You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Muran Kavithaigal - 1&2

Quote

முரண் கவிதைகள்

1

வேளச்சேரியில் உள்ள மாநகராட்சிப் பூங்கா!

சற்றே விசாலமாகவும் நடைப்பயிற்சிக்கு ஏதுவாகவும் ஓரளவு சுத்தமாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

மெல்ல மெல்ல வானம் வெளுக்கத் தொடங்கியதில் சிலர் பூங்காவிற்குள் நடைப்பெயர்ச்சிகாக நுழைந்தனர். காதில் ஹெட்செட்டை மாட்டிக் கொண்டும்… சிலர் மூக்கிற்குப் போடவேண்டிய மாஸ்கைத் தாடையில் அணிந்து கொண்டும்…

முதல் அலை ஓயத் தொடங்கியதில் லாக்டௌனிலிருந்து அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்வு அறிவித்திருந்த நிலையில் பல மாதங்களுக்குப் பிறகு பழையபடி அலுவலகங்கள் அவற்றுடன் சேர்த்து பூட்டிப் பரமாரிக்கப்படாமல் இருந்த மாநகாரட்சி பூங்காக்கள் எல்லாம் திறக்கப்பட்டன.

அந்தப் பூங்காவிலிருந்த மரபெஞ்சில் முதல் ஆளாக வந்து அமர்ந்தார் அந்த ஐம்பது வயது மதிக்கதத்தக்கப் பெண்மணி. பூசினார் போன்ற உடல்வாகு. சிவந்த மேனி. தோற்றத்திலும் கருமையான தலை முடியிலும் பெரிதாக வயது தெரியவில்லை என்றாலும் முகத்தில் பிரதிபலித்த அப்பட்டமான சோர்வும் லேசான சுருக்கங்களும் ஓரளவு ஐம்பதில் இருக்கலாம் என்றவாறு கணிக்க முடிந்தது.

அவ்விடமும் சூழ்நிலையும் அவருக்குப் புதிது என்று அவரின் மிரட்சியான பார்வையே சொன்னது.

மக்களும் நடைப்பயிற்சிகாகக் குவியத் தொடங்க, அவர்களை எல்லாம் பார்வையிட்டு கொண்டு அமர்ந்திருந்த அவர் விழிகளில் ஏதோ இனம் புரியாத சோகம் படர்ந்திருந்தது.

சிலரின் ஆயாசமான நடை. தூக்க கலக்க நடை. தொந்தியும் தொப்பையுமாக மூச்சு வாங்கிய நடை.வேக நடை. துள்ளல் நடை கைகளில் ஃபோனைப் பார்த்து கொண்டே நடப்பது. பாட்டுக் கேட்டுக் கொண்டே நடப்பது. உடன் வந்த நண்பனுடன் பேசிக் கொண்டே நடப்பது என்று ஒவ்வொருவரின் நடையும் ஒவ்வொரு விதமாக இருந்தது.

அதுவும் வந்தவர்களின் பெரும்பாலானோர் ஆண்கள். அதிலும் முப்பதிலிருந்து ஐம்பது வயதிற்குள்ளானவர்கள். அவர்களுக்குள் இருவர் மட்டும் இளம் பெண்கள்.

அவரைத் தவிர ஐம்பதிலும் முப்பதிலும் பெண்கள் யாரும் நடைப்பயிற்சி செய்ய வரவில்லை.பெரும்பாலான குடும்பப் பெண்களுக்கு காலை பொழுதுகளில் காபி கலக்கவும் கர்ம சிரத்தையாக சமையல் செய்யவும்தானே நேரம் இருக்கிறது. அதற்கு மேற்ப்பட்டு ஆஃபிஸுக்கு ஓடுகிறார்கள்.

இப்படியாக ஓடி ஓடி உழைத்து கடமையெல்லாம் முடித்து அப்பாடா என்று அமரும் போது வியாதிகளும் வலிகளும்தான் மீதம் இருக்கிறது. இதுதான் வாழ்க்கையா?

இளமையைத் தொலைத்துவிட்டு முதுமையில் எதைத் தேடி அடைகிறோம். மனநிம்மதியையா? உண்மையில் அது யாருக்காவது கிட்டுகிறதா?

அமைதியான உறக்கம். பரபரப்பு இல்லாத காலை பொழுது. இதையெல்லாம் எப்போதாவது அனுபவித்திருக்கிறோமா?

இப்படியாக மனதில் வரிசையாக எழுந்த கேள்விகளுக்கும் சிந்தனைகளுக்கும் அவரிடம் எந்த பதிலும் இல்லை. பதில்களை அவர் தேடவும் இல்லை. இனி தேடி என்னவாகப் போகிறது?

அவருக்கு இப்போது வேண்டியதெல்லாம் அமைதிதான். அதற்காகவே விடிந்தும் விடியாமலும் அங்கே வந்து அமர்ந்து கொண்டார்.

அந்தக் கூட்டத்தைப் போல அவருக்கு நடக்க தெம்பில்லை. வெகுநாட்களாக நின்று ஓடி நடந்த கால்கள்தான் அவை. இன்று ஏனோ அவை ஓய்வைக் கேட்கின்றன. அமைதியாக உட்கார்ந்திருக்க விரும்புகின்றன.

ஆரஞ்சு நிறத்தையும் சிவப்பு நிறத்தையும் குழைத்து சூரியன் எழுதிய வண்ணக் கோலமாய் ஆகாயம் மின்னுவதை நிமிர்ந்து பார்க்கையில் இத்தனை நாளாய் இந்த அழகான விடியலை ரசித்திராமல் இருந்துவிட்டோம் என்ற ஏக்கம் பிறந்தது.

