You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Monisha's VET - 17

Quote

17

வீரேந்திரன் பேசிவிட்டு வந்த பின் தமிழ் அவள் பிடிவாதத்தை விட்டுப் புறப்பட தயாரானது எல்லோருக்குமே வியப்பாகவும் குழப்பமாகவும் இருந்தது. அதுவும் தேவியும் சந்திராவும் ஆச்சர்யத்தின் விளம்பில் இருந்தனர்.

இருவரும் மணமேடையில் அந்தளவுக்குச் சண்டைப் போட்டிருந்துவிட்டு அறைக்குள் போனதும் அவன் அப்படி என்ன மாயமந்திரம் போட்டான் என்ற எண்ணம் எல்லோருக்குள்ளும் கேள்வியாய் இருக்க, அதனைத் தேவி தமிழிடம் வெளிப்படையாகக் கேட்டும்விட்டாள். ஆனால் தமிழிடம் பதிலேதும் கிடைக்கவில்லை. மாறாய் அளவில்லாத கோபத்தோடு தங்கையை எரிப்பது போல் பார்த்துவிட்டுச் சென்றுவிட்டாள்.

அவளின் மனக்குமுறலை அவள் அப்போதைக்கு யாரிடமும் சொல்லும் மனநிலையில் இல்லை.

மணமக்களுக்கு துணையாக விஜயா, சந்திரா, தேவி மற்றும் ரவி புறப்பட, வீரேந்திரன் காஞ்சிபுரத்தில் கொஞ்சம் வேலை இருப்பதாகச் சொல்லி தனி காரில் தமிழை அழைத்துக் கொண்டு முன்னே சென்றான்.

எல்லோரின் வற்புறுத்தலையும் சகித்துக் கொண்டு அவனுடனே காரில் பயணித்தாள் தமிழ். நீண்ட தூர அந்தப் பயணத்தில் அவர்களுக்கு கிடைத்த அந்த தனிமையை வீரேநிந்திரன் பயன்படுத்திக் கொள்ள நினைத்தான்.

அவளைச் சம்மதிக்க வைக்கத் தான் கையாண்ட முறை தவறென்று அவளிடம் மன்னிப்பு கேட்கவும் அதேநேரம் அவளிடம் மனம் விட்டு பேசவும் அவன் எண்ணியிருக்க, அவளோ கொஞ்சமும் அவனுக்கு செவிமடுக்கவில்லை.

"நான் உன்கிட்ட பேசணும் தமிழ்… ஒரே நிமிஷம் நான் சொல்றதைப் பொறுமையா கேளு" என்று அவன் நிதானமாகப் பேச ஆரம்பிக்க, அவன் அவன் சொல்வதை காது கொடுத்து கூட கேட்க விரும்பாமல் அழுத்தமாய் காதை மூடிக் கொண்டாள்.

அந்த நிலைமையில் அவன் என்னதான் அவன் தன் கோபத்தைக் கட்டுப்படுத்த நினைத்தாலும் அவளின் செயல் இன்னும் அவனை அதிகமாய் கோபப்படுத்திக் கொண்டேதான் இருந்தது.

"நீ அடங்கவே மாட்டியா?!" என்றவன் கேட்க,

"நீங்க ரொம்ப அடங்கிறவரோ?!" என்று அவள் பதில் கேள்வி கேட்டாள். அவனுக்குக் கடுப்பேறியது.

"அம்மா தாயே... நான் எதுவும் பேசல... என்னை விட்டிரு" என்றவன் பின்வாங்கி கொண்டான். அவனுக்குத் தெரியும். அதற்கு மேல் பேச்சுக் கொடுத்தால் தன் நிலைமை அவ்வளவுதான் என!

அவளும் தேவையில்லாமல் வாக்குவாதத்தை வளர்க்க விரும்பாமல் அமர்ந்திருந்த இருக்கையில் பின்புறம் சாய்ந்தபடி விழிகளை மூடிக்கொண்டாள்.

அத்தோடு இல்லாமல் தன் புடவை முந்தானையை இழுத்து முகத்தையும் முழுவதுமாய் மூடிக் கொள்ள வீரேந்திரனுக்கு கோபம் எழுந்தது.

"ஆமா... இப்ப எதுக்கு மூஞ்சை முழுசா மூடிக்கிட்டு தூங்கிற?" என்று கேட்கவும்,

"ஏன்னு உங்களுக்குத் தெரியாதா?!" என்று சொல்லிவிட்டு அவள் குத்தலாகப் பார்த்த பார்வையில் வேதனைக் கொண்டவன் விடாமல்,

"ஆமா... இவ பெரிய ரதி... அப்படியே இவ முகத்தைப் பார்க்கத்தான் நாங்க ஏங்கிட்டிருக்கமாக்கும்?!" என்று தன் வெறுப்பாய் சொல்லவும் அவள் அலட்சியமாக ,

"நான் ரதின்னு உங்ககிட்ட சொன்னேனா? இப்ப நான் முகத்தை மூடிகிட்டா உங்களுக்கு என்ன? நீங்க வண்டி ஓட்டுற வேலையை மட்டும் பாருங்க... நான் தூங்கப் போறேன்" என்று பதிலடிக் கொடுத்துவிட்டு அவள் தம் இமைகளை மூடிக் கொண்டாள்.

"உன்னை எல்லாம் அப்படியே கட்டிக் கொண்டு போய் கடலில் தூக்கிப் போட்டிரணும்டி" என்று அவன் கோபவேசமாய் கூற தமிழ் விழிகளை மூடியபடியே,

"கடல் இங்கதானே இருக்கு... உங்க கூட வாழறதை விட அது எவ்வளவோ பெட்டர்... ப்ளீஸ் டூ இட்" என்றவள் அலட்சியமாய் உரைத்தாள்.

