You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Meendum Uyirthezhu - 3

Quote

3

அக்னீஸ்வரி

இறைவனின் படைப்பில் சில பெண்களுக்கு மட்டுமே பார்த்தவுடனே வசீகரிக்கும் முக அமைப்பு அமைந்திருக்கும். அப்படி ஒரு அழகின் சாராம்சம்தான் அக்னீஸ்வரி. அவள் அழகிற்கே இலக்கணமாய் திகழ்ந்தாள் எனும் போது அவளைப் பார்த்து ருத்ரதேவன் மட்டுமல்ல. எந்த இளவரசனும்... ஏன் எந்த நாட்டு அரசனுமே வசீகரிக்கப்படுவான். 

பார்ப்பவர்கள் எல்லோருமே அவளின் அழகை குறித்து ஓயாமல் வர்ணிக்க, அந்த எண்ணம் அவளுக்குள் ஆழமாய் பதிந்து போனது. அதனாலேயே அக்னீஸ்வரி அவளின் அழகின் மீது அதீத கர்வம் கொண்டிருந்தாள். அவள் தன்னைத் தானே ரசித்துக் கொள்வதிலும் அலங்கரித்துக் கொள்வதிலும் ரொம்பவும் அக்கறை காட்டுவாள். 

இன்று அவ்வாறு நடந்த நிகழ்வால் இளவரசன் ருத்ரதேவன் அவளின் மீதும், அவள் கர்வம் கொண்டிருந்த அழகின் மீதும் காதல் கொண்டுவிட்டான். இன்று நிகழ்ந்த சந்திப்பால் அவர்களுக்கு இடையில் ஜென்மாந்திர பந்தம் அவர்கள் அறியாமலே ஏற்பட்டுவிட்டது.

அக்னீஸ்வரி சோமசுந்தரரின் இளைய புத்திரி. நான்கு அண்ணன்மார்களுக்கும் செல்ல தங்கை. சோமசுந்தரர் உட்பட அவரின் நான்கு மகன்களுமே வீரத்தில் பெயர் போனவர்கள். அவர்களுடன் பழகிய அக்னீஸ்வரியிடம் அந்த வீரமும் துணிவும் இல்லாமல் இருக்குமா?

அதனாலேயே இளவரசர் ருத்ரதேவனைக் கண்டு அச்சம் கொள்ளாமல் துணிவோடும் தெளிவோடும் பதிலுரைத்தாள். அக்னீஸ்வரிக்கு ஒரே ஒரு தமக்கை வைத்தீஸ்வரி. அவள் தலைமை வைத்தியர் சுவாமிநாதனின் மூத்த மகன் விஜயவர்தனை மணம் புரிந்து கொண்டாள். அவன் சில அரிய வகை மூலிகைகளைத் தேடி கொல்லிமலை வரை பயணம் மேற்கொண்டிருந்தான். அவனுடன் இளையவன் விஷ்ணுவர்தனும் சென்றிருந்தான். இந்தச் சமயத்தில் ஐந்து மாத கர்ப்பிணியாக இருக்கும் அக்காவிற்காக அக்னீஸ்வரி  துணைக்குத் தங்கி இருந்தாள்.

எந்த வேலை செய்து உதவி புரிகிறாளோ இல்லையோ! தண்ணீர் எடுத்துக் கொண்டு வருவதை மட்டும் தவறாமல் செய்துவிடுவாள். இன்று அதையுமே செய்யாமல் காலி குடத்தைத் தாங்கிக் கொண்டு குடிலுக்குள் நுழைந்தாள்.

அக்னீஸ்வரி குடிலுக்குள் நுழைந்ததும் வைத்தீஸ்வரி,  "தண்ணீர் எடுத்து வருவதற்கு ஏன் இத்தனை நாழிகையானது அக்னீஸ்வரி" என்று கேட்டு கொண்டே அவள் அருகில் வந்து நின்றவள், காலியான குடத்தைக் கண்டு அதிர்ச்சியானாள்.

