You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nijamo Nizhalo - Episode 2

Quote

2

மல்லிக்காக நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரில்தான் பாவனாவும் இப்போது வந்து கொண்டிருந்தாள்.

மல்லியின் வீடிருக்கும் அதே தெருவில்தான் பாவனாவின் வீடும் உள்ளது. “இன்னைக்கு ஒரு நாள்தான் பாவனா… நாளைல இருந்து வேன்லதான் போகணும்” என்று மல்லி சொல்ல, “சரிங்க பெரிம்மா” என்றாள்.

புது பள்ளிக்கு வரும் போதிருந்த சந்தோஷமெல்லாம் இப்போது சுத்தமாக அவளுக்கு வடிந்துவிட்டிருந்தது. அந்தப் பேய் வீட்டுக் கதையைக் கேட்டதிலிருந்து அவளுக்கு ஒன்றும் ஓடவில்லை.

பேய் பூதம் என்றதுமே பயப்படும் ரகம் இல்லை அவள். ஊரையே பயப்படுத்தும் ரகம். ஆனால் அவர்கள் சொன்ன கதை அவளையே திகிலூட்டிவிட்டது.

அப்படி ஒரு பேய் கதை. வீட்டிலிருந்த நால்வரும் ஒரே நாளில் இறந்துவிட்டார்களாம். அதுவும் ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி இறந்திருந்தார்களாம்.

அதெல்லாம் கூட பரவாயில்லை. இறந்தப் பெண்ணில் ஒருத்தி இந்தப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தவள் என்பதுதான் உச்சபட்சமாக அவளை அதிர செய்தது.

அதுவும் அந்தப் பெண் இந்த பிளாக்கில் படித்தவளாம். ஆதலால் அவள் ஆன்மா இங்கேயே சுற்றி வருவதாகவும் அவ்வப்போது இந்தக் கட்டிடங்களில் மர்மமான முறையில் மரணங்களும் விபத்தும் நடந்தேறி வருவதாகக் கதைச் சொல்கிறார்கள்.

சென்ற வருடம் கூட ஒருவர் ஷாக்கடித்து செத்துவிட்டாராம். அவளால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

அதுவும் அந்தப் பெண்ணைப் பற்றி ஆளுக்கொரு கதை சொன்னார்கள். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு மாதிரி படுபயங்கரமாக இருந்தது.

“அந்தப் பொண்ணு எரிஞ்சு செத்து போச்சு”

“இல்ல இல்ல அந்தப் பொண்ண ரேப் பண்ணி எரிச்சிட்டாங்களாம்”

“அந்தப் பொண்ண இதே ஸ்கூலில் இருக்க யாரோதான் ப்ளான் பண்ணிக் கொன்னு இருக்காங்க… அவங்களைப் பழி வாங்கத்தான் அது இங்கேயே சுத்திட்டு இருக்கு”

ஈவில் டெட்… காஞ்சுரிங்… போன்ற ஆங்கிலப் பேய் படங்களில் தொடங்கி பதிமூன்றாம் நம்பர் வீடு…  காஞ்சனா…. அரண்மனை… என்று தமிழ் பேய் படங்களை எல்லாம் கலந்தடித்து அவர்கள் சொன்ன கதைகளில் பாவனாவிற்கு இதயம் வாய் வழியாக வந்து வெளியே விழுந்துவிடாத குறை.

“நம்ம கிளேஸ் சஞ்சய் அந்தப் பேயைப் பார்த்தான்… போன வருஷம் நைட் கிளாஸ் நடந்தபோது” என்று வேறு சொல்லி வைக்க, பாவனாவால் முடியவில்லை.  

‘மூச்சு திணறதிணற இப்படி பேய் கதை சொல்லி கொல்றாளுங்களே… அந்த உருப்படாத கிளாஸ் டீச்சர் எங்கத்தான் போய் தொலைஞ்சான்… சீக்கிரம் வாயேன் டா…’ என்று அவள் வாழ்க்கையில் முதல் முறையாக ஆசிரியர் வகுப்பிற்கு சீக்கிரம் வராத காரணத்திற்காக அவள் மிகவும் வருத்தப்பட்டாள்.

அந்தோ பரிதாபம்! மல்லி மீட்டிங் வைத்து அவர்களையும் ஒரு வழி செய்து கொண்டிருந்ததால் இப்போதைக்கு அவள் வகுப்பிற்கு ஆசிரியர் வருவதற்கு வாய்ப்பில்லை.

