You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Naan Aval Illai - 59

Quote

59

வார்த்தைகளுக்கு வேலையில்லை

ராகவ் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட, காரில் மகிழ் டேவட் முன்னே அமர ஜென்னி பின்னே அமர்ந்து கொள்ள மூவரும் புறப்பட்டனர். மூவரும் அழுத்தமான மௌனத்தைக் கடைப்பிடிக்க ஜென்னி இருவரிடமும் பேச்சு கொடுக்காமல் ஜன்னல் புறம் எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

காற்றாடி போல் காற்றடிக்கும்  திசையெல்லாம் பறப்பது போல் அவள் மனம் ரொம்பவும் லேசாகி இருந்தது. அப்போது மகிழின் குரல் அதனை தடைபடுத்த, "சாக்ஷி" என்றழைத்தான்.

"ஹ்ம்ம்" என்றவள் ஒருவித தயக்கத்தோடு குரலெழுப்ப,

"என்கிட்ட எல்லாத்தையும் சொல்லாம மறைச்சிட்ட இல்ல நீ" என்று கேட்க அவள் டேவிடை நோக்கினாள். அவன் அவள் பார்வை புரிந்து அவள் புறம் திரும்பவேயில்லை.

மகிழ் மேலும் அவள் மௌனமாய் இருப்பதைப் பார்த்து, "நான் உனக்கு மூணாவது மனுஷனாய் போயிட்டேனா சாக்ஷி... உன் வலியிலும் வேதனையிலும் எனக்குப் பங்கில்லையா?" என்றவன் வினவ,

"நீங்க தாங்கமாட்டீங்க மகிழ்... அதுவும் இல்லாம நீங்க வேதனைப்படுறதை என்னால பார்க்க முடியாது" என்றவள் குரல் தழுதழுக்க,

"நீ இவ்வளவு வலியையும் கஷ்டத்தையும் தனியா தாங்கிக்கிட்டியே... உன்னால எப்படி முடிஞ்சது?!" என்றவன் கேட்டு கண்ணீர் விட, டேவிட் அப்போது மகிழ் தோளைத் தொட்டு அவனை அமைதிப்படுத்த முற்பட்டான்.

"நான் தனியா இல்ல மகிழ்... என் கூட டேவிட் இருந்தாரு... என்னோட எல்லா கஷ்டத்தையும் என் கூட இருந்து தாங்கிக்கிட்டாரு... என்னையும் சேர்த்து" என்றவள் உரைக்க மகிழ் டேவிடை நிமிர்ந்து பார்த்து அவன் கரத்தை அழுத்தமாய் கோர்த்து பார்வையாலேயே நன்றியுரைக்க,

 அவர்கள் வார்த்தைகளால் பரிமாறிக் கொள்ள முடியாதவற்றை அவர்கள் விழிகள் பரிமாறிக் கொண்டன. மெல்ல அவர்களுக்கிடையில் இருந்த சோகமான சூழ்நிலை மாறியிருக்க, டேவிட் தன் காரை சாரதா இல்லத்தின் வாசலில் நிறுத்தினான்.

ஜென்னி அந்த இடத்தைப்  பார்த்து அதிர்ந்தவள் டேவிடிடம் தன் பார்வையைத் திருப்ப, "ஏன் இங்க வந்தீங்க" என்று தயக்கமாய் கேட்க,

மகிழ் பின்னே வந்து கார் கதவைத் திறந்து, "வா சாக்ஷி" என்றழைத்தான்.

"உம்ஹும் ... நான் உள்ளே வரல" என்க, அவள் கரத்தைப் பிடித்து வெளியே இழுத்தவன், "நீ வந்துதான் தீரணும்" என்றான்.

"எதுக்கு?" என்றவள் கேட்க,

"ஹ்ம்ம்... என் பொண்டாட்டி உன்னைப் பார்க்காம சாப்பிடாம தூங்காம இருக்கா? வந்து அவகிட்ட பேசு" என்றான்.

