You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Naan Aval Illai - 46

Quote

46

பீனிக்ஸ்

மகிழை அவள் சந்தித்துவிட்டு வந்து இரு நாட்கள் கழிந்து விட்டன. அன்று வேலை நிமித்தமாய் இரவு வெகுநேரம் விழித்திருந்த காரணத்தினாலோ என்னவோ டேவிடின் உடலும் மனமும் விடிந்த பின்னும் உறக்கத்தையே நாட, அலுவலகத்திற்குப் போக வேண்டிய நிர்பந்தத்தோடு மெல்ல எழுந்து தன் அறையின் பெரிய சாளரத்தின் திரையை விலக்கினான்.

சூரிய ஒளிக்கதிர்கள் ஒரே வீச்சில் உள்ளே பாய்ந்து அந்த அறையினைப் பிரகாசிக்க, அந்தச் சாளரத்தின் வழியே டேவிட் பார்த்த காட்சி அவன் தூக்கத்தை ஒரே நொடியில் விரட்டிவிட்டது.

கண்களைக் கசக்கியபடி இருமுறை பார்த்தவனுக்கு தான் பார்ப்பது உண்மைதானா என்ற குழப்பம். வேகமாய் அவன் அறையோடு இணைந்திருந்த பால்கனி கதவைத் திறந்தவன் மாற்றமில்லாமல் அதே காட்சியைத்தான் பார்த்தான்.

ஜெனித்தா அவன் தந்தை தாமஸோடு அந்த பங்களாவை சுற்றியுள்ள விஸ்தாரமான தோட்டத்தில் நடந்து கொண்டிருக்க, அறையை விட்டு வெளியே வராதவர் தோட்டத்தில் வாக்கிங் போய் கொண்டிருப்பதைப் பார்த்து அவன் உண்மையில் ஆனந்தப்படதான் வேண்டும். ஆனால் அதிர்ச்சிகரமாய் இருந்தது.

எப்படி இதெல்லாம் என்று யோசித்தவனுக்கு ஜென்னிதான் முழுமுதற் காரணம் என்பது புரிந்தது. மகிழை சந்தித்த அன்று அவள் அழுத அழுகையை இன்றும் அவனால் மறக்க முடியாது. ஆனால் இரண்டே நாட்களில் இந்தளவுக்கு அவள் தன்னை தேற்றிக் கொண்டிருப்பது ஆச்சர்யமாகவே இருந்தது.  தன் சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவைதான் அவள் என்று எண்ணிக் கொண்டான்.

அதே நேரம் அவள் தன் தந்தையோடு இயல்பாய்  பழகுவதைப் பார்த்து, அவர் அவளுக்கு செய்தவற்றை எல்லாம் எப்படி அவள் மறந்தாள் என அவன் வியக்கவும் செய்தான்.

தோட்டத்திலிருந்து ஜென்னி அவனைப் பார்த்துவிட்டு, "டேவிட்" என்று குரல் கொடுக்க அவளைப் பார்த்து புருவத்தை ஏற்றினான்.

அவள் "குட் மார்னிங்" என்க,

"ஹ்ம்ம்.. குட் மார்னிங்" என்று கையசைத்தான்.

"கீழே இறங்கி வாங்க" என்றவள் அழைக்க,

"ஆபீஸுக்கு டைமாச்சு" என்றான்.

"கமான் டேவிட்... லெட்ஸ் ஹேவ் அ கப் ஆஃப் காபி" என்றவளின் புன்னகையில் இருந்த உற்சாகம் அவனையும் தொற்றிக் கொண்டது.

"யா கம்மிங்" என்றவன் சில நிமிடங்களில் வெகு ஆர்வமாய் வர, அந்தத் தோட்டத்தில் புல்வெளித்தரையில் அழகாய் வட்டவடிவில் அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளில் ஜென்னியும் தாமஸும் அமர்ந்திருக்க, டேவிட் யோசனையோடு அமர்ந்தான்.

அந்தச் சம்பவத்திற்குப் பின் அவன் தன் தந்தையிடம் கோபித்துக் கொண்டு பேசாமலிருக்க, ஓரே வீட்டிலிருந்தும் அவன் அவரை பார்க்காமல் கொஞ்சம் இறுக்கமாகவே இருந்தான்.

இப்போது அவரைப் பார்த்தவனுக்கு எப்படி தன் உணர்வுகளைப் பிரதிபலிப்பதென்றே புரியவில்லை. ஜென்னி அந்தச் சமயம் ஜாடியிலிருந்த காபியை கலக்கி இருவருக்கும் கப்பில் ஊற்றி விட்டு, அவளுமே பருகத் தொடங்கினாள்.

