You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Naan Aval Illai - 15

Quote

15

மாற்றம்

தாமஸ் தன் வீட்டின் டைனிங் ஹாலில் எங்கோ பார்வையை வெறித்தபடி அமர்ந்திருந்தார். எப்போதும் அவருக்கான உணவு அவரின் அறைக்கே சென்றுவிடுவது வழக்கம்.

அவரின் அறை அத்தனை விசாலமானது. அனைத்து வசதிகளும் ஆடம்பரங்களும் நிரம்பியது. ஆதலால் அவருக்கு வெளியே வர வேண்டிய அவசியமே இல்லை.

தாமஸ் உலகம் முழுக்க உள்ள அத்தனை நகரங்களுக்கும் பயணித்தவர்.  இன்று அவர் உடல் நிலை அவரை ஒரே அறையில் முடக்கிப் போட்டது. இனி தன்னால் பழையபடி நடமாட முடியாதோ என்ற எண்ணம் தாழ்வுமனப்பான்மையாய் உருவெடுத்து அவரைக் கொல்லாமல் கொன்று கொண்டிருந்தது.

அந்தத் தனிமை  சில பாடங்களை வலுக்கட்டாயமாக அவருக்குக் கற்பித்தது. அது வியாபார உலகத்தைத் தாண்டி இன்னொரு உலகம் இருக்கிறது. அதுதான் குடும்பம்.

அத்தகைய குடும்பம் என்ற ஒன்றை அவர் தொலைத்துவிட்டிருந்தார். இத்தனை நாள் அந்த இழப்பு அத்தனை பெரியதாக இல்லை. ஆனால் இன்று அவருக்குப் புரிந்தது. குடும்பம் மனைவி பேரன் பேத்தி போன்ற உறவுமுறைகளின் முக்கியத்துவங்கள்.

வாழ்க்கையே சூனியமாய் மாறிப் போனவருக்கு, இன்று குடும்ப சூழலுக்குள் வாழ ஏக்கம் பிறந்தது. மகனின் திருமணம் நிகழ்ந்தால் அவர் எண்ணம் நிறைவேறும். ஆனால் பிடிவாதமாய் டேவிட் அதற்குச் சம்மதிக்கவே மாட்டேன் என்றிருந்தான்.

அவனின் அந்தப் பிடிவாதம் அவரை ரொம்பவும் காயப்படுத்த, அவன் திருமணம் செய்து கொள்வான் என்ற நம்பிக்கையும் அவருக்கு மெல்ல மெல்லத் தகர்ந்து போனது. ஆனால் மீண்டும் இப்போது அந்த எண்ணம் துளிர்விட ஆரம்பித்தது. அதற்குக் காரணம் ஜெனித்தா.

அவளைப் பற்றிய தகவலை நேற்றிரவே ராஜன் சேகரித்து அவரிடம் தெரியப்படுத்திவிட்டார். அவள் வேறு யாரும் அல்ல. அவரின் நெருங்கிய நண்பன் விக்டரின் மகள். ஆனால் அந்த நட்பு என்றோ விட்டுப் போயிருந்தது.

இருவரும் ஒன்றாய் கல்லூரியில் படித்த போதான பழக்கம். மீண்டும் அந்த நட்பை மீட்டுக்கொண்டால் என்ன என்று யோசித்தது அவர் மனம். அதோடு ஜென்னி உதகமண்டலத்தில் டேவிட் படித்த அதே கிறுத்துவ பள்ளியில்  பயின்றிருக்கிறாள் எனில் டேவிட்டுக்கும் அவளுக்கும் ஏதோ ஒரு தொடர்பிருக்கிறது.

 அது நட்பு காதல் எதுவாயிருந்தாலும் அதைத் திருமணத்தில் முடித்துவிட தாமஸ் விரும்பினார். ஆனால் விதியின் விருப்பம் எதுவாக இருக்கும் என்று அவருக்கு எப்படித் தெரியும்?