மெல்ல மெல்ல இருள் விலகி வானம் செந்நிறம் பூசிக் கொள்ளும் அழகைத் தேநீரை உறிஞ்சி ருசித்தபடி ரசித்தால்… அதுவும் சூடாகவும் தொண்டைக்கு இதமாகவும் இஞ்சி சேர்த்த தேநீர் யாராவது போட்டு கொடுத்தால்…தெய்வீகம்!

ஆனால் யார் போட்டுக் கொடுப்பார்கள். மீண்டும் ஒருவித விரக்தி உணர்வும் வேதனையும் மனம் முழுக்க வியாபித்தது. தொண்டையை அடைத்தது.

இதுபோன்ற சின்ன சின்ன ஆசைகள் கூட கைக்கு எட்டுவதில்லை. கண்களினோரம் கண்ணீர் கசிந்தது.

இப்படியொரு அமைதியான காலை பொழுது என்பதே அவர் வாழ்வில் அபூர்வம்தான். கடந்த முப்பது வருட ஓட்டத்தில் முதல் முறையாக அவர் மனம் களைப்பை உணர்கிறது. மகள்கள், மகன், கணவர் என்று எல்லோரும் இருந்தும் யாருமே இல்லாதது போல ஒருவித தனிமை உணர்வு ஆட்கொள்கிறது.

தன்னைப் பற்றி சிந்திக்க இவர்களில் ஒருவராவது உண்டா என்று அவர் மனம் கேட்டது. கண்களில் தாமாக கண்ணீர் ஆறாகப் பெருகி வழிந்தோடியது. பொதுவெளியில் அமர்ந்திருக்கிறோம் என்ற உணர்வு எழ அதனைத் துடைத்துக் கொண்டு அவர் நிமிர்கையில் அவர் அருகில் வந்து நின்ற மனிதர்,

“நீங்க மிஸஸ். மாதவன்தானே?” என்று கேட்டு வைக்க, மீண்டும் அதே ஆயாசமான உணர்வு. அடுத்தத் தெரு பூங்காவில் போய் உட்கார்ந்திருக்கலாம் என்ற எண்ணம் எழ,

அந்த மனிதனின் கேள்விக்குச் சிரத்தையின்றி அவர் தலையை மட்டும் அசைத்து வைத்தார்.

“மாதவன்… வந்திருக்காரா?” என்றவர் சுற்றிலும் பார்வையை ஓட்ட,

“இல்ல” என்றவர் முகம் காட்டிய உணர்வுகளைப் புரிந்து கொண்டாரோ என்னவோ?

“ஓ… ஓகே” என்றவர் அதற்கு மேலாக கேள்விகள் கேட்காமல் இங்கிதமாக நகர்ந்துவிட்டார்.

‘மிஸஸ் மாதவன்’ இத்தனை வருடங்களில் இல்லாமல் இன்று அந்த வார்த்தை ஏனோ சுருக்கென்று தைத்தது. இரத்த நாளங்கள் எல்லாம் சூடேறின.

‘மிஸஸ் மாதவன்’ முப்பத்து இரண்டு வருடமாக அதுதான் அவருடைய அடையாளம். பள்ளிப் படிப்பை முடித்த ஒரு வருடத்தில் கல்யாணமும் முடிந்துவிட்டது. தனிப்பட்ட அவரின் வாழ்க்கையும் முடிந்துவிட்டது.

காலத்தின் ஓட்டத்தில் தன்னுடைய அடையாளம், தன்னுடைய பெயர் எல்லாம் மாதவன் என்ற ஒரு மனிதனுக்குள் அடங்கிப் போய்விட்டது.

நாளை தான் இறந்தே போனாலும் இந்த உலகம் தன்னை மிஸஸ் மாதவன் என்றுதான் அடையாளப்படுத்தும். வேறு என்ன அடையாளம் இருக்கிறது தனக்கென்று? என்ன தனித்துவம் இருக்கிறது?

மாதவனின் மனைவி. மாதவனின் பெற்றோருக்கு மருமகள். மாதவனின் குழந்தைகளுக்கு தாய்… இப்படியாக எங்கு திரும்பினாலும் என்ன பேசினாலும் மாதவன் மாதவன் மாதவன்…

இத்தனை மாதவனுக்கு இடையில் ரேணுகா என்பவள் எங்கே இருக்கிறாள்? எங்கே தொலைந்து போனாள்?

முப்பது வருடமாகத் தோன்றாத இந்த எண்ணமெல்லாம் இன்று மட்டும் எதற்கு தனக்கு தோன்றுகிறது?

2

கொரானா. ஒட்டுமொத்த மனித இனத்தையே உலுக்கிப் போட்ட ஒரு பேரிடர்.

வியாபாரங்கள் முடங்கின. ரயில்களும் விமானங்களும் ரத்தாகின. நாடுகளும் மாநிலங்களும் தங்கள் தங்கள் எல்லைகளை மூடின. சாலைகளில் நடமாடத் தடை. நிற்கத் தடை. வண்டியில் செல்லத் தடை. தடைக்கு மேல் தடை.

உலகெங்கும் மொத்தமாக லாக்டௌன் என்ற ஒற்றை வார்த்தையில் அடங்கியது. மனித உலகமே முழுவதுமாக ஸ்தம்பித்து நின்றது.

ஆனால் ரேணுகாவின் உலகம் இந்த லாக்டௌனில்தான் கொஞ்சம் அதிவேகமாகச் சுழன்றது. இன்னும் கேட்டால் ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் மோட்.

ரேணுகா, ஐம்பத்தொரு வயது. மாதவனுடன் திருமணம் நடந்த போது அவருக்கு பத்தொன்பது வயது.

