You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nee Enbathe Naanaga - 23

Quote

23

வாழ்க்கை அழகானது

அந்த பாடலை கேட்ட நொடி ஜானவியின் முகத்தில் லேசாக ஒரு மாற்றம் நிகழ்ந்தது. அவள் பார்வையின் இறுக்கம் தளரந்திருந்தது. இப்போதும் அன்று அவளை பார்த்து மென்மையான அவன் காந்த குரலில் பாடியதே அவள் செவிகளில் ரீங்காரமிட, அவள் உதட்டில் மெல்லிய புன்னகை தவழ்ந்தது. இப்போது அல்ல.

எப்போது அந்த பாடலை கேட்டாலும் அவள் மனதில் சந்தோஷம் படரும். ஏதேனும் டென்ஷனில் இருந்தால் கூட அந்த பாடலை கேட்டுவிட்டால் அது ஒரு நொடியில் காணாமல் மறைந்து போகும். அந்தளவுக்கு அந்த பாடல் அவள் வாழ்வின் அங்கமாக மாறியிருந்தது.

ஆனால் இந்த உணர்வெல்லாம் வெகுசிலநொடிகள்தான் நிலைத்தது. அவன் அப்போது தன் பேசியை எடுத்து, “தோ கிளிம்பிட்டேன் மாமா” என்றதும் அவள் முகத்தில் மீண்டும் கோபம் உக்கிர தாண்டவமாடியது.

‘அப்போ எல்லாம் சேர்ந்து திட்டம் போட்டுதான் நடக்குதா?’ என்று ஜானவி பார்வையாலேயே கணவனை வறுத்தெடுக்க, அவன் மெல்லிய புன்னகையோடே அவள் முறைப்பை எதிர்கொண்டான்.

அவளின் கோபம் இன்னும் அதிகரித்தது. மிகுந்த கடுப்போடு அவள் அமர்ந்திருக்க காரை இயக்கி கொண்டே, “பேச மாட்டீங்களா ஜானு?” என்று அவன் மென்மையாக கேட்க, அவள் உடனடியாக முகத்தை திருப்பி கொண்டாள்.

“பார்க்க கூட மாட்டீங்களா? அந்தளவுக்கு கோபமா?” என்றவன் மீண்டும் கேட்க, அவள் பார்வை அவன் புறம் திரும்பவே இல்லை.

“வீட்டில இருந்திருந்தா இந்த கோபத்தை சரி செஞ்சி கூல் பண்ணியிருக்கலாம்... ஆனா வெளியே எப்படி” என்றவன் கல்மிஷமாக கேட்க, அந்த நொடியே அவன் புறம் திரும்பிய அவள் பார்வை அவனை உக்கிரமாக படையெடுத்து நின்றது. 

அதோடு அவள் தன் மௌனத்தை கலைத்து பின்னோடு விளையாடி கொண்டிருந்த மகள்களிடம், “இரண்டு பேரும் கொஞ்ச நேரம் அமைதியா வரமாட்டீங்க” என்று சீற்றம் காட்ட,

“திட்டிறதுன்னா என் முகத்தை பார்த்து திட்டுங்க... குழந்தைங்ககிட்ட கோபத்தை காட்டாதீங்க” என்றவன் அழுத்தமாக உரைத்தான்.

அவன் பேசுவதை காது கொடுத்து கூட கேட்காமல் திரும்பி கொள்ள, “ஒ! திட்டிறதுக்கு கூட என் கிட்ட பேச மாட்டீங்களோ?” என்று அவன் மீண்டும் ஏக்கமாக கேட்க, அவளிடம் மௌனம் மட்டுமே பதிலாக வந்தது.

‘ரொம்பத்தான் பிடிவாதம்’ என்றவன் காதுப்படவே முனக, அவள் அவனை பார்த்து முறைத்தாள். கார் அப்போது சங்கரன் வீட்டு வாசலில் வந்து நின்றது.

 மீனா அந்த இடத்தை பார்த்துவிட்டு, “ஐ! அம்மம்மா வீடு” என்று உற்சாகம் கொண்டாள்.

அவர்களுக்காக வாசலிலேயே காத்திருந்த சங்கரன் அவசரமாக அவர்கள் காரை நெருங்கி, “வாங்க மாப்பிள்ளை வா ஜானும்மா” என்று பூரிப்போடு அழைத்தார்.

ஜானவி எங்கோ வெறிக்க மீனா அப்போது, “தாத்தா!” என்று அழைக்க,

“மீனாகுட்டி” என்றவர் கதவை திறந்து அவளை இறக்கினார்.

மீனா அப்போது, “தாத்தா... அன்பு” என்று தன் சகோதரியை காண்பிக்க, “நீங்கதான் அன்புவா” என்று அவளையும் பரிவாக தலையை தடவி இறங்க செய்தார்.

ஜானவிக்கு இந்த காட்சியை பார்க்க கடுப்பாக இருந்தது. “அன்பு இரு” என்று அன்பு அவரோட செல்வதை விரும்பாமல் ஜானவி அழைக்க, செழியன் அவள் கரத்தை அழுந்த பற்றி தடுத்தான்.

இவர்களுக்கு இடையில் நடக்கும் பூசல்களை கவனிக்காத சங்கரன், “உள்ளே வாங்க மாப்பிள்ளை... ஜானும்மா இறங்கி வா” என்று மீண்டும்  அழைத்துவிட்டு சென்றார்.