பாவனாவால் அதற்கு மேல் வலிக்காமல் நடிக்க முடியவில்லை.

“போதும்… என்னால முடியல… நான் அழுதிடுவேன்” என்ற ரீதியில் பாவனா கெஞ்சவும்,

“சரி சரி… நீ இதெல்லாம் நினைச்சு பயப்படாதே… மோஸ்டா அந்தப் பேய்… பாய்ஸ்ஸதான் ஏதாவது பண்ணுமாம்” என்று சொன்னதொடு நிறுத்தி இருக்கலாம். கடைசியாக சொன்னதுதான் ஹைலைட்.

“அந்தப் பேய் வீட்டை மட்டும் பார்க்காத… பார்த்தா அன்னைக்கு இரத்த பலி உறுதி” என, பாவனா நொந்தேவிட்டாள்.

‘அடிப்பாவிங்களா… இதுக்குதான் ஜன்னலோர சீட்டைக் கொடுத்தீங்களா… இதுல அந்த வீட்டை வேற பார்க்கச் சொல்லி காண்பிச்சிட்டு… இப்போ இரத்த பலிங்குறாளுங்களே’

பாவனா எண்ணமெல்லாம் அந்தப் பேய் வீட்டைச் சுற்றியே இருந்தது. இந்நிலையில் மல்லி அருகில் அமர்ந்து கொண்டு பக்கம் பக்கமாக மருத்துவ படிப்பு பற்றி வாசித்த அறிவுரை படலம் எல்லாம் அவள் மூளை வரை இல்லை. செவியைக்கூட சென்றடையவில்லை.

“நான் சொன்னதெல்லாம் புரிஞ்சுதா?” என்று மல்லி கேட்கும் போதுதான் பாவனா சுயத்திற்கே வந்தாள்.

“ஆ ஆ… புரிஞ்சுது பெரிம்மா” என்றவள் பூம்பூம் மாடு போல தலையை ஆட்டி வைத்தாள்.

“மெடிக்கல் சீட் வாங்கணும்னா ஹார்ட் வொர்க் பண்ணனும்… ஹார்ட் வொர்க்” என்றவர் அழுத்திச் சொல்ல, “சரி சரி” என்று இவள் நிறுத்தாமல் தலையை ஆட்டிக் கொண்டே வந்தாள்.

 “வீட்டுக்கு வந்துட்டு போ பாவனா… நீட் புக்ஸ்… நோட்ஸ் எல்லாம் கொடுக்கிறேன்” என, அப்போதுதான் கார் மல்லி வீட்டின் வாசலில் நின்றதைக் கண்டாள் பாவனா.

மரத்தாலான அந்த வாயிற் கதவைத் தாண்டிச் சென்றால் தோட்டமும் கொஞ்சம் உள்ளே தள்ளிச் சென்றால் இரு மாடிகள் கொண்ட பங்களா அளவிலான பெரிய வீடும் காட்சியளித்தது.

அவர்கள் காரிலிருந்து இறங்க, “நாளைக்கு கொஞ்சம் சீக்கிரமா வந்திரு ராஜேஷ்” என்று சொல்லிவிட்டு மல்லி பாவனாவை உள்ளே அழைத்துச் சென்றார்.

மல்லியைப் பார்த்தும் பாசமாகக் குலைத்த அவர்கள் வீட்டு நாயைப் பார்த்து, “டைகர் கொய்ட்” என்று அதிகாரமாகச் சொல்லிவிட்டுச் செல்ல, அந்த நொடியே டைகர் கப்சிப்பென்றானான்.

தோட்டத்தைத் தாண்டி வந்த பாவனாவைப் பார்த்த வாலசைத்த டைகரைப் பாசமாகக் கொஞ்சி உடலை வருடி, “சோ க்யூட்” என்று தடவிக் கொடுத்துவிட்டு நடந்தாள்.

அவள் தன் காலணிகளைக் கழற்றிவிட்டு உள்ளே செல்ல எத்தனித்தபோது, வாசலிலேயே படிக்கட்டில் பலமாக கால் இடித்து, சுண்டு விரலில் இரத்தம் கொட்டத் தொடங்கியது.

