You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Monisha's VET - 37

Quote

37

"வலிக்குது ஆதி" என்று தமிழ் கரத்தைத் தேய்த்தாள்.

ஆதி உடனே, "இப்ப நீ சவால் விடறது ரொம்ப முக்கியமா?" என்று கேட்டுக் கடுப்பானாள்.

"பின்ன, ஓவரா பேசுறானுங்க" என்று பொங்கியவளின் கரத்தை அழுத்திய ஆதி, "கொஞ்சம் மெதுவா பேசுடி... மாட்டிக்க போறோம்" என,

தமிழும் குரலைத் தாழ்த்தியபடி, "சேன்ஸே இல்ல.. நம்ம இருக்கிற இடத்தை அவனுங்களால கண்டுபிடிக்கவே முடியாது" என்று உறுதியாக கூறினாள்.

அப்போது அவர்களின் ரொம்பவும் அருகாமையில் காலடி சத்தம் கேட்கவும் இருவரும் ஒரே நேரத்தில் மாறி மாறி தங்கள் வாய்களைப் பொத்திக் கொண்டனர்.

கண்டுபிடிக்க முடியாதெனினும் அச்சம் அவர்கள் மனதை ஆட்டுவித்தது. இருளோடு நிசப்தமும் ஆளுமை புரிந்த அந்த அறைக்குள் இருவரின் எண்ணமும் பின்னோக்கி சென்று நடந்த நிகழ்வுகளை அசைபோட்டன.

*

தமிழ் அவளின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அந்தக் கடிதத்தைப் பார்த்த நிமிடத்தில் இதயம் அதிவேகமாய் படபடக்க, நடந்து கொண்டிருக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கான தீர்வையும் அவள் கணவனால் மட்டுமே அளிக்க முடியும் என்ற நம்பிக்கை தோன்றியது.

அதுவல்லாது அலைப்பேசியில் இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை அவனிடம் பகிர்ந்து கொள்வது பாதுகாப்பில்லை என்று எண்ணினாள். ஏனெனில் டைரி திருடுப் போனதற்குப் பின்னணியில் யாரோ அவள் அலைப்பேசி தகவல்களை ஒட்டுக்கேட்டிருக்க கூடும் என்ற சந்தேகம்தான்.

அலுவலத்தில் தான் டைரி வைத்திருக்கும் விஷயத்தை ஆதியிடம் அலைப்பேசியில் உரைத்ததைத் தவிர மற்றபடி வேறு எப்படியும் இந்த விஷயம் கசிய வாய்ப்பில்லை. இவ்வாறு சிந்தித்தபடியே காரில் ஏறப் போனவளை ஒரு கரம் பற்றி இழுக்க கொஞ்சம் அரண்டு போனாள்.

ஏனெனில், அவளைச் சுற்றியிருந்த பிரச்சனைகள் அப்படி அவளை மிரட்டிக் கொண்டிருந்தது. ஆனால் பின்னோடு ஆதி நின்றிருக்கவும் நிம்மதியாக மூச்சை இழுத்துவிட்டாள்.

"என்ன பிரச்சனை தமிழ்? எதையோ கண்டு பயந்த மாதிரி இருக்க... போதாக்குறைக்கு காலையில ஃபோன் பண்ணி என்னை வேற டென்ஷன் படுத்திட்ட" என்று ஆதி விசாரிக்கவும்,

"ஆதி... ப்ளீஸ்... ரிலேக்ஸ்... என்ன பிரச்சனை ஏதுன்னு உனக்கு அப்புறமா டீடைலா சொல்றேன் நீ கிளம்பு" என்று சொல்லிவிட்டு உடனே திரும்பி நடக்க தொடங்கினாள்.

ஆதிக்கு அவளின் இந்த நிராகரிப்பு புதிதாய் இருக்க, தமிழுக்கு தன் தோழியின் பாதுகாப்பே முன்னின்றது.

ஆதி அவசரமாய் முன்னேறிச் சென்று அவள் கையிலிருந்து கார் சாவியைப் பறித்துக் கொண்டாள்.

"ஆதி... ப்ளீஸ்" என்று தமிழ் தவிப்புற ஆதி கார் கதவில் சாய்ந்தபடி, "எங்க போற?" என்று கேட்டுப் புருவத்தை உயர்த்தினாள்.

