You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Naan Aval Illai - 40

Quote

40

நட்பும் காதலும்

          மகிழின் முகமெல்லாம் சிவப்பேறி இருந்தது. ஆனால் அவன் அழுதிருக்கவில்லை. தன் மனவலியைப் பிறரின் பார்வைக்கு காட்டிக் கொள்ளாமல் தன் கண்ணீரை உள்வாங்கியிருந்தான். முக்கியமாக மாயாவுக்கு. ஆனால் அவன் முகமே அவன் மனநிலையைக் காட்டி கொடுத்துவிட்டது.

விழா முடிந்து வந்ததிலிருந்து அவனின் களையிழந்த முகத்தைப் பார்த்து என்ன ஏதென்று பலமுறை கேட்டு சலித்துவிட்டாள் மாயா.  அவனும் பதில் சொல்லாமல் தப்பிக் கொண்டுவிட்டான்.

 ஆனால் அந்த உணர்வுகள் விடாமல் அவனைத் துரத்தி கொண்டே இருந்தது. காலையில் எழுந்து செய்தித் தாளைப் புரட்டியபடி "மாயா... காபி" என்றவன் அதில் மும்முரமாய் மூழ்க, கடைசி பக்கத்தில் ஜெனித்தாவோடு ராகவும் இணைந்து நிற்கும் புகைப்படம் போட்டு, ராகவ் விழாவில் அறிவித்த விஷயத்தைப் பற்றிய செய்தி எழுதியிருந்தது.

சட்டென்று ஒரு துளி கண்ணீர் அவன் விழியின் எல்லையைத் தொட்டு நின்றது. அவள் மீது கொண்ட காதலை அவன் மனதிலிருந்து வலிக்க வலிக்க பெயர்த்தெறிந்துவிட்டான். ஆனாலும் அந்தக் காயம் இன்னும் வலிக்கிறதே!

மீண்டும் காயம்பட்ட இடத்தில் கூரிய வாளால் குத்தி கிழித்த உணர்வு, ராகவ் அத்தனை பெரிய மேடையில் ஜெனித்தா விக்டரை மணம் செய்விக்கப் போவதாக அறிவித்ததும்.

ஏனோ அவனால் இன்னும் ஏற்கமுடியவில்லை.  அவள் பெயர் எதுவாக இருந்தால் என்ன? அது அவனுடைய சாக்ஷிதானே!  ஆம், அவள் தனக்கானவள் என்ற எண்ணம் மட்டும் நீங்காமல் அவனோடு தங்கிவிட்டது. அவளோடு வாழ வேண்டுமென்றும் அவன் கட்டி வைத்த  மனக்கோட்டையெல்லாம் ஏற்கனவே சரிந்து வீழ்ந்ததுதான்.

இருப்பினும் அவள் எங்கிருந்தாலும் தனக்கானவள் என்ற உரிமையை விட்டுத்தர முடியாமல் தவித்தது அவன் மனம். அது தவறுதான். ஆனால் காதல் என்பது சரி தவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட உணர்வாயிற்றே!

அவன் விழிகள் பார்த்துக் கொண்டிருந்தது என்னவோ ஜெனித்தா ராகவின் புகைப்படம்தான். ஆனால் அவன் மனம் தன் வழித்தடம் மறந்து அதன் போக்கில் ஓடிக் கொண்டிருந்தது.

அப்போது காபியை அவனிடம் தர வந்தவள் அவன் பார்வை செய்தித்தாளில் நிலைகுத்தி நின்றிருப்பதைக் கவனித்து  ஆர்வமாய் அதென்ன செய்தி என்று பார்வையிட்டாள். அதிலிருந்த புகைப்படத்தைப் பார்த்த நொடி அதிர்ந்தவள் அந்தச் செய்தியின் தலைப்பைப் படித்து அதிர்ந்து நின்றாள்.

