You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nee Enbathe Naanaga - 7

Quote

7

மனத்தாங்கல்

புது வீட்டிற்கு வந்ததிலிருந்து ஜானவிக்கு வேலை வேலை வேலைதான். ஒருபுறம் தன் அலுவலக வேலைகளை வீட்டிலிருந்தபடியே பார்த்து கொண்டவள்,  மீதமிருந்த நேரங்களில் வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவது அடுக்குவது என்று ஓய்வின்றி வேலைகள் செய்தாள். அவளின் அலுவலக வேலையை பொறுத்தவரை ஒரு லேப்டாப்பும் இணையதள இணைப்பும் இருந்தால் போதுமானது. அவர்கள் வேலையை எங்கிருந்து வேண்டுமானாலும் செய்துவிடலாம்.

ஆனால் இதுநாள் வரை அவள் அலுவலகம் சென்று வேலை செய்வதுதான் வழக்கம். அங்கிருந்து செய்ததால்தான் வேலையில் முழு கவனத்தை செலுத்த முடியும் என்பது அவள் எண்ணம். ஆனால் இப்போது நிலைமை வேறு. அலுவலகம் சென்றுவிட்டு வருவது இப்போதைக்கு அவளால் சாத்தியப்படாது.

அவள்தான் மீனாவை பள்ளியிலிருந்து அழைத்துவர வேண்டும். அவள் தன் தம்பி ஜெகனிடம் சொன்னால் அவன் மாலை நேரங்களில் மீனாவை அழைத்து கொண்டு வந்துவிடுவான்தான். நிச்சயம் கிரிஜாவும் அவள் அலுவலகத்திலிருந்து வரும் வரை மகளை பார்த்து கொள்வாள்தான்.

ஆனால் ஜானவிக்கு அவர்கள் தயவை நாட மனமில்லை.  அவளுக்கு அவள் வீம்பும் ஈகோவுமே பெரிதாக இருந்தது. அவர்களின் சிறு உதவியும் வேண்டாம் என்று தனியாகவே அனைத்து வேலைகளையும் பார்த்து கொண்டாள். ரொம்பவும் சிரமமாக இருந்த போதும் தன் சுயத்தை இழக்கவும் பிடிவாதத்தை விட்டு கொடுக்கவும் அவள் கிஞ்சிற்றும் விரும்பவில்லை.

இதெல்லாம் ஒருபுறமிருக்க ஜானவிக்கு என்ன காரணத்தினாலோ செழியனை கண்டாலே பிடிக்கவில்லை. அதுவும் அவன் முகம் பார்த்தாலே அவளிடமிருந்து ஒரு வெறுப்பான பார்வை.

ஆனால் செழியனுக்கு ஜானவியின் மீது வெறுப்போ கோபமோ துளிகூட இல்லை. மாறாய் அவளுக்கு அப்படி என்ன தான் செய்துவிட்டோம் என்ற புரியாத குழப்பம்தான்.

இப்படியாக ஒருவாரம் கடந்து சென்றது. ஆனால் வேலை என்னவோ ஜானவிக்கு ஒய்ந்தபாடில்லை.  இந்த நிலையில் மீனாவின் பள்ளியில் அன்று பேரன்ட்ஸ் மீட்டிங் என்று சொல்லி அவளை அழைத்திருந்தனர். ஜானவி தயாராகி மகளையும் தயாராக்கி பள்ளிக்கு அழைத்து சென்றாள்.

அங்கே வகுப்பறை வாயிலிற்குள் ஜானவி நுழைய போகும் போது உள்ளே செழியன் வகுப்பாசிரியரிடம் பேசி கொண்டிருப்பதை பார்த்து அவள் முகம் கடுகடுத்தது. செழியனை பார்க்கவும் விரும்பாமல் வாசலிலேயே அவள் ஒதுங்கி நின்று கொண்டாள்.