காலத்தின் வேக சுழற்சியில் மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்து அவர்களை வளர்த்துப் படிக்க வைத்து எப்படி வருடங்கள் ஓடி முதிர்ச்சியடைந்தோம் என்று தெரியாதளவுக்கு வருடங்களும் வயதும் அதிவேகமாகப் பறந்துவிட்டன.

இரண்டு மகள்களையும் நன்றாகப் படிக்க வைத்துச் சீரும் சிறப்புமாகத் திருமணமும் முடித்துவிட்டார். மூத்தவளுக்கு இரண்டு மகன்கள். கடைக்குட்டி மகளுக்கு குழந்தை பிறந்து ஒரு மாதம் நிறைவடைந்திருந்தது.

ரேணுவின் சந்தோஷம் துக்கம் எல்லாமே அவருடைய குடும்பம்தான். பெரிதாக விருப்பு வெறுப்புகள் இல்லாத மனுஷி. வீட்டைச் சுத்தம் செய்வது, தோட்டங்களைப் பராமரிப்பது, சமைப்பது என்று அவருடைய ஒவ்வொரு நாளும் முழுவதுமாக வேலைகளால் ஆக்கிரமிக்கப்பட்டவை. எப்போதாவது பொழுதுபோக்கிற்காகத் தொலைகாட்சிகளில் சீரியல்கள் பார்ப்பார். அதையும் கூட விரும்பி எல்லாம் செய்யமாட்டார்.

அவர் மிகவும் விரும்பி செய்யும் ஒரே விஷயம் தேநீர் அருந்துவது.

ஒவ்வொரு நாளையும் ஒரு சுவையான தேநீருடன் தொடங்குவது அவருக்கு மிகவும் பிடித்தமான விஷயம். அது அவருக்கு ஒரு போதை போன்றது. அதன் பிறகுதான் அவருக்கு மற்ற எந்த வேலைகளும் ஓடும். ஆனால் லாக்டௌன் வந்த நாளிலிருந்து அந்த நிம்மதியும் இல்லை.

சூடாகத் தேநீரை வடிக்கட்டி கப்பில் ஊற்றும் போதுதான் ஏதாவதொரு வேலை வரும்.

“ரேணு ரேணு…” வாசலில் மாதவன் அழைத்துக் கொண்டு நிற்க போட்டு வைத்த தேநீரை மூடி வைத்துவிட்டு அவர் வெளியே ஓடுவார்.

“இந்தா… இதுல ஒன்றரை கிலோ மட்டன் இருக்கு… இரண்டு கிலோ மீன் இருக்கு… அப்புறம் வெஜிட்டபிள்ஸ் எல்லாம் இதுல இருக்கு” என்று அந்த நெகிழி பைகளை நீட்டிவிட்டு,

“அந்த ஹான்ட் சானிட்டைஸரை எடுத்து கையில போடு” என்பார்.

பைகளை உள்ளே ஓரமாக வைத்துவிட்டு அவருக்கு அந்த கிருமிநாசினியைத் தந்துவிட்டு,

“சுடு தண்ணிப் போட்டு வைச்சிருக்கேன்… குளிச்சிருங்க… ஆ அங்கேயே பக்கெட் வைச்சிருக்கேன்… துணியை அதுல போட்டிருங்க… போடும் போது சுடு தண்ணில நனைச்சு போடுங்க” என்று சொல்லி அவரைக் குளியலறைக்கு அனுப்பிவிட்டு திரும்பி கைகளை நன்றாக தேய்த்து அலம்பி கொண்டு, அந்த தேநீரை கைகளில் எடுக்கும் போது அது ஆறியே போயிருக்கும்.

சூடு செய்து குடிக்க சில நிமிடங்கள்தான் ஆகும் என்றாலும் சுத்தம் செய்ய வைத்திருக்கும் கறி மீன்களைப் பார்த்து ஆயாசமாக மூச்சை இழுத்துவிட்டு, தொண்டைக்குள் அந்த தேநீரை அப்படியே சரித்துக் கொள்வார்.

காய்கறிகளை மஞ்சள் உப்பு போட்டு ஊற வைத்து கழுவி எடுத்து வைக்கும் போதே குளித்துவிட்டு வந்த மாதவன், “டீ இருந்தா கொஞ்சம் கொடு ரேணு” என,

“காலையில கடைக்கு கிளம்பும் போதுதானே போட்டு கொடுத்தேன்… குடிச்சீங்க” என்றவர் கடுப்பாகக் கேட்டாலும்,

“இருங்க கறி கழுவிட்டு இருக்கேன்… முடிச்சுட்டு எடுத்துட்டு வரேன்” என்பார்.

“சரி சரி நீ பொறுமையாதான் எடுத்துட்டு வா” என்றவர் மெல்ல சோஃபாவில் சாய்ந்து கொண்டு தொலைக்காட்சியில் ஐக்கியமாகிவிடுவார்.

ரேணு கறியைச் சுத்தம் செய்து எலுமிச்சை சாறும் மஞ்சளும் சேர்த்து பிசைந்து கைக்கழுவி கொண்டு காலை டிஃபன் வேலையை ஆரம்பிப்பார். அந்த மூன்று அடுப்புக்களில் ஒன்றில் இட்லியை ஊற்றி வைத்து விட்டு மற்றொன்றில் குக்குரை வைத்து கையோடு வெங்காயம், தக்காளி, அரைத்து வைத்த பூண்டு இஞ்சி விழுதைப் போட்டுக் கிளறிக் கொண்டே நடுவில் உள்ள சின்ன அடுப்பில் பால் வைத்து தேநீரையும் தயார் செய்து எடுத்து வந்து தருவார்.

