You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Muran kavithaigal - 12

Quote

12

‘நீ உன் சில்லி பிகேவியரால…’

நிரஞ்சன் சொன்ன அந்தக் குறிப்பிட்ட வார்த்தை திரும்ப திரும்ப அவள் காதிற்குள் ஒலித்துக்கொண்டே இருக்க, அவள் ரொம்பவும் அவமானமாக உணர்ந்தாள்.

அவன் எப்படி அப்படி சொல்லலாம். உள்ளுக்குள்ளேயே குமுறினாள். புழுங்கினாள். கண்களில் கண்ணீர் நிறைந்து வழிந்தது. மனம் பலவீனப்பட்டது.

தன் வீட்டில் இருந்த போது இருந்த சுதந்திரம் இங்கே இல்லை என்று ஆணித்தரமாக மண்டையில் உரைத்தது.

திருமணமாகி எதிர் வீட்டிற்கே வந்திருந்த போதும் இரண்டும் வெவ்வேறு கிரகங்களின் தூரத்தைக் கொண்டிருந்ததாக உணர்ந்தாள். அதுவும் இந்த வீட்டில் உள்ளவர்களை எல்லாம் பார்த்தால் வேற்று கிரகவாசிகள் போல்தான் இருந்தன. ஒரு வகையில் அவர்களும் அவளை அப்படிதான் பார்க்கிறார்கள்.

அவளுக்கு அங்கே இருக்கவே பிடிக்கவில்லை. ஆனால் எதிர் வீட்டிலேயே பிறந்த வீடு இருந்த போதும் போக முடியாத மனநிலையில் தவித்தாள்.

முன்பு நடந்த சண்டையில் கூட நேராக அங்கே சென்று நின்றதும், “வந்த முதல் நாளே பிரச்சனையா?” என்று ஜோசப் எடக்காகக் கேட்டது அவளைக் கடுப்பாக்கிவிட்டது.

திருமணத்திற்கு முன்பாகவே, ‘நீ ஒரு மாசம் கூட அவன் வீட்டுல  தாக்குப் பிடிக்க முடியாது ஜோஷி’ என்று அவர் சொன்னது நினைவில் தட்டியது. தன் ஈகோவை விட்டுக் கொடுக்க முடியாமல்,

“பிரச்சனையும் இல்ல ஒன்னும் இல்ல… நான் என் பெட் ரூம்ல இருக்க சில திங்க்ஸ் எடுக்க வந்தேன்” என்று வீம்பாகச் சொல்லிவிட்டு அறைக்கு வந்து விட்டாள். ஆனால் கோபத்துடன் இங்கே வந்துவிட்டு எப்படி சுயமரியாதையை விட்டுத் தானே திரும்பி போவது என்று உள்ளுர கவலையுற்ற போதுதான் நிரஞ்சன் வந்து சமாதானமாகப் பேசினான்.

‘பெங்களூர் போய்விடலாம்’ என்றதற்கு அவன் சம்மதம் சொன்னதும் அவள் மனம் கொஞ்சம் ஆசுவாசப்பட்டது. ஆனால் கொரானா வந்து எல்லாவற்றையும் கெடுத்துவிட்டது.

அவர்கள் தங்கியிருந்த ஏரியாவில் நிறைய பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டிருப்பதால் அந்த வழியை மூடிவிட்டார்கள் என்று கேள்விப்பட, இப்போதைக்கு இருவரும் பெங்களூர் செல்வதைப் பற்றி யோசித்து கூட பார்க்க முடியாது.

அதேநேரம் இந்த வீட்டில் இருப்பதற்கு கொரானாவே தேவலை என்றுதான் அவளுக்குத் தோன்றியது. இங்கே நிரஞ்சன் கூட தன்னை ஒரு வேற்று ஆள் மாதிரிதான் நடத்துகிறான்.

உன்னுடைய கள்ளமில்லா அன்பும் பேச்சும் சிரிப்பும்தான் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என அவன் அடிக்கடிச் சொல்வான். அன்று காதலிக்கும் போது இனித்தது இன்று சில்லி பிகேவியர் ஆகிப்போனதா?

‘சில்லி பிகேவியர்’ மீண்டும் மீண்டும் அந்த வார்த்தை அவள் காதில்  ஒலித்து அவளை இம்சித்தது.

