You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Monisha's AOA

Quote

இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல. எனினும் கதையமைப்பில் புனையப்பட்டிருக்கும் சில சம்பவங்கள் உண்மையான நிகழ்வுகளின் ஆதாரங்களை சேகரித்து அவற்றுடன் என் கற்பனைகளையும் இணைத்து எழுதப்பட்டவையாகும்.

அவனின்றி ஓரணுவும்

1

இயற்கையைக் காதல் செய். அது பன்மடங்காக உன்னைத் திருப்பி காதலிக்கும்.

இயற்கையை நீ அழிக்க செய்தால் அதுவும் பன்மடங்காகத் திருப்பி உன்னை அழிக்கும்.

மாலை சூரியன் பூமியிடம் பிரியா விடைப் பெற்று செல்லவும், இருளின் பிடியில் பூமி மெல்ல மூழ்க தொடங்கியது.

வங்காளவிரிகுடா கடற்கரை! சென்னை எல்லைகளைக் கடந்து சில கிலோமீட்டர்  தூரத்தில் கடப்பாக்கம் சாலை அருகாமையில் உள்ள ஒரு மீனவக்குப்பம் அது. கடலின் கரையோரமாக மீனவ மக்களின் வீடுகள்.

மீனவர்களின் நடமாட்டத்தைத் தவிர வெளிமக்களின் புழக்கம் அதிகமில்லாத இடம். வழி முழுதும் மீன்பிடி படகுகள். பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் மீன் பிடிக்கச் செல்வது அவர்களின் வழக்கம். அதற்கான ஆயத்தபணிகள் நடந்தேறின. வலைகள் யாவும் மடித்து அந்தப் படகிற்குள் திணிக்கப்பட்ட போதும், எல்லோரின் முகத்திலும் குழப்ப ரேகைகள்!

திடீரென்று கடலலைகள் உயர உயர எழும்ப தொடங்கியிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக கடலின் சீற்றம் அதிகரிக்க, எல்லைகளைத் தாண்டிச் சீறிபாய்ந்து வந்தன அந்த அலைகள்.

 கடலில் இப்படியான மாற்றங்கள் இயல்புதான் எனினும் அதிரடியாக உருவான இந்த மாற்றத்தைப் பார்த்த அந்த மீனவர்கள் கூட்டம் மீன் பிடிக்கச் செல்வதா வேண்டாமா என்ற தவிப்பான மனநிலைக்குள் சிக்குண்டனர்.

ஆனால் இது எது பற்றியும் கவலையில்லாமல் கடலை வெறித்தபடி நின்றிருந்தார் ஹரிஹரன். ஐம்பது வயதைத் தொட்ட வதனம்தான் எனினும் அவர் உடலமைப்பும் நின்று கொண்டிருந்த விதமும் சற்றும் கம்பீரம் குறையாமல் தோற்றமளித்தது.

சோகமும் வெறுமையும் கலந்த அவர் பார்வைக் கடலையே வெறித்து கொண்டிருந்தாலும், அந்த அலைகளின் சீற்றத்தை அவரின் விழிகள் உணரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  ஏனெனில் அப்போது அவரின் சிந்தனைக்குள் வேறு சில எண்ணலைகள் அலைமோதிக் கொண்டிருந்தன. 

ஹரிஹரன். உலகம் முழுக்க உள்ள முக்கியமான சுற்றுலா தலங்கள் எனக் கருதப்படும் இடங்களில் எல்லாம் அவரின் சுற்றுலா நிறுவனம் இயங்கி கொண்டிருந்தது. தொழிலில் நல்ல லாபமும் முன்னேற்றமும் அடைந்த சமயம். இந்தோனேசியாவில் தன் குடும்பத்தோடுச் சேர்ந்து சௌகரியமாகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.

இயற்கையின் சீற்றத்திற்கு முன்பு மனிதன் என்பவன் சிறு துரும்பு கூட இல்லையென்பதை உணர்த்தும் விதமாக இந்தோனேசியாவில் வசித்திருந்த ஹரிஹரனின் தந்தை, தாய், மனைவி, எட்டு வயது மகன் என்று பாரபட்சமின்றி ஒருவர் விடாமல் காவுவாங்கியது அந்த ஆழி பேரலை. அன்றுதான் வாழ்க்கையே தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டது ஹரிஹரனுக்கு!