மாதவன் தொலைக்காட்சிப் பார்த்து கொண்டே அந்த தேநீரை வாங்கிக் கொள்ள, ரேணுகா அவசரமாக உள்ளே ஓடி அடுப்பை கவனிப்பார். அரைத்து மசாலா கறி எல்லாம் சேர்த்து நன்றாகக் கிளறிய பின் குக்குரை மூடிவிட்டு மீண்டும் இட்லி தட்டுக்களை எடுத்துவிட்டு அடுத்த ஈடு ஊற்றி வைப்பார்.

அப்போது அவர் வீட்டின் முதல் அலறல் சத்தம் கேட்கும். பேத்தியின் அழுகை சத்தம் கேட்டதும் அறைக்குள் சென்று எட்டிப் பார்த்துவிட்டு,

“சாதனா… பாப்பா எழுந்துட்டா பாரு…உன் காதுல விழல... எழுந்து பால் கொடு” என,

“ம்மா இப்பதான் மா கொடுத்தேன்” என்றவள் கண்களைத் திறக்காமல் அலுப்புடன் சொல்ல,

“அடி வாங்க போற… எழுந்து என்னன்னு பாருடி” என்றவர் அதட்ட, “ப்ச்” என்று சலித்துக் கொண்டு அவள் எழுந்து அமர்ந்து தன் மகளை தூக்கிப் பார்ப்பாள்.

“டாய்லெட் போயிட்டா… அதான் அழுவறா” என்றவள் சொல்ல,

“சரி சரி க்ளீன் பண்ணிட்டு எண்ணெய் மசாஜ் பண்ணி வெயில காட்டு” என்றதும், “ம்ம்ம் சரி” என்று தூக்க கலக்கத்துடன் தலையசைப்பாள்.

“டாக்டருக்குப் படிச்சு இருக்காங்கனுதான பேரு… இருந்தும் எல்லாம் நாமதான் சொல்லணும்” என்றவர் சலிப்புடன் தனக்கு தானே சொல்லிக் கொண்டு தன் சமையலறைப் பணியை மீண்டும் தொடர்வார்.

சாதனாவிற்குத் திருமணமாகி ஒரு வருடம் நிறைவடைய போகிறது. அவள் கணவன் கெளரவ் ஒரு அரசு மருத்துவன். அவளோ ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருந்தாள். இந்த கொரானா தொடங்கி தமிழ்நாட்டில் தீவிரமெடுக்கையில் அவள் ஐந்து மாத கர்ப்பிணி.

அப்போதே அம்மா வீட்டிற்கு வந்தாகிவிட்டது. இந்த ஆறு மாதங்களாக கெளரவுடன் வீடியோ காலிலேயே குடித்தனம் நடத்துகிறாள். குழந்தை பிறந்து ஒரு மாதமாகிறது. இன்னும் அவனால் குழந்தையைப் பார்க்க வரமுடியவில்லை.

கொரானா நோயாளிகளைக் கவனித்து கொள்ளும் பணியில் மனைவி குழந்தைகளுடன் நேரம் செலவிட முடியாத வருத்தம் அவர்கள் ஒட்டுமொத்த குடும்பத்திற்கே இருந்தது.

திருமணத்தின் போது அரசு மருத்துவரா என்று கேட்டு ‘ஆ’ என்று வாய் பிளந்த உறவினர்கள் எல்லாம் இப்போது ‘ச்ச்சோ’என்று இரக்க பாவம் காட்டுகிறார்கள்.

கிட்டத்தட்ட தன் குழந்தையைக் கூடப் பார்க்க முடியாத கெளரவ் நிலைமையும் அப்படிதான் இருந்தது.

ரேணு சமைத்த கறி குழம்பின் வாசம் வீடு முழுக்க மணத்தது. அடுத்த அறையில் படுத்திருந்த உதயசந்திரன் நாசியிலும் அந்த வாசம் நுழைந்துவிட,

“மாமியோட கறி குழம்பு வாசம்… சான்சே இல்ல” என்று படுக்கையிலிருந்தபடியே அவன் சப்புக் கொட்டினான்.

“எவ்வளவு எழுப்பினாலும் எழுந்திருக்க மாட்டீங்க… கறி குழம்பு வாசனை வந்ததும் முழிப்பு வந்துடுச்சா” மாதவன் ரேணுவின் மூத்த புதல்வியான மிருதுளா கணவனிடம் எரிச்சலாக மொழிய,

“நானாவா முழிச்சேன்… அந்த வாசனை வந்து தானா என் மூக்குக்குள்ள போய் மூளைக்குள்ள வந்து என்னைத் தட்டி எழுப்பிருச்சு” என்றவன் இன்னும் கறிக் குழம்பு மணத்தை நுகர்ந்தபடி இருந்தான்.

“சரி சரி எழுந்துட்டீங்க இல்ல… உங்கப் பசங்களை எழுப்புங்க… ஆன்லைன்ல கிளாஸ் ஆரம்பிச்சுடும்… அப்புறம் நேத்து மாதிரி பல்லு கூட விலக்காம உட்கார்ந்து துளைப்பானுங்க” என்று அவள் சொல்லி கொண்டே தன் லேப்டாப்பைத் தட்டிக் கொண்டிருக்க,

“மிருது… காலங்கத்தால உனக்கு என்ன வேலை அதுல… அம்மா சமைச்சிட்டு இருக்காங்க இல்ல… கூட மாட ஏதாவது அவங்களுக்கு ஹெல்ப் பண்ணிட்டு வந்து அதை திறக்கலாம் இல்ல” என்றவன் சொன்னதும் அவளுக்குக் கோபமேற,

“நான் இந்த வேலையை முடிச்சு உடனே மெயில் அனுப்பணும்… நைட் எவ்வளவு நேரம் முழிச்சு செஞ்சும் முடியல… தெரியுமா?” என்று தன் நிலைமையைச் சொன்ன அதேநேரம்,

“எங்க அம்மா எல்லாம் தனியா பார்த்துப்பாங்க… உங்க அம்மா மாதிரி நினைச்சீங்களா? ஒரு வேலைக்கு பத்து ஆள் வேணும்”என்று கணவனைப் பதிலுக்கு குத்தியும் வைத்தாள்.

