You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Naan Aval Illai - 19

Quote

19

யார் அவள்?

அன்று இரவு சையத் தன் அறையில், அவளின் ஓவியத்தையே பார்த்தபடி நின்றிருந்தான். எத்தனை மணி நேரம் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தானோ? !

அவன் விழிகள் வழியே அவனின் உணர்வுகளோடு அவள் கலந்து கொண்டிருந்தாள். தன் பெற்றோரிடம் தான் காட்டிய அதே அலட்சியத்தையே அவள் இன்று தன்னிடம் காட்டிச் சென்றாள்.

'உங்க சுயவிருப்பத்துக்காக நீங்க உங்க ஃபேமிலியையே தூக்கிப் போட்டது சரி... ஆனா அதே மத்தவங்களுக்குன்னு வந்தா மேனர்ஸ் இல்லாம நடந்திருக்காங்கன்னு சொல்வீங்களா?!'

அவள் சொன்ன வார்த்தையில் இருந்த ஆழமான அர்த்தம் அவன் மனதைக் காயப்படுத்திய அதே நேரம் தெளிவுபடுத்தியும் இருந்தது. அதோடு தன் அம்மாவின் கோபத்தின் நியாயமும் இப்போது அவனுக்கு நன்றாகவே விளங்கிற்று. அவன் மனமெல்லாம் அவளைச் சுற்றியே பயணித்தது.

அவள் முக அமைப்பில் மட்டும் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் சக்தி இல்லை. அவளின் ஆளுமையான குணாதிசயத்திலும் இருக்கிறது என்று தோன்றிற்று. அவன் கற்பனையில்  உருவமைத்த கதைநாயகியாகவே ஜென்னி இருக்கிறாள்.

ஆனால் அதெப்படி? யார் அவள்?  எப்போது எங்கிருந்து தன் வாழ்வில் நுழைந்தாள். இந்த கேள்விளுக்கான விடையைத்தான் அவனால் அறியவே முடியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயம். ஜென்னி அவனுக்குள் இருந்த ஈர்ப்பு என்ற படிநிலையைக் கடந்து அடுத்த நிலையைத் தொட்டிருந்தாள். இத்தனை நாள் அந்த ஓவியத்தை எட்டி நின்று ரசித்தவன், இன்று அவனையும் மீறித் தொட்டு ரசிக்கலானான்.

அந்த நொடி திறந்திருந்த அவன் அறைக்கதவைத் தட்டி, "சார்" என்று அழைத்து அவன் காதல் தவநிலையைக் கலைத்தாள் மது.

சட்டென்று திரும்பி நோக்கியவன் மதுவை அதிர்ச்சியோடு கவனித்து, "இன்னும் நீ கிளம்பலயா மது?" என்றான்.

"நீங்கதானே சார் ஆடிட்டிங்காக அகௌன்ட் ஃபைல்ஸ் எல்லாம் எடுத்து வைக்க சொன்னீங்க... அதான் லேட்டாயிடுச்சு"

அவன் அறை கடிகாரத்தைப் பார்த்துவிட்டு,  "ஆமாம் ஃபைல்ஸ் எடுத்து வைக்கச் சொன்னேன்... அதுக்கு நீ இப்படி டைம் கூட பார்க்காம வேலை செய்வியா?!" என்று கோபமாய் கேட்க,

"இல்ல சார்... நீங்க" என்று பேச எத்தனித்தவளை கோபமாய் பார்க்க அவள் பேசாமல் நின்றாள்.

அவன் உடனே, "உனக்கு சுத்தமா மூளையே இல்ல மது" என்று கடிந்து கொண்டவன்,

"டிரைவர் கூட வீட்டுக்குப் போயிட்டாரு" என்று யோசித்திருந்தான்.

"இல்ல சார்... பரவாயில்லை நானே"

"அதெல்லாம் ஒண்ணும் தனியா போக வேண்டாம்... நான் டிராப் பண்றேன்...நீ வெயிட் பண்ணு" என்றதும் அவள்  வேண்டாம் என்று மறுக்க, அவன் அவள் சொன்னதற்கு செவி சாய்க்கவில்லை.

