You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Monisha's AOA - 13

Quote

13

பூமியின் வயது சுமார் 450 கோடி ஆண்டுகள். நுண்ணுயிர்கள் சுமார் 350 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றின.

சுமார் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன் வரையிலும் நுண்ணுயிர்களே பூமியில் ஆதிக்கம் செலுத்தியதாகவும் அதன் பின்னரே படிப்படியாக உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியடைந்ததாகவும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பிரபஞ்சனின் மனதினோரத்தில் நடக்கப் போகும் அபாயம் குறித்த தவிப்பு ஒருபுறம் இருந்து கொண்டிருந்தாலும் இன்னொரு புறம் கிறிஸ்டோபர் வாழ்க்கையும் மிகுந்த சுவாரஸ்யத்தோடு அவனை உள்ளிழுத்து கொண்டு சென்றது.

ஒவ்வொரு வரியிலும் இயற்கையின் மீது அவர் கொண்டிருந்த அலாதியான காதல் தெரிந்தது.

பதினெட்டாம் நூற்றாண்டில் சார்லஸ் டார்வின் இந்தப் பூமியில் ஜீவராசிகள் பரிணமிக்கும் கோட்பாடுகளை ஆராய்ந்து, ‘உயிரினங்களின் தோற்றம்’ என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

அந்தப் புத்தகம் இந்தப் பூமியில் உயிர் வாழும் ஒவ்வொரு உயிரும் இறைவனின் படைப்பு என்ற மதவாத கோட்பாடுகளின் அடித்தளத்தை அடித்து நொறுக்கியது.

மனிதனுக்கும் குரங்கிற்கும் ஒரே மூதாதை உயிரினத்திலிருந்து பரிணாம வளர்ச்சியால் தோன்றிய இரு கிளைகள் என்ற கருத்தை வெளியிட்டதால் மதவாதிகள் மூர்க்கத்தனமாக டார்வினை எதிர்த்தனர். டார்வினை, குரங்காகவும் சாத்தானாகவும், பைத்தியமாகவும் சித்தரித்தனர்.

உண்மையும் அறிவியலும் அத்தனை சீக்கிரத்தில் ஏற்கப்பட்டு விடுவதில்லை. சூழ்நிலைக்கேற்ப உயிரினங்கள் தம்மைத் தகவமைத்து பெற்ற மாற்றங்கள் பாரம்பரிய பண்புகளாக எவ்வாறு தலைமுறை தலைமுறையாகச் சந்ததிகளுக்குக் கடத்தப்படுகின்றன என்பதை விளக்குவதற்கு டார்வின் காலத்தில் அறிவியல் போதுமான வளர்ச்சி பெற்றிருக்கவில்லை எனினும் டார்வின் பரிணாம வளர்ச்சியின் உண்மைத் தன்மையை நிரூபிக்க அபரிமிதமான ஆதாரங்களை வழங்கினார். பரிணாமத்தைப் பற்றிய நிதர்சனமான உண்மையை இனியும் மறுக்க முடியாத அளவில் அவை அமைந்தன.

எடுத்துக்காட்டாக சொல்வதென்றால், ‘ஒரே சிற்றினத்தைச் சேர்ந்த எல்லா உயிரினங்களும் ஒன்றுபோல் ஒன்றிருப்பதில்லை. உதாரணமாக ராட்சத ஆமையின் ஒரீட்டு தொகுதியின் குஞ்சுகளில் சில தம்முள் அமைந்திருக்கும் மரபணுத் தன்மையின் காரணமாக மற்றவற்றை விட நீளமான கழுத்தைக் கொண்டுள்ளன. வறட்சியின் போது மரங்களிலுள்ள இலைகளை உண்டு வாழ இந்த நீண்ட கழுத்துடைய ஆமைகளால் முடியும்.

