You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Naan Aval Illai - 51

Quote

51

அவனின் நினைவலைகள்

ஜென்னி அப்போது சையத்தின் அலைபேசிக்கு அழைத்துக் கொண்டிருந்தாள். அவளின் அழைப்பு அடித்து ஓய்ந்து போகும் நிலையில் அவன் எதிர்புறத்தில் அழைப்பை ஏற்றான்.

அவள் அவனிடம் எப்படிக் கேட்பது என்று தயங்கி மௌனத்தில் இருக்க, "நீங்க என்ன கேட்கப் போறீங்கன்னு எனக்குத் தெரியும் ஜென்னி" என்று சிரத்தையின்றி ஒலித்தது அவன் குரல்.

அப்போதே அவளுக்குப் புரிந்து போனது. நிறைய பேர் டிவியில் ஒளிப்பரப்பான  செய்தி குறித்து அவனிடம் கேட்டிருப்பார்கள் என்று. அவளும் அது உண்மைதானா என்று கேட்கவே அழைத்திருப்பாள் என்று அவன் எண்ணிக் கொண்டான்.

ஆனால் அவள் அவனைச் சந்தேகித்து அழைக்கவில்லை. அவளுக்குத் தெரியும். அந்தச் செய்தி உண்மையாய் இருக்க வாய்ப்பில்லை என்று.

அவள் நடந்தது என்னவென்று விசாரிக்க வாயெடுக்கும் போதே,

சையத் தன் கணீர் குரலில், "டிவில வந்த நியூஸ் உண்மைதான்... ஜென்னி" என்று அழுத்தமாய் உரைக்க, "சையத்" என்று அவள் அதிர்ச்சியானாள்.

"வேறெதாவது கேட்கணுமா?" என்று அவன் கேள்வி எழுப்ப

அவள் அதிர்ச்சியிலிருந்து மீளாமல், "என்ன சொல்றீங்க சையத்?" என்று புரியாமல் கேட்டாள்.

"உண்மையைதான் சொல்றேன்... எனக்கும் மதுவுக்கும் தொடர்பிருந்துச்சு... அவ கூட நான் லிவ்விங் டூகெதர் ரிலேஷன்ஷிப்ல இருந்தேன்" என்றான்.

"சையத் ஸ்டாப் இட்... அவசரத்தில வார்த்தையை விடாதீங்க"

"ஜென்னி ப்ளீஸ்... இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க... நான் இப்போ எதுவும் பேசுற மனநிலையில இல்லை" என்று சொல்லிவிட்டு அவன் அழைப்பைத் துண்டித்துவிட, அவன் குரலில் இருந்த வலியும் வேதனையும் அவளால் நன்றாகவே உணர்ந்து கொள்ள முடிந்தது.

அவள் யோசனையோடு அமர்ந்திருக்க ரூபா அவளிடம், "சையத் என்ன சொன்னாரு ஜென்னி?" என்று ஆர்வம் ததும்பக் கேட்டாள்.

"எல்லாம் உண்மைதான்னு" என்று குழப்பமுற சொல்லிவிட்டு, அவள் டீவி செய்தியை மீண்டும் பார்க்கலானாள்.

மது கொஞ்சமும் மனசாட்சியே இல்லாமல் சையத் தன்னைக் காதலித்து ஏமாற்றிவிட்டதாக சொல்லிக் கொண்டிருந்தாள்.

"அப்போ மது டிவில சொல்றது உண்மைதானா?" என்று ரூபா வினவ,

"சான்ஸே இல்லை" என்று ஜென்னி தீர்க்கமாய் உரைத்தாள்.

"அப்போ சையத் ஏன் அப்படி சொல்லணும்?"

"தெரியலயே ரூப்ஸ்" என்றவள் ஆழ்ந்த சிந்தனைக்குள் செல்ல,

"இப்போ என்ன பண்ணப் போறீங்க ஜென்னி" என்று கேட்டதுமே ஜென்னி அவளை நோக்கி,

"சென்னைக்கு டிக்கெட் புக் பண்ணு... அதுவும் இப்பவே" என்றாள்.

அவளும் சொன்னதை ஏற்று தலையசைத்துவிட்டு வெளியேறப் போக,

"ரூப்ஸ் ... டிக்கெட் எனக்கு மட்டும்" என்று அழுத்தமாய் உரைத்தாள் ஜென்னி.

"ஏன் ஜென்னி? நானும் உங்க கூட வர்றேனே" என்று ரூபா சொல்ல அவள் தன் கைகளைக் காட்டி வேண்டாமென்றாள்.

