேலை முடியற வரைக்கும் ப்ளீஸ் உன் திருவாயை மூடுக்கிட்டு இரு" என்று பல்லை கடித்து கொண்டு உரைத்தாள்.

பின்னர் அவர்களை நோக்கி திருமூர்த்தியும் அபிமன்யுவும் வந்தனர்.

இப்போது அபி பூமிகாவிடம், "இவர்தான் என்னோட தாத்தா... இவருக்கு சித்தா பத்தி தெரியாத விஷயங்களே இல்ல... உங்களுக்குத் தேவையான இன்ஃபர்மெஷன்ஸ் எல்லாம் இவரே கொடுப்பாரு" என்று சொன்ன பின்னர்,

அவன் வேகமாய் அங்கிருந்து அகன்றுவிட பூமிகா தனக்குள் ஏற்பட்ட ஏமாற்றத்தைக் காட்டிக் கொள்ளாமல் புன்னகைத் ததும்பிய முகத்தோடு திருமூர்த்தியிடம் பேசத் தொடங்கினாள்.

திருமூர்த்தி வெளியே இருக்கும் மூலிகைத் தோட்டத்தைக் காண்பித்து ஒவ்வொன்றின் சிறப்பும் பயன் குறித்தும் தெளிவாக விளக்கமளித்து கொண்டிருந்தார். அதில் அரிய வகை தாவரங்களை பூமிகாவிடம் காட்டிக் கொண்டிருந்த அதே நேரத்தில் அபி தன் அறையில் இருந்தபடி செல்பேசியில் பேசிக் கொண்டிருந்தான்.

எதிர்புறத்தில் அர்ஜுன் கொஞ்சம் கோபமாக, "இங்க சென்னைக்கு வந்து எங்களைப் பார்க்கணும்ங்கிற ஐடியாவே இல்லையாடா உனக்கு" என்றான்.

"அப்படி எல்லாம் இல்ல அர்ஜுன்... ஒன்னு மாத்தி ஒன்னுனு வேலை வந்துட்டே இருக்கு... என்ன பண்ண சொல்ற?" என்றான்.

"என்னை சமாளிச்சிடு... ஆனா அம்மாவைப் பத்தி யோசிச்சியா... உன்னை பார்க்காம அவங்க எவ்வளவு வருத்தபடறாங்க தெரியுமா?"

"புரியுது அர்ஜுன்... நான் சீக்கிரமே சென்னைக்கு வர்றேன்... அம்மாகிட்ட சொல்லு... சரி... அப்பா பிரான்ஸ்ல மெடிக்கல் கான்ஃபிரன்ஸுக்கு போனாரே... வந்துட்டாரா?!"

"இல்ல அபி... வரல... ஆனா வேற ஒரு மேட்டர் இருக்கு"

"என்ன மேட்டர்?" என்று அபி கேள்வி எழுப்பினான்

"அங்கே ஈஷ்வர்தேவ் அப்பாகிட்ட பேசினானாம்"

"ஓ... எனி திங் இம்பார்டன்ட்"

"அஸ் யூஸ்வல்... நன்றி கடனுக்காகப் பேசி இருப்பான்... அன்னைக்கு மட்டும் அப்பா அவன் உயிரை அந்த ஆக்ஸ்டென்ட்ல இருந்து காப்பாத்தாம இருந்திருந்தா... இவனோட அக்கிரமத்திற்கெல்லாம் அன்னையோட முற்று புள்ளி ஏற்பட்டிருக்கும்... அவனோட குட் டைம்... நம்ம எல்லோரோட பேட் டைம்" என்று அர்ஜுன் சொல்லும் போதே அன்று தன் தந்தை ஈஷ்வரைக் காப்பாற்றியது ஏன் என்ற வருத்தமும் ஒரு வித ஏமாற்றமும் அவன் குரலில் வெளிப்பட்டது.