அவனே அவளை தன் காரில் அழைத்துக் கொண்டு சென்று, மதுவின் வீட்டின் வாசலுக்குச் சற்று பின்னோடு நிறுத்தி அவளை இறங்கிக் கொள்ளச் சொன்னான்.

"வீட்டுக்கு வந்துட்டு போங்க சார்" என்றதும் அவன் மறுப்பாய் தலையசைத்து,

"இப்ப வேண்டாம்... ரொம்ப லேட்டாயிடுச்சு... நான் இன்னொரு சமயம் கண்டிப்பா வர்றேன்" என்றான்.

அவன் சொன்ன காரணத்தை ஏற்றுக் கொண்டவள் காரை விட்டு இறங்கி அவனை ஜன்னலில் பார்த்தபடி, "நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே சார்?" என்றாள்.

"அப்படி என்ன சொல்ல போற?" புருவங்கள் முடிச்சிட அவன் பார்க்க,

"நீங்க அந்த ஓவியத்தில இருக்கிறவங்கள ரொம்ப டீப்பா லவ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்க சார்" என்றாள்.

அவன் பதிலுரைக்காமல் மௌனமாக இருக்க, மது அவன் மறுப்பு தெரிவிக்காததைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டாள். பின்னர் அவள் புறப்படுவதாக அவனிடம் உரைத்துவிட்டு வீட்டை நோக்கி நடந்து சென்றாள்.

சையத்தின் உள்ளூர இருந்த காதலுக்கு மதுவின் வார்த்தைகள்  தூபம் போட, அதே நேரம் கார் வானொலியில் அப்போது ஒலிபரப்பப்பட்ட பாடல் அவன் காதலை புதுவெள்ளமாய் கரைபுரண்டு ஓடச் செய்தது. அவன் அந்தப் பாடல் வரிகளை ரசித்து முணுமுணுத்தபடி காரை ஓட்டிக் கொண்டு புறப்பட்டான்.

"என் மேல் விழுந்த மழைத் துளியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?

இன்று எழுதிய என் கவியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?

என்னை எழுப்பிய பூங்காற்றே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?

என்னை மயக்கிய மெல்லிசையே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?

உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்

உனக்குள் தானே நான் இருந்தேன்"

********

இரவின் பிடியிலிருந்து பூமி மெல்ல மீண்டது. ஆனால் மாயா இரவு நடந்த சம்பங்களின் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. அவள் நொடி நேரம் கூட உறங்கவில்லை. எங்கயோ அவள் விழிகள் வெறித்துக் கொண்டிருந்தன.

ஆனால் மகிழ் நன்றாகவே உறங்கிக் கொண்டிருந்தான். அவள் உறக்கத்தையும் நிம்மதியையும் குலைத்துவிட்டு அவன் மட்டும் உறங்கிக் கொண்டிருந்தான். அவன் தொலைக்காட்சியில் காட்டிய அந்த விளம்பரத்தைப் பார்த்த பிறகு அவள் ஸ்தம்பித்துத்தான் போனாள்.

அவள் தோழியின் அதே உருவம். ஆனால் அதெப்படி? சாக்ஷிதான் அவள் என நம்புவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருந்தாலும், அவள் மூளை அவள் பார்த்ததை நம்பாமல் கேள்வி எழுப்பியது.

மகிழ் அப்போது அவளிடம், "ஏன் சைலன்ட்டாவே இருக்க மாயா?  பேசு... அது சாக்ஷி இல்ல வேற யாரோன்னு சொல்லு" என்றான்.

அவள் அவன் புறம் திரும்பி, "ஆமாம் ... அது வேற யாரோ? சாக்ஷி உருவத்தில இருக்கிற வேற யாரோ?" என்று சொல்லி அவனைக் கோபமாய் முறைத்தாள்.