அவர் சென்றதை பார்த்த ஜானவி, “நீங்களும் உங்க பொண்ணும் எப்படியோ போங்க... ஆனா என் அன்புவை அவர் எதுக்கு கூட்டிட்டு போறாரு” என்றவள் எரிச்சலாக கேட்க,

“மீனா அவருக்கு பேத்தின்னா... அன்புவும் அவருக்கு பேத்திதானே ஜானு” என்று நிதானமாக அவளுக்கு பதிலுரைத்தான்.

“மன்னாங்கட்டி! அவர் எனக்கு அப்பாவே இல்லைங்கிறேன்... அப்புறம் என்ன பேத்தி” என்றவள் அழுத்தமாக பதிலளிக்க,

“ஜானவி... அப்படியெல்லாம் பேசாதீங்க... உங்க கோபத்தை எல்லாம் மறந்து கொஞ்சம் சகஜமா இருக்க ட்ரை பண்ணுங்க” என்றான்.

“முடியாது... நான் உங்க கூட இங்க வரணும்ங்கிறதுதானே உங்க கண்டீஷன்... மத்தபடி சிரிக்கனும் பேசணுங்கறது எல்லாம் உங்க கண்டீஷன்ல இல்லயே” என்றவள் தெளிவாக சொல்ல,

“நான் என்ன உங்களுக்கு கண்டிஷனா போட்டேன்?” என்று அவன் அதிர்ச்சியாக கேட்கும் போது மீண்டும் சங்கரன் குரல் கொடுத்து, “என்ன மாப்பிள்ளை... உள்ளே வாங்க” என்றார்.

ஜானவிக்கு கடுப்பேறியது. “ரொம்பத்தான் மாப்பிள்ளை மாப்பிள்ளைன்னு உருகிறாரு” என்றவள் சொல்ல செழியன் அவஸ்தையோடு,

“ஜானவி ப்ளீஸ் இறங்குங்க... உள்ளே போலாம்” என்று சொல்லி கொண்டே அவன் இறங்க அவளும் இறங்கிவிட்டு கார் கதவை பாடரென்று மூடினாள்.

செழியனுக்கு அவள் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து பதட்டமானது. அவள் இறங்கி வந்ததும் அவசரமாக அவள் கரத்தை பிடித்து கொள்ள அவனை முறைப்பாக பார்த்து அவன் கரத்தை அவள் உதற முற்பட அவன் அவளிடம் அமைதியாக தான் சொல்ல நினைத்ததை தெளிவுப்படுத்தினான்.

 “நீங்க அந்த வீட்டு பொண்ணா வருவதா இருந்தா... எப்படி வேணா மூஞ்சி தூக்கி வைச்சிட்டு வாங்க... ஆனா என் பொண்டாட்டியா வர்றதா இருந்தா சிரிச்ச முகத்தோடுதான் வரணும்” என்று கண்டிப்பாக சொன்னவனை அவள் எரிச்சலாக பார்க்க,

“இங்க நீங்க வெறும் ஜானவியா வரல... அன்புவோட மனைவி வந்திருக்கீங்க... ஞாபகம் இருக்கட்டும்” என்றவன் அவளுக்கு மட்டும் கேட்பது போல் அவன் குரலை தாழ்த்தி சொன்னாலும் அவன் பார்வையில் ஓர் அழுத்தம் தெரிந்தது.

அவள் யோசனையோடு முன்னே நடக்க கிரிஜா ஆரத்தி தட்டோடு காத்திருந்தார். சங்கரன் அதற்காகவே மீனா அன்புவை வெளியேவே நிறுத்தி பிடித்திருக்க,

“இதெல்லாம் எதுக்கு அத்தை?” என்று செழியன் சிரித்த முகமாக கேட்க,

“முதன் முதலா இந்த வீட்டுக்கு ரெண்டு பேரும் தம்பதியா வரீங்க... அதுவும் நிறைய பிரச்சனைக்கு அப்புறம்” என்று சொல்லி கொண்டே அவர் கண்ணீர மல்க மகளை ஏக்கமாக பார்த்து கொண்டே சுற்றி முடித்தார்.

ஆனால் ஜானவி அவர் முகத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஏன் பார்க்க வேண்டுமென்று ஒரு அலட்சியம். ‘இப்ப எதுக்கு இந்த சீன் போடறாங்க... இப்ப யார் இவங்கள ஆர்த்தியெல்லாம் எடுக்க சொன்னா’ என்றவள் மனதில் புலம்பி கொண்டே உள்ளே நுழைய, அப்போது மீனா அன்புவை இழுத்து கொண்டு காலில் சக்கரம் கட்டியது போல் அவர்களை முந்தி கொண்டு உள்ளே ஓடிவிட்டாள்.

“மெதுவா போங்கடி” என்று சொல்லி கொண்டே ஜானவி உள்ளே நுழைய பார்த்தவள் தயக்கத்தோடு  அந்த வீட்டு வாயிலில் நிற்க, “உள்ளே வாங்க ஜானவி” என்று செழியன் அவள் கரத்தை பற்றி கொள்ள,

பின்னோடு வந்த கிரிஜா மகள் அருகில் வந்து கண்ணீர் தளும்ப, “என்னை மன்னிச்சிரு ஜானு... நான் அன்னைக்கு ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்... பாவி! கொஞ்சமாச்சும் யோசிச்சு பேசி இருக்கணும்” என்று வேதனையோடு உரைத்து கொண்டிருந்தார்.

