You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Meendum Uyirthezhu - 37

Quote

37

பொய்யுரைத்தாளோ?!

அபிமன்யுவைப் பார்த்ததும் அவள் மனம் அவனை அடையாளம் கண்டுகொள்ள இப்போது காரணம் கேட்கிறார்களே என யோசித்தவள் ஒரு அசட்டுப் புன்னகையோடு,

"அது...” என்று இழுத்துவிட்டு, “ஆன்... ஹிஸ் வாட்ச்... அபி கையில கட்டியிருக்கிற வாட்ச்தான் ஆன்ட்டி" என்று சமாளித்துவிட்டாள்.

அவள் அப்படி சொன்ன நொடி ஈஷ்வர் குழப்பமாய் அபிமன்யுவின் வாட்ச்சில் அப்படியென்ன புதுமை என்று கவனிக்க சுகந்தி புன்னகை ததும்ப,

"அதானே... அப்படி ஒரு விஷயம் இருக்குல்ல... எல்லோரும் இடது கையில வாட்ச் கட்டியிருந்தா அவன் மட்டும் வலது கையில கட்டியிருப்பான்... அவன் கை பழக்கம் அந்த மாதிரி... நாங்களே அதை கூர்மையாய் கவனிக்க மாட்டோம்... பரவாயில்லயே... புத்திசாலியான பொண்ணுதாமா நீ" என்று புகழ்ந்தார்.

சூர்யா ஏற்கனவே அபிமன்யுவின் இடது கை பழக்கத்தையும் வலது கையில் இருக்கும் அவனுடைய வாட்ச்சையும் கவனித்திருக்கிறாள். இப்போது அந்த விஷயம் அவளுக்கு நினைவுக்கு வர அவள் தப்பித்தோம் என்று மனதில் எண்ணிக் கொண்டாள். ஆனால் அவள் நுழைந்ததிலிருந்து அவளையே இமைக்காமல் பார்த்து கொண்டிருக்கும் அபிமன்யுவுக்கு மட்டும்தான் அவள் சொன்ன காரணம் பொய்யென்பது தெரியும்.

 ஈஷ்வர் இயல்பான புன்னகையோடு அர்ஜுன் அபிமன்யு இருவரிடமும் கைக்குலுக்கினான். அபிமன்யு ஈஷ்வரின் பார்வையும் ஒரு சேர உரசிக் கொள்ள, இருவருமே மனதில் எழுந்த சிந்தனைகளைக் காட்டிக் கொள்ளாமல் உணர்ச்சிகள் துடைத்த முகத்தோடு இருந்தனர். சூர்யாவிற்கோ இவர்கள் இருவருக்குள்ளும் ஏதோ ஒரு பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருப்பதை யூகித்தாலும் அது எதைக் குறித்தது என்பதை இன்னும் கணிக்க முடியவில்லை.

வைத்தீஸ்வரன் அப்போது தன் மனைவி சுகந்தியையும் அறிமுகம் செய்வித்தார். ஈஷ்வரும் அவரிடம் மரியாதையாகப் புன்னகைக்க, சுகந்தி அவனுக்குப் பதில் புன்னகைப் புரிந்துவிட்டு அவர்களுக்குக் குடிக்க ஜூஸ் எடுத்து வருவதாகச் சொல்லிச் சென்றார்.

ஈஷ்வரை வைத்தீஸ்வரன் அமரச் சொல்லிவிட்டு தானும் அமர்ந்தார். சூர்யாவை ஈஷ்வர் அமரச் சொல்ல அவள் வேண்டாமெனத் தவிர்த்து நின்று கொண்டாள்.

அர்ஜுனையும் அபிமன்யுவையும் தன் எதிர் இருக்கையில் கைக்காட்டி ஈஷ்வர் அமரச் சொன்னான். அர்ஜுன் அமர்ந்து கொண்ட போதும், அபிமன்யு, "இட்ஸ் ஓகே" என்று நின்று கொண்டான்.

