You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Naan Aval Illai - 62

Quote

62

ஏகாந்தமான இரவு

ஜென்னி டேவிடின் திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு... அந்த ஏகாந்தமான இரவில்,

எல்லா சேனல்களும் பரபரப்பாய் அந்த ஒற்றைச் செய்தியை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. சென்னை மவுண்ட் ரோட் சாலையில் சென்று கொண்டிருந்த விலையுயர்ந்த ஃபெரார்ரி கார் திடீரென்று தீ பற்றி எரிந்தது.

அந்தச் செய்தியை டீவியில் பார்த்த தாமஸ், உடனே ஜென்னியை அழைத்து அந்தக் காட்சியை பதட்டத்தோடு காட்ட அவள் புருவங்கள் சுருங்கப் பார்த்திருந்தவள் சட்டென்று பதட்டமானாள்.

"அது டேவிடோட கார்" என்க,

திரும்பத் திரும்ப அந்தக் காட்சி தொலைக்காட்சியில் முன்னும் பின்னுமாய் ஒளிபரப்பப்பட, எரிவதற்கு முன்னதாக தெரிந்த அந்த காரின் எண்ணைப் பார்த்துவிட்டே அவள் அதனைக் கண்டுகொண்டாள்.

உறைந்த நிலையில் அவள் தாமஸைப் பார்க்கவும் அவர் படபடப்போடு, "இல்ல இல்ல அப்படி எல்லாம் இருக்காது... நீ டேவிடுக்கு கால் பண்ணு" என்றார்.

அவள் கரமெல்லாம் நடுங்கியபடி அவள் டேவிடுக்கு அழைக்க, 'நாட் ரீச்சபிள்' என்று ஒலிக்க, அவளுக்கு வியர்த்து வடியத் தொடங்கியது.

"அங்கிள் நாட் ரீச்சபிள்னு வருது" என்றவள் சொல்லித் தவிப்புற,

"நீ டேவிடோட செகரட்ரிக்கு கால் பண்ணும்மா" என்று ராஜனின் எண்ணைக் கொடுக்க அவருக்கும் அவள் அழைத்துப் பேசினாள்.

டேவிட் புறப்பட்டு விட்டதாகத் தகவல். அதுவும் அதே காரில்...

ஜென்னி உச்சபட்ச பதட்டத்தை அடைய தாமஸ் திடமாக, "இல்ல ஜென்னி.. அப்படியெல்லாம் டேவிடுக்கு ஒண்ணும் ஆயிருக்காது... நீ தைரியமா இரு" என்றவர் சொல்ல, அவர் மனதில் ஏதோ ஒரு அழுத்தமான நம்பிக்கை இருந்தது. மகனுக்கு எதுவும் நேர்ந்திருக்காதென்று.

ஆனால் அத்தகைய நம்பிக்கை ஏனோ ஜெனித்தாவிற்கு இல்லை. இன்னும் இன்னும் வலிகளைத் தாங்கவும் இழப்புகளைத் தாங்கவும் அவள் மனதிற்குச் சக்தியில்லை. அதுவும் இனி டேவிட் இல்லாத ஒரு வாழ்க்கையை அவளால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை.

திருமணத்திற்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில் இந்தச் செய்தி அவளுக்கு எத்தகைய அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கும் என்று வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உலகமே இருண்ட நிலையில் மீண்டும் பார்வையிழந்து விட்டதைப் போல் அவள் உணர்ந்திருக்க,

"ஜென்னி" என்ற அவனின் அழைப்பு... தன்னவனைப் பார்த்த நொடி விழிகளில் நீர் திரள, அவனை இறுக அணைத்துக் கொண்டுவிட்டாள். அதுவும் அத்தனை அழுத்தமாய். சில நொடிகள்தான் எனினும் அவன் இல்லை என்பதை அவள் ஏற்கத் தயாராகயில்லை.

டேவிட் சங்கடமாய் தன் தந்தை நிற்பதைப் பார்த்து, "ஜென்னி ரிலாக்ஸ்?" என்று சொல்லி அவளை விலக்கி நிறுத்த, அவளுக்கு யார் இருக்கிறார்கள் இல்லையென்பதைத் தாண்டி அவன் மட்டுமே நினைப்பில் இருந்தான்.