ஆனால் அந்த வகுப்பாசிரியர் ஜானவியை பார்த்துவிட்டு, “உள்ளே வாங்க மேடம்” என்று இவளை உள்ளே அழைக்கவும்  வேறுவழியின்றி உள்ளே வந்து நின்று கொண்டாள்.

அப்போதும் செழியன் பார்வை படாத தூரம் அவள் தள்ளி நிற்க, அப்போது அவள் சுடிதார் டாப்பை இழப்பது போன்ற உணர்வு. ஜானவி தன் பார்வையை கீழ் இறக்கினாள். அங்கே அன்புச்செல்வி நின்றிருக்க, ஜானவி முகம் குழப்பமானது. 

அன்புச்செல்வி அப்போது வருத்தமான பாவனையில், “நீங்க மீனாவை என் கூட பேச கூடாதுன்னு சொன்னீங்களா?” என்று கேட்க, ஜானவி யோசனையாய் அவளை பார்த்தாள். ‘நாம அப்படி சொன்னோமா?’ என்று அவள் சிந்திக்க, இரண்டு நாள் முன்பு ஏதோ கோபத்தில் மகளிடம் சொன்னது நினைவுக்கு வந்தது. ஆனால் அன்று மீனாவிடம் ஏதோ டென்ஷனிலும் கோபத்திலும் சொன்னாலே ஒழிய ஆழ்ந்து யோசித்தெல்லாம் அவள் அப்படி சொல்லவில்லை.

இப்போது அன்புச்செல்வி கேட்டதும்தான் அவளுக்கு அந்த விஷயம் மனதில் வந்து நின்றது. அந்த சின்ன பெண்ணிடம் என்ன சொல்வது என்று புரியாமல், “அது வந்து ம்மா” என்று அவள் தயங்கும் போதே,

அன்புச்செல்வி தேம்பி தேம்பி அழ தொடங்கிவிட்டாள்.

ஜானவி அதிர்ந்து அவளை பார்த்து, “பாப்பா” என்று மண்டியிட்டு அன்புச்செல்வியை சமாதானப்படுத்த முயல அவள் அழுது வடிந்தபடி, “மீனாவை என்கிட்ட பேச சொல்லுங்க ஆன்ட்டி” என்றாள்.

ஜானவியின் முகம் இருளடர்ந்து போனது. அவள் அன்புவின் கண்ணீரை துடைத்துவிடும் போதே செழியன் அங்கே வந்து நின்றிருந்தான்.

“என்னாச்சு அன்பும்மா?” என்றவன் பரிவாக மகளிடம் கேட்க, ஜானவி தனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என்பது போல் ஒதுங்கி நின்று கொண்டாள். ஏற்கனவே அவனுக்கும் தனக்கும் ஒத்து போகவில்லை. அப்படியிருக்க அவன் மகளின் அழுகைக்கு தான்தான் காரணம் என்று தெரிந்தால் ஏதாவது பிரச்சனை நேரமோ என்ற எண்ணம்தான்.

செழியன் அவளை கோபமாக ஒரு பார்வை பார்த்தானே ஒழிய, அவளை அது குறித்து எதுவும் கேட்டு கொள்ளாமல் மகளை அங்கிருந்து அழைத்து கொண்டு சென்றுவிட்டான்.

அதன் பின் மீனாவின் ஆசிரியர் ஜானவியை அழைத்தார். அவர் மீனாவை பற்றி ஒரு பெரிய குற்றப்பத்திரிக்கையே வாசித்து முடிக்க,  ஜானவி கடுப்பாகவும் கோபமாகவும் மகளை பார்த்திருந்தாள். சரியாக படிக்கவில்லை என்பதை விட வகுப்பறையில் எந்நேரமும் வேடிக்கை பார்ப்பது ஓரிடத்தில் ஒழுங்காக இருக்காமல் சேட்டை செய்வது என்று மீனாவின் லீலைகளை அவர் முழுவதுமாக ஒப்புவித்துவிட்டார். 