சங்கரனும், “ஆமா ஜானு... நாங்க அப்படி பேசி இருக்க கூடாது... அவசரப்பட்டுட்டோம்” என்றார்.

‘மன்னிப்பு கேட்டா பேசுன வார்த்தை எல்லாம் இல்லன்னு ஆகிடுச்சா’ என்று ஜானவியின் மனம் உள்ளுர பொறும, அவர்கள் கொஞ்சமும் அவர்கள் கண்ணீருக்கு கரையாமல் கல்லாக நின்றாள்.

செழியன் அப்போது, “ஐயோ! இரண்டு பேரும் இந்த பிரச்சனையை இதோட விடுறீங்களா... நாங்க எப்பவோ அதெல்லாம் மறந்துட்டோம்” என்றவன் சுமுகமாக பேச, ஜானவியின் விழிகள் செழியனை முற்றுகையிட்டது.

அதேநேரம் கிரிஜா மகள் கையை பற்றி, “அப்படியா ஜானு?” என்று கேட்க, கணவன் சொன்னதை மறுத்து பேச முடியாத இக்கட்டான நிலையில் சிக்கி கொண்டாள். அப்படி பேசினால் அவர்கள் உறவை அவமதிப்பதாக ஆகி விடுமே!

ஆதலால், “ஆமா மறுந்துட்டேன் விடுங்க” என்றவள் இயந்திரத்தனமான புன்னகையோடு சொல்ல,

“உண்மையிலேயே நீ சமாதானம் ஆவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லம்மா” என்று சங்கரன் ஆனந்த கண்ணீரோடு மகளிடம் உரைத்தார்.

‘என்னால கூடதான்’ என்று தனக்குத்தானே சொல்லி கொண்டாள் ஜானவி.

அப்போது கிரிஜாவும் சங்கரனும் மனநிறைவோடு, “எல்லாம் உங்களாலதான் மாப்பிள்ளை” என்று செழியனை நன்றியோடு பார்த்தனர். மகள் சமாதானமானதை அவர்களால் உண்மையில் நம்பவே முடியவில்லை.

“ஐயோ! சாரி மாப்பிள்ளை... வெளியவே நிற்க வைச்சிட்டு... உள்ளே வாங்க மாப்பிள்ளை... வா ஜானு” என்று சங்கரனும் கிரிஜாவும் அழைத்துவிட்டு முன்னே செல்ல,

“ம்ம்கும்” என்று ஜானவி நொடித்து கொண்டு கணவனை  ஒரப்பார்வையில் முறைக்க செழியன் அப்போது, “நான் சொன்னதை அப்படியே மறுக்காம ஒத்துக்கிடீங்க... என்னதான் இருந்தாலும் என் ஜானு... என் ஜானுதான்” என்று சொல்லி அவளுக்கு இதழை குவித்து ரகசியமாக முத்தமொன்றை தந்துவிட்டு உள்ளே சென்றான்.

அவள் முகம் வெட்கத்தில் சிவக்க, ‘ஐயோ! கொஞ்சம் கூட விவஸ்தையே இல்ல’ என்று முனகி கொண்டே அவன் பின்னோடு நுழைந்தாள்.

அப்போது ஜோதியின் கணவன் விக்னேஷ் சோபாவில் அமர்ந்திருக்க சங்கரன் செழியனிடம், “இவர்தான் தம்பி... எங்க வீட்டு மூத்த மாப்பிள்ளை விக்னேஷ்” என்று அறிமுகம் செய்து வைக்க,

விக்னேஷ் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றான். ஆனால் செழியனை அவனுக்கு யாரென்று தெரியவில்லை.

சங்கரன் அறிமுகம் செய்வதற்கு முன்னதாக செழியனே ஆர்வமாக தன் கரத்தை நீட்டி, “நான் அன்புச்செழியன்... ஜானவியோட ஹஸ்பென்ட்” என்று அறிமுகம் செய்து கொள்ள விக்னேஷுக்கு இப்போது அவன் யாரென்று புரிந்தது. நடந்த விஷயங்கள் யாவும் ஓரளவுக்கு அவனுக்கும் தெரிந்திருந்தது. அதுவும் ஜோதி அவனிடம் அவர்களை பற்றி தவறாக சொல்லி வைத்திருந்தாள்.

அதேநேரம் சங்கரனும் அவனை பற்றி சொல்லியிருந்தார். கொஞ்சம் குழப்பத்தோடே விக்னேஷ் செழியனோடு கை குலுக்கி கொண்டான். முகத்தில் புன்னகை தெரிந்தாலும் விக்னேஷுக்கு ஒன்றும் புரியவில்லை. அதன் பின் செழியனும் விக்னேஷும் அருகருகே இருந்த இருக்கையில் அமர செழியன் மாமனாரிடம், “நீங்களும் உட்காருங்க மாமா” என்று சொல்ல,

“இல்ல மாப்பிள்ளை கொஞ்சம் வேலை இருக்கு... வந்திடுறேன்” என்று அவர் சமையலறை நோக்கி விரைந்தார்.

“வந்தவங்கள கவனி கிரிஜா... எதாச்சும் வாங்கி வேண்டியது இருந்தா ஜெகனுக்கு ஃபோன் பண்ணு” என்று பரப்பாக சொல்லி கொண்டே அவர் வெளியே சென்றார்.

அப்போது கிரிஜா தண்ணீரை எடுத்து வந்து கொடுக்க செழியன் அதை எடுத்து கொண்டான்.