அவளுக்கு அப்படிதான் தோன்றியது. அவன் கைதட்டி சிரித்துவிட்டு, "அதெப்படி?  அவளை மாதிரியே வேறொருத்தி... இதென்ன மேஜிக்கா?... இல்ல படமா மாயா" என்று பரிகசித்தவன்

மேலும் எகத்தாளமான பார்வையோடு, "ஒரு வேளை டபுள் ஆக்ஷனா இருக்குமோ?!" என்று  கேட்டு சிரித்தான்

அவன் பேசிய விதத்தில் எரிச்சலானவள், "ஆமாம் மகிழ்... நானும் அதேதான் சொல்ல வர்றேன்.. இது மேஜிக்கோ, படமோ, இல்ல சீரியலோ இல்லை... ரியல் ஃலைப்... செத்துப் போனவங்க உயிரோட வர முடியாது" என்று அழுத்தமாய் உரைத்தாள்.

"செத்து போனவங்க உயிரோட வர முடியாது... ஆனா சாகலன்னா?!!" ரொம்பவும் நிதானமாக கைகளைக் கட்டியபடி அவளிடம் கேள்வி எழுப்பினான்.

"மகிழ் திரும்பத் திரும்ப இப்படி லூசு மாதிரி பேசாதீங்க... அவ மரணத்தை நேர்ல பார்த்தவ நான்... அவ உடம்பை தகனம் பண்ணியிருக்கோம்... அப்புறமும்" என்று சலிப்பாக அவனைப் பார்க்க பதிலின்றி மௌனமானான்.

ஏதோ ஒரு உணர்வு அவள் இறப்பை அவனை நம்பவிடாமல் செய்திருந்தது. அந்த உணர்வை அவளுக்கு எப்படி புரிய வைப்பது என்று யோசனையில் ஆழ்ந்தான். அந்த நேரம் மாயா அவனிடம்,

"உங்களால சாக்ஷியோட இறப்பை இன்னமும் ஏத்துக்க முடியல... அதனாலதான் அவ இல்லங்கிறதை நம்ப மாட்டேங்குறீங்க... இப்படி நீங்க இல்லாத ஒண்ணை இருக்குன்னு நம்பறது ஒருவிதமான மென்டல் டிஸ்ஆர்டர்... அதை புரிஞ்சிக்கோங்க" என்று உரைக்க

அவன் அவளை நேர்கொண்டு பார்த்து, "இதுக்கு நீ நேரடியா என்னை பையத்தியம்னே சொல்லி இருக்கலாம் மாயா" என்க, அவள் அதிர்ந்து பார்த்தாள்.

அவனைப் பைத்தியம் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. ஆனால் அவளையும் மீறி அப்படி ஒரு வார்த்தையைப் பிரயோகிக்க வேண்டியதாகப் போயிற்று.

மாயா தவிப்போடு, "இல்ல மகிழ்... நான் அப்படி மீன் பண்ணல..." என்றாள்.

"அப்போ வேறெப்படி மீன் பண்ண?" என்று கோபமாய் வேறு புறம் திரும்பி நின்று அவன் கேட்க,

"புரிஞ்சுக்கோங்க மகிழ்... அந்த விளம்பரத்தில நடிக்கிறவங்க சாக்ஷியா இருக்க சேன்ஸ் இல்ல... அதைதான் நான் சொல்ல வந்தேன்... அது ஏதோ தப்பான அர்த்தத்தில மாறிடுச்சு".

"அது சாக்ஷி இல்லன்னு எப்படி சொல்ற?"அவன்  நிதானமாகவே வினவ,

அவள் தெளிவோடு, "லாஜிக்கா யோசிச்சு பாருங்க மகிழ்... நீங்க சொன்ன மாதிரி அது நம்ம சாக்ஷியாய்  இருந்தா உங்களையும் என்னையும் தேடி வராம  இருப்பாளா? அப்படியே தேடி வரலன்னாலும் அவ மாடலிங் பண்ண ஏன் போகணும்?... அவளுக்கு கண்ணு தெரியாத போதே அவ புடவையை லேசா விலகக் கூட விடமாட்டா... அவ்வளவு கான்ஷியஸா இருப்பா... அவ இந்த மாதிரி எல்லாம் டிரஸ் பண்ணிட்டு... என்னால யோசிச்சு கூடப் பார்க்க முடியல" என்றாள்.

