You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Naan Aval Illai - 39

Quote

39

விருது வழங்கும் விழா

மாலை மங்கும் நேரம் அது. சூரியன் அஸ்தமிக்கும் தருவாயில் வானம் செந்தூரமாய் மாறியிருந்தத் தருணம். வானத்தில் நட்சத்திர பிரவேசங்கள்

நிகழ்வதற்கு முன்னதாக, பூமியின் நட்சத்திரங்கள் அந்தப் பிரமாண்டமான அரங்கத்திற்குள் அணிவகுத்துக் கொண்டிருந்தன.

விலையுயர்ந்த மகிழுந்துகளில் எல்லோரும் வந்திறங்க, வானவில்லின் வண்ணக் குவியல்களாக காட்சியளித்தது அந்த அரங்கமே. அதுவும் அங்கே வந்த சினிமா நட்சத்திரக் கலைஞர்களின் ஆடை ஆபரணங்கள், ஆடம்பரத்தின் உச்சக்கட்டமாகவும் சிலது அபத்தத்தின் உச்சக்கட்டமாகவும் கூட இருந்தது.

அங்கே வண்ணங்கள் பல ஒன்றெனக் கலந்து பின்னிப் பிணைந்திருக்க, அந்த அரங்கம் முழுவதும் கண்ணைப் பறிக்கும் வண்ணம் ஜொலி ஜொலிப்பாய் மின்னிக் கொண்டிருந்தது.

இன்னும் சில மணித்துளிகளில் ஜே சேனலின் விருது வழங்கும் விழா தொடங்கியிருக்க, பிரமாண்டம் என்ற வார்த்தைக்கே அந்த அரங்கம் அர்த்தம் கற்பித்தது.

எங்கும் பல வண்ணவிளக்குகளின் ஒளிச்சாரல்கள். அந்த அரங்கத்தின் அத்தனை திசைகளிலும் தன் பார்வைகளைப் பதித்திருக்கும் பல்வேறு கேமராக்கள். சொல்லிலடங்கா பிரமிப்பின் உச்சக்கட்டமாக அமைக்கப்பட்டிருந்த அந்த அரங்கத்தின் மேடை.

அந்த மேடையின் நாற்புறமும் அமைக்கப்பட்டிருந்த இராட்சத திரை, உள்ளே நுழையும் சினிமா நட்சத்திரங்களின் வருகையை திரையிட்டுக் காட்டிக் கொண்டிருந்த அதே சமயம் அவற்றில் நடுநாயகமாக இருந்த அதிராட்சத திரையில் பல்வேறு நட்சத்திரங்களின் முகங்களை நெருக்கமாய் படமாக்கிக் காட்டின.

எல்லோரின் விழிகளும் அதீத ஆவலோடு அந்த விழாவின் தொடக்கத்திற்காக காத்திருக்க, அவர்கள் எதிர்பார்ப்பிற்கேற்ப அந்த விழாவைத் தன் வசீகர குரலில் ஆரம்பித்து வைத்தான் மகிழ்.

வெஸ்ட் கோட் அணிந்து கொண்டு ஆணழகன் என்ற வார்த்தைக்குச் சற்றும் குறைவில்லாத வண்ணம் மைக்கின் முன் நின்று தன் பேச்சு வல்லமையைக் காண்பிக்க, எல்லோரின் கவனமும்  அவன்புறம் ஈர்க்கப்பட்டது.

 அங்கே வந்த நட்சத்திரப் பட்டாளங்களை வரவேற்று, அந்த விருது வழங்கும் விழாவை அவன் தொடங்கி வைக்க, நம் பாரம்பரியமான நாட்டியத்தில் தொடங்கி பல்வேறு விதமான நடனங்களும் அந்த மேடையின் மீது அரங்கேறி அங்கிருந்தவர்களின் மனதைக் கொள்ளை கொண்டுவிட்டது.

அதோடு நடனமாடிய நாயகிகளின் அற்புதமான அழகு பார்வையாளர்களை கிறங்கடித்துக் கொண்டிருக்க, மகிழ் ரொம்பவும் திறமையாய் அந்த விழாவை தொகுத்து வழங்கி, எல்லோரையும் தன்வசம் கவர்ந்திழுத்துக் கொண்டிருந்தான்.