இவற்றின் குட்டை கழுத்து சகோதர, சகோதிரிகள் பட்டினியால் இறக்கின்றன. எனவே, தம் சூழலுக்குப் பொருத்தமாகத் தம்மை தகவமைத்துக் கொண்டவை மட்டுமே அடுத்த சந்ததிகளுக்கு தம் குணாதிசியங்களைக் கடத்துகின்றன. 

பல தலைமுறைகளுக்கு பின் வறட்சியான தீவுகளிலுள்ள ஆமைகள், நீர் வசதியுள்ள ஆமைகளை விட நீண்ட கழுத்துகளைக் கொண்டிருக்கும்.

 கிட்டத்தட்ட இதே போன்ற காரணங்களால்தான் டைனோசரஸ் இனங்கள் கூண்டோடு அழிந்துவிட்டன.

உலகத்தின் கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு பூமி குளிர்ந்த காரணத்தால் அந்தக் கடுங்குளிர் சூழலைத் தாங்க முடியாத டைனோசரஸ் இனங்கள் அழிவை எட்டியது. மீளமுடியாத அளவிற்கு அவற்றின் உடல் வெப்பம் மிகவும் குறைந்தது. தாங்க முடியாத குளிரால் அதனுடல் பாதிக்கப்பட்ட போது, அவற்றால் தன் பெரிய உடலை நகர்த்திச் சென்று உணவைத் தேடி உண்ணத் தேவையான சக்தியைத் திரட்ட இயலவில்லை.

எனவே பெருவுடல் கொண்ட சாகபட்சிணிகள் (அப்போடோசராஸ்) பூண்டோடு அழிந்தன. இவற்றை வேட்டையாடிக் கொண்டிருந்த மாமிசபட்சிணிகளும் (டைனோசரஸ்) இவற்றுடன் சேர்ந்து அழியலாயிற்று.

தீவிரமாகிக் கொண்டு வரும் குளிரால் ஏற்படும் விளைவினின்று தப்பித்து கொள்ள பல ஊர்வனவைகள் பாறை இடுக்குகளில் புகுந்து கொண்டோ அல்லது கடும் உறைபனியிலிருந்து காத்துக் கொள்ள தம்முடலைப் புதைத்து காத்து கொண்டன.

பெரிய உடல் கொண்ட அப்போடோசராஸ் மற்றும் டைனோசரஸ் போன்றவற்றிற்கு இந்த வழிகள் சாத்தியமில்லை.

இந்தக் கோட்பாட்டின் சாராம்சம்தான் ‘சர்வைவல் ஆஃப் தி பிட்டஸ்ட்’ என்று சொல்லப்படுகிறது.

சூழலுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்து கொள்ளும் உயிரினம்தான் இந்தப் பூமியில் சஞ்சரித்து தங்கள் குணாதிசயங்களை மரபணு மூலமாக அடுத்தடுத்த தலைமுறை சந்ததிகளுக்குக் கடத்துகின்றன.

இத்தகைய டார்வினின் கோட்பாடுகளின் மீது ஆழமான நம்பிக்கையும் ஆர்வமும் கொண்டிருந்த கிறிஸ்டோபர் தன் வாழ்க்கைப் பயணத்தை பரிணாம வளர்ச்சியின் பயணத்தில் தொடர ஆரம்பித்தார்.

உயிரினங்களின் தொடர்பு சங்கிலிகள் குறித்து தன் தேடலைத் தொடங்கினார். சிறு வயதிலிருந்து கிறிஸ்டோபர் இயற்கையின்பால் கொண்ட காதலும் டார்வினின் கோட்பாடுகளும் அவர் வாழ்க்கைப் பயணிக்கும் திசையைத் தீர்மானித்தன.

அவற்றை நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டுமென்ற ஆர்வமும் அவருடைய வயதிற்கும் வளரச்சிக்கும் ஏற்றார் போல் வளர்ந்து கொண்டே போனது.

அவருடைய தேவையும் தேடலும் சமுத்திரம் போலவும் வானம் போலவும் எல்லைகளற்று விரிந்து கொண்டேயிருந்தன.