இதையெல்லாம் கேட்ட பின்னும் ஜானவியால் பொறுமையாக இருக்க இயலுமா? மகளை ஸ்கூட்டியில் ஏற்றி வீடு வரும் வரை வசைப்பாடியவள் அதோடு நிறுத்தவில்லை.  வீட்டிற்கு வந்த பின்னும் தன் வசையை தொடர்ந்தாள்.

“நான் எல்லாம் ஸ்கூலில படிச்ச காலத்தில் என்னை பத்தி ஒரு சின்ன கம்ப்ளைன்ட் கூட இதுவரைக்கும் வந்ததில்ல... தெரியுமா? அவ்வளவு டிஸப்ளினான ஸ்டூடண்ட்... ஆனா  நீ ஏன்டி இப்படி இருக்க?” என்று ஜானவி அவள் பாட்டுக்கு புலம்பி கொண்டிருக்க,  அதுவரையில் மீனா எதுவுமே சொல்லாமல் அழுத்தமாக மௌனம் சாதித்தாள்.

 “இப்ப மட்டும் வாயை டைட்டா மூடிக்கோ... மத்த நேரத்துல எல்லாம் வாய் கிழிய பேசு” என்ற போது மீனாவால் பொறுக்க முடியவில்லை.

தன் மௌன நிலையை கலைத்து, “நீ கூடத்தான் வாய் கிழிய பேசுற” என்று சொல்லிவிட ஜானவியின் முகம் சீற்றமாக மாறியது.

 மகளை முறைத்தபடி, “என்னடி சொன்ன?” என்று கேட்க,

“அம்மம்மா சொன்னாங்க... நீ கூடத்தான் சரியான வாயாடி...  சொல் பேச்சே கேட்க மாட்டேன்னு...” என்று மீனா மேலும் சொல்ல ஜானவியின் கோபம் பன்மடங்கு ஏறியது.

“அடி வாயாடி... இருடி உன்னை” என்று ஜானவி மகளை நெருங்க, அம்மா அடிக்க வருகிறாள் என்ற போதுதான் தான் பேசிய வார்த்தைகளின் தீவிரம் மீனாவின் மூளைக்கே எட்டியது. அவ்வளவுதான். அந்த நொடியே அச்சத்தில் தன் அம்மாவிடம் இருந்து தப்பிக்க எண்ணி வெளியே ஓடிவிட்டாள்.

“மீனு... வெளியே ஓடாதே” என்று ஜானவி குரல் கொடுத்து கொண்டே மீனாவை பின்தொடர்ந்து சென்றவள் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டாள். அங்கே அவள் பார்த்த காட்சி ஜானவியின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியது.

அவள் வீட்டின் வாயிலில் நின்றிருந்த செழியனிடம் சென்று மீனா அடைக்கலம் புகுந்திருந்தாள்.

 “மீனா வாடி இங்கே?” என்று ஜானவி கண்டிப்போடு மகளை அழைக்க, “உஹும் வர மாட்டேன்... நீ அடிப்ப” என்று மிரட்சியோடு கூறி கொண்டே மீனா செழியனின் கரத்தை பிடித்து கொண்டாள்.

ஜானிவிக்கோ செழியன் அருகில் மீனா அப்படி நிற்பதை பார்க்கவே சகிக்கவில்லை. அவள் கோபம் கட்டுகடுங்காமல் போனது.

‘இப்படி கண்டவன் முன்னாடி என் மானத்தை வாங்குறாளே!’ என்று எண்ணி கொண்டே, “மீனு வா இங்கே?”  என்று பல்லை கடித்து கொண்டு மீண்டும் மகளை அழைத்தாள்.

அம்மாவின் முகத்தில் இருந்த உக்கிரம் மீனாவை அச்சம் கொள்ள செய்ய அவள் செழியனின் பிடியை இன்னும் அதிகமாக இறுக்கி கொண்டாள்.

