You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Monisha's VET - 40

Quote

40

ஆதி அவனிடம் சொன்னது இதுதான்.

"அரண்மனையில 9.00 மணிக்கு வெடிக்கிற மாதிரி டைம் பாம் செட் பண்ணி இருக்காங்களாம்... அதுவும் தமிழை அடைச்ச வைச்ச ரூம்ல"

வீரேந்திரன் அந்தத் தகவலைக் கேட்டு அப்படியே உடைந்து நொறுங்கிப் போனான்.

தன் கைக்கடிகாரத்தில் அவசரமாய் நேரத்தைப் பார்க்க அது 8. 40 என்று காண்பிக்க அவன் பதட்டத்தோடு, "எந்த ரூம்?" என்று கேட்டான்.

"அந்த ஆளு... என்னை கொன்னாலும் சொல்ல மாட்டேன்... முடிஞ்சா கண்டுபிடிச்சுக்கோனு சொல்லிட்டான்" என்றதும், வீரேந்திரன் கோபத்தோடு, "ஜஸ்ட் ஷுட் ஹும்" என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.

நெற்றியெல்லாம் வியர்வை வழிய அவசரமாய் வெளியே வந்தவன் சண்முகத்திற்கு அழைத்தான். வெளியே நிற்கும் எல்லாக் காவலர்களையும் அரண்மனைக்குள் அனுப்பி தேடச் சொன்னான்.

அடிவயிற்றில் இருந்து, "தமிழச்சிசிசிசிசிசிசிசிசிசி" என்று முழக்கமிட்டான்.

அந்த அரண்மனை முழுக்கவும் எதிரொலித்தது. அது அவள் காதில் விழுந்திருக்குமா... தெரியாது... மீண்டும் அதேபோல் பலமுறை கத்தியவன் மூச்சு வாங்க கூட நேரமில்லாமல் அந்த பிரமாண்ட அரண்மனையின் ஒவ்வொரு அறைக்குள்ளும் நுழைந்து தேடினான்.

அவன் கண்ணீர் உடைப்பெடுக்க ஆரம்பிக்க, ரொம்பவும் பிராயத்தனப்பட்டு தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தான். அவன் தேடியது போலவே ஒவ்வொரு காவலர்களும் தேடினர்.

ஆனால் அவர்களின் தேடல் அத்தனை சுலபமாய் முடிந்துவிடுமா என்ன? இருளின் பிடியில் இருக்கும் அந்த அரண்மனையின் ஒவ்வொரு அறையும் பிரமிப்பூட்டும் அளவிற்குப் பெரியது. அவர்கள் தேடல் அத்தனை சுலபமில்லை.

அவன் அந்த அரண்மனை பற்றி இதுவரையிலும் அறிந்து கொள்ளவில்லை. பொறுமையாய் தெரிந்து கொள்ளவும், ஆராய்ச்சி செய்யவும் இப்போது அவனுக்கு நேரமுமில்லை.

தன் திருமணத்திற்கு வந்த போது கூட இத்தகைய பெரிய அரண்மனையைப் பிரமிக்கவோ சுற்றிப் பார்க்கவோ கூட அவனுக்கு நேரமோ பொறுமையோ இருக்கவில்லை.

ஆனால் இன்று அந்த அரண்மனையின் பிரமாண்டம் அவனை மிரட்சியடைய வைத்தது. ஒரு பக்கம் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. அவன் ஒவ்வொரு அறைக்குள்ளும் நுழைய அது இன்னொரு அறையோடு இருந்தது.

நேரத்தைக் கவனித்தான் 8.47

இன்னும் சில நிமிடங்களே மீதமிருக்க, அவன் கீழ்த்தளத்திற்கு இறங்கினான்.

அவள் இருக்கும் அறையில்தான் அந்த வெடிகுண்டு இருக்குமெனில் அவளைக் கண்டுபிடித்தால் மட்டுமே எதுவும் செய்ய முடியும்.

அவள் இருக்குமிடத்தை இப்போது வரை யாராலும் கண்டறிய முடியவில்லை எனும் போது அவள் எங்கே? மனம் அதீதமான பதட்டத்தை நிரப்ப நேரத்தைக் கவனித்தான்.

8.55... கால சக்கரம் வேகமாக சூழன்றது போல தோன்றியது.

அங்கே தேடிக் கொண்டிருக்கும் காவலர்கள் யாருக்கும் எதுவும் நேர்ந்துவிடக் கூடாதென்ற கவலை உண்டாக, எல்லா காவலர்களையும் உடனடியாய் வெளியேறச் சொல்லி உத்தரவு பிறப்பித்தான்.

சண்முகம் உடனிருப்பதாகச் சொல்ல அவரையும் கட்டாயப்படுத்தி வெளியேறச் சொல்லிவிட்டு அவன் மட்டும் தன்னந்தனியாய் நின்றான்.

அந்த அரண்மனை முழுவதும் நிசப்தமாகிட அவன் சத்தமாய்,

"ஏ தமிழச்சி... எங்கடி இருக்க?" என்று ஆவசமாய் கத்தினான்.

அவன் குரல் அந்த அரண்மனை முழுவதும் எதிரொலித்தது. ஆனால் எந்த பதிலும் இல்லாமல் மீண்டும் நிசப்தமானது.

மணி 8. 57 ஐத் தொட்டுவிட்டது. 180 விநாடிகள்... என்ன செய்வதென்று புரியாமல் அப்படியே நின்றுவிட்டான்.