அவன் காபியை பருகிக் கொண்டிருக்கும் போதே ஜென்னி அவனிடம்,

"டேவிட்... நான் ஒரு விஷயம் கேட்பேன்... நீங்க கரெக்டா பதில் சொல்லணும்" என்றாள்.

காபியை பருகியபடி, "ஹ்ம்ம்.. முயற்சி பண்றேன்" என்றவனைப் பார்த்து,

"உம்ஹும் அதெல்லாம் கிடையாது... கரெக்டா சொல்லணும்" என்றாள் அழுத்தமாக!

"சரி ஒகே" என்று அவன் சம்மதிக்க, ஜென்னி தாமஸை பார்த்துக் கண்சிமிட்டிப் புன்னகைத்தாள்.

அதை டேவிட் கவனிக்கத் தவறிய நிலையில் ஜென்னி அவனிடம் ,

"அது வந்து டேவிட்... எனக்கும் அங்கிளுக்கும் ஒரு டிஃப்ரன்ஸ் ஆஃப் ஒபினியன்" என்றதும் அவன் தந்தையின் புறம் தன் பார்வையை வீசியவன், "எதைப் பத்தி?" என்று கேட்டான்.

"உங்களைப் பத்திதான்..." என்றாள்.

"என்ன?" என்றவன் வியப்பாய் புருவத்தை ஏற்ற,

ஜென்னி புன்முறுவலோடு, "அது ஒண்ணுமில்லை டேவிட்... நீங்க ஒரு விஷயத்தைக் கண்டிப்பா செய்வீங்கன்னு சொல்றேன்... அவர் இல்லை மாட்டீங்கன்னு சொல்றாரு... பாயின்ட் இஸ் தட் நான் உங்களை நல்லா தெரிஞ்சு வைச்சிருக்கேனா? இல்ல..  அங்கிளா" என்றவள் சொல்லி முடித்ததும்,

அவன் உடனே ஜென்னியைப் பார்த்து, "இதுல என்ன டௌட்? நீ சொன்னதுதான் சரியாயிருக்கும்... அவராவது என்னைப் பத்தி தெரிஞ்சு வைச்சுக்கிறதாவது" என்றான் தந்தையை இளக்காரமாய் பார்த்தபடி!

ஜென்னி புன்னகை ததும்ப தாமஸிடம், "என்ன அங்கிள்? இப்பவாச்சும் நம்பறீங்களா?" என்றதும் அவர் முகம் மலர்ந்தது.

டேவிட் அவர்கள் இருவரின்  முகப்பாவனைகளை புரிந்து கொள்ள முடியாமல், "ஆமா அதென்ன விஷயம் ஜென்னி?" என்று கேட்டான்.

"அங்கிள் சொன்னாரு நீங்க இந்தத் தடவை சொன்ன மாதிரி ப்ரீஸ்டாவீங்க... ஆனா நான் சொன்னே... நீங்க மேரேஜ் பண்ணி நிச்சயம் அஞ்சு ஆறு பசங்களுக்காவது பாஃதராவீங்கன்னு" என்று அவள் சொன்னதுதான் தாமதம். காபி பருகிக் கொண்டிருந்தவனுக்கு புரையேறியது.

ஜென்னியும் தாமஸும் ஒருவரை ஒருவரைப் பார்த்து கொண்டு திருட்டுத்தனமாய் சிரிக்க, டேவிட் கப்பை மேஜை மீது வைத்து எழுந்து கொண்டு, "எனக்கு ஆபீசுக்கு லேட்டாகுது" என்று அவர்களிடம் இருந்து நழுவிக் கொண்டான் .

ஜென்னி அவன் செல்வதைப் பார்த்துவிட்டு வாய்விட்டுச் சிரிக்க, தாமஸின் அமைதியற்ற மனமும் அவளிடம் பேசியதில் லேசாய் மாறியிருந்தது.

அவர் ஜென்னியைப் பார்த்து, "நீ சொல்றது மட்டும் நடந்துடுச்சுன்னா?" என்றவர் கேட்க,

"கண்டிப்பா நடக்கும் அங்கிள்... நீங்க பாருங்களேன்" என்றாள்.

மகனைப் பற்றி நன்கு தெரிந்தாலும் ஜென்னியின் வார்த்தையில் இருந்த உறுதி அவர் மனதில் நம்பிக்கையை விதைத்திருந்தது.