அந்தச் சமயம் வைத்தீஸ்வரன் தன் மனதில் உதித்த சந்தேகத்தை சூர்யாவை நோக்கிக் கேட்டார். "உனக்கு அபியை முன்னாடியே தெரியுமா மா?" என்று!

சூர்யா இந்தக் கேள்வியை முன்னமே எதிர்பார்த்தாள். ஆனால் தாமதமாகவே அவர் கேட்க ஈஷ்வரும் அவள் பதிலை எதிர்பார்த்த அதே நேரத்தில் அபிமன்யு சூர்யாவை எகத்தாளமாய் பார்த்தபடி சமாளி என்று கண்ஜாடை செய்தான். அவளா இதெற்கெல்லாம் அசருவாள்.

"அபிமன்யுவையும் அர்ஜுன் சாரையும் ரீஸன்ட்டா அரங்கநாதன் ஹாஸ்ப்பெட்டில்ல ஒன்னா மீட் பண்ணேன்... அதில்லாம் ஏற்கனவே நான் கரிசன் சோழாவில அபிமன்யுவை மீட் பண்ணிருக்கேன்... அப்படி தெரியும்" என்றாள்.

இப்போது வைத்தீஸ்வரன் புரியாமல், "ஹாஸ்பெட்டலுக்கு அர்ஜுனைப் பார்க்க வந்தியா?" என்று அவர் அடுத்த கேள்வி எழுப்ப சூர்யா மனதிற்குள், 'நானே தலைக் கொடுத்துட்டேனே' என்று எண்ணிக் கொண்டு மீண்டும் அவரை நோக்கி,

"என் சிஸ்டர் ரம்யா அங்கேதானே வொர்க் பண்றா... அவளை மீட் பண்ண வந்த போது... எதேச்சையா மீட் பண்ணினேன்" என்று சமாளித்தாள்.

அபிமன்யுவும் அர்ஜுனும் அவள் சொல்லும் பொய்யை எண்ணி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து வியப்பை வெளிப்படுத்திக் கொள்ள, ஈஷ்வருக்கோ அந்தத் தகவல் புதிதாயிருந்தது.

அப்போது அவர்கள் சந்திப்பு எதேச்சையாகதான் நடந்தது போலும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே வைத்தீஸ்வரன் வியப்போடு,

"நீ ரம்யாவோட சிஸ்டரா?" என்று கேட்க அவளும் ஆம் என்று தலையசைத்து ஆமோதித்தாள். சுகந்தியின் செவியிலும் அவள் சொன்னது விழுந்து நேற்று நடந்த சம்பாஷணைகள் நினைவுக்கு வர, இப்போது சூர்யாவிடம் பேச அவருக்குள் ஆவல் அதிகரித்தது.

வைத்தீஸ்வரன் சூர்யாவிடம் சில விஷயங்கள் கேட்டுவிட்டு பின் தன் கவனத்தை ஈஷ்வரின் புறம் திருப்பிப் பேசத் தொடங்கினார். சூர்யாவோ ஒரு வழியாகத் தப்பிப் பிழைத்தோம் எனப் பெருமூச்சு விட்டாள். அவளின் ஒவ்வொரு செயலையும் தன் கண்ணசைவாலேயே அபிமன்யு பரிகசித்துக் கொண்டிருக்க அவனின் பார்வையில் இருந்து தப்பிக்க அவனை முறைத்துவிட்டு சுகந்திக்கு உதவி புரிவதாகச் சொல்லி அங்கிருந்து நகர்ந்து சமையலறைக்குள் சென்று விட்டாள்.

