You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nijamo Nizhalo - Episode 12

Quote

12

நடுநிசி வேளை அது. வெங்கட்டோ ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான். சரியாக அந்த சமயத்தில் அவன் பேசி ரீங்காரமிட்டது.

அடுத்த நொடியே உறக்கம் களைந்து எழுந்தவன் மருத்துவமனையிலிருந்து அழைப்பு வருகிறதோ என்று அவசர அவசரமாக மேஜை மீதிருந்த கைப்பேசியை எடுத்து காதுக்குக் கொடுத்து, “ஹெலோ” என்றான்.

எதிர்புறத்தில் துள்ளலாக ஒரு குரல். “ஹாய் வெங்கி” என, ஒரு நொடி ஜெர்க்கானவன் கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டு கைப்பேசி திரையைப் பார்த்தான்.

 ‘ஸ்ரீ’

நேரத்தைப் பார்த்தான். இரவு ஒரு மணி என்று காட்ட, அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“வெங்கி என்னாச்சு? பேச மாட்டுற”

“என்ன ஸ்ரீ… இந்த டைமுக்கு கால் பண்ணி இருக்க… ஏதாச்சும் பிரச்சனையா?” என்று அவன் பதட்டத்துடன் விசாரிக்க,

“ஒரு பிரச்சனையும் இல்ல… சும்மா பேசலாம்னுதான் கால் பண்ணேன்” என்றவள் சாதாரணமாகப் பதிலுரைத்தாள்.

“பேசவா? அதுவும் இந்த நேரத்துல… டைம் என்ன தெரியுமா?”

“ம்ம்ம்… டைம் என்ன?” என்று அப்போதுதான் தன் கைப்பேசி திரையைப் பார்த்தவள், “மணி ஒன்னு… அஞ்சு” என்றாள் சாதாரணமாக.

“மிட்நைட் ஒரு மணிக்கு என்ன பேசப் போற”

“எனக்கு தூக்கம் வரலேயே… அதான் பேசலாம்னு”

“தூக்கம் வரலயா? ஏன் என்ன பிரச்சனை?”

“தூக்கம் வரலன்னாலும் ஏதாவது பிரச்சனை இருக்கணுமா என்ன?”

“ஆமா… கண்டிப்பா… படுத்துக் கண்ணை மூடினதும் தூக்கம் வரனும்… அப்பதான் நம்ம மனசு ஆரோக்கியமா இருக்குதுன்னு அர்த்தம்… அப்படி தூங்கினாதான் உடம்பும் ஆரோக்கியமா இருக்கும்… புரிஞ்சதா… இப்படி எல்லாம் மிட்நைட்ல முழிச்சிட்டு இருக்கக் கூடாது… ஒழுங்கா ஃபோனை ஓரமா வைச்சுட்டு கண்ணை மூடித் தூங்கு” என்றவன் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டிக்கப் போக,

“ஹெலோ ஹெலோ ஃபோனை வைச்சுடாதே வெங்கி” என்றாள்.

“இன்னும் என்ன ஸ்ரீ?”

“என்னவா? நான் என்ன உங்ககிட்ட கவுன்ஸிலிங் கேட்கவா… ஃபோன் பண்ணேன்… பக்கம் பக்கமா தூக்கத்தைப் பத்தி விளக்கம் கொடுத்துட்டு இருக்க” என்று கடுப்பானவள் மேலும்,

“உனக்கு லவ் எல்லாம் செட்டாகாதுன்னு அந்த டாக்டர் பொண்ணு சொன்னது சரியாதான் இருக்கு” என்று முடிக்க,

“வாட்? அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்” அவனுக்குத் தூக்கம் கண்களைச் சொருகிக் கொண்டு வந்தது.

“ஹ்ம்ம்… லவர்ஸ்னா இப்படியெல்லாம் மிட்நைட்ல கால் பண்ணி பேசிக்கணும்… அது புரியாம நீ தூக்கத்தைப் பத்தி கிளாஸ் எடுக்குற” என்றவள் கோபமாக உரைக்க அவன் ஆசுவாசமாக,

“ஓ… அப்படியா?!” என்றான்.

“அப்படியாவா? நான் சொன்னது புரிஞ்சுதா இல்லயா?”

 “புரிஞ்சது… ஆனா ஒரு டவுட்”

“என்னது?”

“மிட்நைட்ல லவர்ஸ் பேசிப்பாங்க சரி… நம்ம ஏன் பேசிக்கணும்” என்று கேட்டவனுக்கு உண்மையில் தூக்கம் கண்களைச் சுழற்றிக் கொண்டு வந்தது. அவளோ அடுத்த நொடியே அவன் காதுக்குள் கத்தத் தொடங்கினாள்.

