You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Naan Aval Illai - 28

Quote

28

எரிமலையாய் வெடித்தது

மகிழ் தன் தந்தையின் சிகிச்சை அறைக்குச் சற்று தள்ளியிருந்த இருக்கையில் தலையை தன் கைகளால் தாங்கிப் பிடித்தபடி அமர்ந்திருந்தான்.

மாயா அவன் தோள் மீது கைவைத்தபடி அவனை நிதானப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவளாலேயே அத்தகைய நிதானத்தைக் கடைப்பிடிக்க முடியவில்லை.

அதுவும் சாக்ஷியை கண்ணெதிரே பார்த்தபின்! அவள் உணர்வுகளும் கற்பனைகளும் விவரிக்க முடியாத நிலையில் பயணித்துக் கொண்டிருந்தன.

ஜென்னி அங்கே வந்ததை முதலில்  கண்டுகொண்டது புகழ்தான். அவன் ஓடிச்சென்று, "சாக்ஷி அக்கா" என்று அவள் கால்களைக் கட்டிக் கொண்டான்.

மாயா அதிர்ந்து திரும்ப, அதே சமயம்  ஜென்னியை பார்த்த வள்ளியம்மை எழிலும் கூட அதிர்ச்சியில் நின்றுவிட்டனர்.

ஜென்னி புகழைப் பார்த்து அவன் முன் மண்டியிட்டு, "என்னாச்சு புகழ்? ஏன் அழுகுறீங்க?" என்று விசாரித்தாள்.

"சாக்ஷி அக்கா... எங்க தாத்தா கீழே விழுந்துட்டாரு" என்று கண்ணீர் வடித்தவன் அவள் கரத்தைப் பிடித்து சிகிச்சை அறைக்குள் இழுத்துச் சென்றான். அங்கே மகிழ் அவன் தந்தையிடம் பேசிக் கொண்டிருக்க, அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை அவள் எதிர்பாராமல் கேட்க நேரிட்டது. உடனடியாக அவள் பதிலுரைக்க, மறுகணம் மகிழ் அந்தக் குரலை கேட்டுத் திரும்பினான்.

அங்கே ஜென்னி நின்றதைப் பார்த்தவன் பேரதிர்ச்சியடைந்தான். காலையில் லிஃப்டில் பார்த்த போது எப்படி இருந்தாளோ அப்படியே நின்றிருந்தாள். அவனுக்கு அவனே,

'அவள் எப்படி இங்கே ?' என்று கேட்டுக் கொள்ள, அவன் விழிகளை அவனாலேயே நம்ப முடியவில்லை. விழி பொய் சொல்லுமா? இவ்வாறு சந்தேகம் கொண்டவன், கண்களைக் கசக்கிப் பார்த்தான். செவியும் பொய் சொல்லுமா? அவள் இப்போது பேசினாள்தானே!

வியப்பக்குறியோடு அவளை அவன் விழிகள் அகலப் பார்த்திருக்க, அவனைப்  பொருட்படுத்தாமல் அவள் ஞானசேகரன் அருகில் வந்தாள்.

அவளிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் அந்தச் சூழ்நிலையில் எதுவும் பேசமுடியாமல், அவன் ஒதுங்கி நின்று கொண்டான்.

ஜென்னி  ஞானசேகரனிடம், "இத பாருங்க அங்கிள்... நீங்க கண்டதையும் யோசிக்காம மனசை ரிலாக்ஸா வைச்சுக்கோங்க... அப்பதான் உங்க உடம்பு சீக்கிரம் குணமாகும்" என்றாள்.

ஞானசேகரன் ஜென்னியை ஆழ்ந்து பார்த்து, "நீ சாக்ஷி தானேம்மா?" என்று தடுமாற்றத்தோடு கேட்க,

அவள் மெலிதான புன்முறுவலோடு, "இல்ல அங்கிள்... நான் ஜெனித்தா" என்றாள்.

உடனே புகழ் அவள் சொல்வதற்கு மறுப்புத் தெரிவித்து, "இல்ல சாக்ஷி அக்கா" என்க, அவளும், "சரி சரி... சாக்ஷிதான்" என்று அவனைச் சமாதானம் செய்து தலையசைத்தாள்.

மகிழ் அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் அந்த அறையை  விட்டு அகன்றுவிட, அவனைக் கவனிக்காதது போல் நின்றாலும் அவன் உணர்வுகளின் வலி அவளுக்கு நன்காகவேப் புரிந்தது. அதனை தன் முகத்தில் பிரதிபலிக்க விடாமல் ரொம்பவும் கவனமாகவே இருந்தாள்.

