You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Naan Aval Illai - 54

Quote

54

விதி வலியது

"ஏய்... கம்மிங் வீக் ராகவோட படம் ரிலீஸாகுது... நம்மெல்லாம் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ போறோம்... என்ஜாய் பண்றோம்" என்று வேந்தனின் நண்பன் சரவணன் சொல்லிக் கொண்டிருந்தான்.

மற்றொரு நண்பன் யோசனையோடு, "படம் நல்லா இருக்குமா" என்று சந்தேகித்துக் கேட்க,

"டேய்... டைரக்டர் நந்தகுமார் படம்டா... அதுவும் இல்லாம ராகவோட படமெல்லாம் வரிசையா ஹிட்தான்... இதுவும் ஹிட்டாகும்... ஹிட்டாயிடுச்சுன்னா இது அவனுக்கு ஹேட்ரிக்" என்று ராகவின் புகழுரையை பாடிக் கொண்டிருக்க,

அந்த நண்பர் குழு மொத்தமாய் அதற்கு ஆமோதித்தது வேந்தனைத் தவிர. அவன் மட்டும் சிகரெட்டைப் பிடித்தபடி ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தான்.

அதைக் கண்டு கொண்ட சரவணன், "என்ன மச்சான்? பேசவே மாட்டேங்குற... படத்துக்கு நீ வர்றியா இல்லையா?!" என்று கேட்கவும் வேந்தன் தன் சிகரெட்டைக் காலில் மிதித்துவிட்டு நிமிர்ந்து பார்த்து,

"இல்ல சரோ.. நான் உடனே கனடா கிளம்பணும். ஸோ நான் வர முடியாது" என்க, எல்லோரின் முகமும் வாடிப்போனது.

"என்ன மச்சான்? இப்படி சொல்ற" என்று ஒருவன் வருத்தமுற, எல்லோருமே வேந்தனிடம் அவனை இன்னும் இருவாரங்கள் தங்கியிருக்க சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தனர்.

ஆனால் அவன் வேலை இருப்பதாக சொல்லி திட்டவட்டமாய் மறுத்துவிட்டு, "டைமாச்சு... வீட்ல தேடுவாங்க... நான் கிளம்பறேன்" என்று புறப்பட, அவனை இருக்க சொல்லி அவன் நண்பர்கள் கேட்க, யாருக்கும் அசைந்து கொடுக்காமல் அவன் தன் பைக்கை இயக்கிப் புறப்பட்டுவிட்டான்.

அவனின் நினைப்பெல்லாம் சாக்ஷியை பற்றியே இருக்க அவர்களோடு அவனால் இயல்பாகக் கலந்து பேச முடியவில்லை. அவள் முகம் திரும்பத் திரும்ப அவன் கண்முன்னே வந்து போய் கொண்டிருந்தது.

போதாக் குறைக்கு அவளை நெருக்கமாய் பார்த்ததிலிருந்து அவன் அவனாக இல்லை. அவளை அடைய வேண்டும் என்ற ஆசை அபரிமிதமாய் பெருகியிருக்க அவள் தன் தம்பியின் காதலுக்கு உரியவள் என்ற ஒரே விஷயம் மட்டும்தான் அவன் தன் எல்லையை மீறவிடாமல் கட்டுக்குள் நிறுத்தியிருந்தது. ஆனால் அவளைப் பார்க்க வேண்டுமென்று உள்ளூர தோன்றிய ஆசையில் சாரதா இல்லத்தின் வாசலில் பைக்கோடு சென்று நின்றான்.

அவனின் வெகுநேரக் காத்திருப்பில் ஏமாற்றமே மிஞ்ச, திரும்பிச் செல்லும் போது அவளே அந்த வழியாகத் தனித்து நடந்து வந்து கொண்டிருந்தாள். அது அவனின் அதிர்ஷ்டமா இல்லை  அவளின் துரதிஷ்டமா?

அவள் தனிமையில் நடந்து வந்து கொண்டிருக்க அவன் தன் பைக்கை தாறுமாறாக கொண்டுவந்து அவளை வழிறித்து நிற்கவும் துணுக்குற்றாள் சாக்ஷி.

"கொஞ்சங் கூட அறிவில்லயா உங்களுக்கு... இப்படி குறுக்கால வந்துதான் வண்டியை நிறுத்துவாங்களா?!" என்றவள் கடிந்து கொள்ள அவன் உரக்கச் சிரித்துவிட்டு,

"நானாடி உன் வழில வந்தேன்... நீதான்டி என் வழில வந்த" என்றான்.

வேந்தனின் குரலை அவள் அடையாளம் கண்டுகொண்டாள். முந்தைய நாள் மகிழ் வீட்டில் அவன் நடந்து கொண்ட விதத்தை அவளால் எப்படி மறக்க முடியும்.