ராகவ் அன்று அவள் மீது கொண்ட வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ள ரூபாவை அடைத்து வைத்ததை இன்றளவும் அவளால் மறக்க முடியாது. மீண்டும் தன்னால் ரூபாவுக்கு எந்தவித ஆபத்தும் நேர்ந்துவிடக் கூடாது என்ற அச்சத்தின் காரணத்தாலயே அவளை உடன் அழைத்துச் செல்ல விருப்பமில்லாமல் ஜென்னி அவளைத் தவிர்த்தாள்.

ஊடகங்களில் பரப்பபடும் செய்திகள் யாவும் உண்மையா பொய்யா என ஊர்ஜிதமாவதற்கு முன்னதாகவே அது மக்களிடையில் காட்டுத்தீ போல் பரவிவிடுகிறது.

அதுவும் அந்தச் செய்தி எந்தக் கோணத்தில் படமாக்கப்படுகிறதோ, அந்தக் கண்ணோட்டத்திலேயே மக்களின் பார்வைக்கும் கொண்டு செல்லப்படுகிறது.

அதுதான் சையத்தின் விஷயத்திலும் நிகழ்ந்து கொண்டிருந்தது. அவன் ஒரு சினிமா பிரபலம் என்பதால், அவன் மீது சுமத்தப்பட்ட  அவதூறான செய்தி இன்னும் அதிவேகமாய் பரவியது.

அவன் பக்கமிருக்கும் நியாயம் குறித்து அதுவரையில் துளியளவும் யாரும் கவலைப்படவில்லை. ஒரே நொடியில் சையத்தின் பிம்பம் சுக்குநூறாக உடைக்கப்பட்டுவிட, அவன் தங்கியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ளவர்கள் எல்லோருமே அவனை ஓர் குற்றவாளி போலப் பார்க்கத் தொடங்கினர்.

அவனை மட்டுமல்லாது அவன் தங்கை தம்பி அம்மா என்று எல்லோரையுமே குத்தலான பார்வையாலும் பேச்சாலும் வேதனைப்படுத்தினர்.

டீவி சேனல்கள் அந்தச் செய்தியை மேலும் சுவாரஸ்யமாக்க தீவிரமாய் அது பற்றி விவாதித்ததோடு அல்லாமல் ராகவிடமும் இது பற்றி கருத்து கேட்டனர்.

அவனோ, "எனக்கு இது பத்தி எல்லாம் தெரியாது... சையத் எனக்கொரு நல்ல ஃப்ரெண்ட் அவ்வளவுதான்" என்றுரைத்து வெகுசாமர்த்தியமாய் தப்பிக் கொண்டான்.

ராகவின் இந்த விட்டேற்றியான பதில் ஜென்னிக்கு அதீத சந்தேகத்தைக் கிளப்பிவிட, அவன் அப்படிதான் சொல்வான் என்று சையத் முன்னமே யூகித்திருந்தான்.

ராகவ் ஒருவாரம் முன்பு அலைப்பேசியில் பேசும் போது அவனை எச்சரித்திருந்தான்.

"நீ ஜென்னியை வைச்சு அந்தப் படத்தை எடுக்கக் கூடாது... அதுக்கு நான் ஒருநாளும் அனுமதிக்க மாட்டேன்" என்று உரைக்க,

ஜென்னி அந்தப் படம் முடித்த பிறகுதான் திருமணம் என்று சொன்னதினால், அவனுக்கு ஏற்பட்ட ஏமாற்றமும் எரிச்சலும் அவனை அப்படி சையத்திடம் பேச வைத்திருந்தது

ஆனால் சையத் அவன் எண்ணம் புரியாமல், "உன் அனுமதியை இங்க யாரும் கேட்கல" என்று பதிலுரைக்க,

"வேண்டாம் சையத்... என்னை எதிர்த்துக்கிட்டு எதையும் செய்யணும்னு நினைக்காதே... அது உனக்குதான் ஆபத்தா முடியும்"

"மிரட்டுறியா?"

"ஆமான்டா... மிரட்டுறேன்... புத்திசாலியா இருந்தா பிழைச்சுக்கோ" என்று சொல்லி சிரித்துவிட்டு ராகவ் அழைப்பைத் துண்டிக்க, சையத் இந்த பிரச்சனையின் தீவிரத்தை அப்போதே உணர்ந்து சுதாரிக்காமல் விட்டதன் விளைவு. இன்று அனுபவிக்கிறான்.

