You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Monisha's VET - 22

Quote

22

"நான் காஞ்சிபுரத்திற்கு ஒரு கேஸ் விஷயமா கிளம்பி போறேன். நான் ரிடர்ன் வர டூ ஆர் த்ரீ டேஸ் ஆகும். மருந்து வாங்கி வைச்சிருக்கேன். போட்டுக்கோ. டேக் கேர். வீர்" என்று முடிந்திருந்த அந்தக் கடிதத்தைப் படித்தவளுக்கு அத்தனை எரிச்சலும் கோபமும் மூண்டது.

'அனுப்புநர் பெறுநர் போட்டிருந்தா பக்கா அஃபிஷியலான லெட்டரா இருந்திருக்கும்... என்ன மனுஷன் இவன்... நடந்த விஷயத்துக்கு ஒரு சாரி கூட இல்ல... அப்புறம் எதுக்கு இந்த லெட்டர்... இதுல டேக் கேர் வேற.. மண்ணாங்கட்டி... கொஞ்சங் கூட மனசாட்சியே இல்லை... இந்த கிஃப்டெல்லாம் யாருக்கு வேணும்... இதுல ஃப்ளவர்ஸ் வேற' என்று புலம்பியவள் அந்தக் கடிதத்தைக் கசக்கித் தூக்கி வீசினாள். பூங்கொத்தையும் மருந்தையும் கூட எரிச்சலுடன் தூக்கியெறிந்தாள்.

உறவுக்காக ஏங்கும் பெண்ணவள் அத்தனை உறவாகவும் கணவனையே உருவகப்படுத்தி இருக்க, அவனுக்குத் துளியளவும் தன் மீது அக்கறையில்லையே என்று மனதில் ஏற்பட்ட வலி, அவளது உடல் வலியையும் மறக்கடித்திருந்தது.

எழுந்திருக்க முடியாமல் அவதியுற்றபடி படுக்கையிலேயே சாய்ந்திருந்தவள் இன்னும் அங்கே மிச்சமாய் இருந்த அந்தப் பரிசை பார்த்து முகத்தைச் சுளித்து கொண்டாள்.

தனக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அல்லது தன் மனதிற்குப் பிடித்த ஒன்றும் அதில் இருக்கப் போவதில்லை எனத் தானே யூகம் செய்தவள் அதனைப் பிரித்து பார்க்கவும் விழையவில்லை.

ரொம்பவும் சிரமப்பட்டு எழுந்து தன் அறையிலிருந்து வெளியே வந்தவளுக்குச் சந்திரா வீட்டில் இல்லை என்று அப்போதுதான் தெரிய வந்தது.

ஏதோ கோயிலில் பூஜை என்று காலையிலேயே அவர் புறப்பட்டுப் சென்றுவிட்டதாகவும், இரவு அல்லது நாளைதான் திரும்புவார் என்று அங்கிருந்த பணிப்பெண் தகவல் தெரிவித்தாள்.

நிச்சயம் அவன் தன் தாயிடம் அவளின் வலியைக் குறித்து சொல்லி இருக்க மாட்டான். சொல்லக் கூடிய விஷயமா அது. அந்த அறையில் தனிமையில் இருப்பது அத்தனைக் கொடுமை. வலி குறைந்திருந்தாலும் இந்த நிலைமையில் தான் வேலைக்குப் போனால் கேலி செய்தே கொன்றுவிடுவார்கள்.

கோபத்தோடு, 'இப்படி பண்ணிட்டானே... அவன் மட்டும் ஜாலியா வேலைக்குப் போயிட்டான்... கஷ்டமும் நஷ்டமும் எனக்குதானே' என்று வாய் ஓயாமல் திட்டியபடி தன் தேவைகளையும் வேலைகளையும் யாருடைய துணையுமின்றி வலியோடு தானே செய்து கொண்டாள்.

தன் வீட்டிலிருந்திருந்தால் தேவியாவது துணைக்கு இருந்திருப்பாள். இங்கு தனக்கு அத்தகைய துணையுமில்லை எனப் பொறுமிக் கொண்டாள்.

*

மாமல்லபுரம் போலீஸ் நிலையம்.