"சரி உள்ளே போவோமா?" என்றவள் கேட்டு அவர் கரத்தைப் பற்றி எழுந்திருக்க உதவியவள் வாக்கிங் ஸ்டிக்கை அவர் கரத்தில் கொடுத்தாள்.

அவர் நடந்தபடியே, "என் உடம்பும் மனசும் உண்மையிலயே லேசா இருக்கு ஜென்னி, டேவிட் அடிக்கடி சொல்லுவான்.. பணம் காசு எவ்வளவு இருந்தாலும் அன்புக்கு நிகரான சக்தி எதுவுமில்லைனு... இப்போ அதை நான் உண்மையிலயே உணர்றேன்" என்றவர் அவள்  தலையை கரிசனமாய் தடவ,

"உண்மைதான் அங்கிள்... பணம் கொடுக்க கொடுக்க குறையும்... ஆனா அன்பை மட்டும் கொடுக்க கொடுக்க நிறைஞ்சுகிட்டே இருக்கும்" என்றாள்.

அவர் அவளை அதிசயத்துப் பார்த்து, "உனக்கு நான் செஞ்ச அநியாயத்தை எப்படிம்மா உன்னால மன்னிக்க முடிஞ்சுது" என்றவர் கேட்க,

"அங்கிள் ப்ளீஸ்... அதைப் பத்தி பேச  வேண்டாம்னு சொல்லி இருக்கேன் ல" என்றவள் சொன்னாலும் அவர் முகத்தில் தங்கியிருந்த குற்றவுணர்வு மாறவேயில்லை.

அவரை மிதமான புன்னகையோடு பார்த்தவள், "நீங்க கில்டியா பீஃல் பண்ண வேண்டிய அவசியமில்லை... நீங்க டேவிடோட அப்பா... நீங்க எப்பவும் தலைநிமிர்ந்து பெருமையோடுதான் இருக்கணும்" என்றாள்.

டேவிடின் தந்தை என்ற விதத்தில் இன்று அவர் உண்மையிலேயே அத்தனை பெருமிதமாய் உணர்ந்தார். ஆயிரம் சூரியனின் பிரகாசத்தை அவள் வார்த்தைகள் புகுத்தி அவருக்குள் மண்டியிருந்த சுயநலமென்ற காரிருளை விலகச் செய்திருந்தது.

ஜென்னி தாமஸை அவர் அறையில் ஓய்வெடுக்கச் செய்துவிட்டு, தன் அறைக்கு அவள் சென்று கொண்டிருக்க, டேவிட் அவளை வழிமறித்து நின்றான்.

அவன் முகத்தில் உள்ள கோபத்திற்கான காரணம் புரியாதவள் போல, "ஆபீசுக்கு லேட்டாச்சுன்னு சொல்லிட்டு... இன்னும் கிளம்பாம இருக்கீங்க" என்றவள் கேள்வி குறியாய் பார்க்க,

"ஏன் டேட்கிட்ட அப்படி சொன்ன?"  கேட்டு முறைப்பாய் பார்த்தான்.

"நான் எங்கே சொன்னேன்... அது நீங்க சொன்னதுதானே டேவிட்" இயல்பாய் கேட்டு அவள் தலையசைக்க,

"அது நான் வேறொரு சூழ்நிலையில உன்கிட்ட சொன்னது ஜென்னி" என்றவனின் பார்வை எங்கோ வெறித்தது.

"ஸோ வாட்? அது இப்பவும் நடக்கலாமே" என்றவள் சொல்லவும் ஆச்சர்யமாய் பார்வையை அவள் புறம் அவன் திருப்ப,

"நான் உங்களுக்கு சூப்ப்ப்ப்ரா ஒரு பொண்ணு பார்த்து வைச்சிருக்கேன்... உங்களை மாதிரியே ரொம்ப ஃப்ரெண்ட்லியான அன்பா பழகுற கேரக்டர்" என்றாள் அவன் முகமலர்ச்சியோடு! அவள் சொன்னதை  கேட்ட அவன் முகம் ஏமாற்றமாய் மாறியது.

"ஜென்னி ப்ளீஸ்... ஸ்டாப் டாக்கிங் நான்ஸென்ஸ்... என் டெசிஷன் என்னன்னு நான் அன்னைக்கே சொல்லிட்டேன் ல? அப்புறம் ஏன் நீ இப்படி தேவையில்லாம பேசிட்டிருக்க... நான் உன் லைஃப்ல உன் டெசிஷன்ல எப்பையாச்சும் தலையிட்டிருக்கேனா? அப்புறம் நீ மட்டும் ஏன்?" என்றவன் கேட்டுவிட்டு அவன் அந்தப் பேச்சை வளர்க்காமல் அங்கிருந்து வேகமாய் அகன்றுவிட்டான்.