ராகவ் தன் மீது கொண்ட வஞ்சத்திற்காக மதுவை பகடைக்காயாக பயன்படுத்திக் கொள்ள, அப்போது சையத்திற்கு அவனை கொலை செய்யும் அளவுக்காய் கோபத்தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.

ஜென்னி சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த போது இருள் அடர்ந்திருந்தது. அங்கேதான் டேவிட் அவளை வேதனை நிரம்பிய முகத்தோடு வழியனுப்பினான். அந்தத் தருணத்தை மறக்க முடியுமா?

அந்தக் காட்சி அவள் விழிகளின் முன் வந்து அரங்கேற, அந்த நொடி அவனின் நினைவலைகள் எழும்பி அவள் மனதில் ஆர்ப்பரிக்கத் தொடங்கியிருந்தது. அவள் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும், அவளின் கார் ஓட்டுநர் அவளுக்காகக் காத்திருந்தான்.

எப்போதும் டேவிட்தான் அவளை நேரடியாக வந்து அழைத்துப் போவது வழக்கம். அவள் மனமோ அவன் வரவில்லையே என்று எண்ணி ஏமாற்றமடைய, அந்த முட்டாள்தனத்தை அவள் என்னவென்று சொல்வது.

அவனைத் தானே நிராகரித்துவிட்டுத் தானே அவனை எண்ணி எண்ணி மருகுவானேன்?!

அவளுக்கு உண்மையிலேயே புரியவில்லை. நட்பென்ற வட்டத்திற்குள் அவள் வலுக்கட்டாயமாக நிற்க முயற்சி செய்ய, அது வலிந்து அவளை வெளியே தள்ளிக் கொண்டிருந்தது.

சென்னைக்குள் நுழைந்த கணத்தில் இருந்த டேவிடின் நினைப்பு மட்டும்தான். நாம் நினைக்கக் கூடாதென்று எதை எண்ணுகிறோமோ நேர்மறையாய் அது மட்டுமே நம் எண்ணஅலைகளை ஆட்சி செய்யும்.

அதே போல் ஜென்னியின் நினைவுகளையும் டேவிடின் எண்ணமே ஆளுமை செய்து கொண்டிருந்த நேரத்தில் எதிர்பாராமல் ஒரு பைக் தாறுமாறாய் வந்து அவர்கள் காரில் மோத வந்தது.

"அய்யோ பாத்து" என்றவள் பதறி ஓட்டுநரிடம் உரைக்க அவரும் எதிரே வந்த பைக்கை இடிக்காமல் வெகுஜாக்கிரதையாக கார் ஸ்டியரிங்கை திருப்பிவிட்டார்.

ஜென்னி நிம்மதி பெருமூச்சுவிடலாம் என்று எண்ணுவதற்கு முன்னதாக, அந்த பைக் பின்னே வந்த காரில் மோதிவிட்டது. நொடிப்

 பொழுதில் அந்த விபத்து நிகழ்ந்தேறிவிட, இடித்த அந்த கார் கண்இமைக்கும் நேரத்தில கடந்து சென்றுவிட்டது.

அவள் பதறிக் கொண்டு, "காரை நிறுத்துங்க" என்று ஓட்டுநரிடம் உரைக்க, "வேண்டாம் மேடம்... நம்ம போயிடுவோம்" என்றவனிடம் அவள் ஆவேசமாக,

"நிறுத்துங்கன்னு சொன்னேன்" அதிகாரமாய் உரைக்க அவன் மறுகணமே பிரேக்கை அழுத்தி காரை ஓரமாய் நிறுத்திவிட, அவள் விரைவாக இறங்கி ஓடினாள்.

அதற்குள் விபத்து நிகழ்ந்த இடத்தில் கூட்டம் கூடியிருக்க, அவசரமாக அவர்களை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.

ஓர் இளைஞன் இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடக்க, "தூக்குங்க ஹாஸ்பிடல் போகணும்" என்று சூழ்ந்திருந்த கூட்டத்தைப் பார்த்து கூறவும்,

அவர்களில் ஒருவன், "ஆம்புலன்சுக்கு ஃபோன் பண்ணியாச்சு" என்றான்.

"ஆம்புலன்ஸ் வர்ற வரைக்கும் காத்திருக்க முடியாது... தூக்குங்க ப்ளீஸ்" என்றவள் பதட்டத்தோடு சொல்ல, அங்கிருந்தவர்களும் அவள் சொன்னதை ஆமோதித்து அவனை தூக்கி வந்து அவளின் காருக்குள் படுக்க வைத்தனர்.