ரகு வீரேந்திரனைப் பார்த்ததும் அவன் தன் உயர் அதிகாரி என்ற பெயரளவிலான மரியாதையோடு சல்யூட் அடித்தான். ஆனால் மனதிற்குள் வசைமாறிப் பொழிந்து கொண்டிருந்தான். அவனைப் பிடிக்கவில்லை. தன் தோழியை அபகரித்து கொண்ட ராட்சஸனாகவே அவன் தெரிந்தான்.

"என்ன ரகு? தர்மா மர்டர் நடந்த இடத்திற்கு இன்னைக்குப் போய் பார்க்கலாமா?" என்று வீர் கேட்க, "எஸ் சார்" என்றான்.

"அப்புறம் அவர் கூட வேலை செஞ்சவங்க டீடைல்ஸ்... ஃப்ரண்ட்ஸ் ரிலேட்டிவ்ஸ்... அவரோட கான்டெக்ட் டீடைல்ஸ் எல்லாமே நான் சொன்னபடி ரெடி பண்ணிட்டீங்களா?"

"அவருக்கு ரிலேட்டிவ்ஸ்னு பெரிசா யாரும் இல்லை... கல்வெட்டியல் ஆராய்ச்சி பண்றதிலதான் அவர் ரொம்ப ஆர்வமா இருந்திருக்ககாரு... ஃப்ரண்டஸ் வேலை பார்த்தவங்க கூடதான் அதிக தொடர்பு... அவங்க டீடைல்ஸெல்லாம் வாங்கி வைச்சிருக்கேன்"

"குட்"

"வண்டி ரெடியாயிருக்கு சார்... கிளம்பலாமா?" என்று ரகு கேட்க,

அவனும் புறப்பட எழுந்து நின்று தன் தொப்பியை மாட்டியவன், ரகுவின் முகத்தை அப்போதுதான் கூர்ந்து கவனித்தான். வெறுப்பாய் இருந்த அவன் முக மாற்றங்களைப் பார்த்தபடி, "என்னாச்சு ரகு... உங்க முகமே சரியில்லையே?!" என்று கேட்டான்.

ரகு இயல்பாய் இருக்க யத்தனித்தாலும் அவன் எண்ண ஓட்டத்தை அவன் முகம் அப்பட்டமாய் பிரதிபலித்துவிட்டது.

"காலையிலயே ஒரு கேஸ்... அதான் கொஞ்சம டென்ஷனாயிட்டேன்" என்றவன் சமாளிக்க,

"என்ன கேஸ்?" என்று வினவினான்.

"பொண்டாட்டிய கை நீட்டி அடிச்சிருக்கான் ராஸ்கல்... அவனை ஒரு அடி அடிச்சிருந்தாலாவது நிம்மதியா இருந்திருக்கும்... ஆனா தாலி சென்டிமென்ட்... அது இதுன்னு வெறும் வார்ன் பண்ணி அனுப்ப வேண்டியதாய் போச்சு.... அவன் முகத்தைப் பார்த்ததிலிருந்து அவ்வளவு கோபமா இருக்கு... கட்டின மனைவியை அடிக்கிறவன் எல்லாம் ஆம்பிளையா?" என்று கேட்டவனின் வார்த்தையில் அத்தனை ஆழமான வெறுப்பு.

வீரேந்திரனின் இதயத்தையும் அந்த வார்த்தைகள் குத்திக் கிழிக்க, அவன் யாரையோ சொல்ல அது ஏன் தனக்கு உறைக்கிறது என எண்ணியவன் எதற்கும் அவன் தன்னைத்தான் சொல்கிறானா என ரகுவின் முகத்தைக் கூர்மையாய் பார்க்க அவனோ,

"அந்த மேட்டரை விடுங்க சார்... நாம தர்மா வீட்டுக்குப் போவோம்" என்று இயல்பாய் சொல்லிவிட்டு முன்னேறிச் சென்றான்.

வீரேந்திரனுக்கு அவன் சமாளிப்பு நன்றாய் விளங்கிற்று. இவனுக்கு தமிழைத் தெரிந்திருக்குமோ என்ற சந்தேகமும் உதித்தது. ஆனால் அந்த எண்ணம் ஒருபுறமிருக்க ரகுவும் வீரேந்திரனும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் தர்மாவின் வீட்டினை அடைந்தனர். ரகு அந்த வீட்டின் முகப்பறையில் வந்து நின்று தர்மா கொலையுண்டிருந்த இடத்தைக் காண்பித்தான்.