“மாப்பிள்ளை... நீங்க டீ சாப்பிடுவீங்களா காபி சாப்பிடுவீங்களா?” என்று வினவ ஜானவி அந்த நொடியே துணுக்குற்று கணவன் முகத்தை பார்க்க அவன் அவளை பார்த்து புன்னகைத்து கொண்டே, “நான் டீ குடிப்பேன்... ஆனா எனக்கு காபிதான் ரொம்ப இஷ்டம்” என்று ஒருவிதமாக சொல்லி அவன் அவளை பார்த்த பார்வையில் அவளை வெட்கம் பிடுங்கி  தின்றது.

“ஸ்ட்ராங்கா போடவா... இல்ல இனிப்பு ஜாஸ்தியா?” என்று கிரிஜா மேலும் கேட்க,

“என் டேஸ்ட் எப்படின்னு ஜானவி கிட்ட கேளுங்க அத்தை... அவளுக்குத்த்த்தான் அளவு எல்லாம் பெர்பெக்ட்டா தெரியும்” என்றவன் அழுத்தி சொல்ல, அவனை முறைப்பாக பார்த்தாள் அவனவள்.

 கிரிஜா உடனே மகளிடம் வந்து, “என்னடி மாப்பிள்ளை சொல்றாரு? எப்படி குடிப்பாரு?” என்று கேட்க,

“ஸ்ட்ராங்கா போடுங்க” என்று கடுப்பாக பதிலளித்தாள்.

“சரி... உனக்கும் காபியே போட்டிறவா?” என்று கேட்க,

“எனக்கு எதுவும் வேண்டாம்... அவருக்கும் மட்டும் கொடுங்க” என்று ஒட்டுதல் இல்லாமலே பதிலளித்தாள். அவள் பார்வை கூட அவரை நேர்கொண்டு பார்க்கவில்லை.

“இன்னும் என் மேல கோபம் தீரலையா?” என்று கிரிஜா குரலை தாழ்த்தி மகளிடம் வாஞ்சையாக கேட்க,

“அவர் சொன்னாரு... நான் அந்த விஷயத்தை மறுந்துட்டேன்... நீங்களும் அதை விட்டிருங்க” என்றாள் விட்டேற்றியாக!

கிரிஜாவின் முகம் இருளடர்ந்து போனது. அதேநேரம் கணவனின் வார்த்தைக்கு அவள் கொடுக்கும் மரியாதையை பார்க்கும் போது வியப்பாக இருந்தது. அந்தளவுக்கு அவர்களின் உறவின் ஆழம் இருப்பது புரிந்தது.

ஜானவி அந்த இடத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல் ஒதுங்கி நிற்க செழியன் மனைவியிடம், “என்ன ஜானு? இத்தனை நாள் கழிச்சு உங்க மாமாவை பார்க்குற... என்ன எதுன்னு விசாரிக்க கூட மாட்டியா?” என்று சீண்டினான்.

கணவனை கோபமாக பார்த்தாலும் வேறுவழியின்றி மரியாதைக்காக, விக்னேஷிடம், “எப்படி இருக்கீங்க மாமா?” என்று கேட்க,

“நல்லா இருக்கேன் ம்மா... நீ எப்படி இருக்க?” என்று அவரும் பதிலுக்கு விசாரித்தார்.

“எனகென்ன மாமா  நான் உங்க பொண்டாட்டி புண்ணியத்துல ரொம்ப நல்லா இருக்கேன்” என்றதும் விக்னேஷ் அவளை அதிர்ச்சியாக பார்த்தான்.

‘இவளை பேச சொன்னது தப்பா போச்சே!’ என்று செழியன் எண்ணும் போதே,

“அன்னைக்கு மட்டும் உங்க பொண்டாட்டி என்னையும் அவரையும் தப்பு தப்பா வத்தி வைக்காம இருந்திருந்தா எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைஞ்சே இருக்காது... அந்த விதத்தில வாழ்க்கை பூரா உங்க மனைவிக்கு நான் கடமை பட்டிருக்கேன்” என்றவள் குத்தலாக சொல்ல அதை கேட்டு விக்னேஷ் முகம் மாறியது.

உள்ளே இருந்த கிரிஜாவிற்கு படபடப்பானது.செழியன் உடனே, “ஜானு பசங்க எங்க?” என்று பேச்சை மாற்ற முயல,

“எங்க போறாங்க... இங்கதான் இருப்பாங்க” என்றவள் அலட்டி கொள்ளாமல் சொல்ல, “போய் பார்த்துட்டு வாங்க... என்ன பண்றாங்கன்னு” என்று அவன் அவளை அங்கிருந்து கிளப்புவதில் தீவிரமாக இருந்தான்.

“சரி போறேன்” என்றவள் கடுப்பாக சொல்லிவிட்டு, “மீனா அன்பு” என்று அழைக்க அவர்கள் குரல் அருகே இருந்த படுக்கை அறைக்குள் கேட்டது.

அவள் கதவை திறக்கவும் எதிர்பாராவிதமாக அங்கே ஜமுனாவும் ஜோதியும் இருந்தனர். அங்கேதான் அன்புவும் மீனாவும் ஜோதியின் மகன்களோடு விளையாடி கொண்டிருக்க, ஜானவிக்கு ஜோதியை பார்த்தும் தாறுமாறாக கோபமேறியது.