இந்தச் சிந்தனையோடு மகனுக்காக டைனிங் டேபிள் முன்னிலையில் அவன் வருகைக்காகக் காத்திருந்தார். டேவிட்டும் எப்போதும் போல் ஃபார்மல்ஸ் அணிந்து தயாராகி வந்தவன் டைனிங் ஹாலிற்குள் நுழைய, அங்கே தந்தை இருப்பதைப் பார்த்து வியப்புற்றான்.

"வாவ் டேட்! பரவாயில்லை ரூம்ல இருந்து வெளியே வந்திருக்கீங்க... நீங்க இப்படியே வெளிய வந்து கொஞ்சம் கொஞ்சமா நடமாட ஆரம்பிச்சாலே சீக்கிரம் ரிக்கவர் ஆயிடுவீங்க" என்று சொல்லி நம்பிக்கையாய் புன்னகை புரிந்தான்.

நேற்றி இரவு அவன் தந்தை மீது காட்டிய கோபம் இப்போது துளிகூட இல்லை. அதுதானே டேவிட்! மனதில் கோபம் பழியுணர்வு என்று வக்கிரங்களைச் சேகரிப்பவன் அல்லவே அவன்.

டேவிட் டைனிங் டேபிளில் அமர்ந்து கண்ணாடி கிளாஸில் பைனாப்பிள் ஜுஸை ஊற்றி அருந்தியபடி, பிரட்டில் வெண்ணெய்யை தடவிக் கொண்டிருந்தான். இதுதான் சமயம். மகனிடம் திருமணத்தை பற்றிப் பேசலாம் என்று அவர் தொண்டையை கனைக்க,

டேவிட் முந்திக் கொண்டு, "ஜெனித்தா பத்தின டீடைல்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிட்டீங்க போல" என்று கேட்க அவர் ஆச்சரியப்பட்டு போனார்.

அவனுக்கு எப்படி தெரிந்திருக்கும் என்று அவர் குழம்ப அவன் ஜாம் போட்டு இரு பிரட் துண்டுகளை இணைத்துக் கடித்து சுவைத்தபடி,

"எதுக்கு இதுக்கு போய் நீங்க ராஜன் சாரை டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு... என்கிட்டயே கேட்டிருக்கலாமே... நானே சொல்லி இருப்பனே" என்றான்.

அவருக்கு வியப்பு அடங்கவில்லை. இது டேவிட்தானா?!

இப்படியெல்லாம் பேசுபவனும் இல்லை. யோசிப்பவனும் இல்லை அவன். அன்பு, பாசம், நேர்மை அவை மட்டுமே அவனுக்கான கோட்பாடுகள். அதைத் தாண்டி உளவறிதலும் மற்றவர்களின் உளவியலை அறிவதெல்லாம் அவன் விரும்பத்தகாத ஒன்று.

அவனிடம் தலைதூக்கும் அந்த ஆளுமை குணம் அவருக்கும் பெருமிதமாய் இருந்தாலும் அது கொஞ்சம் வியப்புக்குரியதாக இருந்தது. அவர் சிந்தித்திருக்கும் போதே தன் காலை உணவை முடித்து டிஷ்யுவால் தன் உதட்டை லாவகமாய் துடைத்தவன் அவர் முன்னே வந்து நின்று,

"இவனுக்கு இதெல்லாம் எப்படி தெரியும்னு யோசிக்கிறீங்களா?" என்று கேட்க அவரிடம் இருந்து மௌனமே பதிலாய் வந்தது. அவனே புன்னகையோடு தொடர்ந்தான்.

"உங்க கூட இருந்து,  இவ்வளவு கூட கத்துக்கலன்னா எப்படி டேட்?!"

மகனின் இந்த மாற்றத்தில் அவர் மெய்மறந்திருக்க அவன் மேலும் கூர்மையாய் நோக்கியவன்,

"ஜெனித்தா இஸ் மை ஃப்ரண்ட்... ஜஸ்ட் அ ஃப்ரண்ட்.... அதைத் தாண்டி வேறெதுவும் இல்லை" என்று  அழுத்தமாய் சொல்லிவிட்டு அவர் ஆசையை உடைத்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து அகன்றான்.