“இப்ப ஏன் டி எங்க அம்மாவை இழுக்கிற” என்றவன் முகத்தை துடைத்து கொண்டு எழுந்து அமர,

“உண்மைதானே சொன்னேன்” என்றாள்.

“அம்மா தாயே… விடு… நான் எதுவும் சொல்லல… காலங்கத்தால கச்சேரியை ஆரம்பிச்சிடாதே” என்றவன் அதன் பின் அருகே படுத்திருந்த மகன்களை எழுப்பினான்.

“தருண்… கௌஷிக்” என்றவன் உலுக்க உலுக்க இருவரும் எழுந்திருப்பேனா என்று போர்வையில் சுருண்டு கொண்டிருந்தனர்

மிருதுளா உதய்க்கு திருமணமாகி பத்து வருடங்கள் கடந்து விட்டன. தருணுக்கு ஆறு வயது, கௌஷிக்கிற்கு எட்டு வயது. இருவரும் ஐ டி ஊழியர்கள். இந்த லாக்டௌனில் யாருக்கு நல்லது நடந்ததோ இல்லையோ?

ஐடி கம்பெனிகளுக்கு நடந்தது. தங்கள் அலுவலகங்களை மூடிவிட்டு வீட்டில் வைத்தே வசமாக வேலை வாங்கிக் கொள்கிறார்கள். மிருதுளாவிற்கு மகன் செய்யும் சேட்டைகளையும் சமாளித்து கொண்டு அலுவலக வேலைகளையும் பார்த்து கொள்வதற்குள் அவளுக்கு பெண்டு கழன்று போனது.

தங்கைக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்ற சாக்கில் அம்மா வீட்டிற்கு வந்தவள் மொத்தமாக அங்கேயே டேரா போட்டுவிட்டாள்.

இப்போது அலுலவக வேலை செய்வது ஒன்றுதான் அவள் வேலை என்றாகிப் போனது. மற்றபடி யாராவது ஒருவர் குழந்தைகளைப் பார்த்து கொள்கிறார்கள். தாய் நேரா நேரத்திற்கு சமைத்து வைக்கிறாள் என்று இந்த லாக்டௌனில் கொஞ்சம் அதிகப்படியான சொகுசிற்குப் பழகவிட்டாள்.

ரேணுகா அடுப்பை அணைத்து மீனைக் கழுவ எடுத்து கொண்டு பின்வாயிலுக்கு வந்து ஓய்ந்து அமர்ந்த போது, “வாவ்… ஃபிஷ்… சூப்பர் இன்னைக்கு ஃபிஷ் செய்ய போறீங்களா அம்மம்மா!” என்று கௌஷிக் அருகே வந்த குதித்து கொண்டே கேட்க,

“ஆமான்டா கண்ணு… மாமா இன்னைக்கு வர போறான் இல்ல… அதான் மாமாவுக்குப் பிடிச்ச ஃபிஷ் செய்றேன்” என்றவர் பதில் சொல்லி கொண்டே தன்னுடைய சுத்தம் செய்யும் வேலையை தொடங்குவார்.

அதன் பின் கௌஷிக்கும் தருணும் ரேணுகா அருகில் அமர்ந்து அவர் சுத்தம் செய்யும் விதத்தைப் பார்த்து கொண்டே, “இதென்ன மீன்… அதென்ன மீன்… அந்த மீன் ஏன் அப்படி இருக்கு” என்று குடைந்து குடைந்து கேள்விகள் கேட்க அங்கே வந்த உதய்,

“இன்னும் பிரஷ் பண்ணாம அங்கே என்ன அரட்டை” என்று குரல் கொடுக்கவும்தான் இருவரும் நகர்ந்தனர்.

ரேணுகாவிற்கு அந்த மீன்களை எல்லாம் கழவி முடிப்பதற்குள் கை கால்கள் விட்டுப் போய்விடும். அவர் மெல்ல எழுந்து மீண்டும் சமையலறைக்கு வர,

“அம்மம்மா பால் போட்டுக் கொடுங்க” என்று கேட்டு கொண்டு வந்து நிற்பான் சின்னப் பேரன்.

“இன்னுமாடா உங்க அம்மா போட்டுக் கொடுக்கல” என்று கேட்டு கொண்டே பாலை அடுப்பில் வைத்து காய்ச்ச,

“அம்மா ஏதோ ஆஃபிஸ் வேலை பார்க்கிறாங்க அம்மம்மா” என, அவருக்குக் கடுப்பாக இருக்கும்.

“எப்பப்பாரு லேப்டாப் கையுமாதான் இருப்பா… வேற பொழைப்பு இல்ல அவளுக்கு” என்று மகளைத் திட்டிக் கொண்டே இருவருக்கும் பால் கலந்து கொடுத்துவிட்டு மருமகனுக்கும் தேநீர் கலந்து தருவார்.

அதனைப் பெற்று கொண்டவன், “நீங்க மட்டும் எப்படி மாமி இவ்வளவு சூப்பரா டீ போடுறீங்க… வேற எங்கே குடிச்சாலும் இந்த டேஸ்ட் வரல” என்று ஒரு நாளைக்கு பத்து முறையாவது மாமியாரின் சமையலைப் புகழ்ந்து தள்ளிவிடுவான். அதை கேட்கும் போது ரேணுவின் அயர்ச்சியைத் தாண்டி முகம் மலர்ந்துவிடும்.

