You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Muran Kavithaigal - 7

Quote

7

ஜோஷி ட்ராக்ஸும், டி ஷர்ட்டும் அணிந்து கொண்டு கிளம்பி வர, “இப்படியாவே போகப் போற” என்று குழப்பத்துடன் கேட்டார் ஜோசப்.

“ஆமா” என்றவள் தன்னுடைய ஷுவை எடுத்து கால்களில் மாட்டிக் கொண்டிருந்தாள்.

“ஆமா ஜோஷி… உன் பெட்டி எங்க?” என்று விசாரித்தார்.

“எதுக்குப் பெட்டி… நான் நம்ம பார்க்குக்கு ஜாக்கிங்தானே போறேன்” என, அவர் முகம் குழப்பமானது.

“என்ன… ஜாக்கிங் போறியா? வெளியே ட்ரைவர் வந்து வெயிட் பண்ணிட்டு இருக்கான்… உன்னை அழைச்சிட்டுப் போக…”

“சாரி டாடி… நான் வயநாடு போகல… நெக்ஸ்ட் டைம் போயிக்கிறேன்… நீங்க ட்ரைவரை அனுப்பி விட்டுடுங்க” என்றவள் சாதாரணமாகச் சொல்லிவிட்டு கேட்டைத் தாண்டிச் சென்றுவிட்டாள்.

“ஜோஷி” என்றவர் அழைக்க அவள் திரும்பி கூட பார்க்கவில்லை. ஓடி மறைந்துவிட்டாள்.

நேற்று வயநாடு செல்வதற்கு அத்தனை ஆர்வமும் சந்தோஷமாகக் குதித்தவளுக்கு இன்று என்னவானது? மகளின் செயல்பாடுகளைப் அவரால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

அதுவும் அதிசயமாக விடியற்காலை எழுந்து ஜாக்கிங் செல்வதாகச் சொல்லிச் சென்றது இன்னும் வியப்பாக இருந்தது.

அதேநேரம் நிரஞ்சனும் ஜாக்கிங் உடை அணிந்து கொண்டு வர, “எங்க ரஞ்சு கிளம்பிட்ட?” என்று மகனைப் பார்த்து கேட்டார் ரேணு.

“ஜாக்கிங் போறேன் மா” என்றதும் அவர் அதிர்ச்சியாகிவிட்டு, 

“இந்த மாதிரி நேரத்துல வெளியே போறது நல்லது இல்லப்பா” என்று அக்கறையுடன் கூற,

“கேஸஸ்லாம் குறைஞ்சிடுச்சு மா… இப்ப ஒன்னும் பெருசா ரிஸ்க் இல்ல… கவர்மெண்ட் அதான் பார்க்ஸ் எல்லாம் திறந்திட சொல்லிட்டாங்களே” என, அவர் முகத்தில் அப்போதும் தெளிவில்லை.

“ம்மா நான் மாஸ்க் எல்லாம் போட்டிருக்கேன்… சேஃபா போயிட்டு வருவேன்மா… உள்ளேயே அடைஞ்சு கிடக்க ஒரு மாதிரி பைத்தியம் பிடிக்குது” என,

“சரி பார்த்து பத்திரமா போயிட்டு வா” என்றார்.

“ஓகே மா” என்றவன் கேட்டைத் தாண்டி வெளியே போவதைப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு அவன் முகம் இன்று கொஞ்சம் தெளிவாக இருப்பதாகத் தோன்றியது.

‘பாவம்! எத்தனை நாளைக்குதான் அவனும் உள்ளேயே அடைந்து கிடப்பான்… போயிட்டு வரட்டும்… அவனுக்கும் கொஞ்சம் ரிலேக்ஸ்டாக இருக்கும்’ என்று மனதில் எண்ணி ஆசுவாசப்படுத்திக் கொண்டு   கையிலிருந்த தேநீரைக் குடிக்க எத்தனிக்க, அது சுத்தமாக ஆறிப் போயிருந்தது.

பெருமூச்சுடன் அதனை அப்படியே பருகிவிட்டு வழமைப் போல சமையலறைக்குள் புகுந்து தம் காலைப் பணிகளை ஆரம்பித்தார்.