"தண்ணீர் எங்கே?" என்று வைத்தீஸ்வரி அவளின் தோளினைத் தட்ட இப்போது அவனின் நினைப்பில் இருந்து மீண்டு வந்தவள் தடுமாறியபடி, 

"அக்கா... நான் தண்ணீர் எடுக்க குளக்கரைக்குப் போனேன். ஆனால்..." என்று இழுத்தாள்.

"ஆனால் என்ன? தண்ணீரில் தெரிந்த உன் பிம்பத்தைப் பார்த்து நீயே மயங்கி விட்டாயாக்கும்" என்றாள் வைத்தீஸ்வரி.

"அப்படி ஒன்றும் இல்லை... நான் சொல்ல வருவதை முழுதாகக் கேள்"

"சொல்... நீ என்ன கதை சொல்கிறாய் என்று நானும் கேட்கிறேன்"

"கதையில்லை... நான் குளக்கரையில் அமர்ந்திருந்த போது குதிரையின் மீது" என்று அக்னீஸ்வரி சொல்லி முடிக்கும் முன்னர் வைத்தீஸ்வரி பரிகாசம் செய்து சிரித்தபடி,

"குதிரையின் மீது ஒரு இளவரசன் வந்து... அவன் உன் அழகைப் பார்த்து மயங்கிக் காதல் கொண்டானாக்கும்... வானத்தில் இருந்து குதித்தானா... இல்லை தண்ணீருக்குள் இருந்து வெளியே வந்தானா" என்று வைத்தீஸ்வரி வேடிக்கையாகக் கேட்க, அக்னீஸ்வரி கவலை தோய்ந்த முகத்தோடு 'இவைதான் உண்மை என்று எப்படிச் சொல்வது' எனத் தவிப்புற்று மௌனமானாள்.

வைத்தீஸ்வரி அவள் கையில் இருந்த குடத்தை பறித்துக் கொண்டு,

"நீ உதவி என்ற பெயரில் எனக்கு செய்வதெல்லாம் உபத்திரவம்தான்" என்று சொல்லிவிட்டு சுவரோரம் போய் சலிப்போடு அமர்ந்து கொண்டாள்.

"கோபித்துக் கொள்ளாதே அக்கா... நான் வேண்டுமானால் இப்போது போய் எடுத்துக் கொண்டு வந்துவிடுகிறேன்" என்று அக்காவின் அருகில் அமர்ந்து அக்னீஸ்வரி சமாதானம் செய்தாள்.

"நீ இனிமே எந்த வேலையும் செய்யவே வேண்டாம்... நானே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன்... உன் மாமாவிற்கு என் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லை... சென்று ஒரு திங்கள் முடியப்போகிறது... இன்னுமும் வந்து சேரவில்லை... மனமும் உடலும் எத்தனைச் சோர்வாய் இருக்கிறது என்று உனக்கு நான் சொன்னால் விளங்கவா போகிறது" என்று வைத்தீஸ்வரி தன் வேதனைகளைச் சொல்லி புலம்பிக் கொண்டிருக்க, அக்னீஸ்வரிக்கு அவள் அத்தான் புறப்படுவதற்கு முன் சொன்ன விஷயம் நினைவுக்கு வந்தது.

"உன் அக்காவின் வயிற்றில் இருப்பது இரட்டைச் சிசு... நீதான் அவளைப் பத்திரமாய் பார்த்துக் கொள்ள வேண்டும்... இது குறித்து அவளுக்குத் தெரிந்தால் பிரசவத்தில் சிரமம் ஏற்படுமோ என உள்ளூர அச்சம் ஏற்படக் கூடும்... அதனால்தான் யாரிடமும் இது பற்றி சொல்லவில்லை...  உன்னைத்தான் மலை போல் நம்பி இருக்கிறேன்... நான் வரும் வரை உன் அக்காவை கவனமாய் பார்த்துக் கொள் அக்னீஸ்வரி!" என்று வைத்தீஸ்வரியின் கணவன் விஜயவர்தன் அழுத்தமாய் சொல்லிவிட்டுப் போனான்.

‘அத்தான் சொல்லிவிட்டு போனதென்ன... நான் செய்த காரியம் என்ன?’ என்று அக்னீஸ்வரி அக்காவைத் தேவையின்றி வேதனைக் கொள்ள செய்ததை எண்ணிக் குற்றவுணர்வு கொள்ள, அவள் கண்களில் கண்ணீர் தளும்பியது.

