You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Naan Aval Illai - 3

Quote

3

இலட்சியம்

ரொம்பவும் குறுகலான தெருவில் அமைந்திருந்தது அந்த சிறு வீடு. சையத் அந்தச் சிறிய தொலைக்காட்சி பெட்டியில் ஏதோ ஒரு படக்காட்சியை பார்த்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். சாஜி தன் மகனுக்காகத் தோசையை சுட்டு வைத்துக் கொண்டிருக்க, அவனும் கணக்கு வழக்கின்றி உண்டு கொண்டிருந்தான்.

ஒரு முழு ஆடே அவன் தட்டைச் சுற்றி தவமிருக்க, அவன் பார்வையோ டிவியில் லயித்திருந்தது. சாஜி தோசையை அவன் தட்டில் வைத்தபடி,

"டீ.வியையே பார்த்தது போதும்... சாப்பிடு சையத்" என்று மிரட்டலாய் சொன்ன தாயை நிமிர்ந்தும் நோக்காமல்,

"சாப்பிட்டுட்டுதானே இருக்காங்க... நீ போ" என்றான் அலட்சியமாக!

அவர் மகனின் வார்த்தையில் அலுத்துக் கொண்டு உள்ளே செல்ல, அவன் தன் பார்வையைத் தொலைக்காட்சியை விட்டு எடுப்பதாக இல்லை. அதே நேரத்தில் சாப்பிடுவதை நிறுத்துவதாகவும் இல்லை.

ஏனெனில் அவன் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தது இரண்டே விஷயம்தான். ஒன்று சினமா. இன்னொன்று தன் அம்மாவின் சமையல். அதுவும் அவனுக்கு அசைவம் உண்பதில் அலாதியான பிரியம் வேறு.

இரண்டிற்குமே அவன் அடிமை என்றே சொல்ல வேண்டும். இரண்டின் மீதும் அலாதியான காதல். அவன்தான் சையத்!

சையத் என்றால் ஆளுமை. அத்தகைய ஆளுமை அவன் பெயரில் மட்டுமில்லை. அவனின் எண்ணத்திலும் செயலிலும் கூட இருந்தது. சாதாரண ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன்தான். ஆனால் உலகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சினிமா என்ற கனவுலகின் விண்மீன்களுக்கு வலை வீசுபவன்.

அந்த நிழலுலகில் நிஜ அங்கீகாரத்திற்காகப் போராடும் போராளி. அவனின் கூர்மையான விழிகள் கட்டுடலான தேகம் அவன் உயரமும் உருவமைப்பும் கம்பீரமும் பார்க்க அவன் கதாநாயகன் போலவே இருப்பான். ஆனால் அவன் எண்ணம் போலியான முகப்பூச்சுகள் பூசிக் கொள்ளும் நாயகன் வேடமல்ல!

பின்னாடி நின்று நாயகனையும் இயக்கிடும் நிஜ நாயகனாக! இயக்குநராக வேண்டுமென்ற அவனின் எண்ணத்திற்கேற்ப திறமையும் வல்லமையும் அவனிடம் நிரம்பவே இருந்தது.

இத்தகையவன் தற்சமயம் சேனலை மாற்றியபடி எதையோ ஆர்வமாய் தேடிக் கொண்டிருக்க, அவன் கரத்திலிருந்து ரிமோட்டை அதிகாரமாய் பறித்தார் அவனின் தந்தை கரீம்.

பறித்ததோடு அல்லாமல் ஆவேசம் பொங்க, "நல்லா சாப்பிடுறா... அதான் சம்பாதிச்சு கொட்ட நான் இருக்கேன் இல்ல" என்றார்.

சாஜி சமையலறையில் இருந்து அவசரமாய் ஓடிவந்து,

"அப்புறமா பேசிக்கலாம்... என்னைக்கோ ஒரு நாள்தானே பையன் வீட்டுக்கு வர்றான்... அவன் சாப்பிடட்டுமே" என்று சொல்லவும் அவர் முகம் எரிமலையாய் மாறியிருந்தது.

அசிஸ்டன்ட் டைரக்டராக பணிபுரிவதால் அவனுக்கு வீடு தங்க நேரமேது. அப்படி அபூர்வமாய் பார்க்கும் மகனிடம் தன் ஆதங்கத்தைக் கொட்டக் கூடாதா?!

கரீமின் பார்வையின் அர்த்தம் அதுதான். அந்தத் தெருவில் உள்ள பெரிய மட்டன் ஸ்டாலுக்கு முதலாளி. அவனுக்குப் பிறகாய் வீட்டில் இன்னும் இரண்டு பிள்ளைகள்.

