You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Monisha's VET - 26

Quote

26

"ஏன் என்னைப் பார்த்ததும் நீ இவ்வளவு பதட்டப்படற?!" வீரேந்திரன் அவள் அமர்ந்திருந்த இருக்கையோடு நெருக்கியபடி நின்று கொண்டு கேட்க, தமிழ் அவன் மீதான பார்வையை எடுக்காமலே அருகிலிருந்த ஃபைலை தர்மாவின் டைரியின் மீது வைத்து மறைத்திருந்தாள்.

அப்போதைக்கு அவள் மனம் அமைதியடைந்தாலும் அவன் எதற்காக, வந்திருக்கிறான் என்ற கேள்வியோடும், டாலரைப் பற்றிய விஷயம் தெரிந்திருக்குமோ என்ற சந்தேகத்தோடும் அவனை நோக்கியவளுக்கு அப்படி ஒன்றும் புலப்படவில்லை.

மெல்ல அவள் சுதாரித்தபடி, "ப்ளீஸ்... கொஞ்சம் தள்ளி நில்லுங்க... இது ஆஃபிஸ்" என்று கூற, "இருக்கட்டுமே... நீ என் வொய்ஃப்" என்றான்.

"அது வீட்லதான் ஏசிபி சார்... இங்க நான் சப்-எடிட்டர்... ஸோ கொஞ்சம்" என்றவள் பார்வை அவனை தயக்கமாக நோக்கவும்,

"ஹ்ம்ம்ம்... ஓகே" என்றவன் தள்ளி நின்றான்.

"உட்காருங்க ஏசிபி சார்" என்று அவள் எதிரே இருந்த இருக்கையைக் காண்பித்தாள். இருக்கையில் அமர்ந்தவன் அவளையே இமைக்கவும் மறந்து பார்த்து கொண்டிருந்தான்.

"ஏசிபி சார் காரணமில்லாம வரமாட்டிங்களே... என்ன விஷயம்?.. அதுவும் மஃப்டில? எதும் சீக்ரெட் ஆப்ரேஷனா?” என்றவள் ரகசியம் பேசுவது போல தலையைத் தாழ்த்தி மெதுவாகக் கேட்க,

"சீக்ரெட்தான்... ரொம்ப பெரிய சீக்ரெட்... அதை ஆஃபிஸில பேச வேண்டாம்... வெளியே போய் டிஸ்கஸ் பண்ணுவோமே" என்றவனும் ஹஸ்கி குரலில் பதில் கூறினான்.

அவள் முகவாயைத் தடவியபடி, "கொஞ்சம் பிஸியா வேலை பார்த்துட்டிருக்கேனே... ஸோ இப்ப முடியாது" என,

“என் வொர்க் எல்லாம் ஒதுக்கிட்டு இங்க உங்களுக்காக வந்திருக்கேன்... சப் எடிட்டர் மேடம் கொஞ்சம் மனசு வைச்சீங்கனா!” என்று அவன் கெஞ்சலாய் கேட்கவும் அவளது இதழ்கள் விரிந்தன.

இருப்பினும் அவள் தன் கம்பிரத்தை விட்டுக் கொடுக்காமல், "ஸாரி மிஸ்டர். வீரேந்திரன்... நீங்க முன்னாடியே சொல்லி இருந்தா முயற்சிப் பண்ணி இருப்பேன்... பட் இப்ப உடனே முடியாது" என்றாள்.

"முடியாதா?” என்று கேட்டு அவன் அவளை முறைக்க,

"உம்ஹும்... முடியாது" என்று அவள் தீர்க்கமாகத் தலையாட்டினாள்.

"அப்ப வேற வழியே இல்ல... தூக்கிட்டுப் போயிட வேண்டியதுதான்" என்று அவன் இருக்கையில் இருந்து எழுந்து நின்றான்.