அவள் எதுவும் பேசுவதற்கு முன்னதாக ஜமுனா முந்தி கொண்டு, “அக்கா” என்று அவள் கழுத்தை கட்டி கொண்டாள். அப்போதுதான் ஜானவி பட்டு புடவையில் அலங்கார கோலத்தில் அழகாக மிளிர்ந்து கொண்டிருந்த தன் தங்கையை ஆழ்ந்து கவனித்தாள்.

“நீ வந்த போது புடவை மாத்திட்டு இருந்தேன் க்கா... அதான் உடனே வந்து உன்னை பார்க்க முடியல... நீ வருவேன்னு சத்தியமா எதிர்ப்பார்க்கல” என்று தமக்கையிடம் உணர்வு பொங்க கட்டி கொண்டு கண்ணீரோடு பேசிய தங்கையின் வார்த்தைகள் ஜானவியின் விழிகளிலும் கண்ணீர் துளிர்க்க செய்தது. அதை அவசரமாக துடைத்து கொண்டுவிட்டு தங்கையை தன்னிடமிருந்து பிரித்து,

அவளையே ஆழ்ந்து பார்த்து கொண்டிருந்தாள். அப்போது ஜமுனா திரும்பி ஜோதியிடம், “அக்கா பேசு” என்று மெலிதாக சொல்ல,

ஜானவி காதில் அவள் வார்த்தைகள் விழுந்தது.

“யாரும் என்கிட்ட பேச வேண்டாம்” என்று அலட்சியமாக சொல்லிவிட்டு மகள்களை பார்க்க அவர்கள் ஆர்வமாக விளையாடி கொண்டிருந்தனர்.

அவர்கள் சந்தோஷத்தை கெடுக்க மனமில்லாமல் அவள் பாட்டுக்கு அறையை விட்டு வெளியே செல்ல, அப்போது ஜெகன் செழியனோடு பேசி கொண்டிருந்தான். அவன் திரும்பி ஜானவியை பார்த்ததும், “அக்கா” என்று அருகில் வர,

“ஒழுங்கா போயிடு... உன்கிட்ட பேச எனக்கும் எதுவுமில்ல” என்று புன்னகைத்தபடி செழியன் முன்னிலையில் இயல்பாக பேசுவது போல் பாவனை செய்ய,

“அக்கா ப்ளீஸ் க்கா என்னை மன்னிச்சிரு க்கா” என்று அவன் கெஞ்சலாக மன்னிப்பு கோர,

அவள் தன் முகத்திலிருந்த புன்னகை மாறாமல் திட்டினாள்.

“கொன்னுடுவேன் மவனே! தேவையில்லாம என்னை பேச வைக்காதே... என் வீட்டுக்கராரோட வார்த்தைக்கு மதிப்பு கொடுத்துத்தான் நான் இங்க வந்திருக்கேன்... என்னை சீண்டி ஏதாச்சும் வாங்கி கட்டிகாதீங்க” என்று அவனிடம் மட்டும் ரகசியமாக சொன்னவள் அவன் முகம் தொங்கி போவதை பார்த்து, “நான் பேசனதுக்கு இப்ப நீ சிரிச்ச மாறியே ரியாக்ஷன் கொடுத்துட்டு போற... இல்ல” என்றவள் முறைக்க அவன் சிரமப்பட்டு புன்னகைத்து கொண்டே அங்கிருந்து அகன்றான்.

செழியன் பார்வை அவ்வப்போது அவர்களை பார்த்து கொண்டே விக்னேஷிடம் உரையாடி கொண்டிருந்தது. செழியனிடம் பேசிய அந்த சில நொடிகளிலேயே விக்னேஷுக்கு அவனை பிடித்து போனது. தன் மனைவி அவர்களை பற்றி சொன்னவை யாவும் தவறென்று புரிந்தது.

அவனிடம் பேசிய எல்லோரும் உடனடியாக நட்பாகி விடுவார்கள். அதுதான் செழியனின் சிறப்பம்சமும் கூட!

 சங்கரன் மருமகன்கள் முன்னிலையில் இயல்பாக இருக்க முடியாமல் சங்கடமாக சுற்றி வர அவரையும் செழியன் அருகில் அழைத்து உட்கார வைத்து இயல்பாக பேசினான்.

அப்போது கார் சத்தம் கேட்க, “மாப்பிள்ளை வீட்டுல வந்துட்டாங்க ப்பா” என்றான் ஜெகன் சத்தமாக!

‘ஒ! அப்போ ஜமுனா கல்யாண பேச்சு நடக்க போகுதா?’ என்று  ஜானவி எண்ணிய அதேநேரம் அந்த விஷயத்தை ஓரளவு அவள் முன்னமே யூகித்தும் விட்டாள். அப்போது மாப்பிள்ளை உறவினர் என்று ஒரு குடும்பம் இறங்கி வர, அதில் பின்னே வந்த இளைஞனை எங்கயோ பார்திருக்கிறோமே என்று ஜானவி யோசிக்கும் போதே அந்த இளைஞன் வேகமாக, “அன்பு” என்று அழைத்து கொண்டு அவனை இறுக கட்டி கொண்டான்.

ஜானவி அதிர்ச்சியாக பார்த்து கொண்டிருக்க, அந்த இளைஞனை அன்புவும் அணைத்து கொண்டான்.

அதன் பின் அன்பு, “வா ஹரிஷ்... வாங்க ம்மா வாங்க அப்பா” என்று அவர்கள் குடும்பத்தை உள்ளே அழைத்தான்.

ஹரிஷ் அப்போது ஜானவி புறம் திரும்பி, “நல்லா இருக்கீங்களா?” என்று கேட்க,

அவள் விழித்து கொண்டே, “ஆன் நல்லா இருக்கேன்” என்றாள் யோசனையோடு!

