You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Monisha's VET - 35

Quote

35

வீரேந்திரனின் எதிர்பார்ப்பை உணர்ந்த ரவி, "அக்கா... அங்கிள்கிட்ட எனக்கு என் அரண்மனையும் முக்கியம்... அவரும் முக்கியம்... நான் இரண்டையுமே விட்டுதர மாட்டேன்னு முடிவா சொல்லிட்டாங்க?!" என்று சொல்லி முடித்தான்.

இதைக் கேட்ட நொடி வீரேந்திரன் புளங்காகிதம் அடைந்தான். அவன் இறுகிய முகத்தில் சட்டென புன்னகை மின்னலென மின்னி மறைந்தது. இப்படி அவள் சொல்லும் போது தான் அருகிலிருந்து கேட்காமல் போய்விட்டோமே என்ற அவன் மனம் கொஞ்சம் ஆதங்கப்பட்டது. ஆனால் அடுத்து கணமே ரவி சொன்னதைக் கேட்டு அவன் இதயத்தில் கூரிய ஈட்டிப் பாய்ந்தது.

"அக்கா... நீங்க எந்தச் சூழ்நிலையிலும் அவங்களை விட்டுக்கொடுக்க மாட்டீங்கன்னும் சொன்னா" அந்த வார்த்தையைக் கொஞ்சம் அழுத்தமாகவே அவன் சொன்னான்.

வீரேந்திரனை அந்த வார்த்தை குத்திக் கிழிக்க ரவி மேலும்,

"அங்கிள் கோவிச்சுகிட்டு அப்பா கிட்ட சண்டைப் போட்டுட்டுப் போயிட்டாரு... அப்பாவும் அக்காகிட்ட ரொம்ப கோபப்பட்டுப் பேசிட்டாரு... அக்கா அந்த அரண்மனை தவிர எனக்கு வேறெந்த சொத்தும் நகையும் வேணாம்னு சொல்லிட்டாங்க" என்று நடந்த நிகழ்வைச் சுருக்கமாய் விளக்கிவிட்டான். இவற்றை எல்லாம் கேட்ட பின் வீரேந்திரனைக் குற்றவுணர்வு தாக்கியது.

எந்தச் சூழ்நிலையிலும் தான் அவளை விட்டுக்கொடுக்கமாட்டேன் என்ற அவளின் நம்பிக்கையைத் தான் போட்டு உடைத்துவிட்டோம் என்று தோன்றியது.

சற்று முன்பு ரகுவிடம் அவளைத் தூக்கியெறிந்து பேசியதை எண்ணி வேதனையுற, இந்த நிலையில் தானும் அவளுக்கு எதிராய் நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டதை எண்ணி வருத்தமுற்றான்.

இதனை அறிந்தால் அவள் மனம் எந்தளவுக்கு வேதனைக் கொள்ளும் என எண்ணியவன் ரவியை நோக்கி, "இந்தப் பிரச்சனையினாலதான் அவ வரலையா ரவி?" என்று கேட்டான்.

"இல்ல மாமா... அக்கா புறப்படலாம்னு கிளம்பிட்டா... அப்ப ஒரு ஃபோன் கால் வந்துச்சு... அதுக்கப்புறம்தான் நீங்க முன்னாடி போங்க... நான் வந்திடுறேன்னு சொன்னா" என்று சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தவனின் மனம் அவளுக்கு ஏதேனும் நேர்ந்திருக்குமோ என்று கேள்வியைக் கேட்டு அவனை அச்சுறுத்தியது.

உடனே தமிழின் வீட்டிற்கு அழைத்து விஜயாவிடம் விசாரிக்க அவள் எப்போதோ புறப்பட்டுவிட்டதாகவே சொன்னார். அடுத்த முயற்சியாய் அவள் அலுவலகத்திற்கு அழைத்துப் பேசினான். அங்கே வேறொரு அதிர்ச்சிகரமான தகவல் காத்திருந்தது.

