You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Naan Aval Illai - 45

Quote

45

மரணத்துக்கு நிகரான வலி

வீணையை விரல்கள் மீட்டாத போது அங்கே எங்கனம் நாதத்தின் இசை ஒலிக்க முடியும். அவர்கள் இருவருமே மீட்டாத வீணை போலவே மௌனிகளாய் நின்றிருந்தனர்.

அலை அலையாய் அவள் கேசம் கடற்காற்றில் அலைபாய்ந்து கொண்டிருக்க, பார்வை மட்டும் ஓரே நிலையில் சமுத்திரனோடு சங்கமித்திருந்தது. ஒரே ஒரு முறை கூட அவள் பார்வை அவன் புறம் திரும்பவில்லை.

அவனாகவே பேசட்டும் என்று அவள் அமைதி காத்திருக்க, இந்தளவுக்குத் தன்னை பார்க்க அவள் நிராகரிக்கிறாள் எனும் போது அவளிடம் தான் நினைத்ததை எப்படிக் கேட்பதென்று அவன் தவித்துக் கொண்டிருந்தான்.

'மகிழ் பேசு' அவனுக்கு அவனே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டான். ஆனால் உதடுகள் இரண்டும் ஓட்டிக் கொண்டு அவனுக்கு உதவமாட்டேன் என்றிருந்தது. அந்த காத்திருப்பும் மௌனமும் நீண்டு கொண்டே இருக்க, இறுதியாய் அவளே அந்த மௌனத்தை உடைத்தாள்.

"என்னை பேசணும்னு வரச் சொல்லிவிட்டு இப்படி சைலன்டா இருந்தா என்ன அர்த்தம்... டேவிடும் இப்போ இங்கே இல்லை... இன்னும் உங்களை எது தடுக்குது" என்று கேட்டவளை ஆச்சர்யமாய் நோக்கினான்.

அவளோ அப்போதும் அவனைப் பாராமல் கடலையே பார்த்துக் கொண்டிருக்க அவன் கோபத்தோடு, "என்னை எதுவும் தடுக்கல... உன்னைதான் ஏதோ தடுக்குது..." என்று நிறுத்தியவன்,

அவளின் பாரா முகத்தைப் பார்த்தபடி, "ஐ திங் யூ ஆர் ஸ்டில் இன் லவ் வித் மீ" என்று உரைத்தான்.

அவள் அதிர்ந்தபடி, "மகிழ்" என்று அவனை நேர்கொண்டு பார்த்தாள். அவள் விழிகள் அகன்று அவனைச் சீற்றமாய் பார்க்க, அந்த வார்த்தை அவளை நேரடியாய் தாக்கியிருந்தது.

விழிகள் இரண்டும் அழுவதற்கான முதல் படியை எட்டியிருக்க,

மகிழ் நிதானமாகவே அவளை எதிர்கொண்டு, "அப்படி எதுவும் இல்லைன்னா என்னை நேரா பார்த்து பேசுறதுல உனக்கென்ன தயக்கம்?" என்றவன் கோபமாய் முடிக்க,

"நீங்க புரிஞ்சுதான் பேசுறீங்களா? எனக்கும் ஆக்டர் ராகவுக்கும் மேரேஜாகாப் போகுது... அது ஊருக்கே தெரியும்.. ஏன் அது உங்களுக்குமே தெரியுமே? அப்படி இருக்கும் போது இந்த மாதிரி நேரத்துல உங்களை தனியா மீட் பண்றது சரியா? ஒரு மீடியா பர்ஸனா என்ன மாதிரியான விளைவுகளை நம்ம மீட்டிங் ஏற்படுத்தும்னு நான் சொல்லி உங்களுக்குத் தெரிய தேவையில்லை... அப்படி இருக்கும் போது இதை விட என் தயக்கத்துக்குக் காரணம் வேறென்ன இருக்க முடியும்?!" என்று ஆணித்தனமாய் அவன் முகத்துக்கு நேராய் கேட்டாள்.

எந்நிலையிலும் தான் உணர்ச்சிவசப்பட்டு மகிழின் வாழ்க்கையில் எந்தவித குழப்பத்தையும் ஏற்படுத்திவிடக் கூடாதே என்கிற அவளின் பயமே அவளை மனோதிடத்தோடு பேச வைக்க, உண்மையிலேயே அந்த நொடி மகிழ் குற்றவுணர்வாய் உணர்ந்தான்.

அவள் சொன்னது எதையும் உணர்ச்சிவசத்தால் அவன் யோசிக்க மறந்திருந்தான். ஆனால் இப்போது சிந்தித்தால் தன் தமையனின் அவச்சொல்லைக் கேட்டு அவளின் வாழ்க்கையில் இடையூறு செய்துவிட்டோமோ என்று தோன்றியது.

அவன் அவளை நிமிர்ந்து பார்த்து, "சாக்ஷி ஐம் சாரி... நான் இது எதை பத்தியும் யோசிக்காம ஏதோ ஒரு இமோஷன்ல உன்னை இங்கே வரவைச்சிட்டேன்" என்க,

"எதைப் பத்தியும் யோசிக்காமன்னா... உங்க மனைவியைப் பத்தியுமா?!" என்று புருவத்தை ஏற்றி அவள் ஏளனமாய் கேட்டாள்.

"என் மனைவியா?... அப்போ அவ உனக்கு ஃப்ரெண்ட் இல்லையா?!" என்று இறங்கிய பார்வையோடு அவன் வினவ,

"முடிஞ்சு போன விஷயங்களைப் பத்தி நான் பேச விருப்பப்படல... நீங்களும் அதைப் பத்தி எல்லாம் கேட்க வேண்டாம்னு நினைக்கிறேன்... அதனால எந்த யூஸ்சும் இல்ல... ஸோ ப்ளீஸ் நம்ம வாழ்க்கையில நடந்த பழைய விஷயங்களை எல்லாம் மறந்திடுவோமே... அதுதான் இரண்டு பேருக்கும் நல்லது" என்று சமார்த்தியாய் பேசி அவனிடமிருந்து அவள் நழுவிக் கொள்ளப் பார்க்க, மகிழுக்கு அவள் பேசியது எதையும் நம்பமுடியவில்லை.

அத்தனை சுலபமாய் அவள் பழைய விஷயங்களைக் கடந்துவிடச் சொல்வதை ஏற்க முடியாமல் பார்த்தவன், மாயாவின் நட்பைக் கூட உதறுமளவிற்கு அவள் மனம் இறுகிப் போனதா என்று கோபமானான்.