அவனுடன் ஒன்றிணைந்து பேசிக் கொண்டிருந்த பெண் தொகுப்பாளர் அவன் திறமைக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்க, எல்லாவற்றையும் டேவிட் தனக்கே உரியக் கம்பீரத்தோடு அந்த அரங்கத்தின் பின்னிருந்த அறையில் உள்ள பல்வேறு தொலைக்காட்சிகளினூடே கூர்ந்து கண்காணித்திருந்தான்.

அவன் பொறுப்பேற்ற பிறகு ஜே சேனல் நடத்தும் முதல் பிரமாண்டமான விழா இது என்பதால் சிறு தவறு கூட நிகழந்துவிடாமல் அவனே நேரடியாய் தலையிட்டுக் கவனிக்கலானான்.

மேற்பார்வையிடுவதாக மட்டுமில்லாமல் சிறு தவற்றை கூட தன் கூர்மையான பார்வையால் குறி வைத்து அதைச் சரி செய்ய வைக்கும் அவனின் நேர்த்தி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதே நேரம் அத்தனை பெரிய நட்சத்திரப் பட்டாளத்தில் ராகவ் மட்டும் தனித்து தெரியும் ரகசியத்தை யார் அறிவார்கள்?

பலரின் விழிகளும் அவனைச் சுற்றியே இருந்தன. அதற்கு ஒரு வேளை அவனின் ஆளுமையான பண்போடு ஒருங்கே அமைந்த கம்பீரமான தோற்றமாக இருக்கலாம். ஆனால் இந்த விருது வழங்கும் விழாவில் பலரின் பார்வைக்கு முரண்பாடாய் தென்பட்டது சையத் ராகவை விட்டுத் தனித்து அமர்ந்திருப்பதுதான்.

துரியோதனன் கர்ணனின் நட்புக்கு இணையாய் சினிமா துறையில் பேசப்பட்டவர்களாயிற்றே. இணை பிரியாத அந்த நண்பர்களுக்கு என்னவாயிற்று என்று புரளி பேசாத உதடுகளும் இல்லை. அந்தக் காரணத்தை அறிந்து கொள்ளத் துடிக்காத காதுகளும் இல்லை.

ஆள்ஆளுக்காய் ஒரு கற்பனை செய்து கொண்டு கிசுகிசுத்துக் கொண்டிருக்க, சையத் எது குறித்தும் கவலை கொள்ளாமல் தன் தம்பி தங்கைகளை அழைத்து வந்து அவர்களுக்கு எல்லோரையும் அறிமுகப்படுத்தி மகிழ்ந்து கொண்டிருந்தான்.

மேடையில் அப்போது தி பெஸ்ட் டைரக்டர்களுக்கான நாமினிகள் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருக்க, அந்த விருதுக்குரியவர் சையத் என்று அறிவிக்கப்பட்டது. அஃப்சானாவும் ஆஷிக்கும் கைதட்டிக் குதுகலித்தனர்.

அங்கிருந்த அனைத்து ஒளிக்கீற்றுகளும் ஒன்றிணைந்து சையத்தின் வருகையை படமாக்கி காட்டி கொண்டிருந்தன. கூடவே ராகவின் முகத்தையும் அந்த கேமராக்கள் குறி வைக்கத் தவறவில்லை.

ராகவ் முடிந்த வரை தன் மனநிலையை மறைக்க முயற்ச்சித்துக் கொண்டிருந்தான். சையத் பெருமிதத்தோடு மேடையேறி அந்த விருதை வாங்க, கைதட்டல் ஒலி காதை கிழித்தது.

அதோடு சையத் கரத்தில் மைக் வழங்கப்பட, தனக்கு விருது கிடைக்க காரணமாய் இருந்த நன்றி பட்டியலை வாசித்தவன் முதல் பெயராய் ராகவ் பெயரை உரைத்தான்.

ராகவின் முகத்தில் புதைந்திருக்கும் நுண்ணுணர்வுகளையும் விடாமல் கேமராக்கள் படம்பிடித்து கொண்டிருந்தன. அவனும் முடிந்த வரை புன்முறுவலோடு இருக்கவே முயற்சி செய்தான்.