“ஆ… அம்மா” என்று வலியோடு முனங்கியபடி அவள் படிக்கட்டில் அமர்ந்து கொண்டாள். 

அப்போது ‘இரத்த பலி’ என்று அவள் வகுப்பு மாணவி சொன்னது நினைவுக்கு வந்து அவளுக்குப் பீதியைக் கிளப்பியது.

“ஐயோ! சொன்ன மாதிரியே நடந்துடுச்சு” என்று அவளுக்கு இப்போது வலியை விட பயவுணர்வு பெரிதாக இருந்தது.

அவள் வாசலில் அமர்ந்து விரலைப் பிடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு சாம்பல் நிற கார் வாயிலிற்குள் நுழைந்தது. அதிலிருந்து இறங்கி வந்தவன் ஆறடி உயரத்தில் சற்றே பூசின உடல்வாகுடன் இருந்தான்.

அவன் மூக்குக் கண்ணாடியிலும் முகத்திலும் படித்தகளைச் சொட்டிக் கொண்டிருந்தது. அவன் காரில் டாக்டர் என்ற முத்திரை ஒட்டிக் கொண்டிருந்தது.

அவன்தான் மல்லி தவமிருந்து பெற்ற மூத்த புதல்வன். வெங்கடேஸ்வர். அடுத்தடுத்து வேண்டாமல் விரும்பாமல் பெற்ற இரண்டு புதல்வர்கள் இருந்தனர். சர்வேஸ்வர் மற்றும் கபிலேஸ்வர்.

வெங்கட் பாவனாவைப் பார்த்ததும் புன்னகைத்து, “ஹாய்” என்று கை உயர்த்த, “அண்ணாஆஆஆஆ” என்று அவள் இருந்த மனநிலையில் அவனைப் பார்த்ததும் ஓவென்று அழத் தொடங்கிவிட்டாள்.

கண்ணீர் தாரைத் தாரையாக அவள் கண்களில் வழிய அவன் பதறிப் போனான். “என்னடா என்னாச்சு?” என்று விசாரிக்க அவள் தன் பாதத்தைக் காட்டினாள்.

“ஏய் எப்படியாச்சு?” என்றவன் கேட்க, “இடிச்சுக்கிட்டேன் ண்ணா” என்றாள்.

“அதுக்கு ஏன் அழற… வா நான் மருந்து போட்டு விடுறேன்” என்று அவன் தங்கையைத் தன்னறைக்கு அழைத்துச் சென்றான். அவன் அறை மட்டும் தனியே மாடியில் இருந்தது.

அவள் கால்களிலிருந்த இரத்தத்தைத் துடைத்து மருந்து வைத்து கட்டியவன், “இப்போ ஓகே வா” என்று கேட்க, அப்போதும் பாவனா முகத்தில் தெளிவே இல்லை.

“சின்னதா ஒரு காயம்… அதுக்கு இவ்வளவு அலப்பறையா… வாய் மட்டும் கிழியுது” என்றவன் கேட்ட நொடி,

“நான் ஒன்னும் அதுக்காக அழல” என்று அவள் மூக்கை உறிஞ்சியபடி, “எனக்கு அந்த ஸ்கூல் வேண்டாம் அண்ணா…  என்னை என் பழைய ஸ்கூலில் சேர்த்துவிடச் சொல்லுங்க” என்றாள்.

அவளைப் பார்த்து மிதமாகப் புன்னகைத்தவன், “முதல் நாள் அப்படி இப்படித்தான் இருக்கும் பாவனா… நாளாக ஆக ஆக எல்லாம் பழகிடும்” என்று கூற,

“ஒன்னும் பழக வேண்டாம்… எனக்கு அந்த ஸ்கூல் பிடிக்கலண்ணா பிடிக்கல… எனக்கு வேண்டாம்” என்றவள் பிடிவாதமாக உரைத்தாள்.

“ஸ்டூடன்டஸ் யாராச்சும் கிண்டல் பண்ணங்களா ஆர் எல்ஸ் டீச்சர்ஸ் யாராச்சும் திட்டினாங்களா? ம்ம்ம்… அப்படி ஏதாவதுன்னா என்கிட்ட சொல்லு… நான் அம்மாகிட்டச் சொல்றேன்” என,

“என் பிரச்சனையே உங்க அம்மாவும் எங்க அம்மாவும்தான்… இரண்டு பேருமா சேர்ந்து என்னை இப்படியொரு பாழுங்கிணத்துல தள்ளிட்டாங்க… நோ வே… நான் இனிமே அந்த ஸ்கூலுக்குப் போகமாட்டேன்” என்றாள்.