டிரைவரிடம், "சீக்கிரம் ஹாஸ்பிடல் போங்க" என்று பணித்தபடி காரில் ஏறியவள் காயப்பட்டவன் அருகில் அமர்ந்து கொண்டாள். அவனின் இரத்தம் தோய்ந்த முகத்தை அவள் நிமிர்த்திப் பிடிக்க, அந்த நொடி அவள் அதிர்ந்து போனாள்.

"வேந்தன்" என்று சொல்லியவளுக்கு படபடப்பு மிகுந்தது.

அவன் முகத்தையும் பார்க்கக் கூட அவள் விருப்பப்படவில்லை. ஆனால் இப்படி ஒரு நிலையில் அவனைப் பார்க்க நேரிடும் என்று அவள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

அவன் மேல் மலையளவுக்குக் கோபம் இருக்கிறது. ஆனால் காயப்பட்டு வலியால் துடித்துக் கொண்டிருப்பவனிடம் அதை காட்டுமளவுக்காய் அவள் உள்ளம் இறுகிப் போய்விடவில்லை.

கார் மருத்துவமனைக்குள் நுழைந்தவுடன் துரிதமாய் அவனைச் சிகிச்சை அறைக்கு அழைத்து போகச் செய்தாள்.

அவள் மகிழுக்கு இதைப் பற்றி தெரிவிக்க எண்ணியவள் நேரடியாக அவனிடம் பேச சங்கடப்பட்டுக் கொண்டு அவளின் கார் ஓட்டுநர் மூலமாக விஷயத்தை சொல்லச் சொன்னாள்.

அவனும் அவள் சொன்னதை அப்படியே சொல்லியவன், அதிர்ந்த பார்வையோடு, "செத்துத் தொலையட்டும் நான் வரமாட்டேன்னு... சொல்றார் மேடம்" என்று மகிழ் தெரிவித்ததை உரைக்க, அவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

அப்போது எழிலின் எண் அவளிடம் இருப்பது நினைவுக்கு வர, தன் ஓட்டுநரிடமே அவளுக்கு அழைத்து விவரத்தைக் கூறச் சொன்னாள்.

எழில் பதறித் துடித்து வருவதாகத் தெரிவித்தாள். ஜென்னி ஒருவாறு நிம்மதி பெருமூச்சுவிட்டு புறப்பட எத்தனித்த போதுதான் வேந்தனின் நிலைமை ரொம்பவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் உரைத்தனர்.

ஜென்னிக்கு அங்கிருந்து புறப்பட மனமில்லாமல் இயலாமையோடு தலையைப் பிடித்தபடி அமர்ந்து கொண்டிருக்க, மகிழ் நர்ஸின் வழிகாட்டுதலோடு அங்கே வந்து நின்றான்.

அங்கே அவளை அவன் எதிர்பார்க்கவில்லை. அவளும் அவன் அவ்விதம் சொல்லிவிட்டு வந்து நிற்பான் என எதிர்பார்க்கவில்லை. இருவரும் பார்வையாலேயே அதிர்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

பார்க்க வேண்டும் எனத் துடித்த போதெல்லாம் பார்க்க முடியாமல் போனது. ஆனால் பார்க்கவே கூடாதென்று நினைத்திருக்கும் போது பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

இத்தகைய விதியை யார் வடிவமைத்தது.

மகிழ் உணர்ச்சியற்ற பார்வையோடு, "நீ இங்கே என்ன பண்ணிட்டிருக்க?" என்று கேட்க, அவள் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு நடந்த விபத்தைக் குறித்து விவரமாய் அவனிடம் சொல்லி முடித்தாள்.

"உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை?" என்று கேட்டவனின் பார்வையில் அத்தனை கோபம்!

"என்ன பேசறீங்க மகிழ்? உயிருக்காக போராடிட்டு இருக்கிறவரை எப்படி அப்படியே விட்டுட்டுப் போக முடியும்?"

அவளை அலட்சியமாய் அவன் ஏற இறங்கப் பார்த்து, "அவ்வளவு நல்லவாளா நீ?!" என்று இளக்காரமாய் கேட்டவன்

மேலும் அவளிடம், "சரி கிளம்பு... அவன் செத்தாலும் பிழைச்சாலும் உனக்கென்ன ஆகப் போகுது" என்று இறுக்கமான பார்வையோடு உரைக்கவும் அவள் சீற்றமானாள்.