ஜோவும் ரஞ்சனும் அவர்கள் வீட்டை விட்டுக் கொஞ்சம் தள்ளி வந்ததும் ஒன்றாக இணைந்து நடந்தனர். எப்போதும் அவர்கள் காதலும் நட்பும் எவருக்கும் தெரிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஜோவை விட ரஞ்சன் ரொம்பவும் எச்சிரிக்கையாக இருந்தான். 

ஆதலால் பொது இடங்களில் இருவரும் பேசிக் கொள்வதை முடிந்தளவு தவிர்த்து விடுவார்கள். அந்தப் பூங்காவில் கூட அவர்கள் இருவரும் ரகசியமாகப் பேசிக் கொள்ள பெரிய மரமொன்று பின்பக்கமாக இருந்தது.

இருவரும் நடந்து அந்தப் பூங்காவை வந்தடைய அது ஆள் அரவமின்றிக் காட்சியளித்தது. இன்னும் கொரானா பயம் நீங்கவில்லை என்பதை அந்த இடத்தின் வெறுமை அறிவித்தது. எப்போதும் போல அவளை மறைவான அந்தப் பெரிய மரத்தின் பின்னே நிறுத்தினான்.

இரண்டு வருடமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் பேசிக் கொள்ளாமல் இருந்த பிரிவு இருவரின் கண்களிலும் ஏக்கமாகவும் தாபமாகவும் தேங்கிக் கிடந்தன.

இந்த நிலையில் நேற்று இரவு அவள் தயக்கத்துடன் கேரளா போகும் தகவலைத் தெரிவிக்க,

“ப்ளீஸ் ஜோ… போகாதே… என்னை விட்டுப் போகாதே… வேண்டாம்” என்றவனின் கெஞ்சலும் உருகலும் அவள் மனதை மாற்றிவிட்டது. கேரளா போக வேண்டுமென்ற எண்ணம் தடம் புரண்டது.

அதன் பின் இருவரும் இரவெல்லாம் தங்கள் இரண்டு வருடப் பிரிவில் நடந்த விஷயங்களைப் பேசிப் பேசி மாய்ந்து போனார்கள். ஆனால் அவர்களின் ஊடலின் தாகம்தான் தீரவில்லை.

“ஜோ… எனக்கு உன்னை நேர்ல பார்க்கணும்… நம்ம பார்க்குக்கு மார்னிங் ஜாக்கிங் வர்றியா?” என்று அவன் கேட்க,

“அதுக்கு நான் சீக்கிரம் எழுந்திருக்கணுமே நிரு” என்று அவள் சலிப்பாகச் சொல்ல,

“ஓ கம்மான் ஜோ… நான் உனக்கு மார்னிங் கால் பண்றேன்… எழுந்து வா” என்றான்.

“நான் ட்ரை பண்றேன்… ஆனா…” என்றவள் பிடிக் கொடுக்காமல் பேச,

“ஜோ… ப்ளீஸ்ஸ்ஸ்” என்றவன் ப்ளீஸில் மீண்டும் அவள் கரைந்துருகி சம்மதித்து இப்போது அவன் முன்னே நின்று கொண்டிருக்கிறாள்.

அவனோ அவளைப் பார்த்த நொடியிலிருந்து ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. தணியா தாபத்துடன் அவளை விழுங்கிவிடுவது போல பார்த்துக் கொண்டு நிற்க,

“இப்படியே என்னைப் பார்த்திட்டு இருக்கவா கூப்பிட்ட” என்றவள் கடுப்பாக, அவன் தலை ஆமென்று அனிச்சையாக ஆடியது.

“போடா… நான் கிளம்புறேன்” என்றவள் நகரவும் அவளை இழுத்து தன் கை வளைக்குள் இருத்திக் கொண்டவன் யாருமில்லை என்று உறுதி செய்து கொண்டு அவள் இதழ்களை அழுந்த முத்தமிட்டான்.

