You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Naan Aval Illai - 16

Quote

16

வக்கிரம்

மீண்டும் அவளைப் பார்ப்பான் என்று அவன் கனவிலும் எண்ணிக் கொண்டதில்லை. அவளைப் பார்த்த அதிர்ச்சி அவனுக்கு அடங்கவேயில்லை.

இறந்துவிட்டவள் எப்படி உயிரோடு? இந்தக் கேள்வி அவன் மூளையைக் குடைய ஆரம்பித்தது. தான் பார்த்தவள் அவளாக இருக்காது என்று சமாதானமடைய பார்க்கிறான். ஆனால் அவனால் அது முடியவில்லையே.

 ஏதேதோ புரியாத கற்பனைகள் அவனை அலைக்கழிக்க, உடலெல்லாம் வியர்த்துக் கொட்டி நனைந்திருந்தது. அறைக்குள் வந்த வேகத்தில் ஃபேனை கூடப் போடவில்லை. அதுதான் காரணம் என்று எண்ணிக் கொண்டான். ஆனால் புழுக்கம் அந்த அறையில் இல்லை. அவன் மனதில்!

சாக்ஷியின் மீதான வெறுப்பினால் ஏற்பட்ட புழுக்கமா அல்லது அவளின் மீது ஏற்பட்ட ஈர்ப்பினால் உண்டான புழுக்கமா? கிட்டதட்ட இரண்டுமே தான் அவனுக்கு. மீண்டும் பழைய நினைவுகள் எல்லாம் வரிசை கட்டி நின்று அவனை வாட்டி வதைத்தன.

வேந்தன் தன் மனதளவிலான புழுக்கத்தைப் போக்கிக் கொள்ள தன் பேகிலிருந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்தான். அவள் மேல் உண்டான ஈர்ப்பும், அடங்காத தவிப்பும், அதன் காரணத்தால் அவனுக்குள் மலையென வளர்ந்து நின்ற வெறுப்பும் என எல்லாவற்றையும் அடக்கிக் கொள்ள வேண்டுமே!

அவரவர்களின் உணர்வுகள் தம் எல்லையை மீறும் போது ஒருவித போதை தேவைப்படுகிறது. அந்த சிகரெட்டின் புகையை இழுத்தால் அவன் மனம் நிதானமடையும் என்று நம்பினான்.

ஆனால் அறைக்குள் இருந்து கொண்டு புகைத்தால் வெளியே இருப்பவர்களுக்குத் தெரிந்துவிடுமே. யோசித்தவன் தன் குளியறைக்குள் சென்று கதவைத் தாளிட்டு சிகரெட்டை பற்ற வைத்தான்.

அவன் புகையை இழுக்க அதில் கனன்று கொண்டிருந்த தீயைப் போலவே அவன் மனதிலும் எரிந்து கொண்டிருந்தது. அவனுக்குள் அத்தகைய தீயை மூட்டியவள் அவள்தான்.

சாக்ஷியின் முகத்தை இன்றளவும் அவனால் மறக்க முடியவில்லை. அந்த முகம் முதல் பார்வையிலேயே அவனைக் கவர்ந்துவிட்டது.

மகிழ் சாக்ஷியைப் பார்ப்பதற்கு முன்னதாகவே அவன் அவளை பார்த்திராமல் இருந்தால் பல பிரச்சனைகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

கிட்டத்தட்ட ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்பான ஓர் மழைக்காலம்.

தன் நண்பன் காதலித்த பெண்ணை அவர்கள் குடும்பத்தாருக்கு தெரியாமல் அவனோடு திருமணம் செய்விக்க உதவியாய் வேந்தனும் அவன் நண்பர்களும் கோவிலிற்கு வந்திருந்தனர். இதிலெல்லாம் வேந்தனுக்கு விருப்பம் இல்லையெனினும் நண்பனுக்காக வந்திருந்தான்.