விஷயத்தைச் சொல்லி ஆதியையும் பிரச்சனையில் சிக்க வைக்கத் தமிழுக்கு மனம் வரவில்லை. என்ன பொய் சொன்னாலும் அது ஆதிக்குப் பிடிப்பட்டுவிடும்.

என்ன சொல்வது என்று தமிழ் யோசித்திருக்க ஆதி கார் கதவைத் திறந்து ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தபடி , "சரி... வா போகும் போது பேசிட்டே போவோம்" என்றாள்.

தமிழுக்கு டென்ஷன் தலைக்கேற, "ஆதி... ப்ளீஸ் கெட் டவுன்... உனக்கு ஏற்கனவே என்னால வந்த பிரச்சனை போதும்... இதுக்கு மேல உன்னை ஆபத்துல சிக்க வைக்க நான் விருப்பப்படல" என்று காருக்குள் தலையை விட்டபடி இறுக்கமாக உரைத்தாள்.

ஆதி, "பிரச்சனைகள் எனக்கு புதுசில்ல... பட் நீ இப்படி என்னை வெட்டிவிடற மாதிரி பேசுறது புதுசா இருக்கு... ரொம்ப கஷ்டமா இருக்கு...

உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கண் இடுக்கண் கலைவதாம் நட்பு... இந்த குரலுக்கான விளக்கத்தை நான் உனக்கு சொல்ல வேண்டியது இல்ல... இருந்தாலும் சொல்றேன்... தோழமைக்கு ஒரு பிரச்சனைன்னா அதை அவங்க சொல்லாமலே புரிஞ்சுக்கிட்டு உதவியா இருக்கிறதுதான் உண்மையான நட்பு... நீ என் நட்பை மதிக்கிறன்னா... வா போகலாம்" என்றவள் கூறவும் அந்த வார்த்தையை மீற முடியாமல் தமிழ் பக்கத்து இருக்கையில் அமர்ந்து டேஷ் போர்ட்டில் அவள் கையில் இருந்த புத்தகத்தை வைத்து மூடினாள்.

ஆதி எங்கே செல்வது என்று கேட்க தமிழ் மருத்துவமனை பற்றிய விவரங்களை கூறி நடந்தேறிய நிகழ்வுகளைப் பற்றியும் அந்த மிரட்டல் கடிதங்களைப் பற்றியும் சொல்லி முடித்தாள்.

ஆதி அதிர்ச்சியோடு, "அதென்ன பொக்கிஷம்? இதைப் பத்தி நீ என்கிட்ட ஒரு தடவைகூட பேசுனதில்லையே" என்றாள்.

"சொல்ல கூடாதுன்னு இல்லை... சொல்ல கூடாதுன்னு எங்க தாத்தா என்கிட்ட சத்தியம் வாங்கி இருக்காரு... இதை பத்தி வெளியே யாருக்குமே தெரிய கூடாதுன்னு சொல்லி இருக்காரு... உனக்குதான் தெரியுமே... நான் என் தாத்தாவோட வார்த்தைக்கு எந்தளவுக்கு மதிப்பு கொடுப்பேன்னு" என்றாள்.

ஆதியும் புரிதலோடு தலையசைத்தவள், "சரி... உன் போலீஸ்காரர் கேட்பாரே அப்ப என்ன பண்ணுவ" என்றாள்.

"அதை சொல்ல கூடாதுன்னுதானே அவர்கிட்ட நான் நிறைய விஷயங்களை சொல்ல முடியாம மறைக்க வேண்டியதா போச்சு"

"இதுவரைக்கும் சரி... பட் இப்ப கேட்டா"

"சொல்ல வேண்டிய விஷயங்கள் மட்டும் சொல்லுவேன்..."

"அந்த தர்மாவைக் கொலை செய்ய போனியே... அதையும் சேர்த்தா"

"சொல்லித்தானே ஆகணும்"

"நீ சொல்ற உண்மையை வீரேந்திரன் நம்புவாரா தமிழ்"

"ஹ்ம்ம்ம்... தெரியல"

"அந்தக் கொலை செஞ்ச கத்தில உன் கைரேகை இருந்தா... அதை அவர் செக் பண்ணா"

"கண்டிப்பா செக் பண்ணுவாரு" என்றாள் கணவனைப் பற்றி நன்கு அறிந்தவாளாய்!

