You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Meendum Uyirthezhu - 46

Quote

46

அதிர்ச்சி வைத்தியம்

அந்த இரும்பினை ஒத்த கரம் அவளை முழுவதுமாய் சிறைபிடித்ததில் தவிப்புற்றாள். அந்த நொடி ஈஷ்வர் அவள் எதிரே கடந்து செல்ல,

'அப்போ இது யாரு?' என்று எண்ணியபடி தன் இடையை வளைத்திருந்த கரத்தை அவள் கவனிக்க, அந்த வலது கரத்தின் வாட்ச் அவன் அபிமன்யு என்ற குழப்பத்தைத் தெளிய செய்து திகைப்பில் ஆழ்த்தியது.

ஈஷ்வர் சென்றுவிட்டதை கவனித்த பின் அவனின் கரம் அவளை விடுவித்தது. சூர்யா திரும்பி அந்த இருளில் பார்த்த முகம் அவளை எண்ணிலடங்கா இன்பத்தில் திளைக்க வைக்க, அவள் நம்பமுடியாமல் அப்படியே சிலையென நின்றாள்.

அபிமன்யு அவளின் அசையாத கருவிழிகளைப் பார்த்தபடி, "ஏய் அழகி... நான் ஒன்னும் இலுஷன் இல்லடி... ரியல்" என்று அவன் சொன்னதே தாமதம்.

அவள் உடனே அவன் கழுத்தை வளைத்து இறுகி அணைத்துக் கொள்ள அவன் செய்வதறியாது திகைத்தான். முதல் முறையாய் ஒரு பெண்ணின் ஸ்பரிசம் அவனை அப்படி முழுவதுமாய் ஆட்கொள்ள இந்தப் புவியில் உள்ள இன்பங்கள் ஒட்டுமொத்தமாய் இப்போது அவனிடத்தில் அடைக்கலம் புகுந்தது.

அவளின் அணைப்பு அவனின் இத்தனை நாளின் பிரிவை மட்டுமல்ல. அவளின் தவிப்பையும் ஏக்கத்தையும் வேதனையையும் சேர்த்தே அவனுக்குப் புரிய வைத்துவிட்டிருந்தது. அவனும் அவளை தன் கரங்களில் பிணைத்துக் கொள்ள சூர்யாவிற்கு இப்படியே உலகம் சுழலாமல் நின்றுவிடக் கூடாதா எனத் தோன்றியது.

அபிமன்யுவின் கால்கள் தரையில் நிற்பதாகவே அவனுக்குத் தோன்றவில்லை. வான வீதியில் உலாப் போய் கொண்டிருக்கும் அவனை அவள் பூமிக்கு இழுத்து வந்தது போல சட்டென்று அவன் முகத்தைப் பார்த்து, "இது ட்ரீம் இல்லயே?!" என்று சந்தேகமாய் கேட்டாள்.

அபிமன்யு குறும்புத்தனமான பார்வையோடு அவள் கன்னத்தைக் கடித்து விட சூர்யா வலியோடு, "ஆ! இடியட்" என்று திட்டிக்கொண்டே விலகப் பார்த்தவளை நகரவிடாமல் இன்னும் இறுக்கமாய் அணைத்தபடி,

"இப்போ புரிஞ்சதா... இது கனவில்லைன்னு..." என்றான்.

சூர்யா அந்த சந்தோஷத்தில் அவன் மார்பில் முகத்தைப் புதைத்து கொள்ள அவள் வேதனை எல்லாம் கண்ணீராய் வடிந்தது. அபி புரியாமல், "என்னடி ஆச்சு உனக்கு... அழறியா?" என்று கேட்க,

சூர்யா அப்போதும் தன் அழுகையை நிறுத்தவில்லை. இவன் எவ்வளவோ அவளை சமாதானபடுத்த முயல அவள் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. அபிமன்யு பொறுமையோடு அவளை ஆசுவாசப்படுத்த அந்த நொடி மின்னலடித்தது போல் சுகந்தியின் வார்த்தைகள் சூர்யாவிற்கு நினைவுக்கு வந்தன.