பின் மெல்ல மீண்டு அவளை நிமிர்ந்து பார்த்து, “ஐ மிஸ்ட் யூ… ஐ மிஸ்ட் யூ எ லாட்” என்று கூற, அவள் உதடுகள் மிதமாகப் புன்னகைத்தன.

அழகாய் மலர்ந்த செவிதழ்களைக் கிறக்கத்துடன் பார்த்தவன் மீண்டும் அவள் கன்னங்களை வருடி உதடுகளை முத்தமிட நெருங்கவும் அவனை அவசரமாகத் தள்ளி நிறுத்தியவள், “நிரு என்னாச்சு உனக்கு… இது பப்ளிக் பிளேஸ்” என, அதெல்லாம் அந்த நொடி அவன் மூளைக்குள் பதியவே இல்லை.

அவன் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்ட போதும் அவன் கரம் அவள் சுருள் முடிகளுக்குள் அலைந்து வருடி கொண்டே, “நாம கல்யாணம் பண்ணிக்கலாம் ஜோ” என, அவள் அதிர்ந்து விழித்தாள்.

அந்த நொடி அவள் வயிற்றில் பலநூறு பட்டாம்பூச்சிகள் ஒன்றாகப் படபடத்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. அது சந்தோஷத்தினாலா அல்லது பயத்தினாலா என்று அவளுக்குப் புரியவில்லை.

நிரஞ்சன் மேலும் தொடர்ந்தான். “எங்க வீட்டுல என் கல்யாணத்தைப் பத்தி பேச ஆரம்பிச்சுட்டாங்க… இனிமே நம்ம லவ்வை மறைக்க முடியும்னு எனக்கு தோனல… அதுவுமில்லாம சாதனாவுக்கு கல்யாணமாகி ஒரு வழியா அவளும் செட்டிலாகிட்டா… இனியும் நம்ம ரிலேஷன்ஷிப்பை மறைக்கணுமா? பேசாம வீட்டுல சொல்லிடுவோமே” என்றவன் கூற, அவள் தயக்கத்துடன் ஏறிட்டாள்.

“ஜோ என்னாச்சு? உனக்கு ஓகேதானே” என்றவன் கேள்வியாகப் பார்க்க,

“கல்யாணத்தைப் பத்தி நான் இப்போ யோசிக்கல நிரு” என்றவள் இழுக்க,

“இப்போ கல்யாணம் பண்ணிக்கலனா வேற எப்போ ஜோ… இப்படியே எத்தனை நாளைக்குத் தனித்தனியா ஒளிஞ்சு மறைஞ்சு பார்த்துக்கிட்டு… லெட்ஸ் கெட் மேரிட்” என்றவன் அவள் முகத்தை வருடியபடி பேசினான்.

ஜோ மௌனமாக நிற்க அவள் கன்னங்களைப் பற்றியவன், “ஜோ ப்ளீஸ் ஓகே சொல்லு… என்னால உன்னை இனி பிரிஞ்சிருக்க முடியாது… சீரியஸ்லி ஐ கான்ட்” என்று அவன் கண்களில் செறிந்த காதல் உணர்வு அவளுக்கு ஒரு மாதிரி இனிதான போதையைக் கொடுத்தது.

திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்ற ஆசையை அவளுக்குள்ளும் ஆழமாகத் தூண்டிவிட்டுவிட அவள் மலர்ச்சியுடன், 

“ம்ம்ம் ஓகே… பண்ணிக்கலாம்” என்றாள். அவனும் பதிலுக்குப் புன்னகைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

ஆனால் அதற்கு பிறகுதான் உண்மையான களேபரமே தொடங்கியது.

ஜோ அவனை சந்தேகமாகப் பார்த்து, “ஏன் நிரு… உங்க வீட்டுல ஒத்துப்பாங்களா?” என்று கேட்க,

“அதுக்கு ஒரு வழி இருக்கு” என்றவன் அவளைத் தயக்கத்துடன் ஏறிட்டு,

“உங்க அப்பாகிட்ட பேசி… எங்க அப்பாகிட்ட நம்ம கல்யாணம் விஷயமா பேச சொல்லு” என்றான்.

