You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nijamo Nizhalo - Episode 10

Quote

10

வெங்கட் வேலை செய்யும் மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஐஸ்க்ரீம் பார்லரில்தான் ஸ்ரீயும் அவனும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர்.

“முதல ஒரு சாக்லேட்டும் வெண்ணிலாவும்… அப்புறம் டென் மினிட்ஸ் கழிச்சு ஒரு பட்டர் ஸ்காட்ச்… அப்புறம் ஒரு ஸ்ட்ராபெரி” என்றவள் பட்டியல் நீண்டு கொண்டே போனது.

அவன் புன்னகை முகமாக அவளைப் பார்த்திருக்க, “உனக்கு என்ன வேணும் வெங்கி?” என்று கேட்டாள்.

“அப்போ இப்ப சொன்ன லிஸ்ட் மொத்தமும் உனக்கு மட்டும்தானா?”

“ம்ம்ம் எஸ்” என்று அவள் மிக சாதாரணமாக தலையாட்டியதைப் பார்த்து நகைத்தவன்,

“எனக்கு ஒரு வெண்ணிலா மட்டும்” என்றான்.

வெள்ளை நிற சுடிதார்… காற்றில் பறந்து கொண்டிருக்கும் வெள்ளை துப்பட்டா… தோள்களில் ஸ்ட்ரைடனிங் செய்த சரிந்திருந்த அவள் கூந்தல்…  தெளிவாகவும் நேர்த்தியாகவும் அமைந்திருந்த முக அம்சம்… இதெல்லாம் தாண்டிய அவளின் களங்கமில்லாத குழந்தைத்தனமான பேச்சும் நடவடிக்கையும் அவனுக்கு அவளைக் கொஞ்சம் பிடித்திருந்தது போலதான் தோன்றியது. ஆனால் இப்போதும் கூட அவனால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.

ஸ்ரீயோ இது பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் அடுத்தடுத்து வந்த ஐஸ்க்ரீம்களை கரைத்து உள்ளே அனுப்பி கொண்டே அவனிடம் பேசிக் கொண்டிருந்தாள். அவள் பேசுவதையும் சாப்பிடுவதையும் பார்க்கும் போது உண்மையிலேயே அவனுக்கு சுவாரிசியமாக இருந்தது. அதேநேரம் கொஞ்சம் வியப்பாகவும்!

சட்டென்று பேச்சை நிறுத்தியவள் அவனிடம், “என்ன நீ ஃபோன்லயும் அதிகம் பேச மாட்டுற… நேர்லயும் அதிகம் பேச மாட்டுற” என்று கேட்க,

“எனக்கு அதிகம் பேசறதை விட எதிரே இருக்கவங்க பேசறதைக் கேட்கப் பிடிக்கும்… அப்போதான் அவங்களைப் புரிஞ்சிக்க முடியும்”

“அப்படியா… அப்போ என்னைப் பத்தி என்ன புரிஞ்சுகிட்ட… சொல்லு பார்ப்போம்”

“சொன்னா கோபப்படக் கூடாது” என்றவன் சொல்லவும் அவள் இல்லையென்பது போல தலையசைக்க,

“நீ இன்னும் சின்ன புள்ளையாவே இருக்க ஸ்ரீ… உன்கிட்ட இன்னுமும் ஒரு அழகான குழந்தைத்தனம் இருக்கு” என்றான் அவன்.

அவள் முகத்தில் லேசான கோபம் எட்டிப் பார்த்தது.

“அப்போ நான் இன்னும் வளரவே இல்லன்னு சொல்ற”

“ப்ச்… அது அப்படி இல்ல…நீ குழந்தைங்களைப் பார்த்திருக்கியா… அவங்க தன்னைச் சுத்தி இருக்கவங்க பத்தி எல்லாம் யோசிக்காம அவங்களுக்கு என்ன பிடிச்சிருக்கோ அதை செய்வாங்க… எப்பவும் சந்தோஷமா இருப்பாங்க…