"அன்னிக்கு ஏதோ நம்ம அப்பா இருந்ததால அதிர்ஷ்டவசமா பிழைச்சிக்கிட்டான்... பட் எப்பவுமே எல்லாமே அந்த ஈஷ்வருக்கு சாதகமாகவே நடக்காது அர்ஜுன்... அது நமக்கு சாதகமாகவும் ஒரு நாளும் மாறும்" என்றான் அபி தீர்க்கமான நம்பிக்கையோடு,

"அப்புறம் அபி... ஒரு முக்கியமான விஷயம்... நீ அந்த கொங்ககிரி மேட்டர்ல இன்வால்வ் ஆகி இருக்கிறது... அந்த ஈஷ்வருக்கு தெரிஞ்சா உனக்கு ஏதாவது ஆபத்து வந்திருமோன்னு பயமா இருக்கு... நீ கொஞ்சம் ஜாக்கிரத்தையா இரு” என்றான்.

"அர்ஜுன்! கிட்டதிட்ட அந்த மேட்டர் நடந்து மூணு மாசமாகுது... அந்த ஈஷ்வர்தேவ் கண்டிப்பா ஸ்மல் பண்ணி இருப்பான்... என்னைப் பொறுத்த வரைக்கும் அந்த ஈஷ்வர் இப்போதைக்கு நம்மல ஒன்னும் பண்ண மாட்டான்... நான் அந்த மக்களை எப்படி காப்பாத்துனேன்னு தெரிஞ்சிக்கிற ஆர்வம்தான்... அவனுக்கு அதிகமா இருக்கும்" என்று பேசிக் கொண்டே அபிமன்யு மெல்ல நடந்து வெளிப்புற வாசலை நோக்கி வர,

அப்போது பூமிகா அழகாய் வடிவமைத்திருந்த அந்தத் தோட்டத்தில் மலர்ந்திருந்த பூக்களின் அழகை ரசித்தபடி இருந்ததைக் கவனித்தான். அதற்கு மேல் அவன் மனம் அவளை மட்டுமே நிலைநிறுத்திக் கொண்டு வேற எண்ணங்களின் ஓட்டத்தை நிறுத்துவிட்டது.

அதற்கு பிறகு அபிமன்யுவிற்கு அர்ஜுனிடம் பேசும் ஆர்வம் குன்றி போய், "ம்ம்ம்" என்று மட்டுமே சொல்லிக் கொண்டிருக்க,

எதிர்புறத்தில் அர்ஜுன், "டே அபி... நான் என்ன கதையாடா சொல்லிட்டிருக்கேன்... ம்...ம்னு சொல்லிட்டிருக்க" என்று கோபித்தான்.

"நான் முக்கியமான வேலையா இருக்கேன்... அப்புறம் பேசிறேன் அர்ஜுன்" என்று அழைப்பைத் துண்டித்தான்.

பூமிகாவிடமும் ஷரத்திடமும் அத்தனை நேரம் பேசிக் கொண்டிருந்த திருமூர்த்தி வேலையாக உள்ளே சென்றார்.

அப்போது ஷரத் வியப்போடு பூமிகாவிடம், "அந்த தாத்தா இன்னும் என்ன ஸ்டார்ங்கா இருக்கிறாருல" என்றான்.

"ஆமாம்... ஷரத்... ஓல்ட் ஏஜ்ட் மாறியே இல்ல... அவர் பேச்சும் செயலும் பார்த்தா யங் மேன் ஃபீல்தான் வருது" என்று அவள் உரைத்து கொண்டிருக்க ஷரத் வாசலில் நின்றிருந்த அபிமன்யுவைக் கவனித்தான்.

"மிஸ்டர் அபிமன்யுக்கு... உன் மேல அப்படி என்ன இன்டிரஸ்ட்... எங்க இருந்தாலும் அவர் பார்வை உன் மேலயே இருக்கு" என்றான் ஷரத்.

அபிமன்யு தன்னை கவனிப்பது ஷரத் சொல்லாமலே பூமிகா உணர்ந்திருந்தாள். அவளுக்குள் ஏற்பட்ட தடுமாற்றத்தை மறைக்கும் விதமாய் ஷரத்திடம் அதை காட்டிக் கொள்ளாமல்,

"நான் உனக்கு சொன்ன வேலை எல்லாம் செய்யாதே... தேவையில்லாத விஷயத்தை எல்லாம் கவனி... இந்த வீட்டோட புஃல் வீயூ கவர் பண்ணி... ஒரு போட்டோ எடுக்க சொன்னனே எடுத்தியா?" என்று கேட்க, "ஓகே ஓகே... டென்ஷன் ஆகாதே பேபி" என்றான் அவன்.