அவனை ஏற இறங்கப் பார்த்தவள், "உங்க பொண்டாட்டி சாப்பிடாம தூங்காம இருந்தா நீங்க போய் சமாதானபடுத்துங்க... அதுக்கு நான் ஏன் வரணும்?" என்றவள் கேட்க,

"அவ அவளோட ஃப்ரெண்டை பார்த்தாதான்  சாப்பிடுவாளாம்" என்று சொல்ல,

அவள் மகிழை ஆழ்ந்து பார்க்க, "வருவியா மாட்டியா?" என்று முறைப்பாய் கேட்டான். அவள் பதில் பேசாமல் சாரதா இல்லத்திற்குள் நுழைய அவளை  அறியாமல் பழைய நினைவுகளில் கண்ணீர் வடிந்து கொண்டிருக்க, டேவிடும் அவர்கள் பின்னோடு வந்து கொண்டிருந்தான்.

யாழ் அவள் உள்ளே நுழைவதைப் பார்த்து அணைத்து உச்சிமுகர்ந்து கொள்ள மாதவனும் ஆனந்தக் கண்ணீரை வடித்து அவள் தலையை தடவிக் கொடுத்தார்.

அவர்களிடம்  பேசியவள் பின், "மாயா எங்கம்மா?" என்று கேட்க,

"உன் ரூம்லதான் இருக்கா?" என்றதுமே அவளுக்கு ஒருவித படபடப்பும் தவிப்பும் ஏற்பட டேவிடும் மகிழும் பின்தங்கிய நிலையில் அவள் மட்டும் அறைக்குள் நுழைந்தாள்.

முதல்முறையாய் அவள் அறையை அவளே பார்த்தபடி நுழைய மாயா அவள் வீணையின் மீது தலைசாய்த்தபடி அழுத மேனிக்குச் சாய்ந்து கிடந்தாள். அந்தக் காட்சியை பார்த்த ஜென்னியின் விழிகள் கண்ணீரை ஊற்றாய் பெருக்கிட,

அழுகையில் தொண்டை விக்கித்தவள் பிரயத்தனப்பட்டு, "மாயா" என்று குரலெழுப்ப, அவள் நிமிர்ந்து பார்த்த மறுகணமே தன் தோழியை ஓடிவந்து அத்தனை இறுக்கமாய் கட்டிக்கொண்டு, "சாக்ஷி" என்று அழ ஆரம்பித்தாள்.

இத்தனை நாள் பிரிவை சமன்படுத்த அவர்கள் பிரியாமல் ஒருவரை ஒருவர் உணர்வுப்பூர்வமாய் தழுவிக் கொண்டிருக்க, அந்தத் தோழிகளுக்கிடையில் கண்ணீர் மட்டுமே பேசிக் கொண்டிருந்தது. அங்கே வார்த்தைகளுக்குத் வேலையில்லை.

அவர்களின் நட்பை புரிந்து கொள்ள அந்த மௌனம் மட்டுமே போதும். ஆயிரமாயிரம் வார்த்தைகள் வடிக்க முடியாததை ஒரு நொடிப் பொழுதில் அது விளக்கிவிடும். அதுவே ஆழமான அழுத்தமான நட்பு.

அந்த நட்பு எங்கேயும் போய்விடவில்லை. அவர்களுக்குள்ளேதான் ஒளிந்து  கொண்டிருக்க, இன்று மீண்டும்  உணர்வுப்பூர்வமாய் அது வெளிப்பட்டுவிட்டது.

மாயா தன் தோழியின் கரத்தைப் பிடித்துக் கொண்டு, "என்ன மன்னிப்பியா சாக்ஷி?" என்று கேட்டு கண்ணீர் விட்டுக் கதறியவளை,

"என்ன மாயா பேசுற?" என்று சொல்லி அவளைச் சமாதானம் செய்ய முயல அவள் அப்போதும் அமைதியின்றி அழுதபடியே இருந்தாள். அவள் முகமெல்லாம் அழுது அழுது வீங்கியிருந்தது.

 கண்கள் முழுவதும் ஈரம் படர்ந்திருக்க ஜென்னி அவளைச் சமாதானப்படுத்த சொன்ன வார்த்தைகள் அனைத்தும் அவள் அழுகையை அதிகரித்துக் கொண்டிருக்க இறுதியாய் அழுது அழுது அவள் மயங்கிச் சரிந்தாள்.