"இங்கதான் அவரோட டெட் பாடி இருந்துச்சு... கையில கூர்மையான கத்தியோட கழுத்தறுப்பட்ட நிலையில" என்று அந்த ஹாலின் மத்தியில் நின்று காண்பிக்க வீரேந்திரன், "ம்ம்ம்" என்றான்.

"கத்தியால் கழுத்திலறுப்பட்டுதான் இறந்திருக்கிறான்னு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லுது... அவர் இறந்த விஷயம் இரண்டு நாள் யாருக்கும் தெரியல... பக்கத்து வீட்டிலிருக்கிறவங்கதான் பாடி டீகம்போஸாகி ஸ்மெல் வர்றதை கண்டுபிடிச்சி தகவல் சொன்னாங்க... "

"ம்ம்ம்"

"அவருக்கு தற்கொலை செஞ்சிருக்கிற மோட்டிவும் இல்ல... அதுவும் தனக்குத்தானே கழுத்தறுத்து... மோரோவர் அந்தக் கத்தியில இன்னொருத்தோரோட கைரேகை இருக்கே... ஸோ அது மர்டரா இருக்கவே வாய்ப்பிருக்குன்னுதான் விசாரிச்சிட்டிருக்கோம்" என்று ரகு விளக்கமளிக்க, "ம்ம்ம்ம்" என்றான் வீர்.

"அவரோட ஃபேம்லி அவர் கூட இல்ல... அவர் ஒரு டிவோஸி... ஆராய்ச்சி ஆராய்ச்சின்னு குடும்பத்தை கவனிக்கிறதில்லனு சொல்றாங்க”

"ம்ம்ம்ம்"

"அந்த கைரேகையோட ரிலேட்டிவ்ஸ் ஃப்ரண்டஸ்... அப்புறம் நிறைய க்ரிம்னல்ஸ் ரேகையோட எல்லாம் மேட்ச் பண்ணிட்டோம்... ஒன்னும் செட் ஆகல"

"ம்ம்ம்" என்றவன் பதிலேதும் உரைக்காமல் தன் கழுகு பார்வையால் அந்த வீட்டின் இண்டு இடுக்குகளையும் ஆராய்ந்து கொண்டிருந்தான்.

கடைசியாய் அவரின் புத்தகங்களும் ஓவியங்களும் இருந்த அறைக்குள் நுழைந்தான்.

அப்போது ரகு கொஞ்சம் கடுப்பாகி, "என்ன சார்... நான் பேசிட்டே இருக்கேன் நீங்க பதில் பேசாம ம்ம்ம் னு மட்டும் சொல்றீங்க" என்று வினவினான்.

"நீங்க சொன்னதெல்லாம் கேஸ் ஃபைலில் படிச்சிட்டேன்.. புதுசா ஏதாச்சும் சொல்லுங்க ரகு" என்று கேட்டான்.

'இருக்கிறததைதானே சொல்ல முடியும் ... புதுசான்னு கேட்டா நான் எங்க போறதாம்' என்று எண்ணியபடி ரகு மௌனமாய் நிற்க,

வீரேந்திரன் புன்முறுவலோடு, "நான் சொல்லட்டுமா... ரகு?!" என்றான். ரகு அவனை அமைதியாய் ஏறிட்டுப் பார்க்க அவன் தொடர்ந்தான்.

"மிஸ்டர். தர்மா... ஆர்க்கியாலஜிஸ்ட்... தமிழ்நாட்டு கோயில்கள், வரலாறுகள் பற்றிய நிறைய ஆராய்ச்சி செய்தவர்... கல்வெட்டியலில் பெரிய எக்ஸ்பெட்... இது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம்... ஆனா தெரியாத விஷயம்... வெளிநாட்டில இருக்கிற சிலை கடத்தல் கும்பலுக்கு நம்ம நாட்டோட சிறப்புமிக்க சிலைகளையும் பொக்கிஷங்களையும் பேரம் பேசி விற்கிற க்ரிமினல்... பக்கா க்ரிமினல்" என்று சொல்லும் போதே அவன் பார்வையில் அத்தனை சீற்றம். ரகுவிற்கோ இந்தத் தகவல் பேரதிர்ச்சி.