எல்லா ஏற்பாடுகளும் நடைபெற்றிருக்க, கோவில் அலுவலகத்தில் பேசி ஏற்பாடுகள் செய்துவிட்டு வேந்தனும் அவன் நண்பர்களும் வெளியே வந்தனர்.

"மச்சான் எல்லாம் ஓகே... இனிமே செம ஜாலிதான்டா" என்று ஒருவன் மாப்பிள்ளை  கோலத்தில் இருப்பவனைப் பார்த்து கேலியாய் சிரிக்க,

வேந்தன் அலட்சிய பாவனையோடு, "ஜாலியா?  ஆயுள் தண்டனை மச்சி" என்றதும் எல்லோரும் அவன் சொன்னதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினர்.

அவர்களின் சிரிப்பின் ஒலியைக் கடந்து நுழைந்த வீணை நாதம் எல்லோரின் கவனத்தையும் நொடியில் காந்தமாய் இழுத்தது. அந்த இசை வந்த திசை நோக்கி முதலில் முன்னேறிச் சென்றது வேந்தன்தான்.

கோவிலில் நவராத்திரி பூஜைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சி. அங்கிருந்த சிறு குழந்தைகளின் பாட்டு கச்சேரி முடிந்த பின் அவள் தன் வீணையை மீட்டத் தொடங்கினாள். அவளின் வாசிப்பில் கிறங்கி வேந்தன் உட்பட அங்கிருந்த எல்லோரும்  மெய்மறந்து  நின்றுவிட்டனர்.

அவளின் வீணை நாதம் கேட்போரின்  நாடி நரம்புகளின் வழியே ஊடுருவி அவர்களின் உணர்வுகளுக்குள் பயணித்து மயக்கிக் கொண்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் வேந்தன் அவள் வீணை நாதத்தில் மட்டும் லயித்திருக்கவில்லை. அவள் மீதே லயித்திருந்தான்.

பதினேழு பதினெட்டு வயதென்று சொன்னது அவளின் இளம் வதனம். ஆனால் அவள் உடலமைப்போ அந்த வயதைக் கடந்த முதிர்ச்சி. பாவாடை தவாணிக்கே உரித்தான ஓர் அழுகு. அது அவளின் அழகை இன்னும் மெருகேற்றி இருக்க, அவள் செவியோடு அசைந்தாடும் சிறு தோடும் சீரான

 புருவத்தின் மத்திய புள்ளியில் முழுசந்திரனாய் ஒளிவீசிய பொட்டும் எனப் பெண்மைக்கே உண்டான தெவிட்டாத அவளின் அழகைப் பார்வையாலேயே அள்ளிப் பருகிக் கொண்டிருந்தான்.

அவன் பார்வையும் எண்ணமும் எங்கெங்கோ தம் எல்லையைக் கடந்து பயணிக்க அவளோ ஏதுமறியாமல்  விழிமூடி அந்த இசையோடு இயைந்திருந்தாள். ஏன் வாழ்ந்திருந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். அவள் விரல்களால் வீணையை மீட்டிக் கொண்டிருந்தாள். ஆனால் அது இயற்கைக்கும் கூட உயிரூட்டிவிட்டது.

அப்போது வான்மேகங்கள் திரண்டு மழைமாரி பொழியத் தொடங்கியது. அங்கே நின்றிருந்த கூட்டமெல்லாம் அவசர அவசரமாய் கலைந்து ஓடினர் வேந்தனை தவிர. ஆனால் அவன் நண்பர்கள் வலுக்கட்டாயமாய் அவனையும் கோவில் மண்டபத்திற்குள் இழுத்துச் செல்ல, உள்ளே சென்றதும் கோபமாய்

"இப்ப எதுக்குடா என்னை இழுத்துட்டு வந்தீங்க?" என்று முறைத்தான்.