அவள் கனலேறிய பார்வையோடு அவனை நோக்கி, "எதுக்கு இப்படி மனுஷத்தனமே இல்லாம பேசிட்டிருக்கீங்க? என்னை விட உங்களுக்கு அவர் மேல... கோபமா?!" என்றவள் கேட்டுவிட அவன் கொதிப்போடு,

"உன்னை விட எனக்குதான்டி அவன் மேல கோபம்... ஏன்னா அவன் எனக்கு செஞ்சது துரோகம்... நான் அப்படிதான் பேசுவேன்" என்று திட்டவட்டமாய் உரைத்தான்.

அவள் மனம் கேட்காமல் இறங்கிய குரலில், "அதெல்லாம் இப்ப பேச வேண்டாம் மகிழ்" என்றாள்.

அவன் தன்னிலையில் இருந்து துளியளவும் இறங்காமல்,  "ஏன் சாக்ஷி? அவன் சாகக்கிடந்தா அவன் எனக்கும் உனக்கும் செஞ்சதெல்லாம் இல்லன்னு ஆயிடுமா?!" என்று கேட்டவனை அவள் ஆழ்ந்து பார்த்தாள்.

அவனின் வார்த்தைகளில் இருந்த கடுமை அவளைப் பேச்சற்று போகச் செய்தது. அவன் தொடர்ச்சியாய் காயப்பட்டதினால் அவன் மனதளவில் ரொம்பவும் இறுகிப் போயிருந்தான் என்பது அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அதே நேரம் அவனுக்கு வேந்தனிடம் என்னதான் கோபம் இருந்தாலும் அவனுக்கு அது வார்த்தையளவில்தான் இருக்கிறது. இல்லையெனில் அவன் இங்கே வந்திருப்பானா என்று எண்ணியவள் மேலே அவனிடம் வாக்குவாதம் செய்யாமல் புறப்பட எத்தனித்த போது அவளுக்கு வேறொரு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

எழிலும் மாயாவும் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தபடி நின்றிருந்தனர். அதுவும் மாயாவின் விழிகள் அத்தனை உஷ்ணமாயிருக்க, அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டனரா என எண்ணி அவள் அச்சமுற,

மகிழும் ஜென்னியின் முகப்பாவனையை பார்த்து துணுக்குற்றுத் திரும்பி நோக்கினான்.

அவன் பார்வையில் அதிர்ச்சியில்லை. மாறாய் அலட்சியம் குடிக்கொண்டிருக்க அவன் ஜென்னியிடம், "எழிலுக்கு நீ இன்பாஃர்ம் பண்ணியா?" என்று கேட்க,

"ஹ்ம்ம்ம்" என்றாள் தயங்கியபடி!

மாயாவின் முகத்தைப் பார்த்தவனுக்கு அவள் மனம் என்னவெல்லாம் எண்ணிக் கொள்ளும் என்று நன்றாகவேத் தெரியும். அதைப் பொருட்படுத்தாமல் அவளைப் பார்க்காதது போல் அவன் திரும்பிக் கொள்ள, அவனின் நிராகரிப்பு அவளைப் பெரிதும் ரணப்படுத்தியது.

எழில் நேராக மகிழிடம் வந்து, "அண்ணாக்கு என்னாச்சு மகிழ்? எப்படிதான் இருக்காரு?" என்று படபடப்போடு வினவ,

"தெரியல... ட்ரீட்மென்ட் கொடுத்துகிட்டிருக்காங்க" என்றவன் பதில் சொல்ல மாயா அவர்கள் அருகில் வராமல் பின்தங்கியே நின்று கொண்டாள்.

நர்ஸ் நேராக வந்து ஜென்னியிடம், "டாக்டர் உங்களை கூப்பிடுறாரு" என்க, அவள் அந்த நர்ஸிடம் மகிழை சுட்டிக் காட்டி, "இவர்தான் பேஷன்ட்டோட ரிலேட்டிவ்" என்று தெரிவிக்க, அவனும் அந்த நர்ஸின் பின்னோடு மருத்துவரைப் பார்க்க சென்றான்.

ஜென்னிக்கு இனி தான் அங்கே நிற்பது உசிதமில்லை என்று எண்ணிப் புறப்பட எத்தனிக்க எழில் அவளிடம், "சாக்ஷி நில்லு" என்றாள்.

அவள் கலக்கத்தோடு எழிலைப் பார்க்க அவள் பார்வையாலேயே வெறுப்பை உமிழ்ந்தபடி, "நீ பெரிய ஆளுதான்... எல்லார்கிட்டயும் உன் பேர் ஜென்னின்னு சொல்லி நம்ப வைச்சு முட்டாளாக்கிட்ட இல்ல" என்று கேட்க,

"இல்ல க்கா... அது வந்து" என்றவள் தவிப்புற்று பதில் சொல்ல முடியாமல் நின்றாள்.