எல்லோருமே ஒரு நொடி பதறிவிட மகிழ் மாயாவைத் தூக்கி வந்து அவள் அறையில் படுக்க வைத்தான். மகிழ் அறையை விட்டு வெளியே வந்ததும் ஜென்னி அவனிடம், "ஹாஸ்பிடல்  கூட்டிட்டு போலாமே" என்று தவிப்புற,

யாழ்முகை அவர்களிடம், "அதெல்லாம் ஒண்ணு வேண்டாம் சாக்ஷி... எல்லாம் யூஸ்வல்தான்... பிரகனன்சி சிம்ப்டம்ஸ்... சாப்பிடாம கொள்ளாம அழுதுட்டே வேற இருந்தா இல்ல" என்று சொல்ல  எல்லோரின் முகமும்  மலர்ந்தது.

மகிழ் தன் விழிகள் அகல ஆனந்த அதிர்ச்சியில் நின்றிருந்தான். நேற்று அவன் வந்த போது அவள் கட்டியணைத்துக் கொண்டதை நினைவுகூர்ந்தவன் அவளைக் கோபத்தில் நிராகரித்ததை எண்ணி இந்த நொடி குற்றவுணர்வில் தலையிலடித்துக் கொண்டான்.

அதே நேரம் ஜென்னி டேவிடை முறைத்துக் கொண்டிருந்தாள். அவன்தானே உண்மையெல்லாம் போட்டு உடைத்தது. அந்தக் கோபம் அவளுக்கு.

அவன் அவளிடம், "எனக்கு இந்த விஷயம் தெரியாது ஜென்னி?" என்றுரைக்க,

அவள் கண்ணீர் தளும்ப, "நீங்க இப்படி செய்வீங்கன்னு நான் எதிர்பார்க்கல டேவிட்" என்றாள்.

அவன் தவிப்போடு, "உன் நல்லதுக்காகதான்" என்றவன் சொல்ல வர,

அவள் இடைமறித்து, "பேசாதீங்க டேவிட்" என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

அவளை இப்போதைக்குச் சமாதானம் செய்வது இயலாத காரியம் என அப்போதைக்கு மௌனமானான். அதற்குள் மகிழ் மாயாவின் அறைக்குள் செல்ல அவள் சோர்ந்த நிலையில் படுத்துக் கிடப்பதை பார்த்த அவன் மனம் கனத்தது.

மயக்க நிலையில் கிடந்தவள் அருகில் அமர்ந்தவன் அவள் முகத்தைத் தன் கரங்களில் ஏந்தி நெற்றியில் அழுத்தமாய் முத்தம் பதித்து கண்ணீர் பெருக்க அந்தத் துளிகள் அவள் முகத்தில் சிந்தி அவளை எழுப்பிவிட்டது.

அவன் முகத்தை அத்தனை அருகாமையில் பார்த்து அவளும் கண்ணீர் வழிந்தோட, "என்னை மன்னிச்சிடுங்க மகிழ்... உங்களை புரிஞ்சுக்காம நான் ரொம்ப காயப்படுத்திட்டேன்" என்க,

"நானும்தான்டி உன்னை புரிஞ்சுக்கல." என்றவன் அவள் கண்ணீரைத் துடைக்க, அவள் உலகையே மறந்த நிலையில் அவனை விழி எடுக்காமல் பார்த்திருந்தாள்.

மகிழ் நெகிழ்ச்சியான பார்வையோடு "ப்ரெக்னன்ட்டா இருக்கன்னு ஆன்ட்டி சொன்னாங்க" என்று கேள்வி குறியாய் அவளைப் பார்க்க,

அவள் வெட்க புன்னகையோடு தலையை அசைத்து ஆமோதிக்க, அவன் சந்தோஷத்தின் உச்சத்தைத் தொட்டிருந்தான்.

களிப்பில் மிதந்தவன் அவளை உணர்வுபூர்மாய் தன் மார்போடு சேர்த்து  இறுக்கமாய் அணைத்துக் கொள்ள அவளும் நெகிழ்ந்து அவனை அணைத்துக் கொண்டவள்,

சட்டென்று அவனை விலக்கி விட்டு, "சாக்ஷி எங்கே?" என்று கேட்டாள்.