அவன் கோபத்தை அவள் பொருட்படுத்தவில்லை. ஆனால் அப்போதைக்கு அவனை எப்படியாவது திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துவிட வேண்டுமே என்ற எண்ணம்தான் அவளுக்குப் பெரிதாய் இருந்தது.

எப்போதும் போல் அலுவலகத்திற்கு தயாராகி டேவிட் புறப்பட, ஜென்னியிடம் கோபமாய் பேசிவிட்டதை எண்ணி அவன் மனதிற்கு உறுத்ததலாய் இருந்தது. ஆதலால் அவளிடம் பேச அவள்  அறைக்குச் செல்ல, என்றுமில்லாமல் அவள் இன்று முற்றிலுமாய் வேறு பாணியில் உடையணிந்திருப்பதை பார்த்து வியப்பாய் நின்றுவிட்டான்.

"ஜென்னி" என்றழைத்து அவன் அறைக்கதவருகில் நிற்க,

"உள்ளே வாங்க" என்றாள்.

அவன் அவளின் தோற்றத்தை வியந்தபடி பார்த்தவன், "இன்னைக்கு ரொம்ப புதுசா தெரியற" என்க,

"உ ம்ஹும்... புதுசில்ல டேவிட்... இதான் என் பழைய லுக்" என்று அவள் சொல்லவும், அவன் குழப்பமானான்.

அவள் புன்னகையோடு, "சாக்ஷி எப்படி இருப்பான்னு எனக்கு நானே பார்த்துக்கணும்னு தோணுச்சு டேவிட்... அதான் காட்டன் புடவை.. பின்னல்  மல்லிகை பூ... எப்படி இருக்கு?" என்று அவள் ஆர்வமாய் கேட்க, அவளின் அந்த மாற்றத்தை அவனால் நம்ப முடியவில்லை.

சாக்ஷி என்ற பெயரைக் கூட விளிக்க விரும்பாதவள் இன்று முழுமையாய் சாக்ஷியின் தோற்றத்தில் மாறி நிற்பதை அவன் அதிசயத்துப் பார்த்தான்.

அவளோ, "ஏன் டேவிட்?...  சாக்ஷி அழகா இருக்காளா?... இல்ல ஜெனித்தாவா?" என்று கேட்டாள்.

அவன் புன்னகை அரும்பிய முகத்தோடு, "எனக்கு என்ன தோணுதுன்னா... சாக்ஷிதான் ரொம்ப அட்ரக்டிவ்" என்று நிறுத்தியவன் மேலும் அவளைக் கூர்ந்து பார்த்து "ஆனா ஜென்னி... அட்மைரபபிள்" என்க, அவள் முகம் விகசித்தது.

டேவிட் அதன் பின்னர் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்து தயக்கத்தோடு, "ஐம் சாரி ஜென்னி... நான் ஏதோ டென்ஷன்ல உன்கிட்ட கோபமா பேசிட்டேன்" என்க,

அவள் மாறாத புன்னகையோடு, "அது பரவாயில்லை... ஆனா நான் சொன்ன மேட்டர்" என்று அவள் கேட்கவும்,

"எனக்கு ஆபீசுக்கு லேட்டாகுது" என்று சொல்லிவிட்டு அந்த நொடியே அவன் புறப்பட்டான்.

'எஸ்கேப் ஆகுறீங்களா? நான் எப்படியாவது உங்களை வழிக்கு கொண்டு வர்றேன்' என்று தானே உரைத்துக் கொண்டவள், பின்னர் கண்ணாடியில் நின்று அவளை மேலும் கீழுமாய் பார்த்தாள்.

மகிழைப் பார்த்ததிலிருந்து அவள் மனம் முற்றிலுமாய் மாறியிருந்தது.

அவனின் விழிகளில் அவளுக்கே உரித்தான ஆழமான காதலை பார்த்த பின் ஏற்பட்ட அபரிமிதமான சந்தோஷம் இது.

அதுவே போதும் இந்த ஜென்மம் முழுக்க என்றளவுக்காய் அவள் உள்ளமெல்லாம் அவன் காதலை எண்ணி பூரிப்படைந்திருக்க, சாக்ஷியாய் தான் மகிழின் பார்வையில் எப்படியிருந்திருப்போம் என்று அவளுக்குள் தோன்றிய அசட்டுத்தனமான ஆசையை தீர்த்துக்கொள்ளவே அவ்விதம் உடையணிந்து பார்த்துக் கொண்டாள்.