அவளுக்குள் படபடப்பு அதிகரிக்க அவனிடம் பேச்சு கொடுக்காமல் அவனை அவள் கடந்து செல்ல முற்பட, எந்த பக்கமும் வழியில்லாமல் அவன் பைக் வழிமறித்தது.

தவிப்போடு, "உங்களுக்கு என்ன வேணும் இப்போ?" என்று கேட்க,

"நீதான் வேணும்" என்க, அவளுக்கு தேகம் முழுக்க பற்றி எறிந்தது போல் இருக்க சீற்றமானவள்,

"சே... நீங்க போய் மகிழோட அண்ணனா? என்னால நம்பவே முடியல" என்றவள் முகத்தைச் சுளிக்க,

அவன் புன்னகை ததும்ப, "நான் அவனோட அண்ணன் இல்ல... அவன்தான் என்னோட தம்பி" என்றான்.

அவள் அங்கே நிற்க முடியாமல் அவனை கடந்து செல்ல முயற்சி செய்ய அவன் வழிவிடாமல் தன் பைக்கில் அவளுக்குத் தடுப்பணை போட்டபடி, "நான் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டுப் போடி" என்றான்.

"என்ன கேட்டீங்க?" அவள் புரியாமல் கேட்க,

"என் கூட கனடா வந்துடுன்னு சொன்னேனே மறந்துட்டியா?"

அவள் எரிச்சலோடு, "அன்னைக்கே நான் அதுக்கு பதில் சொல்லிட்டேன்" என்றவள் உரைக்க,

"என்னடி சொன்ன?" என்று அவன் குழப்பமாய் கேட்க,

"செருப்பு பிஞ்சிருன்னு சொன்னேனே... மறந்துட்டீங்களா?" என்று அழுத்தம் திருத்தமாய் சொல்லி நிறுத்தினாள்.

அவன் சினத்தோடு பைக்கில் இருந்து இறங்கி வந்து அவளை உரசியபடி "எங்க அடிடி பார்ப்போம்?" என்க, அவளும் சீற்றத்தோடு, "வேண்டாம்... நான் சத்தம் போட்டுக் கத்தி ஊரைக் கூட்டுவேன்" என்றவள் எச்சரிக்க அவன் அந்த நொடி பார்வையைச் சுழற்றினான்.

இருள் சூழ்ந்திருந்த அந்த இடத்தில் குடியிருப்புகள் கூட ஒன்றிரண்டுதான் இருந்தது.

அவன் அலட்சியமாகச் சிரித்தபடி, "கத்துடி... அன்னைக்கு மாதிரி இல்ல... இங்க உன்னைக் காப்பாத்த ஒரு ஈ.. காக்கா கூட இல்ல" என்று அவன் வன்மமாய் உரைக்க, அவளை பயம் ஆட்கொண்டது.

வெலவெலத்துப் போனவள் சுற்றிலும் ஏதேனும் சத்தம் எழுகிறதா எனச் செவியைத் தீட்டிக் கொண்டு கேட்க, அவ்வப்போது வேகமாய் சீறிக் கொண்டு கடந்து சென்ற வாகனங்களின் சத்தம் மட்டுமே கேட்டது.

அப்போதுதான் அவள்  உணர்ந்தாள். மாயாவை விடுத்து தனியே புறப்பட்டு வந்தது எத்தனைப் பெரிய தவறு என்று. மகிழைப் பற்றிய சிந்தனையில் கோவிலில் வந்து அமர்ந்து தன்னிலை மறந்து கிடந்தவளுக்கு நேரம் கடந்து இருள் அடர்ந்து கொண்டிருப்பதை உணர முடியாமல் போனது.

கோவில் அர்ச்சகரின் குரல் கேட்டு விழிப்படைந்தவள் அங்கிருந்து அப்போதுதான் புறப்பட்டாள்.  கைப்பேசியையும் இல்லத்திலேயே மறந்துவிட்டதால் அதுவும் அவளின் நேரத்தை மறக்கடித்திருந்தது. இல்லையெனில் மாயா அவளை அழைத்து இருக்கும் இடத்தைக் கேட்டிருப்பாளே?!

அருகிலிருக்கும் கோவிலுக்குத்தானே என்று எப்போதும் போல் புறப்பட்டு வந்தவளுக்கு இப்படி வேந்தன் வழிமறித்து தவறாய் நடந்து கொள்வான் என்று முன்னமே தெரியுமா என்ன?

விதி வலியது என்பார்களே. அது அவள் விஷயத்தில் ரொம்பவும் பொருந்திப் போனது. எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டு அவள் அவனிடமிருந்து விலகிச் செல்ல முயற்சி செய்ய அவன் கரம் அவளின் வெற்று இடையை அணைத்துப் பிடித்தது.

பதறியவள் அவன் கரத்தை இழுத்துத் தள்ளியபடி, "யாராச்சும் காப்பாத்துங்க" என்று சத்தமிட, அவன் சிரித்துக் கொண்டே அவளை நெருங்கவும் அவள் தன் கையிலிருந்த ஸ்டிக்கால் அவனைத் தாக்க முற்பட்டாள்.