ஆதி கலக்கத்துடன், "கேஸ் உனக்கெதிரா ஃபைல் ஆகும்... செய்யாத கொலைப் பழி உன் மேல விழுந்திரும்..." என,

"கொஞ்சம் விட்டிருந்தா அந்த தர்மாவை நானே போட்டுருப்பேன்... நீ நடுவில வரலன்னா... நான் குத்துறதுக்குள்ள அந்த ராஸ்கல் மூவாயிட்டான்" என்று தமிழ் அந்த நாளை நினைவுப்படுத்தினாள்.

ஆதியின் பிடி நழுவிய போது தமிழ் தர்மாவின் மீது கத்தியை ஓங்கிக் கொண்டு போக அவர் சுதாரித்து அவளைத் தடுத்து அந்தக் கத்தியைப் பறித்துக் கொண்டார்.

தமிழ் தரையில் வீழ்ந்துவிட எத்தனிக்க ஆதி அவளை விழாமல் தாங்கிக் கொண்டாள். தர்மா கர்வப் புன்னகையோடு, "பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்" என்றதும் தமிழுக்குக் கோபம் பொங்கிக் கொண்டு வர,

"நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட... புழு பூத்துதான் சாவ" என்று சபிக்க தர்மா உணர்ச்சிகளற்று நின்றிருந்தார். ஆதி அத்தோடு தமிழை வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு வெளியேறிவிட தமிழின் சாபம் விரைவாய் மெய்ப்பித்து போனது.

இந்த நினைவுகளுக்குள் இரு தோழிகளும் மூழ்கிவிட, அப்போது அந்த ஆளில்லாத சாலையில் வேகமாய் முன்னேறி வந்த அவர்கள் கார் முன்பு ஒரு பைக் வேகமாய் மறித்தபடி வந்து கீழே விழவும் ஆதி அவசரமாய் பிரேக்கின் மீது கால் வைத்து அழுத்தினாள்.

ஆதி கதவைத் திறந்து என்னவென்று பார்க்க போக அந்தச் சமயம் இருவருக்கும் விளங்கிற்று.

நிகழ்ந்தது விபத்தல்ல... அவர்களை நோக்கி வந்த ஆபத்து...

சில விநாடிகளில் துப்பாக்கி முனையில் அவர்களின் அலைப்பேசிகள் பறிக்கப்பட்டு வேறு வாகனத்தில் ஏற்றப்பட்டனர். அந்த இரு தோழிகளும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே சில நிமிடங்கள் பிடித்தது. கிட்டத்தட்ட ஆறேழு மர்ம நபர்கள் அவர்களைச் சூழ்ந்திருக்க, எதிர்த்து போராடுவது அத்தனை உசிதமில்லை என்று இருவருமே முடிவெடுத்தனர்.

அந்த மர்ம நபர்களின் முக்கிய குறி தமிழ்தான். அவளை நோக்கி ஒருவன், "அந்த பொக்கிஷம் எங்க இருக்கு?" என்று கேட்க அவள் சலனமின்றி, "எந்த பொக்கிஷம் பாஸ்" என்றாள்.

ஆதி சிரிப்பை அடக்கியபடி உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

"இந்த விளையாட்டெல்லாம் வேற யார்கிட்டயாவது வைச்சுக்கோ... அப்படியே கடல்ல தூக்கிப் போட்டிருவேன் பார்த்துக்கோ" என்று முகத்தைக் கொடூரமாய் வைத்துக் கொண்டு மிரட்டிய போதும் தமிழால் புன்னகையிக்காமல் இருக்க முடியவில்லை.

அந்த வார்த்தை அவள் கணவனையும் அன்று நடந்த நிகழ்வையும் நினைவுபடுத்த அவள் அவனை ஏறிட்டுப் பார்த்து, "எங்களை ஒழுங்கா இறக்கி விட்டுவிடுங்க... அப்புறம் பிரச்சனை உங்களுக்குதான்" என்று உரைத்தாள்.

அவன் ஏளனமான சிரித்தபடி, "மேடம் நம்மல மிரட்டுறாங்க" என்றதும் அந்த வாகனத்தில் உள்ளவர்களும் அவனுடன் சேர்ந்து  சத்தமாய் சிரித்தனர்.