பின்னிருந்து, "இங்கதான் இருக்கேன்" என்று ஜென்னி உரைக்க மகிழ் பதறிக் கொண்டு படுக்கையிலிருந்து எழுந்து விலகி நின்றான். மாயாவிற்கும் ஏதோ உள்ளூர குத்திய உணர்வு. அவர்கள் இருவர் முகத்தையும் பார்த்தபடி ஜுஸ் டம்ளரை ஏந்தியபடி நுழைந்தவள்,

"நான் இப்பதான் வந்தேன் பா... நான் எதையும் பார்க்கல" என்றவள் சொல்லவும் மாயா புன்னகைத்துவிட மகிழின் முகத்திலிருந்த இறுக்கம் மாறவேயில்லை.

அவன் அறையை விட்டு வெளியேறப் போக அவனை வழிமறித்து நின்றவள், "இப்ப அவசரமா எங்க போறீங்க?" என்று கேட்டு நிறுத்த,

அவன் தடுமாறினான். ஜென்னி அவன் கையில் ஜுஸ் டம்ளரை திணித்து, "உங்க பொண்டாட்டியை ஜுஸ் குடிக்க வைங்க... அதை விட உங்களுக்கு என்ன அவசர வேலை" என்றவள் சொல்ல அவள் முகத்தை அவன் ஏறிட்டான்.

எந்தவித சலனமுமில்லாமல் தெளிந்த ஓடை நீராய் இருந்த அவள் முகத்தை அவன் ஆச்சர்யமாய் பார்க்க, ஜென்னி மாயா அருகில் போய் அவள் கரத்தைப் பற்றியவள்,

"பாப்பாவை இப்படியெல்லாம் பட்டினி போடக் கூடாது.. நேரா நேரத்துக்கு சாப்பிடணும்... வேலையெல்லாம் உங்க வீட்டுக்காரரை பார்த்துக்க சொல்லு... நீ ஃபுல்லா ரெஸ்ட் எடு" என்றவள் சொல்ல மாயா கலீரென்று சிரித்துவிட்டாள்.

மகிழ் பொய்யான கோபத்தோடு, "இப்ப என்ன சொன்ன?" என்று புருவத்தை சுருக்கிப் பார்க்க,

"ஏன் செய்யமாட்டீகளா? அப்படி என்ன  கழற்ற வேலை உங்களுக்கு?" என்றவள் கேட்க,

மாயா புன்னகையோடு, "நீ வேற சாக்ஷி... அவர் காலையில போனா நைட் வர இரண்டு மூணாயிடும்... சன்டேஸ் கூட வீட்ல இருக்க மாட்டாரு" என்று சலிப்புற்றாள்.

ஜென்னி மகிழை முறைத்தபடி, "நீங்க இல்லன்னா ஜே சேனலே நடக்காதோ?!" என்றவள் கேட்க

"எனக்கும் அதே டௌட்தான்" என்று மாயா சொல்லவும் இரு தோழிகளும் கள்ளத்தனமாய் புன்னகைத்து கொண்டனர்.

மகிழ் முறைத்தபடி, "நான் ஜே சேனலுக்கு எவ்வளவு முக்கியம்னு போய் நீ உங்க வருங்கால கணவர் டேவிட் கிட்ட கேளு தெரியும்" என்று கர்வமாய் உரைக்க  ஜென்னி அவள் சிரிப்பதை நிறுத்திவிட்டாள்.

மாயா குழப்பமுற்று, "வருங்கால கணவர் டேவிடா? அப்போ ராகவ்" என்று கேட்டாள். ஜென்னி மகிழின் முகத்தை துணுக்குற்று பார்க்க அவளுக்கு ராகவை பற்றித் தெரியாது என்று சமிஞ்சை செய்தான்.

ராகவ் பற்றிய உண்மையை மகிழிடம் மட்டுமே டேவிட் உரைத்திருக்க, அதனாலேயே மாயா குழம்பினாள். மாயா அது பற்றி பேச ஆரம்பித்து ஜென்னியை காயப்படுத்தப் போகிறாளோ என்று அஞ்சி,

"அதெல்லாம் இருக்கட்டும் நீ முதல்ல ஜுஸை குடி" என்று மகிழ் அதனை அவள் வாயில் நுழைத்துப் பருக செய்தான்.