"மழை பெய்யுதுடா...  நீ பாட்டுக்கு நின்னுட்டிருந்த... அதான்"

அவன் எரிச்சலாய் பார்த்துவிட்டு அவள் வருவாளா என்று பார்வையைத் திருப்பிக் கொண்டு எதிர்பார்த்திருந்தான்.

மழை நின்றதால் அந்த மண்டபத்தில் குவிந்திருந்த கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் கலைந்த சமயம் மணப்பெண்ணும் தன் இரு தோழிகளோடு வந்துவிட்டிருந்தாள்.

உடனடியாக கல்யாண ஏற்பாடுகள் நிகழ நண்பர்களில் ஒருவன் மாப்பிள்ளை கோலத்தில் நின்றவனை நோக்கி,

"டே... ஊற வைச்ச அரிசி சாப்பிட்டா கல்யாணத்தின் போது மழை பெய்யுமாமே... நீ சாப்பிட்டியா மச்சான்" என்று கேட்க,

"இப்ப ரொம்ப முக்கியம்...  நானே டென்ஷன்ல இருக்கேன்... இவ வீட்டில இருந்து  யாராவது வந்து தொலைச்சிட்டா"

"எஸ்கேப் ஆகிட வேண்டியதுதான்" என்று அவர்களுள் ஒருவன்  சொல்லிசிரிக்க,

"நல்ல ஃப்ரெண்ட்ஸ் டா நீங்கள்லாம்" என்று அலுத்துக் கொண்டான்.

அதற்குள் ஐயர் தாலியை சுவாமி பாதத்தில் வைத்து பூஜை செய்து எடுத்துவந்து நீட்டவும், மாப்பிள்ளை அவசரம் அவசரமாய் தாலியைக் கட்டினால் போதுமென மணப்பெண் கழுத்தில் கட்டிவிட்டான். அவர்கள் எல்லோரும் திருமணம் நிகழ்ந்த சந்தோஷத்தில் ஆரவாரித்துக் கொண்டிருந்தனர்.

வேந்தன் மட்டும் இவையெதிலும் கலந்து கொள்ளாமல் தனிமைப் பட்டு நின்றான். அவர்கள் எல்லோரும் கோவிலை சுற்றுவதற்குச் செல்ல வேந்தனும் ஏதோ சிந்தனையில் அவர்கள் பின்னோடு போக, சாக்ஷி அப்போது அந்தக் கருவறை மண்டபத்திற்குள் நுழைந்தாள்.

வேந்தன் அவளைப் பார்த்துவிட்ட ஆனந்தத்தில் தன் நண்பர்களோடு செல்லாமல் தூரமாய் நின்று அவளை ரசித்திருந்தான். அப்போதுதான் கவனித்தான். அவள் கரத்திலிருந்த ஸ்டிக்கை.

அது பார்வையற்றவர்கள் உபயோகிப்பது. அதோடு அவள்  நடந்து வந்த விதத்தைப் பார்த்து மனம் கலங்கித்தான்  போனான். உறுதியான அவன் இதயம் கூட பலவீனப்பட்டது.

அவள் கருவறை மண்டபத்திற்குள் நான்கைந்து சிறுவர்கள் சூழ்ந்திருக்க நுழைந்தாள். ஐயர் கருவறையில் இருந்த வந்து அவளுக்குக் குங்குமத்தை வழங்கி,

"நல்லா வாசிச்சம்மா... அப்படியே மெய் சிலிர்த்து போச்சு... உன் வாசிப்புக்கு மழை கூட வந்திருச்சுன்னா பாரேன்" என்றார்.

"சும்மா சொல்லாதீங்க ஐயரே... மழை தானா வந்தது" என்று சொல்லி அவள் சிரித்துவிட்டு மெல்ல இறங்கி வந்து கோவிலைச் சுற்றப் போக,

எல்லாவற்றையும் கேட்டிருந்தவன் அவள் பின்னோடு வந்து,  "ஹலோ ஒரு நிமிஷம்" என்றழைத்தான்.