‘இவ கூட எல்லாம் மனுஷன் பேச முடியுமா?’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு அடுத்த வார்த்தைப் பேசாமல் உதடுகளை அழுத்தமாய் மூடிக் கொண்டான்.

அவளோ இரண்டு மூன்று நாட்களாய் சரியாய் உறங்காத காரணத்தால் விழிகள் மூடிய சில நிமடங்களில் ஆழ்ந்த உறக்கத்திற்குள் சென்றாள். அவனோ ஜம்பமாய் பேசிவிட்டானே தவிர அவள் முகத்தைப் பார்க்க கூட முடியாமல் அப்படி முந்தானையில் மூடியிருப்பது ஏக்கமாய் இருந்தது.

அவளுடன் மனம்விட்டு பேசிவிடலாம் என்ற அவனின் எதிர்பார்ப்புகள் எல்லாவற்றையும் அவளின் பிடிவாதம் உடைத்துவிட, அத்தனை தூரப் பயணமும் வீணாய் போகிறதே என்று எண்ணித் தவிப்புற்றவன்,

அவள் உறங்கிவிட்டதை உறுதிப் படுத்திவிட்டு மெல்ல அவள் முந்தானையை விலக்கி மூடிக்கிடந்த அவளின் வசீகரமான முகத்தை தன் விழிகளுக்குள் சிறையெடுத்தான்.

அவளின் உணர்ச்சிகள் துடைத்த முகமே அவள் அயர்ந்து தூங்குகிறாள் என்பதை உணர்த்தியது.

அவன் விரும்பியே வீழ்ந்த அவள் விழியின் சுரங்கம் அப்போது வழியின்றி மூடிக் கிடக்க,

அவன் தனக்குத்தானே...

ஏன் அவள் மீது தான் இந்தளவுக்கு விருப்பம் கொண்டிருக்கிறோம்? ஏன் தன்னை அவள் இந்தளவுக்கு ஈர்க்கிறாள்? அவள் தன்னை அவமானப்படுத்திக் கொண்டே இருக்க அப்போதும் தன் மனம் அவளையே நாடுவதேன்? என வரிசையாய் கேள்வி எழுப்ப

பின் அதற்கான விடையை அவனே கண்டறிந்தவாறு 'சேலஞ்ச்னா இந்த வீருக்கு ரொம்ப பிடிக்கும்... சேலிஞ்சிங்கான கேஸை சால்வ் பண்ண இன்னும் ரொம்ப பிடிக்கும்... நீயும் அப்படிதான் தமிழச்சி... கரெக்டா சொல்லனும்னா அடங்காத குதிரைடி நீ... உன்னோட அந்த ஆட்டிட்டியூட்தான் என்னை உன்கிட்ட இழுக்குது... உன்னை அடக்கி என் கட்டுபாட்டுல கொண்டு வருவதில்தான்... சுவரஸ்யமே இருக்கு' என்றான்.

அத்தகைய பல சுவாரஸ்யங்களை அவனின் தமிழச்சி அவனுக்காக அளிக்கக் காத்திருந்தாள். இன்னும் ஓரிரு நொடிகளில் அப்படி ஒரு நிகழ்வு நடக்கவும் போகிறது.

தமிழ் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தது மட்டுமே வீரேந்திரனின் பார்வைக்குப் புலப்பட்டது. ஆனால் அவள் அப்போது உறக்கத்தின் வழியே தனக்கே உரியக் கனவுலகிற்குள் சஞ்சரித்திருந்தாள் என்பதை அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

தமிழின் அபாரமான ஞாபக சக்தி உறக்கத்தின் போது விழித்துக் கொண்ட அவளின் பழைய நினைவுகளைக் காட்சியாய் கனவுகள் வழியே கொண்டு சேர்க்க, இம்முறை தமிழ் அவளின் சிறுவயதில் நடந்த ஒரு மோசமான நிகழ்வைக் கனவாய் கண்டு கொண்டிருந்தாள்.

அலைகள் எழும்பி எழும்பி அந்தச் சிறு கப்பல் ஆட்டம் கண்டபடி சென்று கொண்டிருந்தது. அன்று தமிழுக்கு பிறந்தநாள்.

அவள் விரும்பி ஆசைப்பட்டுக் கேட்டதால் சிம்மவர்மன் அவளின் பிறந்தநாளை சிறு கப்பலில் ஏற்பாடு செய்தார். முக்கியமான உறவினர்களும் நண்பர்களும் அவளை வாழ்த்த வந்திருந்தனர்.

தமிழுக்கு பன்னிரண்டு வயதிருக்கும். ரவி அவளை விடவும் இரண்டு வயது சிறியவன்.

விஜயாவிற்கு அத்தனை பெரிதாக இப்போது இவளுக்குப் பிறந்தநாள் கொண்டாட்டம் தேவையா என்று கடுப்பானது. ரவியிடம் உனக்காக இப்படி எல்லாம் செய்வார்களா என்று கேட்டு அவனுக்குள் பொறாமைத் தீயை மூட்டினாள். அவன் உள்ளூர பற்றி எரிந்தான்.

அந்தச் சமயம் பார்த்து தமிழ் பெரிய லாங்க் ஸ்கர்ட் அணிந்து கொண்டு அவள் பெண்மைக்கும் குழந்தைத்தன்மைக்கும் இடையிலான ஒரு நடுநிலையான தோற்றத்தோடு, எல்லோருக்கும் இனிப்பை வழங்கிக் கொண்டிருந்தாள்.