ரமணியம்மாள்தான் வீரேந்திரனிடம் பேசினார். எடுத்ததுமே அவன் தமிழைப் பற்றி விசாரிக்க அவர் அங்கு நிகழ்ந்த பெரிய களேபரத்தைப் பற்றி விவரிக்கலானார்.

"ஆஃபிஸ்ல... நேத்து நைட்... யாரோ தமிழோட கேபின்ல புகுந்து எதையோ திருடியிருக்காங்க" என்றார்.

இதை கேட்டதும் அவனுக்கு ஷாக்கடித்தது போன்ற உணர்வு. தர்மாவின் டைரி களவாடப்பட்டிருக்கலாம் என்று யூகித்தவன் அவரிடம், "ஓ... அப்போ இந்த விஷயம் தெரிஞ்சு தமிழ் அங்க வந்திருந்தாளோ" என்று கேட்டான்.

"ம்ம்ம்ம்... நான் ஆஃபிஸ் வந்து பார்த்ததுமே அவளுக்கு இதை பத்தி கால் பண்ணி சொன்னேன்... அவளும் வந்து பார்த்து ரொம்ப ஷாக்காயிட்டா... நான் போலீஸ்கிட்ட போலாம்னு சொன்னதுக்கு... அவ உங்க கிட்ட இதை பத்தி பேசறதா சொன்னா... அவ இதை பத்தி உங்ககிட்ட சொல்லலியா?" என்று அவர் கேட்க, வீரேந்திரனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

அவள் இது பற்றி தன்னிடம் எதுவும் சொல்லவில்லை. அவள் ஃபோனும் இப்போது சுவிட்ச்ஆஃப். அவன் மூளை கிட்டதட்ட ஸ்தம்பித்திருக்க எதிர்புறத்தில் ரமணியம்மாள், "என்னாச்சு? தமிழுக்கு ஏதாவது பிரச்சனையா?!" என்று பதட்டமாய் வினவும்,

"அப்படி எல்லாம் இல்ல... அவ ஃபோன் ஆஃப்ல இருந்துச்சு... அதான் ஆஃபிஸ்ல இருக்காளோன்னு" என்று இழுத்தான்.

"இல்லையே... காலையில வந்து பார்த்துட்டு உடனே கிளம்பிட்டா... ஆ... அப்புறம் இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்"

"என்ன மேடம்?" என்று ஆர்வமாய் வினவினான்.

"தமிழோட கேபின்ல திங்ஸ் எல்லாம் கலைஞ்சிருந்தது... அங்கே டேபிள் மேல ஒரு லெட்டர் அவ பேர் போட்டு இருந்துச்சு"

"லெட்டரா?" அதிர்ச்சியானவன் உடனே ரவி சொன்னது நினைவுக்கு வர, "லெட்டர்ல என்ன இருந்துச்சு மேடம்?" என்று அவசரமாய் வினவினான்.

"உம்ஹும்... எனக்கு அதிலிருந்த வார்த்தைகள் புரியல வீரேந்திரன்" என்றார்.

"புரியாதளவுக்கு அப்படி என்ன?"அவன் யோசனையோடுக் கேட்டான்.

"ஏதோ கல்வெட்டெழுத்துக்களாம்... அப்படிதான் தமிழ் சொன்னா... அப்புறம் அந்த லெட்டரை எடுத்துக்கிட்டு உடனே அவ கிளம்பிட்டா" என்றார். அழைப்பை துண்டித்தவனுக்கு நடப்பது எல்லாம் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது.

பிரச்சனை மெல்ல மெல்லத் தீவிரமடைய ஆரம்பித்திருந்தது. அதனை அவனும் உணர்ந்திருந்தான். அதுவும் இந்த விஷயத்தில் முக்கியமாய் குறி வைக்கப்பட்டிருப்பது தமிழ்தான் என்பதை அவன் கேட்டறிந்த நிகழ்வுகள் உணர்த்தின.

