You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nee Enbathe Naanaga - 3

Quote

3

தோல்வி

ஜானவி எப்படியோ சென்னை வாகன நெரிசலுக்கும் சூரியனின் உக்கிர தாண்டவத்திற்கும் இடையில் கிடைத்த சின்னச் சின்ன சந்து பொந்துகளில் எல்லாம் திறம்பட புகுந்து, முகமெல்லாம் வியர்த்து வடிய காலை பதினொரு மணிக்குத் தன் அலுவலகம் வந்து சேர்ந்தாள். அதுவும் மிகுந்த எரிச்சலோடு!

மீனாவின் பள்ளியில் தொடங்கிய கடுப்பு இன்னமும் அவளுக்குத் தீர்ந்தப்பாடில்லை. இருப்பினும் எப்படியோ நேரத்தோடு அலுவலகம் வந்து சேர்ந்துவிட்டாள்.

அதாவது லண்டனில் பங்குச்சந்தை ஒன்பது மணிக்குத் தொடங்கும். அந்த வகையில் பங்குகள் முதலீடு செய்ய முன்னேற்பாடுகளோடு  யு. கே நேரப்படி காலை ஏழு மணிக்கு ஜானவி அவள் அலுவலகம் உள்ளே இருக்க வேண்டும். அதாவது இந்திய நேரப்படி காலை பதினொன்றரைக்கு. அந்த வகையில் பார்த்தால் அவள் சீக்கிரம்தான்.

ஜானவி வேலை செய்யும் அலுவலகம் அந்தப் பெரிய கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் இருந்தது. அவள் உள்ளே நுழையும் போது அவள் அலுவலகமே பரபரப்பின் உச்சத்தில் இருந்தது. இன்றல்ல, எப்போதுமே அவர்கள் அலுவலகம் அப்படித்தான்.

ரோலர் கோஸ்டர் ரைட் போலத்தான் அவர்கள் வேலையும். பங்குகளின் விலை ஏற்றத்திற்கும் இறக்கத்திற்கும் இடையில் கோடிகளில் பணம் முதலீடு செய்து அதைப் பெருக்குவது. சில நேரங்களில் அதலபாதாளங்களில் விழுமளவுக்காய் நஷ்டமும் பெறலாம். எதிர்பார்த்திராதளவு பன்மடங்கு லாபமும் ஈட்டலாம்.

அடுத்த நொடி என்ன நடக்கும் என்பது அவர்களுக்கே தெரியாது. இத்தகைய நிலைமையை சாதுரியமாய் கையாளத் தெரிந்தவர்கள் மட்டுமே  இந்த வேலையில் நீடித்திருக்க முடியும்.

அதுவும் அவர்கள் செய்வது தினவர்த்தகம். (இன்ட்ரா டே ட்ரேடிங் என்று சொல்வார்கள்). அன்றே பங்குகளை வாங்கி விற்பது. முதலீடு செய்துவிட்டு அன்றே பங்குகள் ஏறும் வரை காத்திருந்து லாபம் பார்ப்பது.

அந்த தளத்தில் வேலை செய்யும் பத்து பதினைந்து பேரும் ஒரே பெரிய மேஜையில்  தங்கள் தங்கள் லேப்டாப்பை வைத்துக் கொண்டு, இருக்கையில் அமர்ந்து அன்றைய சந்தையின் நிலவரத்தைக் குறித்தும் அவர்கள் மேற்கொள்ளப் போகும் வரத்தகம் மற்றும் பணபரிவர்த்தனைகளைக் குறித்தும் திட்டமிடல் செய்து கொண்டிருந்தனர்.

அந்தக் கருத்து பரிமாறல்களுக்கு இடையில் அவர்கள் தளத்தில் அமைதிக்கு  சாத்தியமே இல்லை. எப்போதும் ஒருவித ஆரவாரம் இருந்து கொண்டே இருக்கும்.  அது உச்சக்கட்டதை எட்டி உற்சாக நிலைக்கும் போகும். சில நேரங்களில் மயான அமைதியில் மூழ்கியும் போகும். எல்லாமே அன்றைய சந்தை நிலவரத்தைப் பொறுத்து!