அவனோ அவள் வந்து நின்றதையோ அவன் கையில் ஏந்தியிருந்த செய்தித்தாளில் உள்ள செய்தியை படித்ததையோ கூட அவன் கவனிக்கவில்லை. அந்தளவுக்காய் அவன் சிந்தனை ஓட்டம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. அவள் காபியை மேஜை மீது கொஞ்சம் அழுத்தமாய் வைத்து, "காபி" என்க, அவன் அவசரமாய் அந்தச் செய்தித்தாளை மடித்துவிட்டு,

மாயாவை நிமிர்ந்து தன் உணர்வுகளைக் காட்டிவிடாமல், "ஹ்ம்ம்ம்" என்றான். அவன் விழியோரம் நீர் கசிந்திருந்தது.

 

அந்தக் காட்சியை பார்த்தவளுக்கோ சொல்லவொண்ணாத வேதனையும் வலியும் ஆட்கொண்டது. கணவனின் காதல் தனக்கு மட்டுமே உரித்தானதாக இருக்க வேண்டும் என்ற ஒரு சாதாரண பெண்ணின் எதிர்பார்ப்புதான் அவளுக்கும்.

அந்த எதிர்பார்ப்பு அவள் விஷயத்தில் பொருந்தாது என்றறிந்தும் எதிர்பார்த்து ஏமாற்றமடையும் அவள் மனதை என்ன சொல்ல? அந்த நொடி அவன் மீது கோபம் எழச் சமையலறையில் உள்ள பாத்திரங்களை எல்லாம் தாறுமாறாய் உருட்டிக் கொண்டிருந்தாள்.

அந்தச் சத்தம் மகிழின் கவனத்தை ஈர்க்க, அவளின் செய்கையிலிருக்கும் கோபத்தை அவன் கணித்துக் கொண்டான். அந்த சத்தம் கேட்டு வள்ளியம்மை சமையலறை புறம் போக அவனும் எழுந்து பின்னோடு வந்தான்.

"ஏன் இவ்வளவு சத்தம்... என்னாச்சு? " என்று பதட்டமாய் அவர் கேட்க,

மாயா உடனே, "இல்ல அத்தை... கைத்தவறி விழுந்திருச்சு" என்று சமாளித்தாள்.

அவள் சொல்வது நம்பும்படியாக இல்லையெனினும் அதனைப் பெரிதுபடுத்தாமல், "பார்த்து பொறுமையா செய்மா... மாமா இன்னும் தூங்கிட்டிருக்கிறார் இல்ல" என்றாள்.

"இல்ல அத்தை... நான் பத்திரமா பார்த்துதான் வைச்சேன்... இருந்தும் அது கைத்தவறிக்கிட்டே இருக்கு" என்று உள்ளர்த்தத்தோடு அங்கே நின்றிருந்த மகிழை ஓரப்பார்வையால் பார்த்தபடி உரைத்தவள் தன் மாமியார் புறம் திரும்பி,

"இனிமே சத்தம் வராம பார்த்துக்கிறேன்" என்றாள்.

வள்ளியம்மை அவர்கள் இருவரையும் ஓர் ஆழமான பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து அகன்றுவிட, மகிழும் மௌனமாக எதுவும் பேசாமல் சென்றுவிட்டான்.

அவன் எப்போதும் போல் அலுவலகத்திற்குப் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தவன், அந்த அறை முழுக்கவும் எதையோ ஆராய்ந்தபடி, "மாயா" என்று கத்தலாய் அழைத்தான்.

அவளும் அவன் குரல் கேட்டு, "என்ன?" என்று வேண்டா வெறுப்பாய் வந்து நின்றாள். அவன் தன் தேடலை நிறுத்தாமல், "என் கூலர்ஸ் எங்க?  இங்கதானே டேபிள் மேல வைச்சேன்" என்று கேட்டான்

"நீங்க தொலைச்சிட்டு என்னைக் கேட்டா? எனக்கென்ன தெரியுமா?... நீங்க தொலைச்சதை நீங்களே தேடிக்கோங்க... எனக்கு நிறைய வேலை இருக்கு... நானும் வெளியே கிளம்பணும்" என்று கடுகடுப்பாய் அவள் பொறிந்து தள்ள,

குழுப்பமாய் பார்த்தவன், "இப்ப என்ன கேட்டுட்டேன்னு இவ்வளவு எல்லாம் பேசுற" என்று கேட்டு அவளைக் கூர்ந்து பார்த்தான்.

