You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Monisha's AOA - 4

Quote

4

உயிரிகள் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்வதும் மாறுவதும் பரிணாமம்(evolution)

ஆனால் மனித ஆதிக்கம் சூழ்நிலையை தனக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கொள்கிறது புரட்சி( revolution)

காலச்சுழற்சிகளில் இடைவிடாமல் இயங்கி கொண்டிருக்கும் இந்தப் பூமியில், அதன் தகவமைப்பிற்கு ஏற்ப வாழும் உயிரிகள் படிப்படியாகத் தங்களை மாற்றி கொள்வதற்கு பெயர்தான் பரிணாமம்.

எந்த உயிரினங்களின் மரபணுக்களும் மொத்தமாக அழிவு நிலையை எய்து   விடுவதில்லை. அது அந்தச் சூழ்நிலை மாற்றத்திற்கு ஏற்ப தன்னைச் செதுக்கிக் கொள்கிறது. புது உருவத்தை அடைகிறது.

அத்தகைய பரிணாமத்தின் படிமங்கள்தான் அந்த அறை முழுக்கவும் காணப்பட்டன. புகைப்படங்களாக ஓவியங்களாக மட்டுமில்லாமல், சில விசித்திரமான பிராணிகளின் எலும்பு கூடுகளாகக் கூட அவை இருந்தன.

நீள வாக்கிலான ஒரு மண்டை ஓடு அதிபயங்கரமான கூரிய பற்களோடு ஒரு குச்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே உச்சபட்ச அச்சத்தில் நடந்த வந்த சத்யாவிற்கு நுழைந்த மாத்திரித்தில் அந்த எலும்பு கூடு முகமன் கூறினால் எப்படியிருக்கும்?

அவன் அரண்டு மிரண்டு, “ஐயோ! அம்மா” என்று கத்தி கதற, அந்த அறையின் மூலை முடுக்குகளில் எல்லாம் அவன் சத்தம் எதிரொலித்ததில் ஷெர்லியும் கூட நடுங்கிவிட்டாள்.

 அவள் பதறித் திரும்பும் போது அவன் மல்லாக்காகத் தரையில் சரிந்து கிடந்தான்.

“சத்யா... ஏன் இப்படி?” என்றவள் கேட்க இடுப்பைப் பிடித்துக் கொண்டு சிரமப்பட்டு எழுந்து நின்ற சத்யா அந்த பயங்கரமான எலும்பு கூட்டைக் காண்பிக்க,

“ஐயோ! சத்யா... அது வெறும் ஸ்பெசிமன்... ஜஸ்ட் அ மாடல்... அதுக்கு போயா இப்படி அலறுனீங்க” என்று அவள் வினவ,

அவன் இதயத்தின் மீது கை வைத்து மூச்சு வாங்கிக் கொண்டு எழுந்து அதன் அருகே சென்று பார்த்தான்.

அவள் பின்னோடு வந்து அவன் தோளில் கை வைத்து, “அது அபாட்டோசரஸ் மாடல்” என்றாள்.

“என்னது சப்போர்ட்டா...?!”

“நோ… அபாட்டோசரஸ்...பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி வடஅமெரிக்கா காடுகளில் வாழ்ந்த உயிரினம்... டைனோசரஸ் இனம்“ என்றாள்.

அவன் முகத்தில் ஈயாடவில்லை. அவள் சொல்வதை பயத்தோடுக் கேட்டிருந்தவனுக்கு அச்சஉணர்வு ஏறிக்கொண்டே இருந்தது.

“அமெரிக்கா மியூசியம்ல இருக்கே...நீங்க பார்த்ததில்ல” என்று ஷெர்லி கேட்டு கொண்டே அவள் முன்னே நடந்து சென்றாள்.

‘நான் எங்க ஊரு செத்த காலேஜ் பக்கமே போனதில்ல... இவ என்னடான்னா அமெரிக்கா மியூசியம் பார்த்தீங்கல்லான்னு கேட்குறா... ஆமா... மியுசியம்ல வைக்க வேண்டியதெல்லாம் இவ ஏன் வீட்டுல வைச்சிருக்கா?’ என்று மைன்ட் வாய்ஸிலேயே பேசிக் கொண்டிருந்தவன் அதற்கு மேல் அவளைப் பின்தொடர தைரியமில்லாமல் தேங்கி நின்றான்.