மரணத்தின் கோர தாண்டவத்தைக் கண்ட பின்பு, தான் மட்டும் ஏன் உயிர் வாழ்கிறோம் என்று அவர் எண்ணி வேதனையுற்று வெதும்பாத நாட்களே கிடையாது. அதன் பின்பு ஹரிஹரன் வாழ்க்கையே வெறுத்து போய் தன் மனைவி மக்களை இழந்த அவ்விடத்தில் வசிக்க விருப்பமின்றி தமிழகத்திலுள்ள தன் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டார்.

குடும்பத்தின் நினைவு வரும்போதெல்லாம் கடலின் அருகில் வந்து கண்ணீர் சிந்தி அலைகளில் கால் நனைத்து செல்லும் ஹரிஹரன் வாழ்க்கையில் மீண்டும் ஓர் திருப்பத்தை அந்தக் கடலே கொண்டு வந்து சேர்த்தது.

வெகு நேரமாக பந்து போல ஒரு மனித தலை அலைகளின் உள்ளே சென்று மீண்டும் மேலெழும்பி வர, அந்தக் காட்சியைப் பார்த்துத் திகைத்துப் போனார். அதுவும் கடலின் ஆழம் அதிகமான பகுதியில் தெரிந்தது அந்தத் தலை. ஒருவேளை உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறானோ என்று அஞ்சியவர் உடனடியாக அங்கிருந்த மீனவர்களிடம் அந்தக் காட்சியைக் காண்பிக்க, யாருமே அதைப் பெரிய விஷயமாகவே எடுத்துக்கொள்ளவில்லை.

“அந்த பையனா?” என்று ரொம்பவும் சாதாரணமாக அவர்கள் கேட்ட விதத்தில் ஹரிஹரன் வியப்பின் விளம்பில், “பையனா?” என்று கேட்க,

“ஹ்ம்ம்... என்ன ஒரு ஏழு எட்டு வயசு இருக்கும்... எந்த நேரமும் கடலுகுள்ள நீச்சலடிசிட்டு இருப்பான் சார்” என்று அத்தனை சாதாரணமாக அவர்கள் பதிலளிக்க, “அதெப்படி?” என்றவர் மேலும் வியப்பானார்.

“அவன் அப்படித்தான் சார்... வந்த புதுசுல எங்களுக்கும் ஆச்சரியமாகதான் இருந்துச்சு... அப்புறம் பழகிப் போச்சு”

“அவனோட அம்மா அப்பா” என்று ஹரிஹரன் குழப்பமாகக் கேட்க,

“அதெல்லாம் யாருக்கு சார் தெரியும்... போன வருஷம் அடிச்ச சுனாமில வந்து சேர்ந்தப் பையன்... யாரு என்னன்னு ஒன்னுமே தெரியல” என்று அவர்கள் சொன்ன நொடி ஹரிஹரனின் தலைச் சுழன்றது. நிற்க முடியாமல் கால்கள் பின்னுக்கு இழுக்க, அவரது மகனின் முகம் மின்னலென தோன்றி மறைந்தது.

“ஏதாச்சும் ஆசிரமத்துல கொண்டுப் போய் சேர்க்கலாம் இல்ல?” என்று மூச்சை இழுத்துவிட்டு வேதனையோடு கேட்டார்.

“அதெல்லாம் எங்கே சார்?” என்றவர்கள் விரக்தியாக பதில் சொல்லிவிட்டு, “இங்கயும் புள்ளகுட்டி இழந்துட்டு கிடக்கிறோமே... யாரு வீட்டுக்குக் கூப்பிட்டாலும் வரமாட்டாங்கிறான்... என்ன... அவனா வந்து சாப்பாடு கேட்பான்... இல்லன்னு சொல்லாம எங்க வீட்டுப் பொம்பள ஆளுங்க சோறு குடுப்பாங்க... சாப்பிடுவான்... மணலில் படுத்துகிடப்பான்... அப்படியே சுத்திக்கிட்டுத் திரியிறான்... கடலில் சலிக்க சலிக்க நீந்துகின்னு கிடப்பான்... யார் கூடயும் பழகமாட்டான்” என்று அவர்கள் சொன்னதைக் கேட்டு ஆச்சரியப்பட்டுப் போனார் ஹரிஹரன்,

“அந்த பையனை என் கூட அனுப்பி வைச்சிருங்க... நான் பார்த்துக்கிறேன்” என்று அந்த வினாடியே ஒரு முடிவை எடுத்து அதனை ஆதங்கத்தோடு அவர்களிடம் சொல்லி கேட்க, அந்த மீனவர்கள் எல்லோருமே அதிர்ச்சியில் நின்றனர்.