அபிமன்யுவோ அவள் பார்வையிலிருந்து மறைந்ததினால் ஏமாற்றமடைய, ஈஷ்வருக்கோ அப்போதுதான் கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது. அவர்கள் இருவரை கவனிக்கவே இத்தகைய சந்திப்பை ஈஷ்வர் ஏற்படுத்த…

ஆனால் அபிமன்யு அதைத் துளியளவும் அறியாமல் சூர்யாவின் மீது மெய்மறந்திருக்க, அதை கவனித்த ஈஷ்வரின் மனம் எரிமலையாய் சீறிக் கொண்டிருந்தது. இதுவரை ஈஷ்வருக்கு அபிமன்யு மீது பகை மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது அபிமன்யுவின் பார்வை சூர்யாவையே குறி வைத்திருக்க அவனுக்குள் வன்மமும் வக்கிரமும் துளிர்விட்டது.

ஈஷ்வர் அபியை நோக்கி, "உங்க அண்ணா அப்பா... இரண்டு பேரும் டாக்டரா இருக்கும் போது நீங்க மட்டும் வித்தியாசமா ஏன் இந்த சித்தா ஆராய்ச்சி எல்லாம்?" என்று கேட்டான்.

"நான் வித்தியாசமா இல்ல... இவங்க இரண்டு பேர்தான் சம்பந்தமில்லாம டாக்டராயிட்டாங்க... மத்தபடி என் தாத்தா காலத்துல இருந்து எங்க குடும்பத்தில எல்லோரும் சித்த வைத்தியர்கள்தான்" என்றான்.

இதை கேட்டு அர்ஜுன் புன்னகைக்க, வைத்தீஸ்வரன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. சூர்யா எல்லோருக்கும் ஜூஸ் எடுத்து வந்து கொடுக்க அப்போது அர்ஜுன் ஜூஸை எடுத்துக் கொண்டபடி, "ஆமா! நீ எதுக்காக கரிசன் சோழாவில போய் அபிமன்யுவை மீட் பண்ணனும்" என்று தன் சந்தேகத்தை கேட்க,

ஈஷ்வரோடு சேர்த்து அபிமன்யுவும் அவள் இந்தக் கேள்வியை எப்படி சமாளிக்க போகிறாள் என்று எண்ணிய சமயத்தில் சூர்யா சாமர்த்தியமாக,

"அபிமன்யுவை மீட் பண்ணனும்னு நான் கரிசன் சோழாவிற்கு போகல... ஆனைமலை ஃபாரஸ்ட்டை சுத்திப் பார்க்த்தான் போனேன்... அப்படியே அந்த வைத்திய சாலையைப் பத்தியும் கேள்விப்பட்டுப் போய் பார்த்துட்டு வந்தேன்... அப்பதான் அவரை மீட் பண்ணேன்" என்று உரைத்தாள்.

அவள் சொல்லி முடித்து அபிமன்யுவிடம் ஜூஸ் எடுத்து கொள்ள சொல்லி நீட்ட அவன் அவளுக்கும் மட்டும் கேட்பது போல் மெலிதான குரலில், "வாயைத் திறந்தாலே பொய்தானா உனக்கு" என்றான்.

சூர்யா பதிலுரைக்காமல் அவனை ஒழுங்கெடுத்துவிட்டு முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள். சூர்யாவின் செயலை அபிமன்யு ரசித்து கொண்டிருக்க, ஈஷ்வரோ ரொம்பவும் முயன்று தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.

இந்தச் சந்திப்பு யாருக்குப் பயனுள்ளதாக இருந்ததோ தெரியாது. ஆனால் சுகந்தியும் சூர்யாவும் நெருங்கிப் பழக அந்தத் தருணம் உதவியாயிருந்தது. அபிமன்யு நேற்று உரைத்த விஷயங்களை எல்லாம் சுகந்தி கூறி ரம்யா தன் வீட்டு மருமகளாய் வருவதில் மிகுந்த மகிழ்ச்சி என்று தெரிவிக்க, சூர்யா அதை கேட்டு இன்பத்தில் திளைத்தாள்.