ஜென்னி அவள் குடிக்கும் வரை பொறுமை காத்தவள் பின்னர் எழுந்து,

"சரி மாயா.. நான் கிளம்பறேன்" என்று அவர்களைப் பார்த்து உரைக்க,

மாயா அவள் கரத்தை கெட்டியாய் பிடித்துக் கொண்டு, "இப்பவே போகணுமா?" என்று தோழியைப்ப் பிரிய மனசில்லாமல் அழத் தொடங்கினாள்.

ஜென்னி அவள் அருகில் அமர்ந்த, "கவலைப்படாதே மாயா... நான் அடிக்கடி உன்னை பார்க்க வர்றேன்... வெளியே டேவிட் வெயிட் பண்றாரு... நான் போகணும்" என்று சொல்ல,

மாயா மகிழைப் பார்த்து முகத்தை சுணங்க, "அனுப்பி வை... மாயா" என்றான் அவனும்.

"போ" என்று மாயா கோபித்துக் கொண்டு தலையைத் திருப்ப,

ஜென்னி அவளை கட்டியணைத்தபடி, "கோச்சிக்காதே மாயா... நான் வர்றேன்... நீ உன்னையும் வயித்தில இருக்கிற பாப்பாவையும் பத்திரமா பார்த்துக்கோ" என்று சொல்ல பிரிய மனமில்லாமல் மாயாவும் தன் தோழியை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

மாயா பெருமூச்செறிந்து அவளை விடவும் ஜென்னியும் ஏக்கப் பார்வையோடு பார்த்துவிட்டு மகிழின் புறம் திரும்பி, "மாயாவை பார்த்துக்கோங்க மகிழ்" என்றாள்.

தலையசைத்தவன், "நீ உன் உடம்பை பார்த்துக்கோ" என்று உரைக்க, ஜென்னியும் அவன் சொன்னதற்கு சரியென்று சமிஞ்சை செய்துவிட்டுப் புறப்பட்டாள்.

மாயா அவளை வழியனுப்பப் படுக்கையிலிருந்து எழுந்து கொள்ள மகிழ் கட்டாயப்படுத்தி அவளை அங்கயே நிறுத்திவிட்டு வெளியே வந்தவன்,

ஜென்னியை அழைத்துக் கொண்டு புறப்படத் தயாராகியிருந்த டேவிடிடம், "நீங்க கேட்டது மறந்துட்டு போறீங்களே டேவிட் சார்" என்று சொல்லி அறையிலிருந்த சாக்ஷியின் வீணையை எடுத்து அவனிடம் தர டேவிடின் முகம் அத்தனை பிரகாசமாய் மாறியது.

இதற்கு முன்பு வேறு யார் கேட்டிருந்தாலும் அந்த வீணையை மகிழ் நிச்சயம் தந்திருக்க மாட்டான். அதை அவன் அவளாகவே எண்ணி நேசித்து வந்தான். ஆனால் இப்போது அந்த வீணை டேவிடிடம் இருப்பதே சரியென்று பட்டது. தன்னைவிடவும் அவன் அதை நன்றாகப் பார்த்து கொள்வான் என்ற நம்பிக்கை உருவாகி இருக்க, மனதார அந்த வீணையை டேவிடிடம் அளித்தான்.

ஆனால் ஜென்னிக்கு ஒன்றும் விளங்கவில்லை. டேவிட் அந்த வீணையை பின் இருக்கையில் வைக்க, ஜென்னியும் பின்னோடே அமர்ந்து கொண்டாள். அவள் இன்னமும் கோபமாக இருக்கிறாள் என்பதை உணர்ந்தவன் எதுவும் பேசாமல் காரை ஸ்டார்ட் செய்து புறப்பட,

ஜென்னி அவனிடம், "இப்ப இந்த வீணையை அங்கிருந்து எடுத்துட்டு வர வேண்டிய அவசியமென்ன?" என்றவள் இறுகிய பார்வையோடு கேட்டாள்.

"என் வொஃய்வோடது... அதை வாங்கிட்டு வர எனக்கு உரிமை இல்லையா?" என்றவன் சொல்லி முன்னிருந்த கண்ணாடியில் அவள் முகத்தைப் பார்க்க அவளின் பார்வையில் வெளிப்பட்ட புன்னகையை உள்வாங்கிக் கொண்டது அவன் விழிகள்.