அவர்கள் பார்வையும் அதிர்ச்சியுமே சொன்னது யாருக்கும் அதில் விருப்பமில்லை என்று. அன்று அந்த மக்கள் ஒன்று திரண்டு திட்டவட்டமாக அவனை அவருடன் அனுப்ப மறுப்பு தெரிவித்தனர். அவர் தன்னிலையை விளக்கி சொன்ன பிறகும் அவர்கள் சம்மதிக்கவில்லை.

அந்த மக்களுக்குப் பாசத்தைத் தாண்டிய வேறேதோ பிணைப்பு இருந்தது அவனிடம். அவருக்கு ஒன்றும் புரியவில்லை.  அங்கிருந்த பெண்கள் அவனை ஆச்சர்ய பிறப்பு என்று விவரித்தனர்.

அந்த ஊருக்கே அவன் ரொம்பவும் முக்கியமானவனாக இருப்பதன் காரணம் புரியாமல் அவர் திகைத்து நிற்க அந்த மக்கள் அவனை, ‘கடல் மகன்’ என்று சொல்லி, ‘அவனை அனுப்பவே முடியாது’ என்று பிடிவாதமாக மறுத்தனர்.

அப்போது ஏற்பட்ட கடலின் சீற்றத்தின் பேரொலி ஹரிஹரன் செவிகளைத் துளைக்க, அவர் அதிரடியாக அந்தப் பழைய நினைவுகளிலிருந்து மீண்டு வந்தார்.

காலங்கள் அலைகளின் நுரைகள் போல கரைந்து சென்றுவிட்டன.

இவையெல்லாம் நடந்து இருபது வருடங்கள் கடந்துவிட்ட போதும் இப்போதும் பசுமையாக அக்காட்சிகள் யாவும் அவர் நினைவுகளைச் சுற்றி வருகின்றன.

அப்போதுதான் ஹரிஹரன் கவனித்தார். அருகில் அவருடன் நின்றிருந்த இளைஞனைக் காணவில்லை.

கடல் ஆவேசமாக சீறிகொண்டிருப்பதைக் கவனித்தபடி, “பிரபா” என்று அவர் குரல் கொடுத்து அந்த மணற்பரப்பில் அவனைத் தேடிக் கொண்டே நடந்தவர், “சொல்லாம எங்கே போய் தொலைஞ்சான்?” என்ற எண்ணத்தோடு அவனுடைய அலைப்பேசிக்கு அழைத்தார். பதிலில்லை.

எங்கே சென்றுவிட்டான்? என்ற யோசனையோடு நடந்தவர்அபாய பகுதி என்று ஒரு பலகையில் எழுதி வைக்கப்பட்டிருநத்தைக் கவனித்து மேலே செல்லாமல் நின்றுவிட்டார்.

அப்போது அலைகளினூடே கிழித்து கொண்டு உள்ளே ஒருவன் நீந்தி சென்றது தெரிந்தது. சட்டென்று அச்சத்தோடு முன்னேறி சென்று பார்த்தவருக்கு மணலில் கிடந்த அவன் செருப்பு அது அவன்தான் என்ற எண்ணத்தைத் தோற்றவித்தது. அச்சத்தில் நிலைகுலைந்து நின்றார்.

அங்கே அலைகளின் சீற்றம் பெரும் கொந்தளிப்பாக மாறியிருந்தது. ஆழம் அதிகமான அந்தப் பகுதியில் சிறிதும் அச்சமின்றி அவன் நீந்தி சென்றான்.

அவருக்கு அவன் தலை மட்டுமே புலப்பட்டது. முதல் முறையாக ஹரிஹரன் அவனை எப்படிப் பார்த்தாரோ அப்படியே இருந்தது அந்தப் பயங்கர காட்சி, சீறிக் கொண்டிருந்த அந்தக் கடலலைகளின் வழியே!

திக்கற்று இயலாமையோடு அவர் அவன் சென்ற திசையை அதிர்ந்து பார்த்திருக்க, அப்போது சிறியதாக ஒரு பெண்ணின் தோள் பை அலையில் மிதந்து கரையைத் தொட்டது. அது மீண்டும் கடலுக்குள் செல்லாமல் கையிலேந்தினார்.

அதனைப் பார்த்த போதுதான் அவருக்கு ஒரு விஷயம் நினைவில் தட்டியது. அவன் பிரபஞ்சன். கடல் மகன்.