"நீ என்னவா வேணா இருந்துட்டு போ... ஆனா என் தம்பி வாழ்க்கையில குறுக்கிடாதே" என்று அழுத்தமாய் தெரிவிக்க, ஜென்னி அதிர்ந்து நின்றாள்.

எழில் மேலும், "அவனும் நீயும் காதலிச்சிருக்கலாம்... ஆனா இப்ப நீ அவன் வாழ்க்கையில குறுக்கிடறது சரியில்ல" என்றதும் அவள் உடைந்த நிலையில்,

"நீங்க தப்பா புரிஞ்சுகிட்டிருக்கீங்க க்கா... நான் மகிழ் வாழ்க்கையில குறுக்கிடணும்னு நினைக்கவே இல்ல" என்க,

"நீ நினைக்காமதான் மகிழும் மாயாவும் இப்போ பிரிஞ்சிருக்காங்களா?!" என்று கேட்கவும், அவளின் விழிகளில் நீர் சூழ்ந்து கொண்டு வார்த்தைகள் வராமல் தொண்டை அடைத்தது.

அதற்குள் மகிழ் வந்து, "வாயமூடு எழில்... என்ன ஏதுன்னு தெரியாம உன் இஷ்டத்துக்குப் பேசிட்டிருக்க" என்று கோபம் கொண்டவன் ஜென்னியின் புறம் திரும்பி,"நீ முதல்ல இங்கிருந்து கிளம்பு" என்க, அவள் யோசனைக் குறியோடு அவனைப் பார்த்தாள்.

"சாக்ஷி கிளம்பு" என்றவன் மீண்டும் அழுத்திக் கூறவும் அங்கிருந்து புறப்பட்டவள், மாயாவை ஒரு நொடி நின்று பார்க்க அவளோ வெடுக்கெனப் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள்.

அந்தச் சமயம் எழில் தன் தம்பியிடம், "அவளை சொன்னதும் உனக்கு அப்படியே கோபம் பொத்துக்கிட்டு வருதோ?!" என்று கேட்க,

"லூசு மாதிரி பேசாதே... உனக்கு சண்டை போடணும்னா போய் அதோ நிற்கிறா பாரு... அவகிட்ட போய் போடு" என்று மாயாவை சுட்டிக்காட்டியவன் மேலும் தன் தமக்கையிடம்,

"சம்பந்தமில்லாதவகிட்ட கோபப்பட்டு என்ன பிரயோஜனம்?" என்று மாயாவின் காதுபடவே உரைத்தான். அப்போது அவன் பார்வை இருக்கையில் இருந்த ஜென்னியின் கைப்பேசியைக் கவனித்தது.

அவசரமாய் அதனைக் கையில் ஏந்தியவன் ஜென்னியிடம் கொடுக்க சென்றுவிட, எழலுக்கு ஆத்திரம் பொங்கியது.

எழில் மாயாவின் அருகாமையில் வந்து, "அவ போஃனை விட்டுட்டுப் போயிட்டாளாம்... அதைக் கொடுக்க அப்படியே பதறிட்டு ஓடுறான்" என்றதும்,

"விடுங்க க்கா... உங்க தம்பி அவளைத்தானே காதலிச்சாரு... நான் அவங்க நடுவுல வந்தவதான்" என்று சொல்லி விரக்தியாகப் பார்க்க,

எழிலுக்கு அவளின் பதில் அதிர்ச்சிகரமாய் இருந்தது. மாயாவை சமாதானம் செய்து அழைத்துவர எழில் சாரதா இல்லத்திற்குச் சென்ற சமயத்தில்தான் வேந்தனுக்கு விபத்து என்று தகவல் வந்து இருவரும் அடித்துபிடித்து மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.

அங்கே மகிழும் ஜென்னியும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த போதே மாயாவிற்கு மனம் வெறுத்துப் போனது.

ஜென்னி காரில் ஏறுவதற்கு முன்னதாக, "சாக்ஷி" என்று மகிழ் குரல் கொடுக்க அவள் திரும்பிப் பார்த்தாள். அவன் அவளின் கைப்பேசியை நீட்ட, அதனை பெற்றுக் கொண்டவளின் விழி கலங்கியிருந்ததை கவனித்தவன்,

"ஸாரி... எழில் அப்படி உன்கிட்ட பேசியிருக்கக் கூடாது" என்றான்.

அவள் அவனை கூர்ந்து பார்த்து, "நீங்களும் மாயாவும் பிரிஞ்சிருக்கீங்களா மகிழ்?!" என்று அவள் கேட்க,

"அது உனக்குத் தேவையில்லாத விஷயம்" என்று திரும்பி நடந்தான்.