இறுதியாய் ரவியைப் பார்த்து ஆசையாய் அவனிடம் இனிப்புகளை நீட்டிய போது அவன் அதனை அவசரமாய் பிடுங்கி கடலுக்குள் தூக்கிப் போட்டுவிட, "ஏன்டா இப்படி பண்ண?" என்று அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினாள்.

"நான் அப்படிதான்டி பண்ணுவேன்" என்றவன் திமிராகச் சொல்லவும்,

"இருடா... தாத்தாகிட்ட சொல்றேன்" என்று சொல்லி அவள் செல்ல பார்க்க அவர்களுக்குள் சண்டை முற்றியது.

அங்கிருந்தவர்கள் யாரும் அவர்களுக்குள் நடந்து கொண்டிருக்கும் அந்தச் சண்டையைக் கவனிக்கவில்லை. அவர்களுக்கு இடையில் நடந்த அந்த பெரும் போராட்டத்தில் தமிழை ரவி கொஞ்சம் ஆவேசமாக தள்ளிவிட அவள் சமுத்திரத்தில், "தாத்தாதாதாதா" என்று கத்தியபடி விழுந்தாள்.

இந்த நினைவுகளோடு காரில் அமைதியே உருவமாய் உறங்கிக் கொண்டிருந்தவள் எழுந்து சத்தமாய் உயிர் போவது போல, "தாத்தாதாதா" என்று கத்திவிடவும் அவன் மிரண்டே போனான். என்னவோ ஏதோ என்று சடாரென பிரேக்கின் மீது காலை வைத்து அழுத்தினான்.

கனவு காண்பதும் கத்துவதும் அவளுக்குப் புதிதல்ல எனினும் வீரேந்திரனுக்கு அவள் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

"உனக்கென்ன பைத்தியமா? எதுக்கு இப்ப உயிரே போற மாதிரி கத்தின?" என்று அவன் கேட்கவும்தான் அவள் சுயநினைவு பெற்றாள். ஒவ்வொரு முறையும் கனவு கண்டபின் அந்தக் கனவு வந்ததற்கான காரணத்தை யோசிப்பது அவளுக்கு வழக்கம்.

அப்போதுதான் அவள் தூங்குவதற்கு முன் வீரேந்திரன் 'உன்னைக் கட்டி கடலில் தூக்கிப் போடணும்னு' சொன்னது நினைவில் எழும்ப அவனை நோக்கி பார்வையைக் கோபமாய் திருப்பினாள்.

அவன் அப்போது அவள் ஏதேனும் மோசமான கனவு கண்டு கத்தியிருக்க கூடும் என தனக்குத்தானே யூகித்து தண்ணீர் பாட்டிலைத் திறந்து அவளிடம் நீட்டினான்.

அப்போது அவளோ கார் நின்றிருந்த இடத்தைக் கவனித்தாள். உடனடியாய் எதை பற்றியும் யோசிக்காமல் அவசரமாய் காரிலிருந்து இறங்கி நடந்தாள்.

"ஏ... எங்கடி இறங்கிற?!" என்றவன் கேட்கவும் அவள் பதில் சொல்லாமல் நடந்து சென்று கொண்டே இருந்தாள். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. தலையைப் பிய்த்து கொள்ளலாம் போலிருந்தது.

'இவளுக்குப் பைத்தியம்தான் பிடிச்சிருக்கு' என்று எண்ணியவன் தண்ணீர் பாட்டிலை மூடி ஓரம் வைத்துவிட்டு கதவைத் திறந்து கொண்டு சலிப்போடு வெளியே வர, அவன் பார்த்தக் காட்சி அவன் மனதை உலுக்கிவிட்டது.

அவன் நின்று கொண்டிருப்பது கடற்கரை ஓர சாலையில். அவளோ மணற்பரப்பில் இறங்கி சமுத்திரத்தை நோக்கி வேகமாய் நடந்து கொண்டிருந்தாள். அவன் மூளை அர்த்தமில்லாமல் யோசிக்கத் தொடங்கியது.

'அப்படி இருக்குமா?!' என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டவன்,

அவள் எதையும் செய்யும் துணிந்தவள்தான் என்று அவன் மூளை எச்சரிக்கவும், "தமிழச்சி நில்லு" என்று பதட்டமாய் அழைத்துக் கொண்டே விரைவாய் நடக்க அதற்குள்ளாக அவள் வெகுதூரம் சென்றிருந்தாள்.

அவள் அலைகளுக்கு அருகில் செல்ல அவன் கால்கள் நடப்பதற்குப் பதிலாய் ஓடத் தொடங்கின.

ஒரு புறம் தன் மொத்த சக்தியையும் பயன்படுத்தி, "தமிழ்ழ்ழ்ழ்" என்று சத்தமாய் அவன் கத்தி அழைக்க, அவள் திரும்பவேயில்லை.

அவளுக்கு நிச்சயமாய் அவன் குரல் கேட்க வாய்ப்பேயில்லை. ஏனெனில் கடலின் அருகாமையில் அலைகளின் ஓசையே ஆட்கொண்டிருக்கும்.

அந்த மணற்பரப்பில் ஓடுவது அவனுக்குச் சிரமமாய் இருந்ததெனினும் அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, அவளைப் பற்றி மட்டுமே அவன் சிந்தனையில் நிறுத்தி ஓடினான்.

எத்தனையோ பேரை பெரிய ஆபத்துகளில் இருந்து காக்க ஓடும் போது அசைக்க முடியாத நம்பிக்கையை மட்டுமே சுமக்கும் அவனின் மனம் முதல்முறையாய் அவளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ எனப் பயத்தையும் பதட்டத்தையும் அபரிமிதமாய் நிரப்பியது.