செழியன் மனைவியிடம், “ஏ... ஜானவி மறந்திட்டியா? ஆசிரமத்தில இன்ட்ரோ பண்ணனே... என் காலேஜ் பிரெண்ட் ” என்றான்.

“ஆ ஆமா இல்ல” என்றவள் தலையசைக்க சங்கரன் அப்போது ஹரிஷ் வீட்டாரை மரியாதையாக வரவேற்று அமர வைத்தார். ஜானவிக்கு இவற்றையெல்லாம் பார்க்கும் போதுதான் ஒரு விஷயம் நினைவிற்கு வந்தது.

‘நீ இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முன்னாடி உன் தங்கச்சி வாழ்க்கையை பத்தி யோசிச்சிருக்கலாம்’ என்று ஒரு உறவினர் அவளையும் செழியனையும் பார்த்து குத்தலாக சொன்னது நினைவு வந்தது.

அது எந்தளவு அவள் மனதை காயப்படுத்தியது என்று அவளுக்கு மட்டும்தான் தெரியும். தான் செய்த இந்த திருமணத்தால் ஜமுனாவிற்கு திருமணமே ஆகாமல் போய் விட்டால் ... என்று அடிக்கடி குற்றவுணர்வில் அவள் மனம் அடித்து கொள்ளும்.

 ஆனால் அந்த வேதனையை இதுவரை அவள் யாரிடமும் பகிர்ந்து கொண்டதேயில்லை. ஆனால் செழியன் அதை உணர்ந்து இப்படி ஒரு விஷயத்தை செய்திருக்கிறான் என்பதை எண்ணும் போது மனம் நெகிழ்ந்து போனது. அதுவும் செழியன் அவர்களுக்கு இடையில் கம்பீரமாக அமர்ந்து பேசி கொண்டிருக்க அந்த காட்சியை பார்க்க ஜானவிக்கு கோபம் வரவில்லை. கர்வமாக இருந்தது.

யாரை தான் திருமணம் செய்வது அசிங்கம் அவமானம் என்று அவர்கள் எல்லோரும் பொறுமினார்களோ இன்று அவனை முன்னிறுத்திதான் அவர்கள் மகளுக்கு சம்பந்தம் பேசி கொண்டிருந்தார்கள். இதை விட அவளுக்கு வேறு என்ன வேண்டும். ஓர் ஆழ்ந்த பெருமூச்சோடு தன் கணவனை பார்த்து பூரித்து கொண்டிருந்தாள்.

அந்த சமயம் மாப்பிள்ளை வீட்டார் இடையில் பேச்சு வார்த்தை நிகழும் போது, “மாப்பிள்ளை கொஞ்சம் வேற உட்பிரிவு... நம்ம கேஸ்ட் இல்ல” என்பது போல் சொல்லப்பட,

செழியன் உடனே, “மாப்பிள்ளை நல்லவனா... நம்ம பொண்ணை நல்லா பார்த்துப்பானா... கடைசி வரைக்கும் சந்தோஷமா வைச்சிப்பனான்னு மட்டும் பாருங்க” என்று கம்பீரமாக எல்லோர் முன்னிலையிலும் அழுத்தமாக சொல்ல சங்கரன், “மாப்பிள்ளை சொல்றது சரிதான்... எனக்கு இந்த கேஸ்ட் எல்லாம் முக்கியமில்ல... என் பொண்ணு சந்தோஷமா இருந்தா போதும்” என்றார்.

அந்த நொடி என்னவென்று சொல்ல முடியாத உணர்வில் ஜானவியின் விழிகளை கண்ணீர் நனைக்க அவரசமாக பின் வாயில் வழியாக சென்று தன் கண்ணீரை துடைத்து கொண்டாள்.

அப்போது ஜோதி அங்கே வர, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ஜானவி. ஆனால் ஒரு கர்வபுன்னகையோடு அவளை கடந்து சென்றாள். ஆயிரம் ஆயிரம் வார்த்தைகள் பேச முடியாததை அந்த புன்னகை உரைத்தது.

ஜானவி மீண்டும் உள்ளே வர செழியன் அவளை பார்த்தும், ‘எங்க போனீங்க?’ என்று பார்வையாலேயே வினவ, ‘இங்கதான்’ என்பது தலையசைத்து மென்னகையோடு செய்கையில் பதில் தந்தாள்.

 அதோடு அவள் முகத்தில் பிரகாசமான ஒளிர்ந்த புன்னகை அவளின் கோபம் தொலைந்து போன செய்தியை அவனுக்கு சொல்லியது. மனமகிழ்வோடு அவளிடம் ஹரிஷை காண்பித்து ஓகேவா என்பது போல் கண்களால் அவன் செய்கை செய்ய அவள் டபுள் ஓகே என்று முகம் விகசித்து வாயசைத்தாள். அவ்வளவுதான் அவனுக்கு வேண்டியதும்.

இந்த காட்சியை பார்த்து கொண்டிருந்த ஜோதிக்கு கடுப்பாக இருந்தது. வீட்டிற்கு முதல் பெண் என்று எப்போதும் திமிராக இருந்து எல்லோரையும் ஆட்டிபடைத்த காலம் மலையேறி போனது. ஜானவி விஷயத்தில் அவள் அவதூறாக பேசியதற்காக கிரிஜா கொடுத்த அரையும் வாங்கிய திட்டுக்களையும் அவளால் மறக்க முடியுமா?