"அப்புறம் நீங்க சொன்ன மாதிரி அவர் டிவோஸியெல்லாம் இல்ல ரகு... அதெல்லாம் சமுதாயத்திற்கு முன்னாடி அவர் போடுற நாடகம்... அவர் மனைவியும் மகன்களும் வெளிநாட்டில சுகபோகமா இருக்காங்க...

இவரும் அடிக்கடி அவங்களைப் பார்க்க போயிட்டு வருவாரு... அங்கயே செட்டிலாக மனிஷன் திட்டம் போட்டிருந்தார்... ஆனா அதற்குள்ள இங்கயே இவர் விதி முடிஞ்சிருச்சு.... இல்ல எவனோ முடிச்சிட்டான்" என்றான்.

ரகு உறைந்து போய் நின்றான். அவன் எப்போது இவற்றை எல்லாம் விசாரித்து அறிந்து கொண்டான் என அவன் யோசித்திருக்க, அப்போது வீரேந்திரன் அந்த அறையில் இருந்த ஓவியங்களைக் கூர்ந்து கவனிக்கலானான்.

முதல் ஓவியம்... கடற்கரையில் பெரிய பெரிய மரக்கலயங்கள் நின்று கொண்டிருக்க, நிறையப் பொருள்கள் ஏற்றுமதி இறக்குமதிக்காகக் குவித்து வைத்திருப்பதைப் போல வரையப்பட்டிருந்தது.

இரண்டாவது ஓவியம்... ஒரு ராஜகம்பீரமான இறைவியின் உருவப்படம்... ஓவியத்திலேயே பார்க்க பிரமிப்பாய் இருந்த அந்த சிலை, நிஜத்தில் எப்படி இருக்கும் என சிந்தித்தவன், "இந்த சிலை... எந்தக் கோயிலுடையது" என்று ரகுவிடம் வினவ அவன், "தெரியல சார்" என்றான்.

அந்த ஓவியத்தை நன்கு உற்றுப் பார்த்துவிட்டு தான் எங்கேயோ இதனைப் பார்த்திருக்கிறோமே என யோசித்தவன், 'எங்கே எப்போது' என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டான்.

பின் அந்தச் சிந்தனையை விடுத்து மூன்றாவது ஓவியத்தின் புறம் திரும்பினான்... ஒரு உயரமான கோபுரம் கொண்ட கோயில். கடல் அலைகளை அதன் வெளிப்புறத்து சுவரைத் தொட்டுத் தழுவிக் கொண்டிருக்க, அந்தக் கோயிலின் மேல் உச்சியில் ஒரு பெரிய ஒளி... பார்க்க அது ஒரு கலங்கரை விளக்கத்தை நினைவுபடுத்தியது.

நான்காவது பலகையில் ஓவியமின்றி காலியாய் கிடந்தது.

வீரேந்திரன் அவற்றைப் பார்த்து, "இந்த ஓவியங்கள் எல்லாமே ஏதோ சொல்லுது ரகு... ஒன்னோட ஒன்று கனெக்டட் மாதிரி தெரியுது... ஆனா இந்தப் பலகை காலியா இருக்கிறதைப் பார்த்தா ஏதோ முக்கியமான ஓவியம் மிஸ்ஸாகுதுன்னு நினைக்கிறேன்" என்றான்.

ரகுவிற்கு வியப்பாய் இருந்தது. அப்படியே அச்சுபிசகாமல் தன் தோழி சொன்னதை இவனும் சொல்கிறானே என யோசிக்க வீரேந்திரன், "ரகு" என்றழைத்தான்.

"சார்”

"இந்த புக்ஸ்ல ஏதாச்சும் வித்தியாசமா இருக்கான்னு பார்த்தீங்களா... எனி க்ளூ" என்றான்.

"பார்த்தேன்... கீழே அடுக்கியிருந்தெல்லாம் அவர் படிக்கிற புக்ஸ்... மேலே அவரோட டைரி... அப்புறம் அவர் ரிசர்ச் பண்ணி எழுதின புக்ஸ்" என்றான்.