இதுவல்லாது அங்கே நான்கு தொலைக்காட்சிகள் இயக்கத்தில் இருந்தது. உலகப் பொருளாதார நிலவரங்களைக் குறித்த செய்திகள், அன்றைய பங்குச்சந்தை நிலவரங்கள், மற்றும் தங்கள் வர்த்தகங்களை செய்யத் தேவையான குறிப்புகள், இறுதியாகப் புள்ளி விவரங்களோடு கூடிய பெரிய அட்டவணை என்று ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் ஒவ்வொன்று ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்தது.

ஜானவி அவற்றை எல்லாம் தன் கூர்மையான பார்வையால் அளந்து கொண்டே தன் இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

“ஜானு... என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட” என்று ஒரு அலுவலக நண்பன் அவளை கலாய்க்க, “வேண்டாம்... நானே கடுப்பில இருக்கேன்” என்று அவள் அவனைத் திரும்பிப் பார்த்து அழுத்தமாய் முறைத்தாள்.

“நீ என்னைக்குத்தான் கடுப்பில இல்லை” என்றவன் சிரித்துக் கொண்டே சொல்ல, உடனே அருகில் இருந்தவன்,

“ஏன் டா காலங்காத்தால சனியனைத் தூக்கி பனியன்ல போட்டுக்குற” என்றான்.

அந்த நொடியே  ஜானவி அவர்களைப் பார்த்த பார்வையில் இருவரும் தங்கள் வாயை கப்சிப்பென்று மூடிக் கொண்டனர். அவள் சரியான டென்ஷன் பேர்வழி என்று அந்த அலுவலகமும் அறிந்ததுதான். அதேநேரம் இந்த ஒரு வருடத்தில் அவள் மிகுந்த திறமைசாலியாகவும் அறியப்பட்டாள். அனுபவம் மிக்கவர்கள் கூட அவளிடம் யோசனை கேட்பர்.

 ஜானவியின் கவனம் முழுக்க முழுக்க தன் வேலைக்குள் சென்றிருந்தது. நிறுவனங்களின் பெயர்களும் அதன் பங்குகளின் துல்லியமான விலைகளையும் குறித்துக் கொண்டே அன்றைய நாளின் முதலீடை எப்படி செய்ய வேண்டும் என்று திட்டமிடத் துவங்கினாள்.

அப்படியாக ஒரு மணிநேரம் கழிந்த போது அவள் இருக்கையை நோக்கி ஒரு பெண் வந்து அவள் காதோரம் ஏதோ சொல்ல, அத்தனை நேரம் வேலையிலிருந்த அவள் கவனம் சட்டென்று மாறியது.

ஜானவி மிகுந்த கடுப்போடு, “எதாச்சும் சொல்லி சமாளிச்சு அனுப்பிடேன் விஜி!” என்று கெஞ்சலாய் சொல்ல,

“எத்தனை தடவை... இந்தத் தடவை என்னால முடியாது... உன்னை பார்த்தே ஆகணும்னு ரொம்ப அடமென்டா நிக்கிறாரு ஜானு... சார் வேற வர்ற நேரம்... ப்ளீஸ் நீயே வந்து சமாளிச்சு அனுப்பேன்” என்று அந்தப் பெண் சொல்லவும் ஜானவி படபடப்பானாள்.

வேறு வழியே இல்லை. இன்று தான்தான் சமாளித்து ஆக வேண்டும் என்ற முடிவோடு அந்தப் பெண்ணை அனுப்பிவிட்டு ஜானவி இருக்கையில் இருந்து எழுந்து கொண்டாள். அவள் உடலில் ஒருவித நடுக்கம் பரவிக் கரமெல்லாம் சில்லிட்டது.