"என்னாலதான் நீங்க இரண்டு பேரும் பிரிஞ்சிருக்கீங்கன்னு உங்க அக்கா சொல்றாங்க" என்று வினவினாள்.

"அப்படி எல்லாம் எதுவும் இல்ல" என்று அவள் முகம் பாராமலே அவன் சொல்ல,

"நீங்க பொய் சொல்றீங்க... நம்ம இரண்டு பேரும் அன்னைக்கு மீட் பண்ணிக்கிட்டாதாலதான் உங்களுக்குள்ள பிரச்சனை" என்றவள் தெளிவாய் கணித்தாள்.

"ஆமாம்... அதனாலதான் பிரச்சனை... இப்ப என்னங்கிற?!" என்று அவளை அவன் திரும்பிப் பார்த்து முறைக்க,

"நான் வேணா மாயாகிட்ட பேசட்டுமா?!" நிதானமாகவே அவள் அவனிடம் கேட்க,

அவன் எகத்தாளமாய் சிரித்துவிட்டு, "நீ எனக்கு இதுவரைக்கும் செஞ்சதெல்லாம் பத்தலயா... இதுல அவகிட்ட வேற பேசி... இருக்கிற பிரச்சனையை பெருசாக்க பார்க்குறியா?!" என்றான்.

"என்ன பேசறீங்க மகிழ்?" அவள் தவிப்போடு வினவ,

"கரெக்ட்டாதான் பேசறேன்... நீங்க இரண்டு பேரும் என் வாழ்க்கைகுள்ள வராம இருந்திருந்தா நான் நிம்மதியா இருந்திருப்பேன்... என் லைஃப்ல நான் செஞ்ச பெரிய தப்பு... உன்னைக் காதலிச்சது.. அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது" என்று தன் மனவேதனையெல்லாம் வார்த்தைகளாக அவளிடம் கொட்டித் தீர்த்துவிட்டு அவன் அகன்றுவிட, அவளோ கதிகலங்கிப் போனாள்.

எதுவெல்லாம் அவள் நிகழக் கூடாதென்று பயந்தாளோ அதுவெல்லாம் நிகழ்ந்துவிட, எல்லாமே அவள் கையை மீறிப் போய்விட்டது என்பது மட்டும் அவளுக்கு நன்றாகவே புரிந்தது. சோர்ந்த நிலையில் காரில் ஏறி அவள் புறப்பட்டுவிட, வேந்தனுக்கு சிகிச்சைகள் முடிந்து மருத்துவர் மகிழிடம்

"ஹீ இஸ் நவ் ஒகே... மயக்கத்துல இருக்காரு... அப்புறமா மயக்கம் தெளிஞ்சதும் போய் பாருங்க" என்க, எழிலும் மாயாவும் ஒருவாறு நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

ஆனால் மகிழோ உணர்வுகளற்ற முகத்தோடு அவர் சொன்னதை உள்வாங்கிக் கொண்டான். இன்று அவன் பிழைத்துக் கொண்டுவிட்டாலும் இன்னும் எத்தனை நாளைக்கு... அவனை மரணம் நெருங்காமல் இருக்கும். அதை எப்படி வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவிக்கப் போகிறோம் என்ற இக்கட்டில் அவன் நின்றிருக்க,

எழில் அப்போது மாயாவிடம், "ரொம்ப லேட்டாயிடுச்சு மாயா... நீ கிளம்பு" என்றவள் தன் தம்பியின் புறம் திரும்பி,

"போய் அவளை வீட்ல விட்டுட்டு வா" என்றாள்.

அவன் விழி இடுங்கப் பார்த்து, "எதுக்கு? அவங்களுக்கு எல்லாம் தனியா போய் பழக்கம்தான்... போயிடுவாங்க" என்று அவன் யாரையோ சொல்வது போல் பேச, மாயா தன் கணவனின் நிராகரிப்பால் உள்ளூர உடைந்து கொண்டிருந்தாள்.

ஆனால் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "இல்ல அண்ணி.. எனக்கு யார் துணையும் வேண்டாம்... நானே போயிடுவேன்" என்று அவள் பதிலுரை கொடுக்க,

எழில் விடாமல், "சும்மா இரு மாயா... எப்படி அவ்வளவு தூரம் தனியா போவ... அதுவும் இருட்டிடுச்சு வேற" என்று சொல்லி தன் தம்பியிடம் மாயாவை சமிஞ்சையால் அழைத்துப் போக சொல்லிக் கட்டாயப்படுத்தினாள்.