ஆனா அதுவே பெரியவங்களாகிட்டா… நம்மை யாரோ பார்த்துட்டு இருக்காங்கன்ற ஒரு அதிகப்படியான கான்சியஸ் நம்ம மண்டைக்குள்ள இருந்துட்டே இருக்கும்… அதனால நமக்குப் பிடிச்ச விஷயங்களைக் கூட நாம செய்ய யோசிப்போம்…

ஆனா நீ அப்படி எல்லாம் யோசிக்காம… உனக்கு என்ன பிடிச்சிருக்கோ அதை செய்யற…ஆனா என்ன? நீ ஸ்கூல் டேஸ்ல இப்படி இல்ல… ஒரு வேளை உங்க வீட்டுல நீ ரொம்ப ஸ்ட்ரிக்ட் அப்படின்னு சொல்றதை வைச்சு பார்த்தா, நீ அப்போ இழந்த சந்தோஷத்தை இப்போ பூர்த்தி செஞ்சுக்கணும்னு நினைக்கிறியோன்னு தோணுது” என்றவன் விளக்கமாகக் கூறி முடிக்க, அவள் ஆமோதிப்பாகத் தலையசைத்தாள்.

“உண்மைதான் வெங்கி… நான் அப்போ இழந்ததை எல்லாம் இப்போ அடைஞ்சுடணும்னு நினைக்கிறேன்” என்றவள் அவனிடம், “அதில தப்பு ஏதாவது இருக்கா என்ன?” என்று கேட்க,

“உஹும்” என்றவன் மறுப்பாகத் தலையசைத்தான்.

“சரி… நான் பேசுனதை வைச்சு நீ என்னைப் பத்தி சொன்ன…  அதேபோல நீ என்கிட்ட நிறைய பேசுனாதானே… நானும் உன்னைப் பத்தி புரிஞ்சிக்க முடியும்” என்றவள் வினவ,

“எதை பத்தி பேசணும்?” என்று கேட்டான்.

“உன் ஃபேமிலி பத்தி சொல்லு… நான் தெரிஞ்சுக்கிறேன்”

“ம்ம்ம்… சொல்லிட்டா போச்சு” என்றவன்,

“அம்மாவைப் பத்தி உனக்கே தெரியும்… அவங்க ஸ்கூல்ல எப்படியோ வீட்டுலயும் அப்படித்தான்… அப்பா செம ஜாலி டைப்… எவ்வளவு சீரியஸான பிரச்சனையையும் சிரிச்சுக்கிட்டே ஹேண்டில் பண்ணுவாரு… தம்பிங்க இரண்டு பேரும் என்கிட்ட அவ்வளவு க்ளோஸா இருந்தது இல்ல… ஆனா நான் எது சொன்னாலும் கேட்பாங்க… அப்புறம் அவங்க வொய்ஃப் அர்ச்சனா, லலிதா அவ்வளவு நல்ல மாதிரி.

இந்த மாதிரி சிஸ்டர் இன் லாஸ்ஸ நீ எங்கேயுமே பார்க்க முடியாது… இரண்டு பேருக்குள்ள இது நாள் வரைக்கும் ஒரு சின்ன ஈகோ ப்ராப்ளம் கூட வந்தது இல்லன்னா பாரேன்… அவ்வளவு ஒத்துமையா இருப்பாங்க… நீ நம்ம வீட்டுக்கு வந்தனா உனக்கு இரண்டு ஃப்ரெண்ட்ஸ் கிடைச்ச மாதிரிதான்…

இது எல்லாத்துக்கும் மேல என் தம்பி பசங்க நாலு பேரும் கூட இருந்தா எவ்வளவு டென்ஷன் ஸ்ட்ரெஸ் இருந்தாகூட உடனே காணாம போயிடும்… எங்க வீடு செம லைவ்லியான அப்புறம் ஜாலியான பிளேஸ்” என்றவன் தன் குடும்பத்தைப் பெருமிதமாக அவளிடம் சொன்ன அதேநேரம் அவர்கள் குடும்பத்தில் உள்ள பிரிவினைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. அவன் திருமணத்திற்குப் பிறகு நிச்சயமாக அந்தப் பிரிவினை சரியாகி விடும் என்ற நம்பிக்கை இருந்தது.

