You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Naan Aval Illai - 2

Quote

2

யாரென்று தெரியாத அவள் ?

பெரும் வலியைச் சுமந்தபடி தன் கார் அருகில் சென்று நின்றான் டேவிட். தன் கையிலிருந்த சட்டையை அணிந்து கொள்ள முடியாமல் காரைத் திறந்து இருக்கையின் மீது வைத்தான்.

யாரோ ஒரு பெண்ணின் ஸ்பரிசத்தை தொட்ட சட்டையை கூட தன் தேகத்தில் அணிந்து கொள்வதில் அவனுக்கு உடன்பாடில்லை.

பெரும்பாலும் அவன் கிறிஸ்துவ கன்னியாஸ்திரீகளை மட்டுமே பார்த்து வளர்ந்ததினாலோ என்னவோ அவனுக்குப் பெண்மை என்பது மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரிய ஒன்று.

அப்படி இருக்கக் காதல் காமம் என்ற அற்ப உணர்வுகளுக்கெல்லாம் அவன் மனதில் இடமே இல்லை. அதன் காரணத்தினாலேயே எந்தப் பெண்ணும் அவனின் மன எல்லைகோடுகளை இதுவரை தகர்த்ததும் இல்லை. ஆனால் அத்தகையவனுக்கு இன்று வந்திருக்கும் சோதனையோ வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது.

பார்க்கக் கூடாத நிலையில் ஒரு பெண்ணைப் பார்த்ததும் அவளை தன் கரத்தில் தூக்கி சுமந்ததும் ஏற்கனவே ஒருவித அசௌகரியமான உணர்வை அவனுக்குள் ஏற்படுத்தியிருந்தது.

அந்த எண்ணங்களில் இருந்து மீண்டு வருவதே சிரமமெனும் போது, ஒரு பெண்ணை கெடுத்துவிட்டதாகச் சொல்லப்படும் பழியை ஏற்குமளவுக்கான மனோதிடம் அவனுக்கில்லை. ஒரு பெண்ணுக்கு மானம் எந்தளவுக்கு பெரியதோ அந்தளவுக்கு ஆண்களுக்குக் கண்ணியம் என்பது.

அதை விட்டுகொடுத்திட முடியுமா? மருத்துவமனையின் வெளியே நின்றிருந்த தன் காரின் முன்கண்ணாடியில் சிதறியிருந்த அவளின் இரத்தத்தைத் துடைத்தான். சற்று கடினமாய் இருந்தாலும் அந்த கறை மெல்ல மறைந்து போனது. ஆனால் அவன் மனதில் படிந்துவிட்ட கறை இப்பிறவியில் மறைந்து போகுமா?

அவன் நிலைமையோ விளக்கில் மாட்டிய விட்டில்பூச்சியின் கதி!

நல்லவன் என்ற அடையாளத்தைத் தூக்கி எறிந்தாலும், அவன் மனசாட்சி அவனிடம் எழுப்பும் கேள்விகளைத் தவிர்க்கமுடியவில்லை. அவனின் மனசாட்சி அவனை அணுஅணுவாய் சித்ரவதை செய்து கொண்டிருந்தது

இத்தகைய வேதனைக்குப் பதிலாய் பலரைப் போல அவனும் மனசாட்சியை தூக்கி எறிந்துவிடலாம். ஆனால் டேவிடால் என்றுமே அது முடியாதே!

அவனின் ஒவ்வொரு செல்லிலும் அன்பு என்ற ஒற்றை வார்த்தை ஆழப்பதிந்திருந்தது. அந்த அன்பே அவன் பின்பற்றும் அறமாய் இருக்க, இன்னுமும் அவனால் அந்த மருத்துவமனையை விட்டு அகல முடியவில்லை.

அந்தப் பெண் உயிர் பிழைத்துவிட்டாள் என்ற தகவலைக் கேட்டுவிட மாட்டோமா என்ற சிறு நப்பாசைதான்!

அந்தச் சமயத்தில் அவசரமாய் ஒரு நர்ஸ் அவனை நோக்கி ஓடிவந்தாள்.

"சார்... உங்களை எங்கெல்லாம் தேடுறது... சீக்கிரம் வாங்க... டாக்டர் உங்களை கூப்பிட்டாங்க"

அந்த நர்ஸின் பதட்டம் அவனுக்குள் அச்சத்தைத் தோற்றுவித்தது.

"நர்ஸ்" என்று அவன் அழைப்பதை கவனியாமல் அந்த பெண் சென்றுவிட ஒரு விபரீத எண்ணம் உதித்தது அவனுக்கு.

அவள் இறந்திருப்பாளா? இந்த எண்ணம் அவனைக் கலவரப்படுத்த அவசர அவசரமாய் மருத்துவமனைக்குள் சென்றான். அந்தப் பெண் மருத்துவர் அவனுக்காகவே காத்திருப்பது போல் நின்றிருக்க... அவன் மனமெல்லாம் திகிலடைந்தது.