அந்தச் சமயம் பார்த்து யாரோ வரும் காலடி ஓசை காதுகளில் விழ வைத்தீஸ்வரி, "யாரேனும் வருகிறார்களா?" என்றாள்.

"நான் பார்த்துவிட்டு வருகிறேன்" என்று கண்களைத் துடைத்துக் கொண்டு அக்னீஸ்வரி எழுந்து வாசல் கதவோரம் சென்று நின்றாள்.

சுவாமிநாதனோடு ருத்ரதேவன் அவனுக்கே உரியக் கம்பீரத்தோடு நடந்து வர... தான் பார்ப்பதெல்லாம் கனவா என்று அவளின் மான் விழிகள் அசைவின்றி நின்றுவிட்டன.

ருத்ரதேவனும் அங்கே எதிர்பாராவிதமாய் அக்னீஸ்வரியைக் காண்பான் என்று நினைக்கவே இல்லை. வைத்தியர் அழைத்துவிட்ட மரியாதைக்காகவே அந்தக் குடிலுக்கு வந்தான். அக்னீஸ்வரியைப் பார்த்து மீண்டும் எத்தனை ஆனந்தம் கொண்டான் என்று அவனால் விவரிக்கவே முடியாது.

அவன் பளிங்கு போன்ற முகத்தில் பிரகாசம் குடிக் கொள்ள அக்னீஸ்வரி படபடப்போடு, "இளவரசர் வருகிறார்" என்று வைத்தீஸ்வரியிடம் தெரிவித்தாள்.

"நீ இன்னுமா உன் கனவுலகத்தில் இருந்து மீண்டு வரவில்லை" என்று வைத்தீஸ்வரி நம்பாமல் கேட்டு கொண்டிருக்கும் போதே, "வைத்தீஸ்வரி!" என்று சுவாமிநாதன் அழைப்பு விடுத்தார். அவள் சிரமப்பட்டு எழுந்திருக்க இருவரும் அதற்குள் குடிலுக்குள் நுழைந்துவிட்டனர்.

இப்போது வைத்தீஸ்வரிக்கு நிலைமை இன்னதென புரிய ருத்ரதேவனைக் கண்டு ஆச்சர்யம் கொண்டாள்.

"வாருங்கள் இளவரசே! வாருங்கள்!" என்று வைத்தீஸ்வரி ருத்ரதேவனை மரியாதையாக வரவேற்றாள்.

அக்னீஸ்வரி அவனின் கூர்மையான பார்வையிலிருந்து தப்பிக் கொள்ள வைத்தீஸ்வரியின் முதுகின் புறம் சென்று மறைந்து கொண்டாள். அந்த சிறு குடிலில் மறைவதற்கும் அவளுக்கு வேறு இடம் கிடைக்கவில்லை. வைத்தீஸ்வரி தண்ணீர் எடுத்து வர விலகிச் செல்ல உள்ளே இருந்த சிறு தூணின் பின்புறம் மறைவாய் நின்று கொண்டாள்.

இத்தனை நேரம் ஓயாமல் வைத்தியரிடம் விவாதித்துக் கொண்டிருந்தவன் இப்போது ஊமையாகிப் போனான். அவ்வப்போது வைத்தியரின் முகத்தைப் பார்த்து புன்னகை புரிந்தாலும் அவனின் பார்வை மீண்டும் மீண்டும் அவளை நோக்கியே திரும்பின.

"இந்த எளியவர்களின் குடிலுக்கு தாங்கள் வந்ததற்கு நாங்கள் பேறு பெற்றோம்" என்று வைத்தீஸ்வரி தண்ணீர் குவளையை அவனிடம் நீட்டினாள்.

"உங்களை விடவும் இங்கே வந்ததிற்கு நானே மிகுந்த ஆனந்தம் கொண்டேன்" என்று ருத்ரதேவன் அக்னீஸ்வரியைப் பார்த்தபடி உரைத்துவிட்டு தண்ணீரை வாங்கிப் பருகினான்.