"நான் சீரியஸா சொல்றேன்... நீங்க எங்களைக் கடத்தி வைச்சுருக்கிறது மட்டும் என் ஹஸ்பெண்டுக்கு தெரிஞ்சா... அப்புறம் உங்க நிலைமை எல்லாம் ரொம்ப சீரியஸாயிடும்" என்றாள்.

"ஓ... அந்த ஏசிபியை சொல்றியா... அவன் என்ன அவ்வளவு பெரிய ஆளா"

"பின்ன இல்லையா... ஹீ இஸ் 6.2'' " என்று அவன் உயரத்தின் அளவைச் சொல்லவும் அவன் கடுப்பானான்.

அவள் மேலும், "சொல்றதைக் கேளுங்க... அந்த மனுஷனை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்... நீங்க எல்லாம் சிக்கினா சின்னாபின்னமாக்கிடுவாரு... அப்புறம் வேலியில போற ஓணானெடுத்து வேட்டிக்குள்ள விட்டுகிட்ட கதைதான்... சொல்லிட்டேன்" என்று எச்சரிக்கை விடுத்தாள்.

"உன் புருஷன் வந்தா நாங்க சமாளிச்சிக்கிறோம்... நீ அந்தப் பொக்கிஷத்தைப் பத்தி சொல்லு" என்று நிதானமாகவே கேட்க தமிழ் யோசனையோடு அமைதியானாள்.

அவன் கோபம் அதிகரிக்க ஆதியின் நெற்றியில் துப்பாக்கியை அழுத்தியபடி, "இப்பவும் சொல்ல மாட்டியா" என்றான்.

தமிழ் பதட்டத்தோடு, "ஏ வெயிட்… வெயிட்… நான் சொல்லிடுறேன்" என்றாள்.

ஆதி உடனே, "அவங்க ஜஸ்ட் மிரட்டுறாங்க... நீ சொல்லாதே" என்றாள்.

"உன் உயிரை விட அந்தப் பொக்கிஷம் எனக்கு பெரிசில்ல ஆதி... நான் சொல்றேன்" என்றதும் அவன் மிரட்டலான பார்வையோடு, "ஹ்ம்ம்... சொல்லு" என்றான்.

"தமிழ் வேண்டாம் சொல்லாதே" ஆதி அலற தமிழ் அவளைப் பொருட்படுத்தாமல்,

"அது சிம்மவாசல் அரண்மனையில இருக்கு" என்றதும் அவளைக் கூர்ந்து நோக்கியபடி, "அவ்வளவு பெரிய அரண்மனையில எங்க இருக்கு" என்றான்.

"சொன்னா தெரியாது... நானே எடுத்து கொடுக்கிறேன்... பட் எங்க இரண்டு பேரையும் அதுக்கப்புறம் விட்டுரணும்" என்றதும் அவன் நமட்டுச் சிரிப்போடு தலையசைத்தான்.

அந்த வாகனம் சிம்ம வாசலை நோக்கி சீறிப் பாய்ந்தது. எப்படியாவது அந்தப் பொக்கிஷத்தைக் கைப்பற்றும் தீவிரத்தில் அவர்கள் இருக்க, நூலிழையாய் சிறு சந்தர்ப்பம் கிட்டினாலும் அதை பயன்படுத்தி தப்பிக்கொள்ள அந்த இரு தோழிகளும் காத்துக் கிடந்தனர்.

அரண்மனை வாசலை அடைந்ததும் தமிழை காரிலிருந்து இறக்கிவிட, அவளைப் பார்த்ததுமே காவலாளி அந்த விசாலமான கேட்டைத் திறந்தான். அதற்குப் பிறகாய் அந்தக் கடத்தல் கும்பல் காவலாளி முதல் வேலையாட்கள் வரை அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டிருந்தனர்.

அன்றைய மாலைப் பொழுது மங்கி இருள் சூழக் காத்திருந்தது.

அரண்மனைக்குள் பிரவேசித்ததும் தமிழுக்கு அங்கே நிகழ்ந்த அவர்களின் கல்யாணம் நினைவுக்கு வர, அருகிலிருக்கும் போதெல்லாம் அனாவசியமாய் சண்டையிட்டுவிட்டு இப்போது அவன் அருகாமையைத் தேடும் அவள் மனதை என்ன சொல்ல?