காடுகள், மலைகள், கடல்கள் என்று அவர் இயற்கையோடு ஒன்றென கலந்து தன் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்டார். தென்னமரிக்க வெப்பமண்டல காடுகளில் ஆண்டு கணக்கில் தன்னுடைய நாட்களை செலவிட்டார். அங்குதான் இதுவரையில் நாம் அறிந்திராத உயிரினங்களைக் கண்டுபிடிக்கலாம்.

பசுமையான மென்னொளி படர்ந்திருக்கும் காற்றீர பசை மிகுந்த அடர்ந்த காடுகளில் எத்தனை வகையான விலங்குகள் உள்ளன என்பதை ஒருவராலும் சொல்லுவதற்கியலாது.

உலகின் எப்பகுதியானாலும் இத்தகைய வளமான காடுகளில்தான் அபரிமிதமான வகை வகையான விலங்கினங்கள் தாவரங்கள் கூடி அமைந்துள்ளன. குரங்குகள், கொறிக்கும் பிராணிகள், சிலந்திகள், வானம்பாடிகள், வண்ணத்துப்பூச்சிகள் என்று பல பெருந்தொகுப்புகள் உள்ளதோடு மட்டுமின்றி அவை பலதரப்பட்ட வடிவமைப்புகளில் காணப்படுகின்றன.

நாற்பதுக்கும் மேற்பட்ட கிளி இனங்களும் எழுபதுக்கும் மேற்பட்ட  குரங்கினங்களும் முன்னூறு வகை வானம்பாடிகளும் பல்லாயிரக்கணக்கான வண்ணத்துப்பூச்சிகளும் உள்ளன. சற்று கவனக் குறைவாக இருந்துவிட்டால் நூற்றுக்கணக்கான வகை கொசுக்கள் மொய்த்து கடித்துவிடும் அபாயங்களும் இந்த மாதிரியான பயணங்களில் இருந்தது.

ஆனால் கிறிஸ்டோபர் அவற்றையெல்லாம் குறித்து கொஞ்சமும் அச்சம் கொள்ளவில்லை. இயற்கையின் ஆச்சரியங்களைத் தேடி அவர் பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது.

பூமியின் உருவாக்கம் எப்படி இருந்திருக்கும்? ஆரம்ப கட்ட நிலையில் எப்படி எந்த உயிரினம் இந்தப் பூமியில் உருப்பெற்று ஜனித்திருக்கும்? இப்படியான பற்பல கேள்விகள் அவரைத் துளைத்து எடுத்தது.

எல்லோரும் எதிர்காலத்தைப் பார்க்க ஆசைப்படுவார்கள். ஆனால் கிறிஸ்டோபர் இறந்த காலத்தைப் பார்க்க ஆசைப்பட்டார். எப்படி இந்த இயற்கையானது இத்தனை நேர்த்தியாகத் தன்னைத் தகவமைத்து கொண்டது? இந்தப் பரந்து விரிந்த பிரபஞ்சத்தை இதனால் வரை எது இயக்கிக் கொண்டிருக்கிறது?

இப்படியாக அவர் தன் வாழ்நாட்களை இந்த மாதிரியான கேள்விகளுக்கு விடைகளைத் தேடுவதிலேயே கழித்துக் கொண்டிருந்தார்.

பூமியில் ஜனித்து வாழ்ந்து கொண்டிருக்கும் சாதாராண மனிதர்கள் போல் பணம், காதல், குடும்பம், நாடு, மொழி, மதம் மீதெல்லாம் அவருக்கு பற்றுதல் துளியளவும் இருக்கவில்லை. அவருக்கிருந்த ஒரே பற்று இயற்கை.