தான் அபிமன்யுவை கல்யாணம் செய்தால் அவன் உயிருக்கே ஆபத்து எனும் போது தான் எத்தகைய முட்டாள்தனத்தை செய்து கொண்டிருக்கிறோம் என எண்ணி அவனை விட்டு அவள் விலகி நிற்க அவனோ அவள் எண்ணம் புரியாமல், "என்னாச்சு உனக்கு?" என்று கேட்டான்.

சூர்யா தன்னைத்தானே சமாதானப்படுத்தி கண்ணீரைத் துடைத்தபடி,

"நத்திங்... நீங்க இங்கிருந்து உடனே கிளம்புங்க" என்றாள்.

அபிமன்யு குழப்பமாக, "உன்னை இங்கயே விட்டுட்டு கிளம்பவா... மரத்தில எல்லாம் ஏறி குரங்கு மாறி தாவி குதிச்சு இங்க வந்திருக்கேன்" என்றான்.

சூர்யாவிற்கு அந்த நொடி சந்தோஷத்திற்கு வார்த்தைகளே இல்லை. அவன் உயிரைப் பற்றிக் கூட கவலையில்லாமல் தனக்காக ஈஷ்வரின் இடத்திலேயே நுழைந்திருக்கிறான் எனில் அவன் துணிவு அவளை மேலும் வசிகரிக்க, இன்னொரு பக்கம் அவன் காதலிப்பதை எண்ணிப் பெருமிதமாய் இருந்தது.

எனினும் அவன் உயிர் தன்னால் ஆபத்துக்குள்ளாகக் கூடாதென்று எண்ணியவள் அபியிடம், "எதுக்கு இவ்வளவு ரிஸ்க் எடுத்து என்னைப் பார்க்க வரணும்... நான் நல்லாதானே இருக்கேன்... நான் ஜஸ்ட் இங்க ஆஃபிஸ் வொர்க்காக வந்திருக்கேன்... டூ த்ரீ டேஸ்ல முடிஞ்டும்... அப்புறமா நாம மீட் பண்ணலாமே... இப்போ தயவு செஞ்சு இங்கிருந்து கிளம்புங்க" என்றாள்.

அபிமன்யு சற்று நேரத்திற்கு முன் அவள் ஏக்கத்தையும் தவிப்பையும் உணர்ந்தது போல் அவள் அச்சத்தையும் ஒருவாறு யூகித்து, "நீ ஆஃபிஸ் வொர்க்னு சொல்ற... ஆனா உன் பாஸ் அப்படி சொல்லலியே" என்றான்.

சூர்யா திகைப்போடு, "நீங்க எப்போ ஈஷ்வர்கிட்ட பேசுனீங்க... அவன் என்ன சொன்னான்?" என்று கேட்க,

"உன் ஃபோன்ல இருந்துதான் கால் பண்ணி எனக்கிட்ட அவன் பேசினான்... நீயும் அவனும் தனியா இங்க ரொமான்டிக்கா வந்திருக்கீங்களாமே" என்றவுடன் சூர்யாவிற்கு கோபம் தலைக்கேற அதை அபிமன்யுவிடம் காட்டிக் கொள்ளாமல்,

"ஜஸ்ட் ஃபார் ஃபன்... அப்படி சொல்லிருப்பான்... நீங்க அதை போய் சீரியஸா எடுத்துகிட்டு" என்று நடந்தது எதுவும் அவனுக்குத் தெரிந்துவிட கூடாதென அவள் முடிந்த வரை சமாளிக்க அபிக்கு அவளின் பதில் இன்னும் கலக்கத்தை உண்டுபண்ணியது.

அவன் யோசனையோடு நின்றிருக்க, அப்போது சூர்யா அவனை வேகமாய் இழுத்து ஒரு மரத்தின் அருகில் மறைவாய் நிறுத்திக் கொண்டாள்.