அங்கே வந்து சாதனா, “உங்கப் பொண்டாட்டி டீயைக் குடிச்சிட்டு எங்க அம்மா டீயைக் குடிச்சா… அப்படிதான் தேவாமிர்தமா தெரியும் மாமா” என,

“அவ முதல எனக்கு டீ யே போட்டு தர மாட்டா… வீட்டுல பாட்டில் பாட்டிலா ஹார்லிக்ஸ் போர்ன்விட்டாதான் வாங்கி வைச்சிருக்கா… வேற வழி… அதைதான் நானும் குடிச்சாகணும்” என்றவன் கடுப்புடன் சொல்ல,

“பாவம் மாமா நீங்க” என்று பரிதாபமாக உச்சுக் கொட்டினாள் சாதனா.

“இந்த இரண்டு மூணு மாசமாதான் நான் நல்லா ருசியான சாப்பாடே சாப்பிடுறேன்… தெரியுமா” என்றவன் வருத்தமாகக் கூறும் போதே,

“என்ன சொன்னீங்க?” என்று வெளியே வந்து கணவனை மிருதுளா முறைத்து கொண்டு நின்றதும் அவன் அப்படியே ஜகா வாங்கிவிடுவான். மாமாவிற்கும் மச்சினிச்சிகும் வம்பு வளர்த்து மிருதுளா வெறுப்பெற்றுவதுதான் வேலை.

சத்தமில்லாமல் வந்த வேலையை முடித்துவிட்டு சாதனா நகர்ந்துவிட அதன் பின், “மிருது நான் அப்படி சொல்லல… இப்படி சொல்லல” என்று உதய் சமாளித்து மனைவியை சமாதானமும் செய்துவிடுவான்,

அதன் பிறகு காலை டிஃபன் சாப்பிடும் போது கூட இதே கதைதான் நடக்கும்.

“சூப்பர் மாமி குழம்பு செமையா இருக்கு… இன்னும் இரண்டு இட்லி வைங்க” என்று உதய் கேட்கவும்,

“போதும் போதும்… ஏற்கனவே தொப்பை முட்டிகிட்டு நிற்குது” என்று மிருதுளா அவனை அடக்குவாள்.

“சும்மா இரு மிருது” என்று மருமகனுக்கு ஆர்வமாகப் பரிமாறுவார் ரேணு.

“உடம்பு கெட்டுப் போயிடும்னு அப்பாவுக்கு மட்டும் கணக்கு பார்த்து வைக்கிற இல்லமா” என்று மகள் கேட்டால்,

“உங்க அப்பா வயச என்ன? அவர் வயச என்ன? அதுவும் உங்க அப்பா அந்த வயசுல அசராம இருபது இட்லி சாப்பிடுவார்” என்பார் ரேணு.

“அதுக்குதான் இப்ப அப்பா அவஸ்த்தைபடுறார்”

“சும்மா இருந்த டியூப் லைட்டை ஏன் யா உடைக்குறீங்க… அவர் பாட்டுக்கு சிவனேன்னு சாப்பிட்டுட்டு இருக்காரு” என்று இடையில் வந்து மாமனாருக்கு வக்காலத்து வாங்குவான் உதய். இத்தனை களேபரத்திலும் மாதவன் எதுவும் பேசாமல் அமைதியாக உண்டு முடிப்பார்.

“இருந்தா மாமா மாதிரி இருக்கணும்…” என்று உதய் சொல்ல,

“எங்க அப்பாவை கலாய்கிறீங்களா?” என்று அப்போது மட்டும் மகள்கள் இருவரும் ஒன்று சேர்ந்து கொண்டு முறைக்க,

“நான் உங்க அப்பாவுக்கு சப்போர்ட்தானே மா பண்ணேன்” என்றவன் அதற்கு மேலாக அக்கா தங்கைகளிடம் வாயைக் கொடுக்க கூடாது என்று எழுந்து கைக் கழுவி கொள்வான்.

அடுத்ததாக சாதனாவின் கைப்பேசி அவளை அழைக்கும். கெளரவ் நைட் ஷிஃப்ட் முடித்து வந்திருப்பான். அவ்வளவுதான். அவசர அவசரமாக தட்டில் இருப்பதை முடித்துவிட்டு எகிறிக் குதித்து ஓடி விடுவாள்.

“சாதனா இன்னும் இரண்டு இட்லி சாப்பிட்டுப் போ” என்ற அம்மாவின் குரல் எல்லாம் அப்போது அவள் காதில் விழாது. இருவரும் காதோடு காது வைத்து காதில் இரத்தம் வழியும் வரை காதல் மொழி பேச ஆரம்பிப்பவர்கள் இறுதியாக ஏதாவது வாக்குவாதத்திலோ சண்டையிலோ முடித்து வைப்பார்கள். இதெல்லாம் தினமும் நடக்கும் தொடர்கதைகள்.

“பாவம் சாதனா… இப்படிப் புருஷனை விட்டுப் பிரிஞ்சு இருக்க வேண்டிய நிலைமை” என்று மிருதுளா தங்கையின் நிலையை எண்ணி கவலை கொள்ள, சின்னஞ்சிறுசுகள் இப்படி பிரிந்திருக்கிறார்களே என்று ரேணுவுக்கும் மாதவனுக்கும் கூட வருத்தம்தான்.

ஆனால் இந்தக் கலவரத்திலும் உதய், “ஆமா அப்படியே புருஷன் கூடவே இருந்துட்டா மட்டும்” என்று மனைவியைப் பார்த்து எள்ளலுடன் சொல்ல,

“உங்களை” என்று கணவனை சாப்பாட்டுக் கையோடு மொத்தி வைப்பாள்.

“மிருது விடு” என்று ரேணு குரல் கொடுக்க,

“நீங்க முதல் வேலையா வீட்டுக்குக் கிளம்புங்க” என்று உதய்யிடம் சொன்னதும், “அதெப்படி நீ இல்லாம நான் தனியா இருப்பேன்” என்று அடுத்த நொடியே அவன் சரண்டர்தான்.