“அப்போ… நாம லவர்ஸ் இல்லையா?” என்று அதிர்ச்சியுடன் ஆரம்பித்தவள், “அப்போ எதுக்குப் பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கு கல்யாணத்துக்கு ஓகே சொன்ன? அப்புறம் எதுக்கு எனக்கு மெசேஜ் பண்ண? ஃபோன்ல பேசுன? எதுக்கு என் கூட ஐஸ்க்ரீம் பார்லர் வந்த?” என்றவள் வரிசையாகக் கேள்விகளை அடுக்க, அவனுக்கு இப்போது முழுவதுமாக தூக்கம் களைந்துவிட்டது.

அவள் கேள்விகள் எல்லாம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கவும் அவன் புன்னகையுடன், “இதுக்கெல்லாம் நாம லவர்ஸா இருக்கணும்னு அவசியம் இல்லை ஸ்ரீ” என்றான்.

“அப்போ நீ என்னை லவ் பண்ணல”

“ஹ்ம்ம்…” என்று யோசித்தவன் பின், “இப்ப வரைக்கும் இல்லை” என்று பதிலளிக்க,

“இல்லையா? அப்போ நம்ம கல்யாணம்… லவ் பண்ணாம எப்படி என்னை நீ கல்யாணம் பண்ணிப்ப?”

“நம்மூர்ல நடக்கிற அரேஞ் மேரேஜ்ல யார் இங்கே லவ்வோட கல்யாணம் பண்ணிக்குறா… பார்த்து பிடிச்சு பண்ணிக்குறாங்க… அப்புறமா கொஞ்சம் கொஞ்சமா பேசிப் பழக பழக லவ் தானா வந்திடும்… சில கேஸஸ்ல கடைசி வரைக்கும் லவ் வராது… அது டிபெண்ட்ஸ் ஆன் கேரக்டர்ஸ்” என்று அவன் கூறிய விளக்கத்தை அவள் ஏற்கவில்லை.

“நான் என்னன்னவோ யோசிச்சு வைச்சு இருந்தேன்… ஆனா நீ என்னை ரொம்ப டிஸ்ஸப்பாயின்ட் பண்ணிட்ட வெங்கி” என்றவள் பேசிக் கொண்டே அழத் தொடங்கிவிட அவன் பதட்டத்துடன், “ஸ்ரீ” என்றான்.

“போ வெங்கி… நீ என்னை அழ வைச்சுட்டே இருக்க”

“நான் உன்னை அழ வைச்சிட்டு இருக்கேனா?” அவன் அதிர்ச்சியுடன் கேட்க,

“பின்ன… ஈவினிங் கூட நீ என்னை அழ வைச்ச… இப்பவும் நீ என்னை அழ வைக்கிற” என்றவள் சொன்னப் பிறகுதான் அவனுக்கு மாலை நடந்த விஷயமே நினைவுக்கு வந்தது.

“முதல அழுகையை நிறுத்திட்டு நான் கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்லு” என்றான்.

“என்ன கேட்கப் போற?”

“நீ ஏன் ஈவினிங் என் ஃபோனை எடுக்கல… மெசேஜ்க்கும் ரிப்ளை பண்ணல… அப்ப எல்லாம் பேசாம இப்ப ஏன் கால் பண்ணி பேசுற” என்றவன் குரல் தீவிரமாக ஒலிக்க,

“நீ மாயாவை மறந்திட்டேன்னு சொன்னதுல நான் கோபமாயிட்டேன்… அதான்” என்றாள்.

“நான் எப்போ மாயாவை மறந்திட்டேன்னு சொன்னேன்”

“அதான் ஹாஸ்பிட்டல சொன்னியே”

“நான் மாயாவைப் பத்தி பேச வேண்டாம்னுதானே சொன்னேன்… மறந்துட்டேன்னு சொல்லல”

“இரண்டுக்கும் என்ன பெரிய வித்தியாசம்”

“இருக்கு… நான் மாயாவைப் பத்தி பேசுனா அப்ஸட் ஆகிடுவேன்… அன்னைக்கு பூரா எனக்கு எந்த வேலையும் ஓடாது… அதனாலதான் நான் நான் மாயாவைப் பத்தி பேச வேண்டாம்னு சொன்னேன்” என்றவன் சொல்ல அவள் எதிர்புறத்தில் அமைதி காத்தாள். அவன் தொடர்ந்தான்.

“புரிஞ்சுக்கோ ஸ்ரீ… என்னால எப்பவுமே மாயாவை மறக்க முடியாது…

மாயாவோட இறப்புல நீ எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டன்னு எனக்கு தெரியாது… ஆனால் நான் மனசளவில ரொம்பவும் பாதிக்கப்பட்டேன்… சைக்காட்ரிக் ட்ரீட்மென்ட் போகிறளவுக்கு…

இப்பவும் கூட மாயாவோட இறப்பைப் பத்தி யோசிக்கும்போது நான் ரொம்ப எமோஷன்லாகிடுவேன்… அப்படி ஆகக் கூடாதுன்னுதான் நான் மாயாவைப் பத்தி யோசிக்கிறதும் இல்ல…பேசறதும் இல்ல…அதனாலதான் உன்கிட்டயும் மாயாவைப் பத்தி பேச வேண்டாம்னு சொன்னேன்” என்றான்.