அவள் அடங்காத கோபத்தோடு, "பின்ன... என் வேலை எனக்கு... இவர் தொலைப்பாராம்... அப்புறம் நம்மகிட்ட வந்து கேட்பாராம்... நான் என்னவோ இவர் கூலர்ஸை தூக்கி இடுப்பில சொருகி வைச்சிருக்க மாதிரி" என்று தானே புலம்பிக் கொண்டவள் வெளியேற எத்தனிக்க,

அவன் வேகமாய் சென்று கதவை அடைத்தான். அவளைக் குரூரமாய் பார்த்தவன், 'ஓரு வார்த்தை கேட்டதுக்கு ஓவரா பேசுற... இருக்குடி உனக்கு' என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டு நின்றான்.

அவள் அவன் பார்வையின் அர்த்தம் புரியாமல், "இப்ப என்ன வேணும் உங்களுக்கு?" என்று அவனைச் சந்தேகமாய் பார்க்க, "என் கூலர்ஸ்தான்" என்றான்.

அவள் சலிப்போடும் கோபத்தோடும், "அதான் என்கிட்ட இல்லைன்னு சொல்லிட்டேன் இல்ல" என்றாள்.

"சொல்லிட்டா நான் நம்பிடுவேனா?!" கைகட்டி கதவின் மீது சாய்ந்தபடி அவன் கேட்க,

"நம்பலன்னா போங்க" என்றவள் செல்லப் பார்க்க, அவள் கரத்தை இறுக்கமாய் பற்றித் தடுத்தவன் "நான் தேடி பார்க்கணும்" என்றான்.

"தேடிப் பாருங்க... அதுக்கு ஏன் என் கையை பிடிச்சிருக்கீங்க?" புரியாமல் கேட்டவளை ஆழமாய் அளவெடுத்தவன்,

"உன்னைதான்டி தேடி பார்க்கணும்... நீதான் ஒளிச்சு வைச்சிருப்பியோன்னு" என்று சொல்லும் போதே அவன் எண்ணம் புரிந்து பின்னோடு நகர்ந்தவள்,

"வேண்டாம் மகிழ்" என்று பயந்த தொனியில் உரைத்தவளின் வார்த்தைகளைத் துளியளவும் பொருட்படுத்தாமல்,

அவனின் வன்மையான கரம் அவளின் மென்மையான தேகத்தில் தன் தேடலை ஆரம்பிக்க,

  "மகிழ் இது ரொம்ப மோசம்" என்று நாணியவள் அவனிடம் இருந்து தப்பிக் கொள்ள தன் உடலைக் குறுகி தரையில் சரிந்தாள்.

அவன் விடாமல் அவளை அப்படியே தூக்கி படுக்கையில் போட்டவன்,

"எனக்கு என் கூலர்ஸ் இப்ப வேணும்... அது கிடைக்கிற வரைக்கும் உன்னை விடமாட்டேன்" என்றவன் அவள்  தடுப்பதையும் மீறி அவளின் மேலங்க உடைகளை களையப் பார்க்க,

அவள் பதறித் துடித்தவள், "உங்க கூலர்ஸை... அந்த டிரஸ்ஸிங் டேபிள் டிராலதான் பார்த்தேன்" என்றாள். அவளை விழிகள் இடுங்கப் பார்த்துவிட்டு அவள் சொன்ன இடத்தில் சென்று தேடிப் பார்த்தான்.

அங்கே அவனுடைய  கூலர்ஸ் கிடைக்க, அதனைக் கையில்  எடுத்துக் கொண்டு மாயாவை நெருங்கினான். அவளோ கோபமாய் மூச்சு வாங்கியபடி படுக்கையில் அமர்ந்திருக்க,  "இதைதானே முதல்லயே கேட்டேன்... அப்பவே சொல்லிருந்தா இப்படி எல்லாம் நடந்திருக்காது இல்ல" என்று எகத்தாளமாய் கேட்டு அவளைப் பார்த்து சிரிக்க,

"உங்களை" என்றவள் எழுந்து வந்து அவனை அடிக்கவும் அவள் கரத்தை கெட்டியாய் பிடித்துக் கொண்டவன் ,

"ஹேய் வலிக்குதுடி" என்று தடுத்தான்.