திரும்பி செல்லலாம் என்று பார்த்தால் அந்த அபாடோசரஸ் கோர பசியோடு விழுங்குவது போல் அவனையே வைத்து கண்வாங்காமல் அதிபயங்கரமாகப் பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் அபாட்டோசரஸோ தாவரங்களை மட்டுமே உண்ணும் சாகபட்சிணி வகை என்று சத்யாவிற்கு தெரியாது.

அவனோ அந்த உயிரினத்தின் வடிவமைப்பைப் பார்த்து பயந்து நடுங்கிக் கொண்டு நிற்க, ஷெர்லி பாட்டுக்கு அவன் நிலைமையறியாமல் பேசிக் கொண்டே முன்னே நடந்தாள்.

 அவன் காலடி சத்தம் கேட்காமல் போகத் திரும்பி பார்த்தவள், “சத்யா வாங்க” என்றழைக்க,

‘இவ விடமாட்டபோலயே... ஏன்டா இவளைப் பத்திக் கேட்டோம்’ என்றாகிவிட்டது அவனுக்கு. வேறு வழியில்லை அவள் பின்னோடு நடந்து சென்றுவிடுவோம் என்று எண்ணிக் கொண்டு அவன் நடக்க,

அப்போது அங்கிருந்த கண்ணாடிக்குள் படுத்து கிடந்த நான்கடி நீளத்திலிருந்த ஒரு ராட்சத மீனினத்தின் வடிவத்தைப் பார்த்து அரண்டு பின்வாங்கியவன், “ச்சே... இதுவும் மாடலாத்தான் இருக்கும்” என்று தனக்குத் தானே சொல்லி கொள்ளும் போதே,

“நோ... அது மாடல் இல்ல” என்று சொல்லியபடி அவனைத் திரும்பி பார்த்தாள்.

“அப்படின்னா இது செத்த மீனா? எப்போ செத்துச்சோ?” என்று பயத்தோடு விலகி நின்று கொண்டான். சிறுவயதிலிருந்தே இது போன்ற விஷயங்களைப் பார்த்தாலே அவன் மிரண்டு பல காத தூரம் ஓடுவான். ஆனால் இப்போது இத்தனை அருகாமையில் இப்படி ஒரு காட்சியைப் பார்த்தால்?

அவன் தொண்டைக்கும் வயிற்றிக்கும் இடையில் ஏதோ உருண்டது.

அவன் முகம் வெளறி போக ஷெர்லி, “அது ஃபாஸில்ஸ் சத்யா... இது அப்படியே ஐஸ்ல ஃப்ரோஸனாகி இறந்திருக்கு... ஸோ அதோட அவுட்டர் பாடி டீகம்போஸ் ஆகவே இல்ல... இப்படி நடக்கிறது ரேர் கேஸ்... இயற்கையே நமக்கு இப்படி ஒரு மாடலை உருவாக்கி தந்திருக்கு.... இது ரொம்ப அரிதான மீன் வகை?” என்று விளக்கம் தந்தாள்.

‘எனக்கு சாப்பிடுற மீன் வகைங்கதான் தெரியும்’ என்று சத்யா மனதிற்குள் புலம்பிக் கொண்டு வர,

“இது கடலையும் வாழ்ந்து நிலத்துலயும் வாழ்ந்த அரிதான வகை... அதோட கில்ஸ் எல்லாம் அப்படிதான் இருக்காம்” என்று அவனுக்கு ஆர்வமாக விளக்கமளித்துக் கொண்டிருந்தாள்.

“ஃபாஸில்ஸ்ல நிறைய வகை இருக்கு... இது கூட ரேர் கேஸ்” என்று ஒரு தரையில் ஊறும் பல்லி இனம் போன்ற ஒரு எலும்பை அவள் கையிலெடுத்து காண்பித்தாள்.

“உவேக்... அதைக் கீழ்ழ்ழ்ழேவை ஷெர்லி... பார்க்கவே சகிக்கல... அருவருப்பா இருக்கு” என்று சத்யா தள்ளி நின்று கொண்டான்.

ஷெர்லி சாதாரணமாக அதனை அவனிடம் நீட்டி, “நான்தான் சொன்னேனே... இது ஸ்கெலிட்டன் இல்ல... பாஸில்ஸ்னு... அதுவும் இது ஸ்டோனா மாறிடுச்சு... இந்த விலங்கினம் மணுக்குள்ள ஆழமா புதைஞ்சு வருஷங்கள் ஆக ஆக... நிறைய ரசாயன மாற்றங்களால இது அதோட பாடி ஸ்ட்ரக்சர்லையே ஸ்டோனா மாறிடும்” என்றாள்.