ஜென்னி ஞானசேகரனிடம் பேசப் பேச  அவள் சாக்ஷியா அல்லது சாக்ஷியின் தோற்றத்தில் இருப்பவளா என்ற சந்தேகம் வலுத்தது. இருந்தாலும் அவள் பேசிய விதத்தில் அவர் மனம் இயல்பு நிலைக்குத் திரும்பி ஆறுதலடைந்திருந்தது.

அதே சமயம் மகிழ் தன் மனவுணர்வுகளோடு அவதிப்பட்டுக் கொண்டிருக்க, மாயா அவனை அமைதி பெற செய்ய முயன்று கொண்டிருந்தாள்.

எழில் அவர்களின் நிலையைக் கண்டு அருகாமையில் வந்து, "உங்க இரண்டு பேரோட குழப்பம் எனக்கு புரியுது... ஆனா அவங்க சாக்ஷி இல்ல... ஜெனித்தா" என்றுரைக்க மகிழ் அதிர்ச்சியோடு நிமிர்ந்தான்.

எழில் அவர்களிடம் நகைக்கடையில் புகழ் தொலைந்து போன கதையை சொல்லி முடிக்க,

மாயா குழப்பமுற்று, "அது சரிங்க அண்ணி... அவங்க ஜெனித்தான்னே வைச்சுப்போம்.. ஆனா அவங்க ஏன் இங்கே வரணும் ?" என்று கேட்க,

"நாங்க கூட அன்னைக்கு புகழ் சொன்ன கதையெல்லாம் கேட்டு அவங்க சாக்ஷிதான்னு நினைச்சிட்டோம்... அப்பதான் இந்த ஜெனித்தா என் வீட்டுக்கார் நம்பருக்கு கால் பண்ணி புகழ் நல்லபடியா வந்துட்டானான்னு விசாரிச்சாங்க... அப்பதான் அவங்க பேர் ஜெனித்தான்னு விவரமெல்லாம்

சொன்னாங்க... அப்புறம் புகழ்கிட்டயும் பேசிட்டு இது என் நம்பர் ஏதாச்சும்னா கால் பண்ணுன்னு சொல்லி இருக்காங்க…

 இந்த புகழ் பையன்... அப்பா நெஞ்ச பிடிச்சிக்கிட்டு விழுந்ததும் உடனே அவங்களுக்கு ஃபோன் பண்ணி அழுதிருக்கான்...  அப்புறம் அவங்களே எனக்குத் திருப்பி ஃபோன் பண்ணி என்ன ஏதுன்னு விசாரிச்சாங்க... நான்தான் அப்பா ஹாஸ்பிட்டல இருக்கிற விவரத்தை சொன்னேன்... அவங்க இப்படி புறப்பட்டு வருவாங்கன்னு நானே எதிர்பார்க்கல" என்றாள்.

மகிழ் நெற்றியை தேய்த்துக் கொண்டு மாயாவைப் பார்க்க அவளும் புரிந்தும் புரியாமல் நின்றிருந்தாள்.

அந்தச் சமயம் மருத்துவமனைக்குள்  டேவிட் நுழைய அவனைப் பார்த்த மாயா, "டேவிட் சார்" என்றழைக்க, அவன் இவள் புறம் திரும்பினான்.

டேவிட் உடனே அவளருகாமையில் வர மகிழும் அவனைப் பார்த்து எழுந்து நின்று கொண்டான். இவன் எப்படி இங்கே என்று மகிழ் யோசிக்கும்போதே, ஜென்னியையும் டேவிடையும் பற்றி அவர்கள் அலுவலகத்தில் உள்ள எல்லோருமே தங்கள் இஷ்டத்திற்குக் கதை அளந்து கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.

அப்படியெனில் ஜெனித்தாவை இவன்தான் அழைத்து வந்திருக்க வேண்டும் என்றவன் நினைத்திருக்க, "என்னாச்சு மாயா... யாருக்கு என்ன?" என்று அவன் பதட்டமாய் கேட்க,

"அது... இவரோட அப்பாவுக்கு ஹார்ட்அட்டக்... இங்கதான் அட்மிட் பண்ணியிருக்கோம்" என்று மாயா மகிழைக் காண்பித்து உரைக்க,

டேவிட் அதிர்ச்சியோடு, "இப்ப எப்படி இருக்காரு?" என்று கேட்டதும்,

மகிழ், "பரவாயில்லை சார்... இப்ப ஒண்ணும் பிரச்சனையில்லை" என்றான்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஜென்னி சிகிச்சை அறையை விட்டு புகழின் கரத்தைப் பற்றியபடி வெளியே வந்தாள். அவள் வள்ளியம்மையையும் பார்த்து ஆறுதல் உரைத்துவிட்டுத் திரும்பியவள்,

டேவிட் மகிழோடும் மாயாவோடும் நின்று பேசிக் கொண்டிருப்பதை கவனித்தாள்.