"அவரோட டைரில எல்லாம் என்ன இருந்துச்சுன்னு படிச்சு பார்த்தீங்களா?"

"மேலோட்டமா பார்த்தேன்... எல்லாம் சில கோயில், மன்னர்கள் பத்தின ரிசர்ச் மேட்டர்ஸ்... பட் ரொம்ப ஆழமா பார்க்கல"

"என்ன ரகு? இப்படி கேர்லஸ்ஸா பதில் சொல்றீங்க... ஒரு கேஸ்ஸை எடுத்துட்டோம்னா சின்ன சின்ன விஷயங்களை கூட விடாம ஆராயணும்" என்று சொல்லியவன் வரிசையாய் ஒரே நிறத்தில் நின்றிருந்த டைரிகளை பார்த்தான்.

ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தலைப்பிருந்தது. வரிசையாய் பல நூற்றாண்டு பழைமையான கோயில்களின் பெயர்கள் அல்லது மன்னனின் பெயர்களாக எழுதியிருக்க, நடுவில் ஒரு இடைவெளி காணப்பட்டது.

"ஏதோ ஒரு டைரி நடுவில மிஸ்ஸாகுதோ?!" என்று வீரேந்திரன் சந்தேகிக்க ரகுவும் அதனைக் கவனித்தான். ஏற்கனவே தான் இந்த ரேக்கை பார்த்த போது இப்படியில்லையே என்று எண்ணியவனுக்கு அன்று இரவு தன் தோழியை அழைத்து வந்தது நினைவுக்கு வந்தது.

'ஏ தமிழச்சி இது உன் வேலையா டி... பாவி' என்று வெலவெலத்துப் போய் நின்றான்.

அப்போது வீரேந்திரன், "இந்த கேஸ்ல ஏதோ ஒரு சீக்ரெட் இருக்கு... மிஸ்ஸான ஓவியம்... அப்புறம் அந்த டைரி... இதுக்கெல்லாம் அந்த சீக்ரெட் தெரிஞ்சிருக்கலாம்... வாட்ஸ் தட் சீக்ரெட்?.. அதை யாரோ மறைக்க முயற்சிக்கிறாங்க... இல்ல எடுக்க முயற்சிக்கிறாங்க... அதுக்காகவும் கொலை நடந்திருக்கலாம்" என்று சொல்ல,

"ம்ம்ம்... இருக்கலாம் ஸார்" என்றான்.

வீரேந்திரன் அந்த வழக்கை எடுத்துச் செல்லும் விதத்தில் ரகு வியப்பானான்.

"ஓகே ரகு.... கிளம்புவோம்" என்று சொல்லிவிட்டு மீண்டும் அந்த அறையை நோட்டமிட்டவன் அவற்றை எல்லாம் தன் கைப்பேசியில் படம்பிடித்துக் கொண்டான்.

ரகு முன்னே சென்றுவிட வீரேந்திரன் அந்த புத்தக அலமாரியைக் கடந்து செல்லும் போது தரையில் ஏதோ மின்னிய உணர்வு. அதனைக் கவனித்தவன் உற்றுப் பார்த்த போது அது ஒரு தங்க டாலர். அதில் சிங்க முகம் பொறிக்கப்பட்டிருந்தது.

'யாரோடதா இருக்கும்? தர்மாவோடதா... இல்லை குற்றவாளியினுடையதா? எனிவே... இது பெரிய விட்னஸ்... ஆனா இதை எப்படி கவனிக்காம... இவ்வளவு நாளா? அந்த ரகு இந்த கேஸில என்னனதான் விசாரிச்சிருக்கான்... யூஸ்லெஸ்... இவன் எல்லாம் போலீஸ் ஆகலன்னு இப்ப யாரு அழுதா' என்று ரகுவின் மீது எரிச்சலடைந்துவிட்டு அந்த டாலரை தன் பாக்கெட்டில் நுழைத்தவன் ரகுவிடம் கூட அதை பற்றித் தெரிவிக்க விருப்பப்படவில்லை.

வாசலில் ரகு காத்திருக்க வீரேந்திரன் கமிஷனரிடம் கைப்பேசியில் பேசிக் கொண்டே வண்டியில் வந்து ஏறினான்.