"எனக்கும்தான் வலிச்சுது... நீங்க சாக்ஷி போட்டோவை அப்படியே வைச்ச கண்ணு வாங்காம பார்க்கும் போது" என்று அவள் மனவேதனையை அந்த நொடி கட்டுக்குள் வைக்க முடியாமல் கொட்டித் தீர்த்தாள்.

"நான் சாக்ஷி போட்டோவைப் பார்த்தேனா?" என்று யோசித்தவன் அந்த செய்தித் தாளில் இருந்து செய்தியை அந்த நொடி நினைவுக்கூர்நது தடுமாறியவன், "அதில்ல மாயா..." என்று ஆரம்பிக்க,

அவளோ பொறுமையிழந்து அவன் சட்டைக் காலரை கோபமாய் பிடித்துக் கொண்டவள், "என்ன அதில்ல இதில்லன்னு...? சாக்ஷி அந்த ஆக்டர் ராகவை கல்யாணம் பண்ணா உங்களுக்கெங்க வலிக்குது? அவதான் உங்க வாழ்க்கையில் இல்லைன்னு ஆயிடுச்சு இல்ல" என்க,

அவன் மௌனமாய் பதிலின்றி நின்றான்.

அவள் கோபம் தலைக்கேற, "ஏன் பதில் சொல்ல மாட்டேங்குறீங்க... அப்படின்னா உங்களுக்கு வலிக்குது" என்று அவள் கேட்கவும்,

"ஹ்ம்ம்... என்னால அதை ஏத்துக்க முடியல...  கஷ்டமா இருக்கு" என்று வெளிப்படையாய் தன் உணர்வை சொல்லிவிட்டான்.

அவனை  விழி இடுங்கப் பார்த்தவள், "இருக்கும்... ஏன் இருக்காது? உங்களை விட ஸ்மார்ட்டா ஹான்ட்ஸம்மா ஒருத்தனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கப் போறா இல்ல... அதான் உங்களுக்கு பத்திக்கிட்டு எரியுது" என்றவளை கோபமாய் முறைத்தவன்,

"அந்த ராகவ்தான் ரொம்ப ஸ்மார்ட் அன்ட் ஹேன்ஸம்ன்னு சொல்ல வர்றியா?!" என்று வினவினான்.

"அதுல என்ன டௌட்... இன்னைக்கு இருக்கிற ஹீரோஸ்லயே அவர்தான் ஸ்மார்ட்" என்று புருவத்தை ஏற்றியவளைக் கூர்ந்து பார்த்தவனின் முகமெல்லாம் சிறுத்துப் போனது.

அவன் முகமாற்றங்களை கவனித்தவள், "ஆமாம்... அவரை ஸ்மார்ட்னு சொன்னா உங்களுக்கு ஏன் எரியுது? அப்போ நான் சொன்ன மாதிரிதான்" என்றவளை எரிச்சலாய் பார்த்தவன்,

"நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒரு மண்ணும் கிடையாது... என் மனசு கஷ்டத்துக்குக் காரணம் என்னன்னு நான் சொல்லித்தான் உனக்கு தெரியணுமா?... ஏன்?......   சாக்ஷி என் வாழ்க்கையில இருந்ததும்... நான் அவளை எப்படி காதலிச்சேங்கிறதும் உனக்குத் தெரியாது.... இன்னும் கேட்டா மூணு வருஷமா நான் அவளை என் மனைவி ஸ்தானத்துல வைச்சிருந்தேன்... அப்படி இருக்கும் போது" என்று கண்ணீரோடு தடுமாறி நின்றவன், சற்று மனதைத் தேற்றிக் கொண்டு மேலே தொடர்ந்தான்.