“வாட்? என் டேடி வந்து உங்க வீட்டுல பேசணுமா?” என்று அவள் அதிர்ச்சியானாள்.

அவள் மனநிலையை உணர்ந்தவனாக அவள் விரல்களுக்குள் தம் விரல்களை நுழைத்துக் கொண்டு, “வேறு வழி இல்ல ஜோ… நானா பேசுனா… முடியாதுன்னு சொல்லிட்டா… அதான் உங்க அப்பாவை விட்டுப் பேசுனா… வீட்டுல கொஞ்சம் யோசிப்பாங்க” என்றான்.

இத்தனை நாளாக யாரிடமும் தங்கள் உறவைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லிவிடக் கூடாது என்று நிரஞ்சன் கேட்டுக் கொண்டதால்தான் அவள் தன் தந்தையிடம் கூட மறைத்து வைத்தாள். ஆனால் இப்போது மிகச் சுலபமாகச் சொல் என்றுவிட்டான்.

எப்படி இந்த விஷயத்தை தன் தந்தையிடம் ஆரம்பிப்பது என்ற கலக்கத்துடன் அவள் வீட்டை அடைந்தாள்.

 ஜோசப் முகப்பறையில் சோஃபாவில் அமர்ந்து கொண்டு தீவிரமாக லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் அவளுக்குப் பதட்டம் கூடியது.

காதல் செய்யும் போது கூட இப்படி எல்லாம் பதட்டம் கொள்ளவில்லையே என்று நினைத்தவள் ஒரு மாதிரி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,

“நான் க்ரீன் டீ போட போறேன்… உங்களுக்கும் வேணுமா டேடி?” என்று கேட்க அவளை வித்தியாசமாகப் பார்த்தார். வயநாடு ஏன் போகவில்லை என்ற காரணத்தைக் கூட அவள் சொல்லவில்லை என்று உள்ளுர எரிச்சல் மூண்டாலும் அவர் சிரித்த முகத்துடன்,

“ஷுர்” என்றார். ஒரே மகளிடம் அவரால் கோபம் கொள்ள முடியவில்லை.

அதுவே அவருடைய பலவீனமாகிவிட்டது. விரைவாக அவள் சமையலறைக்குள் நுழைந்து தண்ணீரைச் சுட வைத்து கப்பில் ஊற்றி டீ பேகை அதில் போட்டு முக்கினாள்.

அப்படியே தன்னுடைய காதலை அவரிடம் எப்படி சொல்வது என்று மனதிற்குள் ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருக்க, “ஜோஷி” என்று அழைத்தபடி அவர் பின்னோடு வந்து நின்றார். அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

“டேட்” என்றவளின் முகத்தில் தெரிந்த படபடப்பை கவனித்தவர்,

“என்னாச்சு ஜோஷி… ஏன் ஒரு மாதிரி டென்ஷனா இருக்க?” என்று கேட்கவும், “அதெல்லாம் ஒன்னும் இல்லையே’’ என்றவள் அதன் பின் கோப்பையில் எலுமிச்சைச் சாறு பிழிந்து தேன் கலந்து அவரிடம் நீட்டினாள்.

அவர் அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்து கொண்டே அதனை வாங்கிக் கொள்ள, அவளும் தன்னுடைய தேநீரை எடுத்துப் பருகியபடி விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று தீவிரமாக யோசித்தாள்.

சில நிமிடங்கள் அவர்களுக்குள் நிலைத்திருந்த மௌனத்தை ஜோஷி உடைத்து,

“டேடி… நான் ஒருத்தரை லவ் பண்றேன்” என்று பட்டென்று சொல்லிவிட, அவர் எந்தவித அதிர்ச்சியும் இல்லாமல்,

“எதிர்பார்த்தேன்… நீ நான் பார்த்த மாப்பிளை எல்லாம் ஏதோ ஒரு காரணம் சொல்லி வேண்டாம்னு சொல்லும்போதே” என்றார்.