சீட்டுக்கட்டு கோபுரம் போல அவரின் ஆசையையும் கனவையும் ஒரே நொடியில் சரித்துவிட்டு சென்றான். அவன் செயல்களும் சிந்தனைகளும் மாறுப்பட்டிருக்கலாம். ஆனால் அவனும் மாறவில்லை. அவன்  கோட்பாடுகளும்  மாறுபடவில்லை. அதையே அவன் கடைசியாக சொல்லிவிட்டுப் போன வார்த்தைகள் அவருக்கு அறிவுறுத்தின.

ஆனால் மாற்றங்கள் நிகழ்வதை யாராலும் தடுக்க முடியாது. அதுதான் இந்த உலகத்தின் கோட்பாடு. அத்தகைய மாற்றம் டேவிட்டுக்குள்ளும் நிகழும்.  ஜெனித்தாவிடம் நட்பு என்ற வரையறைக்குள் நிற்க முடியாமல் அவன் தவிக்கும் காலமும் விரைவில் வரும்.

***********

ராகவ் தன் உறக்கமும் போதையும் கலைந்து எழ, பாராங்கல்லைத் தலையில் சுமப்பது போன்று கனத்தது அவனுக்கு. தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தவன் சுற்றும் முற்றும் பார்வையை தேடலாய் சுழற்றியபடி, "மனோ" என்று அலறினான்.

அவனின் அலறல் சத்தம் அந்தப் பிரமாண்டமான வீட்டிலிருந்த பணியாளர்கள் எல்லோரையும் நடுங்க வைத்தது. மனோ தடலாடியாய் ஓடிவந்து அவன் முன்னே, "பாஸ்" என்று அஞ்சியபடி நிற்க, அவன் பார்வை இவனை எரித்துவிடும் போலிருந்தது.

அவன் தன் கரத்தால் தலையை பிடித்தபடி, "முடியல மனோ... மண்டை வெடிக்கிற மாதிரி இருக்கு" என்று தவிக்க நிலைமை இன்னதென மனோ புரிந்தபடி,

"ஒண்ணுமில்லை பாஸ்... ஹேங் ஓவர்தான்... நீங்க ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுங்க... நான் லெமன் ஜுஸ் கொண்டு வரச் சொல்றேன்" என்றான். அவன் சொன்னதைக் கேட்டு ராகவ் தன் அறைக்குள் சென்று படுக்கையில் தலையைப் பிடித்தபடி அமர்ந்து கொண்டான்.

ஜெனித்தா என்ற பெயரும் அவள் முகமும் அவள் அலட்சியமாய் பேசிய விதமும் மீண்டும் அவனுக்கு நினைவுக்கு வந்தது அவன் தலைவலியை அதிகப்படுத்தியது. அதற்குள் மனோ லெமன் ஜுஸோடு அவன் முன்னே வந்து நின்றான்.

"இதை குடிங்க பாஸ்... கொஞ்சம் பெட்டரா இருக்கும்" என்றான்.

ராகவ் அதனை எடுத்து அருந்தியபடி, "நேத்து ரொம்ப ஓவராயிடுச்சா மனோ" என்று நிதானித்துக் கேட்டான்.

"அது... ஆமாம் பாஸ்" என்று அவன் தயங்கியபடி சொல்லவும்,

"ஓவரா போறேன்னு அப்பவே வார்ன் பண்ணி இருக்கலாம் இல்ல"

"இல்ல பாஸ்... நீங்க சொன்னா... கேட்கிற நிலைமையில இல்ல" என்று யோசித்து யோசித்துப் பேசினான்.

ராகவ் அந்த ஜுஸைக் குடித்து முடித்து க்ளாஸை ஓரம் வைத்தவன், "இன்னைக்கு என்ன அப்பாயின்மென்ட் இருந்தாலும் கேன்ஸல் பண்ணிடு மனோ... என்னால இந்த பெயினை டாலரேட் பண்ணிக்கவே முடியல" என்று சொல்லி வலியால் அவன் அவதியுற்றான்.