மரணத்தையே வென்றெடுக்கும் சக்தி வாய்ந்தவன். அவன் மீண்டு வருவான். மீட்டு வருவான்.

மனதில் ஒருவித நிம்மதி பரவ ஆசுவாசமாக மூச்சை இழுத்து விட்டபடி அந்தப் பையைத் திறந்து ஆராய்ந்தார். அதிலிருந்த பொருட்கள் எல்லாமே நீரால் நனைந்திருக்க, அவற்றிலிருந்த ஒரு அட்டையில் அவளின் விபரங்கள் இருந்தன. அவள் இந்திய நாட்டை சேர்ந்த பெண் அல்ல. வேற்று நாட்டு குடிமகள்.

பெயர்  ‘ஷெர்லி எட்வர்ட்ஸ்’

************

சரியாக இந்தச் சம்பவம் நடக்க ஒரு மாதங்களுக்கு முன்பாக....

அதாவது ஷெர்லி இந்தியாவிற்கு வருவதற்கு முன்பாக…

இயற்கையின் விதியாகப்பட்டது புவியின் ஒருபுறத்தில் இருள் கவ்வும்போது அதன் மற்றொரு புறத்தில் விடியலைக் காண்பதுதான்.

கலிபோர்னியாவில் விடியலின் தொடக்கமாக வெளிச்சம் பரவியது. குளிர் காலத் தொடக்கமென்பதால் சூரியன் கூட சோம்பியபடியே துயில் கலைந்தான். அங்கிருந்த பனித்துகள்களை விரட்ட அவன் எவ்வித முயற்சியிலும் ஈடுபட்டதாகவே தெரியவில்லை. 

அந்தச் சாலைகளில் வீடுகள் அட்டைப் பெட்டிகள் போல வரிசையாக நின்றிருக்க, அவ்வீட்டின் ஓடுகளின் மீது திட்டுத்திட்டாகப் பனி துகள்கள் படர்ந்திருந்தன. ரம்யமாகத் தொடங்கிய அந்தக் காலை பொழுதை ரசிக்கவோ லயிக்கவோ முடியாமல் அதிர்ச்சியில் எழுந்தமர்ந்தான் சத்யா!

எங்கே இருக்கிறோம் என்று சுற்றுமுற்றும் பார்த்தான்.

அழகான சிறிய படுக்கையறை அது! குளிரின் தாக்கம் துளியும் உள்ளே உணரப்படாத அளவுக்குக் கதகதப்பாக இருந்தது. தேவையற்ற எந்தப் பொருட்களும் அந்த அறைக்குள் திணிக்கப்பட்டிருக்கவில்லை.

மூடிய கண்ணாடிச் சாளரம். சுவற்றையொட்டி ஒப்பனை பொருட்கள் வைக்க வடிவமைக்கப்பட்ட ஓர் அழகிய கப்போர்ட். அதனோடு இணைந்து முகம் பார்க்கும் ஒரு வட்ட வடிவக் கண்ணாடி. உடைகள் வைக்கவென்று அருகில் ஒரு சிறிய அறை போன்று வடிவமைக்கப்பட்ட வாட்ரூப்.

சாளரத்தின் ஓரத்தில் மெல்லிய வெள்ளை திரைசீலைகள் விலகியிருக்க, பனித்துகள்கள் வழியே அந்த அறைக்குள் ஊடுருவியது சூரிய ஒளி. அதில் மிளிர்ந்தது அவளின் அந்தப் புகைப்படம்.

மோகன புன்னகை வழிய அதில் அவள்!

 ஒருமுறை பார்த்தாலே மையல் கொள்ள செய்யும் அவளின் விழிகளும் தோள்களில் நீண்டு சரிந்தாடும் அந்தக் கார்குழலிலிருந்தும் பார்வையை யாராலும் அத்தனை சீக்கிரத்தில் அகற்றி கொள்ளவே முடியாது.

ஆனால் சத்யாவோ அவளின் படத்தை மிரட்சியோடுப் பார்த்தான்.

‘அப்படின்னா இது ஷெர்லியோட அறையா?!’

எகிறியது அவன் இதயத்துடிப்பு. அச்சம் மேலிட அந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அவனின் அச்சத்தை மேலும் அதிகாரிக்கும் விதமாக ரீங்காரமிட்டது அவன் கைப்பேசி.

அனுசுயா என்று அதில் ஒளிர்ந்த பெயரைப் பார்த்த நொடி இன்னும் அதிகமாக அதிர்ந்தான். தன் அலைப்பேசியைக் கையிலெடுத்து உற்று பார்த்தான். அவனின் ரத்த ஓட்டம் தாறுமாறாக ஏறியது. வியர்க்க தொடங்கியது.