தாமஸைப் பார்த்தவள் ஏனோ அங்கே நிற்க முடியாமல் அவனிடம் என்ன ஏதென்று கூட விசாரிக்காமல் மேலே அறைக்கு சென்றுவிட்டாள்.

அவள் சென்றதைப் பார்த்தவன் டிவியில் காட்டிக் கொண்டிருக்கும் செய்தியைப் பார்த்தான்.

தாமஸ் அப்போது, "என்ன நடந்தது டேவிட்?" என்று கேட்க,

"டிரைவ் பண்ணிட்டு வந்திட்டிருக்கும் போது திடீர்னு ஃபயராயிடுச்சு... பட் எனக்கு ஒண்ணும் இல்லை... நான் கார்ல இருந்து இறங்கிட்டேன்" என்றவன் சொல்ல,

தாமஸ் நிம்மதி பெருமூச்சுவிட்டவர் மீண்டும் துணுக்குற்று, "எப்படி டேவிட் திடீர்னு கார் ஃபயராகும்?" என்று கேட்க,

"நத்திங்... ஜஸ்ட் ஏதோ பாஃல்ட்" என்க,

அவன் பொய் சொல்கிறான் என்பது அவருக்குத் தெரியும். அதே நேரம் அவன் எல்லாவற்றையும் சமாளித்துக் கொள்வான் என்ற நம்பிக்கையும் இருந்தது.

ஆதலால் அவர் மேலே அது குறித்து விளக்கம் கேட்காமல், "கொஞ்சம் கேர்புஃல்லா பார்த்து டிரைவ் பண்ணு" என்றவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது டேவிடின் பார்வை ஜென்னி சென்று திசையையே பார்த்துக் கொண்டிருந்தது.

அவர் தன் மகனின் தோளினைத் தட்டி, "போ டேவிட்... ஜென்னி ரொம்ப பயந்துட்டா... அவளைப் போய் சமாதானப்படுத்து" என்று சொல்ல,

அந்த ஒற்றை வார்த்தைக்காகக் காத்திருந்தவன் அவள் அறைக்கு விரைந்தான். அங்கே அவள் இல்லாமல் போக, அவளோ அவன் அறையில் மண்டியிட்டு ஏசுவின் படம் முன்பு கைகூப்பியபடி அழுது கொண்டிருந்தாள்.

இதுவரையில் அவள் கடவுளை வணங்கி அவன் பார்த்ததேயில்லை. அவளாக சர்ச்சுக்கோ அல்லது கோவிலுக்கும் கூடப் போனதாக அவன் அறிந்ததில்லை. அதில் அவளுக்கு விருப்பமில்லை. அவளுக்கு நேர்ந்த கதியால் கடவுள்கள் மீதே அவளுக்கு நம்பிக்கை விட்டுப் போயிருந்தது. ஆனால் இன்று அவள் அப்படி வணங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தவன்

வியப்பாகி, "ஜென்னி" என்றழைக்க, அவள் அவனைப் பார்த்த மாத்திரத்தில் இன்னும் அதிகமாய் அழ ஆரம்பிக்க அவள் தோள்களைப் பற்றி தூக்கி நிறுத்தினான்.

அவள் அவன் மீது சாய்ந்து கொண்டு,"நான் ரொம்ப பயந்துட்டேன்... " என்று அழுது கொண்டே கூற,

"எப்படி உன்னை விட்டுவிட்டு நான் போயிடுவேன்னு நீ நினைச்ச ... உன் கூட ஓரு லாங் லைஃப் வாழ நான் ஆசையா இருக்கேன்"

அவனை ஏக்கமாக நிமிர்ந்து பார்த்தவள், "நானுமே டேவிட்" என்றாள்.

