You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Naan Aval Illai - 31

Quote

31

இரும்புத்திரை

ஜென்னி அத்தனை ஆவலோடு தன் வீட்டையடைந்தாள். எத்தனை நாளைக்குப் பிறகு தன் தோழியைப் பார்க்க போகிறோம். மருத்துவமனையில் பார்த்த போது அவள் மகிழோடு நின்றதால் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டுப் போனது. ஆனால் அவள் தனியாக தன்னை பார்க்க வந்திருக்கிறாள் என ரூபா உரைக்க அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை.

இரண்டு நாட்கள் முன்பு அவர்களைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து அவள் பட்ட தவிப்பும் துயரும் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது.

மாயாவையும் மகிழையும் அவள் தவிர்த்ததெல்லாம் வெறும் பார்வைக்குத்தான். ஆனால் உள்ளூர அவர்களின் வேதனையையும் வலியையும் உணர்ந்து வெதும்பியதை யார் கண்டிருக்க முடியும்.

தண்ணீரில் நீந்தும் மீனின் கண்ணீர் போல அது யார் பார்வைக்கும் புலப்படவில்லை. எல்லோர் முன்பும் இதுவரையில் அவள் ஜெனித்தாவாக நின்றிருக்கலாம். ஆனால் அது நிச்சயம் மாயாவின் முன்பு சாத்தியப்படாது. அவள் முன்னிலையில் அப்படி அவளை மறைத்துக் கொள்ளவும் முடியாது.

அத்தகைய நீண்ட நெடிய ஆழமான நட்பு அவர்களுடையது. யாரிடமும் அவள் பகிர்ந்து கொள்ளத் தயங்கும் விஷயங்களைக் கூட அவளிடம் மட்டுமே மனதுவிட்டுப் பேசிப் பகிர்ந்து கொள்ள முடியும்.

அவள் சொல்லாமல் விட்டுப் போன கதைகளைச் சொல்ல வேண்டுமென்ற துடிப்போடு மாயாவைக் காண ஆவலோடு வர, அவள் வீட்டின் முகப்பறையில் காத்திருந்தாள்.

மீண்டும் மூன்று வருடங்கள் கழித்து அந்தத் தோழிகள் இருவரும் எதிரெதிரே நின்று சந்திக்கும் தருணம் அமைந்தது.

மாயாவின் முகத்தில் அத்தனை வெறுப்பு. ஜென்னியின் முகத்தில் அவளை எப்படி எதிர்கொள்வதென்ற தவிப்பு. இந்த உணர்வுகளுக்கிடையில் அவர்களின் நட்பு தொலைந்து போயிருக்க,  புலப்படாத ஒரு  இரும்புத்திரை அவர்களை இணைய விடாமல் நின்றிருப்பதைப் போன்ற ஒரு மாயை.

அப்போது ஜென்னியை  பார்த்த ரூபா, "இவங்கதான் மாயா... உங்களைப் பார்க்கணும்னு ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டிருக்காங்க" என்க, மாயாவின் முகத்திலோ எள்ளும் கொள்ளும் வெடித்தது.

அவள், "ஓ...இவங்கதான் ஜெனித்தா விக்டரா..?" என்று கேட்டவளின் முகத்தில் இழையோடிய புன்னகையில் அத்தனை வெறுப்பு!

ஜென்னி தன் உணர்வுகளைச் சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டு, ரூபாவின் புறம் திரும்பி அவளை சமிஞ்சையால் அங்கிருந்து போகச் சொன்னாள்.

ரூபாவும் அவர்களைத் தனிமையில் விட்டுச் செல்ல ஜென்னி பேச எத்தனிக்கும் முன்னர் மாயா முந்திக் கொண்டு, "என்னை உங்களுக்குத் தெரிஞ்சிருக்காது... நானே என்னை அறிமுகப்படுத்திக்கிறேன்... என் பேர் மாயா... எங்க அப்பாவோட பேர் மாதவன்... அம்மா பேர் யாழ்முகை... எங்க அம்மா அப்பா சின்னதா ஒரு இல்லம் நடத்திட்டிருக்காங்க... அந்த இல்லத்தோட பேர் சாரதா இல்லம்" என்று அவள் சொல்லிக் கொண்டே போக, ஈட்டியாய் ஒவ்வொரு வார்த்தையும் ஜென்னியின் இதயத்தைத் தாக்கியது.

அவள் விழி நீரை ஊற்றெடுக்க, "மாயா ப்ளீஸ் நான் சொல்றதைக் கேளேன்" என்று ஆரம்பித்தவளிடம்,

"ஓ !! அப்படின்னா என்னை உனக்கு ஞாபகம் இருக்கா?... உனக்கு மெமரி லாஸ் அந்த மாதிரி எதுவும் இல்லையா?" என்று கிண்டலாய் கேட்டாள்.

"மாயா நான் சொல்றதைக் கேளேன்"

அவளோ கேட்காமல் கோபம் கொண்டு, "கேட்கணுமா?... நான்தான்டி உன்னைக் கேட்கணும்... ஏன்டி ஹாஸ்பிடல்ல பார்த்தும் பார்க்காத மாதிரி

போனே?" என்று கேட்க,

"அதுக்கு காரணம் இருக்கு"

"என்ன காரணம்? உன் கூட மிஸ்டர். டேவிட்... இருந்தாரு... அதானே காரணம்" என்று கேட்டு மாயா அவளைக் கூர்ந்து பார்க்க,

"இதுக்கும் டேவிடுக்கும் சம்பந்தமில்லை... அவர் எனக்கு ஃப்ரெண்ட்"

"ஆமாம் ஆமாம்... அவருதான் உனக்கு இப்ப ஃப்ரெண்ட்... நாங்கெல்லாம் யாரோ" என்று மாயா சொல்ல ஜென்னி மனம் தளர்ந்தாள். இப்போது அவள் கண்ணெதிரே நிற்பவள் அவள் தோழி அல்ல.