அவள் மேலும், "டேவிட் வேற ரொம்ப நேரமா வெயிட் பண்ணிகிட்டிருக்காரு... நான் போகணும் மகிழ்" என்றவள் அவஸ்த்தையோடு உரைக்க,

அவன் அழுத்தமான பார்வையோடு, "டேவிட் ஒரு முப்பது நிமிஷமா வெயிட் பண்ணிகிட்டிருக்கிறதுக்கே உனக்கு இவ்வளவு துடிக்குது... ஆனா நான் உனக்காக மூணு வருஷமா காத்துகிட்டிருந்தேனே பையத்திக்காரனாட்டம்... அப்போ உனக்குத் துடிக்கல... இன்னைக்கு வந்து ஈஸியா பழசைப்க் பத்தி பேச வேண்டாம்னு சொல்ற" உணர்ச்சிவசத்தாலும் கோபத்தாலும் அவன் மனதில் தேக்கி வைத்திருந்த கேள்வியை வார்த்தைகளாகக் கொட்டிவிட, அவள் பேச்சற்று நின்றுவிட்டாள்.

, "சாக்ஷி எப்போ எப்படி ஜெனித்தா விக்டரா மாறினான்னு நான் தெரிஞ்சுக்கலாமா?!" என்றவன் அடுத்த கேள்வி எழுப்ப, அவள் ஒருவாறு சுதாரித்துக் கொண்டு,

 "அதெல்லாம் உங்களுக்குத் தேவையில்லாத விஷயம்... நான் உங்களுக்கு அதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமுமில்லை" என்று மறுத்தவள், நிராகரிப்பாய் தன்  பார்வையை அவனிடமிருந்து திருப்பிக் கொண்டாள்.

அவன் நிதானமாக, "ஓகே அந்த கேள்விக்கு நீ பதில் சொல்ல வேண்டாம்... அது எனக்குத் தேவையில்லாத விஷயம்னே இருக்கட்டும்... ஆனா எனக்குத் தேவையான விஷயம் ஓண்ணு கேட்க வேண்டியிருக்கு... அதுக்கு மேடம் பதில் சொல்வீங்களா?!" என்று கேட்டு அவளை எகத்தாளமாய் பார்த்தான்.

"என்ன அது?" அவனைப் பாராமலே அவள் கேட்க,

"மூணு வருஷத்துக்கு முன்னாடி வந்த என் பிறந்த நாள்... நீ நிச்சயம் மறந்திருக்க மாட்ட" என்று அவன் சொல்லிய உடனே அவள் முகமாற்றமடைந்திருந்தது. பதட்டத்திற்கும் பயத்திற்கும் இடைப்பட்ட உணர்வில் அவள் சிக்கித் தவிக்க,

மகிழ் மேலும், "நம்ம இரண்டு பேரும் வெளியே எல்லாம் போயிட்ட பிறகு நானே உன்னை இல்லத்தில கூட்டிட்டு வந்துவிட்டேன்... அதுக்கப்புறமா...  நீ மாயாகிட்ட என்ன சொன்ன?" நிறுத்தி நிதானமாய் அவன் கேட்க, அவள் தடுமாறி நின்றாள்.

"உன்னைதான் கேட்கறேன்... பதில் சொல்லு" என்றவன் திரும்பி நின்றவளின் தோளைப் பிடித்துத் திருப்பினான்.

அவன் செய்கையில் மிரண்டவள்,"என்ன பண்றீங்க மகிழ்?" என்று அவன் கரத்தைத் தட்டிவிட அவன் அதீத கோபத்தோடு,

"அப்போ நான் கேட்டுட்டே இருக்கேன்... நீ பாட்டுக்கு பதில் சொல்லாம நின்னுட்டிருந்தா என்னடி அர்த்தம் ?" என்றான்.

அவள் அதற்கு மேல் பொறுக்க முடியாமல், "தப்புதான் மகிழ்... என்னை மன்னிச்சிடுங்க... நான் அப்படி சொல்லி இருக்கக் கூடாது... ஏன்? உங்க காதலைப் பத்தி அப்படி நான் நினைச்சு கூட இருக்கக் கூடாது?... தப்பு செஞ்சுட்டேன்"  என்றவள் அழுகை தொனியில் உரைக்க, அவள் விழிகளில்

நீர் ஆறாய் பெருகியது. அவள் அந்த நொடி முகத்தை மூடிக் கொண்டு வெதும்ப, மகிழின் மனம் இளகிப் போனது.

அவளை அணைத்துக் கொண்டு சமாதானம் செய்ய வேண்டும் என்று உள்ளம் துடிக்க, அந்த எண்ணத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தவன் பல்லை கடித்து கொண்டு, "சாக்ஷி ப்ளீஸ் அழாதே" என்றான்.

அவளோ அமைதியடையாமல் அழுதபடியே இருக்க அவன் பொறுமையாக, "எனக்குத் தெரியும் சாக்ஷி... நீயா அப்படி பேசலன்னு" என்றான்.

அவள் முகத்தை துடைத்துக் கொண்டு நிமிர்ந்து அவனை பார்க்க, "அந்த பொறுக்கி... அதான் எங்க ண்ணன் உன்கிட்ட என்ன பேசினான்?" என்றவன் அவளிடம் உக்கிரமாய் கேட்டான். அவனுக்கு எப்படித் தெரியும் என்பது போல் அவள் குழப்பமாய் பார்த்தாள்.

மகிழ் அவள் பார்வை புரிந்து, "நான் அவனைப் பார்த்துட்டுதான் வர்றேன்... அவன் சொன்னதை எல்லாம் கேட்டு கொதிச்சு போய் வந்திருக்கேன்" என்க, ஜென்னி உணர்ச்சியற்ற பார்வையோடு, "டூ லேட் மகிழ்" என்றாள்.

அவள் வார்த்தையிலிருந்த வலியை அவள் முகம் பிரதிபலிக்கவில்லை எனினும் அதனை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

அவள் விரக்தியான பார்வையோடு, "அதை நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கணுமா?!" என்று கேட்க, அவன் ஆம் என்பது போல் தீர்க்கமாகத் தலையசைத்தான்.

அவனை ஆழமாய் ஒரு பார்வை பார்த்தவள் சில நொடிகள் மௌனத்திற்குப் பின் அன்று நடந்ததை அவனிடம் உரைக்கத் தொடங்கினாள்.

************

மகிழ் சென்ற சில நொடிகளிலேயே சாக்ஷிக்கு அந்தத் தனிமையும் அமைதியும் எரிச்சலை உண்டாக்க, அவன் எப்போது வரக் கூடும் என்று சோபாவின் கைப்பிடியில் கையை வைத்து தலையைத் தாங்கி விழிகளை மூடியிருக்க, அந்தக் கணம் யாருடைய சுவாசமோ அவள் முகத்தைத் தீண்டிய

 உணர்வு. அதுவும் சிகரெட்டின் நெடி குமட்டிக் கொண்டு வர,

"யாரு?" என்று அதிர்ந்து தலையை நிமிர்த்தினாள். அவள் கேள்விக்கு பதிலில்லை.

யாரோ இருக்கிறார்கள் என்பதை அவள் உள்ளுணர்வு கணிக்க,

"யாராச்சும் இருக்கீங்களா?!" என்று சத்தமாய் கேட்டாள். அந்த இடமே நிசப்தமாய் இருந்தது. ஆனால் அந்த நிசப்தத்திலும்  யாரோ நடமாடும் மெல்லிய சத்தத்தை அவள் செவியால் கேட்க முடிந்தது.