காதலும் திருமணமும் முற்றிலும் வேறான முகங்கள் என்று தந்தை சொல்லிய வார்த்தைகள் மிகவும் உண்மை.

தேவையில்லாமல் நிறைய யோசிக்கிறாய் என்று அவள் மூளை எச்சரித்த போதும் அவள் சிந்தனைகளுக்குத் தடைப்போட முடியவில்லை.

தனிமை அவளை அப்படி எல்லாம் யோசிக்க வைத்தது. நிரஞ்சன் மாடியேறி வரவே இல்லை. சண்டைப் போட்டுவிட்டுக் கோபமாகக் கீழே சென்றதோடு சரி. அவளுக்கும் கீழே இறங்கிச் செல்லப் பிடிக்கவில்லை. அப்படி சென்றாலும் யாரும் அவளிடம் பேசப் போவதுமில்லை.

தந்தையிடம் பேசலாம் என்று சில முறைகள் செல்பேசியை எடுத்துவிட்டு அந்த முயற்சியைக் கைவிட்டாள். ‘ஹெலோ’ என்ற அவளது ஒற்றை விளிப்பை வைத்தே ஏதோ பிரச்சனை என்று கணித்து விடுவார்.

‘நிரஞ்சன் உனக்கு வேண்டாம், அவன் உனக்கு பொருத்தமானவன் இல்லை’ என்ற தந்தையின் அறிவுரைகளை அலட்சியப்படுத்தியது எல்லாம் இப்போது விஸ்வரூபம் எடுத்து அவள் முன்னே வந்து நின்று அவரிடம் அவள் பிரச்சனையைப் பகிர விடாமல் தடுத்தன.

அவளுக்கு அழுகையாக வந்தது.

வெகு நேரமாகியும் நிரஞ்சன் மேலே வரவே இல்லை.

மதியம் தருண் வந்து எட்டிப் பார்த்து, “ஜோ… மாமா சாப்பிட கூப்பிட்டாங்க” என்று அழைக்க, “எனக்கு பசிக்கல வேண்டாம்” என்று சொன்னாள். அப்படியாவது தன்னை சமாதானப்படுத்தி அழைத்துப் போக வருவான் என்று எதிர்பார்த்தாள். அவன் வரவே இல்லை.

அவளும் இறங்கிச் செல்லவில்லை. நேரம் ஆக ஆக அவள் கோபம் அதிகரித்துக் கொண்டே போனது. அந்த மனநிலையுடன் அவள் அப்படியே உறங்கியும் போய்விட்டாள்.

“ஜோ ஜோ” என்று நிரஞ்சன் அவள் தோளைத் தட்டி எழுப்பிய பின்தான் அவளுக்கு விழிப்பே வந்தது.

“என்ன இப்படி தூங்கிட்டு இருக்க… சரி எழுந்து சாப்பிடு” என்று உணவுத் தட்டுடன் அவள் அருகில் அமர்ந்திருந்தான்.

சப்பாத்தியும் குருமாவும் இருந்த அந்தத் தட்டைப் பார்த்தவள் மெல்ல கண்களைத் துடைத்துக் கொண்டு கடிகாரத்தைப் பார்த்தாள்.

மணி எட்டு என்று காட்டியது. மீண்டும் அவன் முகத்தைப் பார்க்க, “சாப்பிடு ஜோ… மதியம் கூட நீ எதுவும் சாப்பிடல” என்று அக்கறையாகச் சொல்ல, அவளுக்கு எரிச்சல்தான் வந்தது.

“எனக்கு எதுவும் வேண்டாம்” என்றவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள,

“என் மேல கோபமா… சரி ஐம் சாரி… சாப்பிடு” என்று அவள் மனநிலையைப் புரிந்து கொள்ள முயலாமல் அவன் மிகச் சாதாரணமாக ஒரு மன்னிப்பைக் கேட்டது அவள் கோபத்தை இன்னும் ஏற்றிவிட்டது.

அவனோ விடாமல் கட்டாயப்படுத்தி அந்த தட்டை அவள் கையில் கொடுக்க, அவள் அதனைத் தூக்கியெறிந்துவிட்டாள்.

“அறிவில்ல உனக்கு… சாப்பாடு தட்டை இப்படிதான் தூக்கிப் போடுவாங்களா… இந்த சாப்பாடு நம்ம தட்டுக்கு வர எவ்வளவு பேரோட உழைப்பு இருக்கு தெரியுமா… அசால்டா என்னவோ தூக்கிப் போடுற?