"எங்க போனீங்க மிஸ்டர் டேவிட்?" என்று அவர் கேட்கவும் பதில் சொல்ல முடியாமல் மலங்கமலங்க விழித்தான்.

அதைப் பொருட்படுத்தாமல் அந்த பெண் மருத்துவர், "சரி அதை விடுங்க... பேஷண்ட் ரொம்ப சீரியஸா இருக்காங்க... எங்களால முடிஞ்சளவுக்கு முயற்சி பண்ணி பார்த்துட்டோம்... நோ யூஸ்... பட் அவங்க ஏதோ சொல்ல நினைக்கிறாங்க... என்ன ஏதுன்னு ஒண்ணும் புரியல... போலீஸும் இன்னும் வரல... நீங்க வேண்ணா என்ன சொல்ல வர்றாங்கன்னு கேட்டுப் பாருங்களேன்" என்றார்.

அவனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. யாரென்றே தெரியாத பெண்ணிடம் எதைக் கேட்பது? என்ன பேசுவது? இந்த நிலையில் அந்த பெண்ணை எப்படி எதிர்கொள்வது? ஆயிரமாயிரம் சிந்தனைகள் அவன் மனதில் எழும்பியது.

"ப்ளீஸ் போங்க... டிலே பண்ணாதீங்க" என்றார்.

தாமதிக்காமல் அவள் இருந்த சிகிச்சை அறைக்குள் நுழைந்தான். மன்னிப்பு கேட்கவாவது அந்தப் பெண்ணை சந்திக்கக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள எண்ணியவன் அப்போதுதான் அவள் முகத்தைப் பார்த்தான்.

தலையில் பெரிதாய் கட்டுப்போட்டிருக்க, அந்த முகம் மட்டும் அத்தனை பொலிவாய் காட்சியளித்தது. அழகின் அத்தனை அம்சமும் பொருந்திய முகம் அது. விழியில்லாமல் அழகை மட்டும் தந்து அவள் விதியை இப்படி எழுதிய இறைவன் மீது அப்போது அவனுக்குக் கோபம் எழுந்தது. அவள் உதடுகள் அசைவின்றியிருக்க அவள் இறக்கும் தருவாயில் இருக்கிறாள் என்பதை அவளின் அசைவற்ற தேகம் உணர்த்தியது.

மனம் நொந்து போனவன் அவளுக்கு அருகாமையில் மண்டியிட்டு கரங்களைக் குவித்தபடி அவளுக்காகக் கண்ணீரோடு பிராத்திக்கத் தொடங்கினான்,

'பரலோகத்தை காக்கும் எங்கள் பரமப்பிதாவே! இந்த பெண்ணை இரட்சிப்பீராக' என்று மனமுருகி வேண்டிக் கொண்டிருக்கும் போதே அந்த பெண்ணின் கரம் அவன் கூப்பிய கரங்களைப் பற்றிக் கொண்டன.

அதிர்ச்சியில் ஊமையாகி அவளை நோக்கினான். அவனின் குரல் அந்தப் பெண்ணின் செவியை எட்டியிருக்கும் போல. அந்த ஒலியின் மார்க்கமாய் அவன் கரத்தை பற்றிக் கொண்டிருக்கிறாள்.

அப்போதைக்கான ஆறுதலும் துணையும் அவளுக்குத் தேவைப்பட்டிருக்கலாம். அதைக் கொடுக்க எத்தனித்தவன் அவளின் இலகுவான கரத்தை தன் கரத்திற்குள் சேர்த்துக் கொண்டான்.

அவள் அருகாமையில் சென்று, "உங்களுக்கு ஏதாச்சும் சொல்லணுமா?" என்று கேட்க, "ஹ்ம்ம்ம்" என்றவள் சுவாசிக்க முடியாமல் அவதியுற்றாள்.

அந்த நிலையிலும் அவளுக்குத் தான் சொல்வதைக் கேட்டு உணர முடிகிறதா என்ற வியப்பில் ஆழ்ந்தவன், "சொல்லுங்க" என்றான்.

அவள் உதடுகள் எதையோ முணுமுணுத்தன. புரிந்து கொள்ள இயலாமல் அவள் உதட்டருகே தன் செவியை வைத்துக் கேட்டவனுக்கு, லேசாய் அவள் சொல்வதை புரிந்து கொள்ள முடிந்தது. அதிர்ந்து போனான்.

உயிர் துறுக்கும் நிலையில் அவளுக்கு உயிர் வாழ ஆசையா?!

"ஐ வான்ட் டூ லிவ்... ஸேவ் மீ" இப்படிதான் அவளின் அந்த மெல்லிய உதடுகள் முனகிக் கொண்டிருந்தன. என்ன சொல்வான் அவளிடம்?