இப்படி யோசித்தவாறே அவள் கால்கள் அன்று போல் அவள் தாத்தாவின் அறைக்குச் சென்றன. அந்தக் கும்பலில் சிலரை ஆங்காங்கே பாதுகாப்புக்கு நிறுத்திவிட்டு முக்கியமான மூவர் மட்டுமே அவளைப் பின்தொடர்ந்தனர்.

அதில் ஒருவன் ஆதியின் தலையில் துப்பாக்கியைப் பிடித்தபடியே வந்தான். அவள் தாத்தாவின் அந்தப் பிரமாண்டமான அறைக்குள் நுழைந்ததுமே அவளுக்குள் ஒருவித தைரியமும் உத்வேகமும் பிறந்தது. அவள் தாத்தாவின் மீது அவளுக்கு அபாரமான நம்பிக்கை. எந்தச் சூழ்நிலையிலும் தன்னை அவர் கைவிடமாட்டார் என்று எண்ணிக் கொண்டிருக்க,

அவள் பின்னிருந்து ஒருவன் மிரட்டலாய், "ரூமோட லைட்டை ஆன் பண்ணு" என்று குரல் கொடுத்தான்.

அவளும் அவன் சொல்படி விளக்கைப் போடவும் மேலிருந்த அந்த பிரமிப்பான அடுக்கு மின்விளக்கு அழகாய் பிரகாசித்தது.

படபடத்து கொண்டிருக்கும் நெஞ்சத்தோடு தன் தோழியைத் திரும்ப நோக்கினாள்.

"என்ன நிக்கிற... எங்கள ஏமாத்தலாம்னு யோசிக்கிறியா?"

"சேச்சே... அப்படி எல்லாம் இல்லை" என்று தோள்களைக் குலுக்க, ஆதிக்கு தன் தோழியின் செயலில் இருக்கும் கள்ளத்தனம் நன்றாகவே புரிந்தது.

"சரி... அந்தப் பொக்கிஷம் எங்கே?"

அவள் உடனே அங்கிருந்த பெரிய மர பீரோவை கை நீட்டிக் காண்பிக்க… அவன் அவளை முறைத்தபடி, "என்ன விளையாடுறியா?!" என்று கேட்டான்.

"நான் விளையாடல... அந்த பீரோவுக்கு பின்னாடி ஒரு ரகசிய கதவிருக்கு" என்றாள். எல்லோருமே வியப்படைந்தனர் ஆதி உட்பட.

அதில் ஒருவன், "உண்மையாவா?!" என்று சந்தேகமாய் தமிழைப் பார்க்க அவள் எரிச்சலோடு,

"நீங்க நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்டம்... ஆனா நீங்க கேட்டது அங்கதான் இருக்கு" என்றாள். உடனே இருவர் சென்று அந்த பீரோவை நகர்த்த முயற்சித்தனர்.

இப்போது துப்பாக்கியோடு ஆதியின் அருகிலிருக்கும் ஒருவனை மட்டும்தான் சமாளிக்க வேண்டும் என்று தமிழ் எண்ணிக் கொண்டாள்.

ஆனால் அது அத்தனை சுலபமல்ல. அவன்தான் அந்தக் கூட்டத்தில் அதிக பலம் வாய்ந்தவனாகவும் புத்திசாலியாகவும் இருப்பான் என்று தோன்றிற்று.

அவர்கள் அந்த பீரோவை நகர்த்தி, தான் சொன்ன பொய்யைக் கண்டறியும் முன்னர் ஏதேனும் செய்ய வேண்டும் என எண்ணியவள் 'தாத்தா... ஹெல்ப் பண்ணுங்க' என்று முனங்கினாள். ஆனால் அந்தத் தூப்பாக்கி ஏந்தி நிற்பவன் சற்றும் கண்ணசராமல் அந்த இரு பெண்களையும் கண்காணித்தான்.

அதே சமயம் அந்த இருவர் பீரோவை நகர்த்திய மாத்திரத்தில் சடசடவென அந்த இடுக்குகளில் இருந்த வௌவால்கள் வெளியேற, அதில் ஒன்று அந்த துப்பாக்கி வைத்திருந்தவன் மீது பாய்ந்து பறந்து செல்ல அவன் அரண்டு போனான்.