அவள் இப்போது எங்கிருக்கிறாள்? அவளுக்கு ஏதேனும் ஆபத்து நேரந்திருக்குமா? இந்தக் கேள்விகளே அவனைச் சுழற்றி அடிக்க அவன் மீது அவனுக்கே கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.

தான் இப்படி ஒரு பதவியில் இருந்தும் அவளைப் பாதுகாக்காமல் விட்டுவிட்டோமோ?! அவனை அவமானம் ஒரு பக்கம் தின்று கொண்டிருந்தது.

எப்போதுமே துரிதமாய் யோசிக்கும் அவன் மூளை வேலை நிறுத்தம் செய்தது. எதைச் செய்வதென்றே புரியாமல் தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டவன் மீண்டும் உயிர் பெற்றவனாய் ரகு இருந்த அறைக்குள் நுழைந்தான்.

ரகுவின் தாய் அவன் கரத்தைப் பிடித்துக் கொண்டு கவலையில் ஆழ்ந்திருக்கத் தேவி பின்னோடு நின்றபடி அவருக்கு ஆறுதல் உரைத்திருந்தாள்.

ரகுவின் நினைப்பெல்லாம் இவர்களிடம் இல்லை. அவன் தோழியைப் பற்றிய எண்ணத்தோடே படுத்துகிடந்தான். வீரேந்திரன் மீண்டும் உள்ளே நுழைந்த மாத்திரத்தில் எல்லோரையும் வெளியே காத்திருக்க சொன்னான்.

ரகுவிற்கோ அவனைப் பார்த்து கோபம் பொங்கியது. மனைவியைக்கூட கைது செய்வேன் என்று சொல்லும் அவன் கடமை உணர்ச்சியை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியவில்லை.

"ரகு... கரெக்டா யோசிச்சு சொல்லு? உனக்கு நடந்தது ஜஸ்ட் ஆக்ஸ்டென்தானா?" சந்தேகமாய் கேள்வி எழுப்பினான்.

ரகு அப்போதுதான் அதை சொல்ல மறந்துவிட்டோமே என எண்ணியவன் நிமிர்ந்து நோக்கியபடி, "இல்ல... கண்டிப்பா அது ஆக்ஸ்டென்ட் இல்ல... ப்ளேன் பண்ணி மோதியிருக்காங்க" என்றான்.

வீரேந்திரன் இதயம் அதிவேகமாய் துடிக்க அவனிடம், "யார்? எதனால் இப்படி செஞ்சிருப்பா? " என்று கேட்டான்.

ரகு குழப்பமாய் தெரியாது என்பது போல் தலையசைக்க வீரேந்திரனுக்கு அப்போது காலையில் தமிழ் மருத்துவமனை தொலைப்பேசிக்கு அழைத்துப் பேசியது நினைவுக்கு வந்தது.

அவளுக்கு எப்படி ரகுவின் விபத்து குறித்து தெரியும் என்று கேட்டதற்கு ஏதோ காரணம் சொல்லி சமாளித்துவிட்டாள். ரவி சொன்ன கடிதம் பற்றி எண்ணியவன் அதில் ரகுவின் விபத்து பற்றி இருந்திருக்குமோ? என்று எண்ணி மௌனமாயிருக்க ரகு அவன் சிந்தனையைத் தடைச் செய்தான்.

"தமிழுக்கு ஏதாவது பிரச்சனையா? அவ ஏன் இன்னும் வரல?"

வீரேந்திரன் பதிலுரைக்க முடியாமல் நிற்க ரகு அவனை நோக்கி, "ஏன் பதில் சொல்ல மாட்டிறீங்க? அப்போ உண்மையிலயே ஏதோ பிரச்சனை" என்று கோபமாய் கேட்டான்.

வீரேந்திரன் நிதானமாக, "எனக்கு சரியா சொல்ல தெரியல... பட் அவளை கான்டெக்ட் பண்ண முடியல... வெயிட் பண்ணிப் பார்ப்போம்" என்றான்.