அவன் பார்க்கத் துடிப்பதும் அவள் மறைந்து கொண்டு தவிப்பதும் இந்த ரகசிய காதல் சம்பாஷணையை வைத்தீஸ்வரியும் வைத்தியருமே கவனிக்கத் தவறினர்.

"நான் புறப்படுகிறேன்" என்று ருத்ரதேவன் உரைக்க இருவரும் மாறி மாறி அவனை உணவருந்திச் செல்லும்படி தடுத்தனர்.

ஆனால் அவன் புறப்படுவதில் உறுதியாக இருந்தான். அவனால் அவளின் மீதிருந்து கண நேரம் கூட பார்வையை அகற்ற முடியாமல் அவதியுற, இனி தான் இங்கே இருப்பது உசிதமில்லை என்றெண்ணி ஏதேதோ காரணங்கள் உரைத்துவிட்டு வெளியேறினான்.

அக்னீஸ்வரிக்கு அவளின் இதயம் அப்போதுதான் மீண்டும் துடிப்பது போல ஒரு பிரமை உண்டாயிற்று. ருத்ரதேவன் தன் குதிரையை நோக்கி நடக்க, வைத்தியரும் பின்னோடு வழியனுப்ப நடந்து வந்தார்.

ருத்ரதேவன் தன் குதிரையைத் தடவியபடி,"குடிலில் உள்ள இரு பெண்களும் யார்?" என்று இயல்பாக வினவ, வைத்தியர் அவனை ஆச்சர்யமாக நோக்கினார். ஏற்கனவே அவர்களைப் பற்றிய விவரத்தைத் தான் உரைத்ததை அவன் கவனிக்கவில்லையோ என்று எண்ணிக்கொண்டார்.

அக்னீஸ்வரியை குடிலுக்குள் பார்த்த பின் ருத்ரதேவனின் ஐம்புலன்களும் செயலற்று விழி மட்டுமே விழித்திருந்தது என்பதை வைத்தியர் அறிந்திருக்க வாய்ப்பில்லையே.

"வைத்தீஸ்வரி என் மூத்த மகன் விஜயவர்தனின் மனையாள்... அக்னீஸ்வரி அவளின் தங்கை... இப்போது என் மகன்கள் இருவரும் கொல்லிமலைக்கு அரிய வகை மூலிகை எடுக்கச் சென்றிருக்கின்றனர். ஆதலால் அக்காவுக்கு துணையாக தங்கை வந்து இங்கே தங்கி இருக்கிறாள்" என்றார்.

இதனைக் கேட்டறிந்து கொண்ட பின் ருத்ரதேவன் வைத்தியரிடம் விடைப்பெற்று புறப்பட்டான்.

குடிலின் வாயிலில் அக்னீஸ்வரி தன் தமக்கையின் தோளினைப் பற்றி பின்னோடு நின்று கொண்டிருக்க குதிரையில் கடந்து சென்ற ருத்ரதேவன் அவளை தன் பார்வையாலேயே வருடிவிட்டுச் சென்றான். அந்த ஒற்றைப் பார்வையில் அவள் நிலைகுலைந்து போனாள்.

அன்று நிகழ்ந்த சந்திப்பிற்குப் பிறகு அக்னீஸ்வரியும் ருத்ரதேவனும் மீண்டும் சந்தித்துக் கொள்ளும் சூழ்நிலை அமையவில்லை. ஆனால் இருவருமே காதலெனும் கனவுலகிற்குள் ஒருவரை ஒருவர் தவறாமல் சந்தித்துக் கொண்டனர்.

பூக்களைக் கொய்து அதை மாலையாய் கோர்ப்பதில் அக்னீஸ்வரிக்கு அலாதியான இன்பம். அன்று குடிலின் வாசலில் உள்ள வண்ண மலர்களை எல்லாம் தன் மென்மையான கரங்களால் அவள் பறித்து பூக்கூடையில்  போட்டுக் கொண்டிருந்தாள்.

 மலர்களுக்கு இடையில் அவளுமே இன்னொரு மலராய் நின்றிருக்க குதிரையின் கனைப்புச் சத்தம் அவள் செவியில் விழுந்தது. மனம் உடனடியாக ருத்ரதேவனை கண் முன் நிறுத்தக் குடிலின் வாசலில் நின்ற குதிரையில் இருந்து ஓர் ஆடவன் இறங்கினான்.

