You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Meendum Uyirthezhu - 8

Quote

8

கண்ணீரும் கோபமும்

அக்னீஸ்வரியின் முகத்தைப் பார்த்த விஷ்ணுவர்தனின் மனம் சஞ்சலப்பட்டது. எப்போதும் பிரகாசமாய் மின்னும் அவளின் முகம் களையிழந்து உணர்வற்று கிடந்தது. அவன் என்னதான் உற்றுக் கவனித்தாலும் அவள் மனதில் குடிகொண்ட எண்ணத்தைக் கண்டறியவே முடியவில்லை.

விஷ்ணுவர்தன் அவளை நோக்கி, "அக்னீஸ்வரி" என்றழைத்தான். அவனின் அழைப்பிற்கான பதிலுரையோ அல்லது எதிர்வினையோ இல்லாமல் அவள் சிலை என சமைந்திருந்தாள்.

மீண்டும் விஷ்ணுவர்தன் அவள் தோள்களைப் பற்ற வர, அவள் அவசரமாய் அவனிடமிருந்து விலகிச் சென்றாள்.

 அவன் புரியாமல் அவளை நோக்கி, "என்னவாயிற்று அக்னீஸ்வரி? உன் முகம் ஏன் வாட்டமாய் இருக்கிறது. என் மீதான கோபம் உனக்கு இன்னும் தீரவில்லையா?!" என்றான்.

அக்னீஸ்வரி அவனை நிமிர்ந்து நோக்காமல், "கோபம் எல்லாம் எதுவும் இல்லை" என்றாள்.

"பின் ஏன் இப்படி நிமிர்ந்து நோக்காமல் என்னைத் தவிக்க வைக்கிறாய்? அச்சமும் நாணமும் திடீரென்று உனக்கு எங்கிருந்து வந்தது? நான் ஒன்றும் நீ அறியாத ஆடவன் இல்லையே?!" என்றான்.

அக்னீஸ்வரியின் விழிகள் கலங்கியவாறு மீண்டும் அமைதி காக்க, "உன் கோபத்தைக் கூட எதிர்கொண்டு விடலாம். ஆனால் உன்னுடைய மௌனம் என்னைப் பாடாய் படுத்துகிறது" என்று சொல்லியபடி அவள் கரத்தைப் பற்றி தன் கையோடு பிணைத்துக் கொள்ள, அக்னீஸ்வரி எத்தனை முயன்றும் அவளின் கரத்தை மீட்க முடியவில்லை.

இப்போது அக்னீஸ்வரி அவளின் மௌனத்தைக் கலைத்து, "நான் தங்களிடம் ஒரு விஷயம் உரைக்க வேண்டும்" என்றாள்.

விஷ்ணுவர்தன் களிப்படைந்தபடி, "எப்படியோ உன் செவ்விதழ்களைத் திறந்து பேசிவிட்டாயே... என்னிடம் உனக்கு எந்தப் பய உணர்வும் வேண்டாம். நீ என்ன சொல்ல நினைக்கிறாயோ அதை சொல்" என்று அவளின் மென்மையான கரத்தை இன்னும் அழுத்தமாய் இறுக்கிக் கொண்டான்.

அக்னீஸ்வரி தவிப்போடு, "நான் சொல்கிறேன்... ஆனால் நீங்கள் முதலில் என் கரத்தை விடுங்கள்" என்றாள் தவிப்போடு!

"அது சாத்தியமில்லை... நீ சொல்ல வந்ததை முதலில் சொல்" என்றான்.

அக்னீஸ்வரி சிறிது நேரம் அமைதி காத்தவள் பின் நடந்தவற்றை அவனிடம் மறைக்காமல் சொல்லிவிட வேண்டும் எனத் தீர்க்கமாய் எண்ணிக் கொண்டு நிமிர்ந்து நோக்க, அவளின் கலங்கிய விழிகளைக் கண்டு புரியாமல் திகைத்தான்.

அவன் என்னவென்று கேட்கலாம் என்று பேச வாயெடுப்பதற்கு முன்பு அக்னீஸ்வரி தன் விழிகளை முந்தானையால் துடைத்தபடி ருத்ரதேவனை குளக்கரையில் பார்த்ததிலிருந்து நிகழ்ந்த அனைத்துச் சம்பவங்களையும் ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தாள்.