அவன் குற்றவுணர்வில் அந்த அழைப்பை ஏற்க முடியாமல் தவிப்புற்றான்.

‘அனு கிட்ட நான் இப்ப எப்படி பேசுவேன்?’ தனியாக புலம்பிய அவன் மனதிற்கு நேற்றிரவு உண்மையிலேயே அப்படி நடந்திருக்குமோ என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்தது.

அதற்கேற்றார் போல் அவன் நேற்றிரவு அணிந்திருந்த ஜெர்கின், மேலாடை எதுவும் அவன் தேகத்தில் இல்லை. வேகமாகப் படுக்கையைச் சுற்றி அதனைத் தேட, அவன் பார்வைக்குப் பட்டது அங்கிருந்த இருக்கையின் மீது கிடத்தப்பட்டிருந்த அவளின் ஆடை!

மேலும் அதிர்ச்சி! நேற்றிரவு அவள் அணிந்திருந்த அதே ஆரஞ்சு நிற ஸ்லீவ்லெஸ் கவுன். அந்த உடை அவளைப் பேரழகியாகக் காட்டியது என்று சொன்னால் அது மிகையல்ல. எந்தவொரு ஆணையும் சபலப்படுத்தும் அவள் அழகிற்கு அவன் மட்டும் என்ன விதிவிலக்கா?

அதுவும் போதை மயக்கத்தில் அவளிடம் அந்த இரவுப் பொழுதில் தனிமையில் உத்தமபுத்திரனாக நடந்து கொள்வதெல்லாம் சாத்தியமே இல்லை.

இந்த எண்ணம் தோன்றிய மறுநொடி அதிர்ச்சியில் அவன்  படுக்கையில் சரிய, அவன் பேசி மீண்டும் அழைத்தது. அனுசுயாவின் அழைப்புதான்! அவனுக்குப் பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது. இன்னும் ஒரு மாதத்தில் அவனுக்கும் அனுசுயாவிற்கும் திருமணம்!

எப்படி இப்படி ஒரு செயலை தான் செய்தோம். என்னதான் அவள் பேரழகியாகவே இருந்தாலும் தான் செய்தது மன்னிக்கவே முடியாத துரோகம் இல்லையா?

சத்யா. ரொம்பவும் ஒழுக்கமான கட்டுக்கோப்பான குடும்பத்தில் கண்டிப்போடு வளர்க்கப்பட்டவன். இப்படியான ஒரு செயலை அவன் செய்தான் என்று மட்டும் தெரிந்தால் அவன் வீட்டில் அவனை கொன்றே போட்டுவிடுவார்கள்.

அதிலும் அனுசுயாவிற்கு தெரிந்தால்...

அதிர்ச்சியில் அவனுக்கு நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது.

கணிப்பொறியில் பொறியியல் படிப்பு முடித்துவிட்டு நான்கு வருட காலம் நொய்டாவில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறான். அங்கே வேலை நிமித்தமாக அவன் உட்பட அவன் நிறுவனத்தில் வேலை செய்யும் பத்து பேரைத் தேர்வு செய்து மூன்று மாத காலம் கலிபோர்னியாவிற்கு அனுப்பியிருந்தார்கள்.

திருமண ஏற்பாடான நிலையில் போக வேண்டாமென தமிழகத்திலுள்ள சத்யாவின் குடும்பத்தினர் தடை சொல்ல, அவனோ அவர்களிடம் படாதபாடுப்பட்டு சம்மதம் வாங்கினான்.

அதுவும் அனுசுயா வேறு, “நீங்க கண்டிப்பா போயே ஆகணுமா?” என்று குழைவாகக் கேட்க

அவளிடம், “இந்த மாதிரி வாய்ப்பு அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் கிடைக்காதும்மா... ப்ளீஸ்” என்று கெஞ்சிக் கொஞ்சி சம்மதம் பெற்றுவிட்டான். ஆனால் விதியாகப்பட்டது சத்யாவின் வாழ்கையில் ஷெர்லியின் ரூபத்தில் விளையாடத் தொடங்கியது.

அவர்களின் பத்து பேர் கொண்ட குழு கலிபோர்னியா சென்று சேர்ந்ததும் அந்த நாட்டு  பெண்கள் ஆண்களை என எல்லோரையும் ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பழக்கவழக்கம் நிறம் உடை என்பவையெல்லாம் அவர்கள் பார்த்திராத ஒன்று அல்ல. எனினும் நெருங்கி அந்த மக்களோடு பழகும் வாய்ப்பு கிடைத்தது அதுதான் முதல்முறை அல்லவா?