"என்ன? பூச்சாண்டிக் காட்டுறீங்களா?!" என்று அவள் அசராமல் கேட்க,

"பூச்சாண்டிக் காட்டுறேனா? ஏ தமிழச்சி... நான் பாட்டுக்கு உன்னை அலேக்கா தூக்கிட்டுப் போயிடுவேன்... அப்புறம் நாளப்பின்ன இந்த ஆஃபிஸுக்கு நீதான் வரணும்… பார்த்துக்கோ" என்று மிரட்டினான்.

"இதுக்கெல்லாம் இந்த தமிழச்சி பயந்துடுவாளா?! நீங்க மட்டும் என்னைத் தூக்கிட்டுப் போங்க... ஆஃபிஸ்ல வந்து கலட்டா பண்றிங்கன்னு உங்க பேர்ல கம்பிளைன்ட் பண்ணிடுவேன்" என்றாள் அவள்.

"கம்பிளைன்ட்... என் மேல... அதுக்காகவே உன்னைத் தூக்கிட்டுப் போறேன்டி" என்று தன் கைச்சட்டையைத் தூக்கிவிட்டு அவளை நெருங்க,

அவள் அவசரமாய் அவனைத் தள்ளி நிறுத்தியபடி, "விட்டா தூக்கிடுவாங்க போலயே... போங்க வீர்... போய் சீட்ல உட்காருங்க" என்று பணித்தாள்.

"அந்த பயம் இருக்கட்டும்"

"ஹெலோ... யார் இப்போ பயந்தா? நீங்க இப்படி நடந்துக்கிட்ட உங்களைப் பத்திதான் எல்லோரும் தப்பா பேசுவாங்க ... அந்த அக்கறையில சொன்னா நீங்க அதுக்கு பேர் பயம்னு நினைச்சுகிறதா?"

"ஹ்ம்ம்ம்... யார் அப்படி பேசலன்னாலும் நீயே பேச வைச்சிருவியே... என் பேரை ஸ்பாயில் பண்ற ஒரே ஆள் நீ ஒருத்திதான்... இதுல நீ அக்கறை படற... அதை நான் நம்பணும்" என்றவன் சொல்லி குத்தலாகப் பார்க்க, அவள் முகம் துவண்டது.

மௌனமாக எழுந்து அவள் திரும்பி நின்று கொள்ள, "ஏய் கோச்சுக்கிட்டியா?” என்றவன் பதறியபடி அவள் தோள்களைப் பற்றித் திருப்பி, "ப்ளீஸ்டி... சண்டையை ஸ்டார்ட் பண்ணிடாதே... நானே லீவ் போட்டுட்டு ஜாலியா வெளியே சுத்தலாம்னு பிளான் எல்லாம் பண்ணி வந்திருக்கேன்" என்றான்.

அவள் விழிகள் அகன்றன. "நிஜமாதான் சொல்றீங்களா வீர்?!" என்று வியப்பானாள்.

"ஆமான்டி என் தமிழச்சி" என்று சொல்லும் போதே அவன் முகத்தில் ஒளிர்ந்த புன்னகை கண்டு அவள் முகமும் பிரகாசித்தது.

"என்ன திடீர் ஞானோதயம்? அதுவும் கர்ணனோட கவசம் குண்டலம் மாதிரி... உங்க காக்கி யூனிஃபார்மோடவே சுத்துவீங்கன்னு அம்மா சொல்லுவாங்க... என்னால இப்பவும் நம்ப முடியலேயே"

"ஹ்ம்ம்ம்... எல்லாம் போகும் போது பேசிட்டே போலாம்... நீ இப்போ சீக்கிரம் கிளம்பி வா"

"இப்படி திடீர்னு கூப்பிட்டா எப்படி வீர்... எனக்கு வேலை இருக்கே" என்றவள் அப்போதும் தயங்க, அவன் முகம் கோபமாய் மாறியது.