ஒவ்வொரு நொடியும் மரணித்து விடும் உணர்வு...

அப்போது அந்த நிசப்தத்தை உடைத்தபடி ஏதோ விழுந்த சத்தம். கூர்மையாய் தீட்டிக் காத்திருந்த அவன் செவிகள் அந்தச் சத்தம் வந்த திசையை சரியாய் கணிக்க, அவசரமாய் ஓடிச்சென்றான்.

அங்கிருந்த அறையைத் திறக்க, பழைய பொருட்களெல்லாம் அங்கே வைக்கப்பட்டிருந்தது.

"தமிழச்சி" என்றழைத்தபடி அந்த அறை முழுக்க அவன் அவசரமாய் தேடினான். ஆனால் பலனில்லை.

அப்போது அவனின் கழுகு பார்வை அங்கே கிடந்த பச்சை நிற திரைச்சீலையைக் கவனித்தது.

உடனே அது மேலே அவள் தாத்தா அறையில் பார்த்தது என்று கணித்தான். சட்டென்று அவன் மனதில் உதித்த எண்ணம் அவனை அதிர்ச்சிக்குள்ளாகியது.

இப்படியும் அவள் செய்ய கூடுமா?

இத்தனை தைரியமா அவளுக்கு? என்று தானே கேட்டபடி நிலைகுலைந்து போனான். அவளைப் பற்றி ரகுவிடம் அவன் சொன்ன வார்த்தை இப்போது அவன் காதில் ஒலித்தது.

'அவளுக்கு பிடிச்ச விஷயங்களை விட்டுக்கொடுக்காம இருக்க அவ எந்த எக்ஸ்டென்ட்டுக்கும் போவா'

ஒரு நொடி அப்படியே அசைவற்று அதிர்ந்து நின்றவன் அடுத்த நொடியே நேரத்தைப் பார்க்க 8.58... இன்னும் 120 விநாடிகள் மட்டுமே...

ஒரு மணி நேரத்திற்கு முன்பாக...

ஆதி சுரங்க பாதை வழியாய் சென்ற போது தமிழ் அந்த ஓவியத்தைத் திறந்து வெளியே வந்தாள். அவள் வந்த வழியைப் பார்த்த அங்கிருந்த மூவரும் வியப்பில் ஆழ்ந்துவிட்டனர்.

அவர்களில் தலைமையாய் இருந்த ஒருவன் ஆச்சர்யத்தில் இருந்து மீண்ட நொடி, "எங்கடி உன் கூட இருந்தவ?!" என்று கேட்க,

"தெரியாது" என்றாள்.

"டே... இவ வேலைக்காக மாட்டா... நீங்க உள்ளே போய் தேடுங்கடா" என்று ஆட்களைப் பணித்தவன், அத்தோடு நிற்காமல் அவளை வலுக்கட்டாயமாய் இழுத்து அறை வாசலில் அசைந்து கொண்டிருந்த பச்சை நிற திரைசீலையைக் கிழித்து அவளின் இரு கரத்தையும் பிணைத்தான்.

சற்று முன்புதான் அவளின் சாகசத்தையும் புத்திக்கூர்மையையும் பார்த்தானே! இனியும் அவளை அப்படி சாதாரணமாய் விட்டுவிடுவானா என்ன? அவள் தப்பிக்க எந்த சந்தர்ப்பத்தை இனியும் வழங்க அவன் தயாராக இல்லை.

அவளை வெறுப்பாய் பார்த்தவன், "இப்ப காட்டுடி உன் புத்திசாலித்தனத்தையும் திமிரையும்" என்றான் சவாலாக.

தமிழ் நக்கலாகப் புன்னகைத்துவிட்டு, "என்ன பாஸ்? என் கையைக் கட்டிட்டுக் காட்டுன்னா... எப்படி முடியும்? கழட்டி விடுங்க காட்டுறேன்" என்றாள்.

அதற்குள் அவனின் ஆட்கள் ஓடிவந்து, "உள்ளே ஒரு சுரங்க பாதை இருக்கு... அது வழியாதான் அந்தப் பொண்ணு வெளியே போயிருக்கா" என்றார்கள். அவள் அலட்சியமாகப் புன்னகைத்து, "ப்ர்லியன்ட்தான்... கண்டுபிடிச்சுட்டீங்களே" என்றாள்.

அத்தனை நேரம் அவன் கொண்டிருந்த பொறுமையெல்லாம் கோபமாய் மாற, தமிழ் நெற்றியில் துப்பாக்கியை நிறுத்தியவன், "உன் கட்டுக்கதையெல்லாம் அளக்காம பொக்கிஷம் எங்கன்னு இப்ப உண்மையைச் சொல்ற... இல்ல" என்று மிரட்டலாய் பார்த்தான்.

"இல்லன்னா என்ன பண்ணுவ... சுட்டுருவியா... சுடு... ஆனா என்னைத் தவிர யாரும் அந்தப் பொக்கிஷத்தை எடுக்கவும் முடியாது... கண்டுபிடிக்கவும் முடியாது" என்றாள்.

"உன் உயிரை விட அந்தப் பொக்கிஷம் முக்கியமா?"