அவன் வியப்போடு அதனைப் பார்க்க அவள் சிரித்துக் கொண்டே, “தொட்டுப் பாருங்க சத்யா” என்றாள்.

“வேண்டவே வேண்டாம்... என்னை விட்டுடுங்க... நான் போறேன்” என்றவன் சொல்லி திரும்பி நடக்க,

“போறீங்களா? அப்போ நான் எப்படி உங்க தமிழ் பொண்ணுங்க மாதிரியே இருக்கேன்னு நீங்க தெரிஞ்சிக்க வேண்டாமா?” என்று அவள் கேட்க அவன் அசையாமல் நின்றான்.

“என் கிரேன்ட் மா போட்டோ பாருங்க... அப்போ உங்களுக்கு புரியும்” என்று அவள் சொன்ன நொடி சத்யா, “எங்கே?” என்று ஆவல் பொங்க கேட்டான்.

அவள் அந்த அறையின் இன்னும் கொஞ்சம் உள்ளே நுழைய நிறைய புகைப்படங்கள் இருந்தன. அவை எல்லாவற்றிலும் ஒரு ஆறு ஐந்து பேர் கொண்ட குழு சில ஜீவராசிகளின் எலும்புக் கூடுகளை வைத்து கொண்டு சாகசம் செய்தது போல் போஸ் கொடுத்தபடி நின்றிருந்தனர்.

இன்னும் சில படங்களில் இயற்கை காட்சிகளினூடே தனியாக ஒரு நபர் நின்றிருந்தார். ஷெர்லி அந்தப் படத்திலிருந்த நபரைச் சுட்டிக்காட்டி,

“என்னோட கிரேன்ட பா... கிறிஸ்டோபர் எட்வர்ஸ்... நேச்சரலிஸ்ட்... அன் ஜியாலஜிஸ்ட்” என்றதும் அவரின் படத்தை சத்யா வியப்பாகப் பார்த்திருந்தான்.

உயரமாகவும் கம்பீரமாகவும் அனைத்து படத்திலும் தனித்துவமாகக் காட்சியளித்து கொண்டிருந்த அவரின் முகத்தில் தேஜஸ் நிரம்பியிருந்தது.  இளமையோடு மிளிரிய அவரின் கட்டுடலான தேகத்தை சத்யா புருவங்களை உயர்த்தி வியப்பாகப் பார்த்தான்.

அப்போது ஷெர்லி அதிலிருந்த வேறொரு படத்தை அவனிடம் சுட்டிக்காட்டினாள். “இத பாருங்க சத்யா” என்றதும் அவன் திரும்ப, அதில் நிறைய மலைவாழ் மக்களோடு கிறிஸ்டோபர் தனித்துவமாகவும் உயரமாகவும் தெரிந்தார். அந்த மலைவாழ் மக்களின் தோற்றம் உடையெல்லாம் பார்க்கும் போது அவனுக்கு நன்றாகவே தெரிந்தது. அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் என்று.

அவன் அதனை அவளிடம் கேட்க எண்ணும் போதே அவள் பேசத் தொடங்கினாள்.

“ஆப்ரிக்காவில ரிசர்ச் பண்ணும்போது அங்கே இருக்கிறது போலவே மண் புழு வகை சவுத் ஏஸியால இருக்குன்னு தெரிய வந்துச்சு... மண்புழுக்கள் கடல் தாண்டிச் செல்ல வாய்ப்பே இல்ல... ஒரே மாதிரியான மண்புழு வகைகள் அத்தனை ஆயிரம் மைல்கள் தாண்டி இரண்டு வெவ்வேறான கண்டங்களில் இருக்கவும் முடியாது...

அப்பதான் ஒரு விஷயம் நிரூபணம் ஆச்சு... பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி ஒரு பெரியளவிலான நிலபரப்பு ஆப்ரிக்கா சவுத் ஏஸியாவுக்கு இடையில கடலுக்கு அடில மூழ்கியிருக்கு... அதைப் பத்தி ஒரு டீடைல் ரிசர்ச் பண்ணனும்னு அம்பது வருஷத்துக்கு முன்னாடி இந்தியா போயிருந்தார் என் கிரேன்ட் பா...