தான் அவளை ரொம்பவும் வேதனைப்படுத்தி விட்டோமோ என எண்ணியவனை, குற்றவுணர்வு ஒருபுறம் ஆட்கொள்ள இன்னொரு புறம் இப்படி ஒரு காரியத்தை அறிவீனமாய் செய்ய துணிகிறாளே என அவள் மீதும் கோபமும் அழுத்தமாய் ஏற்பட்டது.

கடல் அலைகளை அவள் நெருங்கிய அதே தருணத்தில் அவனும் ஓட்டமாய் அவளை நெருங்கி அவள் கரத்தைப் பிடித்து அவன் புறம் வேகமாய் திருப்பினான். அப்போது முழுமையாய் அவனை ஆளுமை செய்தது அவனின் கோபவுணர்வுதான்.

வீரேந்திரன் ஓங்கி ஒரு அறையை அவள் கன்னத்தில் கொடுக்கவும், அவள் அப்படியே அதிர்ந்து நின்றாள். அப்படி ஒரு அடியை அவள் வாழ்நாளில் வாங்கியதேயில்லை. அவனின் இரும்புக்கரத்தினால் அடித்த அடி அவளின் மிருதுவான கன்னத்தையே பெயர்த்துவிட்டதாய் வலி உண்டாகிட ஒரு பக்க காது 'விண் விண்' என்று சத்தம் எழுப்பி சில நொடிகள் செயலிழந்து போனது.

ஆனால் தமிழுக்கு அந்த அதிர்ச்சி ஒரு சில விநாடிகளே நீடிக்க, அதனை உடனடியாக கோபமாய் மாற்றியவள் ஓடி வந்ததால் மூச்சிறைத்து இதயம் படபடக்க நின்றவனின் கன்னத்தில் அவளின் மொத்த சக்தியையும் பயன்படுத்தி அவன் எதிர்பாராத தருணத்தில் அவளுமே திருப்பி அறைந்துவிட்டாள்.

ஆனால் அதுவரை அவன் தன் கணவன் என்ற நினைவோ, உயர்ந்த பதவியில் இருக்கும் போலீஸ்காரன் என்ற நினைவோ, ஏன் குறைந்தபட்சம் அவன் ஒரு ஆண்மகன் என்ற நினைவோ, கூட அவளுக்கு இல்லை.

தன்னைக் காரணமின்றி அடித்துவிட்டான் என்றும் அவன் யார் தன்னை அடிக்க என்று மட்டுமே அவள் மூளை சிந்தித்தது. ஆனால் அவள் அடித்துவிட்ட அடுத்த நொடி அவன் கண்கள் சிவந்து மார்பு புடைத்தது.

அவனின் அந்த உக்கிர கோலத்தைப் பார்த்த பிறகு தான் அவ்விதம் செய்திருக்க கூடாதோ என்று கொஞ்சம் பின்வாங்கினாள்.

அவனுக்கு அந்த அடி வலித்ததோ இல்லையோ அவனின் ஈகோவை அது அழுத்தமாய் தூண்டிவிட உச்சபட்ச கோபத்தின் நிலையை எட்டியவன் அவளை மீண்டும் அறைவதற்கு கை ஓங்க,

சுதாரித்துக் கொண்டவள் விழிகளை மூடி விலகிக் கொண்டபடி, "இப்ப என்னாகிடுச்சுன்னு என்னை அடிக்க வர்றீங்க?!" என்று கேட்க,

அந்த வார்த்தையைக் கேட்டவன் தன் கரத்தைப் பின்வாங்கி அப்படியே இடிப்பில் கை வைத்துக் கொண்டு நின்றுவிட, நல்ல வேளையாக அவனிடமிருந்து இன்னொரு அறையை வாங்காமல் தப்பித்து கொண்டோமா என மெல்ல விழிகளைத் திறந்து பார்த்தாள்.

அவன் அடிக்கவில்லையே ஒழியக் கோபம் குறையவில்லை என்று அவன் முகம் உணர்த்தியது.

அவன் சீற்றத்துடன், "உனக்கு என்னதான்டி பிரச்சனை? ஏன்டி இப்படி மனுஷனை படுத்துற? என் கூட உனக்கு வாழ பிடிக்கலன்னா ஓகே... நோ பிராப்ளம்... நான் உன்னை கம்பெல் பண்ண மாட்டேன்... ஆனா அதுக்காக போய் இப்படி ஒரு முட்டாள்தனமான முடிவை எடுக்கணுமா?!" என்று கேட்டு முடிக்கும் போது கோபம் குறைந்து அவன் வார்த்தையில் வேதனையின் தாக்கமே அதிகமாய் வெளிப்பட்டது.

ஆனால் அவள் காரணம் புரியாமல், "உங்க கூட வாழப் பிடிக்கலன்னு சொன்னது ஓகே... ஏதோ முட்டாள்தனமான முடிவுன்னு சொன்னிங்ளே, அதென்னது?" என்றவள் புருவத்தை உயர்த்தினாள்.

அவன் முகமெல்லாம் வெளுத்துப் போனது. தான்தான் தவறாகப் புரிந்து கொண்டோமோ என்றவன் குழம்பி நிற்க,

"என்னாச்சு ஏசிபி சார்? எனக்கு உங்க கோபத்துக்கும் காரணம் புரியல... உங்க மௌனத்துக்கும் காரணம் புரியல?" என்றாள்.

"முதல்ல நீ ஏன் அப்படி செஞ்சன்னு காரணத்தை சொல்லு?" என்றவன் அமர்த்தலாகக் கேட்க,

"எப்படி செஞ்சேன்... புரியுற மாதிரி சொல்லுங்க" என்றாள்.