"சட்டுன்னு எல்லாத்தையும் மறந்து ஒரேடியா என்னால அவளைத் தூக்கிப்போட முடியாது... அதுக்கெல்லாம் கொஞ்சம் டைமாகும்" என்றவனை ஏற இறங்கப் பார்த்தவள் சலிப்பான முகப்பாவனையோடு,

"எனக்கு தேவை... இதுவும் தேவை இன்னமும் தேவை... என்னை மாதிரி மானங்கெட்ட ரோஷங்கெட்ட வெட்கங்கெட்ட பொண்டாட்டி இந்த ஊர் உலகத்தில  நான் மட்டும்தான்" என்று அவள் படபடவென பொறிந்து தள்ள,

அவள் வார்த்தையைக் கேட்டவன் தவிப்போடு, "இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி எல்லாம் பேசுற?" என்றான்.

"அதுவே உங்களுக்கு விளங்கலயா? என் நிலைமையை உங்களுக்கு எப்படி சொன்னாலும் புரியாது... என்னை விட்றுங்க சாமி... நான் போறேன்" என்று முடிவாய் பேசிவிட்டு அவள் வெளியேறப் பார்க்க,

"மாயா" என்றழைத்தான்.

"போய்யா" என்று சொல்லிவிட்டு கதவைத் திறந்து கொண்டு வெளியேறியவளை, "மாயா ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கேளேன்" என்று அவளை அழைத்தபடி பின்தொடர்ந்தான்.

அவள் அவனைக் கவனிக்காதது போல் சென்று சமையலறைக்குள் புகுந்து கொண்டாள். அந்த நேரம் ஞானசேகரன் சோபாவில் அமர்ந்தபடி, "மகிழ்" என்றழைக்க, அவர் குரலை கேட்டு படபடத்தவன்,

"அப்பா" என்று அவர் முன்வந்து அடக்கமாய் நின்றான்.

"என்னடா ஏதாச்சும் பிரச்சனையா?" என்று கேட்ட மறுகணமே,

"சேச்சே அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லப்பா... என் கூலர்ஸை காணும்னு அவளைக் கேட்டுட்டிருந்தேன்" என்று சமாளித்து அவர்கள் பிரச்சனையைக் காட்டிக் கொள்ளாமல் மறைத்தான்.

"வேறெதுவும் இல்லையே?!" என்று அவர் மீண்டும் சந்தேகித்து கேட்டார்.

"உம்ஹும்" என்று அவன் வேகமாய் இடமும் புறமுமாய் தலையசைத்து மறுத்தான்.

சற்று யோசனையில் ஆழ்ந்தவர் மீண்டும், "இல்லடா...  இத்தனை நாளா நீங்க மாயா வீட்டுலதான் இருந்தீங்க... இப்போ இங்கயே இருக்கீங்க... அது ஏதாச்சும்" என்று அவர் தயக்கத்தோடு கேட்க,

"அதேல்லாம் எந்த பிரச்சனையும் இல்லை மாமா" என்றபடி மாயா  காபியை எடுத்து வந்து அவர் கரத்தில் கொடுத்தாள்.

"அது சரிதான்... ஆனா நீங்க திடீர்னு இங்க வந்துட்டீங்க... உங்க அம்மா அப்பா மனசுக்கு கஷ்டமா இருக்கும் ல" என்றுரைத்துவிட்டு அவர் காபியை வாங்கி பருக,

மகிழ் அவரிடம், "அதெல்லாம் ஆன்ட்டி அங்கிள்கிட்ட நான் பேசிட்டேன் ப்பா.. நீங்க ஒண்ணும் மனசு சங்கடப்பட வேண்டாம்... நீங்க உங்க உடம்பை பார்த்துக்கோங்க போதும்" என்றான்.

"ஆமாம் மாமா... நீங்க அந்த கவலையெல்லாம் விடுங்க... உங்க உடம்பை மட்டும் பார்த்துக்கோங்க" என்று அவளும் சேர்ந்து கொண்டு கணவனின் வார்த்தையை ஆமோதித்தாள்.