"அதேதான் நானும் கேட்கிறேன்… உங்க எல்லார் உயிரை விட அந்தப் பொக்கிஷம் முக்கியமா... ஒழுங்கா ஓடிப் போயிடுங்க" என்று அவள் எச்சரிக்கவும் அவன் கோபத்தில் அவள் கன்னத்தில் அறைந்தான்.

அவள் சீற்றமாகி, "வேண்டாம்... நீ செய்றதெல்லாம் என் தாத்தா பார்த்துட்டுருக்காரு... அப்புறம் உன் நிலைமை அதோ கதிதான்" என்றாள்.

"எங்கடி உன் தாத்தா?" என்று கேட்டுச் சிரித்தான்.

"அதோ" என்று சுவரில் மாட்டியிருந்த சிம்மவர்மன் புகைப்படத்தைக் காண்பிக்க அங்கே இருந்தவர்கள் இன்னும் சத்தமாய் சிரித்தனர்.

"செத்து போன தாத்தா உன்னை வந்து காப்பாத்துவாரா?!"

"நீங்கெல்லாம் செத்தா மண்ணாதான்டா போவீங்க... எங்க தாத்தா இறந்து கடவுளா வாழ்றாரு... அவர் என்னை நிச்சயம் காப்பாத்துவாரு" என்று திடமான நம்பிக்கையோடு உரைத்தாள்.

அந்த அறைக்குள் அவசரமாய் ஓடி வந்தவன், "வெளியே போலீஸ் நிற்குது" என்றான்.

அவர்களின் தலைவன் அந்த கணமே, "எந்த ரூம் லைட்டும் எரிய கூடாது… ஆஃப் பண்ணுங்க" என்று சொல்லி அந்த அறையின் விளக்கையும் அணைத்தான்.

தமிழ் முகம் பிரகாசிக்க, "மாட்டுனிங்களா!" என்று சொல்லி அவர்களைப் பரிகசித்து, "அதான் சொன்னேனே எங்க தாத்தா என்னைக் காப்பாத்துவாருன்னு" என்று சொல்லவும்

தன் அலைப்பேசி ஒளியை எரியவிட்டு, அவள் தலைமுடியை அவன் பிடித்துக் கொள்ள, "விடுறா" என்று அவள் சீறினாள்.

"ரொம்ப திமிரு உனக்கு... நாங்க செத்தா... மண்ணா போவோம்னு சொன்ன இல்ல... இப்ப நீ... உன் அரண்மனை... உன்னைத் தேடி வர உன் ஆறடி மனுஷன்... எல்லாரும் மண்ணா போயீடுவீங்க... அப்ப உன் தாத்தா வந்து காப்பாத்துவாராடி" என்று ஆக்ரோஷமாய் கேட்டு, தன் ஆட்களிடம் இருந்த பெட்டியைத் திறந்து காண்பித்தான். அதனைப் பார்த்தவள் சற்று அரண்டுதான் போனாள்.

அவள் தலைமுடியை விடாமல் இறுக்கியபடி, "என்ன... மிரண்டுட்டியா... இதான் பிளாஸ்டிக் எக்ஸ்பிளோஸிவ்... முன்னே பின்ன பார்த்திருக்கியா" என்று கேட்க அந்த நொடி அவளின் ரத்த நாளங்களில் செங்குருதிக்கு பதிலாகச் செந்தழல் பாய்ந்து உஷ்ணமேறிய உணர்வு.

அவள் நினைத்ததை விடவும் இவர்கள் ரொம்பவும் கொடூரமானவர்களாய் இருக்க, இப்படி ஒரு மோசமான நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்று அவள் கனவிலும் எண்ணிக் கொண்டதில்லை.

அந்த நொடி இதெல்லாம் கனவாய் இருந்துவிடக் கூடாதா என்ற ஏக்கம். என்ன செய்ய? கனவும் கூட அவளுக்குக் கற்பனை அல்ல? நிஜ நிகழ்வுகள்தானே!

துரிதமாய் சிந்திக்கும் அவள் மூளை அப்போது சிந்திக்கும் திறனை இழந்து ஸ்தம்பித்துக் கிடக்க, மத்தளமாய் கொட்டும் அவள் இதயத்துடிப்பு அவள் செவியைத் துளைத்து இன்னும் அவள் உயிரோடு இருக்கிறாள் என்பதைப் பறை சாற்றிக் கொண்டிருந்தது.

ஆனால் இன்னும் எத்தனை நிமிடங்கள்... அவளும் அந்த அரண்மனையும்...

தன் உயிரை விடவும் அரண்மனையே அவளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாய் பட, தன் எதிரே கொடூரமாய் நின்றிருந்தவனிடம் மன்றாட ஆரம்பித்தாள்.

தமிழ் படப்படப்போடு, "ப்ளீஸ் அப்படி எதுவும் பண்ணிடாதீங்க" என்று அவர்களிடம் இறங்கிப் பேசினாள்.

அவன் குரூர புன்னகையோடு, "அப்போ அந்த பொக்கிஷம் எங்க இருக்குன்னு சொல்லு?!" என்றான்.