ஜென்னி நடந்தவற்றை யோசித்தபடி மௌனமாய் வந்திருக்க,

"மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ

எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ

பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா

கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா" என்ற பாடல் ஒலித்து கொண்டிருக்க,

டேவிட் அப்போது, "இந்த பாட்டோட லிரிக்ஸ் ரொம்ப நல்லா இருக்கு இல்ல" என்று பேச்சு கொடுக்க,

"லவ் ஸாங்ஸா கேட்குறீங்க போல?" என்றவள் கிண்டலாய் சொல்லிச் சிரித்தாள்.

"கடவுள் இல்லாம கூட இந்த உலகம் இயங்கலாம்... ஆனா காதல் இல்லாம  முடியாதுன்னு யாரோ என்கிட்ட சொன்னாங்க" என்றவன் புன்முறுவலோடு அவளைத் திரும்பிப் பார்க்க,

"அப்படின்னு யார் சொன்னது?" என்று ஏதும் அறியாதவள் போல் அவள் கேட்டாள்.

"முன்னாடி வந்து உட்கார்ந்தா சொல்றேன்" என்றான்.

"பரவாயில்லை... நான் பின்னாடியே இருக்கேன்" என்றவள் சொல்ல பலமாய் ஏக்கப் பெருமூச்சொன்றை வெளிவிட்டு அவளின் வீட்டில் சென்று காரை நிறுத்தினான்.

ஜென்னி அத்தனை நேரமாய் அந்த வீணையை தீண்டியபடி அவள் வாழ்வில் கடந்து வந்த இன்பகரமான காலங்களில் நிலைகொண்டிருக்க, கதவைத் திறந்து, "ஜென்னி" என்று டேவிட் அழைக்கவும் அப்போதே உயிரும் உணர்வும் பெற்றவளாய் விழித்தெழுந்தாள்.

"என்னாச்சு?" என்று அவன் கேட்கும் போது வீட்டில் கார் நின்றிருப்பதைப் பார்த்தவள் இறங்கி அவனிடம் பதில் பேசாமல் முன்னேறிச் சொல்ல,

அவள் கரத்தை அழுந்தப் பற்றி நிறுத்தியவன், "இப்போ நீ கோபப்படுறளவுக்கு நான் என்ன பண்ணிட்டேன்?" என்றவன் வினவினான்.

அவன் புறம் திரும்பி நின்று அவன் கரத்தை பிரித்துவிட்டவள்,

"யாரைக் கேட்டு மாயாகிட்டயும் மகிழ்கிட்டயும் உண்மையை சொன்னீங்க?" என்று கோபமாய் கேட்க,

"இப்ப அதனால தப்பா என்ன நடந்திடுச்சு?" என்று கேட்டு கூர்மையாய் பார்த்தான்.

ஜென்னி சிவந்திருந்த விழிகளோடு, "அவங்க இரண்டு பேரும் உடைஞ்சு போய் எப்படி அழுதாங்க பார்த்தீங்க இல்ல" என்றவள் கனத்த மனதோடு சொல்ல,

"ஆனா உன் நட்பு உனக்கு கிடைச்சிடுச்ச" என்றவன் சொல்ல,அவள் பதிலின்றி அவனை ஏறிட்டாள்.

"நீ மாயா மேல வைச்சிருக்கிறது ரொம்ப ஆழமான நட்பு... அது எந்த காலத்திலயும் பிரியக் கூடாது... அதனாலதான் நான் அப்படி செஞ்சேன்... இப்ப கொஞ்சம் கஷ்டமாவும் வலியாவும் இருந்தாலும் அது நாளடைவில மாறிடும்... ஜென்னி" என்று அவன்  பொறுமையாய் அவளுக்குச் சொல்லி புரிய வைக்க, அவனை ஆச்சர்யத்தோடு அவள் விழி எடுக்காமல் பார்த்திருந்தாள்.

"என்னாச்சு ஜென்னி?"

"இல்ல... எனக்காக இவ்வளவு செய்ற உங்களுக்கு பதிலுக்கு நான் என்ன செய்ய முடியும்" என்று அவள் நெகிழ்ந்து கேட்கவும்

அவன் புன்னகையோடு, "என் வாழ்க்கை பூராவும் என் கூடவே இரு ஜென்னி... எனக்கு அது போதும்" என்றவன் மீண்டும்,

"ஆனா ப்ரெண்டா இல்ல... ஜெனித்தா டேவிடா" என்றான்.