"ஒகே பாஸ்... நீங்க ரெஸ்ட் எடுங்க... நான் எல்லா அப்பாயின்மென்ட்ஸையும் கேன்சல் பண்ணிடறேன்" என்று சொல்லிவிட்டு அவன் வெளியேறப் போக,

"மனோ வெயிட்" என்று ராகவ் அழைக்க, அவன் திரும்பி வந்து "எஸ் பாஸ்" என்று பணிவோடு நின்றான்.

"என்னோட டோட்டல் டேவே வேஸ்ட்டாயிடுச்சு... எல்லாம் அந்த ஜெனித்தாவால... நீ இனிமே அவளுக்குக் கால் பண்ணாதே... அவளா கால் பண்ணட்டும்... நான் அவளை கால் பண்ண வைக்கிறேன்" என்று உக்கிரமாய் சவால் விடுத்தான்.

"பாஸ்... சாரி... நானே சொல்லலாம்னு... அது... காலையிலேயே ஜெனித்தாவோட செகரட்டிரி ரூபா கால் பண்ணாங்க" என்றான்.

அவன் புருவங்கள் சுருங்க மனோவை பார்க்க, "மிஸ். ஜெனித்தா சென்னையில இருக்காங்களாம்... அவங்களே வந்து உங்களை மீட் பண்றாங்களாம்... டைம் அன் பிளேஸ் உங்க கன்வீனியன்ஸ் பார்த்துட்டு சொல்ல சொன்னாங்க" என்றான்.

இதைக் கேட்டதும் ராகவ் வியப்பாகி, "ஏன் மனோ இந்த விஷயத்தை முதல்லயே என்கிட்ட சொல்லல ?" என்று கேட்க,

"இல்ல பாஸ்... நீங்க இருந்த நிலைமையில... எப்படி சொல்றதுன்னு?"

"இடியட்.." என்று கோபித்தவன் சிறிது நேரம் யோசித்துவிட்டு,

"ஒகே... மீட்டிங்கை நம்ம ஹோட்டல்ல அரேஞ்சு பண்ணிடு... சையத் கிட்டயும் பேசிட்டு அங்க வரச் சொல்லிடு" என்று  விவரித்தான்.

மனோ குழப்பமாய் பார்த்தபடி, "இன்னைக்கேவா பாஸ்...?" என்று கேட்டதும், "பின்ன" என்று சொல்லி முறைத்தான்.

"பாஸ் உங்க ஹேங்ஓவர்" என்றவனைச் சந்தேகமாய் பார்க்க,

ராகவ் அவனை விழிஇடுங்க பார்த்து, "போய் நான் சொன்னதைச் செய்... இல்லை உன்னை ஹேங் பண்ணிடுவேன்.... ஜாக்கிரதை" என்று எச்சரித்தான்.

அதற்கு மேல் அவன் மறுவார்த்தை பேசாமல், "ஒகே பாஸ்... எல்லா அரேஞ்ச்மென்ட்ஸும் பண்ணிடறேன்" என்று மிரட்சியோடு சொல்லிவிட்டு வெளியேறியவன் மனதிற்குள்

'நேத்து இன்ஸல்ட் பண்ணிட்டாங்கன்னு அந்த குதி குதிச்சாரு... இப்போ என்னடான்னு அவங்களைப் பார்க்க இந்தத் தவி தவிக்கிறாரு... இது ராகவ் சாரோட கேரக்டர் இல்லயே' என்று ஆழமாய் சிந்தித்தவன் பின் அந்த யோசனையை ஓதுக்கிவிட்டு அவர்கள் மூவரும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள ஆரம்பித்தான்.

மனோவை போல ராகவிற்குமே அவனின் இந்த முடிவு வியப்பாகவே இருந்தது. கர்வம் பிடித்தவள் திமிர் பிடித்தவள் என்று ஓயாமல் வசைபாடிய மனம் இப்போது அவற்றை எல்லாம் மறந்துவிட்டு அவளைப் பார்க்க விழைகிறது.