அவன் சொன்னதை ரசித்து கேட்டிருந்த ஸ்ரீ, “எனக்கு இப்பவே உங்க வீட்டுக்கு வந்திடணும் போல இருக்கு வெங்கி” என்றாள்.

அதற்குப் புன்னகைத்தவன், “உங்க பேமிலி கூட பெருசா அழகாதான் இருக்குது… உங்க வீட்டுல இருக்கவங்க பத்தி சொல்லு… நானும் தெரிஞ்சுக்கிறேன்” என்றான்.

அவள் சாப்பிட்டுக் கொண்டே, “எங்க வீட்டுல எங்க தாத்தா… அம்மா அப்பா” என்று சொல்ல, அவன் புருவங்கள் நெறிந்தன.

“தாத்தாவா? அவர் இறந்துட்டாருல…? ஒரு வேளை உங்க அப்பாவோட அப்பாவா?” அவன் சந்தேகத்துடன் கேட்க ஏதோ பெரிய தவறைச் செய்து விட்டது போல அவள் முகம் வெளிறியது.

“ஆன்… ஆமாம்… அப்பாவோட அப்பா… தான்” என்றவள் ஒரு மாதிரியாகத் தடுமாற,

“நீங்க வேதாவிலாஸ்லதான் தங்கி இருக்கீங்களா? இல்ல உங்களுக்குனு தனி வீடு இருக்கா?” என்றவன் அடுத்த கேள்வியைக் கேட்க, அவள் வாயிலிருந்த ஸ்பூன் அவள் உதட்டில் ஒட்டிக் கொண்டது.

தன் குடும்பத்தைப் பற்றிப் பேச அவள் தடுமாறுவதைப் பார்த்தவனுக்குக் குழப்பமாக இருந்தது.

“இல்ல…சாப்பிட்டுட்டுப் பேசுறேன்” என்றவள் பேசக் கூடாது என்பதற்காகவே அந்த சாக்கோபாரை பிரித்து வாயில் வைத்து கொண்டது போலிருந்தது.

அதற்கு பிறகு அவள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தன் குடும்பத்தைப் பற்றிச் சொல்வதில் அவளுக்கு என்ன தயக்கம் என்றவன் யோசித்திருக்க,“வெங்கி ப்ளீஸ்… கொஞ்சம் ஹெல்ப் பண்ணு” என்றாள்.

அப்போது அவள் கழுத்திலிருந்த துப்பட்டா சரிந்து சரிந்து விழ,  குழந்தை போல அவள் கைகளில் ஐஸ்க்ரீம் கரைகள் ஒட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தவன் புன்னகையுடன் எழுந்து வந்து அதனை அவள் கழுத்தில் வாகாகப் பொருத்திவிட்டான்.

அவள் ஒரு வழியாகச் சாப்பிட்டு முடிக்கவும், “போதுமா இன்னும் வேணுமா?” என்று அவன் கேட்க,

“ம்ம்ம் போதும் போதும்” என்றவள் தலையாட்டிக் கொண்டே தன் கைகளை டிஷுவில் துடைத்துக் கொள்ள,

“நீ வேணும்னு கேட்டாலும் இதுக்கு மேல கொடுக்க அவங்களுக்குப் புதுசா எந்த வெரைட்டியும் இல்லையாம்” என்றவன் கேலி செய்து சிரித்தான்.

“போ வெங்கி” என்றவன் தோள்களில் செல்லமாகத் தட்ட,

“அமிர்தா கூட இப்படி ஐஸ் க்ரீம் சாப்பிட்டு நான் பார்த்தது இல்லமா” என்றான்.

“உனக்கு தெரியாது வெங்கி… வீட்டுல இந்த மாதிரி எல்லாம் ஃப்ரீடம் கிடையாது” என்றவள் சொல்லிக் கொண்டே இருக்கையிலிருந்து எழுந்து கொள்ள,

“ஐஸ்க்ரீம் சாப்பிட ஃப்ரீடம் இல்லையா?” என்று அவளை அவன் புரியாமல் பார்த்தான்.  

“எதுக்குமே இல்ல… எல்லாத்துக்கும் ஓவர் கண்டிஷன்” என்று பேசிக் கொண்டே அவர்கள் இருவரும் ஐஸ்க்ரீம் பார்லரை விட்டு வெளியே வரவும், எதிரே வந்தப் பெண், “வெங்கட்…” என்று அழைத்தாள்.