சையத் பேசி முடித்த பின்னர் மகிழ் உடனடியாக, "உங்க கனவு படத்தோட ஹீரோயின் பெயரை சொல்லாம போறீங்களே?" என்க,

அப்போது ராகவின் முகம் பதட்டமாக மாறியது.

சையத் நிதானித்து, "ஸாரி... இட்ஸ் அ ஸீக்ரட்" என்க,

அப்போது மகிழ் மீண்டும், "அட்லீஸ்ட் அந்த ஹீரோயின் பெயரோட முதலெழுத்தையாவது சொல்லலாமே" என்று கேட்டான்.

"படம் வந்தா நீங்களா தெரிஞ்சுக்கப் போறீங்க" என்று பிடி கொடுக்காமல் பேசிவிட்டு மேடையை விட்டு இறங்கினான்.

எல்லோர் முகத்திலும் பெருத்த ஏமாற்றம். ஆனால் ராகவின் முகத்தில் அந்த நொடி புன்னகை மிளிர்ந்தது. அந்த விருது வழுங்கும் விழா சிறப்பாக எந்த விதத் தங்கு தடையுமின்றி தன் இறுதிக் கட்டத்தை எட்டியது.

'பெஸ்ட் ஆக்டர் ஆஃப் தி இயர்'

தி நாமினிஸ் ஆர்... என்று வரிசையாய் சில கதாநாயகர்களின் முகங்கள் அந்த ராட்சதத் திரையில் ஒளிபரப்பப்பட்டன.

தி வின்னர் இஸ் என்று இழுத்தவர்கள்..... ஒர் பேரமைதிக்குப் பின் அவர்கள் எதிர்பார்த்த பெயரை உச்சரித்தனர். தி ஒன் அன் ஒன்லி அவர் ஸ்டன்னிங் ஸ்டார் ராகவ் என்று அறைகூவல் விடுக்க, அந்த அரங்கமே அதிர்ந்தது. அந்தளவுக்குக் கைதட்டல் ஒளியும் ஆரவாரமும் உண்டாக, ராகவ் எழுந்து நிமிர்வாய் நடந்து வந்து மேடையேறினான்.

அவன் விருதைக் கையில் ஏந்திப் பெருமிதமாய் எல்லோருக்கும் தூக்கிக் காண்பித்தான். அப்போதும் அதே அளவுக்கான ஆரவாரமும் உற்சாக பேரொலிகளும் அந்த அரங்கம் முழுக்க அதிரச் செய்தது.

ராகவ் தன் கரத்தில் மைக்கை பெற்றுக் கொண்ட மறுகணம் அந்த அரங்கத்தில் நிறைந்திருந்த கைதட்டல் ஒலி அடங்கி, அவன் என்ன பேசப்போகிறான் என்று அதீத ஆர்வமாய் உற்றுக் கவனித்தது. அவன் பெரிதாக நன்றியுரையெல்லாம் சொல்லாமல் பொதுப்படையாய் ஒற்றை நன்றியோடு முடித்துவிட்டுப் புறப்பட முயல,

"இருங்க ராகவ்... உங்ககிட்ட நிறைய க்வஸ்டின்ஸ் கேட்க வேண்டியதிருக்கு... அதுக்குள்ள போயிட்டா எப்படி?" என்று மகிழ் கேட்க,

"ஹ்ம்ம் கேளுங்க... ஆனா எதுவும் ஏடாகூடமா கேட்கக் கூடாது" என்று சொல்லிப் புன்னகைத்தான்.

எல்லோரும் அந்த நொடி சிரிப்போடு ஆரவாரிக்க, மகிழ் பளிச்சென்று,

"அந்த ஹீரோயின் பெயரைப் பத்தி... நீங்களாவது ஒரு க்ளூ" என்று மகிழ் கேட்டதும் புன்முறுவலித்தவன், "ஸாரி மகிழ்... அதை மட்டும் கேட்காதீங்க" என்றான்.

அப்போது மகிழ் அருகிலிருந்த பெண் தொகுப்பாளர் முந்திக் கொண்டு,

"அப்படின்னா உங்க மேரேஜ் எப்போன்னு கேட்கலாமா?!" என்று வினவ அவன் சற்றும் தயக்கமின்றி, "வெரி சூன்" என்றான்.