அவன் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தவன் பின் தெளிவுப்பெற்று, "நீ சொல்றதெல்லாம் சரி... ஆனா அந்த முகம்" என்று கேட்க அவள் அதற்கு என்ன பதில் சொல்வதென்று திகைத்தாள். அந்த முகம்தான் அவளுக்கும் புரியாத புதிர்.

மகிழ் மீண்டும், "சாக்ஷி இறந்த போது அவ முகத்தை பார்க்கலன்னுதானே ஆன்டியும் நீயும் சொன்னீங்க" என்றவன் கேட்க

மாயா, "அது... பார்க்கல... ஆனா அவ வாட்ச் டாலர்" என்று தயங்கி உரைத்தாள்.

"அவ வாட்ச் டாலர் இதெல்லாம் மட்டும் இருந்திட்டா ஆக்ஸிடென்ட் ஆனது அவளுக்குதான் அர்த்தமா? ஒய் நாட் அது வேறு யாராவது கூட இருக்கலாமே?" என்றான்.

மாயா அவன் சொன்னதை எல்லாம் யோசித்து குழம்பிப் போக, மீண்டும் அந்த விளம்பரம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இருவரும் உன்னிப்பாய் கவனிக்க,

தன்யா ஜுவலர்ஸ்... சென்னை டீ நகரில் திறப்பு விழா... அதுவும் நாளை மறுநாள் என்று அறிவிப்பு. திறப்பு விழாவிற்கு மும்பை மாடல் ஜெனித்தா விக்டரும் ஆக்டர் ராகவ்வும் வருவதாக அறிவிக்கப்பட்டது.

அந்த விளம்பரத்தின் இறுதியில் ஜெனித்தா ஆடை அலங்காரத்தோடு எல்லோரையும் திறப்பு விழாவிற்கு அழைப்பது போல முடிந்தது.

மகிழ் அப்போது மாயாவிடம், "சரி மாயா... நீ சொன்னதை எல்லாம் நான் ஏத்துக்குறேன்... ஆனா...  நீ அந்த விளம்பரத்துல வர்றது சாக்ஷியாய் இருக்க ஒரேயொரு பெர்சன்ட் கூட வாய்ப்பில்லைனு எனக்கு உறுதியாய் சொல்லு" என்க, அவனைப் பரிதாபமாய் பார்த்தாள்.

அப்படி அவளால் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அது பொய். அவள் மனசாட்சிக்கு எதிராகச் சொல்லும் பொய். இத்தனை நேரம் அவனிடம் அது சாக்ஷி இல்லை என்று ஆயிரம் காரணத்தை எடுத்துரைத்தாலும் உள்ளூர அது சாக்ஷியாக இருக்குமோ என்ற சந்தேகம் அவளுக்குள்ளும் எழுந்தது.

அவன் அவளின் பதிலுக்காக காத்திருக்க அவள் யோசனைகுறியோடு,

 "அப்படி ஒரேடியா இல்லன்னு சொல்ல முடியாது... அது சாக்ஷியாவும் இருக்கலாம்" என்றாள்.

மகிழின் முகம் அந்தப் பதிலை கேட்டுப் பிரகாசிக்க அவன் உற்சாகத்தோடு, "இந்த ஒரு வார்த்தை போதும் மாயா... அவ சாக்ஷியா இல்லையான்னு நான் கண்டுபிடிக்கிறேன்" என்று சொல்ல,

மாயா அவனிடம், "எப்படி மகிழ்?" என்று வினவினாள்.