அவர் மூச்சை இழுத்துவிட்டபடி, "என் உடம்பைப் பார்த்துக்கிறது இருக்கட்டும்... உங்க அம்மாவைப் பாரு... சதாசர்வகாலமும் அந்த தருதலையை பத்தியே நினைச்சு அழுதுட்டிருக்கா?!"என்றார்.

அத்தனை நேரம் தள்ளிநின்று அவர்கள் சம்பாஷணையை கேட்டுக் கொண்டிருந்த வள்ளயம்மை அதிர்ந்து, "அப்படி எல்லாம் இல்லங்க" என்று மறுக்க,

அவரே மேலும், "நீ இராத்திரி எல்லாம்  அவனைப் பத்தி நினைச்சு அழுதிட்டிருக்கிறது எல்லாம் எனக்கு தெரியாதாக்கும்" என்றவர் சொல்ல மகிழ் அந்த நேரம் தன் தாயை நோக்கினான்.

அவர் முகமெல்லாம் வாட்டமுற்றிருந்தது. அப்போது ஞானசேகரன் மகனிடம், "அவன் எங்க என்னன்னு விசாரி... அவன் எங்க இருக்கான் என்னன்னு தெரிஞ்சா அவ மனசுக்குக் கொஞ்சம் ஆறுதலாய் இருக்கும் பாரு" என்க,

மகிழ் தன் தந்தையிடம், "நான் ஆல்ரெடி என் ஆபிஸ் ரிப்போர்ட்டர்ஸ் மூலமா விசாரிச்சிட்டுதான் இருக்கேன்...  சரியான க்ளூ எதுவும் கிடைக்கல... அண்ணனோட ஃபோன் ஸ்விட்ச்ட் ஆஃப்லதான் இருக்கு... ஆனா அண்ணன் ரீஸ்ன்ட்டா அவன் பேங்க் அகௌன்ட்ல இருந்து பணம் எடுத்திருக்காருன்னு மட்டும் தெரிஞ்சுது" என்றான்.

ஞானசேகரன் மனைவியைப் பார்த்து கொஞ்சம் கோபமாக,

"கேட்டுக்கோ... உன் சீமந்த புத்திரன் எல்லாம் எங்கயோ நல்லபடியாதான் இருக்கான்?!" என்று அவர் சீற்றமாக சொல்ல உண்மையிலேயே வள்ளியம்மைக்கு அந்த செய்தி மனநிம்மதியை தந்தது.

மாயா அவர்கள் உரையாடல்களுக்கு இடையில், "சரி பேசிட்டு டிபன் சாப்பிட வாங்க" என்று கணவனைப் பார்த்தும் பார்க்காமல் அழைப்பு விடுத்தாள். அவனும் பேசி முடித்த பின் காலை உணவு உண்ண அமர்ந்தவன் தன் மனைவியின் ஒற்றை கடைக் கண் பார்வைக்காக ஏதேதோ செய்து பார்த்தான்.

ஆனால் அவளோ ஏன் பார்ப்பேன் என்பது போல் பிடிவாதமாய் இருந்தாள். அவன் வாசலில் வழியனுப்ப வந்த போதும் அவள் வேண்டா வெறுப்பாய் நிற்க, "மாயா ப்ளீஸ்" என்று கெஞ்சலாய் பார்த்தான்.

"ஹ்ம்ம் கிளம்புங்க" என்று அவள் பார்வையை எங்கோ வெறித்தாள்.

அவள் விழியில் நீர் தேங்கியிருந்தது. அவள் மனதைப் புரிந்து அவள் கரத்தைப் பற்றிக் கொண்டவன்,

"புரிஞ்சுக்கோ மாயா... சாக்ஷி இனிமே என் வாழ்க்கையில இல்லைங்கிறது இனிமே யார் நினைச்சாலும் மாற்ற முடியாத உண்மை" என்று   சொல்லியவனை அவள் அந்த சமயம் திரும்பி நோக்க அவன் விழியும் கலங்கியிருந்தது.

அவன் மேலும், "அதே அளவுக்கு இன்னொரு உண்மை இருக்கு" என்க, அவனை அவள் மௌனமாய் ஏறிட்டாள்.