அப்போ அவருக்கு ஏஜ்ஃபார்ட்டி... அந்த டைம்ல அவரோட தாட்ஸ் முழுக்க ரிசர்ச் ரிசர்ச் ரிசர்ச் மட்டும்தான்... அவருக்கு மேரேஜ்ல எல்லாம் சுத்தமா இண்டரஸ்ட் இல்ல... ஆனா எல்லாமே அப்சைட் டவுனா மாறிடுச்சு... என் கிரேன்ட்மாவைப் பார்த்த பிறகு... அவங்க பேர் செல்லா... பார்த்து பிடிச்சு அங்கேயே கல்யாணமும் பண்ணிக்கிட்டாரு... என் டேட் ஜான்சனும் அங்கேதான் பொறந்தாரு...” என்று அவள் சொல்லிக் கொண்டே அந்த மலைவாழ் மக்களுக்கு இடையில் இருந்த ஒரு பெண்ணைக் காண்பித்தாள்.

பாரம்பரியமான மலைவாழ் மக்கள் உடையில் பார்க்க அந்தப் பெண் அத்தனை அழகாகத் தீட்சண்யமாக இருந்தாள். உயிரம் குறைவாக இருந்த போதும் அந்தக் கூட்டதிற்கு இடையிலும் அந்த பெண்ணின் முகம் தனி ஈர்ப்பைக் கொண்டிருந்தது. ஷெர்லியிடம் இருப்பது போலவே!

ஷெர்லியின் சௌந்தரியமும் ஈர்ப்பும் செல்லாவிடமிருந்துதான் வந்தது போலும் என்றெண்ணி சத்யா அந்தப் படத்தைப் பார்த்து கொண்டே, “இப்போ உங்க கிரேன்ட் மா எங்கே?” என்று கேட்க ஷெர்லி ஆழ்ந்த பெருமூச்செடுத்து,

“ஷி இஸ் நோ மோர்... அவங்க இருந்த ஃபாரஸ்ட் முழுக்க ஃபைரானதுல அங்கே வாழ்ந்த நிறைய பேர் இறந்துட்டாங்க... அந்த டைம்ல என் கிரண்ட பா அங்கே இல்ல... ஒரு ரிசர்ச் சம்பந்தமா வேற ஒரு இடத்துக்குப் போயிருந்தாரு... வந்து பார்த்த போது கிரேண்ட்மாவோட கருகிய உடலைத்தான் பார்க்க முடிஞ்சுது... ஆனா கிரண்ட மா என் டேட்டைக் காப்பாத்திட்டுதான் இறந்து போனாங்க... அப்போ என் டேடுக்கு ஒரு மூணு வயசு இருக்கும்.... அதுக்கப்புறம் என் கிரேன்ட் பா அங்கே இருக்கல... டேடையும் அழைச்சிக்கிட்டு திரும்பி கலிபோர்னியாவுக்கே வந்துட்டாரு... யாரையும் அவர் செகண்ட் மேரேஜ் பண்ணிக்கல” என்று நெகிழ்வாகக் கூறியவளின் விழிகளில் எட்டிப் பார்த்த நீரைத் துடைத்து கொண்டு மேலும் தொடர்ந்தாள்.

“என் டேட் பார்க்க அப்படியே என் கிரேன்ட் பா மாதிரிதான் இருப்பாரு... நான் எப்படியோ என் கிரேன்ட் மா மாதிரி பிறந்திட்டேன்... அதனாலயே என்னவோ நான் என் கிரண்ட் பாவுக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்... எனக்கு டென் இயர்ஸ் இருக்கும் போது அவர் எனக்கு தமிழ் பேசச் சொல்லிக் கொடுத்தாரு... என்னை தமிழ்நாட்டுக்கு கூட்டிட்டு போகணும்னு சொன்னாரு... ஆனா அதுக்குள்ள இதே பேஸ்மென்ட் ரூம்ல சூசைட் அட்டென்ட் பண்ணி இறந்துட்டாரு” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இறந்து கிடந்த அவள் தாத்தாவின் சடலம் அவள் முன்னே காட்சிகளாக வந்து போனது. இன்னும் அவளால் அவரின் இழப்பைத் தாங்கி கொள்ளவே முடியவில்லை.

தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே அவரின் புகைபடங்களைப் பார்த்த அவள் மனம் அவளின் சிறுவயது நினைவுகளில் மூழ்கியது. அவர் தேடிச் சேகரித்த நிறைய தகவல்களையும் அவரின் பயணத்தின் சுவாரசியமான கதைகளையும் கேட்டுத்தான் அவள் வளர்ந்தாள்.

மீண்டும் அந்த நாட்கள் திரும்ப வராதா என்ற ஆதங்கம் அவளை வெகுவாக வேதனைப்படுத்தியது. அப்போது அங்கிருந்த புத்தக அலமாரியின் மீது அவள் பார்வைச் சென்றது.

அங்கிருந்த பெரும்பாலான புத்தகங்கள் அவள் தாத்தா கிறிஸ்டோபர் எட்வர்ஸ் எழுதியவைதான். அந்தப் புத்தகங்கள் யாவும் இயற்கையைப் பற்றிய அரியவகைத் தகவல்களைக் கொண்டிருந்தன.

அதனைப் பார்த்திருந்தவள், இறுதியாக அந்த அலமாரியிலிருந்த ஒரு ஃபைலை எடுத்தாள்.

அந்த முதல் தாளில் ‘டிசேஸ்டர்’ என்று தலைப்பிடப்பட்டிருந்தது. அதுவும் பெரிய ஆங்கில எழுத்துக்களாக அவை எழுதப்பட்டிருக்க, அந்த தாளின் மேல் சில ரத்தத்துளிகள் காய்ந்திருந்தன. அதனை அப்படியே மார்போடு அணைத்து கொண்டாள்.

கிறிஸ்டோபர் கைப்பட எழுதப்பட்ட காகிதங்கள் அவை. அதனை முடிக்காமல் பாதியிலேயே அவர் தன் உயிரைத் துறந்துவிட்டார்.

இதே அறையில் அவரின் வலது மணிக்கட்டில் நரம்புகள் அறுப்பட்டு அவர் இறந்து கிடந்தக் காட்சியை முதலில் பார்த்தது ஷெர்லிதான். அப்போது அவளுக்கு பன்னிரண்டு வயது.

அவளால் அன்று பார்த்தக் காட்சியை எப்போதும் மறக்கவே முடியாது. “கிரேன்ட் பா” என்று குரல் தழுதழுக்க தாள முடியாத துக்கத்தோடு அந்தப் ஃபைலை அணைத்து பிடித்து அவள் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும்போது சட்டென்று ஏதோ நினைவு வந்தவளாக, “சத்யா” என்று திரும்பிப் பார்க்க, அவன் அங்கே இல்லை. எப்போதோ ஓடிவிட்டிருந்தான்.

அவள் அந்த அறையில்தான் தன் தாத்தா தற்கொலை செய்து கொண்டதாகச் சொன்னதைக் கேட்ட நொடி அவன் பீதியில் அங்கிருந்து அவளிடம் கூட சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிட்டான்.

ஷெர்லி தீவிரமாக தன் தாத்தாவின் நினைவுகளில் மூழ்கியிருந்ததால் அவன் சென்றதை அவளும் கவனிக்கவில்லை. “சத்யா” என்று அழைத்து கொண்டே ஏணி அருகே வரவும், அவனை அங்கேயும் காணவில்லை.

அப்போதுதான் அவசரத்தில் அந்தப் ஃபைலைக் கையோடு எடுத்து வந்ததை உணர்ந்து அதனை மீண்டும் திரும்பி வைக்கலாம் என்ற போது அதிலிருந்த தாள்கள் தரையில் சிதறின.

கீழே குனிந்து அந்தத் தாள்களை ஷெர்லி எடுத்து கொண்டிருந்த போது அதிலிருந்த சில வரிகள் அவளைத் துணுக்குற செய்தது.

ஒரு முறை கூட அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை அவள் புரட்டிக் கூடப் பார்த்திருக்கவில்லை. சில நொடி ஸ்தம்பித்தவள், அதன் பின் அந்தப் ஃபைலையும் கையோடு எடுத்து கொண்டு ஏணியில் ஏறி மேலே வந்தாள். முகப்பறையில் வந்து சத்யாவைத் தேடினாள். அவன் அங்கேயும் இல்லை.