அவனோ அவள் கன்னங்ளை நனைத்திருந்த கண்ணீரைத் துடைத்தபடி, "அப்புறம் என்ன? நீயும் நானும் ரொம்ப நிறைய வருஷங்கள் சந்தோஷமா வாழப் போறோம்... அவ்வளவு லவ்வோடு" என்றவன் நெகிழ்ச்சியோடு கூற,

"நிஜமா நீங்க சொல்றது நடக்கும் இல்ல?!" என்று அவள் சந்தேகித்து அவனைப் பார்த்த பார்வையில் அவனோடு வாழ வேண்டுமென்ற ஆசையும் ஏக்கமும் அபரிமிதமாய் இருந்தது.

"என் ஜெனித்தா இவ்வளவு வீக் இல்லையே?! மரணத்தைக் கூட அசால்ட்டா ஜெயிச்சி வந்தவ நீ…அதுவும் ராகவை நீ பேஸ் பண்ணி நின்ன விதம்... அப்பப்பா... ஆனா இப்படி நம்பிக்கையில்லாம பேசுற ஜெனித்தாவை நான் இதான் ஃபர்ஸ்ட் டைம் பார்க்கிறேன்" என்று வியப்பான பார்வையோடு அவன் சொல்லிக் கொண்டிருக்க,

"என்னால முடியல டேவிட்... இனிமே எந்தவொரு இழப்பையும் தோல்வியையும் தாங்கிக்க நான் விருப்பப்படல...

இதே இடத்தில நின்னு என்கிட்ட நீங்க ஒண்ணு கேட்டீங்க… ஐ வான்ட் டூ லிவ் வித் யூன்னு... இப்ப நான் அதை சொல்றேன் ... ஐ வான்ட் டூ லிவ் வித் யூ... ஐ வான்ட் டூ டை வித் யூ... அவ்வளவுதான்... எனக்கு வேறெதவும் வேண்டாம்" என்றவள் தீர்க்கமான பார்வையோடு சொல்ல அவன் பூரித்துப் போனான்.

"என்னை நீ அந்தளவுக்காய் காதலிக்கிறியா?" வியப்பாய் அவன் கேட்க,

"அளவெல்லாம் சொல்ல முடியாது... நீங்க இல்லன்னா நான் இல்ல... அதை நான் இந்த நிமிஷம் ஃபீல் பண்ணேன்" என்றவள் சொல்லும் போதே மீண்டும் அவள் விழிகளில் நீர் திரளப் பார்த்தது.

"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல... அவ்வளவு சந்தோஷமா இருக்கு" என்று நெகிழ்ச்சியோடு சொல்லியவன் நெருக்கமாய் நின்றிருந்தவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.

அவனின் அணைப்பில் உணர்வுப்பூர்வமாய் அவனுள்ளே அவள் தொலைந்து கொண்டிருந்தாள். நேரம் கடந்து போகப் போக டேவிடின் உணர்வுகள் அவளிடம் மொத்தமாய் லயித்துவிட, சட்டென்று அதனை உணர்ந்து அவளை விலகி நின்றவன், "நீ உன் ரூமுக்கு போ ஜென்னி" என்றான்.

வார்த்தையளவில் போ என்றாலும் அவன் விழி அவளை நெருங்கத் துடிக்க,

ஜென்னி அவன் எண்ணம் புரிந்து, "கிஸ் மீ" என்று கேட்டு அவனை நெருங்கி நின்றாள்.

அவள் தனக்காக இறங்கி வருகிறாள் என்பதை உணர்ந்தவன், "உம்ஹும்" என்று சொல்லி மறுப்பாய் தலையசைத்தான்.

அவளை எந்தவிதத்திலும் காயப்படுத்த அவன் விரும்பாதவனாய் அவளை விட்டு விலகப் பார்க்க அவள் அவனை அணைத்துப் பிடித்து கொண்டு, "டேவிட்" என்று கிசுகிசுப்பாய் அழைக்க,

அவன் உணர்வுகளெல்லாம் அந்த நொடி அவளோடு இயைந்து கொள்ளத் தவித்தது. ஆனால் சற்று நிதானித்து யோசித்தவன் அவளிடம்,

"வேண்டாம் ஜென்னி... உன்னை நான் கஷ்டபடுத்த விரும்பல" என்றான்.