டேவிட் அருகில் அவள் வந்து நிற்க, "என்ன ஜென்னி ?  பார்த்துட்டியா?" என்று கேட்டான்.

"ஹ்ம்ம்" என்றவள் புகழைக் காண்பித்து "இந்த பெரிய மனிஷன்தான் எனக்கு கால் பண்ணது... அவங்க தாத்தாவுக்கு உடம்பு சரியில்லையாம்" என்று சொல்ல,

"ஓ" என்று புகழைப் பார்த்து டேவிட் கன்னத்தைக் கிள்ளி, "வெரி ஸ்மார்ட்" என்க,

புகழ் உடனே "என்ன சாக்ஷி அக்கா? நீங்க எப்பவும் மகிழ் மாமாவோடதானே வருவீங்க... இவர் யாரு?" என்று கேட்டான். அந்தக் கேள்வியின் தாக்கம் எல்லோரின் முகத்திலும் உணர்ச்சி மாற்றங்களை ஏற்படுத்த, எழில் மகனை அதட்டினாள்.

"வாய மூடு புகழ்... இப்படி அதிகபிரசங்கித்தனமா பேசாதே" என்று.

மாயாவின் திகைப்பு அடங்கவேயில்லை. விழி பொய் சொல்லுமா? சொல்கிறதே. அவள் சாக்ஷிதான் என்று. ஆனால் அது உண்மையில்லை என்றளவுக்குதான் அந்தக் காட்சி அரங்கேறியது. ஒரே ஒரு முறை கூட ஜென்னி தன் பார்வையை அவர்களின் புறம்  திருப்பவில்லை.

அதனைக் கூர்மையாக கவனித்திருந்தான் மகிழ். அவள் தெரிந்தே தவிர்க்கிறாளா இல்லை தெரியாமலா? இவ்வாறு மகிழும் மாயாவும் யோசித்துக் கொண்டிருக்கும் போதே எழில் ஜென்னியிடம், "சாரிங்க... அவன் கொஞ்சம் ஓவரா பேசுவான்" என்க,

"அதுதான் எனக்கு புகழ்கிட்ட பிடிச்சிருக்கே" என்று ஜென்னி சொல்லிவிட்டு, "நீங்கதான் புகழோட அம்மா இல்ல" என்று கேட்க,

அவளும் ஆமாம் என்பது போல் தலையசைத்தாள்.

"இப்ப அப்பாவுக்கு எப்படி இருக்கு?" என்று விசாரித்தாள்.

"பரவாயில்லைங்க... டாக்டர் நாளைக்கே டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்னு சொல்லிட்டாரு... ஓண்ணும் பிரச்சனையில்லை" என்றாள்.

"தேங் காட்" என்று சொல்லும் போது டேவிட் அவர்களிடம் சந்தேகமாக, "உங்க சிஸ்டரா மகிழ் அவங்க?" என்று கேட்க,

மகிழ் அவன் கேட்டதைக் கவனிக்காமல் ஆழமான யோசனையில் ஆழ்ந்திருக்க மாயா "ஆமாம்... அவரோட சிஸ்டர்தான்" என்று பதிலுரைத்தாள்.

அதோடு மகிழின் கரத்தையும் பற்றி அவனை இயல்பு நிலைக்கு மீட்க, அவன் டேவிடை நிமிர்ந்து பார்த்தான். ஜென்னி அந்தச் சமயம், "போலாமா" என்று டேவிட்டிடம் கேட்க,

டேவிட் மகிழிடம், "அப்பாவை பார்த்துக்கோங்க மகிழ்... நான் கிளம்பறேன்... ஏதாவது ஹெல்ப் வேணும்னா ஹெஸிட்டேட் பண்ணாம கேளுங்க" என்றவன் மாயாவிடம் தலையசைத்து விடைபெற்று புறப்பட,

ஜென்னி புகழின் கன்னத்தைத் தட்டி, "நான் போயிட்டு வர்றேன் புகழ்... தாத்தாவுக்கு சீக்கிரம் சரியாயிடும்... நீங்க ஒண்ணும் வொர்ரி பண்ணிக்க வேண்டாம்" என்றாள்.