 அதோடு அடங்கி போனவள்தான். கணவன் வீட்டிலும் அவளுக்கு கொஞ்ச நாட்களாக பிரச்சனைகள் என்பதால் அவளுக்கு இப்போதைக்கு தாய் வீட்டை எதிர்த்து கொள்ள முடியாத நிலைமை.

‘ஜானவி வீட்டுக்கு வர போற... அவ கிட்ட நீ எதாச்சும் ஏடாகூடாம பேசுன உன் உறவே வேண்டாம்னு தலை முழுகிடுவேன்... பார்த்துக்கோ’ என்று கிரிஜா முன்னமே ஜோதியிடம் எச்சரிக்கையாக சொல்லியிருக்க, இப்போது ஜோதி பல் பிடுங்கிய பாம்புதான்.

வேறுவழியின்றி அவள் எதுவும் பேச முடியாத நிலைமை. இனி எப்போதும் பேசவும் முடியாது. அதுதான் வாழ்க்கையின் சாரம்சம். கால வட்டம் சுழலும் போது மேல் இருப்பவன் ஒருநாள் கீழே இறங்கித்தான் ஆகவேண்டும் என்பதுதான் நியதி. இந்த நியதியை மறந்து மேலே இருக்கிறோம் என்று ரொம்பவும் ஆடிவிட்டால் கீழே இறங்கும் போது அகலபாதளம்தான்.

திருமண  பேச்சு வார்த்தைகள் முடிய எல்லோருக்கும் உணவு பரிமாறப்பட்டது. செழியன் மீனாவை அருகில் அமர்த்தி அவளை சாப்பிட வைத்து கொண்டே அவனும் சாப்பிட, ஜானவி அன்புவை அமர்த்தி அவளை சாப்பிட வைத்து கொண்டிருந்தாள். எல்லோரின் பார்வையும் அவர்கள் மீதுதான் இருந்தது.

உணவு முடிந்ததும் ஜானவி மகள்கள் இருவரையும் பின் வாயில் வழியாக அழைத்துவந்து அவர்கள் கைகளை அலம்பிவிட்டு உள்ளே அனுப்பிவிட, செழியன் நடந்து வந்தான். அங்கே யாரும் இல்லாததை கவனித்து, “ஜானு இந்தா லட்டு” என்று அவளிடம் நீட்ட,

“எனக்கு வேண்டாம் நான் சாப்பிட்டேன்” என்றாள்.

“ஆனா நான் சாப்பிடலயே” என்று அவசரமாக அந்த லட்டை அவள் வாயில் திணிக்க, “செழியன்” என்று அவள் திணறும் போது அவள் இதழோடு அணைத்து அந்த லட்டையும் அவள் இதழையும் சேர்த்து தனதாக்கி கொண்டான்.

“என்ன நீங்க... கொஞ்சம் கூட” என்றவள் வார்த்தை பாதியில் நின்றுவிட பின்னோடு ஜோதி நின்று கொண்டிருந்தாள். அவள் அவர்களை ஒரு மாதிரி பார்த்துவிட்டு கை அலம்பி கொண்டு உள்ளே சென்றுவிட ஜானவி செழியனை ஓரமாக அழைத்து கொண்டு வந்து,

“விவஸ்தையே இல்ல உங்களுக்கு... ஜோதி வேற பார்த்துட்டா” என்றாள்.

“பார்க்கட்டும்... நம்ம பிரெண்ட்ஷிப்பை தப்பு தப்பா திரிச்சி பேசனவங்க தானே அவங்க... இதை பார்த்து என்ன பேசுவாங்க” என்றவன் மேலும், “அன்னைக்கு ஏன்டா  நம்ம இரண்டு பேரையும் அப்படி சேர்த்து வைச்சி பேசனோம்னு அவங்க வாழ்க்கை பூரா பீல் பண்ணிகிட்டே இருப்பாங்க... பாரேன்” என்று எகத்தாளமாக புன்னகைத்து கூறினான்.

அவன் வார்த்தைகளை கேட்டு அவள் ஆச்சரியமாக கணவனை விழகள் விரித்து பார்த்தாள்.

அவன் மேலும், “அன்னைக்கு இந்த வீட்டில உனக்கு நடந்த அவமானம் ஒருவகையில என்னால நடந்துதானே ” என்று அவன் வருத்தமாக சொல்ல,

“சேச்சே... அப்படி எல்லாம் இல்லங்க” என்றவள் மறுக்க,
“நீ இல்லன்னு சொன்னாலும் அதான் உண்மை ஜானவி... அந்த கில்டி பீலிங் என்னை குத்திகிட்டே இருக்கு” என்றான்.

“செழியன்” என்றவள் ஏதோ பேச எத்தனிக்க அவன் அவளை கையமர்த்திவிட்டு,

“அன்னைக்கு என் மனைவிக்கு நடந்த அவமானத்துக்கு நான் பழி தீர்துக்கிட்டேன்... எந்த இடத்தில நீ அவமானப்பட்டு நின்னியோ அதே  இடத்தில உன்னை கம்பீரமா தலை நிமிர்த்தி நிற்க வைச்சிட்டேன்... எனக்கு இப்பதான் நிம்மதியா இருக்கு” என்றான்.

ஜானவி அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவளுக்கு பேச வார்த்தைகளே இல்லை . மௌனமாக நின்று அவனையே அவள் பார்க்க,

“என்ன ஜானு?” என்று கேட்டான். அவள் விழிகளை துடைத்து கொண்டு அவன் மார்பின் மீது சாய்ந்து கொண்டாள்.