"ஆனா எனக்கு வேணும்... நான் எல்லாத்தையும் மறக்கணும்... நீங்க மட்டும்தான் என்னோட நினைவுகள் மொத்தத்திலயும் இருக்கணும்" என்றவள் தன் மனஎண்ணத்தை வெளிப்படுத்த,

அவளையே ஆழ்ந்து பார்த்தவன், அவளை விட்டு நகர்ந்து சென்று கதவைத் தாளிட்டுவிட்டு அவளை நெருங்கினான். அவனின் வருகையைப் பார்த்து நாணியவளுக்கு லேசாய் வியர்த்திருந்தது.

அவனோ அவளை அணைத்துப் பிடித்தபடி, "ஜென்னி" என்றழைக்க அவள் அவன் விழிகளை ஏறிட்டுப் பார்த்த நொடி அவளின் வியர்வைத் துளிகளை துடைத்துவிட்டான்.

அவனின் கரிசனத்தில் வெகுவாய் ஈர்க்கப்பட்டவளுக்கு அவனை விட்டு விலகி செல்லும் எண்ணம் வருமென்றே தோன்றவில்லை. அவனோ நிதானமாய் அவள் இதழ்களை நெருங்க,

அவளோ முதல்முறையாய் அவன் தரும் முத்தத்தைப் பெற்று கொள்ள ஆர்வமாய் காத்திருந்தாள். அவன் மெல்ல தம் இதழ்களால் அவளின் இதழ்களைத் தழுவியவன், நிறுத்தி நிதானமாய் அந்த உணர்வை அவளுக்குள் விதைத்துக் கொண்டிருந்தான்.

அந்த முத்தத்தில் ஏதோ மாயம் நிகழ்கிறது. அவளின் வற்றியிருந்த உணர்வுகள் எல்லாம் ஊற்றாய் பெருக செய்துக் கொண்டிருந்தது. அவளின் இடையை வளைத்திருந்த அவன் கரம் மெல்ல மெல்ல இறுகி அவர்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைத்துக் கொண்டிருக்க, அவளும் தன்னிலை மறந்து அவன் முத்தத்தில் மொத்தமாய் லயித்திருந்தாள்.

டேவிட் அந்த நொடி தன் இதழ்களை அவள் இதழ்களை விட்டுப் பிரித்து, அவளைப் பார்க்க அவளுக்கோ அந்த முத்தம் முடிவில்லாமல் நீண்டிருக்கக் கூடாதா என்ற எண்ணம் தோன்றியது.

அதனை அவள் பார்வையாலேயே உணர்ந்தவன் அவள் முகத்தருகே வந்து நெற்றியிலும் கண்களிலும் அவளின் மென்மையான இரு கன்னங்களையும் மாறி மாறி தம் இதழ்களை அழுத்தமாய் பதித்தவன்,

மெல்ல அவளூடே பயணிக்கத் தன்னை மறந்த நிலையில் அவனுள் அவள் தொலைந்து கொண்டிருந்த சமயம், அவன் சட்டென்று தன் எல்லைகளைக் கடந்து அவள் கழுத்திற்கு கீழே இதழ்களைக் கொண்டு செல்ல, பதறியவள் நாணத்தில் முகம் சிவக்க அவனை நெட்டித் தள்ள பார்த்தாள்.

அதுவரை இலகுவாய் அவள் இடையைப் பற்றியிருந்த அவன் கரங்கள் அவளை விடுவிக்க மனமில்லாமல் கொஞ்சம் இறுக்கமாய் மாறியது. வேண்டாமென்று நாணம் தவிர்க்கப் பார்க்க அவனின் அத்து மீறல்களில் அவள் உணர்வுகளெல்லாம் விகசித்துக் கொண்டிருந்தன.

முத்தத்தில் தொடங்கினாலும் அது முத்தத்தோடு முடிவு பெற முடியாமல் நீண்டு கொண்டிருக்க, அவளும் அவனைத் தடுக்க இயலாமல் கிறங்கிக் கொண்டிருந்தாள். காயங்களைக் காலங்கள் ஆற்றிவிடும் என்று சொல்வார்கள். அத்தகைய சக்தி அவன் காதலுக்குமே இருந்தது.