அபிமன்யுவிற்கோ சூர்யாவின் அந்த நெருக்கத்தை மீறி மூளை வேறெதிலும் லயிக்கவில்லை. அவளுடன் அத்தனை அருகாமையில் இருப்பது அவனை இன்பத்தில் திளைக்க வைத்து உலகத்தையே மறக்கடிக்க செய்திருந்தது.

இப்போதே மரணித்தாலும் பரவாயில்லை என்றளவுக்கு உச்சபட்சமாய் அவனின் மொத்த உணர்வுகளையும் அவள் தூண்டிவிட்டிருக்க, அவளோ அப்போது அதை குறித்து எல்லாம் கவலையில்லாமல் அச்ச உணர்வில் சிக்குண்டு கிடந்தாள்.

அபிமன்யு தன்னைச் சுற்றி ஒரு உலகம் இருப்பதை மறந்திருக்க, சூர்யாவின் எண்ணமும் பார்வையும் ஒருவனிடத்தில் நிலைத்திருந்தது.

அவளின் பார்வை பதிந்த இடத்தில் ஈஷ்வர் செக்யூரிட்டிகளிடம் ஏதோ கட்டளையிட அவர்கள் உடனடியாக அவ்விடம்விட்டு நகர்ந்தனர். மதி உள்ளே இருந்து ஓடிவந்து ஈஷ்வரிடம் எதையோ கொடுத்தான். ஈஷ்வர் அதை லாவகமாய் வாங்கி குறிப்பார்க்க, அது ஒரு சிறிய நவீன ரக துப்பாக்கி.

வெகு தூரத்தில் இருப்பவனையும் சரியாய் குறி வைத்து தாக்கினால் அவர்கள் நெஞ்சைத் துளைத்துவிடும். இத்தனையும் கவனித்த சூர்யாவின் பார்வை அவளைத் திடுக்கிடச் செய்தது.

அபிக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதே என்ற பதட்டத்தில் அவள் தவிக்க, ஈஷ்வர் அந்த நொடி வேகமாய் வீட்டிற்குள் விரைந்தான். அவன் தன் அறைக்குதான் போகிறானோ என யூகித்தவள் அபியை நோக்கி பார்வையைத் திருப்ப, அவனோ அப்படியே அவளை விழுங்கி விடலாம் என்பது போல் பார்த்துகிடந்தான்.

"அபி... டே அபி... இடியட்" என்று அவள் அச்சத்தோடு அவன் காது மடலில் மெலிதாய் அழைக்க, அவன் அசரவேயில்லை. அப்போதுதான் அவள் ஒரு விஷயத்தை கவனித்தாள்.

காற்று கூட புகுமுடியாமல் அவள் அவன் தேகத்தில் ஒட்டியிருந்தாள். உடனடியாய் அவள் விலகிக் கொள்ளலாம் என எண்ணிய போது அது சாத்தியப்படவில்லை. அப்போதுதான் அவன் கரம் அத்தனை இறுக்கமாய் அவள் இடையை வளைத்திருப்பதை உணர்ந்தாள்.

இப்போதைக்கு அவன் காதல் கனவுகளில் இருந்து மீண்டு வரமாட்டான் என எண்ணியவள் அவன் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விட, அவளின் அதிர்ச்சி வைத்தியம் நன்றாகவே வேலை செய்தது.

அபிமன்யு கன்னத்தில் விழுந்த அடி விறுவிறுவென வலியை உண்டாக்க அவனின் கரத்தை விடுவித்தபடி, "எதுக்கடி அடிச்ச... திமிரா..." என்று கேட்க,

"பின்ன அடிக்காம... நான் இங்க டென்ஷன்ல இருக்கேன்... நீ என்னடான்னா இதான் சேன்ஸ்னு ரொமான்ஸ் பண்ணிட்டிருக்கியா" என்றாள்.