மெல்ல மெல்லப் பதட்டம் அதிகரித்துக் கொண்டே போக, சோபாவில் இருந்து எழுந்து கொண்டவள் நேராக நடந்து கதவருகே சென்றாள். அது மூடியபடியே இருக்க, மகிழ் கதவை மூடிவிட்டுச் சென்றதை அவள் கேட்டிருந்தாள். அதை யாரும் திறந்தது போலவும் சத்தம் எழவில்லை.

மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டவள், தான் ஏதோ கற்பனை செய்து பயப்படுகிறோம் என்று எண்ணி மனதை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் இருக்கையில் வந்து அமர்ந்தாள். அவள் எப்போதும் விரும்பாதது அமைதியும் தனிமையும்.

இரண்டுமே அந்த நொடி அவளை ஒருசேர மிரட்ட, அவள் பேகிலிருந்த பாடல் ஒலிக்கும் இயந்திரத்தை எடுத்து இயக்கச் செய்தாள்.  அவள் பாடல்களை கேட்கும் போது உணவு தண்ணீரையும் கூட மறந்து விடுவாள். அப்படியிருக்கத் தனிமை எம்மாத்திரம். அதுவும் பாரதியார் பாடல்கள் மீது அவளுக்கு எப்போதுமே அலாதியான காதல்...

'மாலை பொழுதிலொரு மேடை மிசையே

வானையும் கடலையும் நோக்கியிருந்தேன்

மூலைக் கடலினை அவ்வான வளையம்

முத்தமிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன்' அந்தப் பாடல் வரிகள்  காற்றோடு கலந்து அவள்  உள்ளத்தை மருகச் செய்ய, அதனூடே அவள் கரைந்து போயிருந்தாள். அப்போது ஓர் ஆணின் குரல் அவளின் அந்த இசை தவத்தைக் கலைத்துவிட்டது.

"நீ வாசிக்கிறதுதான் அழுகுன்னு பார்த்தா... நீ பாட்டு கேட்டு ரசிக்கிறது கூட அழுகுதான்டி" என்றதும் அவள் பதறிப் போனாள்.

அப்படியெனில் அவள் கற்பனையென்று எண்ணியது?! உண்மையிலேயே யாரோ இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டவள்,

"யாருங்க?" என்று அழுத்தமாய் கேட்டாள். பாடிக் கொண்டிருந்த அந்தப் பாடல் அதுவாக நிறுத்தப்பட, மேலும் அவள் படபடப்பானாள்.

இதயத்துடிப்பு அவளின் செவியில் மத்தளம் கொட்டுவது போன்று ஒலிக்க நடுங்கிய குரலில் , "யாருன்னு கேட்கிறேன் ல" என்றவள் மீண்டும் அழுத்தமாய் கேட்டாள்.

"நான் உன் ரசிகன் சாக்ஷி... நீ வீணை வாசிக்கும் போது அப்படியே கேட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கும்... நீ வாசிக்கிற அழகைப் பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கும்" என்று சொல்ல முகம் சுளித்தவள்,

"இடியட்... வெளியே போடா முதல்ல" என்று அவள் கோபமாக உரைக்க அவன் சத்தமாய் சிரித்துவிட்டு, "என் வீட்டுக்கு வந்து என்னையே வெளியே போங்கிறியா? உனக்கு ரொம்பதான் தைரியம்" என்றதும் அவள் அதிர்ச்சியுற்றாள்.

"உன் வீடா... யார் நீ?" என்று அவள் மீண்டுமே கேட்டாள்.

"என் தம்பி என்னைப் பத்தி உன்கிட்ட சொல்லவேயில்லையா?" என்று அவன் வினவ,

அவள் சிறிது நேர யோசனைக்குப் பின், "அப்போ நீங்க மகிழோட அண்ணன் வேந்தனா?" என்றவள் கேட்டபடி நெற்றியில் துளிர்த்த வியர்வையைத் துடைத்துக் கொண்டாள்.

"பரவாயில்லையே... கண்டுபிடிச்சிட்ட" என்றதும் அவள் பெருமூச்செறிந்தபடி,

"சாரி... நீங்க மகிழோட அண்ணன்னு தெரியாம... ஆனா நீங்க இங்க இருக்கிறதை பத்தி மகிழ் சொல்லல" உள்ளுர பயம் இருந்தாலும் அவள் அவனிடம் காட்டிக் கொள்ளாமல் பேச,

"நான் வீட்டுக்குள்ள இருந்தது அவனுக்குத் தெரியாது பாவம்... எங்கம்மா நான் தூங்கிட்டிருந்ததால கதவைப் பூட்டிட்டு வேலைக்குப் போயிட்டாங்க" என்றான்.

"ஓ" என்றவளுக்கு யோசனையாய் இருந்தது. மகிழின் தமையன் ஏன் தன்னிடம் இப்படி எல்லாம் பேச வேண்டும்? ஏன் தான் இருப்பதை காட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என அவள் தனக்குள்ளயே குழம்பியிருக்க,

"அப்புறம் எப்படி இருக்க சாக்ஷி?" என்று சகஜமாய் அவன் கேட்கவும்,

அவள் உடனடியாக, "ஹ்ம்ம்... நல்லா இருக்கே ண்ணா" என்று பதட்டத்தோடு பதிலளித்தாள்.

"என்ன சொன்ன? அண்ணாவா?" அவன் அதிர்ச்சியாக,

"நீங்க மகிழுக்கு அண்ணாதானே... அதான்... ஏன் ண்ணா அப்படி கூப்பிடக் கூடாதா?" என்றவள் கேட்டதுதான் தாமதம்.

அவனுக்குக் கோபம் தன் எல்லையை மீற, "அடிங்க... திரும்பியும் அண்ணங்கிற... அன்னைக்கு அத்தனை பேர் முன்னாடி என்னை பொறுக்கின்னு கூப்பிட்ட" என்று கேட்டுவிட,

அவள் புரியாமல், "நான் எப்போ ண்ணா உங்களை அப்படிக் கூப்பிட்டேன்?" என்றவள் கேள்வி எழுப்ப, அவள் கழுத்தை அவன் கரம் நெறித்தபடி, "ஏய் இன்னொரு தடவை உன் வாய்ல இருந்து அண்ணங்கிற வார்த்தை வந்துது... உன்னை கொன்றுவேன் பார்த்துக்கோ" என்க, அவள் பதறிப் போனாள்.

அவன் மெல்ல தன் கரத்தை விலக்க அவள் படபடப்போடு, "நான் என்ன பண்ணிட்டேன்னு இப்படி என்கிட்ட நடந்துக்குறீங்க" என்று கேட்டாள்.