அவள் இருகரத்தையும் தன் கரங்களுக்குள் கோர்த்தவன், "அது.... நீதான் என் வாழ்க்கையோட எல்லாங்கிறது... நீயில்லாம நானில்லை... இதுக்கு மேல நான் என்ன சொல்ல?" என்று உணர்வுப்பூர்வமாய் அவன் உரைக்க அவள் நெகிழ்ந்து போனாள். அவள் விழியில் தாரை தாரையாய் கண்ணீர் பெருகி ஓடியது.

 "சரி நான் கிளம்பட்டுமா? ... லேட்டாகுது" என்றான் அவள் கரத்தை விடாமலே!

"ஹ்ம்ம்" என்று தலையசைத்தாள் அவளும் வழியனுப்ப மனமில்லாமலே!

சில நொடி மௌனங்களுக்குப் பிறகு, "டைமாச்சுங்க" என்று மாயா சொல்லவும் அவள் கரத்தை விட்டு ஏக்கப்பெருமூச்சை வெளிவிட்டவன்,

புறப்பட எத்தனித்தவன் மீண்டும் அவள் புறம் திரும்பி, "நான் கொஞ்ச நாளா ஒரு விஷயத்தை மிஸ் பண்றேன்... அதை நீ தர முடியுமா?" என்று கேட்க,

"என்னது மகிழ்?" என்றவள் அவனை ஆவல் பொங்க பார்த்தாள்.

"என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் மாயாவை... அவளை நான் ரொம்ப மிஸ் பண்றேன்... என் ஃபீலிங்க்ஸ் என் கஷ்டம் நஷ்டம் எல்லாத்தையும் அவகிட்டதான் வெளிப்படையா கொட்டுவேன்" என்றவன்,

"எனக்காக அவளைக் கொஞ்சம் தேடி கொடு" என்று மனவருத்தத்தோடு சொல்லிவிட்டு தன் காரில் ஏறி அகன்றுவிட்டான்.

அவன் அவ்விதம் சொல்லிவிட்டுப் போக அவள் மனம் குற்றவுணர்வில் ஆழ்ந்தது. அவனின் உயர்வான காதலைப் பற்றி அறிந்திருந்தும் அவன் வேதனைகளுக்கு ஆறுதலாய் தோள் கொடுக்காமல் தானும் சேர்ந்து அவனைக் காயப்படுத்துகிறோம் என்று எண்ணிக் கொண்டு அந்த நொடி வருத்தமுற்றாள். மாயா மட்டுமே அல்ல.

யாருமே காதலையும் நட்பையும் சரிவிகிதத்தில் காட்டுவது சிரமம்தான்.

இரு உறவும் ஒரே கூட்டில் இருக்குமாயின்  இரண்டில் எதாவது ஒன்று மட்டுமே இறுதியாய் சஞ்சரிக்கும். அது பல நேரங்களில் காதலாக மட்டுமே இருக்கும். ஆனால் டேவிட் சற்று முரண்பட்டு தன் காதலுக்குப் பதிலாய் தன் நட்பைக் காத்து கொள்ள எண்ணிக் கொண்டிருந்தான்.

அதற்குக் காரணம் ஜென்னி சென்னை வருவதாகவும் ரூபா தன்னோடு வராததால் தான் அவனோடு தங்கப் போவதாக  தகவல் அனுப்ப, அவனுக்கு அந்தச் செய்தி பலவிதமான குழப்பங்களுக்கிடையிலும் அதீத ஆனந்தமாய் இருந்தது.

அவளைப் பார்க்க நேராக விமான நிலையத்திற்கே போயிருந்தான். அவளிடம் பேசவும் கேட்கவும் நிறைய இருந்தாலும் அவளை இத்தனை நாள் பார்க்காமல் இருந்ததிலேயே அவன் பரிதவித்துப் போயிருந்தான்.

அவள் இல்லாத நாட்களே அவனுக்கு அத்தனை கொடுமையாக இருக்க, அவள் இல்லாத வாழ்க்கை அத்தனை வெறுமை!