"அந்த ஆர்ட்டிக்கல்லை நானும் படிச்சேன்... எனக்குமே ஷாக்கிங்காதான் இருக்கு... நானே நேர்ல போய் இதை பத்தி விசாரிச்சிட்டு உங்ககிட்ட பேசிறேன்" என்று உரைத்துவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

இங்கயே இரண்டு நாட்கள் இருந்து இந்த வழக்கில் மேலும் விசாரணை புரியலாம் என்று எண்ணியிருந்த வீரேந்திரனுக்கு வேறு வேலையால் உடனே சென்னை புறப்பட வேண்டிய நெருக்கடி.

ஆதலால் மீண்டும் சென்னை திரும்பியவன் நேராய் பாரதி பத்திரிக்கை அலுவலகத்தின் வாசலில்தான் தன் போலீஸ் வாகனத்தை நிறுத்தினான்.

வீரேந்திரன் உள்ளே நுழைந்ததும் அவனின் கம்பீர தோற்றத்தையும் போலீஸ் உடையையும் பார்த்து அங்கே பணிபுரிபவர்கள் அனைவரும் கொஞ்சம் குழப்பமும் அச்சமும் கலந்த பார்வையோடு அவனையே பார்த்தனர்.

அங்கே இருந்த ஒரு பெண் வீரேந்திரனை நோக்கி, "என்ன விஷயம் சார்? எங்க எடிட்டர் இப்போ இங்க இல்லயே" என்று விவரம் தெரிவித்தாள்.

"நான் ஏசிபி ராஜ வீரேந்திர பூபதி... சப் எடிட்டர் ஆதியைப் பார்க்கணும்" என்று கேட்டான்.

உடனே அவனைக் குறித்த தகவல் ஆதிக்குத் தெரிவிக்கப்பட்டு வீரேந்திரன் அறைக்குள் அனுப்பப்பட்டான்.

அவன் உள்ளே நுழைந்த மாத்திரத்தில் எதிரே வெள்ளை நிற குர்தி அணிந்து கொண்டு ஒரு இளம் பெண். ஆம் இளம் பெண்தான் ஆனால் பார்வையிலும் தோற்றத்திலும் நின்று அவனை வரவேற்ற தோரணையிலும் அத்தனை கம்பீரமும் ஆளுமையும் தெரிந்தது.

ஆதி என்ற பெயரில் இருப்பவள் ஒரு பெண்ணா என்று வியப்போடு அவளை அவன் விழி இடுங்க பார்க்க, அவளோ முகமலர்ச்சியோடு,

"ஐம் ஆதி... ஆதிபரமேஸ்வேரி" என்று தன் வலது கரத்தை நீட்டினாள்.

அவனும் வியப்பிலிருந்து மீண்டு கைக்குலுக்கி, "ஏசிபி ராஜ வீரேந்திர பூபதி" என்றான்.

இருவரும் இருக்கையில் அமர அந்தப் பெண்ணின் முகத்தில் துளியும் நடுக்கமோ பதட்டமோ காணப்படவில்லை என்பதை அவன் குறித்துக் கொண்டான்.

"நீங்க பார்க்கணும்னு கூப்பிட்டிருந்தா நானே உங்க ஆஃபிஸுக்கு வந்திருப்பேனே?" என்றாள்.

"யாரை எங்க விசாரிக்கணும்ங்கிறது எல்லாம் என்னோட முடிவு" என்றபடி மேஜை மீதிருந்த பெயர் பலகையைப் பார்த்தவன்,

"ம்ம்ம்... உங்களுக்கு இடைஞ்சல் இல்லன்னா கொஞ்சம் பேசலாமா மிஸஸ். ஆதி" என்று அனுமதியாகக் கேட்டான்.

"ஒய் நாட்... ஷுயர்"

வீரேந்திரன் இந்த வாரம் வெளிவந்திருந்த பாரதி பத்திரிக்கையின் சில பக்கங்களைப் புரட்டி, "இந்த ஆர்ட்டிக்கல் நீங்கதானே எழுதினது... அதுவும் தமிழ் நாட்டில நடந்த சிலை கடத்தல்கள் பத்தி புள்ளி விவரத்தோட... எப்படி?" என்று கேட்டான்.