"நீ என்னை அசிங்கப்படுத்தினதை மறந்திருக்கலாம்... ஆனா என்னால மறக்க முடியலயே... அன்னைக்கு கோவில்ல கீழ விழ போன உன்னை  நான் தாங்கிப் பிடிச்சேன்...  அதுக்கு போய் என்னை பொறுக்கின்னு சொல்லி என் சட்டையைப் பிடிச்சு அங்கிருந்தவங்க கிட்ட எல்லாம் அடி வாங்க வைச்சிட்ட... எனக்கு எவ்வளவு அவமானமா இருந்துச்சு தெரியுமா?" என்றவன் ஆக்ரோஷமாய் நடந்தவற்றை சொல்லவும் அவள் அந்த சம்பவத்தை நினைவுப்படுத்திக் கொள்ள முயற்ச்சித்தாள்.

ஆனால் அப்படி ஒரு சம்பவம் அவள் நினைவில் பதிவாகக் கூட இல்லை. அவள் யோசித்திருக்கும் போதே, அவள் அமர்ந்திருந்த சோபாவிற்கு எதிரே இருந்த டேபிளில்  அவன் வந்து அமர அவன் கால்கள் அவள் கால்களில் இடிபட்டது. அவள் துடித்தெழுந்து கொள்ள,

அவள் தோளைப் பற்றி "உட்காரு சாக்ஷி" என்று அவளை எழுந்திருக்க விடாமல் தடுத்தான். அவன் கரத்தைத் தட்டிவிட்டவள்,  மீண்டும் தட்டுத்தடுமாறி எழுந்திருக்க முற்பட,

"வேண்டாம் சாக்ஷி... நீ எழுந்திருச்சேன்னா... என் கை உன் மேல ஏடாகூடாம பட வேண்டியிருக்கும்... அன்னைக்கு தெரியாம பட்டுது... இன்னைக்கு தெரிஞ்சே படும்" என்று  அவன் வன்மத்தோடு எச்சரிக்க, அவள் உச்சபட்ச அதிர்ச்சியோடு சிலை போல் அமர்ந்து கொண்டாள்.

நெருப்பிற்கிடையில் சிக்கியது போல் அவள் தவிக்க, அவன் கால்களோடு உரசியிருந்த தம் கால்களைத் தூக்கி சோபாவின் மீது வைத்துக் கொண்டாள். எந்தப் புறம் அவன் பார்வை இருக்குமென்பது புரியா வண்ணம் அவள் தவித்துக் கொண்டிருக்க, அவள் உடலெல்லாம் நடுக்கமுற்றது.

"இப்போ ஏன் நீ இவ்வளவு பயப்படுற?" என்று சொல்லியபடி அவள் தோளை அவன் தொடவும் உடனடியாய் தட்டிவிட்டவள், அருகிலிருந்து பேகைத் துழாவி ஒரு சிறு கத்தியை எடுத்துக் காண்பித்தாள்.

அவன் கலீரென்று சிரித்துவிட்டு, "பெரிய வீராங்கனைதான்... கத்தியெல்லாம் காண்பிக்கிற... நான் என்னடி உன்னை ரேப்பா பண்ண போறேன்... அவ்வளவு சீனெல்லாம் இல்லை.... உள்ளே வை" என்று சொல்லி எள்ளி நகைத்தான்.

அவள் உறுதியாய் அந்தக் கத்தியை விடாமல் பிடித்தபடியே, "நானும் மகிழும் காதலிக்கிறோம்...  என்கிட்ட போய் நீங்க இப்படி நடந்துக்கலாமா?! நீங்க செய்றது உங்களுக்கே தப்பா தெரியல" என்றவள் பொறுமையாக  கேட்க,

"அதெல்லாம் சரி... நீ கத்தியை முதல்ல உள்ளே வை" என்றான் அவன்.

"மாட்டேன்" என்றவள் சொல்ல, அவளுக்கு எங்கே அவன் தன்னை நெருங்கிவிடுவானோ என்ற பதட்டம்.

அவன் இறுக்கத்தோடு,"அந்த கத்தியை நீயா உள்ளே வைச்சிட்டா நல்லது... அதை நான் பிடுங்கிட்டேன்னு வைச்சுக்கோ... சேதாரம் உனக்கில்லை... உன் புடவைக்கு... பரவாயில்லையா?" என்று கேட்ட நொடி அவள் கரத்திலிருந்து கத்தி தடுமாறி தரையில் விழ... அந்தக் கத்தியை அவன் எடுத்து,

"தேவையான பொருளை இப்படி தவற விட்டுட்டியே" என்று அவனே அதை அவள் பேகில் நுழைத்தான்.

சாக்ஷி தலையைக் கவிழ்ந்து "என்னை விட்றுங்க ப்ளீஸ்... நான் போகணும்" என்று கெஞ்சினாள்.

"போகப் போறியா? இன்னும் கொஞ்ச நேரத்தில மகிழ் வந்து நீ எங்கன்னு தேடுவானே சாக்ஷி" என்றவன் கிண்டலாய் கேட்க,

அவள் தன் கரத்தைக் கூப்பியபடி, "நான் ஏதோ கோவில்ல உங்களை அவமானபடுத்திட்டேன்னு சொன்னீங்க இல்ல... அது ஏதோ தெரியாம அப்படி நடந்திடுச்சு... ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க" என்று இறங்கிய குரலில் அவள்  கேட்டதும்,

அவன் சிரித்துவிட்டு, "நீ இவ்வளவு இறங்கி வரும் போது... நானும் கொஞ்சம் இறங்கி வந்தாதானே நல்லா இருக்கும், ஸோ ஒரு முத்தத்தோடு நம்ம யுத்தத்தை முடிச்சுப்போம்" என்றவன் சொல்லிய மாத்திரத்தில் பதறிப் போனவள் அவன் நெருங்கும் முன்னர் அவள் முகத்தை முழங்காலில் புதைத்துக் கொண்டு,

"வேண்டாங்க ப்ளீஸ்... நான் உங்க தம்பியை ரொம்ப காதலிக்கிறேன்" என்றவள் அழுதமேனிக்கு உரைக்க,

"ப்ச் திரும்ப திரும்ப அதையே சொல்லாத டி... எனக்கு கடுப்பாகுது... உன்னை என் தம்பி பொண்டாட்டியா எல்லாம் என்னால சத்தியமா கற்பனையில கூட நினைச்சுப் பார்க்க முடியாது" என்றான் வெறியோடு!

அவள் நிமிராமலே, "நீங்க பேசுறது நடந்துக்கிறது எதுவும் சரியில்லை... மகிழுக்கு மட்டும் இது தெரிஞ்சுதுன்னா?" என்றதும்,

"என்னடி மிரட்டுறியா? அவன் எனக்குத் தம்பி... நான் அவனுக்கு எல்லாம் பயப்படமாட்டேன்... முதல்ல நீ  காதல் கீதல்னு சொல்லிட்டு என் தம்பி கூட  சுத்துற வேலை வைச்சுக்காதே... கனவில கூட நீ மகிழை கல்யாணம் பண்ணிக்க முடியாது... ஏன்னா உன்னை மாதிரி குருட்டுப் பொண்ணை எங்க அம்மா அப்பா மருமகளா ஏத்துக்க மாட்டாங்க" என்றவன் சற்று நிறுத்தி,

"ஆனா நீ கவலைப்படாதே... நான் உன்னை பார்த்துக்குறேன்... உனக்கு தேவையானதெல்லாம் செஞ்சு தர்றேன்... ஜஸ்ட் பீ வித் மீ" என்று சொல்லி அவளை நிமிர்த்தி அவள் கன்னங்களை வருடினான்.