ஒருவேளை அவருக்கு தங்கள் காதலைப் பற்றி தெரிந்திருக்குமோ என்ற யோசனையுடன் அவள் பார்க்கவும் அவர் இயல்பாக, “ஆமா யாரு பையன்… பேர் என்ன…” என்று கேட்க அவள் உடனே,

“நிரு… நிரஞ்சன்” என்றாள்.

“நிரஞ்சன்… ம்ம்ம் பேர் நல்லா இருக்கு… ஆமா அவனுக்கும் ஃபோட்டோகிராபினா இன்டிரஸ்டா… இரண்டு பேர் எங்கே எப்போ மீட் பண்ணீங்க” என்று அவர் பாட்டுக்குப் பேசிக் கொண்டே தன் தேநீரைக் குடித்து முடித்து கோப்பையைக் கழுவிக் கொண்டிருக்க,

“இல்லபா… நிரஞ்சன் நம்ம ஆபோசிட் வீட்டுலதான் இருக்கான்… நானும் அவனும் ஸ்கூல் மெட்ஸ்” என்றாள். சட்டென்று அவர் முகத்திலிருந்த இலகுத்தன்மை மறைந்தது.

“நம்ம எதிர் வீடுனா… நீ சொல்றவன் மாதவன் சாரோட சன்னா?” என்றவர் பதட்டத்துடன் கேட்க,

“ம்ம்ம்” என்றவள் தலையசைக்கவும் அவர் முகத்தில் அதிர்ச்சி ரேகைகள் படர்ந்தன.

“நிஜமா அவனா… ஜோஷி?” என்று அவர் மீண்டும் நம்ப முடியாமல் கேட்டு வைக்க, அவரின் ‘அவனா’ என்ற இளக்கார விளிப்பு அவளுக்கு என்னவோ போலானது.

“நிரு… ரொம்ப நல்லவன் டேடி… ரொம்ப டேலன்டட்” என்றவள் அவனை உயர்த்திப் பேசுவதை அவர் பொருட்படுத்தாமல்,

“ஸ்கூல் மெட்ஸ்னா… அப்பத்துல இருந்தே லவ்வா” என்று கேட்க,

“ஆமா டேடி” என்றாள். ஜோசப்பிற்கு வரிசையாக நிரஞ்சன் இங்கே வந்தப் பிறகு ஜோஷி நடந்து கொண்ட விதங்கள் நினைவுக்கு வந்தன. அதுவும் நேற்று தருண் வந்து ஏதோ ஒரு புத்தகத்தை தந்து விட்டுச் சென்றதும் அதன் பிறகு அவள் அறைக்குள் அடைந்து கிடந்ததும்… வயநாடு போகவில்லை என்றதும்… காலையில் ஜாக்கிங் சென்றுவிட்டு வந்ததும்… இப்போது அவள் காதலைப் பற்றிப் பேசுவதும்… நினைக்க நினைக்க மனம் காந்தியது.

நிதானமாக யோசித்து கொண்டே சோஃபாவில் வந்து அமர்ந்து மகளை நிமிர்ந்து பார்த்தவர், “ஸ்கூலில் இருந்தேன்னா அப்போ…  ஹார்டிலி டென் இயர்ஸ்… இரண்டு பேருமா சீக்கரட்டா லவ் பண்ணிட்டு இருந்தீங்க” என்ற அவர் குரலில் ஜீரணிக்க முடியாத வலி தெரிந்தது.

“டேடி” என்றவள் குற்றவுணர்வுடன் அவரை நோக்க அவரோ கைகளைக் கோர்த்தபடி தலை கவிழ்ந்திருந்தார்.

அவர் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் நேரத்தைக் கூட கொடுக்காமல் ஜோஷி மேலும், “டேடி… நாங்க இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவெடுத்திருக்கோம்” என்று சொல்லிவிட, அவர் அதிர்ச்சியுடன் நிமிர்ந்தார்.

ஆனால் உடனடியாக தன் அதிர்ச்சியை சமாளித்துக் கொண்டு, “ம்ம்ம்… குட் டெசிஷன்” என்று விட்டு எழுந்து அவர் அறைக்குள் சென்றுவிட்டார். தன் கோபத்தை அல்லது வருதத்ததை மகளிடம் காட்டிவிட கூடாதே என்ற பதட்டத்தில்!