"பேபின்னு கூப்பிட்ட உன்னை" என்று சுற்றிலும் அவனை அடிக்க ஏதேனும் ஆயுதம் கிடைக்கிறதா என தேடியவளிடம் இருந்து ஷரத் தப்பிக்கும் விதமாய்,

"ஓகே ஓகே கூல்டவுன்... இப்போ எப்படி இந்த வீட்டை புஃல்லா கவர் பண்றன்னு மட்டும் பாரு" என்று அவன் அந்த வீட்டை கேமராவில் பார்த்தபடியே அவளிடமிருந்து விலகி தூரம் நடந்து சென்றான்.

அவள் எரிச்சலோடு, "அப்படியே போயிடு... திரும்பி வந்திடாதே" என்றாள்.

பூமிகா தன் மனதின் எண்ணத்தை மறைக்க நினைக்கிறாள். ஆனால் அவளை அவளே ஏமாற்றிக் கொள்வது எவ்விதம் சாத்தியம்.

அபிமன்யு பற்றி யோசித்து கொண்டே நடந்தவள் திடீரென்று நடக்க முடியாமல் தடுமாறி தன் பாதத்தில் ஏதோ குத்திய வலியை உணர,

அவள் என்ன நேர்ந்தது என்று பாதத்தைத் தூக்கிய சில கணங்களில் அபிமன்யு அவள் பாதத்தைப் பற்றி அதில் தைத்திருந்த முள்ளை மெதுவாய் எடுத்தான்.

ஏற்கனவே பூமிகாவையே பார்த்து கொண்டிருந்த அபி, அவள் பாதத்தில் முள் தைத்ததைப் பார்த்த மறுகணமே தவிப்புற்று அவளை நோக்கி அத்தனை சீக்கிரத்தில் வந்து நின்றவன் அவளின் பாதத்தைத் தைத்த முள்ளை எடுத்துவிட்டான்.

அபிமன்யுவின் துடிப்பையும் தவிப்பையும் புரிந்து கொள்ள முடியாமல் அவள் அவனை நோக்க, அபிமன்யுவும் முன்பின் தெரியாதப் பெண்ணிற்காக தான் ஏன் இப்படி துடிக்கிறோம் என்ற காரணம் புரியாமல் அவள் பார்வையையும் கேள்வியையும் எப்படி சமாளிப்பது என்ற யோசனையோடு நின்றான்.

இன்னொரு பக்கம் இந்தக் காட்சியைப் பார்த்து ஷரத் ஏளனமாய் சிரிக்க அதையும் கவனித்தவள் அபியை நோக்கி, "உங்க மனசில என்னதான் நினைச்சிட்டிருக்கீங்க... என்னையே எதுக்கு வாட்ச் பண்ணிட்டிருக்கீங்க?" என்று கேட்டாள்.

"நான் உங்களை வாட்ச் பண்ணிட்டிருந்தேனா... அப்படின்னு யார் சொன்னது... நீங்க ரொம்ப கற்பனை பண்றீங்க மிஸ் பூமிகா... ஐ திங் உங்களுக்கு ஏதோ சைக்கலாஜிக்கில் டிஸ்ஸாடர் "என்று தன் எண்ணத்தைக் காட்டிக் கொள்ளாமல் சாதுர்யமாக உரைத்தான்.

"வாட்? எனக்கு சைக்கலாஜிக்கல் டிஸ்ஸாடரா?!" என்று அவள் அவனை அதிர்ச்சியோடு நோக்க,

"ஆமாம் மிஸ் பூமிகா... தான்தான் ரொம்ப அழகுன்னு ஒரு நினைப்பு... அதனால எல்லோரும் நம்மலதான் பார்க்கிறாங்கனு... ஒரு இலுஷன்... அன் ஸாரி பாஃர் தட்... இந்த மாதிரி மன நோயிற்கெல்லாம் எந்த வைத்தியத்திலயும் மருந்து இல்லை" என்று அபி சொல்ல சொல்ல அவளின் கோபம் எல்லையை மீறித் தலைத்தூக்கினாலும் அவள் வேறுவழியின்றி அமைதியாக நின்றாள். இதுவே வேறு சூழ்நிலையாக இருந்தால் அவனை ஒரு வழி செய்திருப்பாள்.