அவள் தன் பதட்டத்தைக் காட்டி கொள்ளக் கூடாது என்று நினைத்த போதும் அது அவள் முகத்தில் பரவிவிட மிகுந்த தயக்கத்தோடு வெளியே வந்தாள். அவள் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தான் ராஜன்.

அவள் வருவதைப் பார்த்தவன் எகத்தாளமாய் சிரித்துக் கொண்டே, “மேடம் ரொம்ப பெரிய ஆளாயிட்டீங்க போல... ஆபீஸுக்கு உன்னைப் பார்க்காலமுன்னு வந்தா... அந்த ஒல்லி குச்சி என்னவோ உன்னைப் பார்க்க முடியாதுன்னு சொல்லி துரத்துறா... என்னடி வேலைக்கெல்லாம் போய் சம்பாதிக்கிற திமிருல சீன் போடுறியா?” என்று கேட்க,

“நமக்குள்ளதான் எதுவும் இல்லன்னு ஆயிடுச்சு இல்ல... அப்புறம் எதுக்கு நீ என்னைப் பார்க்க வரணும்” அவன் முகத்தைக் கூட பார்க்காமல் எங்கேயோ பார்த்துக் கொண்டு அவள் பல்லை கடித்துக் கொண்டு பதிலுரைத்தாள்.

“எதுவும் இல்லையா? எங்கே என்னைப் பார்த்து சொல்லு” என்று அவன் அவள் கன்னங்களைப் பிடித்துத் திருப்ப அவன் கரத்தைத் தட்டிவிட்டு, “என்னைத் தொடற வேலையெல்லாம் வைச்சுக்காதே...” என்று அவள் பதறிக் கொண்டு விலகி நிற்க,

“நான் தொடாமதான் முழுசா ஒரு பிள்ளையைப் பெத்து வைச்சிருக்கியாடி  நீ” என்று கேட்டு சிரித்தான்.

அவள் முகம் அசூயையாக மாறியது. “உன்கிட்ட எல்லாம் மனுஷன் பேசுவானா?” என்று சொல்லி அவள் அவனைத் தவிர்த்துவிட்டுத் திரும்பி நடக்க அவள் கரத்தை அழுந்தப் பற்றினான்.

“கையை விடு” என்றவள் முறைக்க அவன் கரம் அவள் நாடியை அழுத்திக் கொண்டிருந்தது.  அவன் பார்வை அவளை உஷ்ணமாய் பார்த்து,

“பொறுமையா பேசலாமுன்னு பார்த்தா ஓவரா பன்ற... ஊரு உலகத்துல எவனும் செய்யாதது என்னடி புதுசா நான் செஞ்சுட்டேன்” என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவள் கை மணிக்கட்டு வலிக்கத் தொடங்கியது.

“என் கையை விட போறியா இல்லையா நீ” என்றவள் வேதனை தாங்காமல் கேட்க, “நானும் ரொம்ப பொறுத்துப் போயிட்டேன்.... இதுக்கு மேல என்னால முடியாது. உனக்கு இரண்டு நாள் டைம்...  ஒழுங்கா என் பொண்ணைக்  கூட்டிட்டு நீ வீடு வந்து சேரல... உன் குடும்பம் சொந்தக்காரங்க முன்னாடி எல்லாம் உன்னை அசிங்கப்படுத்திடுவேன்... சொல்லிட்டேன்” என்று படு உக்கிரமாக மிரட்டிவிட்டு அவள் கரத்தை விடுவிக்க அவன் பிடித்த இடம் அப்படியே சிவந்து போனது.

 “செத்தாலும் உன் கூட வந்து வாழமாட்டேன்டா... நீ என்ன பன்றியோ பண்ணிக்கோ” என்றவள் பதிலடி கொடுக்க அந்த நொடியே உச்சபட்ச கோபத்தை எட்டிய ராஜன் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். அவள் கண்ணாடி கண்களில் இருந்து தெறித்துத் தரையில் விழ்ந்தது.