அவளோ யாரையோ அழைக்கிறார்கள் என்று எண்ணியபடி முன்னேறி நடக்க, "ஹலோ உங்களைதான்" என்று அவள் பின்னோடு நெருக்கமாய் வரவும் அவள் தன் அருகாமையில் நின்ற சிறுவர்களிடம் "யாரு ?" என்று கேட்க,

அவர்கள், "தெரியல க்கா" என்றனர்.

தனியாகப் போனால் தெரியாதவர்களிடம் நின்று தேவையில்லாமல் பேசக் கூடாது என்று யாழ்முகை சொன்னது நினைவுக்கு வர அவள் அவன் அழைப்பிற்குச் செவி சாய்க்காமல் சென்று கொண்டிருந்தாள்.

அவன் அவளை தொடர்ந்தபடி, "நீங்க நல்லா வாசிச்சீங்க" என்றதும் அந்த வார்த்தைக்கு மட்டும் பதிலுரையாய், "தேங்க்ஸ்" என்று சொல்லிவிட்டு நிற்காமலே சென்றாள்.

"உங்க பேர் என்ன ? சொல்லிட்டு போங்க"

"அதெல்லாம் உங்களுக்குத் தேவையில்லை... நீங்க என் பின்னாடி வராதீங்க"

"நான் கோவிலதான் சுத்தறேன்... உங்க பின்னாடி ஒண்ணும் வரல"

அந்த வார்த்தைகளைக் கேட்ட நொடி சாக்ஷி நின்றுவிட்டு அந்தச் சிறுவர்களிடம், "நம்ம கிளம்பலாம்" என்று வாசலை நோக்கி நகர்ந்தாள்.

அவன் இதை எதிர்பார்க்காமல் ஓடிவந்து அவளை வழிமறித்தபடி,

"இவ்வளவு அழகா இருக்கீங்க...  உங்களுக்கு கண்பார்வையில்லன்னு நம்பவே முடியல... மனசுக்கு கஷ்டமாயிருக்கு" என்று வேந்தன் பரிதாபம் கொள்ள, அவளுக்கு அவனின் இரக்கமான வார்த்தைகள் எரிச்சலைக் கிளப்பியது.

அவளின் அழகு மற்றும் கண்பார்வை இரண்டைப் பற்றி பேசினாலும் அவளுக்கு அளவுகடந்த கோபம் வரும்.

"யார் சார் நீங்க?... நான் அழகா இருந்தா உங்களுக்கு என்ன?  இல்ல எனக்கு கண்பார்வையில்லன்னாதான் உங்களுக்கு என்ன...? போய் உங்க வேலையை பாருங்க" என்று பொறிந்து தள்ளிவிட்டு பதட்டமாய் செல்ல எத்தனித்தவள் ஈரத்தரையில் கால் இடறி விழப் பார்த்தாள்.

வேந்தன் அந்தக் கணம் விழாமல் அவள் இடையைப் பற்றி தாங்கிக் கொண்டான். விழவில்லை என்பதை விட அவன் கரம் அவள் இடையைத் தழுவியிருப்பது அவளை அருவருப்பாய் உணரச் செய்தது.

வேந்தன் இயல்பாகவே அவளைத் தாங்கிக் கொண்டாலும் அதனை இயல்பான மனப்பான்மையோடு அவளால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அதுவும் இல்லாமல் அவளை அப்படி யாராவது தாங்கிப் பிடிப்பது கூட அவள் குறையை சுட்டிக்காட்டுவது போலவே அவளுக்குத் தோன்றும்.

உடனடியாய் அவள் நிமிர்ந்து நின்று அவன் சட்டையை இறுக பற்றிக் கொண்டு, "பொறுக்கி... இதுக்குதான் என் பின்னாடியே வந்தியா" என்று கத்தத் தொடங்கினாள்.