அதற்கு மேல் பொறுக்க முடியாமல் ஜானவி சென்று மீனாவின் கரத்தை பற்றி இழுக்கவும் அத்தனை நேரம் என்ன செய்வது என்று விளங்காமல் மௌனமாக நின்றிருந்த செழியன் தன் மௌனத்தை கலைத்து,

 “ஏன்ங்க இப்படி காட்டுமிராண்டித்தனமா நடந்துக்கிறீங்க?” என்று ஜானவியிடம் கேட்டுவிட்டான்.

 “யாரு நான்... காட்டுமிராண்டித்தனமா நடந்துக்கிறேனா? நீங்கதான்... நீங்கதான் மிஸ்டர் கொஞ்சம் கூட மேனர்சே இல்லாம நடந்துக்கிறீங்க” என்று கடுப்பாக அதேநேரம் சத்தமாக உரைக்க இவள் குரல் உள்ளே இருந்த சந்தானலட்சுமி செவிகளையும் எட்டியது.

ஜானவி மேலும், “என் பொண்ணோட கையை விடுங்க மிஸ்டர்” என்று மகள் கரத்தை பற்றி தன் புறம் இழுத்து கொண்டு, “இனிமே என் விஷயத்துல தலையிட்டீங்க... நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்... சொல்லிட்டேன்” என்று எச்சரிக்கை விடுத்துவிட்டு அவள் தன் வீட்டிற்குள் நடந்தாள்.

“இப்ப மட்டும்... நீங்க அப்படியே மனுஷ தன்மையோட  நடந்துக்கிற மாதிரிதான்” என்று எகத்தாளமாக அவன் நின்ற இடத்தில் இருந்தபடி சொல்ல, அவள் மீண்டும் அவன் புறம் திரும்பி நின்றாள்.

 “இப்ப என்ன மிஸ்டர் உங்க பிரச்சனை?” என்றவள் கேட்க,

மீண்டும் மீண்டும் அவளின் மிஸ்டர் என்ற அழைப்பு அவனை கோபத்திற்குள்ளாக்கியது.

“மிஸ்டர் மிஸ்டர் மிஸ்டர்.... இட்ஸ் ஜஸ்ட் இரிடேட்டிங் மீ... அப்படி கூப்பிடாதீங்கன்னு சொல்றேன் இல்ல...” என்றவன் சீற்றமாக அருகிலிருந்த படிக்கெட்டு திண்டை தன் கரத்தால் குத்திவிட்டான்.

ஜானவிக்கு அவன் கோபத்தை பார்த்த நொடி மேலே குரல் எழும்பவில்லை. அப்படியே சிலையாக அவள் சமைந்துவிட அத்தனை நேரம் அவர்கள் இருவரும் எதற்காக சண்டை போடுகிறார்கள் என்று புரியாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சந்தான லட்சுமி, “ஐயோ! அன்பு?” என்று பதறி கொண்டு மகன் அருகில் வந்து அவன் கரத்தை பற்றி கொண்டார்.

அதேநேரம் சந்தான லட்சுமியும் கோபமாக ஜானவியை பார்த்து,

“என்ன பிரச்சனைம்மா உனக்கு... சும்மா என் பையன்கிட்ட சண்டைக்கு நிற்கிற” என்று கேட்டாள்.

“யாரு நான்... உங்க பையன்கிட்ட சண்டைக்கு நிற்குறேனா?” என்று ஜானவியும் பதிலுக்கு பேச செழியன், “வேண்டா ம்மா” என்று தன் அம்மாவை கட்டுபடுத்த முற்பட அவரோ அவன் சொல்வதை காதில் வாங்கவில்லை.

“ஆமா பின்ன... உன் பொண்ணு அன்னைக்கு என் வீட்டுக்கு வந்தா... அதுக்கு என் பையன் என்ன பண்ணுவானாம்...  அதுக்கு என்னவோ அவன்கிட்ட அப்படி கத்திட்டு போற... அன்னைக்கே உன்னை நல்லா கேட்டிருப்பேன்” என்று சந்தானலட்சுமி பொங்க, “ம்மா” என்று அவரை தடுக்க எத்தனித்த மகனின் அழைப்பிற்கு அவர் கொஞ்சமும் மதிப்பு கொடுக்கவில்லை.