முதல்முறையாய் அவள் விழிகள் அவளையே பார்த்து ரசித்துக் கொண்டது. அந்தச் சமயம் ராகவ் டேவிடின் வீட்டிற்குள் நுழைந்தான். அவன் தயக்கத்தோடு முகப்பு அறையில் நின்று பார்வையைச் சுழற்ற,

டேவிட் அவனைப் பார்த்துவிட்டு, "உள்ளே வாங்க ராகவ்" என்றழைத்தான்.

டேவிடை பார்த்ததும் கொஞ்சம் கடுப்பானவன் அவனிடம் அலட்சியப் பார்வையோடு, "ஜென்னியைப் பார்க்கணும்" என்று இறுக்கமாகவே உரைத்தான். ராகவிற்கு தன்னைச் சுத்தமாய் பிடிக்கவில்லை என்பதை டேவிட் அவன் பார்வையிலேயே உணர்ந்தாலும்

புன்முறுவலோடே அவனைப் பார்த்து, "ஜஸ்ட் எ மினிட் ராகவ்" என்றவன் அங்கிருந்த பணியாள் ஒருவனை அழைத்து, ராகவை ஜென்னியின் அறைக்கு அழைத்துப் போகச் சொல்லி பணித்தான்.

அவன் டேவிடிடம் மரியாதைக்காகக் கூட ஓர் நன்றியுரைக்காமல் கடந்து சென்றான்.  ராகவ் அவள் அறையில் வாசலில் வந்து நிற்க, ஜென்னியின் மனமெல்லாம் மகிழைச் சுற்றி மட்டுமே இருந்தது.

'எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்'

என்ற பாடல் மிதமாய் ஒலித்துக் கொண்டிருக்க, அவள் மனநிலைக்கு ஏற்றவாறாய் இருந்த அந்தப் பாடலை அவள் விழிகள் மூடி இருக்கையில் அமர்ந்து தலைசாய்த்து ரசித்திருந்தாள்.

'எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

தவம்போல் இருந்து யோசிக்கிறேன்

அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்

கேட்பதை அவனோ அறியவில்லை

காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே

அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை'

உள்ளே நுழைந்தவன் அப்படியே அந்தப் பாடலின் சந்தங்களில் தன்னிலை மறந்து கிடந்தவளின் புதுவிதமான உடையலங்கரத்தைப் பார்த்துத் திகைப்புற்றான்.

அவளோ அவன் வருகையை அறியாமல் அந்த பாடலுக்குள்ளேயே மூழ்கிகிடந்தாள்.

அவள் தேகத்தின் நிறத்தோடு போட்டி போட்டுக் கொண்டு அழகாய் மிளிரும் அந்த மஞ்சள் நிற காட்டன் புடவையில் பின்னிய கூந்தலும் அதனில் அவள் சூடியிருந்த மலரும் என அவளை உச்சி முதல் பாதம் வரை நிதானமாய் ரசித்தவனின் மனம் சலனப்பட்டது.

காந்தமாய் ஈர்த்தவளை அவன் மனம் தீண்டச் சொல்லி அழுத்தம் கொடுக்க, அவனின் காம உணர்வுகள் எரிதழலாய் மாறி அவனுக்குள் தீ முட்டியது. ஆனால் அவள் அதனைச் சற்றும் உணர்ந்திருக்கவில்லை.

அவளைத் தன் பார்வையாலேயே வருடியவன் நிதானம் இழந்து தன்னிலை மீறி நெருங்கியவனுக்கு...  அந்தக் கணம் சடாரென எப்போதோ எங்கேயோ அவளை இதே கோலத்தில் இத்தனை நெருக்கமாய் பார்த்த நினைவு தோன்ற, அவன் அப்படியே ஸ்தம்பித்துவிட்டான்.

'எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்'

பாடல் முடிவுற அவள் சஞ்சரித்திருந்த அந்த இன்பகரமான உலகம் சட்டென்று மறைந்த நொடி அவள் உள்ளுணர்வு தலைதூக்கி அவளை எச்சரிக்க, "ராகவ்" என்று அதிர்ந்து அவனை விலக்கிவிட்டு விழித்துக் கொண்டவளுக்கு இதயம் அதிவேகமாய் படபடத்தது. அவள் தள்ளிய வேகத்தில் அவனோ சற்று நிலைதடுமாறி நின்றான்.

Muthu pandi has reacted to this post.
Muthu pandi
Quote

Nice

You cannot copy content