கோவிலை சுற்றி இருந்தவர்கள் எல்லாம் பார்வையை அவள் புறம் திருப்ப வேந்தன் தவிப்போடு, "நீ விழக் கூடாதுன்னுதான் பிடிச்சேன்" என்றான்.

"நீ என் பின்னாடி வராம இருந்தா நான் விழப் போயிருக்க மாட்டேன்"

அந்த சமயம் கோவிலில் இருந்தவர்கள் அவர்கள் புறம் கவனிப்பதை உணர்ந்தவன், "கையை எடுடீ முதல்ல..." என்று பல்லைக்கடித்துக் கொண்டு உரைத்தான்.

"மரியாதையா பேசுடா பொறுக்கி" என்று அவள் திட்டும் போது அவர்களைச் சுற்றி கூட்டம் கூட எல்லோரும் சாக்ஷியின் பக்கம் வந்து நின்று,

"என்னம்மா ஆச்சு?" என்று கேட்க அவள் உடனே அவன் சட்டையை விடுவித்து அமைதியானாள். தேவையில்லாமல் பிரச்சனையை பெரிதுபடுத்திவிட்டோமோ என்று அவள்  யோசித்திருக்க அவளோடு நின்றிருந்த சிறுமி,

 "இந்த அண்ணாதான் அக்காகிட்ட பிரச்சனை பண்ணிட்டு பின்னாடியே வர்றாரு" என்றாள்.

"கண்ணு தெரியாத பொண்ணுகிட்ட பொறுக்கித்தனம் பண்றியா" என்று சிலர் கோபப்பட்டு அவனிடம் கை ஓங்க, அங்கே நிலைமை மோசமானது.

அவன் அவர்களை எப்படிச் சமாளிப்பது என்று யோசித்திருக்கும் போது அவன் நண்பர்கள் ஓடிவந்து நிலைமையை ஒருவாறு சமாளித்து அவனைக் கோவிலுக்கு வெளியே அழைத்துச் சென்றனர்.

இப்படியெல்லாம் நிகழும் என்று சாக்ஷியே எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்த நிகழ்வுதான் அவள் வாழ்க்கையே சிதிலமடைய காரணமாய் அமைந்தது.

கோவிலுக்கு வெளியே வந்ததும் அவன் நண்பர்கள், "என்னடா மச்சான் ஆச்சு ?" என்று விசாரிக்க,

"நான் எதுவும் பண்ணலடா... அவதான் ஓவரா சீன் போட்டுட்டா" என்றான் கொதிப்போடு!

"சரி விடுறா... அரசியலில் இதெல்லாம் சாதாரணம்" என்று சொல்லி சிரித்தவர்கள் வேந்தனை இயல்பு நிலைக்கு மாற்ற முனைந்தனர். ஆனால் அது முடியவில்லை. அவன் கொந்தளிப்பான பார்வையோடு,

 "நான் தப்பே பண்ணலன்னும் போது எப்படிறா விடறது" என்றான்.

"மச்சான் ரிலாக்ஸ்... இன்னும் மூணு நாள்ல நீ கனடா போகப்போற... இந்த விஷயத்தை எல்லாம் மண்டையில ஏத்திக்காதே" என்க, அப்போதைக்கு அந்த பிரச்சனையை வேந்தன் விடுத்தான்.

ஆனால் அந்த அவமானத்தை அத்தனை சீக்கிரத்தில் அவனால் மறந்துவிட முடியவில்லை. ஆறாத வடுவாய் அவன் நினைவில் ஆழமாய் பதிந்து போனது, அதற்குப் பிறகாய் இரண்டு வருடங்கள் கடந்திருந்தது.

அம்முறை வேந்தன் சென்னைக்கு வந்த போது மகிழ்  குடும்பத்தோடு எல்லோரையும் அழைத்துக் கொண்டு சாக்ஷி வீணை வாசிக்கும் இசைக் கச்சேரிக்கு அழைத்துச் சென்றான்.