"விசாரிச்சோம்... டீடைல்ஸ் கலெக்ட் பண்ணோம்... நியாயமா பார்த்தா... நீங்க செய்ய வேண்டிய வேலையை நாங்க செஞ்சிருக்கோம்" என்றாள். அந்தப் பார்வையில் ஒரு திமிர். அதை அவன் கொஞ்சமும் விரும்பவில்லை.

"இந்த தகவல் எல்லாம் ஏன் போலீஸுக்கு நீங்க கொடுக்கல... இன்னும் கேட்டா நீங்க போடற நியூஸ் குற்றவாளியை அலர்ட் பண்ணலாம்... தெரியுமா உங்களுக்கு?" என்றே சற்று அதிகார தொனியில் அவன் குரல் உயர்ந்தது.

ஆனால் அவள் அலட்டிக் கொள்ளாமல், "இப்படி சொல்றேன்னேன்னு தப்பா எடுத்துக்காதீங்க மிஸ்டர். பூபதி... பல முக்கியமான கோயில்களில் இருந்து காணாம போன சிலைகளோட எண்ணிக்கை நூற்றுக்கணக்கில இருக்கு... நான் எழுதின தகவல் கொஞ்சம்தான்... இந்த தகவல் மக்களுக்கு போய் சேரணும்ங்கிறதுதான் என்னோட நோக்கம்... பட் போலீஸ்கிட்ட சொன்னா... வேற வினையே வேண்டாம்... அது குற்றவாளிகள் கைக்கே நேரடியா போயிடும்... மக்களுக்கு இதைப் பத்தி எல்லாம் தெரியாமலே போயிடும்" என்றதும் வீரேந்திரன் சீற்றமானான்.

"இது ரொம்ப தப்பான அட்டிட்டியூட்... போலீஸ் டிப்பர்ட்மன்ட்ல ஒவ்வொருத்தரும் உயிரை கொடுத்து வேலை செஞ்சிட்டிருக்கோம்... நீங்க ஏசி ரூம்ல உட்கார்ந்துட்டு ஈஸியா கமென்ட் பண்ணிட்டிருக்கீங்க"

"ஜர்னலிஸமும் ஏசில உட்கார்ந்திட்டிருக்கிற வேலை இல்ல... அன் நாங்களும் உங்களை மாதிரி குற்றங்களைக் கண்டுபிடிக்க எவ்வளவோ ரிஸ்க் எடுக்கிறோம்... இன்னும் கேட்டா உங்க கையில ஆயுதம் இருக்கு.. எங்க கையில அதுவுமில்ல"

“ஃபைன்... உங்க ஜர்னலிஸத்தை நீங்க பாருங்க... என் போலீஸ் வேலையை நான் பார்க்கிறேன்... ஒரு நாள் இந்த போலீஸ் தயவு உங்களுக்கு தேவைப்படும் ஆதி... அப்போ பார்த்துக்கலாம்" என்றதும் ஆதிக்கு அவன் சொல்வதன் அர்த்தம் விளங்கவில்லை.

இருந்தும், "பார்க்கலாமே" என்று அவளும் சவலாய் உரைக்க தன் மனைவிக்கு இருக்கும் திமிர் அப்படியே ஆதியிடம் கண்டவன்  தர்மா கேஸ் விஷயத்தைப் பற்றி கேட்கலாமா என்ற எண்ணத்தை  மாற்றிக் கொண்டான்.

அப்போது வெளியேற கதவருகில் போனவன் சந்தேகமாய் திரும்பி, "உங்களுக்கு தமிழச்சி பத்திரிக்கையில இருக்கிற செந்தமிழைத் தெரியுமா?" என்று கேட்க அவள், "ம்ம்ம்... கேள்விப்பட்டிருக்கேன்... பட் பேசிப் பழக்கமில்லை" என்றாள்.

'இது உண்மையா பொய்யா?!' என்று யோசித்தபடியே அவன்  வெளியேறினான். ஆதியின் சந்திப்பும் அந்த சிலை கடத்தல் கட்டுரையும் இந்த வழக்கில் ஏதோ ஒரு பெரிய திருப்புமுனையைக் கொண்டு வரப் போகிறது என்று அவன் உள்ளுணர்வு சொல்லிற்று.

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy

You cannot copy content