விஷ்ணுவர்தன் அப்படியே உறைந்து போனான். கருவிழிகள் அசையாமல் ஒரே இடத்தில் நிலைக்கொண்டிருக்க நம்பமுடியாமல் மீண்டும் அக்னீஸ்வரியைப் பார்த்தான். அவளின் பார்வையில் குற்றவுணர்ச்சி வெளிப்பட்டதைக் கவனித்தான்.

சட்டென்று அவன் பிணைத்திருந்த அவளின் கரத்தை உதறிவிட்டு எழுந்து நின்று கொண்டவனின் முகத்தில் கோபம் அனலாய் தெறித்தது.

அக்னீஸ்வரி அவன் கோபத்தை உணர்ந்தவளாய், "நான் இதைப் பற்றித் தங்களிடம்" என்று அவள் பேசத் தொடங்கிய போதே இடையிட்டவன்,

"இதுதான் உன் காதல் கதையை உரைக்கும் தக்க சமயமோ?" என்று முறைப்பாய் கேட்டான்.

"இல்லை... நான்" என்று அக்னீஸ்வரி மீண்டும் பேச எத்தனிக்க,

"பேசாதே... என் கோபம் எல்லையை மீறுகிறது... திருமணத்திற்கு முன்னமே சொல்லாமல்... இப்போது வந்து இவற்றை எல்லாம் உரைக்க வேண்டிய அவசியமென்ன?" என்றான்.

அக்னீஸ்வரி வேதனையோடு, "இல்லை... நான் முன்னமே தங்களைத் தனியாக சந்தித்து இவற்றை எல்லாம் உரைக்க எண்ணினேன். ஆனால் அத்தகைய வாய்ப்பு எனக்கு அமையவில்லை" என்றாள்.

விஷ்ணுவர்தன் எரிச்சலோடு, “இந்நாட்டின் இளவரசரை தனிமையில் சந்திக்கும் வாய்ப்பு உனக்குக் கிட்டியது. என்னைப் போன்ற சாதாரணமானவனை சந்திக்க உனக்கு வாய்ப்பு கிட்டவில்லை. அப்படித்தானே?" என்று சொல்லிவிட்டு அவன் ஏளனமாய் சிரிக்க,

"புரிந்து கொள்ளுங்கள்... இவ்வாறெல்லாம் நடக்கும் என்று நானே நினைக்கவில்லை" என்று அவள் அவன் வார்த்தையினால் உண்டான வேதனையால் விழிகளில் நீர் வழிய உரைத்தாள்.

"நீதான் நிதர்சனம் உணராமல் கனவிலேயே சஞ்சரிப்பவளாயிற்றே... உன் கோபமும் அகந்தையும் உன்னை சிந்திக்கும் திறனற்றவளாய் மாற்றிவிட்டது. ஆதலால்தான் உன் நிலையை மறந்து நீ ஆசை கொண்டிருக்கிறாய்" என்றான்.

"இல்லை... அவ்விதம் நானாக ஆசைக் கொள்ளவில்லை. நடந்தவை எல்லாம் விதியின் வசம் நிகழ்ந்ததே. நான் என்ன செய்வது?" என்று அழுகையோடுத் தேம்பிக் கொண்டே உரைத்தாள்.

"இப்போதும் உன் தவற்றை நீ உணராமல் விதியின் மீது பழிப் போட்டு தப்பிக் கொள்ள பார்க்கிறாய் அக்னீஸ்வரி"

"என் தவற்றை நான் உணராமல் இல்லை... எனக்கும் அது புரிந்தது" என்று கண்ணீரைத் துடைத்த போதும் அவளை மீறி அது வழிந்தபடியே இருந்தது.

அவளின் கண்ணீரைப் பார்த்து ஏனோ விஷ்ணுவர்தனிற்கு இரக்கம் துளி கூட ஏற்படவில்லை. மாறாய் கோபமே அதிகரித்தது.