"திரும்ப ஒரு அறைவிட்டேனா எல்லாம் புரியும்" என்றான்.

"உங்ககிட்ட போய் பொறுமையா பேசிட்டிருக்கேன் பாருங்க... என்னை சொல்லனும்... சரியான டென்ஷன் பார்ட்டி.. சிடுமூஞ்சி" என்று அவனை நோக்கி அவள் வசைப்பாடவும் அவன் எரிச்சலாகி,

"ஏன்..... இஞ்சி தின்ன குரங்கை விட்டுட்ட... அதையும் சேர்த்துகிறதுதானே" என்றான்.

"ஆமாம் இல்ல... சரியான..." என்றவள் சொல்ல வரும் போதே அவன் முறைக்க அவள் அந்த வார்த்தையைச் சொல்லாமல் அமைதியானாள்.

அவன் தன் நெற்றியைத் தேய்த்தபடிக் குழப்பமாக, "நீ எதுக்கு கார்ல அப்படி கத்தின? ஏன் சொல்லாம கொள்ளாம வேகமா கடலை நோக்கி வந்த?!" என்று கேட்கவும்,

அவள் இயல்பான பார்வையோடு "அது..." என்று ஆரம்பித்தவள் சட்டென்று மேலே பேசாமல் அவன் கேட்ட கேள்வியையும் நடந்த விஷயங்களைக் கோர்த்து பார்த்தாள்.

அப்போது அவனின் கோபத்துக்கான காரணம் விளங்க அவள் அந்த நொடியே குலுங்கி குலுங்கிச் சிரித்தாள். அதுவும் அவனைப் பார்த்து நக்கல் தொனியில்! அவன் முகமெல்லாம் சிவப்பேறியது.

அவள் பிராயத்தனப்பட்டு தன் சிரிப்பை அடக்கிக் கொண்டு, "ஹ்ம்ம்... இப்போ எனக்கு நல்லா புரியுது ஏசிபி சார்... உங்க டென்ஷனுக்கான காரணம்... நான் தற்கொலை பண்ணிக்க போறேன்னு நினைச்சிட்டீங்க இல்ல?" என்று கேட்டுவிட்டு அவள் மீண்டும் சிரிக்க, அவனுக்கு கோபம் பொங்கிக் கொண்டு வந்தாலும் அவன் மௌனமாகவே நின்றான்.

"இல்ல... நான் தெரியாமதான் கேட்கிறேன்... என்னைப் பார்த்தா அவ்வளவு பலவீனமாகவா தெரியுது... அப்படியேன்னாலும் சாகுறளவுக்கு இப்போ என்ன நடந்துச்சு... உங்க லாஜிக்கே புரியலயே... இவ்வளவுதான் உங்க போலீஸ் மூளையா?" என்று கேட்டு அவனை மேலும் அவள் பரிகசிக்க,

'பேசுடி பேசு.. இது உன் டைம்' என்று அவன் உள்ளுர பொறுமிக் கொண்டான். அவளோ இந்த சந்தர்பத்தை விடுவதாக இல்லை.

மீண்டும் அவனை நோக்கி, "ஏன் ஏசிபி சார்? உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேதே கிட்டதட்ட தற்கொலைதானே... இதுல இன்னொரு தடவை வேற நான் தற்கொலை பண்ணிக்கணுமா?! அவ்வளவு நல்லெண்ணமா உங்களுக்கு" என்று கேட்டாளே ஒரு கேள்வி! அவனுடைய பொறுமையெல்லாம் பஞ்சாய் பறந்து போனது.

அவன் சீற்றத்தோடு அவள் அருகில் வந்து அவள் கரத்தைப் பின்புறம் மடக்கி பிடிக்க, "ஐயோ வலிக்குது விடுங்க" என்று அவள் வலியால் கதறினாள்.

"எனக்கும்தான்டி வலிக்குது... நீ பேசிற ஒவ்வொரு வார்த்தையும் வலிக்குது... உனக்கிருக்கிறது நாக்கா இல்ல தேள் கொடுக்கா... அப்படியே கொட்டிக் கொட்டி சாகடிக்கிற" என்றவன் தன் வேதனையைக் கொட்ட,

அவளோ ஓயாமல், "விடுங்க வலிக்குது" என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

“என்னவெல்லாம் பேசிறடி நீ? என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா உனக்கு வாழ்க்கையே லாஸா... அப்புறம் அந்த ரூம்ல என்ன சொன்ன? என்னை கல்யாணம் பண்ணிக்கிறது உனக்கு தண்டனை... இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன சொன்ன? என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டது தற்கொலை பண்ணிக்கிட்ட மாதிரி" என்று சொல்லியவன் தனக்குள் அடக்கி வைத்திருந்த அத்தனை கோபத்தையும் அந்த நொடி மொத்தமாய் அவளிடம் காண்பிக்க, அவள் தன் மடக்கிய கரத்தை மீட்க முயன்றபடி துடித்து கொண்டிருந்தாள்.

மெல்ல அவனே அவள் கரத்தை விடுவித்துவிட்டு, அவளை எகத்தாளமாய் நோக்கி, "ஆமா... கார்ல உட்கார்ந்திட்டிருக்கும் போது நீ என்ன சொன்ன?" என்றவன் கேட்க,

"என்ன சொன்னேன்?" என்று அவள் பதில் கேள்வி கேட்டாள்.