“திவ்யா” என்றவனும் பதிலுக்குப் புன்னகைக்க,

“நீங்க… ஐஸ்க்ரீம் பார்லர்ல… அதுவும் ஒரு பொண்ணோட… ஒரு வேளை உங்க சிஸ்டரோ?” என்றவள் ஒவ்வொரு வார்த்தையிலும் வியப்பைக் காட்டிக் கேட்டதோடு ’சிஸ்டரா’ என்று முடித்ததில் ஸ்ரீயின்முகம் கோபத்தில் சிவந்தது.

“சிஸ்டரா… ஹெலோ… நான் அவரோட ஃபியான்ஸி” என்றவள் வெடுக்கென பதில் சொல்ல,

“ஓ சாரி… எனக்கு தெரியாது” என்ற திவ்யா வெங்கட்டைப் பார்த்து,

“என்ன வெங்கட்… மேரேஜ் ஃபிக்ஸ் ஆனதை பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லல” என்று கேட்டாள்.

“சொல்லலாம்னு இருந்தேன்” என்றவன் ஸ்ரீயிடம் திரும்பி, “இவங்க என் கூட வேலை செய்றாங்க… டாக்டர் திவ்யா” என்றவன் இருவருக்கும் பரஸ்பரம் அறிமுகம் செய்து வைத்தான்.

“நீங்க சிஸ்டர்னு சொன்னதும் கோபம் வந்திருச்சு… அதான் கொஞ்சம் ஹார்ஷா பதில் சொல்லிட்டேன்” என்று ஸ்ரீயும் புன்னகையுடன் அவளுடன் கைக் குலுக்க,

“அது என்னோட தப்பு இல்ல… உங்க ஃபியான்ஸியோட தப்பு… அவருக்கு லவ் இல்ல லவர் இருக்காங்கன்னு சொன்னா எங்க ஒட்டு மொத்த ஹாஸ்பிட்டலே நம்பாதே… எப்பவும் வேலை வேலை வேலைதான்” என்று திவ்யா வெங்கட்டைப் பார்த்து எள்ளலுடன் சொல்ல அவன் முறைத்தான்.

“உங்களுக்கு லவ் எல்லாம் செட்டாகாதுன்னு உண்மையைதானே சொன்னேன் வெங்கட்… அதுக்கு ஏன் முறைக்கிறீங்க” என்றவள் மேலும்,

“எனிவே மேரேஜாவது செட்டாச்சே… காங்கிராட்ஸ்” என்று வெங்கட் மற்றும் ஸ்ரீயிடம் வாழ்த்து சொல்லிவிட்டு நகர்ந்தாள். அதன் பின் அவர்கள் இருவரும் மருத்துவமனை நோக்கி நடந்தனர்.

“ஏன் வெங்கி… அந்த டாக்டர் உனக்கு காதல் எல்லாம் செட்டாகுதுன்னு சொல்றாங்க… உண்மையா?”

“செட்டாகாதுன்னு எல்லாம் இல்ல… தம்பிங்க இரண்டு பேரும் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க… எனக்காவது அம்மா அவங்க விருப்பப்படி கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசைப்படுறாங்க… அதனால நான் என் லைஃப்ல லவ் பத்தி யோசிக்கல”  என்றான்.

இருவரும் பேசிக் கொண்டே மருத்துவமனை கார் நிறுத்ததிற்கு வந்திருந்தனர்.

“நீ யோசிக்கலன்னாலும் ஏதாவது ஒரு பொண்ணைப் பார்த்து ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல உனக்கு லவ் ஃபீலிங் வந்திருக்கும்தானே” என்றவள் அவன் கார் மீது சாய்ந்து கொண்டு கேட்க,

“ஹும்… அப்படி எல்லாம்… யார் மேலயும் எந்த ஃபீலிங்கும் வந்தது இல்ல… அதுவுமில்லாம படிப்பு வேலைன்னுலைப் கொஞ்சம் பிஸியாவே போயிட்டதால நிதானமா அப்படி எல்லாம் ஃபீல் பண்ண டைமும் இல்ல” என்றவன் பதிலைக் கேட்டு அவள் முகத்தில் லேசான ஏமாற்றம் வந்து போனது.