"வெகு தாமதமாய் உன் தவற்றை உணர்ந்திருக்கிறாய். ஆனால் இப்போது உணர்ந்து என்ன பயன்" என்று கைகளைக் கட்டிக் கொண்டு அவளைப் பார்க்க விரும்பாமல் பார்வையை ஒளிவீசிக் கொண்டிருக்கும் விளக்கைக் கண்டபடி உரைத்தான்.

அவனின் கோபமும் அவளின் கண்ணீரும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருக்க இருவரும் சிறிது நேரம் மௌனமாகினர்.  அந்த அறைக்குள் நிசப்தம் குடிகொண்டது.

இப்போது அக்னீஸ்வரி சற்று கண்ணீரைத் துடைத்தபடி தெளிவு பெற்றவளாய், "இதற்கு மேல் நான் எந்த விளக்கமும் தர விரும்பவில்லை. என்ன காரணம் சொன்னாலும் நான் உங்களுக்குச் செய்ததை நியாயப்படுத்த இயலாது. நீங்கள் உங்கள் மனதிற்கு என்ன தோன்றுகிறதோ அவ்வாறு செய்யுங்கள்" என்று அவள் அவனை நோக்கி உரைத்தாள்.

இப்போது அவன் அதீத கோபத்தோடு அவள் அருகில் வந்து அவளின் தாடையை அழுத்திப் பிடித்து நிமிர்த்தி, "என்ன சொன்னாய்? என் மனதிற்குத் தோன்றியதைச் செய்யவா? இந்தத் திருமண பந்தத்தை முறித்து விடலாம் என்று தோன்றுகிறது, செய்யட்டுமா? அவ்விதம் நான் செய்தால் உனக்கு வேண்டுமானால் அந்த முடிவு ஆனந்தத்தைத் தரலாம். ஆனால் அந்த முடிவு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று நீ அறிவாயா? உன் சகோதரிக்கும் என் சகோதரனுக்கும் இடையிலான மணவாழ்க்கையும் பாதிக்கப்படும். அண்ணிக்கு குழந்தை பேறு நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் நான் அவ்வாறு செய்தால் அவர்களின் மனநிலையை வேறு பாதிக்கும்.

யாரைப் பற்றியும் கவலை கொள்ளாமல் உன்னை மாதிரி சுயநலம் கொண்டவனாய் என்னால் இருக்க முடியாது. ஆதலால் இப்பிறவியில் நம் விருப்பம் இருந்தாலும் இல்லையென்றாலும் நான்தான் உன் கணவன் என்று விதிக்கப்பட்டுவிட்டது. அதை நீ பெயரளவிலாவது ஏற்றுக் கொள். வேறு வழியே இல்லை" என்று சொல்லி அவன் கைகளை அவள் மீது இருந்து விலக்கிக் கொண்டான்.

அக்னீஸ்வரி அவனின் செயலால் அதிர்ந்து போனாலும் அவன் சொன்னதைக் கேட்டு கோபத்தோடு, "நான் ஒன்றும் சுயநலமானவள் அல்ல. எனக்கும் எல்லோர் மீதும் அக்கறை இருக்கிறது" என்றாள்.

"ரொம்ப அக்கறைதான்... செய்வதை எல்லாம் செய்துவிட்டு வாய் மட்டும் குறைவே இல்லை" என்றான்.

"நான் மட்டும்தான் எல்லாவற்றிற்கும் காரணமா? தாங்கள் எதுவும் செய்யவே இல்லை என்பது போல் பேசுகிறீர்கள்" என்று அக்னீஸ்வரி கேட்க,

"அப்படி என்ன நான் செய்தேன்?" என்று முறைப்போடு அவளைப் பார்த்தான்.

"அன்று திருமண பந்தத்தில் நாட்டமே இல்லை என்று சொன்னீர்கள்... இன்று மட்டும் என்னை ஏன் திருமணம் செய்து கொண்டீர்கள்?" என்று கேள்வி எழுப்பினாள்.