ஆஷிக், அஃப்சானா என இரட்டைக் குழந்தைகள். இருவரும் அவனை விட பத்து வயது சிறியவர்கள். வயது கடந்த திருமணம் என்பதால் கரீம் ரொம்பவும் தளர்ந்து முதுமையின் தாக்கத்தில் இருந்தார். தன் பாரத்தை மகன் இறக்கி வைப்பானா என்ற அவரின் ஆசை நிராசையாய் போனது.

சையத் கனவு லட்சியமென்று சொல்லி சினிமாவின் பின்னோடு ஓடத் தொடங்கினான். திரைப்பட துறையில் கனவுகளோடு போகும் பலர் காணாமல் போவதே அதிகம். லட்சத்தில் ஒன்றுதான் அந்த நட்சத்திர வானத்தை எட்டிப்பிடித்து ஜொலிக்க முடியும். இவனும் அனேகர்களில் ஒருவனாய் தொலைந்து போய்விடுவானோ என்ற அச்சம்தான் அவருக்கு!

ஆனால் அவனுக்கு அந்த அச்சமில்லை. ஒரு நாள் அந்த மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திர உலகில் தானுமே ஒரு நட்சத்திரமாய் மின்னுவோம் என்ற உறுதியான நம்பிக்கையோடு இருந்தான்.

அவனுக்கு அது வெறும் கனவல்ல! பெரும் லட்சியம். அதனால் அப்பாவின் வசைப்பாடுகளைக் காதில் வாங்காமல் ரிமோட் போனால் என்னவென்று, டீவியின் ஸ்விட்ச்களை அழுத்தித் தனக்கு வேண்டிய சேனல்களை மாற்றிக் கொண்டிருக்க, அவரின் கோபம் இன்னும் அதிகரித்தது.

அவர் சீற்றத்தோடு டீவி ரிமோட்டை அவன் மேலேயே வீசினார். அவனுக்குமே கோபம் வர, திரும்பி முறைத்தவனை அவரும் வெறுப்போடு பார்த்து,

"முறைடா... முறை... எப்படி முறைக்கிறான் பாரு... உன்னை எல்லாம் பெத்ததுக்கு" என்றவர் உணர்ச்சி பொங்க கத்தி தலையில் அடித்துக் கொள்ள சாஜி அவர் அருகில் வந்து தடுத்து ஆசுவாசப்படுத்தினார்.

சையத் அதனைப் பொருட்படுத்தாமல் அந்தச் சிதறியிருந்த ரிமோட்டின் பாகங்களைச் சேர்த்து இணைத்து டீவியை மாற்ற முயற்சிக்க அது செயல்பட மாட்டேன் என்று அடம்பிடித்தது.

சாஜிக்கும் அவனின் செயல் கோபத்தை ஏற்படுத்திட, "ஏ சையத்... வாப்பா பேசறது உன் காதுல விழல" உரக்க கேட்டார்.

அவன் திரும்பியும் அவர்களை நோக்காமல், "இதெல்லாம் புதுசாவா நடக்குது... நீ போய் தோசை எடுத்துட்டு வாம்மா" என்றான் அலட்சியமாக!

கரீமின் மனம் குமுறியது.

"போ சாஜி... சாருக்கு போய் தோசை சுட்டு எடுத்துட்டு வா... அவர்தான் இந்த வீட்டுக்கு சாம்பாதிச்சு கொட்டுறாரு இல்ல" என்றார்.

அவனோ துளியும் கவலையின்றி ரிமோட்டைத் தட்டி வேலைச் செய்வித்து, சேனலை மாற்றிய போது திடீரென்று ஒரு முகம் அவனைக் கடந்து செல்ல, மீண்டும் அந்த சேனலை திருப்பினான்.

ஜே நீயூஸில் மும்முரமாய் நம் நாட்டின் முக்கிய நிகழ்வுகள் அணிவகுத்துக் கொண்டிருந்தன. அப்பொழுது ஒரு பெண்ணின் புகைப்படத்தைக் காண்பித்து ஒளிபரப்பான செய்திதான் சையத்தை ஈர்த்தது.

பார்வையிழந்த பெண் சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி மரணம். இதைக் கேட்ட மறுகணமே அவன் தந்தையும் தாயும் கூட மகன் மீதான கோபத்தை மறந்து அந்தப் பெண்ணிற்காக உச்சுக் கொட்டிப் பரிதாபப்பட்டனர். ஆனால் சையத் அந்தச் செய்தியை கேட்கவில்லை. அந்தப் பெண்ணின் முகத்தை மட்டுமே பார்த்தான். அந்த அழகான புகைப்படத்திலிருந்த அவள் முகம்.

யாரென்றே அறிந்திராத அந்தப் பெண்ணின் முகத்தில் ஏதோ ஒரு ஈர்ப்பு!