"யாரு... நான் ரொமான்ஸ் பண்றேனா... நல்லா யோசிச்சு சொல்லு... என்னை பார்த்ததும் கழுத்தை இறுக்கி பிடிச்சு கட்டிக்கிட்டது நீ... இப்ப கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி சும்மா நின்னுட்டிருந்த என்னைப் பிடிச்சு இழுத்துட்டு வந்து மரத்துல தள்ளி என் மூச்சு முட்டிறளவுக்கு வந்து நெருக்கமா நின்னது நீ... பண்றதெல்லாம் பண்ணிட்டு நான் ரொமான்ஸ் பண்றேன்னு என் கன்னத்திலயே அடிச்சுட்ட இல்ல... உன்னை" என்று சொல்லியபடி அவள் தவடையைப் பிடித்து அவள் இதழை அவன் இதழ்கள் அருகில் இழுக்க அவள் பதறியபடி,

"நிலைமைப் புரியாம நீ வேற... விடு அபி... அந்த ஈஷ்வர் வந்துட்டா பிரச்சனையாயிடும்" என்றாள்.

"உம்ஹும்... எந்தக் கொம்பன் வந்தாலும் நான் இப்போதைக்கு விடமாட்டேன்" என்றான்.

"ப்ளீஸ் அபி இங்கிருந்து முதலில் போ"

"சரி போறேன்... பட் ஒரே ஒரு கிஸ் பண்ணு... போயிடுறேன்" என்றான்.

சூர்யா அவன் அப்போதைக்குப் புறப்பட்டால் போதும் என்ற எண்ணத்தோடு, “ஓகே பண்ணிக்கோ” என்று அவள் தெரிவிக்காமல் விழிகளை மூடிக் கொள்ள அவனின் சந்தேகம் அதிகமானது.

அபிமன்யு அவளை நெருங்கி நின்று அவளின் வேதனை நிரம்பிய முகத்தை உற்று கவனித்து அவள் விழியிலிருந்து வழிந்து கன்னங்களில் கோடுகளாய் மாறியிருந்த கண்ணீர் தடங்களைத் துடைத்துவிட அவள் தம் விழிகளைத் திறந்தாள்.

“நீ பிரச்சனையில் இருக்கும் போது உன்னை விட்டுவிட்டு நான் எங்கயும் போக மாட்டேன்... என் உயிரே போனாலும் சரி" என்றான்.

அந்த வார்த்தைகள் அவளை ரொம்பவும் நெகிழ்த்தி உணர்வுகளை அசைத்து பார்த்திட அவனை அணைத்துக் கொண்டவள், "ப்ளீஸ் அபி ... உன்னை நான் கெஞ்சிக் கேட்கிறேன்... இங்கிருந்து நீ போயிடு... அந்த ஈஷ்வர் வந்து உன்னை பார்த்தானா" என்று கண்ணீரோடு கெஞ்சினாள்.

"அப்போ... அந்த ஈஷ்வரால உனக்குப் பிரச்சனை" என்று அபி அவளைத் தள்ளி நிறுத்தி முகம் பார்த்து கேட்க, "சேச்சே... அப்படி எல்லாம் இல்ல" என்று அவள் சொல்லும் போதே அவள் முகத்தில் துளித்துளியாய் வியர்த்திருந்தது. எங்கே ஈஷ்வர் அவர்களைப் பார்த்துவிட போகிறானோ என்ற பயம்தான் அவளுக்கு!

அபிமன்யு அவள் முகபாவனைகளைப் பார்த்து, "நீ எதுக்கோ பயப்படுற... ஆனா என்னன்னு சொல்லமாட்ற" என்றான்.

"ஆமா பயப்படுறேன்தான்... இங்க திருட்டுத்தனமா நீ வந்திருக்கிறத யாராச்சும் பார்த்துட்டாங்கன்னா... அதான்... ப்ளீஸ் நான் உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன்... இங்கிருந்து இப்போ போ" என்று திகலோடு உரைத்தாள்.

You cannot copy content