இப்படியாக காலை உணவு பேச்சும் கலகலப்புமாக முடிய ரேணு அதன் பிறகே உணவு உண்ண அமர்வார். அதுவும் கறித்துண்டுகளை எல்லாம் வர போகும் மகனுக்காகப் பொறுக்கி எடுத்து வைப்பவர் கணவனிடம் பேசிப் பேசி களைப்பாகி மீண்டும் சாதனா டிஃபன் சாப்பிட வந்தாலும் வருவாள் என்று அவளுக்கும் சேர்த்து கிண்ணத்தில் தனியாகக் கறிக் குழம்பை ஊற்றி வைத்துவிட்டு, பின்பு தனக்கென்று ஒன்றிரண்டு துண்டுகளை மட்டும் வைத்து கொண்டு சாப்பிடுவார்.

அதுவும் அடுத்த வேலையை செய்ய வேண்டுமென்ற யோசனையில் அவசரகெதியில் முடித்து கொண்டு அவர் எழுந்தால் சமையலறையில் பாத்திரங்கள் குவிந்து கிடக்கும்.

பாத்திரம் தேய்க்க மட்டும் வேலைக்காரி வைத்திருந்தார். ஆனால் இந்த கொரானா காலத்தில் அதிலும் மண் விழுந்தது. வீட்டில் பச்சிளங்குழந்தை இருக்கும் போது வேலைக்காரியை வேறு வைத்து தேவையில்லாத எதையாவது இழுத்துவிட்டுக் கொள்ள வேண்டாமென்று அவரே அந்த வேலையையும் செய்தார்.

எப்போதாவது மிருதுளா செய்து கொடுப்பாள். ஆனால் இன்று என்னவோ அவள் அறையே கெதி என்று கிடக்க உள்ளே ஆன்லைன் வகுப்பு பரிதாபங்கள் தொடங்கியிருக்கும்.

“டேய் அறிவுக்கெட்டவனே வீடியோ ஆஃப் பண்ணு டா” என்று மிருதுளா சின்னவன் கௌஷிகிடம் கத்த,

“ம்மா அவன் மியூட்ல கூட போடல” என்று தருண் சத்தமிடுவான்.

“ஐயோ இவன்கிட்ட” என்று அவள் டென்ஷனாகும் போது லேப்டாப்பிற்குள் இருந்து அவன் ஆசிரியை, “கௌஷிக் மியூட் பண்ணு” என்று கத்துவார்.

இப்படியே அரை மணிநேரம் ஓடிப் போகும். வகுப்பும் முடிந்தும் போகும். இந்தச் சத்தங்களை எல்லாம் கேட்டுக் கொண்டே ஆயாசமாக மூச்சை இழுத்துவிட்டபடி ரேணு பாத்திரங்களைத் தேய்த்து முடிப்பார்.

மாதவன் இதை எல்லாம் கண்டு கொள்ளமாட்டார். வேலை ஓய்வு பெற்ற இந்த இரண்டு வருடத்தில் அவர் முழுவதுமாக சீரியல் உலகத்தில் ஐக்கியமாகிவிட்டார்.

“ரோஜா போட்டுருவான்… சன் டிவி வை” என்று தொடங்கி,

“விஜய் டீவில கண்ணம்மா ஆரம்பிச்சிருப்பான்” என்று அன்றைய நாளை முடித்து கொள்வார். இதற்கு இடையில் ஆன்லைன் வகுப்பில் அரட்டை அடித்துவிட்டு வந்த இரு வால்களும் தாத்தா ரிமோர்ட்டை தரமாட்டார் என்று தெரிந்து கொண்டு மாடி அறையில் உள்ள தன் மாமா அறையில் உள்ள தொலைக்காட்சியில் ரகசியமாக கேம் விளையாட சென்றுவிடுவார்கள்.

ரேணுகா மதிய உணவிற்காகத் தொடங்குகிற இடைவெளியில் வீட்டை எல்லாம் சுத்தம் செய்துவிட்டு மீன் குழம்பிற்கு தயார் செய்ய ஆரம்பிப்பார்.

குழம்பில் போடுகிற சின்ன வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி எல்லாம் அவர் வீட்டு மாடித்தோட்டத்திலிருந்து அதன் பச்சை வாசனையுடன் பறித்துப் போட்டாள்தான் அவருக்குப் பிடிக்கும்.

ஆதலால் அத்தனை வேலையிலும் மாடிக்குப் போவார். அப்படியே மேல் அறையிலிருந்த வாஷிங் மிஷினிலிருந்து துணிகளை காய வைக்கவும் எடுத்து கொள்வார். எந்த வேலையையும் ஒரு நேர்த்தியுடனும் அதேநேரம் சுற்றி வளைக்காமல் வேலையோடு வேலையாக சுறுசுறுப்பாக செய்து முடிப்பதுதான் அவரின் வழி. அவர் ஒரு பெர்ஃப்க்ஷனிஸ்ட்.

அவர் செய்யும் வேலை எதுவானாலும் அந்த நேர்த்தி குன்றவே குன்றாது. அதே அளவுக்கான நேர்த்தியை அவர் மற்றவரிடமும் எதிர்பார்க்கும் போது அவருக்கு அது ஒத்தும் போகாது. அதனாலேயே எந்த வேலைகளுக்கும் அவர் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தானே செய்து முடிப்பார்.

மாடியில் தனியாக இருந்த அவர் மகனின் அறைக்கு முன்பாக நிறைய இடங்கள் காலி இருந்தன. அங்கேயே ஓரமாக கம்பிகளில் துணியைக் காய வைத்துவிட்டுக் கொஞ்சம் உள்ளே நகர அவரே அவருக்கான அந்த அழகிய மாடித்தோட்டம் மலர்ச்சியுடன் அவரை வரவேற்கும்.