இப்போது உண்மையை உரைப்பதைத் தவிர வேறு வழியும் இல்லை. இனிப் பொய்யுரைத்தால் அவர்கள் விபரீதமாய் ஏதேனும் செய்ய கூடும் என்று சிந்தித்திருந்தவளின் முகவாயை அழுத்திப் பிடித்து நிமர்த்தியவன்,

"சொல்ல போறதில்லைன்னா விடு... நான் என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்" என்று சொல்லிவிட்டு அலட்சியமாய் திரும்பி தன் ஆட்களிடம் ஏதோ சொல்ல யத்தனிக்க,

இயலாமையோடு, "சொல்றேன்..." என்றதும் அவன் ஆர்வமாய் திரும்பினான். இப்போதைக்கு அரண்மனையைக் காப்பதே முக்கியம் என்று அவளுக்குத் தோன்றியது. ஆதலால் அவள் தயக்கத்தோடு பொக்கிஷத்தைக் குறித்த அனைத்து தகவலையும் உரைத்தாள்.

அவள் சொன்ன தகவல்களை கேட்ட நொடி, அவன் முகம் பிரகாசமானது. இருந்தும் லேசான சந்தேகம் எழ, "பொய் இல்லயே?!"என்றவன் கேட்டு அவளைக் கூர்மையாய் பார்க்க,

அவள் தளர்வோடு, "உம்ஹும்" என்றபடி தன் தாத்தாவின் படத்தைப் பார்த்தாள்.

அப்போது அவள் விழிகளில் கண்ணீர் துளிர்க்க 'நான் உங்களுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறட்டேன் தாத்தா... என்னை மன்னிச்சுடுங்க' என்று எண்ணிக் குற்றவுணர்வில் ஆழ்ந்தாள்.

தான் நினைத்ததை அடைய போகிறோம் என்ற ஆனந்தம் பெருகிட நின்றவன் உடனே தன்னோடு இருந்தவர்களிடம், "இவ வாயைக் கட்டி... கீழே இருக்கிற ரூம்ல கட்டிப் போடுங்க... அந்த ரூம்லயே பாமை செட் பண்ணுங்க" என்றான்.

அவள் அதிர்ச்சியுடன் அவனை நோக்க இளக்காரமாய் அவளைப் பார்த்தவன், "உன்னை உங்க தாத்தா எப்படி காப்பாத்த போறார்னு நானும் பார்க்கிறேன்" என்றான் சவாலாக!

"யூ பாஸ்டட்... உன்னை" என்று சீற்றமடைந்தபடி அவனை எரிப்பது போல் பார்த்தாள்.

அவன் பயந்த பாவனையில், "அய்யோ நிறுத்தும்மா... அன்னைக்கு தர்மாவிற்கு சாபம் விட்ட மாறி எனக்கும் விட்டுறாத" என்றான்.

அவள் புருவங்கள் சுருங்க சந்தேகமாய் பார்க்க அவன் சட்டென தன் பார்வையை மாற்றி வன்மத்தோடுச் சிரித்தான்.

"என்ன பார்க்குற?! நீ தர்மாவுக்கு விட்ட சாபம் எனக்கு எப்படி தெரியும்னா... அந்த சாபத்தைப் பளிக்க வைச்சதே நான்தானே... நீ அந்த கேஸ்ல எப்படியாச்சும் சிக்குவன்னு பார்த்தேன்... நடக்கல... ஆனா இப்ப நீ தப்பிக்கவே முடியாது... அதுவும் புருஷனும் பொண்டாட்டியுமா சேர்ந்து பரலோகம் போகப் போறீங்க... உங்களுக்கு கல்யாணம் ஆன இடத்துலயே உங்க விதி முடியப் போகுது" என்றான்.

"உனக்கு என்னைக் கொல்லணும்னா ஷுட் பண்ணு... இந்த அரண்மனையை மட்டும் எதுவும் பண்ணிடாதே" என்று அவள் கோபத்தோடு உரைக்கவும், அவன் பயங்கரமாய் சிரித்தான்.

"ரொம்ப தைரியம்தான்டி உனக்கு... ஆனா எனக்கு நீயும் இந்த அரண்மனையும் டார்கெட் இல்லயே... என்னோட ஒன்லி டார்கெட் அந்த ஏசிபி மட்டும்தான்... எஸ்... அவன் இந்த தர்மா கேஸ்ல ஆரம்பிச்சி தேவையில்லாத விஷயத்தை எல்லாம் ஆராய்ச்சி செஞ்சுட்டிருக்கான்…

அவன் இருந்தா இந்தப் பொக்கிஷத்தை நாங்க எடுக்கவும் முடியாது... ஒன்னும் பண்ணவும் முடியாது... அவனைக் கொல்லணும்... அதுவும் அவன்தான் எங்க டார்கெட்னு யாரும் கண்டுபிடிக்காத மாதிரி கொல்லணும்... அப்பதான் தேவையில்லாம எங்க பக்கம் கவனம் திரும்பாது... உன்னை கடத்தினது... அந்த பொக்கிஷத்துக்காக மட்டும் இல்ல... அந்த ஏசிபியை கொல்லணும்னுதான்... அதனாலதான் உன்னை காஞ்சிபுரம் வர வைச்சு கடத்தினோம்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

அவனின் ஆட்களில் ஒருவன்,"அந்த ஏசிபி வந்துட்டான்" என்றான்.

உடனே தன் கைப்பேசியைப் பார்த்துவிட்டு, "இவளை வாயக்கட்டி கீழே இருக்கிற ஸ்டோர் ரூம்ல யாருக்கும் தெரியாத மாதிரி அடைச்சிட்டு... பாமை 9 மணிக்கு வெடிக்கிற மாதிரி செட் பண்ணுங்க... அப்புறம் நம்ம பிளேன்படி பின்புறம் போக வேண்டாம்... இந்த சுரங்கப் பாதை வழியாய் போயிடலாம்... யார் கண்ணலயும் சிக்கவே மாட்டோம்" என்றான்.