அவன் கரத்தைத் தட்டி விட்டவள் "செருப்பு பிஞ்சிரும் ராஸ்கல்... என்னடா நினைச்சிட்டிருக்க உன் மனசுல... நீ மகிழோட அண்ணங்கிறதாலதான் இவ்வளவு நேரம் பொறுமையா பேசிட்டிருக்கேன்" என்று வார்த்தைகளைத் தீயாய் உதிர்த்தாள்.

"புரிஞ்சுக்கோடி... அவன் உன்னை காதலிக்கல... அவனுக்கு உன் மேல  இருக்குறது பரிதாபம்... அவ்வளவுதான்..." என்க,

"அப்படியெல்லாம் இல்ல... அவரு என்னை உயிருக்கு உயிரா காதலிக்கிறாரு... நீங்க மட்டும் இப்படி என்கிட்ட நடந்துக்கிறது மட்டும் அவருக்கு தெரிஞ்சா" என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

"உயிருக்கு உயிரா காதலிக்கிறானா?  லூசா நீ... போனா போகுதுன்னு பாவம் பார்த்து உனக்கு வாழ்க்கை கொடுக்குறேங்கிறான்... அது வெறும் பச்சாதாபம்... காதல் இல்லை... இன்னும் கேட்டா அவன் உனக்கு போட போறது பிச்சை" என்க, அந்த வார்த்தை மரணத்துக்கு நிகரான வலியை அவளுக்குக் கொடுத்ததென்றே சொல்ல வேண்டும்.

கோபத்தோடு, "நீங்க சொல்ற எதையும் நான் நம்ப மாட்டேன்" என்றாள்.

"நீ நம்பலன்னாலும் அவனுக்கு உன் மேல இருக்கிறது பச்சாதாபம்தான் டி..  அவன் போடுற பிச்சைக்கு நான் பெட்டர் இல்ல... நீ யோசிச்சு சொல்லு... நானே உனக்கு கால் பண்றேன்... கனடா போறதுக்கு முன்னாடி" என்று அவன் சொல்லி முடித்த சில கணத்தில் அந்த இடமே நிசப்தமாய் மாறியது.

ஏதோ ஒரு கோரமான கனவை கண்டது போன்ற உணர்வு. அந்த மூழ்கிய இருளுக்குள் எது கனவு நிஜம் என்று பிரித்தறிய முடியாத நிலை. யாரென்றே அறியாத ஒருவன் இந்தளவுக்கு  அநாகரிகமாக தன்னிடம் பேச முடியுமா?!

அங்கே இன்னும் அவன் இருப்பதான உணர்வு மட்டும் அவளுக்கு நீங்கவில்லை. தன் செவிகளை தீட்டிக் கேட்டவளுக்கு அங்கே எந்தச் சத்தமும் ஒலிக்காமல் அமைதியாயிருக்க, கால்களைத் தரையில் இறக்கியவள்

அமர்ந்திருந்த இடத்தை விட்டு இம்மியளவும் நகராமல், எழிலும் மகிழும் வரும் வரையில் அதிர்ச்சியில் அசைவின்றிக் கிடந்தாள்.

****************

மகிழுக்கு அவள் சொன்னதைக் கேட்க கேட்க நிறுத்தாமல் கண்ணீர் வழிந்தோடியபடியே இருக்க அவன் மொத்தமாய் நனைந்திருந்தான். ஆனால் அவள் திடமாய் நின்று கொண்டிருக்க,

அவன் வேதனை தாளாமல், "என்கிட்ட அப்பவே சொல்லி இருக்கலாம் இல்லடி" என்றவன் கோபம் கலந்த தொனியில் கேட்க,

"இந்த கண்ணு தெரியாதவ சொல்றதை நீங்க நம்பியிருப்பீங்களா மகிழ்?" என்று ஏளனமாய் கேட்டாள்.

"சமாளிக்காதடி... நீயென்னை நம்பலன்னு சொல்லு" என்றவன் பார்வையில் கோபம் எரிமலையாய் வெடித்திருக்க,

"ஆமா... நம்பலதான்... எல்லோருமே ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லும் போது நான் என்ன பண்ண முடியும்?"  என்று தன்னிலையை அவள் எடுத்துரைக்க,

அவளை விழி இடுங்கப் பார்த்தபடி, "எல்லோருமேன்னா?" என்று கேட்கவும்,

"உங்க பெஸ்ட் ஃப்ரெண்ட் ஷாலினி... உங்க கூடப் பிறந்த அண்ணன்... ஏன் மாயா உட்பட...? இதெல்லாம் இப்படின்னா... நான் உங்ககிட்ட என்னை முதல் முதல்ல பார்த்ததும் என்ன நினைச்சீங்கன்னு கேட்டேனே... அதுக்கு என்ன சொன்னீங்க... ஞாபகம் இருக்கா?!"

"என்ன சொன்னேன்?"

"ஹ்ம்ம்... அழகு அறிவு திறமை எல்லாம் இருக்குற உனக்கு கண் பார்வையில்லைன்னு நம்ப முடியல... மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சுன்னு சொன்னீங்க"

"அய்யோ... அதை நீ பரிதாபம்னு எடுத்துக்கிறதா?"

"வேறெப்படி எடுத்துக்கிறதாம்"

"ஏய் பையத்திக்காரி... நான் உன்னை உண்மையா காதலிச்சேன்டி... உன் கவிதையில ஆரம்பிச்சு உன் புத்திசாலித்தனமான பேச்சில நீ என்கிட்ட பிரபோஸ் பண்ண விதத்தில...  உன் வீணையோட இசையில... முக்கியமா உன்னை நான் முதல் தடவை பார்த்த போது என் குரலைக் கேட்டதும் நீங்க மகிழ்தானேன்னு கேட்டியே... அப்போ... அந்த நிமிஷம்" என்றவன் வரிசையாய் சொல்லிக் கொண்டே போக, "போதும் மகிழ் நிறுத்துங்க" என்றவளின் கண்ணீர் கிட்டதட்ட உடைப்பெடுத்துவிட்டது.

அவள் உணர்வுகள் அவன் சொன்னதை கேட்டு எத்தகைய நிலையை எட்டியதென்று சொல்வதற்கு வார்த்தையில்லை. இதையெல்லாம் முன்னமே கேட்டிருக்கக் கூடாதா என்று ஏங்கிய மனதிற்கு எத்தகைய சமாதானம் உரைப்பாள். அந்த மாயக்கண்ணாடித்திரை கொஞ்சம் விட்டால் உடைந்து போயிருக்கக் கூடும்.