அவளின் காயங்களும் வலிகளும் கிஞ்சிற்றும் அவளை நெருங்கிவிடாமல் தன் லீலைகளைப் புரிந்தவன், அவளின் பழைய நினைவுகளை மொத்தமாய் அழித்துவிட்டு வானமாய் அவள் மனதில் எல்லைகளின்றி விரிந்தான்.

அந்த ஏகாந்தமான இரவு அவர்களின் உறவை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றுவிட, எந்தவித திட்டமிடலும் இன்றி இயல்பாய் அவர்களின் கூடல் நிகழ்ந்து முடிந்தது.

சூரியன் அத்துமீறி அவர்களின் அறைக்குள் நுழைய, ஜென்னி விழித்தெழுந்தாள். இரவு முழுக்க சிலிர்ப்பிலும் களிப்பிலும் கிடந்தவளுக்கு இப்போது யோசித்தால் என்ன காரியம் செய்துவிட்டோம் என்று வெட்கம் பிடுங்கித் தின்றது.

டேவிட் அவளைத் தன் மார்போடு அத்தனை இறுக்கமாய் வைத்திருக்க, அவனின் இரும்புக் கரத்தை விலக்கிக் கொள்ள முடியாமல், "டேவிட்" என்றழைத்து அவனை எழுப்ப முற்பட்டாள்.

ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்தவன் அவளின் அழைப்பில் மெல்ல மெல்ல சுயநினைவுபெற மீண்டும் அவள் சத்தமாய், "டேவிட்... விடுங்க என்னை" என்றாள்.

அவன் மெல்ல கண்விழித்தபடி அவளைப் பார்த்தவன், "குட் மார்னிங்" என்றுரைக்க, அவன் கரமோ இன்னும் அவள் தேகத்தில் இறுகியது.

"ரொம்ப முக்கியம்... எழுந்து உங்க ரூமுக்கு போங்க" என்றாள் தவிப்போடு!

அவன் சிரித்துவிட்டு, "இது என் ரூம் ஜென்னி" என்றதும் அந்த அறையைப் பார்த்தவள் தலையிலடித்துக் கொண்டு,

"சரி விடுங்க என்னை... நான் என் ரூமுக்கு போறேன்" என்றாள்.

"இனிமே இதுதான் உன் ரூமும்" என்றவனுக்கு அவளை விடுவிக்க மனமே இல்லை.

"மேரேஜ் முடியறதுக்குள்ள நாம இப்படி அவசரப்பட்டிருக்க வேண்டாம்" என்றவளின் முகம் சுணங்கிப் போக,

அவன் சிரித்த மேனிக்கு, "அவசரம் எல்லாம் படல... அதுவா நடந்திருச்சு... ஜஸ்ட் லீவ் இட்" என்று யதார்த்தாமாக அவன் உரைக்க,  அவள் கோபமானாள்.

"அதெப்படி அதுவா நடக்கும்... நான் உங்களை கிஸ் மட்டும்தானே பண்ண சொன்னேன்... நீங்கதான் உங்க லிமிட்டை க்ராஸ் பண்ணீங்க"

"அப்போ நடந்த எதுக்கும் உனக்கும் சம்பந்தமில்லை" என்றவன் விழிகள் இடுங்கப் பார்க்க,

"சம்பந்தமில்லன்னு சொல்லல... நம்ம இரண்டு பேரும் கொஞ்சம் கன்ட்ரோலா இருந்திருக்கலாம்" என்றவள் சொல்லி கவலையுற்றாள்.

அவள் முகத்தில் சரிந்த முடியை விலக்கிவிட்டு அவளருகில் வந்தவன், "நீ முழுமனசோடு என் கூட சந்தோஷமா இருந்த இல்ல" என்றவன் கேள்வி எழுப்ப

அவளுக்கு உண்மையிலேயே ஆச்சர்யமாய் இருந்தது. அது எப்படி நிகழ்ந்தது என்று இன்னும் அவளுக்குப் புரியவில்லை. திடீரென்று வானில் தோன்றிய வானவில் போல் வண்ணமயமாய் தோன்றி மறைந்தது அந்த உணர்வு.