“சரியான வாயாடி... கொஞ்சம் கூட அடக்க ஒடுக்கமே இல்ல” என்றவர் வசைப்பாட,

அப்போதுதான் ஜானவி கவனித்தாள். அந்த அடுக்கமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் எல்லோரும்  ஒரு கூட்டமாக கூடி அவர்களின் சண்டையைத்தான்  சுவாரசியமாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அடுத்தவர் வீட்டில் நடக்கும் பூசல்களை அறிந்து கொள்வதில் எல்லோருக்குமே அப்படி ஒரு அவா!

ஜானவி அவமானத்தில் முகம் சுணங்கி செழியனை பார்த்தாள். அவள் விழியிலிருந்து நீர் வெளியே விழ காத்திருக்க,

 “நான் என்னங்க பண்ண உங்களுக்கு ... முன்ன பின்னே உங்களுக்கு எனக்கும் எதாச்சும் பழக்கமா? என் விஷயத்துல தலையிடாதீங்கன்னுதானே சொன்னேன்... அதுக்கு இப்படி எல்லார் முன்னாடியும் என்னை நிற்க வைச்சி அசிங்கப்படுத்திட்டீங்களே...” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே அவள் உதடுகள் துடிக்க கண்ணீர் வெளியே வந்து விழுந்துவிட்டது.

“ஜானவி” என்று செழியன் ஏதோ சொல்ல எத்தனிக்க,

“ப்ளீஸ் என் பெயரை சொல்லாதீங்க... அன்...நான் திரும்ப திரும்ப சொல்றேன்... நீங்க யாரோ நான் யாரோ... என் விஷயத்துல நீங்க அநாகரீகமா மூக்கை நுழைக்காதீங்க” என்று அவன் முகத்தை பார்த்து குரலை தாழ்த்தி சொன்னாலும் அவள் பார்வையில் அத்தனை கடுமையும் கண்டிப்பும்  இருந்தது.

அவள் அதன்பின் அழுது கொண்டே தன் வீட்டின் கதவை மூடி கொள்ள, அத்தனை நேரம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அந்த கூட்டதில் சிலர்,

“என்னாச்சு அன்பு?” என்று அவனிடம் துக்கம் விசாரிப்பது போல் அருகில் வந்தனர்.

சந்தானலட்சுமி உடனே, “அந்த புதுசா வந்த பொண்ணு” என்று ஆரம்பிக்க,

“ம்மா... உள்ளே போங்க” என்று தன் அம்மாவிடம் சத்தமாக கத்திவிட்டான் செழியன். சந்தானலட்சுமி மௌனமாக உள்ளே சென்றுவிட அதன் பின் செழியன் அவனை சூழ்ந்து நின்ற கூட்டத்திடம், “எதுவும் பிரச்சனை எல்லாம் இல்லங்க... சின்னதா எனக்கும் அவங்களுக்கும் ஒரு மிஸ்அண்டர்ஸ்டேன்டிங்... அவ்வளவுதான்” என்று சொல்லி எல்லோரையும் சமாளித்துவிட்டு உள்ளே வந்தான்.

அவன் நேராக தன் படுக்கை அறைக்குள் நுழைய அங்கே அன்புச்செல்வி அழுது கொண்டே உறங்கி போயிருந்தாள். ரஞ்சனியின் மரணத்திற்கு பிறகு இப்போதுதான் கொஞ்ச நாளாக அன்புச்செல்வி இயல்புநிலைக்கு திரும்பியிருந்தாள்.

ஆனால் மீனா திடீரென்று, “எங்கம்மா உன்கிட்ட பேச கூடாதுன்னு சொல்லிட்டாங்க... நான் உன்கிட்ட பேசமாட்டேன்” என்று ஒருவாரமாக அன்புச்செல்வியிடம் பேசுவதையே நிறுத்திவிட்டாள்.