அவள் அவனிடம் கெஞ்சிய நிலையில், "ப்ளீஸ் மகிழ்... இதெல்லாம் பத்தி நாம இப்போ பேசி என்னவாகப் போகுது" என்றாள்.

"ஆமாம் இப்போ பேசி என்னவாகப் போகுது... பேச வேண்டிய நேரத்துல எதையும் பேசாம விட்டதுனால வந்த வினை... உன்னை போய் நான் உண்மையா நேசிச்சேன் பாரு... போயும் போயும் உன்னை நினைச்சுகிட்டு என்னை உண்மையா நேசிச்சவளை புரிஞ்சுக்காம இருந்தேன் பாரு" என்று தன்னைத் தானே அவன் கடிந்து கொள்,

 'நானும் உங்களை உண்மையாதான் நேசிச்சேன் மகிழ்' என்று சொல்ல வாயெடுத்தவள் அதை சொல்லாமலே நிறுத்திக் கொண்டாள்.

அவளை அடங்காத கோபத்தோடு பார்த்தவன், "அன்னைக்கே நீ எங்க அண்ணனைப் பத்தி சொல்லி இருந்தேன்னா?!" என்று கேட்டவனை,

அவள் கோபத்தோடு பார்த்து, "சொல்லி இருந்தேன்னா நீங்க நம்பி இருப்பீங்களாக்கும்... அன்னைக்கு நான் ஷாலினி உங்களை காதலிக்கிறாங்கன்னு சொன்ன போது ... நீங்க என்ன சொன்னீங்க? ஷாலினி என்னோட பெஸ்ட் ப்ரெண்ட்... யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை நீ எங்க நட்பை கலங்கப்படுத்தாதன்னு என்கிட்ட கோபப்பட்டீங்க... நட்புக்கே அப்படின்னா கூடபிறந்த அண்ணனைப் பத்தி எப்படி? அதுவும் அவர் என் மேல விருப்பப்படுறாருன்னு சொன்னா" தவிப்போடு நிறுத்தி மீண்டும் பேசியவள்,

"நல்லா யோசிச்சுப் பாருங்க மகிழ்... உங்க அண்ணன் வீட்டிலிருந்ததே உங்களுக்குத் தெரியல.. நான் எதை சொல்லி எப்படி உங்களை நம்ப வைப்பேன்" என்றவள் கேட்க அவன் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் மண்டியிட்டபடி  மணல் மீது தன் கரங்களால்குத்தினான்.

பகைமையை விடத் துரோகம் வலி மிகுந்தது. உடன் பிறந்த தமையனே தன் உணர்வோடு விளையாடியிருக்கிறான் என்பதை எவ்விதம் அவனால் தாங்கிக் கொள்ள முடியும்? இயலாமையும் கோபமும் அவனை ஒருசேர ஆட்டுவித்தது.

ஜென்னிக்கு அவன் நிலையைப் பார்த்து உள்ளூர துடிக்க, எப்படி அவனைத் தேற்றுவது என்று புரியாமல் தவித்திருந்தாள்.

உயிர் உடலுக்கு பாரமாகுமா? ஆனால் அந்தக் கணம் அவன் தேகத்திற்கு உயிர் பாரமாய் தோன்றியது என்றே சொல்ல வேண்டும். மனதைக் கொன்றுவிட்டு வாழ்வதை விட மரணித்துப் போவதே மேல் என்ற எண்ணம் தோன்ற இன்னும் உக்கிரமாய் தன் கரத்தை  அழுத்திக் குத்தினான்.

அவனாக அமைதியடைவான் என்று எண்ணியவளுக்கோ அவன் இன்னும் தீவிரமாய் மாறுகிறானே என்பதைப் பார்த்து அச்சம் தொற்றிக் கொண்டது.

இதற்கு மேல் அமைதியாய் இருத்தல் சரியல்ல என்றெண்ணி,  "மகிழ் வேண்டாம் ப்ளீஸ்" என்றவள் அவனை சமாதானப்படுத்த வேண்டி அவன் தோளினைத் தொட்டாள்.

அதே சமயம் அவனுக்காக அவள் வடித்த கண்ணீரும் அவன்  மீது விழுந்து அவன் உணர்வுகளை தொட்டுச் சென்றது. அவளின் வார்த்தைக்கும் கண்ணீருக்கும் மதிப்பு கொடுத்து ஒருவாறு அமைதியானவன் அவளை நிமிர்ந்து பார்த்த பார்வையில், நடந்ததை இனி மாற்றவே முடியாதா? என்று கேள்வி இருக்க,

அவன் பார்வையின் பொருளுணர்ந்தவள், முடியாது என்பது போல் தன் பார்வையாலேயே சமிஞ்சை செய்தாள். அவன் மனம் இன்னும் அமைதி நிலையை எட்டாமல் அவள் தோள் மீதிருந்த கரத்தை அவன் பிடித்துக் கொள்ள, அவள் தவிப்புற்றாள்.

வாழ்க்கை பூராவும் பற்றிக் கொள்ள அவள் விரும்பிய கரம் அது. ஆனால் அந்தக் கனவெல்லாம் கானல்நீராய் போன பின், காலம் தாழ்ந்த அவனின் பிடியை ஏற்க முடியாமல் அவள் அவதியுற, அவனோ குற்றவுணர்வோடு அவள் கரத்தைத் தன் விழி நீரால் நனைத்தான்.

"மகிழ் என்ன பண்றீங்க?" என்றவள் அவஸ்தையோடு கேட்க,

அவள் கரத்தை விடாமலே, "நான் பெரிய முட்டாளா இருந்திருக்கேன்டி..  என்னை நம்பி வந்த உனக்கு நான் அநியாயம் செஞ்சுட்டேன் சாக்ஷி" என்று சொல்லிக் கதறினான்.

அவள் கனத்த மனதோடு அவனருகில் அமர்ந்து, "ப்ளீஸ்... அழாதீங்க மகிழ்... இதுல உங்க மிஸ்டேக்னு எதுவும் இல்லை... நாம சேரக் கூடாதுன்னு விதி இருக்கு... அது நடந்திடுச்சு... ஆனா உண்மையை சொல்லணும்னா அதை விட பெட்டரான லைஃப்... பெட்டரான வொய்ஃப் உங்களுக்கு கிடைச்சிருக்காளே... நீங்க லக்கிதான்" என்க,

அப்போது அவளை அவன் நிமிர்ந்து பார்க்க இரு விழிகளும் முதல் முறையாய் ஒரு சேர சங்கமித்துக் கொண்டன. உணர்வுகளோடு மட்டுமே பேசியவர்கள் முதல் முறையாய் விழிகளோடு  பேசிக் கொள்ள, அது  மடிந்துவிட்ட அவர்களின் காதலுக்காக அவர்கள் செலுத்திய மௌன அஞ்சலி.