“டேடி” என்றவள் விளித்துக் கொண்டே அவரை பின்தொடர்ந்து செல்லவும் இன்னும் என்ன என்பது போல ஒருவித சோர்வுடன் அவளை நோக்க,

 “டேடி ப்ளீஸ்… நீங்கதான் நிரு அப்பாகிட்ட எங்க கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கணும்” என்று அலுங்காமல் குலுங்காமல் அடுத்த இடியை இறக்கினாள்.

“நான் வந்து பேசணுமா?” அவர் கண்கள் அப்பட்டமான அதிர்ச்சியைக் காட்ட,

“டேடி ப்ளீஸ்… நிரு வீட்டுல கொஞ்சம் ஸ்டிரிக்ட்… அவன் லவ் பண்றேன்னு சொன்னா ஒத்துக்கமாட்டாங்க… ஒரு வேளை நீங்க பேசுனா” என்றவள் தயக்கத்துடன் நிறுத்தினாள்.

“நான் பேசுனா மட்டும் ஒத்துப்பாங்களா?” என்று அவர் பதிலுக்குக் கேட்க,

“நீங்க பேசிதான் பாருங்களேன் டேடி” என்றவள் விடாமல் அவரைப் பிடித்து தொங்க, அவருக்குள் அடக்கப்பட்டிருந்த கோபமெல்லாம்  சட்டென்று வெடித்துவிட்டது.

“வாட் தி ஹெல்… பத்து வருஷமா லவ் பண்ணீங்க இல்ல… அப்புறம் கல்யாணத்துக்கு மட்டும் நான் ஏன் வந்து பேசணும்” அவர் கண்களில் கோபம் தெறித்தது.

அவள் அதிர்வுடன் பின்வாங்கி, “டேடி சீரியஸ்லி” என்று கேட்க, மகளின் முகமாற்றம் அவர் மனதைப் பிசைந்தது.

ஆனாலும் அவர் உறுதியாக, “சீரியஸ்லி” என்று அழுத்திச் சொல்லிவிட்டு,

“இது உங்க லவ்… அதுவும் பத்து வருஷ சீக்கெரட் லவ்… அதுக்காக நீங்கதான் பேசணும்… போராடணும்” என்று உறுதியாக மறுத்துவிட, அவளுக்குக் கோபமேறியது.

“ஓகே ஃபைன்… நீங்க ஒன்னும் பேச வேண்டாம்… இது எங்க லவ்… எங்க பிரச்சனை… நானே பார்த்துக்கிறேன்… ஐ டோன்ட் நீட் யுவர் ஹெல்ப் எனிமோர்” என்றவள் வீம்பாகப் பேசிவிட்டு விறுவிறுவென மாடியேறிச் சென்றுவிட்டாள்.

மகளின் பிடிவாதத்தில் ஜோசப்பின் பிடிவாதம் பிசுபிசுத்துப் போனது. சாப்பிட்ட மாட்டேன், பேச மாட்டேன் என்றவள் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்ததில் அவர் வேறு வழியின்றி எதிர் வீட்டிற்குச் சென்று மாதவன் முன்னே அமர்ந்திருந்தார்.

எங்கிருந்து எப்படி விஷயத்தை ஆரம்பிப்பது என்று அவர் தவித்துக் கொண்டிருக்க, மாதவனோ அவர் ஏதோ பேச வேண்டுமென்று சொன்னதில் திகைப்பும் குழப்பமுமாக அமர்ந்திருந்தார்.

சமையலறையில் ரேணு மகளிடம், “இந்த மனுஷன் ஏன் டி இங்கே வந்து உட்கார்ந்துட்டு இருக்காரு” என்று கடுப்புடன் கேட்க,

“எனக்கும் தெரியலயே ம்மா” என்றாள் மிருதுளா.