"எதுக்கு? அவளை அரெஸ்ட் பண்றதுக்கா?" ரகுவின் வார்த்தைகள் கூரிய வாளென அவனைத் தாக்க முற்பட்டன.

"நீ வேற... என் டென்ஷன் புரியாம பேசாத ரகு"

"உங்க டென்ஷன் என்னன்னு எனக்கு நல்லா புரியுது... அவளோட கைரேகை மேட்சாயிடுச்சு... ஸோ... அடுத்த ஆக்ஷன் அரெஸ்ட்தானே... அதுக்குதானே வெயிட் பண்றீங்க"

வீரேந்திரன் முகமெல்லாம் கோபத்தால் சிவந்தாலும் அவள் மீது கொண்ட அவனின் தூய்மையான நட்பின் மீது அவனை அறியாமல் மதிப்பு உண்டானது.

ஆதலால் அவன் பொறுமையாக, "இத பாரு ரகு... நல்லா கேட்டுக்கோ... உன் ஃப்ரண்ட் மேல எனக்கு எந்த வெஞ்சன்ஸும் கோபமும் இல்ல... அன்னைக்கு நான் அவளை அடிச்சதுக்கு கூட அவதான் காரணம்... நான் அவளுக்கு எந்தப் பிரச்சனையும் கொடுக்கிறதில்ல... இன்னும் கேட்டா அவளுக்கான பிரச்சனையை எல்லாம் அவளேதான் இழுத்துவிட்டுக்குறா... இப்பவும் என்ன பிரச்சனையில சிக்கிட்டாளோன்னு பயமா இருக்கு...

ப்ளீஸ் அவ வந்தா என்கிட்ட எல்லா விஷயத்தையும் மறைக்காம சொல்ல சொல்லு... அப்பதான் நான் எதாவது பண்ண முடியும்... நீ அவளுக்கு நல்ல ஃப்ரண்ட்னா... இதை செய்" என்று அழுத்தமாகவும் கொஞ்சம் அதிகாரமாகவும் உரைத்துவிட்டுப் புறப்பட்டான்.

அவனுடைய வாகனம் மருத்துவமனையை விட்டு வேகமாய் விரைந்தது. அவன் தமிழ் எடுத்துச் சென்ற காரின் எண்ணை வைத்து காஞ்சிபுரம் வரும் சாலைகளில் எல்லாம் விசாரிக்க உத்தரவிட்டிருந்தான். அதோடு அல்லாமல் தமிழின் கைப்பேசி எங்கே கடைசியாய் அணைத்து வைக்கப்பட்டது என்றும் அவள் பேசிய அழைப்புகள் பற்றிய விவரங்களையும் அறிவதற்கான முயற்சியில் இருந்தான்.

அவள் தைரியமானவள். எத்தனை பெரிய பிரச்சனையையும் அவள் சமாளித்துவிடுவாள் என்று அவனுக்கு அவனே தைரியம் உரைத்து கொண்டாலும் மனம் நிம்மதியடைய மறுத்தது.

அவளைப் பார்க்காமல் இனி எதுவும் ஓடாது அவனுக்கு. அவளைப் பார்த்தே தீர வேண்டும். எங்கிருந்தாலும் அவளை தான் தேடிக் கண்டுபிடித்தே தீர வேண்டும். அவளுக்கு எந்த ஆபத்தும் நேர்ந்துவிடாமல்…

அவளைப் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெறாமல் அவன் நம்பிக்கை மெல்ல தளர்ந்து போய் கொண்டே இருந்தது. அந்த சமயத்தில் சோர்வோடு காவல் நிலையத்திற்குள் அவன் நுழையவும் அங்கே ஒரே அமளதுமளியாய் இருந்தது. அங்கே ஒரு பெண் ஒரு ஆணிண் சட்டையைப் போட்டு உலுக்கியபடி கண்ட மேனிக்கு கோபம் தாங்காமல் கத்தத் தொடங்கினாள்.