அதுவும் அவளே வருகிறேன் எனும் போது அந்த வாய்ப்பைத் தவறவிடுவதா? அவளை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று அவனுக்குள் பெருகிய அவாவை அவனால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அதுமட்டுமே இப்போதைக்கான அவனின் ஒரே சிந்தனை.

******

வேந்தனின் வீட்டில் வெகுநாட்களுக்குப் பிறகு மீண்டும் சந்தோஷம் துளிர்விட்டது. அதற்குக் காரணம் அவனுக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அதுவும் இன்னும் ஒரு வாரத்தில்...

எல்லோரும் பரபரப்பாய் அவனின் திருமண ஏற்பாடுகளைக் கவனிக்க, எழிலின் மகன்கள் அந்த விசேஷ தருணத்தில் வீட்டையே துவம்சம் செய்து கொண்டிருந்தனர். அதுவும் கூட எல்லோருக்கும் ரசிக்கும்படியாகவே இருந்தது. அவர்கள் குடும்பத்தில் இப்படி விசேஷங்கள் நடந்து பல வருடங்கள் கடந்துவிட்டது.

எல்லோர் மனதிலும் இது பெரும் ஏக்கமாய் இருக்க, அப்போது மகிழுக்கு திருமணம் நடந்ததை அறிந்தவர்கள் அனைவருமே அதிர்ச்சியிலும் வருத்தத்திலும் மூழ்கினர்.

அந்தக் கவலையில் இருந்து மீள்வதற்கான வழியாகவே வேந்தனின் திருமணப் பேச்சு ஆரம்பமானது. திருமணத்திற்கு இதுவரையில் சம்மதிக்காத வேந்தனும் இப்போது அதிசயிக்கும் விதமாய் சம்மதித்துவிட்டான்.

அந்த வீட்டைப் பீடித்திருந்த வேதனைகளை எல்லாம் இந்தத் திருமண ஏற்பாடு மாற்றியிருந்தது. ஆனாலும் வள்ளியம்மைக்கும் எழிலுக்கும் இன்னும் ஒரே ஒரு கவலை பாக்கியிருந்தது.

மகிழைத் திருமணத்திற்கு அழைக்க வேண்டும். ஆனால் அதற்கு நிச்சயம் அவனின் தந்தை ஞானசேகர் ஒத்துக்கொள்ள மாட்டார். ஆதலால் அந்த விருப்பத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவர்கள் மனதோடு பூட்டி வைத்துக் கொண்டனர்.

வள்ளியம்மை காலையிலிருந்து வாசலைப் பார்த்தபடியே இருந்தார். வேந்தன் எப்போது வருவானென்ற தவிப்பு. முன்னாடியே விடுப்பு எடுக்காமல் திருமண நெருக்கத்தில் வருகிறானே என்ற கோபமும் உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்க எழில் தாயின் உணர்வு புரிந்து,

"ரிலாக்ஸ்மா... அண்ணா ஃப்ளைட்ல இருந்து இறங்கினதுமே ஃபோன் பண்ணிடுச்சு... இன்னும் கொஞ்ச நேரத்தில வீட்டுக்கு வந்திருவாரு" என்றாள்.

"வரட்டும் அவனுக்கு இருக்கு" என்று முணுமுணுத்தார்.

"ஏன் இப்போ கோபம்?"

"பின்ன கோபம் இருக்காதா? இன்னும் அவனுக்குத் துணிமணியே எடுக்கல... ரிசப்ஷனுக்கு, கல்யாணத்துக்கு, மறுவீட்டுக்குன்னு... கல்யாண நெருக்கத்தில இப்படி பர்சேஸ் எல்லாம் பண்ணா எப்படிறி... போதாக் குறைக்கு உங்க அப்பாவுக்கும் வயசாகிடுச்சு..