“இது ஒன்னும் எனக்கு சரியா படல… எப்பவும் அப்பாவுக்கும் பொண்ணுக்கும் ஓட்டல வாங்கித் திங்கறதுதான் வேலை… கொஞ்சம் கூட சுத்தப் பத்தமே இல்லாதவங்க… ஏற்கனவே கொரானா அது இதுன்னு பயந்து போயிருக்கோம்… இதுல கொஞ்சம் கூட விவஸ்த்தையே இல்லாம உங்கப்பா இந்த மனுஷனை நடு கூடத்துல உட்கார வைச்சு வேற பேசிட்டு இருக்காரு… கைக் குழந்தையை வைச்சுட்டு இருக்கோம்… கொஞ்சமாவது அந்த நினைப்பு வேண்டாம்… பேசுறதா இருந்தா வாசலோட பேசி அனுப்ப வேண்டியதுதானே…” என்றவர் பாட்டுக்குப் பேசிக் கொண்டே இரண்டு கோப்பையில் தேநீரை வடிக்கட்டி ஊற்றிவிட்டு,

“உங்க அப்பாவுக்கு இந்தச் சின்ன கப்பைக் கொடு… விட்டா ஒரு நாளைக்கு பத்து டீ குடிப்பாரு” என்றார்.

“சரிம்மா” என்று மிருதுளா அந்த காபி ட்ரேவை எடுத்துக் கொண்டு போகும் போது, “எதுக்கும் தள்ளி நின்னே கொடு மிருது… அப்புறம் சாதனாவைக் குழந்தையோட… ரூம்லயே இருக்கச் சொல்லு” என்றவர் எச்சரிக்கையாகச் சொல்லி அனுப்பினார்.

“சரிம்மா” என்றவள் எடுத்துச் சென்ற அந்தத் தேநீர் கோப்பையை ஜோசப்பிடம் நீட்ட,

“இல்ல மா இப்பதான் சாப்பிட்டு வந்தேன்” என்றவர் மறுத்த போதும்,

“இருக்கட்டும் அங்கிள் எடுத்துக்கோங்க” என்றவள் கட்டாயப்படுத்தி நீட்ட,

“பரவாயில்ல குடிங்க” என்று மாதவனும் சொல்ல, அவர் வேறுவழியின்றி எடுத்துக் கொண்டார். ஆனால் அதனைக் குடிக்க ஆரம்பித்த போது ரொம்ப நாட்கள் கழித்து ஏலக்காய் இஞ்சி வாசனையுடன் ஒரு நல்ல தேநீரைப் பருகும் உணர்வு ஏற்பட்டது.

இத்தனை களேபரங்களிலும் ஒரு குதூகலம். அதேநேரம் தேநீரைப் பருகும் சாக்கில் அவர் பார்வை நிரஞ்சனைத் தேடியது. எங்கேயோ தூரத்தில் எப்போதோ அவனைப் பார்த்த நினைவுதான் அவருக்குப் பதிவாகியிருந்தது.

எதிர் வீட்டிலேயே இருந்தும் அவனைத் தான் சரியாகக் கூட பார்த்ததில்லை. ஆனால் தன் மகள் அவனைக் காதலித்திருக்கிறாள். என்ன சொல்வது? நினைக்கும் போதே உள்ளுர தகித்தது.

அவன் தன் மகள் அருகில் நிற்கும் போது இருவரின் ஜோடி பொருத்தமும் எப்படி இருக்கும் என்ற யோசனை எழுந்தது. சுற்றும் முற்றும் பார்வையைச் சுழற்றித் தேடி அவன் அருகில் எங்கேயும் இல்லை என்று அறிந்த போது அவருக்குக் கோபமாக வந்தது.

அவர்களின் காதலுக்காக தான் வந்து இங்கே நிற்கும் போது அவன் அக்கறையே இல்லாமல் எங்கேயோ இருக்கிறான் என்பது அவருக்கு அவன் மீது அபரிமிதமான எரிச்சலை மூட்டியது.

இன்றைய காலகட்ட இளைஞர்கள் பெரும்பாலும் பெற்றோர்களின் முதுகில் சவாரி செய்யும் முதுகெலும்பற்றவர்களாகவும் கோழைகளாகவும் இருக்கிறார்கள் என்ற வெறுப்புடன் எழுந்த எண்ணத்தை அவரால்  தவிர்க்க முடியவில்லை. அது உண்மைதான்.