ஒரு நாள் அடுப்படியில நின்னு சமைச்சிருந்தா உனக்கு இதோட கஷ்டமெல்லாம் தெரியும்” என்று அவன் பதிலுக்குக் கத்திவிட அவள் அதிர்ந்துவிட்டாள். அவனோ எழுந்து சிதறியிருந்த உணவுகளைச் சுத்தம் செய்ய தொடங்கினான்.

அந்த இடத்தை ஒரு கனத்த மௌனம் ஆக்கிரமித்துக் கொண்டது.  அவள் கண்களில் நீர் இறங்கிற்று. இதுபோன்று அவள் பலமுறை சாப்பாடு தட்டைத் தள்ளி விட்டிருக்கிறாள். ஆனால் அவள் தந்தை ஒரு நாளும் அதைப் பெரிதுப்படுத்தியதே இல்லை.

அவளால் தாங்கவே முடியவில்லை. அவளுக்குள் கனன்று கொண்டிருந்த கோபத் தீயில் எண்ணெய் வார்த்தது போலிருந்தது அவன் பேச்சு. குபீரென்று அவள் உணர்வுகள் பற்றிக் கொண்டுவிட, இனி இங்கே இருக்கக் கூடாது என்று ரோஷமாக எழுந்து அவள் அறையை விட்டு வெளியேற போனாள்.

“சின்ன சின்ன சண்டைக்கு எல்லாம் போய் உங்க அப்பா வீட்டுக்குப் போய்டுவியா” என்று பின்னே வந்து அவள் கையைப் பிடித்துத் தடுத்துவிட்டான்.

அவள் சீற்றமாகத் திரும்ப சட்டென்று அவன் மண்டியிட்டு அமர்ந்து, “சாரி ஜோ… நான் அப்படி பேசனது தப்புதான்… நீ வேணா அதுக்கு பதிலா என்னை நாலடி கூட அடிச்சிக்கோ” என்று அவன் கன்னத்தைக் காட்டினான். அவளுக்கு உள்ளுர ஏதோ உடைந்தது.

அவனை இழுத்துத் தள்ளிவிட்டு உள்ளே சென்று தலையணையில் முகம் புதைத்து அழ, “ஜோ ஐம் சாரி… அழாதே” என்று அவன் அருகில் அமர்ந்து தேற்ற,

“போடா நீயும் உன் சாரியும்… நான் எவ்வளவு நேரம் தனியா இந்த ரூம்ல அழுதிட்டு இருந்தேன் தெரியுமா” என்று அவள் தன் மனவலியைக் கொட்ட,

“சாரி ஜோ… கீழே போனதும் ஆஃபிஸ்ல இருந்த முக்கியமான கால் வந்திருச்சு… அப்புறம் அப்பா ஏதோ லேண்ட் விஷயமா பேசிட்டு இருந்தாரு… டாகுமெண்ட்ஸ் எல்லாம் எடுத்து செக் பண்ணிட்டு இருந்தோமா அப்படியே டைம் ஓடிடுச்சு… சத்தியமா உன்னை அவாயிட் பண்ணணும்னு எல்லாம் நான் மேலே வராம இல்ல” என்றவன் சொன்ன காரணத்தைக் கேட்டதும், அவள் மனம் கொஞ்சம் இளகிவிட்டது.

அவன் அவள் தோள்களைப் பற்றித் தூக்கி கண்ணீரைத் துடைத்துவிடவும் அவள் ஒருவாறு சமாதான நிலைக்கு வந்துவிட்டாள்.

“சரி இரு… நான் உனக்கு டிபன் எடுத்துட்டு வரேன்” என்றவன் கீழே சென்ற போது ரேணு சமையலறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அவன் வந்து நின்றதை கண்டும் காணாமல் தன் வேலையில் அவர் கண்ணும் கருத்துமாக இருக்க,

“ம்மா…” என்று தயக்கத்துடன் இழுத்தான். அவர் அவனைத் திரும்பி கூர்மையாகப் பார்க்க,

“ஜோவுக்கு… எடுத்துட்டு போன டிஃபன்… வந்து…  தவறிக் கீழே விழுந்திருச்சு” என்று மென்று விழுங்கி சொல்லி முடிக்க,

“சப்பாத்தி எல்லாம் இல்ல… காலி” என்றவர் பட்டென்று சொல்லிவிட அவன் முகம் தொங்கிப் போனது. அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

அவன் திரும்பி செல்ல எத்தனிக்கவும் ரேணு குரல் கொடுத்தார்.