அவர்கள் தங்கள் வேலையைத் தொடங்கிய இரண்டாவது நாள்தான் ஷெர்லியின் அறிமுகம். பார்த்த மாத்திரத்தில் யாருமே அவளை அந்த நாட்டு பிரஜை என்று ஏற்றுக்கொள்ளவேமாட்டார்கள்.

பொன்னிறத்தில் செந்நிறத்தைக் குழைத்து செய்த பதுமை போன்ற நிறம். அவளின் கருமையான விழிகளும் கூந்தலும் எவ்விதத்திலும் அந்த நாட்டுப் பெண்ணாக அவளைக் காட்டவில்லை என்பதுதான் உண்மை.

அதுவும் சத்யாவுடன் வந்த பத்து பேர் கொண்ட குழுவில் ஆறு பேர் டில்லியைச் சேர்ந்தவர்கள். இருவர் பெங்களூர் மற்றும் ஒருவர் ஆந்திரா. சத்யா மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவன்.

பார்த்த உடனே அவனுக்கு அவள் தமிழ் பெண்ணாகத்தான் இருப்பாள் என்று தோன்றியது. மற்றவர்களும் அவள் இந்தியா என்றே யுகித்தனர். ஆனால் அவள் வடஇந்தியாவா தென்னிந்தியாவா?

இதுதான் அவர்களின் பெருத்த சந்தேகம். ஆனால் அவர்களின் எண்ணத்தைப் பொய்யாக்கும் விதமாக அவர்கள் குழுவின் மேலாளர் அவளை அறிமுகம் செய்து வைத்தார்.

‘ஷெர்லி எட்வர்ட்ஸ்’

அவளின் நடை உடை பாவனை மற்றும் அவள் நுனிநாக்கில் பேசிய ஆங்கிலம் உட்பட அவள் எவ்விதத்திலும் இந்திய பெண் அல்ல என்பது தெளிவுப்படுத்திய போதும் அந்தக் கூட்டத்திலிருந்து அவள் மட்டும் வித்தியாசமாகத் தெரிவது அவர்கள் எல்லோரின் பார்வையையும் உறுத்தியது.

எப்படியாவது அவளின் குடும்ப பின்னணியை குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் பிறந்தது அவர்களுக்கு!

ஆனால் அது அத்தனை சுலபமான காரியமில்லை. ஷெர்லி ரொம்பவும் கண்டிப்பான பேர் வழி. வந்து ஒரு மாதம் கடந்துவிட அலுவலக விஷயம் தவிர வேறெந்த விஷயமும் அவள் வாயிலிருந்து வாங்கவே முடியவில்லை. அதற்கும் மேலாக அவள் ரொம்பவும் அழுத்தமான பெண். நட்பு ரீதியாக அவளிடம் நெருங்குவதற்கு  கூட அவள் யாருக்கும் வாய்ப்பு தரவில்லை. அவள் உண்டு அவள் வேலை உண்டு என்றிருந்தாள்.

ஷெர்லியைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவர்கள் யாருக்கும் அப்போதும் குன்றியபாடில்லை. இதனால் அவர்கள், “இங்கிருந்து நாம எல்லோரும் கிளம்புறதுக்கு முன்னாடி நம்மலில ஒருத்தர் ஷெர்லி பேமிலி பத்தின டீடைலசைக் கண்டுபிடிக்கணும்” என்று தீவிரமாக அவள் விஷயத்தில் இறங்கினர்.

சத்யாவிற்கு இதில் பெரிதாக உடன்பாடில்லை. இருப்பினும் இந்தச் சவாலை அவன் ஏற்கவில்லை என்றால் கோழை என்று பட்டம் கட்டி கேலி செய்தே கொன்றுவிடுவார்கள் என்ற காரணத்திற்காக அவன் அவர்கள் சொல்வதை ஏற்றது போல் காட்டிக் கொண்டான். ஆனால் எவ்விதத்திலும் ஷெர்லியிடம் பழகும் முயற்சியை அவன் செய்யவில்லை. ஆனால் அதிர்ஷ்ட காற்று தானாகவே அவன் பக்கம் வீசியது.

சத்யாவிடம் ஷெர்லியே சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு நாளும் வந்தது.

You cannot copy content