ஜென்னி விமான நிலையத்தில் வெளியேறும் வாயிலின் வழியே காத்திருந்த டேவிடை புன்னகை அரும்பப் பார்த்தவள், அவனை நெருங்க எண்ணும் போது பத்திரிக்கை நபர்கள் பலர் அவளைச் சூழ்ந்து கொண்டு கேள்விகளை எழுப்பினர்.

"ஆக்டர் ராகவ் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கப் போறதா அறிவிச்சிருக்காரே அது உண்மையா?" என்று கேட்க, ஜென்னி இவர்களுக்கு எல்லாம் தான் வரப் போகும் தகவல் எப்படி தெரியும் என்று யோசித்தவாறு மௌனமாய் நின்றாள்.

"பதில் சொல்லுங்க" என்ற அவர்கள் அழுத்தம் கொடுக்க,

ஜென்னி நிமிர்த்திய பார்வையோடு, "எஸ்... இட்ஸ் ட்ரூ... ஐம் கோயிங் டூ மேரி மிஸ்டர். ராகவ்" என்றாள்.

பத்திரிக்கையாளர்கள் மேலும் கேள்வி எழுப்ப அவள் "ப்ளீஸ் நோ மோர் க்வஸ்டிஸ்ன்ஸ்" என்றபடி சிரமப்பட்டு அங்கிருந்த காவலாளி உதவியோடு அவர்களைக் கடந்து வந்தாள்.

அவளின் அந்த பதில் டேவிடுக்கும் சென்று சேர்ந்தது. அப்போது ஏற்பட்டது அதிர்ச்சியா வேதனையா தவிப்பா என  அவனால் விவரிக்க முடியவில்லை. ஆனால் அவள் தன் வாழ்வில் இல்லாமல் போனால் அது பேரிழப்பு என்பது மட்டும் அவனுக்குத் தெள்ளத்தெளிவாய் புரிந்தது.

பத்திரிக்கையாளர்கள் முன் அவளை நேரடியாய் சந்திக்காமல் அவன் கார் நிறுத்தத்தில் காத்திருக்க, ஜென்னியும் அவனைக் கண்டறிந்து வந்து சேர்ந்தாள்.

டேவிட் தன் மனவுணர்வுகளை மறைத்துக் கொண்டு அவளை நலம் விசாரித்தான்.

"எப்படி இருக்க ஜென்னி ?"

"யா பைஃன்" என்றவள், "எதுக்கு டேவிட் நீங்க உங்க வேலையை விட்டுவிட்டு வந்தீங்க... கார் மட்டும் அனுப்பினா போதாதா?" என்று கேட்க,

அவளை ஏறிட்டவன், "உனக்காக நான் வராம வேற யார் வருவா?" என்று உரிமையோடு அவன் கேட்க, அவள் சிலாகித்துப் போனாள்.

அந்த வார்த்தைகளில் வெறும் அக்கறையும் நட்பும் மட்டும் தேங்கியிருக்கவில்லை. அளவிடமுடியாத காதல் இருந்தது. அது அவளுக்குமே புரிய அதற்கு மேல் அவள் எந்தவித கேள்வியும் அவனிடம் எழுப்பாமல் மௌனமாய் வந்தாள்.

அவனுமே மௌனமாய் தன் சோகத்தை விழுங்கிக் கொண்டு காரை ஓட்டினான். அவர்களுக்கிடையில் வார்த்தை பரிமாறல்கள் நிகழவில்லை என்றாலும் அவ்வப்போது பார்வை பரிமாறல்கள்  நிகழ, அதன் மூலம் அவர்கள் இருவரும் ஒருவர் உணர்வை மற்றவர் புரிந்து கொண்டார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

ஆனால் டேவிட் ஒரு விஷயத்தில் உறுதியாய் இருந்தான். அவள் தன் மீது கொண்ட ஆழமான நட்பைக் காயப்படுத்தி தன்னுடைய காதலை வாழ வைப்பதில்லை என்று.

Muthu pandi has reacted to this post.
Muthu pandi
Quote

Nice

You cannot copy content