"எப்படியாவது... ஆனா நான் கண்டுபிடிப்பேன்" என்று உறுதியாய் சொன்னவன் மாயாவின் முகபாவனைகளை கவனிக்காமல்,

"நான் போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வர்றேன்" என்று சொல்லி விரைவாய் தன் அறைக்குச் சென்றான். மாயாவிற்கு அந்த நொடி அவள் விதியை நொந்துக் கொள்ளவே தோன்றியது. சாக்ஷிக்கான மகிழின் தவிப்பு அவளுக்கு அத்தனை வலியாகவும் வேதனையாகவும் இருந்தது.

அதே நேரத்தில் மகிழின் எதிர்பார்ப்பு போல அந்தப் பெண் சாக்ஷிதான் என்று உறுதியாகிவிட்டால், தன் தோழி திரும்பி வந்ததை எண்ணி சந்தோஷப்பட வேண்டுமா அல்லது தன் காதல் தொலைந்து போகப் போவதை எண்ணி வருத்தப்பட வேண்டுமா?

அவள் எந்த நிலைப்பாட்டில் நிற்க வேண்டும் என்று புரியாமல் தவித்திருந்தாள். இந்த நிலையில் அவள் காதலை சொல்லும் தைரியமும்

அவளுக்கில்லை. தொண்டையில் சிக்கிய முள் போல அவள் காதல் வெளியேவும் வராமல் உள்ளேயும் போகாமல் அவளை ரணப்படுத்திக் கொண்டிருந்தது.

*******

ஜென்னி முகத்தில் குழப்பம் படர்ந்திருந்தது. தன் கழுத்திலிருந்த செயின் டாலரை இடமும் புறமும் தன் கரத்தால் ஆட்டியபடி யோசனைகுறியோடு அமர்ந்திருந்தாள்.

பத்து நிமிஷத்திற்கு ஒரு முறை எல்லா தமிழ் சேனல்களிலும் தன்யா ஜுவல்லர்ஸ் விளம்பரம்தான் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

ரூபா அவளின் சிந்தனையை கவனித்தபடி, "ஏன் ஜென்னி?  திடீர்னு ராகவ் சார் ஷாப் திறப்பு விழாவுக்கு வர்றதா விளம்பரம் பண்ணிகிட்டிருக்காங்க... உங்களுக்கு இதைப் பத்தி தெரியுமா?" என்க,

அவள் யோசனையிலிருந்து மீளாமலே, "ம்ஹும்" என்றாள்.

"ஷாப் ஓபனிங் அவசர அவசரமா ஃபிக்ஸ் பண்ணாங்க... எப்போ ராகவ் சாரை கமிட் பண்ணி இருப்பாங்க"

ஜென்னி அவளிடம், "ஹ்ம்ம்ம்... கமிட் பண்ணி இருக்க மாட்டாங்க... கமிட் ஆயிருப்பாரு ரூப்ஸ்" என்றாள்.

"ஒய்?" என்று ரூபா வினவ "அதை நீ அவர் கிட்டதான் கேட்கணும்... என்கிட்ட கேட்டா?" என்றாள் ஜென்னி.

"உங்க மேல இருக்கிற இன்டிரஸ்ட்ல" என்று ரூபா இழுக்க,  

"ரூப்ஸ்ஸ்ஸ்ஸ்" என்று ஜென்னி கோபமானாள்.

"அதில்ல ஜென்னி”

"அதில்லதான்... நான் உன்கிட்ட  சையத் பத்தி விசாரிக்க ஆள் போட சொன்னேனே... செஞ்சியா?" என்று கேட்க,

"ஓ... நேத்தே" என்றவள் ஆச்சர்யக்குறியோடு ஜென்னியிடம், "யூ நோ ஒன் திங்... சையத் சார் நேத்து லேட் நைட் அவர் செகரட்ரியை கொண்டு போய்  வீட்டில டிராப் பண்ணியிருக்காராம்... இது ரொம்ப பெக்யூலரான மேட்டரா இல்ல" அவள் சொன்னதை கேட்டு விழிகள் அகலவிரிய, "அப்படியா?!" என்றபடி வியப்பானாள் ஜென்னி.

Muthu pandi has reacted to this post.
Muthu pandi
Quote

Nice

You cannot copy content