ஜென்னி மௌனமாக நிற்க மாயா அதீத கோபத்தோடு, "நீயெல்லாம் மனுஷியாடி... எப்படி உன்னால இப்படி மாற முடிஞ்சுது... அதுவும் உன்னை உயிருக்கு உயிரா நேசிச்சவரை கூட உன்னால எப்படி மறக்க முடிஞ்சுது... நன்றிகெட்டவளே... அதுவும் நீ கண்ணில்லாம இருந்த போது கூட உன்னைக் காதலிச்சவரு" என்று அவள் உணர்ச்சிவசப்பட்டு மகிழை பற்றி சொல்ல,

ஜென்னி நிறுத்தி நிதானமாக, "நீ யார சொல்ற?" என்று கேட்டாள்.

"என்ன கேட்ட?" என்றபடி மாயா அதிர்ந்து நிற்க,

"இல்ல... அவரு அவருன்னு சொன்னியே அவரு எவருன்னு கேட்டேன்" என்று கேட்டதும் மாயாவின் முகம் கோபத்தால் சிவக்க,

"மகிழை எப்படிடி உன்னால யாருன்னு கேட்க முடியுது... என்ன மாதிரியான பொண்ணுடி நீ" என்று கேட்டு பார்வையிலேயே வெறுப்பை உமிழ்ந்தாள்.

ஜென்னி புன்னகைத்தபடி, "நான் மகிழை யாருன்னெல்லாம் கேட்கல... எனக்கு அவ்வளவு மெமரி லாஸெல்லாம் கிடையாது... நான் கேட்டது மிஸ்டர். மகிழ் உனக்கு யாருன்னு?" என்று கேட்டதும் மாயாவின் முகம் வெளிறி போனது. அவள் பதிலின்றி மௌனமாய் நின்றுவிட,

"ஸ்பீக் அவுட்... ஏன் ஸைலன்ட் ஆயிட்ட?" என்று தன் தோழியை பார்த்து வினவினாள் ஜென்னி.

மாயா சற்றே அமிழ்ந்த குரலில், "அவர் என்னோட கணவர்" என்க, தெரிந்த விஷயம்தான் எனினும் ஜென்னி அந்த வார்த்தையை மாயா சொல்லக் கேட்டு உடைந்துதான் போனாள்.

அவன் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொண்டிருந்தாலும் அவளுக்கு இத்தனை வலித்திருக்காது. ஆனால் இது இன்னும் அவளுக்கு ஜீரணித்துக் கொள்ள முடியாத உண்மைதான்.

ஜென்னி தன் உணர்வுகளை மறைத்தபடி வேறு புறம் முகத்தைத் திருப்பிக் கொள்ள மாயா மேலும், "மகிழ் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதே சந்தர்ப்பம் சூழ்நிலையாலதான்... விரும்பி எல்லாம் நடக்கல... இன்னமும் அவரால் உன் மேல இருந்த காதலை மறக்க முடியல... ஆனா நீ அந்த காதலுக்குக் கொஞ்சமும் தகுதியானவ இல்ல" என்று அவள் மீண்டும் தன் கோபத்தை மீட்டெடுக்க,

"அப்படியா?!" ஜென்னி அலட்சியமாய் திரும்பிக் கேட்டாள்.

மாயா பதிலுரைக்க முடியாமல் நிற்க ஜென்னி அவளிடம், "என் காதலனை நீ புருஷனா ஏத்துக்கிறளவுக்கு உனக்கு பரந்த மனப்பான்மை இருக்கலாம்... ஆனா உன் புருஷனை என் காதலனா ஏத்துக்கிறளவுக்கு எனக்கு பரந்த மனப்பான்மை இல்லை" என்று சொன்னதும் மாயா உக்கிரமாய், "சாக்ஷி" என்று கத்திவிட்டாள்.

"சாக்ஷி இல்ல... ஜெனித்தா" என்று அவள் நிதானமாகச் சொல்ல,

மாயா கடுப்பாகி, "ஆமாம்... நீ ஜென்னித்தாதான்... நான்தான் நீ என் ஃப்ரெண்ட் சாக்ஷின்னு தப்பா புரிஞ்சுக்கிட்டு இங்க வந்துட்டேன்" என்று சொல்லி அவள் அங்கிருந்து வெளியேறப் போக,

"நானும் இத்தனை நேரம் என் ஃப்ரெண்ட் மாயாகிட்ட பேசிட்டிருக்கோம்னு தப்பா புரிஞ்சுக்கிட்டேன்... ஆனா நீ மிஸஸ். மகிழ்" என்று அவள் சொல்வதைக் கேட்ட மாயா மீண்டும் திரும்பி,

"ஆமாம்... நான் மிஸஸ். மகிழ்தான்... எந்த  ஜென்மத்துலயும் அதை யாரலயும் மாத்த முடியாது" என்று உறுதியாய் சொல்லிவிட்டு வெளியேறிவிட்டாள்.

ஜென்னி விழியில்லாத போது அவள் உணர்ந்த தன் தோழியின் நட்பு, இன்று பார்வை வந்த பின் புலப்படாமல் போனது.

Muthu pandi has reacted to this post.
Muthu pandi
Quote

Nice

Quote

emla cream and priligy tablets This might be in the context of discussing the patient s relationships, or with a ubiquity statement, triggered by a relevant medical or physiologic issue, such as menopause, or during a review of systems

You cannot copy content