எல்லோரின் முகமும் எதிர்பாராத அவன் பதிலில் ஆச்சர்யமாய் மாற,

மகிழ் புன்னகை ததும்ப, "அப்போ பொண்ணு ரெடின்னு சொல்லுங்க" என்றதும், "எக்ஸேக்ட்லீ" என்றான்.

அருகிலிருந்த பெண் தொகுப்பாளர், "உங்க மேல உயிரையே வைச்சிருக்கிற தமிழ் நாட்டு இளம் பெண்களோட இதயத்தை எல்லாம் இப்படி உடைக்கலாமா... இது நியாயமா... உங்களுக்கே அடுக்குமா..?" என்று ஏக்கமாய் பார்த்தவளைக் கண்டு புன்னகைத்த ராகவ்,

"என்ன பண்றது என் இதயத்தை ஒருத்தி உடைச்சுட்டாளே?" என்றான்.

அங்கே பெரும் சிரிப்பொலி எழ மகிழ் உடனே, "அப்போ லவ் மேரேஜா? ஹூ இஸ் தட் லக்கி கெர்ள்" என்று கேட்க,

"ஹ்ம்ம் லவ் மேரேஜ்தான்... பட் லக்கி அவங்க இல்ல... நான்" என்றதும்,

"ஓஓஓ... "அவன் பதிலைக் கேட்டு அந்த பெண் தொகுப்பாளர் வியப்படைய, அதே அளவுக்கான வியப்பும் அதிர்ச்சியும் அங்கிருந்த பார்வையாளர்களுக்கும் இருந்தது.

அந்த நொடி யார் அந்த பெண் என்ற கேள்விதான் எல்லோர் மனதையும் துளைத்திருந்தது. மகிழ் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு புரிந்தவனாய், "ஹீரோ சாரோட ஹீரோயின் பேரை கேட்க... நாங்க ரொம்ப ஆவலா இருக்கும்" என்றான்.

ராகவ்தன் மைக்கை நிமிர்த்திப் பிடித்து, "அவங்க பேர் ஜெனித்தா விக்டர்" என்றான். எல்லோரின் முகத்திலும் ஈயாடவில்லை. அந்த பெயர் ராகவின் எத்தனை ரசிகைகளின் பொறாமைத் தீயைப் பற்ற வைத்ததோ தெரியாது?

ஆனால் முதலில் அத்தகைய தீ பரவியது மகிழின் மனதில்தான். அவள் எங்கே எப்படி இருந்தாலும் அவள் தன்னை நிராகரித்திருந்தாலும் அவள்

இன்னொருவனுக்குச் சொந்தமாகப் போகிறாள் என்பதை இயல்பாய் ஏற்கும் மனப்பக்குவம் அவனுக்கில்லை.

ஒயாமல் பேசிய உதடுகள் சட்டென்று ஊமையாய் மாறின. அவன் காதில் மாட்டியிருந்த ப்ளூடூத் வழியாக ராகவை இன்னும் சில கேள்விகள் கேட்க சொல்லி கட்டளைகள் வர, அவற்றையெல்லாம் ஏற்கும் நிலையில் அவன் இல்லை. அவன் செய்து கொண்டிருந்த வேலையையும் இடத்தையும் எல்லாவற்றையும் மறந்து உறைந்து போயிருந்தான்.

அவன் பேசாதிருந்த சமயம் அந்தப் பெண் தொகுப்பாளர் முந்திக் கொண்டு, "ஜெனித்தா விக்டர்னா அந்த மும்பை மாடல்... ரைட்" என்று கேட்க,

"எஸ்... ஆனா அவங்க அக்மார்க் தமிழ் பொண்ணு மாதிரி நல்லா தமிழ் பேசுவாங்க..." என்றான்.

"ஓ ரியலி" என்று ஆச்சர்யப்பட்டவள் மேலும், "அடுத்த அவார்ட் பங்க்ஷன்ல உங்க இரண்டு பேரையும் ஜோடியா பார்க்கலாம் இல்லையா?!" என்று கேட்க,

"ஹ்ம்ம்ம்" என்று ஆமோதித்தான்.

"வாவ் வாவ்!... இது கிரேட் நியூஸ் ராகவ் ஸார்... காங்கிராட்ஸ்" என்றாள்.