பின்னர் அவள் எழிலை நிமிர்ந்து பார்த்து புறப்படுவதாக உரைத்துவிட்டு வெளியேறினாள். அவள் எந்தவித உணர்ச்சிகளும் இன்றி அவர்களைத் திரும்பியும் நோக்காமல்  கடந்து சென்று விட மகிழ் உடலை விட்டு உயிர் பிரிந்து போனது போல் இருக்கையில் துவண்டு சரிந்தான்.

எழில் தம்பியின் மனநிலையை உணராமல் மாயாவின் புறம் திரும்பி,

"அப்படியே சாக்ஷி மாதிரியே இருக்காங்க இல்ல" என்க,

"ஆமாம் அண்ணி... என் கண்ணை என்னாலயே நம்ப முடியல" என்று மாயா உரைக்க, "ரொம்ப நல்லவங்கப்பா... இந்த மாதிரி மனுஷங்களும் இருக்காங்களான்னு ஆச்சர்யமா இருக்கு இல்ல" என்றாள் எழில்.

மாயாவும் வியப்போடு தலையசைத்தாள். இப்படி இவர்களின் சம்பாஷணை நடந்து கொண்டிருக்க,

புகழ் மட்டும் சோர்ந்து அமர்ந்திருக்கும் மகிழின் முகத்தைப் பார்த்துவிட்டு, "என்னாச்சு மாமா? சாக்ஷி அக்கா உங்ககிட்ட பேசலன்னு வருத்தமா இருக்கீங்களா? உங்களுக்குள்ள சண்டையா?" என்று வரிசையாய்

கேள்விகளை அடுக்க, மாயா அதிர்ந்தபடி திரும்பி தன் கணவனைப் பார்த்தாள்.

புகழ் கேட்டபடிதான் அவன் மனமுடைந்து போய் அமர்ந்திருந்தான். எழில் தன் தம்பியை கவனித்துவிட்டு, "என்னாச்சு மகிழ்? !" என்று விசாரித்தாள்.

அவன் முகத்தை துடைத்துக் கொண்டு, "ஒண்ணுமில்லையே" என்றபடி நிமிர்ந்து அமர்ந்து கொள்ள, அவன் உதடுகள்தான் இல்லை என்றது.

ஆனால் மனம் அவளை எண்ணி மருகுகிறது என்பதை அவன் தமக்கையும் தாரமும் புரிந்து கொள்ளாமலா இருப்பார்கள்.

எழில் உடனே தன் மகனின் புறம் கோபமாய் திரும்பியவள், "எத்தனை தடவை உன்கிட்ட சொல்றது புகழ்... அவங்க சாக்ஷி இல்லன்னு"

"போம்மா.. அவங்க சாக்ஷி அக்காதான்" என்றான்.

"இவன் ஒருத்தன்... வெந்த புண்ல வேல பாய்ச்சிக்கிட்டு" என்றவள் தன் மகனின் கரத்தைப் பற்றி,

"வா அங்க பாட்டி தனியா இருக்காங்க... நாம போவோம்" என்று அழைத்துக் கொண்டு போனாள். அதோடு மாயாவை பார்த்து சமிஞ்சையால் தன் தம்பியை சமாதானப்படுத்தும்படி தெரிவிக்க, அவளும் அதனைப் புரிந்து தலையசைத்தாள்.

அவன் அப்படி வாட்டமுற்றிருப்பதைப் பார்த்த மாயா அருகில் அமர்ந்து, "மகிழ் ப்ளீஸ்... நீங்க ஏன் இப்படி உடைஞ்சு போயிருக்கீங்க... அவங்க சாக்ஷி இல்லைங்கிறதாலயா?" என்று கேட்க,

"இல்ல மாயா... அவ சாக்ஷிங்கிறதலாதான்" என்றான் அழுத்தமாக!

மாயா அதிர்ச்சியோடு  "இன்னுமா மகிழ் நீங்க அந்த பொண்ணை சாக்ஷின்னு நம்பறீங்க?" என்று கேட்டவளிடம்,

"நம்பறதுக்கு என்ன இருக்கு... அவதான் சாக்ஷி" என்றான் தீர்க்கமாக!

மாயாவின் விழிகளில் நீர் தளும்பியது.

"உங்களுக்கெல்லாம் சொல்லி புரிய வைக்கவே முடியாது" என்றவள் எரிச்சலோடு எழுந்து செல்லப் பார்க்க,

அவள் கரத்தைப் பற்றியவன், "நான் புரிஞ்சுக்காதவனாவே இருக்கேன்... ஆனா எனக்கு நீ ஒரு கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ" என்றான்.