அவன் சொன்னபடியே தமிழின் வாயைக் கட்ட, அவளோ அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்தாள். அவன் பேசியதை வைத்துப் பார்க்கும் போது அவர்கள் முன்னமே இந்தத் திட்டத்தைத் தீட்டியிருக்கிறார்கள் என்று தோன்றியது.

அப்போது தான்தான் வலிய வந்து இவர்களிடம் சிக்கியிருக்கிறோமா?

அந்தச் சமயத்தில் அந்தக் கூட்டத்தின் தலைவன் தன் ஆட்களிடம் கண்ணசைக்க, தமிழை இருவர் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று பழமையான பொருட்கள் இருந்த அறைக்குள் அடைத்தனர்.

அவளை முழங்கால் போடச் செய்து அவள் கால்களைப் பிணைத்துவிட்டு,

அவளருகாமையில் அந்த வெடிகுண்டைத் தயார் செய்து வைத்தவர்கள், "சாவுடி" என்று சொல்லிவிட்டு வெளியேறினர்.

யார் அவளைத் தேடினாலும் அவளைக் காண்பது கஷ்டம்தான்.

அங்கே இருந்தப் பொருட்களோடுப் பொருட்களாய் அவள் கிடத்தப்பட்டிருந்தாள்.

அருகிலே இருக்கும் வெடிகுண்டில் நேரம் வேகமாய் முன்னேறிப் போய் கொண்டிருந்தது. அவளால் எதுவும் செய்ய முடியாத இயலாமை. இருளில் அவள் பார்வைக்கு ஒன்றும் புலப்படவில்லை.

எத்தனைக் காலங்களாய் கட்டியாண்ட அரண்மனை...

சீரும் சிறப்புமாய் பல வெற்றி முழக்கங்களையும் பல விழாக்களையும் பார்த்திருக்கும்...

இன்னும் அதே பலத்தோடும் கம்பீரத்தோடும் நின்றிருப்பதில் தன் முன்னோர்களின் மீது அவளுக்கு எப்போதும் அலாதியான பெருமை...

இன்றோடு...

இன்னும் சிற்சில நிமிடங்களோடு...

அந்தப் பெருமிதம் எல்லாம் மண்ணோடு மண்ணாய் போகப் போகிறது...

இந்த அரண்மனையோடு சேர்த்து... தன்னோடு சேர்த்து...

இரண்டும் வேறு வேறு அல்லவே...

இது வெறும் கல்லாய் மண்ணாய் கட்டடமாய் மட்டுமே பலருக்கு தெரிந்திருக்கும்...

ஆனால் தனக்கு அப்படியல்ல... ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு மூளை முடுக்குகளிலும் அவள் தாத்தாவும் அவளுமாய் சுற்றித் திரிந்த நினைவுகள்...

அவள் குழந்தையாய் வளைய வந்தபடி...

ஒவ்வொரு தூணையும் ஆசையாய் கட்டிக் கொண்டபடி...

ஒவ்வொரு மூளை முடுக்குகளில் எல்லாம் ஒளிந்து கொண்டபடி...

நடந்து... ஓடி... ஆடிச் சுற்றித் திரிந்து குதித்த விளையாடிய இடங்கள்...

இந்த அரண்மனையைவிட்டு வெகுதூரம் செல்லப் போகிறோம் என்றறிந்த போது ஒவ்வொரு தூணையும் அவள் கட்டிக்கொண்டு அழுதிருக்கிறாள்...

கட்டுப்படுத்த முடியாமல் கண்களில் இருந்து கண்ணீர் ஊற்றாய் பெருகிக் கொண்டே இருக்க வாய் விட்டுக் கதற வேண்டும்...

அதுவும் முடியாத இயலாமையோடு...

அப்போது எங்கிருந்தோ வீரேந்திரன் அழைத்தான்.

"தமிழச்சிசிசிசிசிசிசிசி"

ஆழமாய் அழுத்தமாய் உயிரோட்டமாய் உணர்வுப்பூர்வமாய் அழைத்தான். அந்த அழைப்பு அவளின் ஒவ்வொரு செல்களிலும் உயிர்ப்பையும் சிலிர்ப்பையும் ஏற்படுத்திவிட்டது. அந்த அழைப்பு ஊற்றாய் பெருகிக் கொண்டிருந்த அவள் கண்ணீரை உறைந்து போகச் செய்திருந்தது.

அந்தக் குரலில் அத்தனை வலியும் காதலும் பதட்டமும் வேதனையும் கலந்திருந்தது.

அதனை உணர்ந்து கொண்ட நொடி அவனை ஓடிச் சென்று அணைத்துக் கொள்ள துடித்தது அவளுக்கு...

அவனின் அணைப்பில் மூழ்கித் திளைக்க எண்ணியது...

இதே அரண்மனையில்தான் அவன் முதல்முறையாய் அவளை அணைத்திருக்கிறான்... அவளை உறவாக்கிக் கொண்டிருக்கிறான்... அவன் பார்வையாலயே அவளின் உணர்வுகளைத் தீண்டி உயிர்பிக்கச் செய்திருக்கிறான்... ஆனால் தான் அவனை அற்பமாய் உதாசீனப்படுத்திப் பேசிருக்கிறோம்...