தமிழ் எதிர்பார்த்த அந்த நூலிழை சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது. அதைச் சரியாய் பிடித்துக் கொண்டாள். உடனடியாய் தமிழ் தன் தோழியின் கரத்தைப் பற்றிக் கொண்டு அந்த அறையின் விளக்கை அணைத்துவிட்டாள்.

அந்தக் கடத்தல் கும்பல் நிலைமையை உணர்ந்து தட்டுத்தடுமாறி விளக்கைப் போட்ட போது அவர்கள் மாயமாய் மறைந்திருந்தனர். பெண்களென்று அத்தனை சுலபமாய் எண்ணிவிட்டதனால் வந்த வினை. அதற்குப் பிறகாய் நடந்தெல்லாம் ஆதிக்கு மாயைதான். இருள் சூழ்ந்த அந்த ரகசிய அறைக்குள் வந்தாகிவிட்டது.

வெளியே காலடி சத்தம் மெதுமெதுவாய் குறைந்திருக்க ஆதி தன் தோழியின் கரத்தைப் பற்றிக் கொண்டு, "இதென்ன ரூம்? இந்த ரூம்க்குள்ள எப்படி வந்தோம்?” என்று கேட்டாள்.

தமிழ் கிசுகிசுத்த குரலில், "இந்த ரூம்தான் எங்களோட லாக்கர் மாதிரி... இங்கதான் முக்கியமான பாரம்பரிய நகைகள் பொக்கிஷங்கள் எல்லாம் முன்னாடி வைச்சு பாதுக்காக்கப்பட்டுச்சு" என்றாள்.

"அது சரி... நாம எந்த வழியா இந்த ரூம்க்குள்ள வந்தோம்"

"வெளியே தாத்தா ரூம்ல சுவருல ஆளுயரத்துக்கு எங்க தாத்தா ராஜசிம்மனோட ஓவியம் இருக்கு... பார்க்கதான் அது ஓவியம்...

ஆனா அது ஒரு ரோலிங் டோர்... கொஞ்சம் அழுத்திச் சுழற்றினா இந்த அறைக்குள்ள வந்துடலாம்... அப்புறம் பழையபடிச் சுழற்றி உள்ளே லாக் போட்டுரலாம்" என்றாள். ஆதி வியப்புயோடு, "ரியல்லி!" என்றாள்.

"ஹ்ம்ம்... இந்த மாதிரியான ரகசிய வழிகள் இன்னும் இரண்டு முன்று இருக்கு... இது எனக்கு தாத்தாவுக்கு மட்டும்தான் தெரியும்" என்றாள்.

"சரி... அப்போ அந்தப் பொக்கிஷம் இங்க இல்லயா... நீ சொன்னது முழுக்க ரீலா"

தமிழ் பதில் பேசாமல் இருக்க ஆதி, "கேடி... என் உயிரை பணயம் வைச்சு... நீ பொய் சொல்லி இருக்க" என்றாள்.

"பொய்மையும் வாய்மையிடத்துன்னு திருவள்ளுவர் சொல்லி இருக்காரு இல்ல" என்றாள்.

"அதெல்லாம் சரிடி என் அதிமேதாவி... இங்கிருந்து எப்படி வெளியே போறது"

தமிழ் தீவரமாய் யோசித்தபடி, "இந்த ரூம்ல இருந்து வெளியே போக வேற ஒரு வழி இருக்குன்னு தாத்தா சொல்லியிருக்காரு... பட் அது என்ன மாதிரி வழி? எங்க இருக்கும்னு இந்த இருட்டுல ஒன்னும் தெரியலயே" என்றாள்.

"இப்ப என்ன பண்றது... வந்த வழியே திரும்பி போக முடியுமா"

"அது ரொம்ப ரிஸ்க்"

"ஆனா இந்த ரூம்ல இப்படியே காத்தில்லாம... லைட்டில்லாம... ரொம்ப நேரம் இருக்கவும் முடியாது... அதுவும் நமக்கு ரிஸ்க்தான்" என்று ஆதி சொல்ல அவர்கள் இருவரின் நிலைமையும் ரொம்பவும் பரிதாபகரமாகவே இருந்தது. அந்த சில நிமிடங்களில் மழையில் நனைந்தது போல் மொத்தமாய் அவர்கள் வியர்வையில் குளித்திருந்தனர்.