அதுவல்லாது சூர்யாவை அபிமன்யுவோடு சேர்த்து சுகந்தி கற்பனை செய்து பொருத்தமான ஜோடி என்றளவுக்கு எண்ணிய சமயத்தில் அபிமன்யு சமையலறையில் அவசரமாய் நுழைந்து,

"மா டின்னர் எல்லாம் ரெடியா... எடுத்து வைக்கலாமா? " என்றான்.

சுகந்தி பரபரப்போடு, "சூர்யா கூட பேசிட்டிருந்ததில நேரம் போனதே தெரியலடா... இதோ முடிஞ்சுது" என்றார்.

"ஓ... மேடம் பேசிப் பேசி உன் காதுலயும் இரத்தம் வர வைச்சுட்டாங்களா?" என்று தன் அம்மாவிடம் கேட்க,

"நீ சொல்ற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல... சூர்யா நல்லாதான் பேசிட்டிருந்தா" என்று சுகந்தி அவளுக்குப் பரிந்து கொண்டு பேசினார்.

அவன் மீண்டும் அவளைச் சீண்டும் விதமாய், "உனக்கு தெரியாது மா... மேடம் குரங்கு கிட்டயே நின்னு ஒரு மணிநேரம் கதை அளப்பாங்க... உன்னை மட்டும் சும்மா விட்டுருவாங்களா" என்றான்.

சுகந்தி, "போடா... சும்மா விளையாடிட்டு" என்று சொல்லி மகனைச் செல்லமாக தோள் மீது தட்டிவிட்டு இரவு உணவை மேஜை மீது எடுத்து வைக்க வெளியேறிவிட சூர்யா அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவனை பரிகசிக்கத் தொடங்கினாள்.

"நீங்க மட்டும் என்ன சார்... மரம்... செடி... கொடி இது கிட்ட எல்லாம் நின்னு பேசிட்டிருக்க ஆள்தானே... இவரு என்னை சொல்ல வந்திட்டாரு" என்றவள் அலட்சியமாய் அவனைக் கடந்து செல்லப் பார்க்க அவனோ அவளை வழி மறித்தான்.

சூர்யா தலையைத் தூக்கிப் பார்த்து என்ன என்பது போல் புருவத்தை உயர்த்திக் கேட்க... இவளுக்கு வெட்கம் நாணமெல்லாம் ஒன்றும் வராதா என மனதில் எண்ணியவன், "என்னவோ கோவில்ல ஈஷ்வர்தேவ் உன் பாஸ் இல்லன்னு சொன்ன... இப்போ என்னடான்னா அவன் கூடவே வந்திருக்க... கடைசியில... நீ கோவிலில் சொன்னதும் பொய்தான்... அப்படிதானே?!" என்று கேட்டான்.

"நான் ஒன்னும் பொய் சொல்லல... இப்பவும் சொல்றேன்... ஈஷ்வர் என் பாஸ் இல்ல... தமிழ்நாட்டில ஈஷ்வர் இருக்கிற வரைக்கும் நான் அவருக்கு அசிஸ்ட் பண்ணணுங்கிறது மேடமோட ஆர்டர்... நான் அவங்க சொல்றதைக் கேட்டுதான் ஆகணும்... அன் உங்களுக்கு நான் எல்லாத்துக்கும் விளக்கம் கொடுத்துட்டிருக்க முடியாது அபி... வழி விடுங்க" என்று சொல்லிவிட்டு அவள் வெளியற செல்லும் போதே,

"யாருக்குத் தெரியும்... இப்ப கூட நீ பொய்தான் சொல்றியோ என்னவோ?!" என்றான்.

சூர்யா கோபமாய் அவன் புறம் திரும்பி வந்து, "நான் எது சொன்னாலும் நீங்க நம்ப மாட்டீங்க... அப்படிதானே?" என்று கேட்டாள்.

"ஆமாம் நம்பமாட்டேன்... உன் மேல எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்ல" என்றான்.

"சரி அப்போ இப்ப ஒரு விஷயம் சொல்றேன்... அதையும் நீங்க நம்பக் கூடாது" என்றாள்.