“என்ன நீ… பாழுங்கிணறு அது இதுங்கிற? எதுவா இருந்தாலும் புரியற மாதிரி சொல்லு”

“டெவில் ப்ளாக்…” என்று திகிலுணர்வுடன் ரகசியம் பேசுவது போல கிசுகிசுக்கும் குரலில் சொன்னவள், “என் கிளாஸ் ரூம் அந்த டெவில் ப்ளாக்லதான் இருக்கு… அந்தப் பின்னாடி இருந்த பில்டிங்ல செத்துப் போன பொண்ணு இங்கே பேயா சுத்திட்டு இருக்காளாம்… எனக்கு பயமா இருக்கு… நான் இனிமே அந்த ஸ்கூல் பக்கம் கூட தலை வைச்சு படுக்க மாட்டேன்பா” என்றாள்.

“இதான் மேட்டரா?” என்றவன் உதடுகள் ஏளனமாக வளைந்தன. “அவங்க சொல்றதெல்லாம் சும்மா வதந்தி பாவனா… அந்த ப்ளாக்ல பேயும் இல்ல ஒரு மண்ணும் இல்ல” என்றவன் சாதாரணமாகச் சொல்ல,

“அப்போ பின்னாடி இருக்க அந்தப் பேய் வீடு… அது பார்க்க அப்படியே பேய் வீடு மாதிரியேதான் இருந்துச்சு” என்று அவள் சொன்னதைக் கேட்டு அவனுக்குச் சிரிப்புதான் வந்தது.

“நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இதுல பயப்பட ஒன்னுமில்ல… அந்த வீட்டிலிருந்த ஃபேமிலி ஒரு ஃபைர் அக்ஸிடென்ட்ல இறந்துட்டாங்க… அவ்வளவுதான்… மத்தப்படி அங்கப் பேயெல்லாம் இல்ல… எல்லாமே கட்டுக் கதை” என்றான்.

“அப்போ அந்த ஸ்கூலில் படிச்ச செத்து போன பொண்ணு” என்று பாவனா கேட்க,

“யாரு…  மாயாவா?” என்றவன் கேட்டதும் பாவனாவின் விழிகள் பெரிதாகின.

“யாரு மாயா?” என்று அவன் கேள்வியை வேறு மாதிரியாக இவள் திருப்பிக் கேட்க, அவன் உதட்டைக் கடித்துக் கொண்டான். அவனையும் அறியாமல் அந்தப் பெயர் அவன் வாயிலிருந்து வந்துவிட்டது.

“மாயாதான் அந்தப் பொண்ணோட பேரா... உங்களுக்குத் தெரியுமா?” என்றவள் அடுத்தக் கேள்வியைக் கேட்க, மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டவன்,

“நான் ட்வல்த் படிக்கும் போதுதான் அந்த ஃபையர் அக்சிடென்ட் நடந்துச்சு… மாயா என் கிளேஸ் மெட்தான்… அந்த அக்சிடென்ட்ல மாயாவும் மாயாவோட பேமிலியும் இறந்து போயிட்டாங்க… அவ்வளவுதான்… மத்தபடி நீ நினைக்கிற மாதிரி அந்த வீட்டுல பேயும் இல்ல ஒன்னுமில்ல” என்று சொல்லி முடித்தான்.

கேட்டுக் கொண்டிருந்த பாவனாவுக்கு இப்போது படபடப்பு அடங்கவில்லை.

“ஓ மை காட்! அப்போ உங்களுக்கு அந்த மாயாவைத் தெரியுமா?” என்றவள் அதிர்ச்சியுடன் கேட்க,

“தெரியும்… அவ என் கிளேஸ்தான்” என்றவன் குரல் கரகரத்தது. துக்கம் தொண்டையை அடைத்தது. நொடி நேரத்தில் அந்த உணர்வை சரி செய்து கொண்டவன்,

“பேய் பூதம்னு ஒன்னும் இல்ல பாவனா… எல்லாமே கட்டுக்கதை” என்றான்.