ஏக்க பெருமூச்சொன்றை வெளிவிட்டவன் மெல்ல அவள் கரத்தை விடுவிக்க, அப்போது அவனை முழுவதுமாய் மூழ்கடித்திருந்த சோகத்திலிருந்து அவள் விழியின் விசையால் கரையேறியிருந்தான்.

மெல்ல தன் அழுகையை உள்வாங்கிக் கொண்டவன், "நீ சந்தோஷமா இருக்கியா சாக்ஷி?" என்று கேட்டு அவன் பார்த்த பார்வையில் அக்கறையோடு மீதமாய் கொஞ்சம் காதலும் ஓட்டிக் கொண்டிருந்ததை மறுக்க முடியாது.

அவள் உடனே தன் முகத்தில் தேங்கியிருந்த சோகத்தை எல்லாம் வடித்துவிட்டு அவனைப் புன்முறுவலோடு நோக்கியபடி, "என்ன மகிழ்? இப்படிக் கேட்டுட்டீங்க?  இன்னைக்கு இந்த உலகத்திலயே  ஹேப்பியஸ்ட் உமன் நான்தான்னு சொல்வேன்... டேவிட் மாதிரி ஒரு ஃப்ரெண்ட்... விக்டர் ஜெனிஃபர் மாதிரி ஒரு அம்மா அப்பா.. அப்புறம் ராகவ் மாதிரி ஒரு ஃபியான்ஸின்னு கடவுள் எனக்குக் கொடுத்ததெல்லாமே தி பெஸ்ட்தான்" என்று பூரிப்போடு உரைப்பது போல் காட்டிக் கொள்ள,

"கேட்கவே சந்தோஷமா இருக்கு சாக்ஷி" என்றவன் சொன்ன போதும், மனதில் அவள் சொன்னதெல்லாம் உண்மைதானா என்ற சந்தேகம் துளிர்விட்டது.

இருவருமே மேலே என்ன பேசுவது என்று யோசித்த வண்ணம் இருக்க அந்தக் கணம் அவர்களுக்கிடையில் ஓர் அழுத்தமான மௌனம் குடியேறியது. நேரம் கடந்து செல்வதை அவனுக்கு உணர்த்த ஜென்னி தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தவாறு,

"நான் கிளம்பட்டுமா மகிழ்?" என்று தயக்கத்தோடு கேட்டாள்.

அவளை விழி இடுங்கப்  பார்த்தவன், "நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நீங்க பதில் சொல்லவே இல்லை ஜெனித்தா விக்டர்" என்க, அவன் பேச்சு தோரணை மாறியிருந்ததை அதிர்ச்சியாய் கவனித்தாள்.

இத்தனை தூரம் வந்த பின் உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் விடுவதா என்றெண்ணத்தோடு மகிழ் அவளிடம், "ஏன்... சாக்ஷி ... ஜெனித்தாவா மாறணும்? சாக்ஷிக்கு என்னாச்சு? தட்ஸ் தி மில்லியன் டாலர் க்வஷின்... ரைட்" என்று கேட்டவன் தீர்க்கமான பார்வையோடு அவள் பதிலை எதிர்நோக்க, அவளோ அந்தக் கணம் அவனிடம் எதைச் சொல்லி சமாளிப்பது என்று தீவிரமாய் யோசிக்கலானாள்.

 மகிழும் ஜென்னியும் கடற்மணலில் நடந்தபடி வந்து கொண்டிருக்க, அவளோ உணர்ச்சிகள் துடைத்த முகத்தோடு அழுத்தமாய் வரவும்,  மகிழ் பொறுமையிழந்தான்.

 "அப்போ நான் கேட்ட கேள்விக்கு நீ பதில்  சொல்ல மாட்ட?" என்று அவன் கோபமான தொனியில் கேட்க,

அவள் நின்றபடி அவன் முகத்தைப் பார்த்து, "அப்படி எல்லாம் இல்ல மகிழ்... எனக்கு ஒரு ஆக்ஸிடென்டாயிடுச்சு... டேவிட்தான் என்னை காப்பாத்தினாரு... தலையில அடிப்பட்டு மெமரி லாசாயிடுச்சு... அந்த டைம்ல நான் ஜெனித்தாவா இருந்தேன்... ஞாபகம் வந்த பிறகும் நான் ஜெனித்தாவாவே இருந்துட்டேன்... அவ்வளவுதான்" என்று மூச்சுவிடாமல் அவள் சொல்லி முடிக்க, அவன் சத்தமாய் சிரித்தான்.

"இப்ப எதுக்கு சிரிக்கிறீங்க?" அவள் கடுகடுத்துக் கேட்க,

"இல்ல... இந்த இங்கிலீஷ் க்வஸ்டின் பேப்பர்ல ஹின்ட்ஸ் கொடுத்துட்டு ஸ்டோரியை எழுதச் சொல்லுவாங்க... அப்படி இருக்கு நீ சொல்றது" என்றான்.

"நான் ஒண்ணும் கதை சொல்லல மகிழ்"

"நீ இதை கதையா சொன்னா கூட எவனும் நம்ப மாட்டான்"

"நம்பாட்டி போங்க... ஆனா இதுதான் நிஜம்"

"சரி நம்பறேன்... நீ பழசை எல்லாம் மறந்துட்ட... உன்னை டேவிட் காப்பாத்தினாரு... இல்லையா?" என்றவன் கேட்டு கூர்மையாய் அவளைப் பார்க்க, "ஹ்ம்ம்" என்றாள் ஜென்னி.

"டேவிட் ஒண்ணும் சாதாரணமான ஆளில்ல சாக்ஷி... அவரு மட்டும் நினைச்சிருந்தா உன் டீடைல்ஸை கண்டுபிடிக்க எவ்வளவு நேரம் ஆயிருக்கப் போகுது" என்றதும் அவள் தடுமாறி "அது" என்று யோசிக்க,

அவன் மேலும், "இன்னொரு விஷயம் இருக்கு... நீ போட்டிருந்த வாட்ச் டாலரெல்லாம் வேறொரு பொண்ணு எப்படி போட்டிருக்க முடியும்? நீ உயிரோட இருக்கன்னா அந்த பொண்ணு யாரு? எதுக்கு இந்த டிராமா? யாருக்காக இந்த டிராமா?" வரிசையாய் அவன் கேள்விகளை அடுக்க, அவள் எப்படி பதிலுரைப்பது என திணறிக் கொண்டிருந்தாள்.

மேலும் அவன் அவளை ஆராய்ச்சியாய் பார்த்த வண்ணம், "நீ ஜெனித்தா விக்டரா இருக்கிறதுல எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை... ஆனா சாக்ஷிங்கிறவ எங்கே தொலைஞ்சு போனா? அதுதான் எனக்குத் தெரியணும்" என்றான்.

அவள் அவனை ஏறிட்டு, "தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ணப் போறீங்க மகிழ்?" என்று அலட்சியமாய் கேட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.