அவன் அவளை நெருங்கி நின்று, "உன்னை கடல்லைத் தூக்கிப் போட்டிருவன்னு சொன்னதுக்கு உன் கூட வாழறதை விட அதுவே பெட்டர்னு சொன்ன இல்ல" என்றவன் உரைக்கும் போதே அவன் முகத்தில் அத்தனை சீற்றம்.

"அது ஏதோ சும்மா" என்றவள் சமாளிக்க முற்பட,

"சும்மாவா... ஆனா நான் சீரியஸா இப்ப உன்கிட்ட சொன்னதை செய்ய போறேன்டி" என்று சொல்லியவன், அவன் எண்ணம் என்னவென்று புரிந்து அவள் சுதாரிக்கும் முன்னரே அவளை தன் இரு கரங்களால் சர்வசாதாரணமாய் தூக்கிக் கொண்டான்.

"அய்யோ... என்னை விடுங்க" என்றவள் கதற,

"விடறேன்டி... உன்னைக் கொண்டு போய் கடல்ல தள்ளிவிடறேன்... நீதானே சொன்ன அதுவே பெட்டர்னு" என்று சொல்லி கடலை நோக்கி அவன் முன்னேற,

"இதெல்லாம் ரொம்ப ஓவர்" என்றவள் அவன் கரத்திலிருந்து வெளியே வர தவிக்க, அவன் குரூரமாய் புன்னகைத்தான்.

அவள் கலவரத்தோடு, "என்னை விடுங்க... நான்தான் சும்மா விளையாட்டுக்கு அப்படி சொன்னேன்னு சொன்ன இல்ல" என்றவள் தவிப்புற்றாள்.

"ஆனா நான் சீர்யஸாதான் சொன்னேன்" என்று சொல்லும் போது அவன் பாதங்கள் கடல் அலைகளை நெருங்கிவிடத் அவள் அச்சத்தோடு,

"உங்களுக்கென்ன பைத்தியமா?" என்று கத்தினாள்.

"பைத்தியம்தான்டி.. உன்னை போய் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் பாரு... பைத்தியம்தான்" என்றவன் கடற்கரையில் தவழ்ந்து சென்ற அலைகளைத் தாண்டி உள்ளே சென்று கொண்டிருந்தான்.

அவன் தீர்க்கமாய் முடிவெடுத்துவிட்டான். தன்னைக் கடலில் தள்ளிவிடத்தான் போகிறான் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது, அவன் கரத்திலிருந்து அவள் தேகம் நழுவுவதை உணர்ந்தவள்,

சிறுவயதில் நடுக்கடலில் விழுந்து உயிருக்காகத் தத்தளித்த அந்தத் தருணத்தை எண்ணிப் பதட்டத்தோடு, "வேண்டாம் ஏசிபி சார்" என்று சொல்லியபடி தன் இரு கரத்தால் அவன் கழுத்தை இறுக்கமாய் பற்றி அணைத்துக் கொண்டாள்.

அவ்வளவு நேரம் கோபத்தோடு அவளைக் கடலில் தூக்கிப் போட எண்ணியவன் இப்போது அவளின் இறுக்கமான அணைப்பில் கரைந்துருகி, அவளைத் திடமாய் நழுவவிடாமல் பிடித்துக் கொண்டான்.

அவளின் ஸ்பரிசத்தையும் அவளின் தழுவலையும் அவன் வெகுவாய் ரசித்திருக்க, அவளோ அவன் கழுத்தைப் பிடித்தபடியே நிமிர்ந்து என்ன நிலவரம் என்று வெளியே எட்டிப் பார்த்தாள்.

பின்னர் அவள் அச்சத்தோடு அவனை ஏறிட்டு, "நம்ம சண்டையெல்லாம் வீட்டில போய் கன்ட்டின்யூ பண்ணிக்கலாமே... இப்போ எதுக்கு... நாம சென்னைக்குப் போக வேண்டாமா? உங்களுக்கு வேற முக்கியமான வேலை இருக்கு இல்ல" என்று சொல்ல, அவனின் இறுகிய முகத்தில் புன்னகை எட்டிப் பார்த்தது.

"போகணும்தான்... பட் உன்னைக் கூட்டிட்டு போற ஐடியா எனக்கில்ல... பேசாம உன்னை இங்கயே தூக்கிப் போட்டுட்டுப் போயிடலாம்னு பார்க்கிறேன்" என்று அவன் நக்கலாக சொல்ல,

"போட்டுட்டு போகப்போறீங்களா... இதுதான் புருஷ லட்சணமா?" என்றவள் கேட்ட மறுநிமிடம் அவன் உதட்டெல்லாம் புன்னகை வழிந்தோடியது.

"புருஷ லட்சணமா? பரவாயில்லையே... நான் உன் புருஷங்கிறது உனக்கு ஞாபகம் இருக்கே... எப்பவும் அந்த எண்ணம் இருக்கட்டும்" என்று கண்டிப்பான பார்வையுடன் சொல்லியவன், அவளை கல்மிஷமாய் பார்த்துக் கண்ணடிக்க, அப்போதுதான் அவன் முகத்தில் மின்னிய குறும்புத்தனத்தை அவள் கவனித்தாள்.

தான் அவனைக் கட்டிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் உணர்ந்து துணுக்குற்று தன் கரத்தை விலக்கிக் கொள்ள, மெல்ல அவளை அவனை இறக்கிவிட்டான்.

அவள் கோபமாய் அவனை முறைத்துப் பார்த்துவிட்டு நகர்ந்து வந்து மணல் மீது கால்களை மடக்கியபடி அமர்ந்து கொண்டாள்.