அவர்கள் அனைவரும் முன்னிருக்கையில் அமர ஏற்பாடும் செய்தான். இதைப் போன்ற  கச்சேரியில் எல்லாம் விருப்பமில்லை என்று வேந்தன் மறுக்க, அவனை வலுக்கட்டாயமாக மகிழ் அழைத்து வந்தான்.

கச்சேரி தொடங்கிவிட சாக்ஷி வீணை வாசித்துக் கொண்டிருந்தாள். வேந்தன் விழிகள் அவள்தானா என நம்பாமல் பார்த்தன. ஒரே ஒரு முறை பார்த்த முகம்தான் என்றாலும் அவளை அவனால் மறக்க முடியுமா? அவள் செய்த அவமானத்தை மறக்க முடியுமா?

அந்த நொடி வேந்தன் மனதில் சாக்ஷியின் மீதான வக்கிரம் விஷமாய் ஏறியது.

அதே நேரம் முன்னே பார்த்ததைப் போல் அன்றி அவள் வயதோடு அவள் அழகும் அபரிமிதமாய் வளர்ச்சியடைந்திருக்க, புடவையில் கம்பீரமான தீட்சண்யத்தோடு திகழ்ந்த அவள் அழகை அவனால் ரசிக்காமல் இருக்கவும் முடியவில்லை.

கச்சேரி முடிந்து மகிழ் பெற்றோர்  சாக்ஷியைப் பாராட்டி புகழ்ந்தனர். ஆனால் வேந்தன் தன் மனவுணர்வுகளை கட்டுப்படுத்தியபடி எதுவும் பேசாமல் மௌனம் காத்தான்.

வேந்தனுக்குள் சாக்ஷியின் மீதான பழிவுணர்வையும் வக்கிரத்தையும் எப்படியாவது தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்கியிருக்க, அவனுக்கு வேறொரு அதிர்ச்சி காத்திருந்தது.

மகிழ் வீட்டிற்கு வந்ததும் தன் பெற்றோரிடம் சாக்ஷியை காதலிக்கும் தகவலை தெரியப்படுத்தினான். வள்ளியம்மையும் ஞானசேகரும் அதிர்ச்சியடைய, அவர்களை விடவும் அதிர்ந்தது வேந்தன்தான்.

ஆனால் அந்த உணர்வுகளைக் காட்டிக் கொள்ளாமல் இயல்பாய் இருப்பது போல் நடித்தான். ஞானசேகர் அதிர்ச்சியில் இருந்த மீண்டவராய்,

"பைத்தியக்காரன் மாதிரி பேசாதே மகிழ்... அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு உன்னால சந்தோஷமா வாழ முடியாது" என்றார்.

மகிழ் பிடிவாதமாக, "சாக்ஷியை கல்யாணம் பண்ணிக்கிட்டா மட்டும்தான் நான் சந்தோஷமா வாழ முடியும் பா" என்றான்.

"அவ நல்ல பொண்ணுதான்... ஆனால் ப்ராக்ட்டிகலா யோசிச்சா நீ நினைக்கிறது சரியா வராது மகிழ்" என்று வள்ளியும் மறுதலிக்க மகிழுக்கு அதிர்ச்சியாயிருந்தது.

ஆனால் அவன் யாருக்காகவும் சாக்ஷியை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. அவள்தான் வேண்டும் என்று உறுதியாய் நிற்க அவன் பெற்றோரும் திகைத்துப் போயினர்.