"அதெல்லாம் எனக்கு தெரியாது... நீ வர... நான் கார்ல வெயிட் பண்றேன்... ஃபைவ் மினிட்ஸ்ல நீ வரல... நான் வந்து உன்னைத் தூக்கிட்டுப் போயிருவேன்... பார்த்துக்கோ" என்று அதிகாரமாய் சொல்லிவிட்டு அவன் வெளியேறவும் அவள் அடுத்த நொடியே மேஜை மீதிருந்த தர்மாவின் டைரியைப் உள்ளே வைத்து பூட்டிப் பெருமூச்செறிந்தாள்.

'டைரியை மட்டும் பார்த்திருந்தான்... நாம கைமாதான்... நல்ல வேளை... ஆனா இவன் எப்போ கோபமான மூட்ல இருக்கான்... எப்போ ரொமான்டிக் மூட்ல இருக்கான்னு ஒன்னும் தெரியலியே... இப்படி கயிறு மேல நடக்கிற மாதிரி என் பொழப்பு இருக்கே?!’ என்று புலம்பியபடி தன் செல்பேசியையும் பேகையும் எடுத்து கொண்டு ரமணியம்மாளிடம் தகவலைத் தெரியப்படுத்திவிட்டு வெளியே சென்று காரில் ஏறியவள் அவனிடம்,

"இப்பயாச்சும் சொல்லுங்க... என்ன திடீர்னு" என்று கேட்டாள்.

"நீ பாட்டுக்கு காலையில என்கிட்ட சொல்லாமகூட வந்துட்ட... அதுவும் இல்லாம உன் முகம் வாட்டமா இருந்துச்சுன்னு அம்மா சொன்னாங்க?!"

அவள் குறுக்கிட்டு, "அதுக்காகவா ட்யூட்டிக்குப் போகல?!" என்று கேட்க,

"பின்ன... நான் ரொம்ப அப்சட்டாயிட்டான்... ட்யூட்டிக்குப் போக முடியல... ரொம்ப கில்டியா இருந்துச்சு" என்றான்.

"எதுக்கு கில்டி..?" என்று அவள் யோசனையாய் கேட்க, அவன் தன் ஒற்றை கரத்தால் அவள் கைகளைத் தன் கரத்திற்குள் சேர்த்துக் கொண்டபடி,

"நைட் நான் அப்படி.... ப்ச்... என்னை என்ன பண்ண சொல்ற தமிழ்... நானும் நார்மல் ஹுயூமன் பீயிங்தானே... எனக்கும் உணர்ச்சிகள் இருக்கு... நீ ஏதேதோ கத்தி என்னைத் தூக்கத்தில இருந்து எழுப்பிவிட்டியா... என்னன்னு எழுந்து பார்த்தா நீ தூங்கினபடியே உளறிட்டிருந்த" என்று அவன் சொல்லும் போதே அவள் முச்சு முன்னுக்கு பின் முரணனானது.

அவள் அச்சமுற அவன் மேலும், "சட்டுன்னு கொஞ்ச நேரத்தில நீ கீழ விழப் பார்த்த... நான் உன்னை விழாம பிடிக்கணும்ங்கிற எண்ணத்திலதான்... ஆனா அதுக்கப்புறம் நடந்ததெல்லாம் என் கன்ட்ரோலில் இல்ல" என்று சொல்லி முடிக்க, கனவில் தான் உளறியது எதையும் அவன் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை என்பது அவளுக்குத் தெளிவானது.

அவள் மௌனமாய் அமர்ந்திருக்கவும், "உனக்கு என் மேல கோபம் இல்லையே?" என்றவன் அவள் கரத்தை வருடியபடி கேட்டான்.

"உம்ஹும்... அதெல்லாம் இல்ல" என்றவளுக்கு உள்ளுர பதட்டமாகவே இருந்தது.