அவள் முகத்தில் புன்னகை அரும்ப, "அப்போ நம்ம மேரேஜை  எப்ப வைச்சுக்கலாம்" என்று கேட்டாள்.

"சீரியஸா" என்றவன் வியப்பின் விளிம்பில் நின்றிட, "ஹ்ம்ம்" என்றாள்.

அவன்  அந்த நொடியே அவளை அணைத்துக் கொண்டான். அவள் புரியாமல் நிற்க, அவள் முகத்தை முத்தங்களால் நிரப்ப அவளுக்கு வார்த்தைகளே வரவில்லை.

காதலோடு உறவு கொள்வதும் காமத்தோடு உறவு கொள்வதும் முற்றிலும் வெவ்வேறு என்பதை அவனின் மென்மையான முத்தங்கள் மூலம் அவள் உணர,

சட்டென்று அவளைப் பிரிந்தவன் தலையில் கை வைத்து கொண்டு, "ஸாரி கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்" என்க,

அவனை விழி இடுங்கப் பார்த்தவள், "உணர்ச்சிவசப்பட்டு நடந்த மாதிரி தெரியலயே...  வான்டட்டா செஞ்ச மாதிரி இருக்கு" என்றாள்.

"வான்டட்டா பண்ணி இருந்தேன்னா இப்படி இருக்காது" என்று சொல்லி அவளைக் கூர்ந்து பார்க்க, "வேறெப்படி இருக்கும்?" என்றவள் கேட்க,

அவன் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு யாருமில்லை என்பதை உறுதி செய்தவன் அவள் முகத்தருகே வரவும் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டவள் அவன் எண்ணம் புரிந்து விழிகளை மூடிக் கொள்ள, அவன் இதழ்கள் அவள் உதட்டைத் தொட்ட நொடியே நெருப்பைத் தொட்ட பிள்ளை போல வெடுக்கெனப்  பின்வாங்கிக் கொண்டாள்.

அவனை நெருங்க வேண்டும் என்று அவள் எண்ணியதென்னவோ உண்மை.  அதே நேரம் அவள் காயப்பட்ட உணர்வுகள் அதனை ஏற்க விடாமல் அவளை அச்சுறுத்தும் போது என்ன செய்வாள்.

தோற்றுப் போன பார்வையோடு, "ஸாரி டேவிட்... என்னால முடியல" என்று கண்ணீர் தளும்பத் தலை குனிந்து நின்றவளைப் பார்த்து,

"இட்ஸ் ஒகே ஜென்னி... விடு" என்று இயல்பாய் அவள் தோள்களைத் தட்டினான்.

நடந்தவற்றை எண்ணியவள் தவிப்போடு, "இப்ப கூட ஒருமுறை நல்லா யோசிங்க... நம்ம மேரேஜ் நடக்கணுமா?!" என்றவள் டேவிடிடம் கேட்க,

அவன் அழுத்தம் திருத்தமாய், "நடக்கணும்...  கிராண்டா நடக்கணும்... அந்த ஸ்பெஷல் மொமன்ட்டை நான் ரொம்ப அழகா பதிவு பண்ணி வைக்கணும்... அதை பார்க்கிற நம்ம பேரப் பசங்க எல்லாம் பிரமிச்சி போகணும்" என்று தீர்க்கமாக உரைத்தான். அவள் விழிகள் அவன் எண்ணங்களை ஈடேற்ற முடியுமா என்ற நிராசையோடு தாழ்ந்து கொண்டது.

அவன் தன் கரத்தால் அவள் முகவாயை நிமிர்த்தி, "நான் சொன்னதெல்லாம் கண்டிப்பா நடக்கும் ஜென்னி... நீ அதை பார்க்கதான் போற" என்றவன் அழுத்தமாய் சொல்ல அவள் பெயருக்கென்று புன்முறுவலித்தாலும் அவன் விருப்பத்தை எந்த நெருடலும் இல்லாமல் நிறைவேற்ற வேண்டுமே என்ற கவலை அவளை அழுத்தத் தொடங்கியிருந்தது.

Muthu pandi has reacted to this post.
Muthu pandi
Quote

Nice

You cannot copy content