“பிரிஜ்ல தோசை மாவும்… கொஞ்சம் குருமாவும் இருக்கு” என்று கூற அவன் உற்சாகமாக,

“அப்படினா ஓகே… நான் தோசை சுட்டுக்கிறேன்” என்றான்.

“நான் கிச்சனை கிளீன் பண்ணிட்டேன்” என்றவர் கூறவும்,

“நான் தோசை செஞ்சிட்டு கிளீன் பண்ணி வைச்சிடுறேன் ம்மா” என்றதும் அவர் மகனை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்துவிட்டு,

“ஏன்? உன் பொண்டாட்டி வந்து செஞ்சிக்க மாட்டாளா?” என்று கேட்டுவிட்டார்.

“சமையல் வேலை எல்லாம் அவளுக்குப் பழக்கம் கிடையாது… அதுவும் நம்ம வீட்டுல” என்றவன் தயங்கித் தயங்கிக் கூற,

“பழக்கமில்லனா எப்படி… அப்ப்ப்டினா நீதான் அவளுக்கு காலம் பூராவும் சமைச்சு போட போறியா?” என்றவர் பதில் கேள்வி கேட்க, அவன் திருதிருவென்று விழித்தான்.

ரேணு ஒரு அலட்சிய பாவத்துடன், “உங்களுக்கு எல்லாம் அம்மா வேலைகாரி மாதிரி இருக்கணும்… பொண்டாட்டி அமுல் பேபி மாதிரி கொழு கொழுன்னு அழகா இருக்கணும்… அப்படிதானே” என்றார்.

நிரஞ்சன் பதறிக் கொண்டு, “ச்சே… ச்சே… அப்படி இல்லமா” என,

“என்ன அப்படி இல்ல… அப்படிதான்… அழகைத் தவிர அவகிட்ட என்னடா இருக்கு” என்றவர் காட்டமாகக் கேட்டுவிட்டு பின் அவரே இறங்கிய குரலில்,

“இதெல்லாம் எத்தனை நாளைக்கோ” என்று தலையிலடித்துக் கொண்டு திரும்பும் போது ஜோ அவர் பின்னோடு நின்றிருந்தாள்.

ஆனால் அவர் அதிர்ச்சியுறவில்லை. அவளை அலட்சியமாகப் பார்த்துவிட்டு நகர்ந்துவிட நிரஞ்சன்தான் சங்கடத்துடன் அம்மா மனைவி என்று இருவருக்குள்ளும் மாட்டிக் கொண்டு விழித்தான். 

ஜோ எதுவும் பேசாமல் மீண்டும் மாடியேறிவிட மூச்சை இழுத்துவிட்டவன் மனைவிக்குத் தோசை சுட்டு எடுத்துக் கொண்டு சென்று,

“அம்மா பேசுனதை தப்பா எடுத்துக்காதே ஜோ… அவங்க நம்ம லவ் மேரேஜ் பண்ணக் கோபத்துல அப்படி பேசுறாங்க” என்று எப்படியோ அவளை சமாளித்து சாப்பிடவும் வைத்தான்.

அமைதியாக கழிந்த அந்த இரவில் ஜோ மட்டும் உறக்கம் வராமல் தவித்தாள். அவள் தந்தை இந்தத் திருமணம் வேண்டாமென்று சொன்னது நிரஞ்சன் கோபமாகத் திட்டியது… இறுதியாக அவன் அம்மா அவளை பற்றி நிந்தித்தது என்று எல்லாம் சேர்ந்து அவள் மூளையைக் குடைந்து எடுத்துக் கொண்டிருந்தன.

சரியாகத் தூக்கம் வராமல் புரண்டுக் கொண்டிருந்தவள் விடியற்காலை ஐந்து மணியளவில் எழுந்து வந்து பால்கனி திண்டில் அமர்ந்து கொண்டாள்.