"என்ன?" அவன் முகம் பாராமலே அவள் கேட்க,

"டேவிட் எதுக்கு மாயா நீ கேட்காமலே சாக்ஷி ஸைட் ஸேவர் ஆர்கனைசேஷனுக்கு பத்து கோடி கொடுத்தாரு? வெறும் ஹெல்ப்பிங் மென்டாலிட்டிதானா?" என்று கேட்க மாயா பதில் சொல்ல முடியாமல் மகிழை திகைப்போடு நோக்கினாள்.

இந்தக் கேள்வி அவள் சாக்ஷிதானா என்ற சந்தேகத்தை மீண்டும் வலுக்கச்  செய்தது.

அவனே மேலும், "அன்னைக்கு அதுக்குக் காரணம் தெரியல... ஆனா இன்னைக்கும் உனக்கு அதுக்கான காரணம் புரியலன்னா... நீ முட்டாள்தான் மாயா" என்றான்.

மாயா அதிர்ச்சியிலிருந்து நீங்காமல் "அப்படின்னா வந்தது சாக்ஷிதானா?" என்று கேட்க,

"அவளேதான்" என்றவனின் முகம் உக்கிரமாய் மாறியது.

"அவ ஏன் நம்மகிட்ட பேசல மகிழ் ?"

"பேசலயா" என்று கேட்டவன் எகத்தாளமாய் புன்னகைத்து,

"பைத்தியம்... உன் கண்ணு என்ன குருடா? அவ இன்டென்ஷ்னலா நம்ம இரண்டு பேரையும் அவாயிட் பண்ணிட்டு போறா... பார்த்தும் பார்க்காத மாதிரி போறா...

கண்ணு இல்லாத போதும் அன்னைக்கு அவளுக்கு நாம தெரிஞ்சோம்..  இன்னைக்கு நாம தெரியல... பார்வை இருந்தும் குருடு மாதிரி போறா" அவன் வார்த்தையில் ஆதங்கத்தோடு அழுத்தமான கோபமும் கலந்திருந்தது.

மாயாவின் மனம் ஏதேதோ சிந்திக்க தன் கணவனின் புறம் திரும்பி,

"ஏன் மகிழ் அவ நம்மள அவாயிட் பண்ணனும் ? நாம கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு தெரிஞ்சு" என்று கேட்கும் போதே அவள் உதடுகள் நடுங்க, அவன் கோபத்தின் உச்சத்தில் நின்றான்.

"நமக்கு கல்யாணம் ஆகி மூணு மாசம்தான் ஆகுது மாயா... ஆனா இந்த மூணு வருஷமா எங்க போனா அவ?... எங்க இருந்தா?   நான் பையத்தியக்காரன் மாதிரி ரோட்ல சுத்திட்டிருந்தேனே”

“அப்போ எங்க போனா?அவளுக்காக எங்க அம்மா அப்பாவையும் தூக்கி போட்டுட்டு அனாதை மாதிரி கிடந்தேனே... அப்போ எங்க போனா? யார் அந்த டேவிட் அவளுக்கு? உன்னையும் என்னையும் விட அந்த டேவிட் அவளுக்கு முக்கியமா  போயிட்டானோ?!" என்று பொறுமிக் கொண்டிருந்தவனின் முகம் சிவப்பேறி இருந்தது.

உள்ளுக்குள் அவள் மீது தேக்கி வைத்திருந்த காதல் எல்லாம்  எரிமலையாக வெடிக்கத் தொடங்க, அவன் தன்னிலை இழக்கிறான் என்பதை உணர்ந்து,

"மகிழ் ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையா இருங்க" என்றவள் அவன் கரத்தை கெட்டியாய் பிடித்துக் கொண்டாள்.

"உன்னையும் என்னையும் அவளால எப்படி மறக்க முடிஞ்சுது மாயா... எதுக்கு  அவ இங்க வந்தா? என்னை உயிரோட சாகடிக்கவா?" என்று கேட்டவன் தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் முகத்தை மூடி அழ,

"மகிழ்... என்ன நீங்க இப்படி சின்ன பிள்ளையாட்டம்? "

"நீ அப்பவே சொன்ன மாயா... நான்தான் கேட்கல" என்றவன் உணர்ச்சி பொங்க அவள் கரத்தையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டு கண்ணீர் வடித்தான். அவனைத் தேற்றுவது அத்தனை சுலபமில்லை. அந்தளவுக்கு அவள் மீது காதல் கொண்டிருந்தான்.

 மகிழின் துயரம் மாயாவை ரொம்பவும் பாதித்தது. அதுவும் தன் உயிருக்கு உயிராக நேசித்த தோழியை அடியோடு வெறுக்கும் அளவுக்கு.

Muthu pandi has reacted to this post.
Muthu pandi
Quote

Nice

You cannot copy content