மகிழ் சாக்ஷிக்காக பேசப் பேச வேந்தனின் கோபம் எல்லையைக் கடந்தது. பொறுமையிழந்து மகிழின் கரத்தை அழுந்தப் பிடித்து திருப்பியவன்,

"என்ன மகிழ்?... அந்த சாக்ஷி பெரிய இவளா... அவதான் வேணும்னு அடம் பிடிக்கிற... அம்மா அப்பாதான் அவ வேணாம்னு சொல்றாங்க இல்ல... ஒழுங்கா அவங்க சொல்றதைக் கேளு... தேவையில்லாமல் பேச்சை வளர்க்காதே" என்று அதிகாரமாய் கத்திவிட்டு அங்கே நிற்காமல் அவன் தன்  அறைக்குள் விரைந்துவிட வள்ளியும் ஞானசேகரும் கூட வேந்தனின் கோபத்தை அதிசயத்து பார்த்துவிட்டு மேலே அந்த பேச்சை வளர்க்காமல் சென்றுவிட்டனர்.

மகிழ் எந்தளவுக்கு ஏமாற்றமடைந்தான் என்று யாருமே உணர்ந்திருக்கவில்லை. ஆனால் வேந்தனின் இந்தக் கோபத்தின் பின்னணியில் சாக்ஷியின் மீதான வஞ்சம் ஒளிந்திருக்கும் என்று அவன் கொஞ்சமும் யூகித்திருக்கவில்லை.

வேந்தனின் சிகரெட் துண்டு அவன் விரலிடுக்குகளை சுட்டு காயப்படுத்த அவசரமாய் அதை தூர எறிந்தான். அத்தோடு பழைய நினைவுகளில் இருந்து மீண்டு வந்தவன் அந்த குளியலறை புகை மூட்டமாய் மாறியிருப்பதை கவனித்தான்.

அதே நேரத்தில் எழில் கதவை வேகமாய் தட்டும் ஓசை கேட்க, "வர்றேன் எழில்... குளிச்சிட்டு இருக்கேன்" என்று உள்ளிருந்தபடியே சத்தமிட்டான்.

அதன் பிறகு தன் களைப்பும் மனஉளைச்சலும் தீருமளவுக்குக் குளித்து முடித்த போது ஒருவித தெளிவு பிறந்தது அவனுக்கு.

ஏர்போர்ட்டில் தன் தங்கைக்கு அழைப்பு விடுத்தவன், வந்து சேர்ந்த தகவலை உரைத்தபடி தன் சூட்கேஸை இழுத்துக் கொண்டு வந்த சமயத்தில் கவனிக்காமல் அருகாமையில் வந்த பெண்ணின் மீது தவறுதலாய் இடித்துவிட்டான்.

அந்தப் பெண்ணின் புறம் திரும்பி சாரி என்று சொல்ல வாயெடுத்தவன் அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டான். இப்போது யோசித்துப் பார்க்கிறான்.

ஸ்லீவ்லஸ் டாப் அதோடு த்ரீ பை போஃர்த் பேண்ட், தோளில் விரிந்து சரிந்திருந்த கூந்தல், உயரத் தோற்றமளித்த ஹை ஹீல்ஸ் என அல்ட்ரா மார்டன் பெண்மணியாய் அவள் நிற்க, அந்த உடை, நடை, முகபாவனை,

கழுத்தோடு தொங்கியிருந்த சிலுவை டாலர் முதற்கொண்டு எதிலும் சாக்ஷி பிரதிபலிப்பில்லை.

முக்கியமான வித்தியாசம் அவள் பார்வையற்றவள் அல்ல என்பதுதான். அதுவும் அவள் அவனைப் பார்த்து எந்தவித உணர்ச்சிகளையும் காட்டிக் கொள்ளாமல் முன்னேறிச் சென்றுவிட்டாள்.

அது சாக்ஷி அல்ல. அவள் சாக்ஷியாக இருக்கவும் முடியாது. இப்படிச் சொல்லிக் கொண்டவன் உள்ளூர ஆறுதலடைந்து இயல்பு நிலைக்குத் தன்னை மாற்றிக் கொண்டான்.

Muthu pandi has reacted to this post.
Muthu pandi
Quote

Nice

You cannot copy content