அவரை பொறுத்தவரை இந்த பூமியில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் பூமி என்பது பொதுவானது. நாடு, மதம், மொழி, இனம் என்ற பெயரில் எல்லைக் கோடுகளும் போதாக்குறைக்கு அதனை விரிவாக்கம் செய்ய போர் செய்வது குண்டு வீசுவது தன் இனத்தைத் தானே அழித்து கொள்வது போன்றவற்றை அவர் முற்றிலுமாக  வெறுத்தார்.

இப்படியாக பதினைந்து ஆண்டு கால வாழ்க்கையை உயிரினங்கள் பற்றிய தம் ஆய்வுகளையும் ஆராய்ச்சிகளையும் புத்தகங்களாகத் தொகுத்தவர் தன் தேடலை எந்த நிலையிலும் நிறுத்தி கொள்ளவில்லை. 

அழிந்த போன குமரி கண்டம் குறித்த ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்ட கிறிஸ்டோபர் தம்முடைய நாற்பதாவது வயதில் இந்திய தேசத்தில் கால் பதித்தார்.

ஆனால் நாற்பது வயது மதிக்கத்தக்க ஆடவனாக அவரின் தோற்றமும் உடலமைப்பும் இல்லை. இயற்கையோடு வாழ்ந்த காரணத்தால் அவர் தோற்றத்தில் கொஞ்சமும் இளமை குன்றாமல் இருந்து வந்தது. இருபத்தைந்து வயது இளம் வாலிபன் போலவே அவர் உயரமும் கம்பீரமும் உடல் கட்டமைப்பும் இருந்தது என்று சொல்லலாம்.

கிறிஸ்டோபர் தம் தேடல்களுக்கான விடையைத் தமிழகத்தின் நிலப்பகுதிகளில் ஆராய்ச்சி செய்ய தொடங்கினார். ஆதி காலத்து மனிதனின் பழமையான நாகரிகம் தொடங்கிய இடங்களாக அவற்றில் ஆதாரங்களைத் தேடினார். குமரி கண்டத்தின் பேரழிவின் மிச்சம் மீதி அல்லது அது குறித்த சான்றுகள் அங்கே கிடைக்கலாம் என்பது அவருடைய கணிப்பு.

ஆனால் அவர் வேறொரு அதிசியத்தை அங்கே பார்க்க நேர்ந்தது. அதனைக் குறித்து கிறிஸ்டோபர் எழுதியிருந்ததை பிரபா மும்முரமாக படித்து கொண்டிருந்தான்.

********

டிசேஸ்டர் - இறுதி அத்தியாயம்

அங்கே நான் பார்க்க போகும் அதிசியங்கள் குறித்து யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடிந்திருக்காது.

நான் ஆய்வு மேற்கொண்டிருந்த கிராமத்தின் அருகே ஓர் உயரமான மலைக் கம்பீரமாகக் காட்சியளித்தது. அந்த மலை அடிவாரத்திலிருந்த கிராம மக்கள் அந்த மலை மீது அவர்களின் கடவுள்கள் வாழ்கிறார்கள் என்றும், அதன் மீது ஏறுவது பாவக் காரியம் என்றும் என்னிடம் சொன்னார்கள்.

அதோடு  யாருமே அந்த மலையை நெருங்கிக் கூட  செல்லமாட்டோம் என்றும் அப்படி அவர்கள் தப்பித்தவறி சென்றால்  உயிருடன் திரும்புவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்தனர்.

இதனாலேயே அந்த மலை மீது ஏறி சென்று பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் எனக்கு அதிகரித்தது. எத்தனையோ பயங்கரமான காடுகளைச் சுற்றி பல அபயாங்களைக் கடந்து வந்த எனக்கு அவர்களின் எச்சிரிக்கைப் பெரிய விஷயமாகத் தோன்றவில்லை. நம்பும்படியாகவும் இல்லை. கடவுள்கள் மலை மீது வாழ்வார்களா என்ன?

அப்படி யாரேனும் வாழ்ந்தால் அதையும் பார்த்துவிடலாம் என்ற அசட்டுத்தனமான துணிச்சல் உருவானது. அதேநேரம் அந்தக் கிராம மக்கள் நிச்சயம் இதற்கு அனுமதிக்கவும் மாட்டார்கள்.