பூச்செடிகள் தொடங்கி காய்கறிகள் கீரைகள் மூலிகைகள் கூட பயிரிட்டிருந்தார். கிட்டத்தட்ட அந்தத் தோட்டம் இந்தளவு செழிப்பாகவும் வளமாகவும் இருக்க இரண்டு வருட அவரின் உழைப்பு இருந்தது.

முழுக்க முழுக்க மருந்தில்லாத காய்கறிகளை உற்பத்திச் செய்து சமைப்பதில் அப்படியொரு ஆத்மதிருப்தி கிடைக்கும். கால் வலி, இடுப்பு வலியிலும் அந்தத் தோட்டத்தைப் பரிமாறிக்க அவர் தவறியதே இல்லை. மருந்திடுவது மற்றும் உரம் போடுவது என்று அந்தச் செடிகளுக்கும் எப்போது என்ன தேவையென்று பார்த்து பார்த்து செய்வார்.

தினம் சமைக்கும் காய்கறிக் குப்பைகளை ஒரு சின்ன பேரலில் கொட்டி வைத்து அதனையும் உரமாக மாற்றுவார். அதுவும் இந்த கொரானா காலக்கட்டத்தில் இந்தத் தோட்டம் அவருக்குப் பெரிதும் உதவியாக இருந்தது. கீரை வகைகள் எல்லாம் அவர் வெளியே வாங்குவதே இல்லை. எல்லாமே அவர் தோட்டத்தில்தான்.

எங்கோ ஒரு ஓரமாகப் பூச்சி அரித்திருக்கும் இலைகளை கூட கூர்மையாக கவனித்து கத்தரித்துவிடுவார்.

அந்தச் செடிகளை எல்லாம் தன்னுடைய சொந்த குழந்தைகளை போலவே அவர் பார்த்துக் கொள்வார். ஏதாவது ஒரு செடியில் பூச்சிப் பட்டுப்போனாலும் அவர் மனம் தாங்காது. துவண்டு போய்விடுவார். அந்தச் செடிகளுக்கும் அவருக்கு ஏதோ ஆழமான பந்தம் இருப்பதாக உணர்வார்.

அவைகளும் கூட அவரைப் பார்த்ததும் அசைந்தாடி புன்னகைப்பது போன்ற பிரமையை அவருக்கு உண்டாகும். அங்கே வந்து அவர் நிற்கும் அந்த சில நிமிடங்கள் அவருடைய மொத்த களைப்பும் நீங்கி அப்படியொரு நிம்மதியும் பரவசமும் கிடைக்கும்.

அந்த உணர்வுடன் மெல்ல அந்தத் தோட்டத்தின் சுவாசக் காற்றையும் மண் வாசத்தையும் உள்ளுக்கு இழுத்துக் கொண்டு வெங்காயத்தாள் கொத்தமல்லி வெந்தயக் கீரை எல்லாம் பறித்து முறத்தில் வைத்து கொண்டு இறங்க எத்தனித்த போது எதிர்வீட்டு மாடி படுக்கையறை எதேச்சையாக அவர் கண்களில் தென்படும். அதனை கவனிக்காமல் அவரால் நகரவும் முடியாது.

எதிர்வீட்டு மனிதர் பால்கனி கதவுகளை எல்லாம் திறந்து வைத்துவிட்டு, “ஜோஷி மா… எழுந்திருடா… டிஃபன் சாப்பிடு” என்று கொஞ்சிக் கெஞ்சி மகளை எழுப்பி கொண்டிருந்த காட்சியைப் பார்த்து அவருக்கு அப்படியொரு கடுப்பு வரும்.

அவரே பார்க்கக் கூடாது என்று எண்ணினாலும் இந்தக் காட்சி தினமும் அவர் கண்ணில் பட்டுவிடும். பதினோரு மணி வரை கூட ஒரு பெண் உறங்குவாளா? இவள் என்ன மாதிரி பெண்ணாக இருப்பாள் என்று அவருக்குள் அசூயை உணர்வு எழ,

“டேட் ப்ளீஸ் க்ளோஸ் தி டோர்… நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கணும்” என்பாள். இதுவும் அவர் காதில் விழுந்து தொலைக்கும்.

“யார் எப்படி போனா நமக்கு என்ன வந்தது?” என்று அவர் தன் எண்ணங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு கவனத்தைத் திருப்ப முனைந்தாலும் உள்ளுக்குள் அந்தப் பெண்ணின் மீது ஒருவிதமான வெறுப்புணர்வு உருவாவதை அவரால் தடுக்க முடியாது.

ஆனால் அந்தப் பெண்ணோ சற்றும் அசராமல் சூரியன் உச்சிக்கும் வரும் வரை தன் உறக்கத்திலிருந்து எழ மாட்டாள்.

அவள்தான் ஜோஷிகா.

ரேணுகாவிற்கு முற்றிலும் நேர்மார். இருவரும் ஏணி வைத்தால் அல்ல. ஹெலிகாப்டரே வைத்தாலும் எட்டிப் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தனர்.

ரேணுகா – ஜோஷிகா… இவர்கள் இருவரும்அடுக்கு மொழியில் உள்ள முரண் கவிதைகள்.

vanitha16, Rathi and Thani Siva have reacted to this post.
vanitha16RathiThani Siva
Quote

Super ma 

Quote

reddit priligy Tobramycin Injection may cause serious side effects including

Quote

More recently, ipilimumab is recommended as adjuvant therapy for cutaneous melanoma following complete surgical resection, with treatment for up to 3 years how to buy cytotec for sale

You cannot copy content