அவள் முகம் விகசிக்க அதனை ஆழமாய் ரசித்தவன் மீண்டும் அவளைத் தன்னோடு இறுக்கி அணைக்கப் பார்க்க,

அவள் அவனை வெட்கத்தோடு விலக்கி, "நான் போகணும்" என்று சிரமப்பட்டு எழுந்து கொள்ள முயன்றாள்.

அவன் அசறாமல் தன் கரத்தை தலையணையாய் மாற்றிக் கொண்டபடி,

"போ... ஆனா உன் டிரெஸ்" என்றவன் கல்மிஷமாய் பார்த்து குறும்பாய் புன்னகைத்தான்.

"அதானே என் டிரஸ்" என்று சுற்றுமுற்றும் அவள் விழிகளை அலைபாயவிட,

"நீ எங்க தேடினாலும் அது கிடைக்காது... அது என்கிட்ட இருக்கு" என்றவன் அவளைத் தன்னருகில் இழுக்க, அவள் அதிர்ந்துவிட்டு,

"யூ" என்று அவனை அடிக்கவும், "ஜென்னி ஸ்டாப்" என்றவன் அவள் கரத்தைப் பற்றி தடுத்தான்.

"ஒழுங்கா என் டிரெஸ்ஸைக் கொடுங்க" என்று கோபம் கொண்டவள்,

அவனை ஏறஇறங்க ஒரு பார்வை பார்த்து, "இந்த பூனை கூட பால் குடிக்குமான்னு இருந்துட்டு... பண்றதெல்லாம் சேட்டை?!" என்றாள்.

அவளை மீண்டும் அருகில் இழுத்துப் படுக்க வைத்து, "பூனையைத் தேடி பால் வரும் போது பூனை என்ன பண்ணுமா?! " என்றவன் கேட்க,

"ஓ… அப்போ எல்லாத்துக்கும் காரணம் நான்தானா?"

"அப்போ இல்லையா?"

அவள் கோபம் அதிகரிக்க, "என்னை டென்ஷன் படுத்தாதீங்க... என் டிரஸ்ஸை கொடுங்க" என்று போர்வையை பிடித்தபடி எழுந்து கொள்ள,

"முடியாது" என்று அலட்டிக் கொள்ளாத பார்வையோடு சொல்ல அவள் விழிகள் அகல விரிந்தன.

"நீங்களா டேவிட் இப்படி" என்று திகைப்புற்றவள்,

முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டு, "யாரோ ப்ரீஸ்டாக போறேனெல்லாம் சொல்லிட்டு திரிஞ்சாங்க... ஆனா இப்ப என்னடான்னா" என்று மேலே பேசாமல் அவள் நிறுத்த, அவனும் கோபம் கொண்டான்.

"நான் சொன்னேன்தான்... இல்லன்னு சொல்லல... ஆனா என்னைத் தடுத்தது யாரு? அதுவும்... என்கிட்ட லவ்வைப் பத்தி பக்கம்பக்கமா கிளாஸ் எடுத்தது யாரு?!" என்றவன் கேட்டு புருவத்தை ஏற்ற, அவன் புறம் திரும்பியவள்,

"நான் லவ்வைப் பத்தி சொன்னேன்தான்... ஆனா அதுக்குன்னு நீங்க பேசுறது டூ மச்... ஒரேடியா எல்லா பழியும் தூக்கி என் மேல போடுறீங்க" என்றவள் முகத்தில் ஏறிக் கொண்டிருக்கும் கோபத்தை உணர்ந்தவன்,

"சரி... எல்லா தப்பும் என் பேர்லதான்... நான்தான் எல்லாத்துக்கும் காரணம்" என்று ஒத்துக்கொண்டுவிட்டான்.

அவளும் அமைதியாகி, "சரி போகட்டும்... என் டிரஸ்ஸைக் கொடுங்க?!" என்று வினவ,

அவன் அலட்டிக் கொள்ளாமல், "பக்கத்தில வா... தர்றேன்" என்க,

"எதுக்கு?" என்று கேட்டு மிரட்சியாய் பார்த்தாள்.