'இந்த கல்யாணம் நடந்தா என் லைஃபே லாஸாகிடுமே' இங்கே நின்றபடிதான் அவன் மீது வார்த்தைகளைத் தீயாய் உதிர்த்தாள்.

அந்த வார்த்தையெல்லாம் இன்று வலியாய் இருந்தது...

மனதார அவற்றிற்கெல்லாம் அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எண்ணி வருத்தமுற்றாள்.

அவனைக் காதலிக்க வேண்டும். சலிக்க சலிக்க காதலிக்க வேண்டும். அவனோடு வாழ வேண்டும். அவனை மனதிலும் அவன் உயிரை தனக்குள்ளும் சுமக்க வேண்டும்.

ஏங்கித் தவித்தது அவள் மனம்...

அவள் உயிர் வரை பாய்ந்த வலி...

தலைகவிழ்ந்து அழுதவள் இதெல்லாம் இனி முடியுமா? என்று கேட்டபடி துவண்டுப் போனாள்.

அப்போதுததான் தோன்றியது. அவனும் இங்கேதான் இருக்கிறான். அவனுக்குமே ஆபத்து. அவனுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதே!

அந்த எண்ணம் தோன்றிய மறுகணம் அவள் மனோதிடம் மீண்டும் கம்பீரமாய் தலைத்தூக்கியது.

'முயற்சி செய்யாமல் பின் வாங்கிறதும்... தோல்வியை ஒத்துக்கிறதும்... தமிழச்சிக்குப் பழக்கமில்லையே... இதென்ன புதுசா' கேட்டுக் கொண்டாள்.

அந்த ஒற்றை வாக்கியம் அவளைத் தைரியப்படுத்த, எப்போதும் அவளைப் பிரச்சனையிலிருந்து காக்கும் தன் ஆபத்பாந்தவனை அழைத்தாள்.

'தாத்தா எங்க இருக்கீங்க?! ஏதாவது ஒரு வழி காட்டுங்க' என்று மானசீகமாய் கேட்டுக் கொண்ட நொடி அவளின் அறைக் கதவு திறந்து ஒருவன் நுழைந்தான்.

அவன் போலீஸ் உடையில் இருந்தான்.. அவனிடம் தன்னைக் காட்டிக் கொள்ள அவள் முயற்சி செய்ய, அவனோ அந்த அறையின் இருளில் அவன் கையிலிருந்து அலைப்பேசி வெளிச்சத்தால் அந்த அறையை நோட்டமிட்டுக் கொண்டிருந்தான்.

அப்போது வெளியே இருந்து ஒரு அழைப்பு கேட்டது.

'எல்லோரும் உடனே அரண்மனையை விட்டு வெளியே போங்க'

அவனும் இதைக் கேட்டு அவசரமாய் அந்த வெளிச்சத்தை அவளைச் சுற்றிலும் படரவிட்டு மீண்டும் அவளை இருளில் மூழ்கடித்துவிட்டுச் சென்றான்.

மீண்டும் ஏமாற்றமே மிச்சமானது. துவண்டுப் போனவளுக்கு அப்போது அவன் காண்பித்த வெளிச்சத்தில் பார்த்த விஷயங்கள் நினைவுக்கு வர, அத்தனை நேரம் இதை அவள் கவனிக்கவில்லை. பழைய பொருட்கள் இருக்கும் இடமல்லவா இது.

அவன் காட்டிய வெளிச்சத்தில் அவளருகிலேயே இருந்த பழைய கத்தி சொருகிய கேடயத்தைப் பார்த்த நினைவு வர பின்புறம் பிணைத்திருந்த கரத்தால் அதனைத் தொட்டு உணர்ந்து கையில் எடுத்து அவள் கரத்தின் பிணைப்பை விடுவிக்க எண்ண, அது வெறும் மெல்லிய துணி என்பதால் நொடிப் பொழுதில் அது கிழிந்து போனது.

அவசரமாய் தன் கால் கட்டையும் வாய் கட்டையும் அவிழ்த்தவள், அந்த அரண்மனையின் நிசப்தத்தைக் கிழித்து கொண்டு, "ஏ தமிழச்சி... எங்கடி இருக்க?" என்று வீரேந்திரனின் குரல் ஒலிக்க , அவளும் பதிலுக்கு குரல் கொடுக்க எண்ணினாள்.

ஆனால் அந்த பாம்... அதனைப் பார்த்தவளுக்கு 8.56 என்று காட்ட… இன்னும் நான்கு நிமிடம் மட்டுமே மீதமிருப்பதாய் அவளுக்குச் சொல்லாமல் சொல்ல, இப்போது தன்னவனையும் தன் அரண்மனையையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது...

அதற்குப் பிறகு அவள் செய்ய நினைத்ததைச் செயலாக்கம் செய்தாள்.

அந்தப் பாமை மனோதிடத்தோடு தன் கரத்தில் ஏந்திக் கொண்டு அந்த அரண்மனையை விட்டு வெளியேற வேண்டும் என்று எண்ணி, அவசரமாய் செல்லும் போது இருளில் ஏதோ அவள் தட்டிவிட, அந்த அறை முழுக்க அந்தச் சத்தம் எதிரொலித்தது.