"நமக்குள்ள இந்த நிமிஷம் எந்த உறவும் இல்லாம இருக்கலாம்... ஆனா உன்னைப் பத்தி தப்பா பேசறதை என்னால எப்படி கேட்டுட்டிருக்க முடியும்?" என்று அவன் சொன்ன நொடி அவன் புறம் திரும்பியவள்,

"தப்பாவா... யாரு?" என்று குழப்பமும் அதிர்ச்சியும் கலந்த பார்வை பார்த்தாள்.

அவன் நடந்ததைச் சொல்ல துணிவில்லாமல் மௌனமாய் நின்றான்.ஜென்னி அவன் முன்னே வந்து, "மகிழ் பேசுங்க" என்க,

அவன் தயங்கித் தயங்கி வேந்தனை சந்தித்தது அவர்களுக்குள் நடந்த உரையாடலையும் கைகலப்பையும் உரைக்க,

கைகட்டியபடி ஒரு எள்ளலான புன்னகையோடு பார்த்தவள், "அவர் ரொம்ப ஒழுக்க சீலர்... என்னை சொல்ல வந்துட்டாராக்கும்" என்று சொல்லியவள் அதோடு நிறுத்தாமல்,

மகிழை அவள் விழி இடுங்கப் பார்க்க, அவன் பதிலின்றி நின்றிருந்தான்.

"ஏன் மகிழ்? சந்தேகம் அவருக்கு மட்டும்தானா? இல்ல உங்களுக்குமா?" என்று கேட்டு அவள் எகத்தாளமாய் ஒரு பார்வை பார்க்க,

அவன் தீயைத் தொட்டவன் போல, "சாக்ஷி" என்று துடித்து போனான்.

"இப்ப ஏன் இவ்வளவு டென்ஷனாகுறீங்க? நத்திங் ராங் இன் இட்... சந்தேகப்படறது அக்னிப் பரீட்சை செய்றது இதெல்லாம் கடவுளுக்கே உண்டுன்னும் போது... நாமெல்லாம் ஆஃப்டிரால்... சாதாரணமான மனுஷங்கதானே மகிழ்" என்று அவள் ரொம்பவும் இயல்பாக சொல்லவும், அந்த வார்த்தை சற்று கடுமையாகவே அவனைத் தாக்கியது.

"ஏய் ... என்ன நீ? உன் இஷ்டத்துக்குப் பேசிட்டிருக்க... நான் உன்னை சந்தேகப்பட்டேன்னு இப்ப சொன்னேனா" என்க,

"அந்த எண்ணம் இல்லாமலா என்னை நீங்க இங்க வரவைச்சீங்க?!" என்று அவள் கேட்க,

"வேண்டாம் சாக்ஷி... வார்த்தையை விடாதே" என்று அவளை விரல் நீட்டி எச்சரித்தான். அவளின் அலட்சியப் பார்வையில் தன்னை அவள் நம்பவில்லை என்பதைத் தெளிந்து கொண்டவனுக்கு விழிகளில் நீர் கோர்த்தது.

"யார் யாரோ சொன்னாங்கன்னு நீ என் காதலை சந்தேகப்பட்டிருக்கலாம்... ஆனா அந்த கடவுளே வந்து சொன்னாலும் உன்னை நான் சந்தேகப்பட மாட்டேன் சாக்ஷி" என்று நிறுத்தியவன் மீண்டும்,

"ஏன்னா அந்தளவுக்கு உன்னை நான் காதலிச்சேன் டி" என்று அவன் கனத்த மனதோடு உரைக்க, அவன் வார்த்தை அவள் மனதையும் கனக்கச் செய்தது.

அதை காட்டிக் கொள்ளாமல் அவள் திரும்பியே நின்றிருந்தாள். அந்த நிராகரிப்பு அவனை ரொம்பவும் காயப்படுத்திவிட, "ஃபைன்... நான் கிளம்பறேன்... இதுவே நம்மோட லாஸ்ட்  மீட்டிங்கா இருக்கட்டும்... இன்னொரு தடவை உன்னைப் பார்க்கிற சக்தி எனக்கில்லை... குட் பை" என்று சொல்லிவிட்டு அவன் விறுவிறுவென அகல, அவன் சென்ற பின்னரே அவள் பார்வை அவன் செல்லும் திசையின் புறம் திரும்பியது.

கடலில் வீழ்ந்த பல துளிகளில் ஒரு சில துளிகளில் மட்டுமே சிற்பிக்குள் வீழ்ந்து முத்தாகும். அப்படி முத்தாய் மாறினாலும் அவை எல்லாம் அணிகலனாய் மாறிப் போற்றுதலுக்குரிய மதிப்பை அடைந்து விடுகிறதா என்ன? அப்படி விழுந்த துளிதான் அவன் அவள்மீது கொண்ட காதல். ஆனால் அது அணிகலனாய் மாறாமல் சிற்பிக்குள்ளேயே மூடிக்கிடக்க வேண்டும் என்பது விதியாகிய பட்சத்தில் யார் என்ன செய்ய முடியும்?

இருப்பினும் அவன் காதல் விலைமதிப்பற்றது தான் என்று எண்ணிக் கொண்டவள், அவன் சென்ற பாதையை ஏக்கமாய் பார்த்தாள். அதன் பின் பெருமுச்சொன்றை வெளிவிட்டவள் சோர்வாக நடந்து சென்று கார் நின்ற இடத்தை அடைந்தாள்.

அழுத்தமான மௌனத்தோடு டேவிட் அருகில் அவள் சென்று நிற்க, சோகத்தின் மொத்த குவியலாகவே கிடந்தது அவள் முகம். அவள் அப்படி நிற்பதைப் பார்த்து மிரட்சியடைந்தவன், "ஜென்னி" என்றழைக்க அவள் பதிலில்லாமல் எங்கேயோ வெறித்துக் கிடந்தாள்.

அவள் அருகாமையில் வந்து, "ஜென்னி என்ன?" என்று கேட்டு அவள் தோள்களை அவன் குலுக்க, அத்தனை நேரம் கட்டுக்குள் வைத்திருந்த அவள்  உணர்வுகளெல்லாம் கட்டவிழ்த்துக் கொண்டன. அப்படியே அவன் தோள் மீது சாய்ந்து கேவி அழத்தொடங்கினாள்.

அந்த நொடி அவள் மனநிலை என்ன நிலையில் இருந்திருக்கும் என்பதை அவனால் நன்கு உணர்ந்து கொள்ள முடிந்தது. அவள் உணர்வுகளை அவனிடம் அழுகையாய் அவள் கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்க, எந்தவிதத்திலும் அவளை இடையூறு செய்யாமல் அவள் அமைதிபெறும் வரை பொறுமையாய் நின்று கொண்டிருந்தான் அவன்... ஓர் தூணைப் போல!

Muthu pandi has reacted to this post.
Muthu pandi
Quote

Nice

You cannot copy content