அப்படி என்ன சொல்லப் போகிறாள் என அவள் விழிகளுக்குள் பார்க்க அவளுமே அவனுடைய விழிகளைப் பார்த்தபடி,

"போயும் போயும் உங்களை மாதிரி ஒருத்தரை பார்த்து நான் இம்பிரஸாவேன்னு நினைச்சுக் கூட பார்க்கல அபி... என்ன பண்றது? ஐம் இம்பிரஸ்ட்... அன் நவ்... ஐம் ஃபாலன்... இன்... லவ்... வித் யூ..." என்றாள் சிறிதளவும் தடுமாறாமல் கடைசி வார்த்தைகளுக்கு சற்று அதிகம் அழுத்தம் கொடுத்து உரைக்க அவனுக்கு தலை கிறுகிறுத்தது.

அவன் விழிகள் வியப்பில் அகல விரிய அவள் ஓர் அலட்சிய புன்னகையோடு, "இதையும் நம்பமாட்டீங்கதானே... ஏன்னா உங்களைப் பொறுத்துவரைக்கும் நான் சொல்றதெல்லாம் பொய்... ரைட்" என்று சொல்லிவிட்டு அவள் வெளியேறிவிட அவன் ஸ்தம்பித்தான். அவள் சொன்ன அந்த வார்த்தைகளோடு அவன் உலகம் நின்றுவிட்டது.

ஜென்மங்கள் தாண்டி அவள் மீது கொண்ட காதலின் ஏக்கம் அது. அவள் மீதான காதலில் கரைந்து மூழ்கி சிலையாய் நின்றுவிட்டான். அப்போது அவன் தாய் தோளைத் தொட்டு சாப்பிட அழைக்க அவன் உணர்வுப் பெற்றான். ஆனால் உயிர் அவளிடத்தில் அவளோடே சென்றுவிட்டது.

அதேநேரம் அவள் தன்னைப் பரிகசிக்க அவ்விதம் பொய்யுரைத்தாளோ என்ற யோசனை எழ அதை ஏற்க மனமில்லாமல் அவன் தவிப்புக்குள்ளானன். அவள் சொன்னது பொய்யா உண்மையா என்று அவன் மனம் குடைய ஆரம்பித்தது.

எல்லோரும் உணவருந்த அமர்ந்த சமயத்தில் சுகந்தி எல்லோருக்கும் பரிமாற, அபிமன்யு சூர்யாவின் மீது தன் கடைக்கண் பார்வையை வீச அவளோ பதிலுக்குக் குறும்புத்தனமாய் புன்னகைத்துவிட்டுக் கண்ணடித்தாள். இப்போதும் அவளின் மீது அழுத்தமான கோபம் உண்டாக எல்லோர் முன்னிலையிலும் அதை காட்ட முடியாமல் தவிப்பில் கிடந்தான்.

அப்போது வைத்தீஸ்வரனிடம் தன் அம்மாவின் உடல் நிலையைப் பற்றி ஈஷ்வர் ஆர்வமாய் விசாரித்து கொண்டிருந்தான். அத்தனை நேரம் சூர்யாவையே பார்த்து கொண்டிருந்த அபிமன்யு இப்போது அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல் அமர்ந்திருந்தான்.

சூர்யா வைத்தீஸ்வரனை நோக்கி ஆர்வம் மேலிட, "மேடமை க்யூர் பண்ணவே முடியாதா?" என்று வினவினாள்.

"பாஸிபிலிட்டீஸ் ரொம்ப குறைவுதான் சூர்யா..." என்றார் வருத்தத்தோடு அவளை நோக்கி!

சூர்யா சிந்தனையில் ஆழ்ந்து... பின் அவள் அபிமன்யுவை நோக்கி, "சித்த மருத்துவத்தில இதுக்கு பாஸிப்பிலிட்டீஸ் இருக்கா அபி?" என்று வினவ அத்தனை நேரம் அவர்கள் சம்பாஷணைகளைக் கவனிக்காதவன் குழப்பமாய் அவளை நோக்கினான். அந்தப் பார்வையில் கோபம் கலந்திருந்ததை அவள் மட்டுமே உணர்ந்தாள்.