வீரேந்திரன் வந்துவிடப் போகிறானே என்ற பதட்டம் தொற்றிக் கொண்டது. அவன் தன்னைப் பார்த்துவிடக் கூடாது. பின் அவன் தன்னைக் காப்பாற்றுவதிலேயே குறியாய் இருப்பான். அதே நேரத்தில் அவனை ஆபத்தில் சிக்க வைக்க மனம் வராமல் தன்னை தைரியப்படுத்திக் கொண்டு அந்த அறையை விட்டு அகன்றாள்.

அதீத அச்சமும் பதட்டமும் அவளைத் தொற்றிக் கொள்ள ஆரம்பிக்க,

"அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே" என்று மகாகவியின் தீரமான வரிகளை உச்சரித்தபடியே கையில் அந்தப் பாமை தூக்கிக் கொண்டு அந்த இருளிலும் பின்வாசலை நோக்கி ஓடினாள். இருளடர்ந்திருந்தாலும் அந்த அரண்மனை அவளுக்கு தண்ணிப்பட்டபாடு.

விரைவாய் வாசலை அடைந்தாள். இரவு சூழ்ந்து இருள் பரவினாலும் தீட்சண்மாய் வீசிய நிலவொளி அவளுக்க வழிகாட்டியாய் தொடர்ந்து வந்தது.

வீரேந்திரனும் தன் மனைவியின் செயலை யூகித்து மிரண்டவன் அவசரமாய் வாசலை அடையும் போது 60 நொடிகள் மட்டுமே இருந்தது.

அவன் பயந்தது போலவே அவள் வாசலைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்க, அவனின் இதயமோ அவன் ஓட்டத்தோடு போட்டிப் போட்டுக்கொண்டு துடித்து அவனைப் பதறடித்தது.

அவள் பாதம் கிட்டதட்ட காற்றில் பறந்திருக்க வீரேந்திரன் தன் குரலை உயர்த்தி, "ஏ தமிழச்சி நில்லுடி.. " என்று கத்திக் கொண்டே அவளைத் துரத்தினான்.

அவளுக்கோ ஒரு பக்கம் அரண்மனைக்கு எந்தவித சேதமும் வந்துவிடக் கூடாது. இன்னொருபக்கம் தன் ஆருயிர் கணவனுக்கும் எந்த ஆபத்தும் நேர்ந்துவிடக் கூடாது.

இந்த எண்ணம் அவளை ஆளுமை செய்ய, ஒருவாறு அரண்மனையை விட்டு விலகி வந்துவிட்டாள். ஆனால் பின்னோடு கணவனின் அழைப்பு கேட்க,

அவன் தன்னை நெருங்கி வந்துவிடக் கூடாதே என்றே இன்னும் வேகமெடுத்து ஓடினாள்.

இன்னும் 30 விநாடிகளே...

அவள் கால்கள் மணலில் ஓட முடியாமல் தடுமாற ஆரம்பித்தன.

அவள் கரம் வலுவிழந்து நடுங்க ஆரம்பிக்க,

"அங்கயே நில்லு நான் வர்றேன்" என்று அவன் சொல்லவும், அவள் முளையோ நின்றால் நேரம் போகும். அவன் நெருங்கி வந்து இந்த பாம் வெடித்துவிட்டால்....

அந்த எண்ணம் தோன்றிய நொடியே மீண்டும் வேகமெடுத்தாள்.

மணற்பரப்பிலும் அவள் கால்கள் ஓட ஆரம்பித்தன.

அவன் அதிர்ந்தபடி, "ஏ தமிழச்சிசிசிசி... நில்லுன்னு சொன்னேன்"

கட்டளை தொனியில்... அந்த வெட்ட வெளியில் ஓங்காரமாய் ஒலித்தது அவனின் குரல். அவள் அவன் குரலுக்கு சற்றும் செவி சாய்க்காமல் பிடிவாதமாய் ஓடினாள்.

எது இலக்கென்று தெரியாமலே ஓடியவளுக்கு ஆரவாரித்துக் கொண்டிருக்கும் கடலின் அலையோசை அழைப்பு விடுத்தது. அவள் இலக்கு எது என்று இப்போது தீர்க்கமாய் தீர்மானித்துவிட்டாள்.

அலைகள் உயர எழும்பிக் கொந்தளித்து கொண்டிருக்கும் அந்தக் கடலை அடைந்துவிட வேண்டும்.

இன்னும் 20 நொடிகளில்...

அவள் ஓட்டம் கடலை நோக்கித்தான் என்பதை அறிந்து இன்னும் படபடப்பானான்.

அன்றும் இப்படிதான் அவனை ஓட வைத்துக் கலங்கடித்தாள்.

இன்றும் அத்தகைய நிலை...

ஆனால் உச்சபட்ச படப்படப்போடு இருவரும் ஓடினர்.

அவன் உயிரைக் காப்பாற்ற அவள் ஓட, அவளைக் காக்க வேண்டி அவன் துரத்திக் கொண்டிருந்தான்.

"ஏ பைத்தியக்காரி... நில்லுடி" தவிப்பின் உச்சத்தில் கத்தினான்.

அவள் விடாப்பிடியாய் ஓடினாள்.

ஓட்டப்பந்தயங்கள் பலவற்றில் வெற்றி கண்ட பள்ளிப்பருவத்து தமிழச்சியாய் மாறி... இன்னும் வேகமெடுத்து அவள் ஓட, அவள் ஓட்டத்தின் வேகம் வீரேந்திரனை வியப்புக்குள்ளாக்கியது.