அங்கே இன்னும் சில மணித்துளிகள் அடைந்து கிடப்பது கூட ரொம்பவும் சிரமம்தான்.

தமிழ் குழப்பமாக, "கொஞ்ச நேரம் மேனேஜ் பண்ணுவோம் ஆதி... அப்புறமா என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்" என்றாள்.

வேறுவழியின்றி இரு தோழிகளும் ஆதரவாய் ஒருவர் மீது ஒருவர் தலைசாய்த்து படுத்துக் கொண்டனர்.

ஆதி தவிப்போடு, "நான் பயப்படலடா... பட் என் விஷ்வாவை நினைச்சா கவலையா இருக்கு... ரொம்ப அப்சட்டாயிடுவான்" என்றாள்.

"இப்ப விஷ்வாவைப் பத்தி கவலைபட்டு என்ன யூஸ்... என் கூட வர்றதுக்கு முன்னாடி நீ யோசிச்சிருக்கணும்" என்றாள்.

"போடி... இப்பவும் உன் கூட வந்ததில எனக்கு எந்தவித வருத்தமும் இல்ல"

"அப்போ விஷ்வா பாவம் இல்லயா?!"

"ஏன்... உன் ஏசிபி சாரும் உன்னைத் தேடிட்டிருப்பாரே... அவரைப் பத்தி உனக்கு கவலை இல்லயா?!"

"கவலை படற அளவுக்கெல்லாம் ஒன்னுமில்லை... என்னை காணோம்னு இன்வஸ்ட்டிகேஷன் பண்ணிட்டிருப்பாரு... சீக்கிரமே வந்திருவாரு... அவரோட காதல் மேல நம்பிக்கை இருக்கோ இல்லையோ... அவரோட கடமை உணர்ச்சி மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு... யூ நோ... யாரும் இல்லாத கடைக்கு யாருக்குடா டீ ஆத்துறங்கிற மாதிரி... அவ்வ்வ்வ்வளவு கடமை உணர்ச்சி?!" என்று அவள் விளையாட்டாகச் சொன்னாலும் அந்த வார்த்தையில் அத்தனை கோபமும் எரிச்சலும் இருந்தது.

"அப்போ அவர் ஃபீல் பண்ண மாட்டாருன்னு சொல்றியா?!"

"ஃபீல் பண்ணுவாரான்னு தெரியல... ஆனா மனுஷன் செம காண்டல இருப்பாரு... நான் மட்டும் கிடைச்சேன்... இருக்கிற பிரச்சனை எல்லாம் இழுத்து விடுறியான்னு... என் கன்னத்தைப் பேத்துருவாரு... அதான் கொஞ்சம் பயமா இருக்கு"

"நீயா தமிழ் பயப்படுற... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அசால்ட்டா அவனுங்க எல்லோரையும் சமாளிச்ச"

"நீ வேற ஆதி... அவனுங்கெல்லாம் டம்மி வில்லன்... வீரேந்திர பூபதிதான் மை ரியல் வில்லன்?!" என்று தமிழ் சொல்லி கொண்டிருக்கும் போதே இருவருமே மிரளும் வண்ணம் ஒரு சிறு நிழல் போன்ற உருவம் அதிவேகமாய் ஓடி மறைந்தது.

இருதயமே நின்றது போல அமர்ந்திருந்த அந்த இரு தோழிகளும், உடனே அந்த சிறு உருவம் எப்படி உள்ளே வந்து மறைந்திருக்கும் என்று யோசிக்க முற்பட்டனர்.

சரியாய் அதே சமயத்தில் வீரேந்திரனின் வாகனம் சிம்மவாசல் ஊருக்குள் நுழைய, விஷ்வாவும் அவனுடன் வந்து கொண்டிருந்தான். இருவருக்கும் இடையில் சற்றுமுன்பு நடந்த பெரும் வாக்குவாதமும் பூசலும் அவர்கள் இருவரின் முகத்திலும் வெறுப்பை ஊற்றெடுத்துக் கொண்டிருந்தது.

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy

You cannot copy content