இரண்டுமே குழந்தை மனங்கள். எதை செய்ய வேண்டும் செய்ய கூடாது என்கிற காரண காரியங்கள் எல்லாம் அவர்களுக்கு கிடையாது. கண்ணாடி போல அந்த குழந்தைகள் தங்கள் செயல்களிலும் பேச்சுகளிலும் தம் பெற்றோர்கள் மற்றும் உடன் இருப்போர்களின் பிம்பத்தையே பிரதிபலிகின்றனர்.

அதன் காரணத்தால் மீனா அன்புச்செல்வியை விட்டு விலகிவிட,  இதன் காரணத்தால் அன்புச்செல்விகக்கு ஏற்பட்ட மனவேதனை செழியனையும்  மனஉளைச்சலுக்கு ஆளாக்கியிருந்தது.

 ஜானவியிடம் இது பற்றி பேச வேண்டும் என்று அவன் மனம் துடித்தாலும் இதனால் மீண்டும் தனக்கும் ஜானவிக்கும் இடையில் ஏதாவது கருத்துவேறுப்பாடு வந்துவிடுமோ என்று மெளனமாக இருந்துவிட்டான்.

ஆனால் பள்ளியில் மகளின் அழுகையை பார்த்து ஒரு தந்தையாக அவன் எவ்வளவு துடித்து போனான் என்பது அவன் மனதிற்கு மட்டுமே தெரியும். வீட்டிற்கு வந்ததும் அழுது கொண்டிருந்த மகளிடம், “அப்பா மீனா அம்மா கிட்ட பேசி... உன்கிட்ட மீனாவை பேச வைக்கிறேன்... இதுக்கெல்லாம் போய் என் அன்புக்குட்டி அழலாமா?” என்று சமாதான வார்த்தைகள் கூறி மகள் கண்ணீரை துடைத்து அவளை படுக்க வைத்தான்.

அதேநேரம் எப்படியாவது மகளின் வேதனையை போக்க வேண்டும் என்ற எண்ணத்தோடே  ஜானவியிடம்  பேச அவன் வந்த சமயம், மீனா ஓடிவந்து  அவன் கரத்தை பற்றி கொண்டாள். அதன் பின் அவனுக்கும் ஜானவிக்கும் இடையில் மீண்டும் வார்த்தை மோதல்கள் உண்டாகிவிட்டது. 

அதுவும் செழியன் தன் மகள் அழுகைக்கு  ஜானவிதான் காரணம் என்று அவள் மீது கொஞ்சம் கோபமாகவே இருந்தான். அவன் அடக்கிவைத்திருந்த கோபம் வெடித்து அந்த சூழ்நிலையில் வெளிவந்துவிட்டது. ஆனால் என்ன பேச நினைத்தானோ அது நடக்கவே இல்லை. மாறாய் மீண்டும் ஒரு மனத்தாங்கல்!

அதுவும் ஜானவி உடைந்து அவள் விழிகளில் வழிந்த கண்ணீரை பார்த்த நொடி அவனுக்கு குற்றவுணர்வு உண்டானது. தேவையில்லாமல் ஒரு பிரச்சனையை தானே இழுத்துவிட்டோம் என்று!

செழியன் இந்த சிந்தனையோடு தன் அறைக்குள் நடந்து கொண்டிருக்க, சந்தானலட்சுமி நடந்த விஷயத்தை எல்லாம் வீட்டிற்கு வந்த தன் கணவர் பாண்டியனிடம் ஒன்றுவிடாமல் சொல்லி புலம்பி கொண்டிருந்தார்.