 

இருந்தும் அவனும் தன் பிடிவாதத்தையும் உறுதியையும் விட்டுக்கொடுக்காமல் ஓடினான்.

என்றுமே வெற்றியைக் கூட யாருக்கும் விட்டுத்தராதவன், தன் வாழ்க்கையை விட்டுக் கொடுத்துவிடுவானா என்ன?!

ஆம், அவள்தான் தன் வாழ்க்கை.

அவள் மட்டுமே தன் வாழ்க்கை.

அவளில்லாமல் தன் வாழ்க்கை இல்லை.

அவளில்லாமல் தான் இல்லை...

இந்த எண்ணங்கள் மட்டுமே அவனுக்குள் உறுதியாய் நின்றது. அவன் மனவுறுதியை அபரிமிதமாய் பெருக்கியது.

இன்று அவளை விட்டுக்கொடுத்தால் தன் வாழ்வே முடிவுற்றுப் போகும் என்று எண்ணியவன் அதிவேகமாய் அவளைத் துரத்திப் பிடித்துவிடும் துடிப்போடு ஓடினான்.

10 நொடியானது... "தமிழச்சிசிசிசி..." என்று நெருக்கமாய் அவன் குரல் கேட்க உச்சபட்ச பதட்டம் அவளை ஆட்கொண்டது. என்ன செய்வதென்று அவளுக்குப் புரியவில்லை.

அவளின் உடலின் நடுக்கம் அதிகரித்தது. தான் மரணித்துவிடப் போகிறோம் என்ற உணர்வு அவளை ஆட்டிப்படைக்க ஆரம்பிக்க, எல்லா உறுப்புகளும் அவளுக்குச் செயலற்று போன நிலை, கால்களைத் தவிர.

9

8

7

6

நேரம் குறைந்து கொண்டே வர நிற்காமல் ஓடினாள்.

5 விநாடிகள். கடலை நெருங்கிவிட்டாள்.

"ஏய் தமிழச்சி... அதை தூக்கிப் போடு" என்று கத்தினான்.

அவன் சொன்னது கேட்டாலும் அவள் நடுங்கும் கரத்திற்கு இப்போது அத்தகைய சக்தியில்லை.

4 விநாடிகள் அவன் உச்சபட்ச பதட்டத்தோடு

"ஏய்... தூக்கிப் போடுறிறிறிறி" என்று கத்த, அலையோசை சத்தமே மேலோங்கிக் கேட்டது.

3 விநாடிகள்தான். அதற்குள் அவன் எட்டி அவள் தோள்களைப் பிடித்துக் கொண்டவன் தாமதிக்காமல் அவள் கரத்திலிருந்த பாமை கைப்பற்றித் தூக்கி வீசினான்.

அது வானுயர பறந்து செல்ல

அந்த நொடி வீரேந்திரன் தமிழின் தோளைப் பற்றி கீழே அமர வைத்து அவளை அணைத்துக் கொள்ள, அவள் தன் கரத்தால் காதுகளை அழுத்திப் பிடித்துக் கொண்டு விழிகளை இறுக மூடிக் கொண்டாள்.

2....

1... கடலில் வீழ்ந்தது.

வானமே பூமியின் மீது இடிந்து விழுந்ததைப் போன்ற சத்தம்.

கடல் நீர் வானுயர எழும்பி விஸ்வரூபம் எடுத்து, மீண்டும் அடங்கிப் போன போது, அவர்கள் இருவர் மீதும் அந்த நீரலைகள் மழைப் போல கொட்டித் தீர்த்தது.

தமிழின் தேகம் இன்னுமே பதட்டம் குறையாமல் நடுங்கிக் கொண்டிருந்ததை உணர்ந்தவன் அவளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

தாயின் அணைப்பில் இருந்த குழந்தை போல அவனோடு ஒன்றி அந்தக் கதகதப்பில் அவள் தன்னை ஆசுவசபடுத்திக் கொள்ள, அவனுமே அவளைத் தேடி தேடிக் களைத்து ஓய்ந்து போனவன் அவள் தலைமீது தன் தலையைச் சாய்த்தபடி அமைதியடைந்திருந்தான்.

இருவரும் அந்த அணைப்பிற்குள் மூழ்கிட...

இருவரின் மூச்சுக்காற்றும் ஒருவரை ஒருவர் உரசிட.

இருவரின் கண்களும் கண்ணீரை ஊற்றாய் பெருக்கெடுத்து ஒருவரை ஒருவர் நனைத்திட

அந்தச் சமயத்தில் இருவரின் உதடுகளும் அழுத்தமாய் மௌனம் சாதிக்க

அவர்களின் இதயங்கள் மட்டும் பேசிக்கொண்டது.

ஒன்றிணைந்து ஒரே நேரத்தில் சத்தமாய் பேசிக் கொண்டது.

லப்.. டப்.. லப்.. டப்.. என்று ஒரு சேர இணைந்து படபடத்து கொண்டிருந்தது.

அந்த இருளின் குளிரும், முழு நிலவின் சௌந்தரியமும், அலையோசையின் கீதமும் அவர்களின் மனதை வருடிவிட, மெல்ல மெல்ல அவர்கள் தங்கள் உணர்வுகளை சமன்படுத்திக் கொண்டிருந்தனர்.

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy

You cannot copy content