அக்னீஸ்வரி அந்த ஆடவனைப் பார்த்த கணத்தில் புன்னகை ததும்ப, "அக்கா... அக்கா... அத்தான் வந்துவிட்டார்... ஓடி வா... இல்லை இல்லை மெதுவாகவே வா" என்று சத்தமிட்டாள்.

 வைத்தீஸ்வரி தான் செய்து கொண்டிருந்த வேலைகளை அப்படியே விட்டு விட்டு வாசலருகில் வந்து நின்றாள்.

அந்த நொடியே வைதீஸ்வரியின் முகத்தில் ஏமாற்றம் குடி கொண்டது. அந்த எண்ணத்தை வெளிப்படுத்தாமல்,  "நீங்கள் மட்டும்தான் வந்தீர்களா?அவர் வரவில்லை?" என்று அந்த ஆடவனிடம் வினவினாள்.

"வந்திருக்கிறார் அண்ணி... ஆதுர சாலைக்கு தந்தையைக் காணச் சென்றிருக்கிறார்" என்றான் விஷ்ணுவர்தன். இதைக் கேட்டு மனம் நிம்மதியுற்றாலும் கணவனைக் காண முடியவில்லை என்ற சோர்வோடு மைத்துனனை உள்ளே வரும்படி அழைத்துவிட்டு வைத்தீஸ்வரி குடிலுக்குள் சென்றாள்.

விஷ்ணுவர்தனும் விஜயவர்தனும் சில நிமிட வித்தியாசத்தில் ஜனித்த இரட்டையர்கள். அவர்கள் இருவரும் பார்க்க ஒரே மாதிரியான தோற்றம் கொண்டவர்கள். எல்லோருமே இருவரையும் கண்டு குழம்பி விடுவது போல அக்னீஸ்வரியும் குழம்பிவிட்டாள்.

இருவரும் சென்று வெகு நாட்களாகிய நிலையில் அந்த ஆனந்த அதிர்ச்சியில் வந்தவன் விஷ்ணுவர்தனாக இருக்கக் கூடும் என்பதை யோசிக்க மறந்தாள். ஆனால் அத்தகைய குழப்பம் வைத்தீஸ்வரிக்கும் சுவாமிநாதனுக்கும் இதுவரை வந்ததேயில்லை. இருவரும் அவர்களைச் சரியாக அடையாளம் கண்டு கொள்வர்.

அக்னீஸ்வர் இப்போது அசட்டுப் புன்னகையோடு, "நான் தங்களை அத்தானோ என்று எண்ணிக் குழப்பமுற்றேன்" என்று விஷ்ணுவர்தனை நோக்கி உரைத்தாள்.

"இது ஒன்றும் முதல் முறை இல்லை அக்னீஸ்வரி... இந்தத் தவற்றை நீ பலமுறை செய்திருக்கிறாய்" என்று விஷ்ணுவர்தன் கோபமாக முறைத்தான்.

"அத்தானுக்கும் உங்களுக்குமான இடையிலான வித்தியாசத்தை ஏனோ என்னால் இதுவரை கண்டு கொள்ளவே முடியவில்லை" என்றாள்.

"அண்ணிக்கு மட்டும் பார்த்த மாத்திரத்தில் எப்படி எங்கள் இருவரையும் சரியாக அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது?"

"இதென்ன கேள்வி?  அக்காவுக்கு அத்தானை அடையாளம் தெரியாமலிருக்குமா? நானும் அவ்வாறு எப்படி இருக்க முடியும்? எனக்கு ஏனோ குழப்பமாகவே இருக்கிறது" என்று அவள் குழந்தைத்தனமாக உரைக்க அவன் அதை ரசித்தவாறு புன்னகையோடு,

"ஒன்றும் குழப்பமில்லை... உன் கண்களால் பார்க்காமல்... மனதால் உணர்ந்து பார்" என்றான்.

"நீங்கள் சொல்வது ஒன்றும் எனக்கு விளங்கவில்லை" என்று உரைத்துவிட்டு மலர்களைப் பறிக்கத் தொடங்கினாள்.

You cannot copy content