இதனால் நள்ளிரவு நேரத்தில் அந்த மலை மீது ஏற எனக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் எடுத்துக் கொண்டு அந்த மலையடிவாரத்தை நெருங்கினேன். என்னுடன் வந்த உதவியாளனும் உடன் வர மறுத்துவிட்டான். அவனிடம் யாரிடமும் எதுவும் சொல்ல கூடாது என்று மிரட்டிவிட்டு நான் தனியாகவே மலையேறினேன்.

எனக்கு ஒன்றும் அது அத்தனை சிரமமான காரியமாக இல்லை. இருப்பினும் அந்த மலை மீது என்ன மாதிரியான கொடிய விலங்கினங்கள் இருக்குமோ? விஷப்பாம்புகள் இருக்குமோ என்றெல்லாம் மனதில் லேசான அச்சமும் படர்ந்தது.

மெதுவாக அதேநேரம் மிகுந்த எச்சரிக்கையோடு என் நெற்றியில் ஒரு டார்ச் லைட்டைக் கட்டிக் கொண்டு ஒரு குச்சியைப் பிடித்து ஊன்றிக் கொண்டு அந்த மலையின் மீது ஒவ்வொரு அடிகளாக எடுத்து வைத்து ஏறி சென்றேன். அந்தப் பயங்கர இருளைக் கிழித்து கொண்டு என் தலையில் கட்டியிருந்த டார்ச் லைட் ஒளி வீசியது.

உச்சிக்குச் செல்ல வேண்டுமென்ற எண்ணத்தில் அந்த அடர்ந்த மலைக்காட்டில் புகுந்து மேலே ஏற ஆரம்பித்தேன். அந்த மலைகளில் நடப்பதற்கான வழிபாதைகளே இல்லை. கல்லும் முள்ளுமாக கரடுமுரடாக இருந்தன. யாரும் அந்த வழியை இதுவரை உபயோகித்ததே இல்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

இரவு நேரம் ஆதலால் அத்தனை சீக்கிரத்தில் எனக்கு களைப்பும் உண்டாகவில்லை. சலசலவென ஓர் ஓடை பாய்ந்து செல்லும் ஓசை என் காதுகளில் ரீங்காரமிட்டது. க்ரீச் க்ரீச் என்று சில பறவையினங்களின் கூக்குரல்கள் மெலிதாகக் கேட்டுக் கொண்டிருந்தன. இரவு நேர பூச்சியினங்களின் சத்தங்கள் என்னைத் தொடர்ந்து வந்துக்கொண்டிருந்தன.

விழிகளை விட காதுகளைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு அந்தக் காட்டுப் பாதையில் வெகுலாவகமாக ஏறினேன். அப்போது மெலிதாக ஒரு காலடி ஓசை என்னைப் பின் தொடர்ந்ததை என்னால் கேட்க முடிந்தது. என் இதயம் படபடக்க மேலே செல்லாமல் அப்படியே சிலையாக நின்றுவிட்டேன்.

என்னைச் சுற்றிலும் பார்வையைப் படரவிட்டேன். என் பார்வைக்கு யாரும் தென்படவில்லை. ஆனால் மீண்டும் நடக்கும் போது சில நிமிடங்கள் கழித்து அந்தக் காலடி ஓசை என்னைத் தொடர்ந்தது.

என் நடையின் வேகத்தைக் குறைத்தேன். மெல்ல பின்னே இருந்த காலடி ஓசையை மிகவும் கவனமாக உள்வாங்கிக் கொண்டேன். அது மிருகத்தின் காலடி ஓசையாக எனக்குத் தெரியவில்லை. நுகர்ந்து பார்த்த போது மிருக வாடை எதுவும் அருகாமையிலிருப்பது போலவும் தோன்றவில்லை.