அவன் பேசி முடித்தப் பிறகு வெகுநேரம் அவளிடமிருந்து பதில் வரவில்லை.

“ஸ்ரீ”

“சாரி… சாரி வெங்கி… நான்…  நான் உன்கிட்ட அப்படி கோபமா பேசி இருக்கக் கூடாது” என்றவள் குரல் கம்மியது.

“பரவாயில்ல ஸ்ரீ” என்றவன் மேலும், “திடீர்னு ஏற்பட்ட மாயாவோட இறப்பு ஒட்டுமொத்தமா நம்ம ஸ்கூல் லைஃபையே புரட்டிப் போட்டுடுச்சு… சந்தோஷமா இருந்த நினைவுகள் கூட இப்ப யோசிக்கும்போது வேதனையைதான் கொடுக்குது” என்றவன் வருத்தத்துடன்,

“ப்ச்… மாயாவிற்கு அப்படி ஒரு அக்ஸிடென்ட் நடந்திருக்க வேண்டாம்…” என்று முடித்தான். அவன் குரலில் தெரிந்த அதீதமான வலியை அவளால் இப்போது உளமார உணர முடிந்தது.

“ஆமா…நடந்திருக்க வேண்டாம்” என்றவள் குரலில் ஒலித்த அவளது வலியின் ஆழத்தை அந்தக் கைப்பேசி உரையாடலில் அவனால் நிச்சயம் உணர்ந்திருக்க முடியாது.

சில நொடிகள் மௌனித்த பின் ஸ்ரீ, “இனிமே நான் மாயாவைப் பத்தி பேசமாட்டேன்… உன் மூடை அப்செட் பண்ணமாட்டேன்” என,

“தேங்க்ஸ்” என்றவன், “அப்போ நான் ஃபோனை வைச்சுடுவா?” என்று வினவினான்.

“எது… அதுக்குள்ளயா… நாம இன்னும் பேசவே ஆரம்பிக்கலயே” என்றாள்.

“பேசப் போறியா… இன்னுமா?”

“நீதானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்ன… பேசிப் பழகினா லவ் வரும்னு… அதான்…

மிட்நைட்ல லவர்ஸ் பேசுவாங்க… நாம லவர்ஸாக பேசுவோமே” என்றவள் சொல்ல, அவன் உண்மையிலேயே ரொம்பவும் எரிச்சலானான்.

“மிட்நைட்ல லவர்ஸ் பேசுவாங்கன்னு உனக்கு யார் சொன்னது?” என்றவன் கடுப்புடன் கேட்க, 

“படமெல்லாம் பார்க்க மாட்டியா வெங்கி… அழகன் படத்துல மம்மூட்டி பானுப்ரியாகிட்ட நைட்டு முழுக்கப் பேசிட்டு இருப்பாரு… ஒரு பாட்டு கூட வருமே…

சங்கீத ஸ்வரங்கள் ஏழேகணக்கா…

இன்னும் இருக்கா…

என்னவோ மயக்கம்…

என் வீட்டில் இரவு…

அங்கே இரவா இல்லை பகலா…

எனக்கும் மயக்கம்” என்றவள் பேசிப் பேசி அவன் தூக்கத்தில் கல்லைப் போட்டதோடு அல்லாமல் பாட்டு வேறு பாட, அவனுக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. அதுவும் சங்கீத ஸ்வரங்கள், அவள் குரலில் அபஸ்வரமாக ஒலித்தது.

“ப்ளீஸ் ஸ்ரீ… நீ ராத்திரி பூரா கூட பேசு… பட் சீரியஸா பாடாதே… என்னால சத்தியமா முடியல” என்றவன் சொல்லிவிட,

 “நான் நல்லாதான் பாடுனேன்” என்றவள் சிணுங்கினாள்.

“நீ பாடுனேன்னு சொல்லு… ஆனா நல்லா பாடினேன் மட்டும் சொல்லாதே” என்றவன் மீண்டும் அவளை வார, “போ வெங்கி” என்றவள் செல்லமாகக் கோபித்துக் கொண்டாள். இப்படியாக அன்று விடிய விடிய அவர்கள் உரையாடல் தொடர்ந்தது.

அவர்கள் இரவு முழுவதும் சிரிப்பும் பேச்சுமாக சங்கீத ஸ்வரங்களாக கழிந்தது.

vanitha16 and Rathi have reacted to this post.
vanitha16Rathi
Quote

Super ma

You cannot copy content