வெளியே வந்து பார்த்த போது டேனி மட்டும் தனியாக குரைத்துக் கொண்டிருந்தான். ஷெர்லியைப் பார்த்ததும் டேனி அவளை ஏக்கமாகச் சுற்றி சுற்றி வர, அவனைக் கட்டவிழ்த்து விட்டு தம் கரங்களில் தூக்கிக் கொண்டவள், “சாரி டேனி” என்று பாசமாக அணைத்து கொண்டாள்.

“சத்யா பாவம் டேனி! நீ என்னதான் இருந்தாலும் அப்படி செஞ்சிருக்க கூடாது...ரொம்ப பேட் பாய் ஆயிட்ட” என்றவள் அவனைச் செல்லமாக கடிந்து கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள். 

ஷெர்லியின் மனம் நிம்மதியற்று கிடந்தது. சத்யா சொல்லாமல் சென்றது அவளுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. அதுவும் அவளின் தாத்தா கிறிஸ்டோபரின் இறப்பிற்குப் பிறகு யாரிடமும் இந்தளவு அவள் பேசியதில்லை. ஏன் அவள் குடும்பத்தாரான அவளுடைய பெற்றோர் மற்றும் தங்கையிடம் கூட அவளுக்கு ஒட்டுதல் இல்லை.

ஜான்சன் மற்றும் மியா தம்பதிகளுக்கு ஷெர்லிதான் மூத்த மகள். அவளுக்குப் பிறகு பிறந்தவள் லியா. லியா பார்க்க அப்படியே அவள் பெற்றோர் தோற்றத்தை ஒத்து இருந்தாள். தான் மட்டும் வித்தியாசமாக இருக்கிறோம் என்று ஷெர்லிக்கு ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை எப்போதும் உண்டு.

அது பலரின் விசித்திரமான பார்வையால் அந்த உணர்வு அவளுக்கு இன்னும் அதிகப்படியானது. ஜான்சனும் மியாவும் அவளின் அந்த எண்ணத்தைப் போக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. கிறிஸ்டோபர்தான் நடந்த விஷயங்களை விளக்கி அவளுக்குத் தெளிவாகப் புரிய வைத்தார்.

ஜான்சனும் மியாவும் வாஷிங்கடனில் இருந்தனர். ஷெர்லி மட்டும் தன் தாத்தாவோடு கலிபோர்னியாவில் இப்போதிருக்கும் வீட்டில் தங்கியிருந்தாள். அவர் கண்களின் மூலமாகத்தான் அவள் உலகத்தையே பார்த்தாள் என்று சொல்ல வேண்டும். புதுப்புது விஷயங்களைத் தகவல்களைத் தெரிந்து கொண்டாள். தமிழ் பேசவும் அவர்தான் அவளுக்குக் கற்றுக் கொடுத்தார். அப்போதே ஓரளவு அவள் தமிழ் பேசத் தெரிந்து கொண்டாள்.

அடிக்கடி தமிழ்நாட்டிற்குப் போவது பற்றி அவர் அவளிடம் பேசிக் கொண்டிருந்தார். அந்த வார்த்தைகள் இயல்பாகவே அங்கே செல்ல வேண்டுமென்ற ஆர்வத்தை ஷெர்லியின் மனதில் உருவாக்கியிருந்தது.

தன் தாத்தாவோடு இருந்த காலங்கள்தான் அவளுக்குப் பொற்காலங்கள். ஆனால் திடீரென்று கிறிஸ்டோபர் தற்கொலை செய்து கொண்டதால் ஷெர்லி மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானாள். தன் தந்தையோடு வாஷிங்க்டன் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதை அவள் கொஞ்சமும் விரும்பவில்லை.

யாரிடமும் அதிகம் பேசாமல் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டாள். தன் தாத்தாவின் நினைவையன்றி வேறு அழகிய நினைவுகள் என்று அவள் வாழ்கையில் எதுவும் கிடையாது. கல்லூரி முடித்த மாத்திரத்தில் அவள் குடும்பத்தை விட்டு தனியாக வந்து கலிபோர்னியாவில் உள்ள அவள் தாத்தாவின் வீட்டிற்கே மீண்டும் குடிபெயர்ந்துவிட்டாள்.

ஜான்சனும் மியாவும் அவளிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் வார்த்தைகளை அவள் கேட்கவில்லை. பிடிவாதமாக இருந்தாள். அதற்கு மேல் அவள் சுதந்தரத்தில் தலையிடும் உரிமை அவர்களுக்கும் இல்லை.