“நிஜமாதான் சொல்றியா?”

“இதுல பொய் சொல்ல என்ன இருக்கு? அப்படி ஏதாவது இருந்தா நான் சொல்லி இருப்பேனே” என்றவன் பேசிக் கொண்டே தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, “டைமாச்சு ஸ்ரீ… பேஷண்ட்ஸ் பார்க்கணும்” என்று சொல்ல, அவள் மௌனமாகத் தலையை மட்டும் அசைத்தாள்.

அவளின் திடீர் மௌனத்தையும் முக மாற்றத்தையும் பார்த்தவன், “என்னாச்சு ஸ்ரீ?” என்று கேட்க, அவனை ஆழ்ந்த பார்வை பார்த்தவள்,

“நீ மாயாவைப் பத்தி எப்பயாச்சு யோசிச்சு பார்த்திருக்கியா… வெங்கி” என்று கேட்கவும், அவன் முகம் இறுக்கமாக மாறியது.

அப்படியே மௌனமாக நின்றவனிடம், “வெங்கி” என்று அவள் அழைக்க,

“ப்ளீஸ் ஸ்ரீ… மாயாவைப் பத்தி பேச வேண்டாம்… இப்போ இல்ல எப்பவும் வேண்டாம்” என்றவன் தீர்க்கமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து செல்லப் பார்த்தான்.

“ஒருத்தர் செத்து போயிட்டா அவங்களை மறந்திடணுமா? அவங்க நினைப்பை மொத்தமா அழிச்சுடணுமா? அவங்களைப் பத்தி நம்ம பேசவே கூடாதா?” என்றவள் தானிருக்கும் இடம் பற்றி எல்லாம் யோசிக்காமல் கத்தத் தொடங்கிவிட்டாள்.

சட்டென்று அவளின் இந்தப் பரிமாணத்தைப் பார்த்தவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தவன், “ஸ்ரீ என்னது இது… இது ஹாஸ்பிட்டல்” என்றவன் அவளிடம் தாழ்ந்த குரலில் சொல்ல,

“மாயாவுக்கு நீனா ரொம்ப பிடிக்கும் வெங்கி… ஆனா நீ மாயாவை ஈஸியா மறந்துட்ட” என்று கோபமாக மொழிந்தவள் அடுத்த நொடியே அவனைத் திரும்பிக் கூட பார்க்காமல் சென்றுவிட்டாள்.

ஸ்ரீயின் விஷயத்தில் வெங்கட் மனதை ஏதோ ஒன்று உறுத்தியது. 

தன்னைப் போலவே அவளும் மாயாவின் இழப்பில் ரொம்பவும் பாதிக்கப்பட்டிருக்கிறாள். ஆனால் திடீரென்று ஏன் அவள் மாயாவின் பேச்சை எடுத்தாள். முதல் முதலாகப் பேசிய அன்றும் அவள் மாயாவின் பெயரைச் சொன்னாள்.

குழந்தைத்தனமாக ஒளிர்ந்த அவள் புன்னகை மாயாவைப் பற்றி பேசிய நொடிகளில் ஏதோ ஒரு ஆழமான சோகத்தைச் சுமந்திருப்பது போல கனமாக மாறிவிட்டதை அவனால் கவனிக்க முடிந்தது.

ஸ்ரீயைப் பற்றிய சிந்தனையும் மாயாவிற்கும் அவளுக்கும் இடையிலான ஒற்றுமைகளைக் குறித்தும் அவன் மூளை தீவிரமாக யோசித்ததில் அவனுக்கு குழப்பமே மிஞ்சியது.

அதன் பிறகு அன்று முழுக்க அவன் அழைப்பிற்கோ அல்லது குறுஞ்செய்திகளுக்கோ அவளிடமிருந்து எவ்வித எதிர்வினையும் இல்லை.

vanitha16 and Rathi have reacted to this post.
vanitha16Rathi
Quote

Super ma 

You cannot copy content