இருள் பூசியிருந்த வானம் மெல்ல விடியலின் வண்ணங்களால் நிறைய தொடங்கியது. ஜோ ஆர்வமாக ஆகாயத்தின் வர்ண ஜாலங்களை கண்டு களித்தாள். இதுபோன்ற விடியலின் அழகைப் பார்த்து மாதங்கள் கடந்துவிட்டன என்று தோன்றியது.

அவசரமாக அறைக்குள் சென்று தன்னுடைய பையிலிருந்த கேமராவை எடுத்து அந்த அற்புதமான விடியலை காட்சிப் படமாக்கினாள். அது ஒரு அழகான இயற்கை ஓவியம் போல் பிரதிபலித்தது.  

சட்டென்று மீண்டும் அவள் உள்ளத்தில் பெருகிய உற்சாகமெல்லாம் வடிந்துவிட்டது.

கொரானா வந்த பின்பு வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்ததில் இந்த உலகமே சுருங்கிப் போய் விட்டதாக உணர்ந்தாள். பறவை போல எல்லைகள் இன்றி பறந்து திரிந்தவள் இப்போது ஏதோ ஒரு கூட்டில் அடைப்பட்டது போல…

சட்டென்று அவள் சிந்தனையைத் தடைப்படுத்தியது போன்றதொரு அபஸ்வரமாய் ஏதோ சத்தம் கேட்க, அவள் கீழே பார்த்தாள்.

ரேணு தண்ணீர் தெளித்துவிட்டு வாசலைத் துப்புரவாகப் பெருக்கி கோலமிட தொடங்கினார். நிமிட நேரத்தில் அழகான பூக்கோலத்தை வரைந்து முடித்தார்.

அவர் கைகள் அத்தனை சரளமாக அந்தக் கோலத்தை வரைந்து முடித்ததைக் கண்டு அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரின் கைகள் ஏதோ மாயம் செய்தது போல தோன்றியது.

ஜோ உடனடியாக அந்த கோலத்தை தன்னுடைய கேமராவில் படமாக்கிக் கொள்ள ப்ளாஷ் ஒளி தெறித்து ரேணு நிமிர்ந்து மேலே பார்த்தார்.

அவள் தன் கேமராவை இறக்கிவிட்டு, “குட் மார்னிங் ஆன்டி… கோலம் செமையா இருக்கு” என்று உற்சாகத்துடன் பேச,   

‘இவ என்ன லூசா…’ என்றுதான் அவர் பார்த்து வைத்தார்.

‘அதுவும் பதினோரு மணிக்கு முன்ன எழுந்திருக்கவே மாட்டா… இன்னைக்கு என்ன புதுசா ஆறு மணிக்கு எல்லாம் எழுந்து உட்கார்ந்துட்டு இருக்கா’ என்று அவர் யோசிக்கும் போதே, ஜோ தன் முகத்திலிருந்த புன்னகை மாறாமல்,  

“நீங்க ரொம்ப அழகா கோலம் போடுறீங்க ஆன்டி” என்று பாராட்டினாள்.  

ரேணுவிற்கு திகைப்பாக இருந்தது. தான் இரவு பேசியது எதையும் இந்தப் பெண் மனதில் வைத்து கொள்ளாமல் இத்தனை இயல்பாகப் புன்னகைக்கிறாள் என்று எண்ணிய போதும் அவரால் அவளைப் போல் இயல்பாகப் புன்னகை செய்ய முடியவில்லை. ஏதோ ஒன்று தடுத்தது.

துடைப்பத்தையும் கோலமாவு கிண்ணத்தையும் எடுத்துக் கொண்டு உள்ளே சென்றுவிட்டார்.

vanitha16, Rathi and Thani Siva have reacted to this post.
vanitha16RathiThani Siva
Quote

மெல்ல மெல்ல ரேணு எனும் இறுகி போன பாறையை ஜோ தன இயல்பால் மாற்ற போகிறாள் போலயே. தனக்கு சிறகுகள் இருப்பதையே மறந்து / மறுத்து தன்னை சிறைப்படுத்திக்கொண்ட ரேணுவை அவரது நேரெதிர் குணாதிசயம் கொண்ட ஜோ தான் எல்லையில்லா வானத்தை அவருக்கு உணர்த்தி சிறகடிக்க வைக்கப்போறாள் போல. அந்த காட்சி உயிர் பெரும் நாள் எப்பொழுதோ....?

monisha has reacted to this post.
monisha
Quote

Super ma 

You cannot copy content