அவளின் அமைதியை ஆச்சர்யமாகப் பார்த்த அபி மீண்டும் அவளை நோக்கி, "உங்களுக்கு தேவையான இன்ஃபர்மேஷன்ல... கிடைச்சிடுச்சுன்னு நினைக்கிறேன்... ஸோ... கிளம்பலாமே" என்றான்.

"நான் முக்கியமா உங்களை இன்டர்வீயூ எடுக்கலான்னுதான் வந்தேன். ஆனா இன்னும் அந்த வேலை நடக்கவில்லையே மிஸ்டர் அபிமன்யு" என்றாள்.

"எங்க தாத்தா உங்களுக்கு எல்லாத்தையும் விளக்கமா சொல்லி இருப்பாரே... அப்புறம் என்ன?"

"தட்ஸ் ரைட்... பட் அக்னிங்கிற பேர்ல சித்தா பத்தி நீங்கதானே அந்த புக்ஸ் எல்லாம் எழுதினது?" என்று அவள் கேட்க, "எஸ்" என்றான்.

"அப்போ நான் கேட்கிற சில கேள்விக்கு நீங்கதான் பதில் சொல்ல முடியும்... ப்ளீஸ்... ரொம்ப நேரம் உங்க டைம்மை வீணடிக்க மாட்டேன்... சின்ன இன்டர்வீயூதான்... டோன்ட் ஸே நோ" என்று கெஞ்சலாய் அவள் கேட்டாலும் முகத்தில் அந்த உணர்வு தென்படவில்லை.

சிறுது நேரம் யோசித்தவன், "ஓகே... பட் இப்ப முடியாது... நாளைக்குப் பேசுவோமா... ஒன்னும் பிராப்ளம் இல்லையே" என்றான்.

"தேங்க் யூ... தேங்க் யூ சோ மச்... அப்போ நாளைக்கு மீட் பண்ணுவோம்" என்று சொல்லும் போதே அவள் முகம் அத்தனை அழகாய் மலர்ந்திருந்தது.

"சரி... அப்போ நாங்க கிளம்பிறோம்" என்று அவள் தலையசைத்துவிட்டு அவள் தன்னுடன் வந்த நண்பனையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டாள்.

பூமிகா சென்ற பிறகு அபிமன்யு யோசனையில் ஆழ்ந்தான். அவன் மனம் அவளைக் குறித்து ஏதோ ஒரு சந்தேகத்தை எழுப்பியது. அவனை அவனின் உள்ளுணர்வு சுதாரிக்க சொன்னாலும் அவளின் மீதான ஈர்ப்பு அந்த எண்ணத்தைத் தவிர்க்க சொன்னது.

பூமிகா ஷரத்தை அழைத்து கொண்டு அவர்கள் வந்த காரில் புறப்பட்டாள்.

காரில் தன் அருகில் அமர்ந்திருந்த ஷரத்திடம், " இத பாரு அலெக்ஸ்... நாளைக்கு நம்ம வந்த வேலை முடிஞ்சிரும்... ஸோ அதுவரைக்கும் நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்... பிகாஸ் அந்த அபிமன்யு ரொம்ப ஸ்மார்ட்... நம்மல பத்தி கெஸ் பண்றதுக்கு முன்னாடி... நாம மேட்டரை வாங்கிட்டு போயிடணும்... அது வரைக்கும் நீ ஷரத்... நான் பூமிகா... ரைட்" என்றாள்.

"அந்த அபிமன்யு ஸ்மார்ட்தான்... பட் நீ ஒரு ஸ்மைல் பண்ணா... அவன் ஃபிளாட்டாயிட மாட்டான்"

"இடியட் மாதிரி பேசாதே... அபிமன்யு அந்த மாதிரி கேரக்டர் இல்ல" என்று சொல்லிவிட்டு அவனை பேச வேண்டாம் என கைக் காண்பித்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள். மேலும் அவள் கோபத்தைத் தூண்டிவிடாமல் அவனும் அமைதியானான்.

You cannot copy content