அவள் தன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அதிர்ந்தபடி நின்று கொண்டிருக்க, “செத்தாலும் வாழ மாட்டியா... பார்க்குறேன்டி... எப்படி நீ என் கூட வாழாம போறன்னு” என்று சவாலாய் சொல்லிவிட்டு, “மவளே! இரண்டு நாளில நீ வரல... அப்புறம் உனக்கு சாவுதான்டி” என்று உச்சமாய் மிரட்டிவிட்டு அவன் அகன்றான்.

அப்படியே அசைவில்லாமல் அவமானத்தில் கூனிக்குறுகி நின்றவள் சுற்றும்முற்றும் பார்த்து அந்த இடத்தில் யாரும் இல்லை என்பதை அறிந்த பின்னர் மெல்ல தரையில் கிடந்த தன் கண்ணாடியை எடுத்தாள். அது விழுந்த வேகத்தில் உடைந்திருந்தது.

அதனை எடுத்துக் கொண்டு நேராக கழிவறைக்குள் புகுந்து விட்டாள். அவள் விழிகளில் கண்ணீர் தாரைதாரையாக வடிந்து கொண்டே இருந்தது. வெதும்பிக் கொண்டே எதிரே இருந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்தாள்.

அவனின் விரல்தடம் அப்படியே அச்சாக அவள் வலது கன்னத்தில் பதிந்திருந்தது. இந்த முகத்தோடு எப்படி அலுவலகத்திற்குள் செல்வது என்று அங்கிருந்த நீரால் நன்றாக அலம்பிவிட்டு அழுந்த துடைத்துக் கொண்டாள். அப்போதும் அவனின் விரல்தடம் அவள் முகத்தில் அழுத்தமாகத் தெரிந்தது. அதனைப் பார்க்கப் பார்க்க அவள் விழிகளில் மீண்டும் நீர் பெருகியது. அப்படியே தயங்கி நின்றவள் சில நிமிடங்கள் கழித்துக் கொஞ்சம் ஆசுவாச நிலைக்கு வந்திருந்தாள். அவள் பின்னர் தன் வலதுபுற கன்னத்தை மறைத்துக் கொண்டே அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.

எல்லோரும் அங்கே பரபரவென வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் யாரும் இவள் முகத்ததிலிருந்த மாற்றத்தை அப்போது கவனிக்கவில்லை.

தளர்ந்த நடையோடு வந்து தமது இருக்கையில் அமர்ந்து கொண்டு சந்தை விவரங்கள் ஓடிக் கொண்டிருந்த தொலைக்காட்சியைப் பார்த்தாள். அதன் அடியில் ஓடிக் கொண்டிருந்த புள்ளிகள் யாவும் கண்ணாடி இல்லாத காரணத்தால் மங்கலாகவே தெரிந்தது.

இதே மனநிலையோடு தான் எப்படி வேலையை செய்வது என்று அவள் எண்ணிய போதும் வேறு வழியில்லை. மெல்ல தன் வேலையில்  ஈடுபட ஆரம்பித்தாள்.

ஆனால் அன்றைய சந்தை முடியும் போது எல்லோருமே அதிர்ச்சியாகும் விதமாய் ஜானவி பதினைந்து கோடி நஷ்டத்தில் முடித்திருந்தாள்.

இப்படி வேறு யாராவது செய்திருந்தால் அது அத்தனை பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்காது. அதை செய்தது ஜானவி என்றதுமே எல்லோருமே அவளை நம்பாமல் பார்த்தனர். அப்போதே அவளைக் கூர்ந்து கவனித்தவர்கள் அவளிடம் என்ன நடந்தது என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்து எடுத்துவிட்டனர். யாரிடமும் தன் பிரச்சனையை சொல்ல விழையவில்லை ஜானவி. அவள் எல்லோருக்கும் மௌனத்தை மட்டுமே பதிலாகத் தந்தாள்.