அவன் விழிகள் வடித்த கண்ணீர் அவள் கன்னத்தில் விழ, அந்தச் சமயம் அறைக்குள் தடாலடியாய் காக்கி உடையில் ஒருவர் நுழைந்தார்.

அவரைப் பார்த்த கணம் அதிர்ச்சியில் உறைந்து போனான். அவரின் பார்வை பிணைந்திருந்த அவர்களின் கரங்கள் மீது விழுந்தது. அதனை உணர்ந்தவன் அவள் கரத்தை விடுவிக்க எத்தனிக்க அவள் விடவில்லையே. அழுத்தமாய் அவன் விரல்ளை பற்றி இருந்தது அவளின் மிருதுவான கரம்.

அவனை நோக்கி, "ஆர் யூ மிஸ்டர்.டேவிட்?" என்று கேட்டார்.

அவனும் தயக்கத்தோடு, "ஹ்ம்ம்" என்றான்.

"ஐம் இன்ஸ்பெக்டர் வேணுகோபால்... இப்பதான் மிஸ்டர். ராஜன் கால் பண்ணார்... எல்லா விஷயத்தையும் சொன்னாரு... நீங்க உடனடியா இங்கிருந்து கிளம்புங்க... நாங்க ஃபார்மாலிடீஸ் எல்லாத்தையும் பார்த்துக்கிறோம்" என்று சொன்னார்.

ராஜன் அவன் தந்தையின் காரியதரிசி. ஒருபக்கம் நிம்மதி ஏற்பட்டாலும் இன்னொரு புறம் இது தவறென்று அவன் மனம் அவனை நிந்தித்தது. மீண்டும் அவர், "சார் கிளம்புங்க" என்றார்.

அவனோ அந்தப் பெண்ணின் பிடி விலகாததைப் பார்த்து தயங்கி நிற்க, இன்ஸ்பெக்டர் அவசரமாய் அவர்களின் கரத்தைப் பிரித்துவிட்டு,

"ப்ளீஸ் போங்க சார்... இல்லாட்டி பெரிய பிரச்சனை வந்துரும்"  

அவன் தவிப்போடு, "இந்த பொண்ணைக் காப்பாத்தணும்" என்றான்.

"அதெல்லாம் நாங்க பார்த்துக்குறோம்" என்று சொல்லி அவன் தோளைப் பற்றி அறைக்கு வெளியே அழைத்து செல்ல, அந்த பெண்ணைப் பார்த்தபடியே வெளியேறினான். ஏனோ அவளை விட்டுப்பிரிய முடியாத ஓர் உணர்வும் தவிப்பும் அவனுக்குள்.

ஆனால் அவர் அவன் எண்ணங்களைப் புரிந்து கொள்ளாமல் அவனை கார் வரை அழைத்துவந்து இருக்கையில் அமர வைத்தார். அதோடு அல்லாது காரை எடுக்க சொல்லியும் பணித்தார்.

அதற்கு மேல் அங்கே இருக்க முடியாமல், அவன் காரை செலுத்தவும், அந்த மருத்துவமனை விட்டுச் சீறி பாய்ந்து வெளியேறியது அந்த ஃபெரார்ரி கார்!

ஸ்டியரிங்கில் ஒட்டியிருந்த இரத்தக்கறை, பின் இருக்கை முழுவதும் படிந்திருந்த அவளின் குருதி என அவனின் காரில் திரும்பிய இடமெல்லாம் அந்தப் பெண்ணின் நினைவு!

யாரென்று தெரியாத அவள்? அவள் வாழ்வில் யார் இத்தனை பெரிய கொடுமையை இழைத்திருப்பார்கள். இந்தக் கேள்விகளோடு காரை ஓட்டி வந்தவன், பிரமாண்டமே அதுதானோ என்ற பிரமிக்க வைக்கும் அவனின் பங்களாவிற்குள் நுழைந்தான்.

காரிலிருந்து இறங்கிய மறுகணமே சாவியைத் தூக்கியெறிந்துவிட்டு தன் படுக்கையறை நோக்கி விரைந்தவன், குளியலறைக்குள் நுழைந்து ஷவரை திறந்து விட்டு தண்ணீரில் முழுவதுமாய் நனையத் தொடங்கினான்.

அவனின் உடலில் பாய்ந்த நீர் அவனின் தேகத்தில் படிந்திருந்த அவளின் செங்குருதியை நீக்கிவிட்டது. ஆனால் அவன் மனதில் ஆழப்பதிந்த அந்தச் சம்பவத்தின் நினைவுகளை?

Muthu pandi has reacted to this post.
Muthu pandi
Quote

Nice

Quote

Super ma 

You cannot copy content