வைத்தீஸ்வரன் அலட்சியத்தோடு, "என்ன சூர்யா நீ... என்ன பேசுறன்னு தெரிஞ்சிதான் பேசுறியா?" என்று சொல்லும் போதே சூர்யா இடைமறித்து,

"நல்லா தெரிஞ்சுதான் பேசுறேன் டாக்டர்... அன் ஐம் சீரியஸ்... அரங்கநாதன் வைத்தியசாலையில குணமாக்கவே முடியாதுன்னு நம்பிக்கையை விட்ட பலரை அபி குணமாக்கிக்கிறார்னு நான் கேள்விப்பட்டேன்... அபியால் நிச்சயமா மேடமை குணப்படுத்த முடியும்னு எனக்கு தோனுது" என்று அவள் உரைக்க,

வைத்தீஸ்வரன் ஏளனப் புன்னகையோடு, "உலகம் பூரா ரிசர்ச் சென்டர்... பல நூறு ரிசர்ச் சைன்டிஸ்ட் தனக்குக் கீழே வைச்சிருக்கிற ஈஷ்வரால குணமாக்க முடிஞ்சுருந்தா அவங்க அம்மாவை எப்பவோ குணப்படுத்திருக்க மாட்டாரா என்ன?" என்று கேட்டார்.

அவர் வார்த்தையில் கோபமான சூர்யா, "இப்படி சொல்றன்னேன்னு தப்பா எடுத்துக்காதீங்க டாக்டர்... ஈஷ்வரோட பலத்தைப் பத்தி தெரிஞ்ச உங்களுக்கு அபியோட திறமையைப் பத்தித் தெரியலயேன்னுங்கிறது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு... ரிசர்ச் சைன்டிஸ்ட் எத்தனை பேர் வேணா இருக்கட்டும்... பட் அபியோட திறமைக்கும் புத்திசாலிதனத்துக்கும் முன்னாடி அவங்க எல்லாம் ஒன்னுமே இல்ல... எனக்கு அபி மேல நிறைய நம்பிக்கை இருக்கு... கண்டிப்பா அபியால முடியும்" என்று அவள் நம்பிக்கையுடன் உரைக்க, அபிக்கோ சூர்யாவின் ஒவ்வொரு வார்த்தையும் குழப்பத்தையே தோற்றுவித்தது.

மீண்டும் சூர்யா அபிமன்யுவிடம், "நீங்க ஏன் எதுவும் பேச மாட்றீங்க அபி... உங்களால முடியாதா?" என்று எதிர்பார்ப்பாய் கேட்டாள். அவனின் திறமையின் மீது அவளுக்கு இருந்த நம்பிக்கையை அவளின் விழிகளில் அவன் உணர்ந்தான்.

"முடியாதுன்னு எதுவும் கிடையாது... உங்க மேடமோட ரிப்போர்ட்ஸ் நான் பார்த்துட்டுச் சொல்றேன்" என்றான்.

சூர்யாவின் வாயிலாய் அபியின் திறமையை அறிந்து கொண்ட ஈஷ்வர் வைத்தீஸ்வரன் புறம் திரும்பி,

"டாக்டர்... உங்ககிட்ட மாமோட ரிப்போர்ட்ஸ் இருக்குமே... அதை உங்க சன் அபிமன்யு கிட்ட கொடுங்க... இது மூலமா அபியோட திறமையைப் பத்தி நானும் தெரிஞ்சுக்கணும்" என்றான்.

நேற்று இதே இடத்தில் வைத்து ஈஷ்வரோட ஒப்புமை செய்து தன் மகனை அவமானப்படுத்தியதை வைத்தீஸ்வரனின் மனம் நினைவுக்கூர்ந்தது. எங்கிருந்தோ வந்தப் பெண் அவன் திறமையைப் பறைசாற்ற தான் புரிந்து கொள்ளாமல் போய்விட்டோமோ என்று குற்றவுணர்வு அவருக்குள் தோன்றியது.