அப்போதுஅவள் உடன் வேலை செய்யும் தோழி, “என்ன ஜானு... பாஸ் இப்போ  உன்னை காச்சு காச்சுன்னு காச்ச போறாரு” என்க, ஜானவி முகத்தில் ஒரு விரக்தியான புன்னகை!

தன் வாழ்க்கையே நஷட்மாகி போன பின் இதெல்லாம் ஒரு பெரிய நஷ்டமா என்றிருந்தது அவளுக்கு! ஆனால் அவளின் மேலதிகாரி அவளை நிற்க வைத்து அவளை ஒருவழி செய்துவிட்டார். இதே ஜானவி பலமுறை அவருக்கு பல கோடிகள் லாபம் ஈட்டி தந்திருக்கிறாள். ஆனால் இந்த ஒரு தோல்வியே அவருக்கு இப்போது பெரிதாக தெரிகிறது.

வெற்றிகள் பல வந்தாலும் ஒரே ஒரு தோல்வி... சிலரின் வாழ்க்கயை மொத்தமாய் முடக்கிபோட்டுவிடும். கல்வி, வேலை எல்லாவற்றிலும் வெற்றி கண்டாலும் திருமண வாழ்க்கை படுதோல்வி எனும் போது ஜானவிக்கு மற்ற வெற்றிகளும் கூட சீட்டுகட்டு கோபுரமாய் மளமளவென்று சரிந்துவிடுகிறது.

கிட்டத்தட்ட அன்புச்செழியனுக்கும் கூட இதே நிலைமைதான். இருவரும் முற்றிலும் மாறுப்பட்டவர்கள். ஆனால் திருமண வாழ்க்கை அவர்களுக்கு தந்த இழப்பு என்னவோ ஒரே போலத்தான்.

அன்புச்செழியனின் வீடு.

ஒரு பெரிய அடுக்கு மாடி குடியிருப்பில் இரண்டாவது மாடியில் இருந்தது அவன் வீடு. உள்ளே நுழையும் போதே மேல்தட்டு மக்களின் வீடு போல ஆடம்பரமாக காட்சி தந்தது அதன் அமைப்பு.

டிவி, சோபா, டைனிங் டேபிள் என்று பொருட்கள் எல்லாமே பார்க்கும் போதே விலையுயர்ந்தவை என்று தெரிந்தது. அதே போல் ஒவ்வொரு பொருட்களும் நேர்த்தியோடும் கலைநயத்தோடும் வாங்கி வைக்கப்பட்டிருந்தது.

 வீடு முழுக்கவும் இயற்கை காட்சிகளோடு பல வண்ண புகைப்படங்கள். எல்லாமே அழகியல் ததும்ப பார்வையை ஈர்த்தது.

அந்த வீட்டின் முகப்பறை மட்டும் அப்படிஇல்லை. எல்லா அறைகளிலும் இப்படியான அழகிய பொருட்களும் புகைப்படங்களும் இருந்தன. சுவற்றில் பூசியிருந்த வர்ணங்கள் கூட ரசனையோடு பல வண்ண கலவைகளாக இருந்தது.

ஒரு வருடத்திற்கு முன்பாகத்தான் செழியன் அந்த வீட்டை வாங்கி தன் ரசனைக்கு ஏற்றார் போல் சின்னச்சின்ன விஷயங்களையும் வடிவமைத்து இருந்தான்.

அந்த சிறிய பூஜை அறையை  கூட அவன் விட்டுவைக்கவில்லை. நுணுக்கமான வேலைப்பாட்டுடைய சின்ன சின்ன தெய்வ சிலைகளில் தொடங்கி படங்களில் ஜொலித்து கொண்டிருந்த வண்ண பூக்கள் போல் காட்சியளித்த சீரியல் பல்புகள் என ஒவ்வொரு பொருளிலும் அத்தனை ரசனை!