"தேங்க் யூ... அன்ட் தேங்க் யூ ஆல்" என்று ராகவ் தன் விருதை மீண்டும்  தூக்கிக் காண்பித்துவிட்டு சரசரவென அந்த மேடையை விட்டு இறங்கினான்.

அதே நேரம் அவன் நடந்து சென்ற திசையில் அமர்ந்திருந்த சையத்தைப் பார்த்து அவனை  கட்டியணைத்துக் கைகுலுக்க, அத்தனை நேரம் அவர்களைப் பற்றி பரவிய புரளி எல்லாம் காற்றோடு காணாமல் போனது.

ராகவ் அவள் பெயரை மேடையில் உச்சரித்த கணம் சையத்தின் முகம் இருளடர்ந்து போனது. சொல்லப்படாத காதலே சுமை. அது சொல்லப்படாமலே முடிந்துவிடும் எனில் அதுதான் வாழ்நாள் முழுக்கவுமான பெரிய சுமை.

அதுவும் ராகவ் ஜெனித்தாவின் மீது கொண்ட வக்கிரத்தைப் பற்றி அவன் நன்கறிவான். அவன் பேசிய வார்த்தைகளினால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்தே அவன் இன்னும் மீளாமல் இருக்க, இப்போது அவன் மேடையேறி ஜெனித்தாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக சொன்ன அறிவிப்பில் மனமுடைந்து போனான்.

இரண்டு வாரங்கள் முன்பு நடந்த அந்தக் காட்சி இன்னும் அவன் கண்முன்னே நிழலாடிக் கொண்டிருந்தது. அதன் பின்னர் ராகவின் தொடர்பே வேண்டாமென அவன் உறவையே முறித்துக் கொள்ளும் விதமாய் அவன் வீட்டை அவனுக்கேத் திருப்பி தந்துவிட்டு அடுத்த நாளே வேறு குடியிருப்புக்கு மாறியிருந்தான்.

ஜெனித்தாவை தொடர்பு கொண்டு இது குறித்து தெரிவிக்கலாம் என எண்ணிய போது, அவள் மும்பையில் இருப்பதாகச் சொல்ல அவன் அவளை நேரில் சந்தித்து பேசிக் கொள்ளலாம் என அந்த விஷயத்தைக் கிடப்பில் போட்டான்.

அதற்குப் பிறகாய் அவளைச் சந்திக்கும் வாய்ப்பு அவனுக்குக் கிட்டவேயில்லை.

இந்த நிலையில்ஜென்னித்தா ராகவை எப்படி திருமணம் செய்து கொள்ள சம்மதித்தாள் என்று சையத் ஆழமாய் யோசித்திருக்கும் போதே, மேடையிலிருந்து இறங்கிய ராகவ் தன்னை நோக்கி வந்துகொண்டிருப்பதைப் சையத் பார்த்தான். ராகவின் உதட்டில் இழையோடிய புன்னகையில் வன்மமும் வக்கிரமும் சரிவிகிதமாய் கலந்திருந்தது. அது சையத்தின் பார்வையைத் தவிர வேறு யார் பார்வைக்கும் புலப்படவில்லை.

ராகவ் நேராக வந்து சையத்தை கட்டியணைத்தபடி சையத் காதோரம்,

"என்ன ஷாக்கடிச்ச மாதிரி இருக்கா?" என்று கேட்க அவன் பதில் சொல்லவில்லை.

ராகவ் நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தவன் புன்னகையோடு, "ஜெனித்தா இஸ் மைன்... டோன்ட் எவர்... திங்க் அபௌட் ஹெர் எனி மோர்... அப்புறம் உன் கனவு படத்துக்கு நல்ல ஹீரோயினா தேடு... பழகின தோஷத்துக்காக நானே அந்த படத்தைப் பிரொடியூஸ் பண்றேன்"  என்று கிசுகிசுத்த குரலில் உரைத்தவன் அவன் கரத்தைக் குலுக்கி, "ஆல் தி பெஸ்ட்" என்க, சையத் பேச்சற்று நின்றான்.

அடிப்பட்ட பாம்பு கடிக்காமல் விடுமா என்ன? அன்று அவன் கழுத்தைப் பிடித்து சொன்ன வார்த்தைக்குப் பழிவாங்கும் விதமாய் அவனைக் கட்டிப்பிடித்து தன் வார்த்தையால் கொன்று புதைத்து தன் பழியுணர்வைத் தீர்த்துக் கொண்டான்.