"அல்ரெடி ரொம்ப டைமாச்சு... வா கிளம்பலாம்" என்றவன் அவள் அருகில் வர, அவளோ அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் கடலை வெறித்தபடி அமர்ந்திருந்தாள். அவனும் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு அமைதியாக அவளருகில் அமர்ந்தான்.

இருவருமே சிறிது நேரம் மௌனமாய் இருக்க அவன் அமைதியாக அவளைப் பார்த்து, "நீ சொல்லாம கொள்ளாம அப்படி கார்ல இருந்து இறங்கி வந்ததினால டென்ஷன்ல அடிச்சிட்டேன்... சாரி" என்றான்.

ஆச்சர்யமாய் அவனைத் திரும்பி பார்த்தவள், அவனுக்கு மன்னிப்பு கேட்கவெல்லாம் தெரியுமா? என யோசிக்க அந்த நொடி அவளைக் காதலோடுப் பார்த்திருந்த அவன் பார்வை அவளை தன்வசம் இழுத்தது.

அதனை உணர்ந்தவள் தன் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டு, "சாரி... நானும்... நீங்க என்னை அடிச்ச கோபத்தில" என்று தயக்கமாய் சொல்லி நிறுத்த, அவனுக்கு இப்போது கோபம் தலைத் தூக்கியது.

"ஆமாம்... நான் அடிச்சா நீயும் என்னைத் திரும்பி அடிச்சிறதா?" என்றவன் கேட்க,

"அப்போ... நீங்க அடிச்சா நான் அமைதியா வாங்கிக்கணும்... அப்படியா?" என்றவள் பதிலுக்கு முறைத்தபடி சொன்னாள். சில நொடிகளில் இருவருமே தங்கள் நிலைப்பாட்டை எண்ணி கலீரென சிரித்துவிட்டனர். அவர்களுக்கே அவர்கள் செயல் குழந்தைத்தனமாக இருந்தது.

அப்போது வீர், "நீ போலீஸாகியிருக்கலாம்... உன் திமிருக்கு நல்லா கெத்தா இருந்திருக்கும்" என்று சொல்ல,

அவள் அலட்சியமாய் முகத்தைச் சுளித்து கொண்டு,"நிச்சயம் மாட்டான்... உங்க டிபார்ட்மன்ட் மேலே எனக்கு துளி கூட நம்பிக்கையும் இல்லை... மரியாதையும் இல்லை" என்று தன் மனதில் பட்டதைப் பளிச்சென்று உரைத்துவிட்டாள்.

அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, "என்னதான் இருந்தாலும் இவ்வளவு திமிரு ஆகாதுடி உனக்கு" என்று சொல்லியபடி சீற்றமாய் எழுந்து கொண்டவன்,

"எழுந்திரு போலாம்" என்றான்.

அவள் அவனின் அழைப்பிற்குச் செவிமடுக்காமல் ஏதோ சிந்தனையில் கடலை வெறித்திருக்க அவன் மேலும், "காரணம் காரியம் இல்லாமல் எங்கயாச்சும் இப்படி பைத்தியம் மாதிரி வந்து உட்கார்ந்துப்பியா?! இதான் உனக்கு வேலையா?!" என்றவன் கேட்கவும் அவனைத் தலைத்தூக்கிப் பார்த்து, "காரணம் இருக்கு" என்றாள்.

அன்று கடலில் விழுந்த போது அவள் தாத்தா அவளைக் காப்பாற்றிவிட்டு சொன்ன வார்த்தையை தற்சமயம் அவள் நினைவுபடுத்திக் கொண்டாள்.

'நம்ம குலதெய்வம் இந்த கடலில் இருக்கும்மா... அதோட சக்தி உனக்கு அப்படி எதுவும் ஆக விட்டிருமா என்ன? அதனால்தான் அவ்வளவு கடல் ஆழத்தில விழுந்தும் நீ உயிர் பிழைச்சுகிட்ட’ என்றார்.

அந்த வார்த்தைகள் அவள் மனதில் அழுத்தமாய் இன்றும் பதிவாயிருந்தது. ஆர்ப்பரிக்கும் அந்தக் கடலலைகளைப் பார்த்தவள் அவனிடம்,

"எங்க குலதெய்வம் இங்க இருக்கு... நான் எப்ப ஊருக்கு வந்தாலும் இங்க வந்து ஒரு பத்து நிமிஷம் நின்னு வேண்டிக்கிறது வழக்கம்... பட் இந்த தடவைதான் வர்ற டைம் கிடைக்கல... கார் இங்க நின்னதைப் பார்த்ததும் உடனே இறங்கி வரனும்னு தோனுச்சு... வந்துட்டேன்" என்றவள் தன் செயலுக்கான விளக்கத்தை அளித்தாள்.

அவள் சொல்வதைக் கேட்டவன் பின்னர் என்ன எண்ணிக் கொண்டானோ?! குலுங்கிக் குலுங்கி சிரித்தபடி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, "இங்க... உங்க குலதெய்வம்... என்ன கடல்லையா... லூசு... நடு ராத்திரில அலமாரி மேல ஏறி ஃபோட்டோ எடுக்க போறேன்னு சொல்றது... இப்போ என்னடான்னா கடற்கரையில மொட்டை வெயில உட்கார்ந்துட்டு சாமி கும்பிட வந்தேன்னு சொல்றது... முடியல... நான் சீரியஸா கேட்கிறேன்... ஏதாவது சைக்காலஜிக்கல் பிராப்பளமா டி உனக்கு... வேணா சென்னை போனதும் நாம ஒரு சைக்காட்ரிஸ்கிட்ட கவுன்ஸிலிங் போவோமா?!" என்று கேட்டு மீண்டும் சிரிக்கவும் அவள் எரிச்சலானாள்.