அவன் சமிஞ்சையால் கேட்ட முத்தத்தை அவள் பார்வை புரிந்து கொள்ள வெட்கத்தோடு திரும்பியவளை தன்னருகில் இழுத்தவன், அவளை ஆரத்தழுவிக் கொள்ள,

அவன் புரிந்த சரசங்கள் அவளை மீண்டும் அவளைத் தன்னிலை இழக்கச் செய்தாது.

அவள் சுதாரித்துக் கொண்டு, "ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் டேவிட் என் டிரெஸ்ஸை கொடுத்திருங்களேன்" என்று இறங்கிய பார்வையோடு கெஞ்சிப் பார்த்தாள்.

ஒருவாறு மனமிறங்கியவன் தன் தலையணை கீழிருந்த அவளின் உடையை எடுத்துக் கொடுத்தான். அவள் பெருமூச்சுவிட்டபடி அதனைப் பெற்று கொண்டவள், "திரும்புங்க... நான் டிரெஸ் சேஞ்ச் பண்ணனும்" என்று உரைக்க,

அவன் சிரித்தபடி, "முழுசா நனைஞ்ச பிறகு முக்காடு எதுக்கு?" என்று கேட்டான். பல்லைக் கடித்து கொண்டு, "டேவிட்" என்றவள் கோபமாக,

"ஒகே ஒகே திரும்பிட்டேன்" என்றவன் எதிர்புறம் திரும்பிப் படுக்க அவள் உடைகளை எடுத்து மாற்றிக் கொண்டாள்.

"மாத்திட்டியா?" என்றவன் கேட்க, "ஹ்ம்ம்" என்றாள்.

அவள் கண்ணாடியை பார்த்துக் கலைந்திருந்த கூந்தலைச் சரி செய்து கொண்டிருந்தாள். அவன் மெல்லப் பின்னோடு வந்து அணைத்தபடி,

"இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன

ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே" என்றவன் புன்னகை தவழப் பாடவும்,

"அய்யோ விடுங்க டேவிட்... ஏற்கனவே எனக்கு கில்டியா இருக்கு... நீங்க வேற" என்றவள் அவன் கரத்திலிருந்து விலக முற்பட

அவனோ அவள் பின்னங்கழுத்தில் முத்தமிட்டபடி, "எதுக்கு கில்டி?" என்றான்.

"என்னதான் இருந்தாலும் நாம செஞ்சது தப்பு டேவிட்" என்றவள் வருத்தமுற சொல்லி அவன் கரத்தை விட்டு வெளியே வந்தாள்.

"அப்படியா சொல்ற?" என்று கேட்டு அவளை நெருங்கி சுவற்றோடு மறித்து நிற்க, "பின்ன இல்லையா?!" என்றாள்.

"அப்படின்னா... ஒண்ணு பண்ணுவோமே... கோட்டை எல்லாம் அழிச்சிட்டு... முதல்லயிருந்து போடுவோம்" என்று சொல்லி அவள் உதட்டில் முத்தமிட்டவனை அவசரமாய் விலக்கி விட்டு, "போங்க டேவிட்" என்று சொல்லி அவனைக் கோபமாய் முறைத்தபடி நின்றாள்.

அவள் பார்வையை எதிர்கொண்டவன் வாய்விட்டுச் சிரித்துவிட்டு,

"என்ன ஜென்னி? இதுக்கு போய் நெற்றி கண்ணெல்லாம் திறக்கலாமா? நான் சரண்டராயிட்டேன்" என்று கிண்டலாய் உரைத்துவிட்டு கரத்தை உயர்த்தி நின்றான்.

அவனின் வார்த்தைகள் அவளுக்கும் சிரிப்பை வரவழைக்க, "உங்களுக்குள்ள இப்படி ஒரு ரொமான்டிக் ஹீரோவா டேவிட்" என்றவள் கேட்க,

அவன் புன்னகைத்துவிட்டு, "எல்லாமே என் ஹீரோயின்காகதான்" என்றான். அவனை ரசனையாய் பார்த்திருந்தவளின் முகம் மெல்ல யோசனைகுறியோடு மாற,

"என்னாச்சு ஜென்னி?" என்றவன் புரியாமல் கேட்க,

"கார் எதனால அப்படி பைஃயராச்சு டேவிட்" என்றதும் அவன் முகம் இறுக்கமாய் மாறியது.