அவர் மட்டும் தனியா எவ்வளவு வேலைதான் பார்ப்பாரு... இவனுக்கா தோண வேண்டும்... வீட்டுக்கு மூத்தவன் வேற... பொறுப்பா லீவ் போட்டு கொஞ்சம் முன்னாடியே வந்து எல்லா வேலையும் பார்த்துக்கலாம் இல்ல... பணம் மட்டும் அனுப்பினா போதுமா... ஏதோ உங்க வீட்டுக்காரு இருந்த தொட்டு இன்விடேஷன் எல்லாம் வைக்க ஹெல்ப்பா இருந்துச்சு... இல்லைன்னா" என்று வரிசைகட்டி பிரச்சனையை அவர்  அடுக்க எழில் தன் அம்மாவின் அருகில் வந்து,

"ம்மா கொஞ்சம் மூச்சு விடுங்க... ஏன் இப்படி?" என்று கிண்டலாய் சிரித்தாள். வள்ளியம்மையின் முகம் சோர்வாய் மாறியது.

"மகிழ் இருந்திருந்தாலாச்சும்" என்று ஏக்கமாய் சொல்லி தன் விழிநீரை முந்தானையில் துடைத்துக் கொள்ள எழில் குரலைத் தாழ்த்தி,

"மா... ப்ளீஸ் வேண்டாம்... அப்பா பார்த்திட போறாரு... அப்புறம் காச்சு மூச்சுன்னு கத்துவாரு" என்றாள். வள்ளியம்மை உடனே தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொள்ள, வெளியே கார் சத்தம் கேட்டது.

"அண்ணா வந்திடுச்சு போல" என்று சொல்லி எழில் புன்னகைக்க,

"மாமா வந்தாச்சே" என்று எழிலின் மகன்களின் ஆரவாரம் கேட்டது.

வேந்தன் தோளில் பேகை மாட்டிக் கொண்டு கையில் ஒரு பெரிய சூட்கேஸோடு உள்நுழைந்தான்.

வள்ளியம்மை, "வேந்தா" என்று மகன் அருகாமையில் செல்ல அவன் முகத்தில் வீட்டிற்கு வந்துவிட்ட களிப்பு துளிகூட இல்லை. முகத்தில் இறுக்கமும் களைப்பும் தெரிய யாரையும் ஏறிட்டுக் கூடப் பார்க்காமல் பெட்டியோடு சென்று தன் அறைக்குள் புகுந்து கதவைத் தாளிட்டான்.

வள்ளியம்மை எழிலை குழப்பமாய் பார்க்க அவள், "ட்ராவல் பண்ணி வந்த டயர்ட்ல இருப்பாரும்மா... வருவாரு" என்று அவன் செயலுக்கு இவள் காரணம் கற்பித்தாள். போதாக் குறைக்கு எழிலின் மகன்கள் வேந்தனின் மூடிய அறைக்கதவை ஆர்வமாய் தட்டி, "மாமா கதவை திறங்க" என்க,

இவள் அவர்களைத் தடுத்து, "மாமா இப்பதானே வந்திருக்காங்க... ஃப்ரெஷாகிட்டு கதவை திறப்பாங்க... நீங்க வாங்க... உங்களுக்கு அம்மா ஸ்நாக்ஸ் தர்றேன்" என்று சொல்லி அவர்களைச் சமாளித்து இழுத்துச் சென்றாள்.

வள்ளியம்மைக்கு மகனின் முகத்தில் ஏதோ சரியில்லை என்று பட்டது. அது எழிலுக்குமே கூட புரிந்தது. அவர்கள் எண்ணப்படிதான் வேந்தனின் நிலைமையும் இருந்தது. அறைக்குள் பைத்தியம் பிடித்தவன் போல் இப்படியும் அப்படியும் உலாவிக் கொண்டிருந்தான்.

உடலெல்லாம் ஒருவித நடுக்கம். பயத்தைத் தாண்டிய உணர்வு அது. நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. தன் விழிகள் பார்த்தது அவளைத்தானே. ஆனால் அதெப்படி சாத்தியம்?!

அவள் இறக்கவில்லையா அல்லது தான் பார்த்தது அவளை இல்லையா? குழப்பம்... சந்தேகம்... அதிர்ச்சி என எல்லா உணர்வுகளும் ஒட்டுமொத்தமாய் அவனுக்குள் எழும்பி நின்றன.

Muthu pandi has reacted to this post.
Muthu pandi
Quote

Nice

You cannot copy content