எப்போதாவது குடும்பத்தில் நடக்கும் விருந்து போன்றவற்றிற்கு ஜான்சன் அழைத்தால் அவள் அதில் கலந்து கொள்வாள். அவள் தங்கை லியா கல்லூரி படிக்கும் போதே ஒருவனைக் காதலித்து மணமும் செய்து கொண்டாள். ஷெர்லிக்கும் கல்லூரி படித்த காலங்கள் தொடங்கி இன்று வரை நிறைய ப்ரப்போஸல்கள் வந்தன. அவளுக்கு அதில் எல்லாம் விருப்பமோ ஆர்வமோ இல்லை என்பதைவிட அவள் எண்ணமும் எதிர்பார்ப்பும் முற்றிலும் வேறாக இருந்தது.

‘நிச்சயமாக நீயும் என்னை போல் உன்னுடைய சிறந்த துணையை தமிழ்நாட்டில்தான் சந்திக்க போகிறாய்’ என்று கிறிஸ்டோபர் ஒருமுறை அவளிடம் கூறியிருந்தார். அதனை அவர் விளையாட்டாகச் சொன்னாரோ அல்லது உண்மையாகவே சொன்னாரோ?!

இத்தனை வருடத்திற்கு பிறகும் அந்த வார்த்தைகளை அவள் ஆழமாக நம்பிக் கொண்டிருக்கிறாள். சத்யாவைப் பார்த்த போது அந்த நம்பிக்கை இன்னும் அதிகமானது. ஆனால் சத்யாவிடம் நட்பு என்ற எல்லையைத் தாண்டி வேறு எந்த எண்ணமும் அவளுக்கு ஏற்படவில்லை.

இருப்பினும் தமிழ் நாட்டிற்கு செல்ல அவன் உதவி தனக்கு பயன்படும் என்று எண்ணினாள். அதற்காகத்தான் அவனிடம் அவள் இத்தனை நாட்கள் பழகியதே.

அவளின் இப்போதைய எதிர்பார்ப்பு கனவு எல்லாம் தன் நாயகனை தமிழ்நாட்டில் எங்காவது சந்திப்போம் என்பதுதான். அதில் தன் தாத்தாவின் சொற்கள் என்றுமே பொய்யாகாது என்ற ஆழமான நம்பிக்கையும் இருந்தது. ஆனால் அவளின் எதிர்ப்பார்ப்பிற்கு முற்றிலும் பொய்யாகும் விதமாக அந்த சம்பவம் அரங்கேறியது.

கடைசியில் தன் மரணம்தான் தமிழ்நாட்டில் நிகழப்போகிறது என்று அவள் உள்ளம் அந்தச் சீறி பாயும் அலைகளுக்குள் சிக்குண்டு படபடத்தது. நீச்சல் தெரிந்த போதும் ஷெர்லியால் அந்த அலைகளின் உக்கிரத்திற்கு முன்னால் தன்னைத் தற்காத்து கொள்ளவே முடியவில்லை.

அவள் கடலுக்குள் சிக்கிக் கொண்ட இடம் இயல்பை விட அதிக ஆழமாக இருந்ததால் அவளின் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. மீண்டும் மீண்டும் அந்த அலைகள் அவளைக் கடலின் ஆழத்தில் அழுத்திக் கொண்டிருந்தது.

ஆனால் போராடும் எண்ணத்தை அவள் கைவிடவில்லை. திரும்பத் திரும்ப எப்படியாவது அந்தச் சீறிப் பாயும் அலைகளை முறியடித்துக் அவள் மேலே வர தன்னால் இயன்ற முயற்சிகளைச் செய்து கொண்டே, “ஹெல்ப்... ஹெல்ப்... ஹெல்ப்...” என்று சக்திகளைத் திரட்டிக் கத்தவும் செய்தாள்.

ஆனால் அந்த சத்தம் யாருக்கும் எட்ட வாய்பே இல்லாதளவுக்கு கடலின் கூச்சல் அதிபயங்கரமாக இருந்தது. அவளுடைய சக்தியெல்லாம் வடிந்து களைப்புறும் போது ஆபத்பாந்தவன் போல இரு கரங்கள் அவளைக் கரைக்கு இழுத்து வந்து சேர்த்தன.

You cannot copy content