போட்டோகிரேஃபி அவன் பொழுதுபோக்கு. இயற்கையை படம்பிடிப்பதில் தொடங்கி அவன் வீட்டில் நடந்த சின்ன சின்ன விசேஷங்களை கூட அவன் கேமரா அழகாக பதிவு செய்திருந்தது.

அதற்கு சாட்சியாக ஒவ்வொரு அறையிலும் இருந்த புகைப்படங்கள். அதுவும் செழியனின் விசாலமான படுக்கை அறையில் அவன் மனைவி ரஞ்சனியின் புகைப்படங்கள்.  அவள் சிரிப்பது, பேசுவது, நாணுவது, கோபம் கொள்வது என அவளின்  ஓவ்வொரு உணர்வுகளையும் மிகுந்த ரசனையோடு நுணுக்கமாய் படம்பிடித்து வைத்திருந்தான்.

அதேபோல் மகள் அன்புச்செல்வி பிறந்தது முதல் அவள்  தவழ்ந்தது நடந்தது மழலையாக சிரித்தது மற்றும் முதல் நாள் பள்ளிகூடம் போனதுவரை அவன் தொகுப்பில் இருந்தது.

இவை எல்லாவற்றோடும் சேர்ந்து கண்ணாடியால் பூட்டப்பட்ட அந்த அழகிய அலமாரிக்குள் விதவிதமான ட்ராபிகளும் மெடல்களும் அவனின் விளையாட்டு திறமையை பறைசாற்றி கொண்டிருந்தன.

அவன் தந்தை பாண்டியனோ ரயில்வேயில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். மனைவி சந்தன லக்ஷ்மியும் வங்கி ஊழியராக வேலை செய்து ஓய்வு பெற்றவர். ஒரே மகன். செல்ல மகன்.  தனியாக வளர்ந்தாலும் பள்ளியில் தொடங்கி கல்லூரி வரை அவனுகென்று ஒரு பெரிய நட்பு பட்டாளமே இருக்கும்.

அவன் தொட்டதெல்லாம் வெற்றி என்றளவில் விளையட்டில் படிப்பில் என்று எல்லாவற்றிலும் முதலிடம் பிடித்த திறமைசாலி. அவன் பெயருக்கு ஏற்றார் போல் அவன் அன்பாக பழகும் விதத்தில் அவனிடம் நட்பு பாராட்டாதவர்களே கிடையாது. அதே போல் படிப்பிலும் கெட்டி. தகவல் தொழில்நுட்பத்தில் பொறியியல் பயின்று, படித்து முடித்தவுடன் வேலைக்கும் சேர்ந்து ஆரம்பத்திலேயே நல்ல கணிசமான தொகையை சம்பளமாக பெற்றான். வேலைக்கு சேர்ந்து ஒரு வருடத்தில் கல்லூரியில் காதலித்த பெண் ரஞ்சனியை திருமண முடித்துவிட்டான்.

திகட்ட திகட்ட வாழ்க்கையை அணுஅணுவாக அனுபவித்து வாழ்வதுதான் அன்புச்செழியன். அதற்கேற்றார் போலவே அவன் வாழ்க்கையில் அவன் நினைத்தது எல்லாம் கிடைத்தது. அவன் ஆசை மகள் அன்புச்செல்வி உட்பட.

 ஆனால் இந்த சந்தோஷமெல்லாம் ஒரே நாளில் மொத்தமாய் முடிந்து போகும் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த ஒரு நாள் அவன் வாழ்க்கையையே புரட்டிபோட்டது.

அந்த நாளோடு செழியனுக்கு வாழ்க்கையின்  மீதிருந்த தேடலும் காதலும் ரசனையும் தொலைந்து போனது.

Rathi, Muthu pandi and rachel.kumar have reacted to this post.
RathiMuthu pandirachel.kumar
Quote

Nice

You cannot copy content