“ஜானு யாராச்சும்... வந்திர போறாங்க” என்றவன்அவதியுற,

“வந்தா வரட்டும்” என்று சொல்லி கொண்டே அவன் மீது சாய்ந்திருந்தவள், “நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி” என்றாள்.

அவன் சிரித்துவிட்டு, “நானும்தான்” என்க, இருவரின் முகத்திலும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத சந்தோஷம் குடியேறியிருந்தது.

செழியன் தன் நண்பனை அவன் குடும்பத்தையும் வழியனுப்பிய பின் தானும் புறப்படுவதாக சொல்ல அங்கே அவர்கள் குடும்பமே கூடியிருந்தது. “ரொம்ப சந்தோஷம் தம்பி... எல்லாம் உங்களால்தான்” என்று அவர் செழியன் கையை பிடித்து கொள்ள,

“இதுக்கே ரொம்ப சந்தொஷப்படாதீங்க மாமா... ஜமுனா கல்யாணத்தை நடத்தி முடிக்கிற வேலையெல்லாம் இருக்கு” என்று புன்னகையாக சொல்லிவிட்டு அவன் விடைபெற, “இருந்துட்டு போகலாமே” என்றவர்கள் வார்த்தைக்கு அவன் ஏதேதோ காரணங்கள் சொல்லி மறுப்பு தெரிவித்துவிட்டான்.

 பின அவன் வெளியேற, “ஜானும்மா” என்று சங்கரனை அழைத்தார்.

“பேசிட்டு வா” என்று செழியன் செய்கை செய்துவிட்டு தம் மகள்களை அழைத்து கொண்டு வெளியே செல்ல ஜானவி அவர்கள் எல்லோரையும் பார்த்துவிட்டு,

“எனக்கு உங்க யார் மேலயும் இப்போ எந்த கோபமும் இல்ல... வருத்தமும் இல்ல... ஏன்னா என் மனசு முழுக்க இப்ப சந்தோஷம் மட்டும்தான் நிரம்பி இருக்கு... அதனால கோபத்தை எல்லாம் சுமக்க என்  மனசுல இடம் இல்ல... ஸோ... அதெல்லாம் போகட்டும் விடுங்க.” என்றாள் சமாதானமாக.

கிரிஜாவும் சங்கரனும் மகளின் வார்த்தையில் தெரிந்த முதிர்ச்சியை நெகிழ்வாக பார்க்க அவள் மேலும், “அப்புறம் நீங்க யாரும் தங்கச்சி கல்யாண செலவு பத்தி கவலை படாதீங்க... மொத்தமா எல்லாத்தையும் நானே பார்த்துக்கிறேன்” என்க, எல்லோருமே வாயடைத்து போய் நின்றனர்.

அதன் பின் அவள் அவர்களிடம் சொல்லிவிட்டு புறப்பட, காரில் செழியன் காத்திருந்தான்.

அவளும் காரில் ஏற சந்தோஷமாக அவள் குடும்பம் அவர்களை வழியனுப்பி வைத்தது.

“ம்ச்... அத்தை மாமாவும் வந்திருக்கலாம்... அவங்களை கூப்பிடாம நம்ம மட்டும் இங்கே வந்தது” என்று அவள் தயக்கமாக சொல்ல,

“நான் கூப்பிட்டேன்... ஆனா அவங்கதான் அவங்க மருமக சமாதானமாகாம இங்க வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க... நிச்சயம் நெக்ஸ்ட் டைம் கூட்டிட்டு வரலாம்” என்றான்.

 ஜானவி முகத்தில் புன்னகை அரும்பியது. அவன் கரத்தை கோர்த்து கொண்டவள் அவனை ஆழ்ந்து பார்த்து “செழியன் நான் ஒன்னு கேட்கட்டுமா?” என்க, “என்ன ஜானு... கேளு?” என்றான்.

“எனக்காக அந்த பாட்டை பாடுங்களேன்” என்று அவள் ஏக்கமாக கேட்க,

மனைவி கேட்ட வார்த்தையை தவிர்க்க முடியாமல் செழியன் காரை இயக்கி கொண்டே அவனின் மென்மையான அந்த காந்த குரலில் முழுக்க முழுக்க காதலோடு அந்த பாடலை பாட ஆரம்பித்தான்.

“நீ என்பதே நான் தானடி

நான் என்பதே நீ தாண்டி”

அவள் அவன் பாடலில் மதி மயங்கி போனாள். தான் இருக்கும் இடம் பொருள் எல்லாம் மறந்து அவனை மட்டுமே நினைவில் நிறுத்தி கொண்டாள்.

வாழ்க்கை அழகானது.

ரசித்து லயித்து வாழ்ந்தால் வாழ்க்கை இன் னும் அழகானது. 

காதலோடு விட்டுகொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை இன்னும் இன்னும் அழகானது.

எல்லோரிடத்திலும் அன்பாக வாழ்பவர்களுக்கு வாழ்க்கையே  அழகானது.

*********சுபம்*********

Rathi, Muthu pandi and 2 other users have reacted to this post.
RathiMuthu pandirachel.kumarshiyamala.sothy
Quote

So nice

monisha and Shamili Selvaraj have reacted to this post.
monishaShamili Selvaraj
Quote

super story

Quote

Very nice and good story 👍

You cannot copy content