போதாக்குறைக்கு ஜானவியை பக்கம் பக்கமாக அவர் திட்டி கொண்டிருக்க செழியன் பொறுக்க முடியாமல் வெளியே வந்து, “ம்மா போதும் நிறுத்துறீங்களா? சும்மா அந்த பொண்ணை திட்டாதீங்க... தப்பு என் பேர்லதான்... நான்தான் தேவையில்லாம அவங்ககிட்ட வார்த்தையை விட்டுட்டேன்... அது தெரியாம... நீங்க வேற உள்ளே நுழைஞ்சி பிரச்சனையை பெருசாக்கிட்டீங்க...” என்றவன் வருத்தம் கொண்டு சொல்ல, மகனை ஆச்சரியாமாக பார்த்தார் பாண்டியன்!

 “நம்ப முடியலையே... நீ யார்கிட்டயும் சண்டைக்கே போக மாட்டியே அன்பு” என்றவர் கேட்க,

“அவன் எங்க ங்க சண்டைக்கு போனான்... அந்த வாயாடிதான்” என்று சந்தானலட்சுமி மீண்டும் ஜானவியை திட்ட ஆரம்பித்தார்.

“ம்மா ப்ளீஸ்... இந்த விஷயத்தை இதோட விட்டுட்டு போய் வேற வேலை ஏதாச்சும் இருந்தா பாருங்க” என்றவன் அதட்டலாக கூற, சந்தானலட்சுமி நொடித்து கொண்டு, “ம்ம்கும்... எவளோ ஒருத்தி பேசனா கேட்டுப்பானுங்க... நம்ம பேசனாதான் இவங்களுக்கு தப்பா தெரியுது” என்று புலம்பி கொண்டே அவர் உள்ளே சென்றுவிட்டார்.

செழியன் துவண்டுஅப்படியே தன் தந்தை அருகில் சோபாவில் அமர்ந்து கொள்ள, “என்னடா அன்பு... என்ன நடந்துச்சு?” என்று பொறுமையாக மகனிடம் வினவினார் பாண்டியன்!

சில நொடிகள் மெளனமாக இருந்த செழியன்  பின் முதலில் இருந்த நடந்த விஷயங்களை விவரித்துவிட்டு, “அன்புகுட்டி அழுததை பார்த்து என்னால தாங்கிக்க முடியலப்பா... அந்த தாட் லயே அவங்ககிட்ட பேச போய்... இப்படி சண்டையில முடிஞ்சுருச்சு” என்றான்.

மகன் சொல்வதை கேட்ட பாண்டியன், “விடு அன்பு! எதோ நடந்து போச்சு... நீ என்ன வேணும்ட்டேவா அந்த பொண்ணுகிட்ட சண்டை போட்ட” என்க, “இல்லப்பா... தப்பு என் பேர்லதான்... பாவம் அவங்க அழுதிட்டே போனாங்க” என்று செழியனின் மனம் சமாதானம் ஆக மறுத்தது.

பாண்டியன் மகனின் தோளை தடவி கொடுத்து, “இதை இப்படியே விட்டுடு அன்பு... திரும்ப திரும்ப இதை கிளறினா இன்னும் பிரச்சனைதான் வளரும்... அதுவும் பொம்பளைங்க சண்டை போட ஆரம்பிச்சா அவ்வளவுதான்”  என்று எச்சரிக்கை தொனியில் சொல்லிவிட்டு அவர் அகன்றார். ஆனால் அவரின் வார்த்தைகள் செழியன் மனதை அமைதியடைய செய்யவில்லை.

அவனுக்கு ஒருபுறம் தன் மகளிடம் மீனாவை பேச வைப்பதாக சொல்லி அதை செய்ய முடியாமல் போனதினால் உண்டான ஏமாற்றமும் மற்றொருபுறம் ஜானவியை காயப்படுத்திவிட்டோமே என்ற குற்றவுணர்வும் அவன் மனதை ரொம்பவும் வேதனைப்படுத்தியிருந்தது.

Rathi, Muthu pandi and 2 other users have reacted to this post.
RathiMuthu pandirachel.kumarshiyamala.sothy
Quote

Nice

You cannot copy content