"இப்படின்னு சொல்லி இருந்தா... நான் உன்னை விட்டு அப்பவே போயிருப்பேனே படுபாவி... நமக்கு ஒரு குழந்தை பிறக்கலன்னு நான் வருத்தப்பட்டுச் சொல்லும் போதெல்லாம்... பிறக்கும் பிறக்கும்னு சொன்னியே... இப்படி கழுத்தறுத்திட்டியே டா...வர கோபத்துக்கு உன்னைக் குத்திக் கொன்னுடுலாம்னு இருக்குடா"

அத்தனை நேரம் அந்தப் பெண் காத்து வைத்திருந்த பொறுமையெல்லாம் ஆக்ரோஷமாய் மாறியிருந்தது. ஒரு பெண் கான்ஸ்டெபிள் அவளைக் கட்டுப்படுத்த முடியாமல் அவதியுற, வீரேந்திரன் அங்கே வந்து நின்றான். எல்லோரும் அவனைப் பார்த்து பயந்து நிற்க, அந்தப் பெண்ணும் அவனை பார்த்ததும் சற்று அஞ்சியபடி நின்றார்.

வீரேந்திரன் கோபப்படுவதற்கு முன்னதாக எஸ்.ஐ சண்முகம் முந்திக் கொண்டு, "ஏம்மா... நான் பொறுமையா பேசச் சொல்லி சொன்னா நீ உன் இஷ்டத்துக்கு நடந்திட்டுருக்க... இது போலீஸ் ஸ்டேஷனா இல்ல வேறதெச்சுமா?" என்று கேட்டு அந்தப் பெண்ணை உருட்டி மிரட்டினான்.

வீரேந்திரன் கூர்மையாய் பார்த்தபடி நிற்கவும் சண்முகம் மேலும்,

"நான் இந்த லேடிக்கிட்ட அப்பதிலிருந்து சொல்லிட்டிருக்கேன் சார்... தேவையில்லாம இப்படி கத்தி ஊரைக் கூட்டுறாங்க" என்றான்.

அந்தப் பெண்ணை வீரேந்திரன் பார்க்கவும் அருகிலிருந்த பெண் கான்ஸ்டெபிள் அவள் காதோரம், "ஏசிபி சார்... வந்துட்டார்... போச்சு" என்று பயமுறுத்திக் கொண்டிருந்தாள்.

அந்தப் பெண்ணை நோக்கி வந்தவன் நிதானித்து, "என்னம்மா பிரச்சனை? பயப்படாம சொல்லுங்க" என்றான்.

அவள் கண்ணீரைப் பெருக்கச் சண்முகம் ஏதொ சொல்ல முற்பட, அவன் அவரைக் கைக்காண்பித்து நிறுத்தினான்.

"நீ சொல்லும்மா"

அந்தப் பெண் தன்னை தைரியப்படுத்திக் கொண்டு, "பாவி... என் வாழ்க்கையே கெடுத்துட்டான் சார்... கல்யாணமாகி ஏழு வருஷமாகுது... எனக்கு தெரியாம வேறு ஒரு குடும்பம் வைச்சிருக்கான்" என்று சொல்லி தாரை தாரையாய் கண்ணீர் வடித்தார்.

வீரேந்திரன் ஆழமாய் அவனைப் பார்த்து,."பொண்டாட்டிக்குத் தெரியாம வேறு ஒரு குடும்பம் வச்சுருக்கியா?!" என்று கேட்டான்.

அவன் முகத்தில் திகில் சூழ்ந்திட படபடப்பாய் நின்றவனைக் கூர்மையாய் நோக்கி, "ஹ்ம்ம்ம்... கேட்டதுக்கு பதில் சொல்லு" என்றான்.