தன் மகளும் கூட அதற்கு விதிவிலக்கில்லை. ஒரு வகையில் தான்தான் அவள் அப்படி வளர காரணம் என்று அவர் மூளை பாட்டுக்கு கண்ட மேனிக்கு யோசித்து கொண்டிருக்கும்போது மாதவன் தேநீரைக் குடித்து கோப்பையைக் கீழே வைத்தார்.

 ஜோசப்பும் அவசரமாகத் தேநீரைக் குடித்துவிட்டு அவரைப் பார்த்து பேசுவதற்கு தயாரானார். இன்னும் மாதவனுக்கு அவர் எதைச் சொல்ல இப்படி தயங்குகிறார் என்று கொஞ்சமும் யூகிக்க முடியவில்லை.

ஜோசப் நிமிர்ந்து அமர்ந்து கொண்டு, “ஆக்சுவலி நான் என்ன பேச வந்தேனா… என் பொண்ணு ஜோஷியும் உங்க பையன் நிரஞ்சனும்” என்று நிறுத்தி,

“ஸ்கூல் டேஸ்ல இருந்து லவ் பண்ணிட்டு இருக்காங்க” என்று ஒருவாறு அவர் விஷயத்தைப் போட்டு உடைத்துவிட, மாதவன் விழிகள் அதிர்வுற்றன.

தன்னை விடவும் இவருக்கு அதிர்ச்சி அதிகமாக இருக்கிறது என்று எண்ணுகையில் ஜோசப்பின் மனதில் ஓர் அற்ப சந்தோஷம் உண்டானது.

 ஜோசப் மேலும், “நான் இப்போ அவங்க இரண்டு பேர் கல்யாணத்தைப் பத்தி பேசலாம்னுதான் உங்களைப் பார்க்க வந்தேன்” என்று அடுத்த குண்டைப் போட, சமையலறையில் தாறுமாறாகப் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டது.

மாதவன் இன்னும் அதிர்ச்சி மாறாமல் அமர்ந்திருந்தார்.

ஜோசப் தான் சொல்ல நினைத்ததைப் பேசி முடித்த திருப்தியில் அமைதியாக மாதவனின் பதிலுக்காகக் காத்திருக்க அவர் கொஞ்சம் சுதாரித்து, “எனக்கு உடனே என்ன சொல்றதுன்னு தெரியல” என,

“பரவாயில்ல… நீங்க பொறுமையா வீட்டுல பேசிட்டு சொல்லுங்க… நான் வரேன்” என்று அவர் தப்பித்தால் போதுமென்று வாசலுக்கு நகர்ந்துவிட்டார்.

அப்போது நிரஞ்சன் வாயிற் படிகட்டு அருகில் தலையைப் பிடித்துக்கொண்டு படபடப்புடன் நின்றிருப்பது அவர் கண்ணில் பட்டது. அவன் இவரைப் பார்த்ததும் பட்டென்று ஒதுங்கி நிற்க, அவர் ஒருவித ஆயாசத்துடன் அவனை நோக்கினார்.

போயும் போயும் இவனையா தன் மகளுக்குப் பிடித்தது என்ற எண்ணம் எழுந்தது. தன்னுடைய காதலைப் பற்றி தன் தந்தையிடமே பேச தைரியமில்லாத இவனிடம் எதைக் கண்டு தன் மகள் காதலில் விழுந்திருப்பாள் என்று அவரால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

அதேநேரம் மாதவன் இவர்கள் திருமணத்திற்கு சம்மதிக்காவிட்டால் மகளை எப்படியாவது சமாதானப்படுத்தி எங்கேயாவது வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துவிட வேண்டுமென்று ஒரு சராசரி தந்தையைப் போல அவர் மூளை யோசிக்கவும் செய்தது.

vanitha16, Rathi and Thani Siva have reacted to this post.
vanitha16RathiThani Siva
Quote

Super ma 

You cannot copy content