இப்போதுதான் என்னை அச்சம் அதிகமாகப் பீடித்துக் கொண்டது. கொடிய விலங்கினங்களைக் கூட சமாளித்துவிடலாம். எது எந்த முறையில் தம் தாக்குதலை நிகழ்த்தும் என்று என்னுடைய இத்தனை வருட காட்டு பயணங்களில் கற்றிருந்தேன். அவற்றை எப்படி எதிர்க்க வேண்டுமென்ற உபாயமும் எனக்குத் தெரிந்திருந்தது. ஆனால் என்னைப் பின்தொடர்வது காட்டில் வாழும் மனிதனாக இருக்கும் பட்சத்தில் அது மிகுந்த ஆபத்தானது. அவன் எந்தப் பக்கம் எவ்விதமான ஆயுதம் கொண்டு தாக்குவான் என்று நிச்சயம் கணிப்பது அசாத்தியம்.

மரணத்தைக் குறித்து என்றுமே நான் பயந்ததில்லை. ஆதலால் எதையும் எதிர்க்கும் துணிச்சலோடு நான் முன்னேறினேன். என்னைப் பின்தொடர்ந்து காலடி ஓசை நெருக்கமாக கேட்ட மறுநொடியே தடலாடியாகத் திரும்பி அந்த உருவத்தைக் கையும் களவுமாகப் பிடித்துக் கொண்டேன்.

எல்லாமே சில வினாடி பொழுதில் நிகழ்ந்துவிட, நான் வியந்து போனேன். என் கைகளுக்குள் அப்போது சிக்கியது காட்டு மனிதன் அல்ல. ஓர் இளம் பெண்!

என் நெற்றியிலிருந்த டார்ச் வெளிச்சம் அவள் முகத்தின் மீது விழுந்தது. ஒளி பொருந்திய காந்த சக்திகள் மின்னும் கண்கள் அவை. மீள முடியாமல் என்னை ஈர்த்துக் கட்டிப்போட்டது. அவள் என் கைகளில் கட்டுண்டாளா அல்லது நான் அவள் விழிகளில் சிக்குண்டேனா?! எனக்கு சொல்லத் தெரியவில்லை.

வாழ்கையில் நான் எப்போதுமே இப்படி ஒரு சூழ்நிலையை அனுபவித்ததே இல்லை. முதல் முறையாகப் ஒரு பெண்ணைப் பார்த்த நொடிபொழுதில் என் உணர்வுகள் சிலிர்த்துக் கொண்டன.

என் தேவைகள் தேடல்கள் யாவும் மறந்து போயின. அல்லது மறக்கடிக்கப்பட்டன. இத்தனை அழகம்சம் கொண்ட ஒரு பெண்ணா?

விழி எடுக்காமல் அவளையே நான் மயங்கி பார்த்து கொண்டிருக்கும் போது மின்சாரப் பாய்ந்தது போல் ஒரு உணர்வு. ஆயிரம் ஆயிரம் சூரிய ஒளி என் விழிகள் முன் வீசியது போல் ஒரு மின்னல் வெட்டியது.

அடுத்த நொடியே அந்தப் பெண் என் கைகளிலிருந்து மாயமாகிப் போனாள்.

என் பிடித் தளரவில்லை. அவள் என் பிடியை எதிர்த்து கொள்ளவுமில்லை. ஆனால் மாய வித்தைப் போல் அவள் என் கண்களிலிருந்து மட்டுமல்ல. என் கைப்பிடியிலிருந்தும் காணாமல் போனாள்.

காற்றோடு கரைந்து போனாள். நம்ப முடியாமல் என் கண்களை நான் பலமுறைக் கசக்கிச் சுற்றிலும் பார்த்தேன். நிச்சயமாக அது என் கனவோ கற்பனையோ அல்ல. அப்படியொன்று நிகழ்ந்தது. ஆனால் அதெப்படி சாத்தியம் என்று எனக்குப் புரியவில்லை.

You cannot copy content