“அப்போ ஏன் அந்த வீடு இத்தனை வருஷம் அப்படியே இருக்கு… அதுவும் பார்க்க பயங்கரமா?”

“அந்த அக்சிடென்ட்ல மாயா பேமிலி மொத்தமா இறந்துட்டாங்கன்னு சொன்னேன் இல்ல… அவங்க சொந்தக்காரங்க சிலர் அந்த வீடு எங்களுக்குதான் சொந்தம்னு அடிச்சுக்கிறாங்க… இந்த பஞ்சாயத்துல அந்த வீட்டை யாரும் சீரமைக்கல” என்றவன் சொன்னதெல்லாம் கேட்ட பொது பாவனாவின் முகத்தில் ஒரு தெளிவு வந்தது.

“இப்போ மேடம்… ஸ்கூலுக்குப் போவீங்க இல்ல?” என்று வெங்கடேஷ் தங்கையைக் கேட்க,

“இப்பவும் மாட்டேன்… பேய் கூட பரவாயில்ல… உங்க அம்மா இருக்காங்களே” என்று கடுப்புடன் தொடங்கியவள், “பிரேயர்ல நிற்க வைச்சு சொற்பொழிவு ஆத்து ஆத்துன்னு ஆத்தி எல்லோரையும் மயக்கம் போடா வச்சுடுறாங்க… அத்தோடயாச்சும் நிறுத்துனாங்களா…

ஐடி எங்க… அது எங்க இது எங்கன்னு கேட்டு கொல்றாங்க அண்ணா… ஸ்கூலா அண்ணா அது… ஊஹும் நான் இனிமே அந்த ஸ்கூல் பக்கம் வரமாட்டேன்னா வரமாட்டேன்” என்று உறுதியாகச் சொல்ல, “பாவனா நான் சொல்றதைக் கேளு” என்று அவன் பேச எத்தனிப்பதற்குள்,

“என்னை கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணாதீங்க… நான் கிளம்புறேன்” என்றவள் அவன் அழைப்பை காதில் வாங்காமல் ஓடி விட்டாள்.

மாடியிலிருந்து பாவனா செல்வதையே பார்த்திருந்தவன் விழிகளோரம் நீர் ஒதுங்கியது.

பல வருடங்கள் கழித்து மீண்டும் மாயாவின் நினைவு…

மாயா கூட பாவனாவைப் போல துறுதுறுப்பானவள்.

‘சுவத்துல இருக்கும் பல்லி

வீடு கட்ட வேணும் ஜல்லி

அடியேய் மல்லி

நீதான்டி எங்க எல்லோருக்கும் வில்லி வில்லி வில்லி” என்று டிஆர் போல தலையைக் கோதி கோதி மாயா கவிதை சொல்ல, அவளுடைய தோழிகள் குழுக் கைத்தட்டி ஆரவாரித்தது.

எதேச்சையாக அங்கே வந்தவன் அவள் சொன்னதை கேட்டு படு உக்கிரமாக முறைக்க, அவளோ ஐயோ பாவம் போல முகத்தை வைத்து கொண்டு தன் இருக்கையில் ஒதுங்கிவிட்டாள்.

அன்று அவனுக்கு கோபம் வந்தது. ஆனால் இப்போது நினைத்தால் சிரிப்பு வந்தது. கூடவே கண்ணீரும்…

மாயாவின் இறப்பிலிருந்து மீள முடியாமல் அவன் மனம் தவித்த தவிப்பு அவனுக்கு மட்டும்தான் தெரியும்.

ஒரு மாதத்திற்கு இரவு தூக்கமின்றி அவஸ்த்தைப்பட்டு அவன் மனநிலை பாதிக்கப்பட்டு…

உஹும்… இப்போது அதெல்லாம் நினைக்க கூடாது என்றவன் தன் மனதை அமைதிப்படுத்திக் கொள்ள நினைத்தாலும் அவனால் முடியவில்லை.

கண்ணீர் தாரைத் தாரையாகக் கொட்டியது. அப்போது பார்த்து, “வெங்கட்” என்று மல்லியின் குரல் கீழிருந்து அழைக்க,

“தோ வர்றேன்ம்மா” என்றவன் அவசரமாக முகத்தைத் துடைத்துக் கொண்டு இறங்கிச் சென்றான்.

vanitha16 and Rathi have reacted to this post.
vanitha16Rathi
Quote

Super ma 

You cannot copy content