அந்த ஸ்டிக்கை அவள் வீசியதால் அவனுக்கு அடிபட அவளை விட்டு விலகியவன், கோபத்தில் அதனை அவள் கையிலிருந்து பறித்துத் தூக்கியெறிய அந்த நொடி அவளும் தடுமாறி கீழே விழ நேர்ந்தது.

அவள் ஸ்டிக் விழுந்த சத்தத்தைக் கேட்டு அதன் திசையை கணித்தவள், "என் ஸ்டிக்" என்று தட்டுத்தடுமாறி எடுக்கப் போக, அப்போது யாரும் எதிர்பாராமல் அதிவேகமாய் வந்த கார் அவளை இடித்தது.

தடுமாறி அவள் எழமுடியாமல் ரோட்டில் விழ, அவளைக் காப்பாற்ற முற்பட்டால் தான்தான் பிரச்சனையில் சிக்கிக் கொள்வோம் என்று எண்ணியவன் அவளுக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கூட கவனிக்காமல் வேகமாக தன் பைக்கை ஓட்டிச் சென்றுவிட்டான்.

இந்தச் சம்பவத்தை வேந்தன் சொல்லி முடிக்கும் போது அவன் முகம் குற்றவுணர்வில் மூழ்கியிருக்க, மகிழ் உயிரற்ற பார்வையோடு கிடந்தான்.

அவன் பார்வை கண்ணெதிரே இருக்கும் எதையும் காட்சிப்படுத்தவில்லை. சாக்ஷியின் முகத்தை மட்டுமே முன்னிறுத்தியது. அந்தச் சம்பவத்தை கற்பனை செய்து பார்த்துத் துடித்துப் போயிருந்தான்.

'என்னை விடவா உங்களுக்கு அவர் மேல கோபம்' என்று மருத்துவமனையில் அவள் கேட்டதின் அர்த்தம் இப்போது புரிந்தது அவனுக்கு.

அவள் உரைத்தது எத்தனை வலி மிகுந்த வார்த்தை. அதனை உணராமல் அவளைக் கடிந்து கொண்டதை எண்ணி வருத்தமுற்றவன் தன் அவசர புத்தியை தானே சாடிக் கொள்ள, "மகிழ்" என்று வேந்தனின் அழைப்பு அவனை வெறுப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

"உன்னை கொல்லணுங்கிற அளவுக்கு வெறி எனக்கு வருது... ஆனா முடியல... உன் உயிரை அவ காப்பாத்தியிருக்கா பாரு... அது அதுதான் உனக்குப் பெரிய தண்டனை... நீ உயிரோட இருக்குற ஒவ்வொரு நொடியும் அதை நினைச்சு நினைச்சு குற்றவுணர்வில சாகணும் டா" என்றவனை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் உரைக்க, அவனின் கோபத்தையும் வலியையும் வேந்தனால் அப்போது புரிந்து கொள்ள முடிந்தது.

அதே நேரம் அது சரி செய்யக் கூடிய கோபமும் அல்ல என்று அவனுக்குத் தெரியும். ஆனால் சாக்ஷியைப் பார்த்து மன்னிப்பு கோர வேண்டும் என்று அவன் மனம் துடித்து கொண்டிருந்ததும் உண்மை.

அன்று அவனுக்கு விபத்து நிகழ்ந்து எல்லோரும் அவனை அவள் காரில் கிடத்திய போது அரைகுறை மயக்கத்தில்தான் இருந்தான்.  அவள் காரில் அவன் தலையை நிமிர்த்திப் பிடித்த போது அவனும் அவள் முகத்தைப் பார்க்க நேர்ந்தது. அந்த மயக்க நிலையிலும் அவள் முகத்தை அவன் விழிகள் அடையாளம் கண்டுகொண்டன. மறக்கக் கூடிய முகமா அது.

அதுவும் அவனைப் பார்த்த நொடி அவள் பார்வையில் கோபம் ஏற்பட்ட போதும் அதனை மறந்து அவன் உயிரை காப்பாற்ற அவள் துடித்ததை இப்போது எண்ணினாலும் அவனுக்கு வலியாயிருந்தது.

சாக்ஷி வாழ்க்கையில் தான் ஏற்படுத்திய குழப்பத்திற்கும் அவளுக்குச் செய்த அவமானத்திற்கும் மன்னிப்பு என்ற வார்த்தை ஈடாகாதுதான். ஆனால் வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் அவனுக்கு அந்த மன்னிப்பைக் கோர்வதன் மூலமாக  லேசாய் ஒரு மனஅமைதி கிட்டும் என்ற நப்பாசைதான்.

Muthu pandi has reacted to this post.
Muthu pandi
Quote

Nice

You cannot copy content