ஈஷ்வருக்கோ சூர்யா அவனைப் பாராட்டுவதில் கோபம் உதித்தாலும் அவனின் புத்திசாலித்தனத்தைப் பற்றி அவள் விவரிக்கும் போது அது உண்மை என்றே தோன்றிற்று. அவனின் புத்திகூர்மை தனக்கு பயன்படுமோ என்று தோன்ற அவனைத் தனக்குக் கீழ் வைத்து கொண்டால் என்ன என்ற எண்ணமும் உதித்தது.

சுகந்திக்கோ அவரின் கணவன் நேற்று அபிக்கு செய்த அவமானத்திற்கு இன்று சூர்யாவின் பேச்சு பதிலடிக் கொடுத்தாக எண்ணி உள்ளுக்குள் ஆனந்தம் கொண்டார். சூர்யாதான் அபிக்கு சரியான துணையாக இருக்க முடியும் என ஆழமாய் நம்பவும் ஆரம்பித்தார். ஆனால் அந்த ஆசை நிராசையாய் போகும் போது சுகந்தி அதை எவ்விதம் தாங்கிக் கொள்வார்.

அர்ஜுனிற்கு சூர்யா அபியை விட்டுக்கொடுக்காமல் பேசுவதன் மூலம் தன் தம்பியின் மீது அவள் கொண்ட காதலையும் அசைக்க முடியாத நம்பிக்கையையும் நன்கு உணர முடிந்தது.

இப்படியாக அவர்களின் பேச்சும் இரவு உணவும் முடிவுற அப்போது ஈஷ்வர் சிந்தனையில் ஆழ்ந்திருந்த அபிமன்யுவைத் தனியாய் அழைத்தான்.

"சொல்லுங்க மிஸ்டர் ஈஷ்வர்" என்று கேட்டவனை நோக்கி ஈஷ்வர் தந்திரமான புன்னகையோடு,

"சூர்யா சொல்ற மாதிரி நீ எங்க மாமை குணப்படுத்திட்டா உன் வாழ்க்கையை நான் வேற லெவலில் மாத்திக் காட்டிறேன் மிஸ்டர் அபிமன்யு" என்றான்.

"முதல்ல ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கோங்க மிஸ்டர் ஈஷ்வர்... என்னால உங்கம்மாவை நடக்க வைக்க முடிஞ்சா நிச்சயம் அதை நான் செஞ்சு முடிப்பேன்... அதுக்காக நீங்க என்கிட்ட இப்படி விலை பேசணும்ங்கிற அவசியம் இல்ல" என்றான்.

"கரெக்ட் மிஸ்டர் அபி... திறமைக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன விலைக் கொடுத்தாலும் ஈடாகாது... உங்க மதிப்பையும்... சித்த மருத்துவத்தோட மதிப்பையும் உயர்த்தி இந்த உலகம் பூரா நான் கொண்டு போய் சேர்க்கிறேன்... நீங்க மட்டும் என் கூட ஒன்னா சேர்ந்தா போதும்" என்றான்.

"நான் செய்றது வைத்தியம் ஈஷ்வர் ... நீ செய்றது வியாபாரம்... இரண்டும் ஒன்னா சேரவும் முடியாது... ஒன்னா சேர்க்கவும் கூடாது" என்றான் அழுத்தமாக!

அபிமன்யு தன்னை மரியாதை இல்லாமல் விளித்தது ஈஷ்வருக்கு கோபத்தைத் தோற்றுவித்தாலும் அவன் தன் பொறுமையைவிடவில்லை.

"கம்மான் அபி... விலையே இல்லாம ஓசில கொடுத்தா மக்களுக்கு அதோடு மதிப்பு தெரியாது... நீ செஞ்சுட்டிருக்கிறதும் அப்படிதான்... எல்லாத்துக்கான ஒரு விலையை நாம நிர்ணயக்கணும்" என்றான்.