அந்த வார்த்தைகளில் இருந்த அவமதிப்பும் கிண்டலும் அவளை ரொம்பவும் காயப்படுத்தியது. அவனை எரித்துவிடுவது போல் பார்த்துவிட்டு அவனைக் கடந்து விறுவிறுவென நடந்தாள்.

"பெரிய கண்ணகி... அப்படியே பார்வையாலயே எரிச்சிடுவா?!" என்று அவள் காதில் விழுவது போல் சத்தமாக உரைத்து கொண்டே அவள் பின்னோடு வர,

அந்த வார்த்தைகளைக் கேட்டு திரும்பியவள், "நான் நிச்சயமா கண்ணகி இல்லை... அப்படி நான் மட்டும் கண்ணகியா இருந்திருந்தா மதுரையை எரிச்சிருக்க மாட்டேன்... புருஷனை எரிச்சிருப்பேன்" என்று சொல்லிவிட்டு மீண்டும் திரும்பி அவள் முன்னேறி நடக்க அந்தக் கோபத்தை ரசித்தவன்,

'இவ எல்லாத்துக்கும் பதில் வைச்சிருக்காளே... அடங்கவும் மாட்டிறா... மடங்கவும் மாட்டிறா... இவ ரொம்ப சேலஞ்சிங்கான டாஸ்க்தான்' என்று தனக்குத்தானே எண்ணிக் கொண்டே நடந்து வந்திருக்க அவள் காரில் சாய்வாய் நின்றிருந்தாள்.

அவன் நெருங்கி வரவும் முறைத்து பார்த்தவள், "இத பாருங்க ஏசிபி சார்... இனிமே என்னை தமிழச்சின்னு கூப்பிடாதீங்க" என்று சொல்ல அவன் புரியாமல்,

"இதென்னடி வம்பா போச்சு... நான் ஏன் அப்படி கூப்பிட கூடாது?" என்று கேட்டான்.

"ஏன்னா... என்னை நல்லா புரிஞ்சிக்கிட்ட எனக்கு ரொம்ப நெருக்கமானவங்க மட்டும்தான் என்னை அப்படி கூப்பிடுவாங்க... கூப்பிடனும்... ப்ளீஸ் யூ டோன்ட்" என்று அவனிடம் அதிகாரமாய் உரைக்க அந்த நிமிடம் அவள் அடித்த அடியை விடவும் அந்த வார்த்தை அவனை பலமாய் காயப்படுத்தியது.

அவளை சீற்றமாய் பார்த்தவன், அவள் கார் கதவை திறந்து உள்ளே ஏறும் தருவாயில் அவளை மறித்து கார் கதவோடு நெருக்கமாய் அணைத்து நிறுத்தினான். அவள் இதயம் அந்த நொடி வேகமாகப் படபடத்தது.

 

"என்னடி சொன்ன என்கிட்ட... நெருக்கமானவங்கதான் உன்னை அப்படி கூப்பிடுவாங்களோ?! நல்லா கேட்டுக்கோ... இனிமே என்னைவிடவும் உனக்கு நெருக்கமானவங்க யாரும் இருக்க முடியாது தமிழச்சி... இந்த வீர் மட்டும்தான்" என்று கர்ஜித்த தோரணையில் சொல்லிவிட்டு அவளிடமிருந்து விலகி, அவனே கார் கதவை திறந்து கொஞ்சம் மிரட்டலாய் அவளைப் பார்த்து அமரச் சொல்ல, அவளும் அச்சத்தோடு உள்ளே ஏறி அமர்ந்தாள்.

அவளை முறைத்துக் கொண்டே அவன் ஓட்ட, அந்த கார் மின்னல் வேகத்தில் பயணிக்க ஆரம்பித்தது. அவளோ அவன் முகத்தைப் பார்க்காமல் தவிர்த்தபடி அமர்ந்திருந்தாள்.

காரை மஹாபலிபுர காவல் நிலையத்தில் நிறுத்தியவன், அங்கே பார்க்க வந்தது ரகுவைதான்.

அவன் ரகுவிடம் இருந்து கேஸ் ஃபைலை வாங்கிக் கொண்டு ஏதோ விவரங்கள் கேட்டுக் கொண்டிருக்க,

தமிழுக்கோ தன் தோழனைப் பார்த்ததும் பேச வேண்டுமென்ற எண்ணம் துளிர்க்க, அந்த எண்ணத்தை வீரேந்திரன் இருந்ததால் பிராயத்தனப்பட்டு அடக்கிக் கொண்டாள்.

ரகுவுக்கு தோழியின் மீது கோபம் இருந்தாலும் அவளைப் பார்த்த நொடி அவனுக்குமே பேச வேண்டுமென்ற ஆர்வம் மிகுந்துவிட இடையில் வீரேந்திரன் நிற்பது அவனுக்குமே எரிச்சலாய் இருந்தது.

ஆனால் அதெல்லாம் விடவும் ரகுவை அழுத்தமாய் அதிர்ச்சிக்குள்ளாக்கியது தமிழின் கன்னங்களில் பதிந்திருந்த விரல் சுவடுகள்தான். திருமணமான முதல் நாளே தன் தோழியை அடித்திருக்கிறானா என்ற கேள்வி எழ வீரேந்திரன் மீது வெறுப்பு அளவில்லாமல் வளர்ந்து நின்றது.

நண்பர்கள் இருவருக்குள்ளும் அப்போது பேசிக் கொள்ளும் சூழ்நிலை அமையாமல் போனதால் நிலைமை இன்னதென ரகுவால் புரிந்து கொள்ளவும் இயலாமல் போனது.

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy

You cannot copy content