அவன் அச்சத்தோடு பதில் பேசாமல் நிற்பதை வைத்தே அவன் மன எண்ணத்தை படித்தவன், அவனைப் பளாரென்று அறைந்துவிட்டு,

"உன்னை மாதிரி ஆளை எல்லாம் மன்னிக்கவே கூடாதுறா... ஹ்ம்ம்... இதேபோல துரோகத்தை உங்க அப்பா உங்க அம்மாவுக்கு செஞ்சா மன்னிச்சுருவியாடா... ராஸ்கல்... உன்னை எல்லாம்" என்று மீண்டும் அடிக்க கை ஓங்கியவன் பின் அவ்வாறு செய்யாமல் சண்முகம் புறம் பார்வையைத் திருப்பினான்.

"இவன் பேர்ல எஃப் ஐ ஆர் போடுங்க" என்று சொல்ல சண்முகம் தயங்கியபடி, "சார் பேஃம்லி பிராப்ளம்... கொஞ்சம் யோசிச்சு" என்றதும் அவன் முகம் கோப கனலாய் மாறியது.

"அப்போ மன்னிச்சுடலாம்... என்ன சண்முகம்... "

"இல்ல சார்"

அவன் அந்த விளக்கங்களைக் கேட்க விரும்பாமல், "ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கோங்க... சமூக விரோதிகள், தீவிராவிதகள், கொலைகாரனுங்க, வானத்தில இருந்து குதிக்குறதில்லை...

மோசமான குடும்ப அமைப்புகள்... மோசமான பேரண்ட்ஸ்... அங்கிருந்துதான் உருவாகிறாங்க... இந்தத் தப்பை மன்னிச்சா நாளைக்கு இவன் ஒரு தப்பான உதாரணமா மாறுவான்... இவன் செஞ்சது ரொம்ப சாதாரணமான விஷயமாயிடும்... தப்போட ஆணி வேறை விட்டுவிட்டு கிளையை வெட்டிக்கிட்டிறது பைத்தியகாரத்தனம்... இவனுங்கதான் சமூக சீர்கேடுகளுக்கு முதல் காரணம்" என்று சொல்லிவிட்டு அந்தப் பெண்ணின் புறம் திரும்பி,

"இதபாரும்மா... இன்னைக்கு இப்படி எல்லாம் பேசிட்டு... நாளைக்கு புருஷன் கிருஷன்னு வரக்கூடாது... சொல்லிட்டேன்" என்று கண்டிப்பாய் உரைத்துவிட்டு தன் அறையை நோக்கிச் சென்றான். அவன் சென்ற பின் அந்த இடமே புயலடித்து ஓய்ந்தது போல் அமைதி சூழ்ந்தது.

வீரேந்திரன் கவலையோடு தன் இருக்கையில் அமர்ந்து கொள்ள, அவன் மனம் சட்டென காவல் நிலையத்திற்குள் நுழைந்த போது நிகழ்ந்த கலட்டாவை எண்ணிக் கொண்டன.

அந்தப் பெண்ணின் ஆவேசம் அவனுக்கு தமிழை நினைவுபடுத்தியது. 'வர கோபத்துக்கு உன்னைக் குத்திக் கொன்னுடுலாம்னு இருக்கு' என்று அந்தப் பெண் சொன்னதையும் அன்றிரவு தமிழ் ஆக்ரோஷமாய் 'என்னை விடு நான் அவனைக் கொல்லணும்' என்று சொன்னதோடுப் பொருத்திப் பார்த்தான்.

அப்போதுதான் அவன் மனதிற்குள், 'தமிழ் உணர்ச்சி வசப்பட்டா நிச்சயம் கொலை கூட பண்ணுவா... கனவில அவ கத்தினதைப் பார்த்தா அது வெறும் கோபம்தான்... அவ எதையும் ப்ளேன் பண்ணிப் பண்ணல... பட் கோபத்தில கத்தியை எடுக்கிறவங்க குத்ததானே செய்வாங்க... யாருமே லாவகமா கழுத்தை வெட்டுவாங்களா என்ன?