"சொல்லுங்க டேவிட்" என்றவள் மீண்டும் அழுத்தம் கொடுக்க,

"அது" என்று தயங்கியவன் அவள் விழிகளைப் பார்க்க முடியாமல் தடுமாற,

"இதெல்லாம். ராகவ் வேலையா?!" என்றவள் கூரிய விழிகளோடு அவனைப் பார்த்து கேட்க,

அவளை நிமிர்ந்து நோக்கியவன், "இல்ல... ராகவோட பாஃதர்... வாசன்" என்றான். அவள் முகம் உக்கிரமாய் மாறியது.

"புரிஞ்சு போச்சு... நம்மள நிம்மதியா வாழ விடக் கூடாதுன்னு இப்படியெல்லாம் பண்றாங்க இல்ல" அவன் பதிலின்றி நிற்க அவளே மேலும், "இந்த விஷயத்தை இப்படியே விடக்கூடாது... டூ சம்திங்" என்றவள் படபடப்பாக, "ஜென்னி ரிலேக்ஸ்... நான் பார்த்துக்கிறேன்" என்றான்.

அவள் அவன் விழிகளைப் பார்த்து, "நல்லவனா இருங்க... வேண்டாங்கல... ஆனா இந்த மாதிரி ஆளுங்ககிட்ட உங்க பவர் என்னன்னு காட்டுங்க ... நீங்க யாருன்னு காட்டுங்க”

“அவங்க எல்லாம் உங்களுக்கு ஒரு மேட்டரே இல்லன்னு புரிய வைங்க... யாரும் நம்ம வாழ்க்கையில இடைஞ்சல் பண்ணனும் மனசால கூட நினைக்க கூடாது... சொல்லிட்டேன்" என்றவள் அழுத்தம் திருத்தமாய் சொல்லிவிட்டு கோபமாய் அந்தஅறையை விட்டு வெளியேறினாள்.

 டேவிட் சிந்தனையோடு அமர்ந்தான். அவன் யாரிடமும் தன் பலத்தை இதுவரையில் காட்ட முற்பட்டதில்லை. அத அவனுக்கு அவசியப்பட்டதுமில்லை. அதே நேரம் ஜென்னியின் கோபத்திலும் நியாயம் இருந்தது. அவள் சொன்னவையும் சரியென்று பட்டது. ஆதலால் டேவிட் வாசனின் பணபலத்தை முடக்க, வருமான வரி சோதனைக்கு ஏற்பாடு செய்தான்.

எறிவதைப் பிடுங்கினால் கொதிப்பது தானாக அடங்குமே ஆதலால் அவரின் பணபலத்தை முடக்கியவன் பின்னர் அவரின் ஆள் பலம் சினிமா பலம் என எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் முறியடிக்க, அதற்கு மேல் வாசனால் செயல்படவே முடியவில்லை. அவரால் நிலைமையைச் சமாளிக்க முடியாமல் போக மகனை எங்கனம் காப்பாற்றுவது.

ராகவ் சிறையிலடைக்கப்பட்டிருக்க, அவனால் நடந்த எதையும் இன்னும் ஏற்க முடியவில்லை. வெறி பிடித்த மிருகம் போல அவன் ஒருவர் விடாமல் எல்லோரிடமும் நடந்து கொள்ள,  வேறுவழியில்லாமல் மனநலகாப்பகத்திற்கு மாற்றப்பட்டான்.

‘ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி’ என்ற திருவள்ளுவனின் வாய் மொழி போல நல்ல நடத்தையினால் மட்டுமே உயர்வு ஏற்படும். இல்லையேல் இழிவான பழி வந்து சேரும். அதுதான் ராகவுக்கும் நடந்தேறியது. ராகவ் போன்ற ஒவ்வொருவருக்கும் கூட நிகழும் என்பதில் ஐயமில்லை.

Quote

Nice

monisha has reacted to this post.
monisha

You cannot copy content