அங்கே இருந்த கேமராக்கள் எல்லாம் அவன் நேராக வந்து சையத்தை அணைத்துக் கொண்டுவிட்டு கைகுலுக்கியதை மட்டுமே படம்பிடிக்க முடிந்ததே தவிர,

அவர்களுக்கிடையில் நிகழ்ந்த ரகசிய சம்பாஷணைகளையும் அவர்களின் மன உணர்வுகளையும் காட்டுமளவிற்கான தொழில்நுட்பம் அதில் இல்லை. அது எந்த அறிவியல் கருவிகளுக்கும் சாத்தியமுமில்லை.

ஏனெனில் மனித உணர்வுகள் அத்தனை விந்தையானது அதுவும் காதலென்ற நுண்ணிய உணர்வோ அவற்றில் ரொம்பவும் விசித்திரமானது !

அது யாருக்கு எங்கிருந்து தோன்றி எப்படி வளரும் என்பதெல்லாம் விந்தையிலும் விந்தை. அத்தகைய காதல் உணர்வு வந்துவிட்டால் அது நம்முடைய எல்லா உணர்வுகளையும் ஆட்டிப்படைக்க ஆரம்பித்துவிடும் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மையும் கூட.

அதற்கு டேவிட் மட்டும் விதிவிலக்கா என்ன? ராகவின் அந்த அறிவிப்பு மகிழையும் சையத்தையும் ஒவ்வொரு விதத்தில் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்க, டேவிடிற்கோ அது  பேரதிர்ச்சியாய் இருந்தது.

ராகவ் பேசி முடித்த மறுகணமே டேவிட் அவன் வேலைகள் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் அரங்கத்தை விட்டே வெளியேறினான்.

ஆயிரமாயிரம் கேள்விகள் அவன் மனதைத் துளைக்க, அவன் நிதானம் தவறி நிலைதடுமாறுவதை மற்றவர்கள் முன்னிலையில் அவன் காட்டிக் கொள்ள விருப்பப்படவில்லை.

ஜெனித்தாவிற்கு தெரியாமல் ராகவ் இப்படியொரு பொய்யான அறிவிப்பைச் செய்ய முடியுமா? என்ற யூகமே அவனை வேதனைப்படுத்த, அப்படி ராகவ் சொன்னது உண்மையெனில் ஜென்னி ஏன் தன்னிடம் இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்று மற்றொரு கேள்வி எழுந்தது.

ஜென்னியை சந்தித்தே இரண்டு வாரத்திற்கு மேலிருக்கும். அவள் மும்பைக்குச் சென்றிருக்க, கைப்பேசியில் கூட அவளைத் தொடர்பு கொள்ள முடியாதளவுக்கான வேலை. அப்படியே பேசினாலும் சிற்சில வார்த்தைகள் மட்டுமே பேசமுடிந்தது.

அந்தளவுக்கு விருது வழங்கும் விழாவின் ஏற்பாடுளை கவனிப்பதில் மும்முரமாய் இருந்தான். அப்படியே தான் வேலையில் மூழ்கி இருந்தாலும் ஜென்னி எப்படி இத்தனை முக்கியமான விஷயத்தை மறைப்பாள்  என்றெண்ணியவன் தன் சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ள அவளின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தான்.

அவளோ அவன் அழைப்பை ஏற்கவில்லை. அது அவனை அதிர்ச்சிக்குள்ளாக்க அப்போது க்ளங் என்ற சத்தத்தோடு ஒரு குறுஞ்செய்தி அவன் பேசிக்கு வந்தடைந்தது .

'சாரி டேவிட்... லெட்ஸ் மீட் அன்ட் ஸ்பீக்' ஜென்னி. அவளின் இந்தக் குறுஞ்செய்தி அவனுக்குள் பலவிதமான சிந்தனைகளையும் சந்தேகங்களையும் விதைத்தது. அதே நேரம் ராகவின் அறிவிப்பு பொய்யில்லை என்பதையும் அவனுக்கு அழுத்தமாய் புரியவைத்தது.

Muthu pandi has reacted to this post.
Muthu pandi
Quote

Nice

You cannot copy content