இரும்பினை ஈர்க்கும் காந்தம் போல அவனை அந்த முகம் ஈர்த்துவிட்டு கண நேரத்தில் மறைந்து போனது. சில காட்சிகளும் சில நிகழ்வுகளும் காரணக்காரியமில்லாமல் நம் மனதில் பதிவாகும். அப்படி அந்த முகம் அவனுக்குள் பதிவானது.

மூவருமே சிறிது நேரம் மௌனத்தில் ஆழ்ந்துவிட குற்றவாளியைப் போல பார்க்கும் தன் தந்தையையும் தாயையும் நிமிர்ந்து பார்த்தவன்,

"அடுத்த வாரம் எங்க டைராக்டரோட படம் ரீலாஸாகப் போகுது... என் பேரும் அந்த பெரிய் ஸ்கிரீன்ல வரும்... அசிஸ்டன்ட் டைரக்டர்னு" என்றான்.

கரீம் கோபத்தோடு, "ஆமாம்... ஒரு மூலையில உன் பேர் வரப் போகுது... அதை போய் பெரிய விஷயமா பேசிட்டிருக்கியா... அதனால தம்புடி பிரயோஜனம் உண்டா உனக்கு" என்றவர் கேட்க,

"என்ன பேசறீங்க வாப்பா? நான் மட்டும் சினிமாவில பெரிய டைரக்டராயிட்டா பணமெல்லாம் ஒரு விஷயமே இல்ல" என்றான்.

"அல்லாவோட விருப்பமும் அதுவாயிருந்தா சந்தோஷம்தான்... ஆனா அப்படி நடக்காது... நீ நிதர்சனத்தை புரிஞ்சிக்கிட்டு நம்ம பிழைப்பை பார்க்கிற வழியை பாரு"

"மாட்டேன் வாபா... நான் டைரக்டர் ஆவேன்... அதுதான் என்னோட இலட்சியம்"

"அப்படின்னா இந்த வீட்டில இனி நீ இருக்கவே கூடாது"

"என்ன சொல்றீங்க?" சாஜி அதிர்ந்து கணவனை நோக்க அவர் விழிகளோ அந்த வார்த்தைகளை சொல்லிவிட்டு கண்ணீரை ஊற்றாய் பெருக்கிற்று.

"நம்ம யாரை பத்தியும் அவனுக்கு கவலையில்லையாம் சாஜி... அவனுக்கு அவன் லட்சியம்தான் பெரிசுன்னு சொல்றான்... என்னால இனிமே அவன் பாரத்தை சேர்த்து தூக்கி சுமக்க முடியாது... அவனை முதல்ல இங்கிருந்து போக சொல்லு”

“நான் இருக்கிறவரைக்கும் உங்களை எல்லாம் பார்த்துப்பேன்... அப்புறம் அந்த அல்லா உங்களுக்கு வழிக்காட்டுவாரு" என்றவர் விரக்தியோடு சொல்ல,

"ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க ?" என்று சாஜி கண்கலங்கி அழத் தொடங்கினார். சையத் எங்கே தன் மனவுறுதி இவர்களின் கண்ணீரில் கரைந்து தன் இலட்சியத்தைத் தொலைத்துவிடுவோமோ என அஞ்சியவன் அவசரமாக எழுந்து தன் கைகளை அலம்பிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான்.

"சையத்" என்று சாஜி மகனைக் கண்ணீரோடு அழைத்தார்.

அவனோ திரும்பாமலே, "நான் போறேன் மா... அப்படி நான் திரும்பி வந்தேன்னா... சினிமாவில பெரிய டைரக்டரானா பின்னாடிதான் வருவேன்... இல்லன்னா வரவே மாட்டேன்"

"சையத்" என்றவரிடம், "இனிமே என் பாரத்தை யாரும் சுமக்க வேண்டாம்" என்றவன் துளியளவும் தயங்காமல் வீட்டை விட்டு வெளியேறினான். வெளியே விளையாடும் தன் தம்பி தங்கையை பார்த்த போது, லேசாய் கண்ணீர் அவன் விழிகளை நனைத்தது.

 விரைவிலேயே தன் இலட்சியத்தை அடைந்துவிட்டு வீடு திரும்பிவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. சையத்தை பொறுத்தவரை குடும்பத்திற்கு நல்லவனாய் இருப்பதை விடவும் உலகமே போற்றும் வல்லவனாய் இருக்க வேண்டும். தன் தந்தை சொன்ன நிதர்சனத்தை உடைத்து வெற்றி பெற்று காட்டவேண்டும் என்ற உறுதியோடு தன் இலட்சிய பயணத்தைத் தொடர்ந்தான்.

Muthu pandi has reacted to this post.
Muthu pandi
Quote

Nice

Quote

Super ma 

You cannot copy content