"சரி நைட் நீ ஏன் அப்படி கத்தின? என்னவோ சொன்னியே... நான் அவனைக் கொல்லணும்னு... அதுவும் ரொம்ப கோபமா... ஏதாச்சும் கெட்ட கனவா?" என்று அவன் மேலும் கேட்க அவள் தன் பயவுணர்வைக் காட்டிக் கொள்ளாமல் இயல்பாக இருப்பது போல புன்னகைத்து,

"நத்திங்... எனக்கு இந்த மாதிரி தூக்கத்தில கனவு கண்டு கத்துறது... பெட்ல இருந்து விழறதெல்லாம் அடிக்கடி நடக்கும்" என்றாள்.

"இனிமே அப்படி எல்லாம் நடக்காது"

"அதெப்படி?!"

"உன்னை நான் தூங்கவிட்டாதானடி.... கனவு வரும்... அப்புறம் நீ கத்துவ... கீழே விழுவ" என்றவன் சொல்லவும் அவள் நறுக்கென்று அவன் கையில் கிள்ளிவிட்டாள்.

"ஆ" என்றவன் வலியால் அலற அவள் சத்தமாகச் சிரித்தாள்.

“சிரிக்கவா சிரிக்குற… இரு உன்னை ஒரு வழி பண்றேன்” என்றவன் முறைப்பது போல பாவனை செய்ய

“அதெல்லாம் அப்புறம் பண்ணலாம்… முதல வண்டியை நேரா பார்த்து ஓட்டுங்க” என்றவள் அதன் பின் யோசனையுடன் அவன் புறம் திரும்பி, "ஆமா... இப்போ நம்ம எங்க போறோம் வீர்?" என்று கேட்டாள்.

"எங்கயோ? நீயும் நானும் மட்டும்... ஜாலியா டைம் ஸ்பெண்ட் பண்ண போறோம்... அவ்வளவுதான்" என்றான் காரை ஓட்டியபடி.

ஒரு கணவனிடம் மனைவி இதைவிடவும் வேறென்ன எதிர்பார்த்துவிடப் போகிறாள். அதுவும் வீரேந்திரன் மாதிரி வேலையே கதி என்று கிடக்கும் ஒருவன் இப்படி உரைப்பது ஆச்சர்யத்தையும் இன்பத்தையும் அவளுக்கு உண்டாக்கிய அதே கணம் இந்தச் சந்தோஷம் எப்போது பறி போய்விடுமோ என்ற பயமும் சேர்ந்தே அவளை ஆட்டிவித்தது.

அவனிடம் உண்மையெல்லாம் சொல்லிவிட சொல்லி ஒரு குரல் அவளுக்குள் கேட்க, அந்த எண்ணத்தோடு திரும்பி நோக்கியவளுக்கு அவன் முகத்தில் ஒளிர்ந்திருந்த சந்தோஷத்தை ஏனோ அப்போதே பறித்துவிட மனம் வராமல் அமைதியாய் இருந்துவிட்டாள்.

அவர்களின் அந்தப் பயணம் அத்தனை இன்பகரமாக இருந்தது. கைக்கோர்த்தபடி கொஞ்சம் காதலோடும் சிறுசிறு ஊடல்களோடும் அவர்கள் இருவர் மட்டுமே அந்த உலகில் வசிப்பதாக எண்ணிக் கொண்டு ஆனந்தமாய் சுற்றித் திரிந்தனர். அந்த நாளின் அனுபவம் அவர்கள் மொத்த வாழ்வில் மறக்க முடியாத நினைவுகளாய் பதிவானது என்றே சொல்ல வேண்டும்.

ஆனால் அந்தச் சந்தோஷம் எல்லாம் அவளின் வீட்டினை அடையும்வரைதான். கிட்டதட்ட எல்லாப் பிரச்சனைகளையும் மறந்திருந்தவளுக்கு அங்கே வந்த நொடி எல்லாமே மீண்டும் நினைவுக்கு வந்து அவளை வேதனைப்படுத்தியது.

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy

You cannot copy content