"தவறுதான்... பெரும் தவறு... செய்திருக்கக் கூடாதுதான்... எப்பிறவியில் என்ன பாவம் செய்து தொலைத்தேனோ... உன்னை மணந்து கொண்டேன். எல்லாம் என் தலைவிதி. நான் பேசாமல் நீ சொன்னது போல் துறவு பூண்டிருக்கலாம். இப்போது மட்டும் என்ன? என் நிலைமை அதுதான்" என்று விரக்தியாய் பேசியபடி விஷ்ணுவர்தன் படுக்கை விரிப்பில் படுத்து கொண்டான்.

தான் அவ்விதம் கேட்டிருக்கவே கூடாது என்று கால தாமதமாய் உணர்ந்த அக்னீஸ்வரி அவன் அவ்வாறு புலம்புவதைப் பார்த்து தவிப்புற்றாள்.

அவள் பார்வையைக் கவனித்த விஷ்ணுவர்தன், "இப்போது எதற்கு என்னை அவ்விதம் பார்க்கிறாய்? பார்வையாலேயே எரித்துவிடலாம் என்று எண்ணமோ? அத்தகைய சக்தி உன்னிடம் இல்லை என்று இப்போது நானும் வருத்தம் கொள்கிறேன் அக்னீஸ்வரி. இந்த நொடியே எரிந்து சாம்பலாகி இந்த உலகத்தை விட்டு ஒரேடியாய் சென்றுவிடலாம் பார்" என்றான்.

"நான் அத்தகைய எண்ணம் கொண்டு தங்களைப் பார்க்கவில்லை. நீங்களாக ஏதேனும் கற்பனை செய்து கொள்ளாதீர்கள்" என்றாள்.

"நானாக கற்பனை செய்கிறேனா? உண்மைதான்... எனக்கு புத்தி பேதலித்துவிட்டது. என்ன செய்வது? உன்னைப் போன்ற பெண்ணை திருமணம் செய்தால் வைத்தியனுக்கும் புத்தி பேதலிக்கும்" என்று சொல்ல,

அக்னீஸ்வரி தன்னை அறியாமல் அவன் சொன்னதைக் கேட்டு எரிச்சலடைந்தவளாய், "ஈஸ்வரா" என்றழைத்தாள்.

"கடவுளர்களில் கூட உனக்கு ஈஸ்வரனைத்தான் பிடிக்குமோ?!" என்றான்.

"ஏன் இப்படி பேசிப் பேசி உங்கள் வார்த்தைகளால் என்னைக் காயப்படுத்துகிறீர்கள்" என்று வேதனையோடு கேட்க,

"நீதானே சொன்னாய் அக்னீஸ்வரி... என் கரம் பற்றுவதை விட காயம் படுவதே மேல் என்று".

அக்னீஸ்வரிக்கு அன்று நடந்தவை நினைவுக்கு வர தானும் அவனை யோசிக்காமல் ரொம்பவும் காயப்படுத்திவிட்டோம் என்று குற்றவுணர்வோடு, "அன்று அவ்விதம் நான் நடந்து கொண்டது தவறுதான். என்னை மன்னித்துவிடுங்கள்" என்றாள்.

"மன்னிப்பு மட்டும் என்னிடம் கேட்காதே... நிச்சயம் அது உனக்குக் கிட்டாது அக்னீஸ்வரி" என்று வேதனையோடு சொல்லிவிட்டு அவளைப் பாரா வண்ணம் திரும்பிப் படுத்துக் கொண்டான்.

எதிர்பாராதவை எல்லாம் நடந்து அந்த நாள் அக்னீஸ்வரிக்கு பெரும் ஏமாற்றத்தோடும் வேதனையோடும் முடிவுற்றது. ஒருபுறம் விஷ்ணுவர்தன் மீது கோபம் ஏற்பட்டாலும் இன்னொரு புறம் இரக்கமும் ஏற்பட்டது. அதே நேரத்தில் ருத்ரதேவன் கோட்டைக்குத் திரும்பினால் தனக்குத் திருமணம் நடந்த செய்தி அறிந்து எத்தகைய வேதனையை அடைவானோ என்ற கவலை வேறு முழுவதுமாய் ஆட்கொண்டுவிட அவளின் இரவு உறக்கமில்லாமல் கரைந்து போனது.

You cannot copy content