"அப்போ உன்னைப் பொறுத்த வரைக்கும் எல்லாத்துக்கும்... நீ ஒரு விலை வைச்சிருக்க" என்று அபி கேட்க

"எக்ஸேக்ட்லீ..." என்றான்.

"உன் உயிர் என்ன விலை போகும்... ஒரு எஸ்டிமேட் போட்டு சொல்லு பார்ப்போம்..." அபி அலட்சியமான புன்னகையோடு கேட்க ஈஷ்வரின் பார்வையில் எரிச்சலும் வெறுப்பும் மின்னியது.

அபிமன்யு மீண்டும், "உன் உயிர் மட்டும் உனக்கு ஒஸத்தி... அடுத்தவங்க உயிரெல்லாம் உனக்கு துச்சம் இல்ல" என்று கேட்டான்.

ஈஷ்வர் தன் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து முறுவலோடு சொன்னான். "யாரோட உயிரையும் அப்படி துச்சமா நினைக்கிறவன் இல்ல இந்த ஈஷ்வர்... அனாவசியமா அப்படி யாரோட உயிரையும் நான் தேவையில்லாம எடுக்க மாட்டேன்... அப்படி செய்றவனா இருந்தா நீ இப்படி என் முன்னாடி நின்னு என் உயிருக்கே விலைப் பேசிட்டிருக்க மாட்ட" என்றான்.

அபிமன்யு இப்போது உச்சபட்சக் கோபத்தோடு, "அன்னைக்கு எங்கப்பா உன் உயிரைக் காப்பாத்தாம இருந்திருந்தா... நீ இன்னைக்கு என் எதிரே நின்னு இப்படி என்னையே விலைப் பேசிட்டிருக்க மாட்ட ஈஷ்வர்" என்று சொல்லும் போது இருவரின் பார்வையிலும் அனல் தெறிக்க, சூர்யா மட்டுமே அந்த விபிரீதமான நிலையை உணர்ந்து கொண்டாள்.

ஈஷ்வரும் அபிமன்யுவும் ஒருவரை ஒருவர் கோபமாய் முறைக்க அவர்களின் பேச்சு வளர்வதற்கு முன்பு அதனைத் தடுக்க எண்ணிய சூர்யா,

"சாரி டூ டிஸ்டர்ப் யூ... ஈஷ்வர் கிளம்பலாமே இட்ஸ் ஆல்ரெடி லேட்" என்று சொல்லி அவர்கள் சம்பாஷணையை நிறுத்தினாள்.

ஈஷ்வர் சூர்யாவின் பார்வையைப் புரிந்து கொண்டு அங்கிருந்து அகன்றான். சூர்யா நிம்மதி பெருமூச்சுவிட்டபடி அபிமன்யுவைப் பார்த்து கண்ணாசைவாலேயே புறப்படுவதாகச் சொல்லிவிட்டு நகர்ந்தாள். அவர்களுக்குள் ஏற்பட இருந்த மோசமான சூழ்நிலையை அவள் உணர்ந்து அப்போதைக்கு அதனைத் தடுத்துவிட்டாள்.

ஈஷ்வரும் சூர்யாவும் எல்லோரிடமும் விடைபெற்று புறப்பட்டனர். அவர்கள் வந்த காரில் இருவரும் வேறு வேறு திசையில் பார்த்து கொண்டிருக்க சூர்யாவின் மனமோ புரியாத தவிப்பில் ஆழ்ந்திருந்தது.

ஈஷ்வர் முகத்தில் குறையாமல் இருக்கும் கோபத்தை கவனித்தவள் அவனை நோக்கி, "ஏதாச்சும் சீரியஸ் இஷுவா... உங்களுக்கும் அபிக்கும் இடையில் ஏதாவது பிரச்சனையா? " என்று வினவினாள்

You cannot copy content