அவன் சலிப்போடு, "சரி வர சொல்லு" என்றதும்,

"அப்படி ஒண்ணும் அவர் சலிச்சிக்கிட்டு என்னைக் கூட்டிட்டு போகத் தேவையில்லை... எனக்கு போகத் தெரியும்" என்றவள் ஒரு நொடி கூட தாமதிக்காமல் செல்லவும் எழில் வேதனையோடு தம்பியை நோக்கினாள்.

அவன் உணர்ச்சிகளற்ற பார்வை ஒன்றை உதிர்த்துவிட்டு அப்படியே இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

எழிலுக்கும் மகிழின் அந்த இறுக்கத்தை நம்ப முடியவில்லை. அவனின் இறுக்கம் தளர வேண்டுமெனில் மாயா அவனைப் புரிந்து கொண்டு இறங்கி வர வேண்டும். ஆனால் அது சாக்ஷியால் மட்டுமே சாத்தியம்.

இப்போது இருக்கும் நிலைமையில் ஜென்னிக்கு எந்தப் பிரச்சனைக்கு முக்கியத்துவம் தருவதென்றே புரியவில்லை. வரிசையாய் பிரச்சனைகள் அணிவகுத்து அவள் மனோதிடத்தைத் தகர்த்துக் கொண்டிருக்க, டேவிட் இப்போது தன் அருகாமையில் இருந்திருக்கக் கூடாதா ?

ஏங்கித் தவித்தது அவள் மனம். அவனைப் பார்ப்பதற்கும் பேசுவதற்கும். ஆனால் அப்படிச் செய்துவிடவே கூடாதென  அவளை அவளே கட்டுப்படுத்திக் கொண்டு இருக்க, டேவிடின் நினைவு அவள் உறக்கத்தை களவாடிக் கொண்டது.

இரவெல்லாம் விழித்திருந்ததினால் அவள் அகம் முகம் என எல்லாம் சோர்ந்து போயிருக்க,  அப்போது அவளின் அலைப்பேசி ரீங்காரிமிட்டது.

அதனை எடுத்தவள், "ஹலோ" என்க, டேவிடின் தந்தை தாமஸின் குரல் ஒலித்தது.

அவள் சற்று தெளிவுப்பெற்று, "என்ன விஷயம் அங்கிள்?" என்க,

"நீ இப்போ எங்க இருக்கம்மா?" என்று கேள்வி எழுப்பினார்.

"சென்னையிலதான் அங்கிள்... ஏன் ?"

"கொஞ்சம் உடனே வீட்டுக்கு வர முடியுமா?" என்று கேட்க,

அவள் யோசித்துவிட்டு மேலே எதுவும் விசாரிக்காமல், "வர்றேன் அங்கிள்" என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்.

விரைவாய் அவள் டேவிட் வீட்டை அடைய தாமஸ் முகப்பறையில் அமர்ந்திருக்க, "என்ன அங்கிள்? என்னாச்சு?" என்றவள் கேட்டு அவர் கவலை தோய்ந்த முகத்தைக் கூர்மையாய் பார்த்தாள்.

அவர் தயக்கத்தோடு, "டேவிட்" என்று ஆரம்பிக்கவும்,

"டேவிடுக்கு என்ன ?" என்று பதறினாள்.

"டேவிட் சென்னையை விட்டுப் போறானாம்... அவனுக்கு ரிலாக்ஸேஷன் தேவைப்படுதுன்னு ஏதேதோ சொல்றான்... என்னால அவன்கிட்ட பேசி கன்வின்ஸ் பண்ண முடியல... எனக்கென்னவோ அவன் நீ சொன்னா கேட்பான்னு தோணுது" என்றவர் உரைத்த மறுகணமே தாமதிக்காமல் அவன் அறை நோக்கி விரைந்தாள்.

டேவிட் அப்போதுதான் தன் படுக்கையில் அமர்ந்தபடி ஒரு ஊதா நிற ஷர்ட்டை தடவிப் பார்த்து தன் வேதனையை உள்ளூர விழுங்கிக் கொண்டிருக்க, ஜென்னி அவனின் அந்தச் செய்கையை விசித்திரமாய் பார்த்தாள்.

'அது என்ன ஷர்ட்?'  என்று அவள் மனம் கேட்ட கேள்விக்கான விடையை  அவன் மட்டுமே சொல்லக் கூடும்.

Muthu pandi has reacted to this post.
Muthu pandi
Quote

Nice

You cannot copy content