தட் மீன்ஸ்... கோபத்தில அவ கொலை பண்ணக் கத்தி எடுத்திருக்கலாம்... அப்போ யாராவது அவளைத் தடுத்திருக்கணும்... கனவில கூட அவ சொன்னதை பார்த்தா... அவ கூட யாராச்சும் இருந்திருக்கலாம்… அதே நேரத்தில அந்தக் கத்தியை வேற யாரோ அவளை மாட்டி விட யூஸ் பண்ணி இருக்காங்க'

இவ்வாறாக அடுக்கடுக்காய் தன் எண்ண அலைகளைப் படரவிட்டவனுக்குத் தேடிய கேள்விக்கான விடைக் கிட்டியதாகத் தோன்றியது. மனதின் பாரம் லேசாய் இறங்கியது

அப்போதுதான் வீரேந்திரனுக்கு தமிழின் கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டது காஞ்சிபுரத்தில் என்ற தகவல் வந்து சேர, அவன் அதிர்ந்து போனான்.

அப்படியெனில் அவள் ஏன் இன்னும் வந்து சேரவில்லை? இந்தக் கேள்வியோடு அவள் கடைசியாய் அழைத்த அழைப்புகளின் விவரங்களைப் படித்தான். அதில் இருந்த சந்தேகத்திற்குரிய அழைப்பு ஆதிபரமேஸ்வரி.

பாரதி பத்திரிக்கையில் தான் சந்தித்தவளாயிற்றே. அன்று நடந்தவற்றை நினைவுபடுத்தியவன் நிச்சயம் அவளுக்குத் தமிழை நன்றாகவே தெரிந்திருக்க கூடும் என்று அன்றே கணித்துவிட்டான்.

எனில் தன் கணிப்பு சரிதான். அன்று ஆதி தன்னிடம் சொன்னது பொய். இவர்கள் இருவருக்குமே தர்மாவின் வழக்கில் ஏதோ முக்கிய தொடர்பிருக்கிறது.

இவன் இந்தச் சிந்தனையோடு ஆதிபரமேஸ்வரிக்கு அழைக்க அவள் ஃபோனுமே துரதிஷ்டவசமாய் அணைத்து வைக்கப்பட்டதாகப் பதில் வந்தது.

அவன் பதட்டம் அதிகரித்தது. இருவரும் ஏதோ ஆபத்தில் சிக்கிக் கொண்டிருக்கக் கூடும் என அவன் மூளை எச்சரித்துக் கொண்டிருந்தது. ஆதியின் அலுவலகத்தில் விசாரித்தவன் அவள் இல்லை என்பதை அறிந்து வீட்டிற்கு ஃபோன் செய்தான்.

இறுதியாய் விஷ்வாவிடம் அவன் அலைப்பேசியில் விசாரிக்க, அவனுக்குத் தலையில் இடியே இறங்கியது. நேற்றே அவளுக்கு நடந்த விபத்தால் அவன் கதிகலங்கிப் போயிருந்தான்.

இப்போது மீண்டும் இன்னொரு அதிர்ச்சியா? அதனைத் தாங்கும் அளவுக்காய் பலமான இதயம் அவனுக்கில்லை.

வீரேந்திரன் கேள்விக்கெல்லாம் விஷ்வாவால் பதிலளிக்க முடியவில்லை. இருந்தும் நடந்த விபத்தைப் பற்றி விஷ்வா வீரேந்திரனிடம் விவரிக்க இந்தத் தகவல் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இறுதியாய் விஷ்வாவிடம், "கவலைபடாதீங்க... உங்க வொய்ஃப்க்கு ஒன்னும் ஆகாது... கண்டுபிடிச்சிடலாம்" என்று அவனுக்குத் தைரியம் கூறுவது போல தன் மனதிற்கும் நம்பிக்கை வார்த்தைகளைப் புகட்டிக் கொண்டான். ஆனால் அவன் மனம் பலவீனப்பட்டுக் கொண்டே வந்தது.

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy

You cannot copy content